UVU-32(2)

UVU-32(2)

உயிர் விடும்வரை உன்னோடுதான்

அத்தியாயம் 32-2

(இனி பிரகாஷின் விழி வழி கதையைப் பார்க்காமல், மூன்றாவது ஆளாக வெளியிலிருந்துப் பார்ப்போம்)

சித்ராவை நெருங்கிய ராஜேஷ்,

“பாப்…சித்ரா எப்படி இருக்க? நீங்க நல்லா இருக்கீங்களா அத்தை?” என விசாரித்தான்.

சித்ரா தலையையே நிமிர்த்தவில்லை.

“நல்லா இருக்கோம் மாப்பிள்ளை” பதிலளித்தார் நவநீதம். சித்ரா இன்னும் நவநீதத்தை நெருங்கி அமர்ந்தாள்.

மாப்பிள்ளை எனும் வார்த்தை பிரகாஷின் காதில் நன்றாக விழுந்தது. தான் நினைத்தது சரிதான் என மனம் சுணங்க அமர்ந்திருந்தான்.

அதற்குள் தாதி பெண் ஒருத்தி வந்து இவனை ஒரு அறைக்கு அழைத்துச் சென்றாள். கையில் இவன் பெயர் எழுதப்பட்டிருந்த ப்ளாஸ்டிக் கண்டேய்னரைக் கொடுத்தவள்,

“மெகசீன்ஸ் டேபள் மேல இருக்கு. அதோ அந்த கதவ திறந்தா பாத்ரூம் இருக்கு.” என ஒப்பித்துவிட்டு வெளியேறி விட்டாள்.

பிரகாஷிற்கு அவமானமாக இருந்தது. இப்படி கொண்டு வந்து நிறுத்திய விதியையும், தம்பியையும் மனதிற்குள்ளேயே திட்டித் தீர்த்தான். அரைகுறை ஆடையுடன் பெண்கள் இருந்த அந்த மெகஷின்களைப் பார்க்கவே எரிச்சலாக இருந்தது. மனதைத் தேற்றிக் கொண்டு பாத்ரூமிற்குள் நுழைந்தான் பிரகாஷ்.

அவன் பாத்ரூமில் இருந்து வெளியே வரும் போது ராஜேஷ் அந்த ரூமுக்குள் நுழைந்தான். பிரகாஷ் ஓரக்கண்ணால் அவனைப் பார்க்க அவனும் ஓரக்கண்ணால் இவனைப் பார்த்தான்.

“முடிச்சிட்டீங்களா சார்?” கேட்டான் ராஜேஷ்.

“ஹ்ம்ம்”

‘டால், உன் ஆத்துக்காரனுக்கு எங்க வந்து என்ன பேசறதுன்னு கூட தெரியல. நீ முகத்த தூக்கி வச்சிருக்கறதுல தப்பே இல்லம்மா’

“நான் இனிதான்”

‘நான் கேட்டனாடா? போ, வந்த வேலையப் பாரு!’

தலையை மட்டும் ஆட்டிவிட்டு வெளியேறியவன், சாம்பிளை தாதிப் பெண்ணிடம் கொடுத்தான். அவள் பெயரை சரிப்பார்த்து லேபுக்கு எடுத்துச் செல்லும் வரை பார்த்திருந்தான்.

பின் முன்பு அமர்ந்திருந்த ஹாலுக்கு வந்தவன் புறப்படும் முன் ஒரு முறை சித்ரா தென்படுகிறாளா என தேடினான். அவளது அம்மா மட்டும் தான் இருந்தார், அவளைக் காணவில்லை.

ஒரு பெருமூச்சுடன், கிளம்புவதாக தம்பியிடம் தலை ஆட்டினான் பிரகாஷ்.
அவன் அருகில் வந்த ஜெபீ குசுகுசுவென,

“பய்யா, கொஞ்ச நேரம் வேய்ட் பண்ணுங்க. ப்ராசிடர் முடிஞ்ச உடனே போகலாம்.” என்றான்.

“இன்னும் என்னடா ப்ராசிடர்? என் வேலை முடிஞ்சதுதானே? இங்க இருக்கறது முள்ளு மேல நிக்கற மாதிரி இருக்குடா. புரிஞ்சிக்க!”

“இருங்க பய்யா. அவங்க செக் பண்ணிட்டு சொல்லட்டும் எல்லாம் ஓகேவான்னு. அப்புறம் கிளம்புங்க” என வற்புறுத்தினான்.

மீண்டும் அதே நாற்காலியில் போய் அமர்ந்தான் பிரகாஷ். கண்கள் மட்டும் தன்னையும் மீறி, அவள் தென்படுவாளா என சுற்றிலும் அலசியது.

அவனை அங்கே அமர வைத்துவிட்டு ஜெபீயும், தேஜலும் மட்டும் டாக்டர் அழைக்கிறார் என தாதிப் பெண் சொல்லவும் அவரின் அறைக்குள் நுழைந்தனர்.

டாக்டர் பதட்டமாக தெரிந்தார். மெதுவாக நிலைமையை விளக்கியவர், ட்ரீட்மெண்டைத் தள்ளி வைத்துக் கொள்ளலாமா எனக் கேட்டார். அவர் சொன்னதைக் கேட்ட ஜெபீ உச்சக்கட்ட ஆத்திரத்துக்கு சென்றான். நாற்காலியில் இருந்து எழுந்தவன்,

“டாக்டர், நாங்க எவ்வளவு தூரத்துல இருந்து வந்துருக்கோம். இப்போ வந்து கரு முட்டைக் குடுக்க வேண்டிய பொண்ணு வரலைன்னு சொல்லுறீங்க. இது கொஞ்சம் கூட சரியில்ல” ஆத்திரத்தில் குரல் நடுங்கியது.

“சாரி சார். நீங்க கேட்ட குவாலிபிகேஷனோட ஒரு பெண்ணை அரெஞ் பண்ணி பணம் எல்லாம் குடுத்துட்டோம். அவளும் பிராசிடர் படி ஊசி போட்டுக்கறது எல்லாம் கரேக்டா தான் செஞ்சிட்டு வந்தா. இன்னிக்கு ரிட்ரீவல் நாள் பார்த்து, மாமியார் இறந்துட்டாங்க, இப்ப வர முடியாதுன்னு கால் பண்ணுறா. அவ போனை வச்ச கையோட தான் உங்கள கூப்பிட்டேன்” கையைப் பிசைந்தார்.

டாக்டர் ஏற்கனவே ஈமெயில் வழி பெண்ணின் புகைப்படம், அவளது டீடெய்ல் எல்லாம் கொடுத்திருந்ததால், திருப்தி அடைந்து தான் அவர்கள் கேட்ட பணத்தை அள்ளி இறைத்திருந்தான் ஜெபீ. அதற்கே எவ்வளவு பொய் கணக்கு, ஆராவுக்கு தெரியாமல். இப்படி செய்தும் கடைசி நேரத்தில் நேர்ந்த சொதப்பலை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

“என்ன டாக்டர் கதை சொல்லுறீங்க! இப்ப எங்களுக்கு வழி?” ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த போராடினான்.

“கொஞ்சம் பதட்டப்படாம இருங்க சார். ஏதாவது அரெஞ் பண்ணுறேன்.”

“ஏதாவது வேணாம் டாக்டர். எதோ ஒன்ன ஏத்துக்க நாங்க சாதாரண குடும்பம் இல்ல. நான் சொன்ன மாதிரி நல்ல நிறமா, மெடிக்கல் காம்ப்ளிகேஷன் இல்லாத பொண்ணோட ஏக் தான் வேணும். ப்ரீச் ஆப் காண்ட்ராக்ட்னு உங்க செண்டர் மேல என்னை கேஸ் பைல் பண்ண வச்சிராதீங்க” மிரட்டினான் ஜெபீ.

“சார், நாங்க ப்ராசிடர் ஆரம்பிக்கும் போதே லீகல் ஆக்‌ஷன் எதுவும் எங்க மேல வரக்கூடாதுன்னு சொல்லிதான் காண்ட்ரேக்ட்ல சைன் வாங்கியிருக்கோம். எங்க மேல எந்த கேஸ் பைல் பண்ணவும் உங்களுக்கு லீகல் ரைட்ஸ் இல்ல. அதுவும் ப்ரீச் ஆப் காண்ட்ரேக்ட் தான். ” கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் அமைதியாக பேசினார் டாக்டர்.

“இருங்க அத்தான், அவசரப்படாதீங்க. சுமூகமா முடிக்கப் பார்ப்போம்” சமாதானப்படுத்தினாள் தேஜல்.

“டாக்டர், நீங்க வேற ஏதும் பெட்டர் ஆப்ஷன் இருந்தா காட்டுங்க. நாங்க கன்சிடர் பண்ணுறோம்” சமாதானக் கொடியைப் பறக்க விட்டாள் தேஜல்.

யாருகிட்ட என்பது போல ஒரு லுக் விட்ட டாக்டர் பஸ்ஸரை அழுத்தி அவரது உதவியாளரை அழைத்தார்.

“சொல்லுங்க டாக்டர்”

“ஏன்மா, நம்ம ஸ்டாக்ல ஏதாவது நல்ல நிறமா உள்ள பொண்ணோட சாம்பிள் இருக்கா?”

“டாக்டர், பழசுல இல்ல. ஆனா ப்ரேஷ் ஏக் ரீட்ரீவல் இப்பத்தான் செஞ்சாங்க. டாக்டர் மலர் கேஸ் இது. நீங்க கேட்ட மாதிரி அந்தப் பொண்ணு நல்ல நிறம். பெயர் சித்ரா பௌர்ணமி. அவங்க சிஸ்டர் மார்கழி திங்கள் தான் நம்ம செண்டரோட பேஷண்ட். அக்காவுக்கு தங்கச்சி டோனரா இருக்காங்க. அவங்க கிட்ட கேட்டுப் பாருங்க டோனேட் பண்ண முடியுமான்னு.”

“சரி முதல்ல அந்த டோனரோட பைல எடுத்துட்டு வாங்க. இவங்கப் பார்க்கட்டும்.” என்றார். அந்தப் பெண் வெளியேறியவுடன்,

“சார், புது சாம்பிள்னா இன்னும் கொஞ்சம் கூட செலவாகும். புது பொண்ணுக்கு பே பண்ணனும். உங்களுக்கு ஓகேவா? இல்லைனா நீங்க ஏற்கனவே ஏற்பாடு செஞ்சிருந்த பெண்ணுக்கு வெய்ட் பண்ணி அடுத்த சைக்கல்ல செஞ்சிக்கிறீங்களா?” என்றார்.

மறுபடியும் அம்மாவிடம் பொய், மறுபடியும் சென்னைப் பயணம், மறுபடியும் அண்ணனிடம் கெஞ்சல் என பயந்துப் போனான் ஜெபீ.

“அந்தப் பொண்ணு டீடேய்ல்ஸ் வரட்டும். பிடிச்சிருந்தா காசு பிரச்சனை இல்லை டாக்டர்” என்றான்.

பைலில் இருந்த போட்டோவில் சிரித்த முகத்துடன் இருந்த சித்ராவைப் பார்த்ததும் இருவருக்கும் பிடித்து விட்டது. மைல்ட் ஒபெசிட்டி தவிர வேறு எந்தக் குறையும் இல்லை என்பதால், இவளது கரு முட்டையையே தானமாகப் பெறுவது என முடிவானது. டாக்டர் உதவியாளரிடம் பேசிக் கொண்டிருந்த கேப்பில் சித்ராவின் போட்டோவை தனது போனில் படம் பிடித்து வைத்துக் கொண்டான் ஜெபீ.

“எதுக்குப் படம் புடிச்சீங்க?” என ஹிந்தியில் கேட்டாள் தேஜல்.

“நாளைப் பின்ன பிள்ளைக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டா, அதான்மா போன் மேரோ, ரத்தம், சிறுநீரகம் இப்படி ஏதாவது தேவைப்பட்டா இவங்கள நாமலே தொடர்பு கொள்ளலாமே. இந்த செண்டர் வழியா வந்தா அதுக்கும் பணம் அழனும். அதுக்குத்தான் முன்னெச்சரிக்கையா போட்டோவும், டீடெய்ல்சும் படம் புடிச்சிக்கிட்டேன்”

“நான் தானே சுமக்கப் போறேன், என்னோட ரத்தம் தானே குழந்தைக்கும் வரும்?”

“நீ வெறும் வாடகைத் தாய் தான். டி.என்.ஏ, ப்ளட் டைப் எல்லாம் பய்யாவோடதும், கருமுட்டைக் கொடுக்கப் போற பெண்ணோடதும் தான் இருக்கும். புள்ளைக்கு சாப்பாடு மட்டும் தான் உன் கிட்ட இருந்து போகும் தேஜல்.”

புரிந்ததாய் தலையாட்டியவள், தலையைக் குனிந்துக் கொண்டாள்.

“பிடிக்கலையா தேஜல்? நிறுத்திறலாமா?”

“அப்படிலாம் இல்லை அத்தான். மனசு கொஞ்சம் கணமா இருந்தது. அவ்வளவுதான். இப்போ ஓகே”

“தேஜல், என் சுயநலத்துக்காக உன்னை பலியாடா ஆக்கறனோன்னு பயமா இருக்குமா” நிஜமான வேதனையுடன் சொன்னான் ஜெபீ.

“அப்படிலாம் நினைக்காதீங்க. என் முழு சம்மதத்தோட தான் இது நடக்குது. எப்படி வந்தாலும் இது நம்ம பிள்ளை.” அவனின் கையை அழுத்திக் கொண்டாள்.

அதற்குள் டாக்டர், தன் உதவியாளரிடம் மாதியை அழைத்து வர பணித்தார்.

இவர்கள் டாக்டர் அறையிலிருந்து வர நேரம் ஆகிக் கொண்டே இருக்கவும் தண்ணீர் குடிக்கலாம் என அந்த ப்ளோரிலேயே இருந்த பேண்ட்ரீக்கு சென்றான் பிரகாஷ். அவ்விடத்தை நெருங்கும் போதே கேட்ட காரசாரமான வாக்குவாதத்தில் தயங்கி வெளியே நின்றான் பிரகாஷ். கதவில் இருந்து பார்க்கும் போது ராஜேஷ் மட்டும் தான் பிரகாஷின் கண்ணுக்குத் தெரிந்தான். அவன் பேசிக் கொண்டிருந்த பெண் ராஜேஷின் முன்னால் இருந்ததால், பிரகாஷிற்கு அவள் முகம் தெரியவில்லை.

“நான் ஒருத்தி குத்துக் கல்லு மாதிரி அங்கதான் நின்னுட்டு இருக்கேன். உன் ரெண்டு கண்ணும் அவள மட்டும்தான் பார்க்குது! நான் தான் உன் மனைவி. அத என்னிக்கும் மறக்காத. என்ன, பொண்டாட்டியோட தங்கச்சி மேல பாசம் பொங்குதோ? கொன்னுருவேன் ரெண்டு பேரையும்”

‘நம்ம ஆளா இப்படி பேசறது? பார்க்க பொம்மை மாதிரி இருந்தாளே, வாயத் திறந்தா செம்மையா வருதே’ இன்னும் கொஞ்சம் நகர்ந்து பேசிக் கொண்டிருந்தவளைப் பார்த்தான். பார்த்தவனுக்கு மகிழ்ச்சி ஊற்றெடுத்தது.

‘பாப்ரே! இவ இன்னொருத்தியாச்சே! அப்போ இவ சொன்ன தங்கச்சி நம்ம மோட்டியா? இவன் மச்சினியையே சைட் அடிக்கறானோ? நீ சாமி ஆடறதுல தப்பே இல்லம்மா. நடத்து, நடத்து!’ தன் பொம்மைப் பெண்ணுக்கும் இவனுக்கும் மணமாகவில்லை என்பதே இவனின் மன அழுத்தத்தைக் குறைத்து, மனதை லேசாக்கி இருந்தது.

“தேங்க்ஸ் டாடி. ப்ளிஸ் ப்லெஸ் மீ ப்ரம் ஹேவன்” வாய் திறந்து வேண்டிக் கொண்டான்.

“சத்தம் போடாதே திங்கள்! நீ நினைக்கற மாதிரி ஒன்னும் இல்ல. தெரிஞ்சவங்கள பார்த்தா எப்படி இருக்கீங்கன்னு கேக்க மாட்டோமா, அப்படி தான் கேட்டேன்”

“பொய் சொல்லாதே ராஜேஷ். தெரிஞ்சவங்கள அப்படித்தான் பாசமா கண்ணாலயே வருடிக் குடுப்பாங்களா? நா உன் பொண்டாட்டி தானே, என்னைக்காவது என்னை அதுல பாதி பார்வையாச்சும் பார்த்திருப்பியா?” கண்ணீரோடு கத்தினாள்.

“திங்கள் ! இது நீயா தேடிக்கிட்ட வாழ்க்கை. நான் ஏற்கனவே சொல்லிட்டேன், எனக்கு மனசு மாற கொஞ்சம் டைம் குடுன்னு. இப்படியே நான் பார்க்கறதுக்கும், பேசறதுக்கும் தப்பான அர்த்தம் கற்பிச்சிகிட்டே இருந்தீனா, நாம இனி வாழ போற வாழ்க்கை நரகமா தான் இருக்கும். புரிஞ்சுக்க”

“எனக்கு நல்லா புரியுது. இப்படியே மெண்டல் டார்ச்சர் பண்ணி என்னை சாகடிச்சுட்டு, அவள கட்டிக்க போற நீ! அப்படித்தானே? அப்போ கூட ஆவியா வந்து உங்கள சேர விட மாட்டேன் ராஜேஷ். நீ எனக்கு மட்டும் தான், மை ராஜேஷ்!” அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

“பைத்தியம், பைத்தியம்! என்னை அணு அணுவா டார்ச்சர் பண்ணுறதுக்கு ஒரேடியா கொன்னுப் போட்டுருடி. இப்படி கொஞ்சம் கொஞ்சமா உன் ஆசிட் பேச்ச கேட்டு சாகறதுக்கு அப்படியே ஒரேடியா செத்துப் போறேன்” அணைத்திருந்தவள் தலையை நீவியபடியே சொன்னான் அவன்.

“நீ ஏன் சாகனும்? இல்ல, இல்ல! நாம ரெண்டு பேரும் ரொம்ப காலம் சந்தோஷமா இருக்கனும். சாகனும்னா என் தங்கச்சி சித்ரா சாகட்டும்”

“திங்கள்!” கத்தியவன் மாதியை விலக்கி நிறுத்தினான்.

‘அடிப்பாவி, சைக்கோவா நீ? சொந்த தங்கச்சியையே சாக சொல்லுற! உன் கூட அவ இருக்கறது ரொம்ப ஆபத்தாச்சே! மனசுல எவ்வளவு வன்மம்’ மாதியின் பேச்சு பிரகாஷிற்கு கிலியைக் கொடுத்தது.

“பாரு, பாரு! அவள சொன்னா உனக்கு கோபம் வருது. ஏன், ஏன் கோபம் வருது? வரக்கூடாது!” பைத்தியம் மாதிரி கத்தினாள்.

“கால்ம் டவுன் திங்கள். நீ இவ்வளவு செஞ்சும் அவ உனக்கு நல்லது தான் செஞ்சிருக்கா. ஆனா நீ அவ சாகனும்னு நினைக்கறது நியாயமா?”

“ஆல் இஸ் ஃபேர் இன் லவ் அண்ட் வார். அவ இருக்கவும் தானே என் மேல உனக்குப் பாசம் வர மாட்டிக்கிது? உன்னை என் மனசுக்குள்ள பூட்டி வச்சு எப்படி பூஜிக்கறேன்! ஆனா நீ, என் காதல இன்னக்கி வரக்கும் காலுல போட்டுத் தான் மிதிக்கிற. உன் மேல கடலளவு காதல் வச்சது என் தப்பா? சொல்லு ராஜேஷ்? தப்பா?” அழுதாள்.

“உன்னோட காதல், உன்னோட பீலிங் இத மட்டும் பேசறியே திங்கள், எனக்கும் காதல் இருந்தது, பீலிங் இருந்ததுனு ஏன் உனக்குப் புரியல. உன்னை மாதிரி தானே நானும் கடலளவு காதல் வச்சிருந்திருப்பேன் சித்ரா மேல.” இருந்தது என பாஸ்ட் டென்சில் சொன்னதை கவனிக்கவில்லை மாதி. அந்த அளவு ஆத்திரம் அவள் கண்ணை மறைத்தது.

கோபத்தில் முகம் சிவக்க, கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது.

“ஐம் சாரி! அழாதே திங்கள்” அணைத்த ராஜேஷை உதறித் தள்ளினாள் மாதி. அவன் செய்கைகளில் எல்லாம் நட்பு மட்டும் தெரிந்ததே தவிர காதல் தெரியவில்லை அவளுக்கு. நட்பையும் தாண்டி , காதலை யாசித்தவளுக்கு அவனின் பேச்சு மனதை சுக்கல் சுக்கலாக கிழித்திருந்தது.

இவர்களின் உணர்ச்சிப்பூர்வமான உரையாடலை மனம் கணக்க கேட்டுக் கொண்டிருந்தான் பிரகாஷ்.

பிரகாஷின் பின்னால் வந்து நின்ற தாதிப் பெண்,

“சார், கொஞ்சம் விலகறீங்களா?” என கேட்டு அவனை பூமிக்குக் கொண்டு வந்தாள்.

நகர்ந்து இவன் நிற்கவும், உள்ளே நுழைந்தவள்,

“மார்கழி மேடம்! டாக்டர் ராணி உங்கள பார்க்கனுமாம். ரூம் நம்பர் 2 ல இருக்காங்க” என்றாள்.

கண்களைத் துடைத்துக் கொண்ட மாதி,

“நாங்க டாக்டர் மலர் கிட்ட தானே ட்ரீட்மெண்ட் எடுக்கறோம். இவங்கள ஏன் பார்க்கனும்?” என புரியாமல் கேட்டாள்.

“நீங்க வாங்க மேம். அவங்களே சொல்லுவாங்க” என்றவள் பேண்ட்ரியை விட்டு வெளியேறினாள்.

அமைதியாக நுழைந்த பிரகாஷ், யாருக்கும் ஐ காண்டேக்ட் கொடுக்காமல் தண்ணீரை ப்ளாஸ்டிக் கப்பில் எடுத்துப் பருகினான்.

பிரகாஷைக் கண்டு கொள்ளாத மாதி,

“நீ வந்த வேலை முடிஞ்சது இல்ல! கிளம்பி போய் கிட்டே இரு. இங்க எல்லாத்தையும் செட்டல் பண்ணிட்டு நான் வரேன்.” என புயலை அடக்கிய அமைதியுடன் சொன்னாள்.

“திங்கள்! இன்னொரு தடவை நல்லா யோசிச்சுப் பாரு. இது தேவையா? எல்லாரையும் கஸ்டப் படுத்தி நமக்கு பிள்ளை வேணுமா?”

கொஞ்சம் மலை இறங்கி இருந்தவளை, இப்படிப் பேசி இமயமலைக்கே ஏற்றி விட்டு விட்டான் ராஜேஷ். அவனின் இந்தப் பேச்சே, சித்ரா பிரகாஷின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது.

கையை நீட்டி நிறுத்து என்பது போல சைகைக் காட்டியவள்,

“போயிரு” என வார்த்தையை கடித்துத் துப்பி விட்டு வெளியேறி இருந்தாள்.

தலையை அழுந்தக் கோதிய ராஜேஷ், போரில் தோல்வி அடைந்தது போல நெடிய பெருமூச்சு ஒன்றை வெளியிட்டான். அவன் முன்னே கப்பில் தண்ணீருடன் வந்து நின்றான் பிரகாஷ்.

“ஹாய்! என் பெயர் பிரகாஷ். நீங்க ரொம்ப களைப்பா தெரியறீங்க. இந்தாங்க தண்ணி குடிங்க” என ஆரம்பித்தான். பேச்சை முடிக்கும் போது ராஜேஷின் மொத்த சரித்திரமும் இவன் கையில் இருந்தது. ராஜேஷின் விவரம் தெரிந்தால் அவன் மனைவியின் விவரமோ, மனைவியின் தங்கை விவரமோ அறிவது இவனுக்கு கஸ்டமில்லையே. பேச்சு வாக்கிலேயே இருவரும், திஸ் இஸ் மை கார்ட் என கொடுத்துக் கொண்டார்கள். அதன் பிறகு புறப்பட்டு சென்று விட்டான் ராஜேஷ்.

ராஜேஷின் மேல் கோபத்தோடு ரூம் நம்பர் இரண்டுக்கு நுழைந்த மாதியை, டாக்டர் அமர வைத்தார்.

“மார்கழி மேடம். மீட் ஜெய்பிரகாஷ் அண்ட் தேஜல்”

அவர்களின் தேவையை சொன்னவர்,

“உங்க சிஸ்டர் கிட்ட மொத்தம் ஐந்து ஹெல்த்தியான கரு முட்டைகள் வெளியே எடுத்துருக்காங்க. ஒன்று நீங்க எடுத்துகிட்டாலும், மீதம் நான்கு வீணா தான் போகும். அதை இவங்களுக்குக் குடுத்து உதவலாமே? எவ்வளவு பணம் வேணும்னாலும் குடுக்க இவங்க தயாரா இருக்காங்க” என்றார்.

சற்று நேரம் யோசித்தவள்,

“எனக்கு ஓகே. ஆனா பணம் வேணா! அதுக்குப் பதிலா இன்னொன்னு வேணும்” என்றாள். சொல்லும் போதே அவள் முகம் கோபத்தில் ஜொலித்தது.

“என்ன வேணும் சொல்லுங்க சிஸ்டர். நாங்க ஏற்பாடு செய்யறோம்” என்றான் ஜெபீ.

“உங்களுக்கு நான் ஏக் கொடுக்கறேன், எனக்கு நீங்க ஸ்பெர்ம் கொடுக்கனும், உங்க சைட்ல இருந்து”

பண்டமாற்று முறையில் நான் தக்காளி தரேன், நீங்க கேரட் குடுங்க என்ற ரீதியில் பேசியவளை அதிர்ந்துப் போய் பார்த்திருந்தனர் மற்ற மூவரும்.

சுதாகரித்த டாக்டர்,

“என்னம்மா இப்படி கேக்கறீங்க? உங்க சைட்ல ஏற்கனவே ஸ்பேர்ம் சாம்பிள் எடுத்துட்டதா நர்ஸ் சொன்னாங்களே?” என கேட்டார்.

“இப்ப நான் முடிவ மாத்திக்கிட்டேன். என் புருஷன் மாதிரி எனக்கு புள்ளை வேணாம். வேற யார் மாதிரி இருந்தாலும் பரவாயில்ல. முடியுமா முடியாதா, அத மட்டும் சொல்லுங்க.” எழுந்து நின்றாள்.

‘இப்பவே அவ மேல உருகி வழியுறான். இன்னும் இவங்க ரெண்டு பேரோட ரத்தத்துல புள்ளை வந்துருச்சுனா சொல்லவே வேணாம். அவங்க ரெண்டு பேரையும் பழிவாங்கத்தான் இந்த திட்டம் போட்டேன். ஆனா அதுவே எனக்கு ஆப்பா திரும்பிருமோன்னு இப்ப பயமா இருக்கு. புள்ளைய எடுத்துக்கிட்டு, ரெண்டு பேரும் என்னை அம்போன்னு விட்டுட்டு ஓடிட்டாங்கன்னா நான் என்ன செய்யறது? இவ மேல எனக்கு நம்பிக்கை இருக்குதான். ஆனாலும் கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையுமே! இவ பொண்ணுதானே, கரையமாட்டாலா? இத்தனை நாள் பிரிஞ்சிருந்தோம், வந்தவுடனே கட்டன பொண்டாட்டி என்னைத் திரும்பிக் கூட பார்க்கல. அவ மேல மட்டும் தான் முழு பார்வையும். இத இப்படியே விடக்கூடாது. கடவுளா பார்த்து இந்த வாய்ப்ப குடுத்துருக்காரு. அவ கரு முட்டையில வேற விந்தணுவ சேர்த்து, ராஜேஷ் கிட்ட சொல்லி சொல்லி காட்டி அவன உயிரோட சாகடிக்கனும். ஆனா இவ கிட்ட மட்டும் சொல்லக் கூடாது. சின்னம்மா வரைக்கும் விஷயம் போயிரும். பிள்ளை பொறக்கட்டும் முதல்ல. அப்புறம் வச்சிக்கறேன் அவளை!’ குரூரமாக யோசித்தாள் மாதி. ஆனால் அந்த பிள்ளையின் மேலே உயிரையே வைப்போம் என அவள் அப்போது அறிந்திருக்கவில்லை. பிள்ளையை சுமக்கும் போது தாமும் தாய்மையை உணர்வோம், அதைக் கொடுத்த தங்கையை மன்னிக்காவிட்டாலும் போய் தொலை என விட்டுவிடுவோம் என அப்பொழுது அவளுக்குப் புரிந்திருக்கவில்லை. பழி உணர்ச்சி மட்டுமே மனம் முழுக்க விரவி இருந்தது.

அவள் சட்டென எழவும், யோசிக்க கூட நேரம் இல்லாத ஜெபீ,

“சரி, இதுல எங்களுக்கு சம்மதம். நாங்க வட மாநிலத்துக்காரங்க. அதைப் பற்றி உங்களுக்கே பிரச்சனை இல்லைனா, எங்களுக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை” என்றான்.

பிரகாஷிற்கு ஏற்கனவே யாருடைய முட்டை பயன்படுத்துகிறேம் என முழு விவரமும் கொடுத்திருந்தான் ஜெபீ. இப்பொழுது மாற்ற வேண்டியதாகி விட்டதை சொன்னால் மீண்டும், எதிக்ஸ், மோரல் என அவன் ஆரம்பிக்க கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதால் விஷயத்தை மறைக்க முடிவு செய்தவன், மனைவியிடமும் ஹிந்தியில் சொல்லி வைத்தான்.

இங்கே தங்களை வைத்து நடக்கும் உள்நாட்டு சதி அறியாமல், கருமுட்டை எடுக்க கொடுத்த மயக்க மருந்தில் மயங்கிக் கிடந்தாள் சித்ரா. அவள் அருகில் கவலையாக அமர்ந்திருந்தார் நவநீதம்.

ராஜேஷின் வாய்வழி சித்ராவும் தன்னைப் போலவே அவளது உடன்பிறப்புக்கு உதவ தான் வந்திருக்கிறாள் என அறிந்துக் கொண்டவனுக்கு மன வேதனையாக இருந்தது. இந்த ப்ராசிடரில் பெண்கள் உடல் ரீதியாகவும் அனுபவிக்கும் துன்பத்தை படித்து அறிந்திருந்தான். கண்டிப்பாக மயக்க மருந்து கொடுத்து தான் கருமுட்டையை எடுத்திருப்பார்கள். மயக்கம் தெளிந்தவுடன் வலி ஆரம்பிக்கும் தன்னவளுக்கு எனும் நினைப்பே கசந்தது அவனுக்கு. இதற்கு மேல் அவளை எந்தத் துன்பமும் நெருங்க விடக்கூடாது என முடிவெடுத்தவுடன் தான், தாய் நாட்டிலிருந்து கிளம்பினான். கிளம்பும் முன், தங்கள் சென்னை ப்ரான்ச்சிற்கு உதவும் செக்குரிட்டி சர்விசிடம் பேசி சித்ராவுக்குப் பாதுகாப்பும், அவள் சம்மந்தப் பட்ட விஷயங்கள் தனக்கு உடனுக்குடன் கிடைக்கும்படியும் ஏற்பாடு செய்து விட்டு தான் ப்ளைட் ஏறினான்.

பாவம் இருவருக்குமே தெரிந்திருக்கவில்லை இவர்களின் குழந்தையைத் தான் மாதியும், தேஜலும் சுமக்கப் போகிறார்கள் என.

உடல் உரசாமல், உள்ளம் சேராமல் இரு குழந்தைகளுக்கு தாய் தகப்பன் ஆகினர் பிரகாஷ் கப்பூரும் சித்ரா பௌர்ணமியும்.

(தொடர்ந்து உன்னோடுதான்)

 

Comments Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!