UUP–EPI 5 (INDRU)

இன்று  

 

சாப்பாட்டு மேசையில் இரவுணவு உண்ண அமர்ந்தாள் சண்மு. அவ்வளவு பெரிய வீட்டில் அவளும் அவள் அம்மாவும் மட்டும்தான் தற்பொழுது இருந்தார்கள். துவைக்க, பெருக்க, மொழுக என ஒரு பெண்மணி காலையில் வந்துப் போவார். சமையல் இன்னும் மீனாட்சியின் வசம்தான் இருந்தது. காய்கறி தோட்டம் இப்பொழுது வெறும் பூந்தோட்டமாக மட்டும் மாறிப் போயிருந்தது. தையல் மிசின் மூலையில் முடங்கிக் கிடந்தது சண்முவின் வாழ்க்கையைப் போலவே.

வைப்ரேட் மோடில் வைத்திருந்த சண்முவின் போன் பல முறை அடித்து அடித்து ஓய்ந்தது. ஒளிர்ந்த திரையை வெறித்துப் பார்த்தாளே தவிர, அழைப்பை ஏற்கவில்லை அவள். சமையல் அறையில் இருந்து சுட சுட தோசையுடன் வந்தார் மீனாட்சி. மகளின் தட்டில் அதை வைத்தவர், அவளுக்குப் பிடித்த வெங்காய சட்னியையும் தாராளமாக வைத்தார்.

“என்னடி, போனையே முறைச்சிப் பார்த்துட்டு இருக்க? சாப்பிடு! அடுப்படிய ஒழிச்சுப் போட்டுட்டு நான் போய் படுக்கனும். எனக்கென்ன வயாசா உட்கார்ந்து இருக்கு! முன்ன மாதிரி ஆடி ஓடி வேலைப்பார்க்க!”

இவள் எந்த பதிலும் சொல்லாமல், தோசையை பிய்த்து சட்னியில் தேய்த்து வாயில் வைத்தாள். முழுங்கிக் கூட இருக்கமாட்டாள், அதற்குள் மீனாட்சியின் போன் அடித்து அழைத்தது. மகன் அவருக்கென்று செட் செய்திருந்த ரிங்டோன் ‘அம்மன் கோயில் எல்லாமே எந்தன் அம்மா உந்தன் கோயில் அம்மா’ என அழைத்தது. மீனாட்சியின் முகத்தில் பரவசம் தாண்டவமாடுவதை பார்த்தும் பார்க்காதது போல பார்த்திருந்தாள் சண்மு. கஸ்டப்பட்டு வாயில் இருந்ததை விழுங்கியவள், அதற்கு மேல் சாப்பிட முடியாமல் தட்டிலேயே கையைக் கழுவினாள்.

“ஹலோ ராசா! சொல்லுப்பா”

“போன எடுக்கலயா? இங்கத்தான் இருக்கா! சாப்பிட்டுட்டு இருக்காப்பா!” என மகனுக்கு பதில் தந்தவர், மகளைப் பார்த்து,

“ஏன்டி தம்பி போன் போடறானாம், நீ எடுக்கலையாம்! நீ இங்க வந்ததுல இருந்து அவனும் எத்தனை தடவை அடிக்கிறான்! ஆனா நீ பேசவே மாட்டற! உனக்கு ஏன்டி இவ்வளவு திமிரு?” என திட்டினார்.

பின் போனில் மறுபக்கம் என்ன சொல்லப்பட்டதோ,

“இல்லடா சாமி இல்ல! உன் அருமை அக்காவ நான் திட்டல. போதுமா? அந்த வயசுல தான் உங்களுக்காக படாதபாடு பட்டேன். வயசான காலத்துலயாச்சும் நிம்மதியா இருப்போம்னு பார்த்தா, வாழ்க்கைய தொலைச்சிட்டு வந்து நிக்கறா இந்தப் பாவி” என மகனிடம் சொல்லி விசும்பினார்.

சண்மு முகத்தில் எந்த வித உணர்ச்சிகளையும் காட்டாமல் போனில் பேசிக் கொண்டிருந்த அம்மாவையேப் பார்த்திருந்தாள்.

“சரிடா, அழல! பையன் நீ நல்லா படிச்சு நல்ல வேலைல உட்கார்ந்துட்ட! பொண்ணு இப்படி அத்துவிட்டுட்டு வந்து நிக்கறாளே, எந்த தாயுள்ளம் பொறுத்துக்கும் சொல்லு! இவள நினைச்சாலே நெஞ்சு வலிக்குதுடா” கண்ணைத் துடைத்துக் கொண்டார்.

“ஒரு வார்த்தை உங்கக்காவ ஒன்னும் சொல்லல, போதுமா? ஆஸ்துரோலியால இருந்து எகிறாதே நீ! மாப்பிள்ள எப்படி இருக்காரு? அவ்ளோ தங்கமான புள்ளய மிரட்டி டைவோர்சு வாங்கிட்டு வர இந்தக் கல் நெஞ்சக்காரிக்கு எப்படித்தான் மனசு வந்துச்சோ போ”

மேசையில் இருந்த டம்ளர் தண்ணீரை ஒரே மொடக்கில் குடித்த சண்மு, எழுந்து தனதறைக்குள் புகுந்துக் கொண்டாள். கண் கலங்குவது போல இருந்தது. இந்த மாதிரி மனம் சோர்ந்துப் போகும் நேரங்களில் அவளை தூக்கி நிறுத்தும் பொருளை தனது அலமாரியின் சேலை இடுக்கில் தேடினாள். கையில் அகப்பட்டதை மெல்லிய புன்னகையுடன் பார்த்திருந்தாள் சண்மு.

அது கதிரும் அவளும் அவர்கள் ஊரில் இருந்த ஒரு ஓட்டை ஸ்டூடியோவில் எடுத்திருந்த புகைப்படம். பள்ளியில் நடந்த மாறுவேடப் போட்டிக்கு இவள் ஔவையாராக வேடம் போட்டிருக்க, கதிர் பாரதியாராக நின்றிருந்தான். பள்ளி முடிந்து நேராக ஸ்டூடியோவில் படம் பிடிக்க அழைத்துப் போயிருந்தான் கதிர். பாரதியின் மீசை பாதி அழிந்திருந்தது. முண்டாசு விழவா, விழவாவென பயம் காட்டியபடி தலையில் அமர்ந்திருந்தது. ஔவையின் திருநீறு அழிந்துப் போய், கொண்டை ஒரு பக்கமாக சரிந்திருந்தது. ஆனால் இருவரின் முகத்திலும் அவ்வளவு சிரிப்பு.

சிரித்த முகத்துடன் நின்றிருந்த தன் நண்பனின் பிம்பத்தை மெல்லத் தடவிக் கொடுத்தாள் சண்மு.

“கதிர்வேலன் அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆப் போலீசா? என்ன கெத்துடா ஒன்ரை உனக்கு! அதுவும் என் கிட்டயே! இதே பழைய சம்முவா இருந்திருந்தா, ஏசிபியா? இருந்துட்டுப் போ! ஆனா எனக்கு நீ எப்பவும் சிரிப்புப் போலிசுதான்னு சொல்லி இடி இடின்னு சிரிச்சிருப்பா! அப்படி சிரிக்க இவ உன்னோட சம்மு இல்லையே! சண்முகப்ரியாவாச்சே!” கசந்த முறுவல் ஒன்று வேண்டா விருந்தாளியாக உதட்டில் நெளிந்தது.

அன்று வாழாவெட்டி என அவள் சொல்லிய போது இறுக்கி, நொறுக்கிய அவன் பிடியை இன்னும் உணர முடிந்தது சண்முவால். எவ்வளவோ முயன்று முடக்கி வைக்கும் உணர்வுகள் கதிரைப் பார்த்தால் மட்டும் கரை புரண்டு வெளி வரத் துடிப்பதை அவளால் அடக்கவே முடியவில்லை. கதிரை சந்திக்கும் சற்று முன் தான் பார்வதியை மினரல் வாட்டர் வாங்கப் போன கடையில் சந்தித்திருந்தாள் சண்மு. மெல்லிய புன்னகையை இவள் உதிர்க்க, அவரோ முகத்தைத் திருப்பிக் கொண்டார். பக்கத்தில் நின்றிருந்த பெண்ணிடம்,

“காலம் கலிகாலமா ஆகிப் போய் கிடக்குதுடி! அந்தக் காலத்துல புருஷன் என்ன அநியாயம் பண்ணாலும் நாங்க பொறுத்துக்கிட்டு கூடவேத்தான் இருந்தோம். ஏன், கதிரப்பா எவ்வளவு பெரிய தண்ணி வண்டின்னு ஊருக்கே தெரியும். அவருக்கூடலாம் நான் குப்பைக் கொட்டல! இந்தக் காலத்துப் புள்ளைங்க வாழாவெட்டியா இருந்தாலும் பரவாயில்ல, விட்டுக் குடுத்துப் போக முடியாதுன்னுல நிக்கிதுங்க! கலி முத்திப் போச்சு!” என பெரிதாக புலம்பினார்.

சண்முவுக்கு முகமே விழுந்து விட்டது. வாங்கப் போன தண்ணீர் பாட்டிலைக் கூட வாங்காமல் வந்து விட்டாள். கதிரை பார்த்ததும் கோபத்தில் நண்பன் பின்னே போய், பார்வதியின் மகன்தான் முன்னே நின்றான் அவளுக்கு. அவன் முன் எப்பொழுதும் கட்டவிழும் நாக்கு செவ்வனே தன் வேலையை செய்தது.

தான் பேசியதைக் கேட்டு இறுகி போன அவன் முகத்தைப் பார்க்கவும் தான் தன் தவறு உணர்ந்தவள், சட்டென தன் கையை அவன் கையில் இருந்து இழுத்துக் கொண்டாள்.

இல்லாத நிதானத்தைக் குரலில் கொண்டு வந்து,

“என்ன விஷயமா இங்க வந்திருக்கீங்க ஏசிபி சார்? இங்க நான் இலீகலா ஒன்னும் செய்யலியே என்குவாரிக்கு வர” என கேட்டாள்.

கண்கள் மெல்ல இடுங்க,

“பில்டர் வேணும்னு கேட்டிருந்தீங்களாமே மிஸ் சண்முகப்ரியா!” என மிஸ்சை அழுத்தி சொன்னான் கதிர்.

ஆமென தலையை ஆட்டினாள் சண்மு.

“அந்த பில்டரே நாங்கத்தான்!”

“ஓஹோ! போலிஸ் வேலைல வாங்கன லஞ்சத்த எல்லாம் கொண்டு வந்து இங்க காண்ஸ்ட்ரக்‌ஷன் பிஸ்னஸ்ல விடறீங்கப் போல ஏசிபி சார்”

“ஆமா, அப்படித்தான் மிஸ் சண்முகப்ரியா! இதை இவ்வளவு கேவலமா இழுத்து சொல்ல வேண்டிய அவசியம் என்ன? சில பேர் போல ஜீவனாம்ச காசையா பிஸ்னஸ்ல விடறோம்?” என போகிற போக்கில் கோபத்தைக் கொட்டினான் கதிர்.

கண்களை ஒரு முறை அழுந்த மூடித் திறந்தவள்,

“ரொம்ப மாறிட்டீங்க ஏசிபி சார்! எறும்ப கூட அடிச்சுக் கொல்லத் தெரியாத புள்ளப் பூச்சிலாம், எருமை மாட்டுக் கணக்கா மத்தவங்கள மோதி சாய்க்கறது எல்லாம் நல்லாவே இல்ல சார்” என திருப்பிக் கொடுத்தாள் சண்மு.

“எறும்பா இருந்தவன எருமை மாடா மாத்துன எலிசபெத் மகாராணிலாம் இதைப் பத்தி பேசவே கூடாது! அதற்குரிய தகுதிய அந்த ராணி இழந்துப் பல வருஷம் ஆகுது” என அவளை முறைத்தப்படியே சொன்னான் கதிர். பதிலுக்கு அவளும் கண்ணை நன்றாக விரித்து முறைத்தாள்.

அவளைத் தீப்பார்வைப் பார்த்தவனின் விழிகள் மெல்ல மெல்ல கோபம் குறைத்து மிருதுவானது. சட்டென தன் பார்வையை விலக்கிக் கொண்டவன்,

“நாம இனி வேலையைப் பத்தி மட்டும் பேசலாம் மிஸ்” என திரும்பி நடந்தான் கதிர்.

பெருமூச்சுடன் அவன் பின்னால் வந்தாள் சண்மு. அவர்கள் கடையைக் கட்ட தேர்ந்தெடுத்த இடத்தில் கதிர் போய் நிற்க, கொஞ்சம் இடைவெளி விட்டு இவள் நின்றாள். இன்னொரு வண்டி அந்த நேரத்தில் வந்து நின்றது. அதில் இறங்கியவனைப் பார்த்து கை ஆட்டினான் கதிர். கை ஆட்டியப்படி அவனும் இவர்களை நெருங்கி வந்தான். அருகில் வந்த புதியவனை சண்முவுக்கு அறிமுகப்படுத்தினான் கதிர்.

“என்னோட ஜூனியர் சிவா! கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனி இவனோடதுதான். என்னன்ன செய்யனும், எவ்ளோ பட்ஜட் எல்லாம் சொன்னா, அழகா முடிச்சிக் குடுப்பான்” என அவளைப் பார்க்காமல், நண்பன் மேல் பார்வையைப் பதித்து சொன்னான் கதிர்.

“வணக்கம் சிவா சார்” மெல்லிய புன்னகை ஒன்றை சிந்தினாள் சண்மு.

அவளை மேலிருந்து கீழ் வரை ஆராய்ச்சிப் பார்வைப் பார்த்த சிவா, புன்னகையுடன் கையை நீட்டினான்.

“வணக்கம்ங்க! உங்க பேரு என்னன்னு சொல்லலியே? லெட் மீ கெஸ்! பூவுக்கு கைகால் முளைச்ச மாதிரி இருக்கற உங்க பேரு பூங்கொடியா?” என வழிந்து வைத்தான் அவன்.

“சிவா! இவ என்னோட பெஸ்ட் ப்ரேண்ட். என்னை நீ இதுவரை ப்ரேண்ட் கதிரா தானே பார்த்திருக்க, போலிஸ் கதிரா பார்த்தது இல்லல! வாலை சுருட்டிக்கிட்டு இந்த வேலைய முடிச்சு குடுக்கலனா, அதையும் பார்த்துருவ” என நீட்டியப்படி இருந்த சிவாவின் கையைப் பற்றி இறுக்கமாக குலுக்கினான் கதிர்.

“சீனியர்! விட்டுருங்க ப்ளீஸ் வலிக்குது! இவங்களுக்கு என்ன பேரா இருந்தாலும் பரவாயில்ல, இனி என் வாயில சிஸ்டர்னு மட்டும்தான் வரும்” என சொல்லவும் தான் கையை விட்டான் கதிர்.

கையை உதறிக் கொண்ட சிவா, சண்முவைப் பார்த்து,

“வணக்கம்ங்க சிஸ்டர்ங்க!” என கைக் கூப்பினான்.

சண்முவுக்கு புன்னகை எட்டிப் பார்த்தது. உர்ரென இருக்கும் கதிரின் முகம் பார்த்து புன்னகையை அடக்கிக் கொண்டாள். சிவா மூச்சுக்கு முந்நூறு தடவை ங்க போட்டு பேசியதில், இஞ்சினியரிங் படித்து விட்டு சும்மா திரிந்துக் கொண்டிருந்த அவனுக்கு, பண உதவி செய்து பார்ட்னராக்கி இந்த நிறுவனம் அமைய உதவி இருந்தான் கதிர் என புரிந்தது சண்முவுக்கு.

கடையை எவ்வளவு பெரியதாக அமைப்பது, தரைக்குப் போட வேண்டிய மார்பிள் வகைகள், பூக்களை வைக்கும் பெரிய ப்ரிட்ஜ்களை எங்கு வைப்பது, கொய்த மலர்களை பொக்கேவாக செய்ய வோர்க்ஸ்டேஷன், கல்லா வைக்கும் இடத்தின் அமைப்பு, என எல்லாவற்றையும் கலந்தாலோசித்தார்கள். கதிர் நிறைய ஐடியாக்கள் கொடுத்தான். அவன் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டாள் சண்மு. சிவாவை நடுவில் வைத்து சண்டைப் போடாமல் நல்லபடியே பேசிக் கொண்டார்கள். ஆனால் மறந்தும் கூட இவன் சம்மு எனவோ அவள் கதிரு எனவோ அழைத்துக் கொள்ளவில்லை. பேசி முடித்து நாளை வருவதாக சொல்லி சிவா கிளம்பி விட்டான்.

கதிர் திரும்பிப் போகும் முன்,

“வேலைக்கு ஆள் ஏற்பாடு பண்ணவா மிஸ் சண்முகப்ரியா? ஜாடியைத் தூக்கறது, உரம் போடறது இப்படி ஹேவி வோர்க்லாம் நீங்க செய்ய வேண்டாமே! வேலைக்கு வரவங்களுக்கு சம்பளம் கொடுக்கும் அளவு ஆஸ்திரேலியாவில இருந்துப் பணம் கறந்துட்டு வந்துருக்கீங்க தானே?” என மெல்லிய குரலில் கேட்டான் கதிர்.

“ஆள் ஏற்பாடு செய்ங்க ஏசிபி சார்! என் கிட்ட பணத்துக்கா பஞ்சம்! மூனு வருஷம் ஒரு வைப்பா எக்சலெண்ட் சர்விஸ் குடுத்துருக்கேன்! அந்த சேவைக்கு என் மாஜி புருஷன் இந்த அளவுக்குக் கூட பணம் குடுக்கலைனா எப்படி?” என நக்கலாக கேட்டாள் சண்மு.

“இந்தத் திமிர் பேச்சு மட்டும் உன்னை விட்டுப் போகல! காஞ்சு கருவாடா தெரிஞ்சாலும் இன்னும் உடம்புக்குள்ள கொழுப்பு மட்டும் அப்படியே இருக்குடி!”

“கொழுப்பு எப்படி போகும் ஏசிபி சார்? விவரம் தெரிஞ்ச நாளுல இருந்து ஊட்டி வளர்த்து என் ஆருயிர் நண்பனாச்சே! அவன் குடுத்த கொழுப்பு, நான் சாகிறப்பத்தான் என்னை விட்டுப் போகும்”

“ஆருயிர் நண்பன்???? அந்த நண்பன் கிட்ட இப்ப வெறும் உயிர் மட்டும்தான்டி இருக்கு! அதையும் புடுங்கிப் போட மறுபடியும் வந்துட்டல்ல” கோபத்துடன் வந்து விழுந்தன வார்த்தைகள்.

நெஞ்சைக் கிழித்த வார்த்தைகளைக் கேட்டு உதட்டைக் கடித்து அழுகையைக் கட்டுப்படுத்தினாள் சண்மு. அவளை ஆழ நோக்கியவன், மறு வார்த்தைப் பேசாமல் கிளம்பிப் போய் விட்டான்.

சண்முவின் நினைவோட்டத்தை கதவின் மெல்லிய தட்டல் தடை செய்தது. போட்டோவை மறுபடியும் சேலைக்கு அடியில் வைத்தவள், தன்னையறியாமல் சிந்தி இருந்த கண்ணீரைத் துடைத்தப்படியே போய் கதவைத் திறந்தாள். பால் டம்ளருடன் நின்றிருந்தார் மீனாட்சி.

“என்னடி சாப்புடாம எழுந்துட்ட? மனசு கேக்காம ரெண்டு வார்த்தைய விட்டுட்டா, உடனே பட்டினி கிடப்பியாடி? உன் மேல கோபத்துல கத்தலடி சண்மு, பாசத்துல தான் கத்தறேன்! இந்தா, இந்தப் பால குடிச்சிட்டுப் படு! எல்லாம் அந்த ஆண்டவன் எழுதி வச்ச மாதிரியே நடக்கட்டும்” என பெருமூச்சுடன் நகர்ந்தார் அவர்.

கட்டிலின் மேல் அமர்ந்து மெல்ல பாலை பருகினாள் சண்மு. போன் மேசேஜ் வரவும் ஒளிர்ந்து வைப்ரேட் செய்தது. புது எண்ணில் இருந்து வாட்சாப் மேசேஜ் வந்திருந்தது. திறந்துப் பார்த்தாள் சண்மு.

“மறுபடி ஏன்டி வந்த? ஏன், ஏன், ஏன்????”

டீபியைப் பார்த்தாள் சண்மு. அதில் கதிர் தவமங்கையுடன் சிரித்தப்படி நின்றிருந்தான்.

 

(உயிர் போகும்….)