Uyir vidum varai unnoduthaan 11
Uyir vidum varai unnoduthaan 11
அத்தியாயம் 11
“என்னடா நினைச்சிட்டு இருக்க மனசுல?” கொதித்தார் பத்மா.
‘நினைக்கிறதெல்லாம் சொல்ல முடியுதா இங்க? இல்ல சொன்னா மட்டும் நடந்துருமா?’
“நிக்கிறான் பாருங்க ஊமைக் குறவன் மாதிரி. எனக்கு வர கோபத்துக்கு! “
“பத்து, விடும்மா! அவன் என்ன இன்னும் சின்ன புள்ளையா? அவன் வாழ்க்கைய பத்தி முடிவெடுக்க எல்லா உரிமையும் அவனுக்கு இருக்கு” சமாதானப் படுத்தினார் பாலன்.
“ஹ்கும்! இத்தனை வருஷமா பாசத்தைப் புழிஞ்சு வளர்த்தவ நான். இப்போ துரைக்கு ரக்க முளைச்சிருச்சுல. அதான் பறந்து போக பார்க்கிறாரு” மூக்கை சிந்தினார்.
அமைதியாகவே அமர்ந்திருந்தான் சிவா.
“பத்மா நீ பேசறது கொஞ்சம் கூட சரியில்ல. அவனுக்கு சம்பாரிக்கற வயசு. நாலு ஊர் போய் பார்த்தா தான் விவரம் வரும். இன்னும் உன் சிறகுகுள்ளயே வச்சிக்கனும்னா முடியுமா? போய்ட்டு வரட்டும்மா. சந்தோஷமா அனுப்பு”
“நீங்க ஏன் சொல்லமாட்டீங்க? இங்க எல்லாருக்கும் நானுன்னா தொக்குதான். என்னை யாரு மதிக்கிறீங்க? வேலை வெட்டி இல்லாம வீட்டுக்குள்ள அடைஞ்சி கெடக்கறவதானே. இவளுக்கு என்னத்த தெரியும்ங்கற மிதப்பு.”
“அக்கா, இப்ப என்ன தப்பா சொல்லிட்டேன்? அமெரிக்கால வேலை கிடைச்சிருக்கு. மூனு வருஷம் வேலை செஞ்சா நல்ல சம்பளம்.திரும்பி வந்து நாமே ஒரு கபே திறக்கலாம் அப்படின்னு ஒரு ஐடியா. இதுல என்னக்கா தப்பு? நான் முன்னேறி வரது பிடிக்கலயா?”
அதைக் கேட்டதும் ஒப்பாரியே வைத்து விட்டார் பத்மா.
“ஊருல உலகத்துல இல்லாத தம்பின்னு
மடியில போட்டு வளத்தனே இவனை
வளத்தக் கடா மாருல பாஞ்சது போல
என்னைக் கேட்டுப்புட்டானே கேள்வி
இந்த நாதியத்தவளுக்கு யாரிருக்கா
ஆத்தா அப்பான் உண்டா
இல்லா ஆமாம் சாமி போடற
புருஷந்தான் உண்டா!
நான் வாங்கி வந்த வரம் இப்படினா
அழுதா தான் முடியுமா புரண்டாதான் விடியுமா?”
“மச்சான் ஆரம்பிச்சிட்டாடா உங்கக்கா! இனி நாம வாய தொறக்க முடியுமா? ப்ளோல நாலு கெட்ட வார்த்தைக் கூட வரும். நீ வாடா நாம வெளிய போய் ஒரு டீ அடிச்சிட்டு வருவோம். அதுக்குள்ள ஒப்பாரி ஓவர் ஆகிருக்கும்”
“தோ பாருங்க, நான் இருக்கறப்ப எதுக்கு வெளிய டீ குடிக்க போணும்? அதெல்லாம் ஒன்னும் வேணாம். நான் போட்டுத் தரேன். “ மூக்கை உரிஞ்சியவாறே கிச்சனுக்குள் நுழைந்தார் பத்மா.
சிவாவைப் பார்த்து புன்னகைத்தார் பாலன்.
“புயலை கொஞ்ச நேரம் அடக்கி வச்சிருக்கேன். மறுபடியும் சுழண்டடிக்கும். ஒன்னும் பண்ண முடியாது”
ஜீவனின்றி புன்னகைத்த மச்சானை அணைத்துக் கொண்டார் பாலன்.
“அக்காவ பத்தி தெரியாதா மச்சான். உன் மேல உசுரயே வச்சிருக்கா. நீ இல்லாம அவளால இருக்க முடியாதுய்யா. கொஞ்ச நாள் பொலம்புவா, அப்புறம் உனக்கு விட்டுக் குடுத்துருவா. குழந்தைய்யா அவ. பட பட பட்டாசு. மனசு தங்கம்யா. “
“அக்காவ பத்தி எனக்குத் தெரியாதா மாமா. எல்லாருக்கும் அக்கா இன்னொரு அம்மான்னு சொல்லுவாங்க. எனக்கு அவ தானே அம்மா. நீங்க தான் அவள சமாதானப் படுத்தனும் மாமா. அவ அழுதா என்னால தாங்க முடியாது”
“அது தெரிஞ்சு தான் மச்சான் உங்கக்கா அடிக்கடி அழுகைன்ற ஆயுத்தத கையில எடுக்கறா. பலே கில்லாடி அவ” மனைவியை நினைத்து சிரித்தார் அவர்.
“இப்ப நான் என்ன மாமா செய்யட்டும்?”
“நீ பயணத்துக்கு ஏற்பாடு பண்ணு. அக்காவ நான் பார்த்துக்கறேன். போய் சம்பாரிச்சு,பணம் சேர்த்துட்டு வா. ஜோரா பேக்கரி ஆரம்பிச்சரலாம். கல்லா கட்டுற வேலைய எனக்கு குடுப்பல்ல?” சிரித்தார் பாலன்.
“என்ன மாமா, நான் ஹை கிளாஸா ஒரு கபே தொறக்கனும்னு இருக்கேன். நீங்க வீரபாகு பேக்கரி ரேஞ்சுக்கு பேசுறீங்க!” கவலையை மறந்து சிரித்தான் சிவா.
அவன் கூட சேர்ந்து சிரித்தவர்,
“சிவா! நீதான்யா எங்க முத குழந்தை. நீ எப்போதும் இப்படி சிரிச்சிட்டே இருக்கனும். உன் சந்தோஷம் தான் எங்க சந்தோஷம்யா” என்றார்.
‘அக்கா சந்தோஷம் தான் என் சந்தோஷம் மாமா. அதுக்காக நான் எத வேணும்னாலும் விட்டுக் கொடுப்பேன்’ மனம் ஊமையாய் அழுதது. கண் முன்னே நிலாவின் கலங்கிய முகம் வந்து போனது. கண்களை இருக மூடிக் கொண்டான் சிவா.
நிலா வீட்டிற்கு வந்தப் போது வீடே அமைதியாக இருந்தது. தீபாவின் காட்டுக் கூச்சல் கூட கேட்கவில்லை. சித்ராவின் அறை கதவு மூடி இருந்தது. கிச்சனுக்குள் நுழைந்தவள், தரையில் அமர்ந்து வரைந்துக் கொண்டிருந்த தீபாவையும், பாத்திரங்கைளை கழுவிக் கொண்டிருந்த மணியையும் தான் கண்டாள்.
“ஏன்டா பாசி, ஒரே அமைதியா இருக்கு? அக்கா ரூம்ல என்ன பண்ணுறாங்க?”
“இப்ப எதுக்கு கத்துற! மெதுவா பேசு. அக்கா வரப்போவே ஒரே அப்செட். கண்ணலுலாம் செவந்து கிடந்துச்சு. நேரா ரூம்கு போய் கதவ சாத்திக்கிட்டாங்க. நான் கதவ தட்டுனேன். கொஞ்ச நேரம் தனியா விட சொல்லிட்டாங்க”
‘என்னாச்சு அக்காவுக்கு? அந்த மூனு நாட்கள் கூட இல்லியே!ஹ்ம்ம். வெய்ட் பண்ணுவோம்’
“விட்ரா! வோர்க் டென்ஷனா இருக்கும். நான் தீபாவ குளிக்க வச்சி, நானும் குளிச்சிட்டு வரேன். சாப்பாடு குடுத்து நாமளே தூங்க வைக்கலாம். தீபா குட்டி, குளிச்சா வா”
“குளிச்சா வா? அம்மாகிட்ட தான் குளிச்சா வேணும். நீ வலிக்கற மாதிரி தேய்ப்ப. பேய்ன்”
“அட வாடி! நோவாம குளிக்கனும்னா எப்படி!”
“வேணா! அம்மா தான் வேணும்” குரலை உயர்த்தினாள் தீபா.
“மெதுவா தீபாம்மா! அம்மாவுக்கு தலை வலி. ஸ்லீப்பிங். நான் மெதுவா குளிப்பாட்டுறேன்”
“அம்மா தலை வலியா? அச்சோ பாவம். சரி வா, நீ குளிச்சா வை. அப்புறம் உன்னை நான் குளிச்சா வைக்கிறேன்” பேசிக் கொண்டே இருந்தவளை அள்ளிக் கொண்டு பாத்ரூம் போனாள் நிலா.
தீபாவுக்கு சாப்பாடு ஊட்டி, கதை சொல்லி தன் ரூமில் படுக்க வைத்தாள் நிலா. மணி பத்தாகியும் சித்ரா வெளியே வரவில்லை. அக்காவும் தம்பியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், கொஞ்ச நேரம் தனிமையில் இருப்பது சித்ராவின் வழக்கம் தான். அந்தக் கொஞ்ச நேர தனிமையிலேயே பிரச்சனையை அலசி ஆராய்ந்து ஒரு முடிவையும் எடுத்து விடுவாள். இன்று மகளைக் கூட மறந்து இருக்கிறாள் என்றால் பிரச்சனை பெரிது தான் என இவர்களுக்குப் புரிந்தது.
வேறு வழி இல்லாமல் நிலாதான் சென்று கதவைத் தட்டினாள்.
“அக்கா, வந்து சாப்புடுக்கா”
“எனக்கு பசிக்கல. நீங்க சாப்பிட்டுப் படுங்க. பாப்பாவ பார்த்துக்க நிலா”
“அவ தூங்கிட்டா. நீ சாப்பிடாட்டி நாங்களும் சாப்பிடாம படுத்துருவோம்” மிரட்டினான் மணி.
கதவு படிரென திறந்தது. மணியை முறைத்தவாறு நின்றாள் சித்ரா.
“மிரட்டுறீயாடா? பிச்சிப்புடுவேன்.” கத்தியவள் துண்டை எடுத்துக் கொண்டு குளிக்க சென்றாள்.
அவள் திரும்பி வரும்போது, சுட சுட டீயும் உப்புமாவும் காத்திருந்தது. தம்பி தங்கையோடு அமர்ந்து அமைதியாக சாப்பிட்டாள் சித்ரா. பின் மூவரும் ஹாலில் அமர்ந்தார்கள்.
“சொல்லுக்கா, என்ன பிரச்சனை? சட்டுன்னு கலங்க மாட்டீயே நீ” கேட்டாள் நிலா.
“ஹ்ம்ம். பெரிய பிரச்சனைதான் நிலா. எப்படி சமாளிக்கப் போறேன்னு தெரியல. தல சுத்துது”
“சொல்லுக்கா, நாங்களும் சொலுஷன் யோசிப்போம்ல” ஊக்கினான் மணி.
“சொல்லித்தான் ஆகனும். உங்க உதவியும் தேவைப்படுது இந்த விஷயத்துல”
“நாங்க நீ எத சொன்னாலும் செய்வோம்கா” மெலிதாக புன்ன்கைத்தாள் நிலா.
“ஹ்ம்ம். உங்களோட சேவிங்ஸ்லாம் எடுக்க வேண்டிய நிலமைல நான் இருக்கேன்”
“அக்கா! அதென்ன உங்களோட , என்னோடன்னு பிரிச்சி பேசிக்கிட்டு.” கண் கலங்கினாள் நிலா.
“இல்ல நிலாம்மா இப்போ எனக்கு இருபது லட்சம் தேவைப்படுதுடா. “
“அக்கா, ஏன்கா அவ்வளவு பணம்?” கேட்டான் மணி.
“என்னோட வேலையப் பத்தி உங்களுக்கு தெரியும். ரிஸ்கியான வேலை. எவ்வளவு பணத்தை நாங்க ஹேண்டல் செய்யறூம்னு சொல்லியிருக்கேன். கிளையண்ட் பணத்த இன்வெஸ்ட் பண்ணுறப்ப, அவங்க கேட்ட மாதிரி லோ ரிஸ்கா, இல்ல ஹை ரிஸ்கா அப்டிலாம் பார்ம் பில் பண்ண சொல்லிதான் இன்வெஸ்ட் பண்ணுவோம். எனக்கு இருந்த ஸ்ட்ரெஸ்ல ஒரு கிளையண்டோட பணத்தை ஹை ரிஸ்க் மார்கேட்டுல இன்வெஸ்ட் பண்ணிட்டேன். இன்னிக்கு அந்த ஷேர் படுத்துருச்சு. கிளையண்டுக்கு இருபது லட்சம் லாஸ்ட். பார்ம் எடுத்து பார்த்தா அவர் லோ ரிஸ்க் தான் டிக் செஞ்சிருக்காரு.”
“அய்யோ அக்கா! “ பதறினான் மணி.
“ஆமாடா, எப்பவும் ரொம்ப கவனமா இருப்பேன். இது எப்படி நடந்துச்சுன்னு தெரியலடா மணி.” சித்ராவும் கலங்கினாள்.
“இருக்கா, ஏதாவது வழி இருக்கான்னு யோசிப்போம்” சமாதானப்படுத்தினாள் நிலா.
“நீ உங்க பேங்குக்கு தானே வேலை செய்யற. இந்த மாதிரி லாஸ்லாம் அவங்க ஏத்துக்க மாட்டாங்களாக்கா?” கேட்டான் மணி.
“இது பியூரா என்னோட தப்புடா. இருந்தும் அவங்க ஸ்டாப்னால கொஞ்சம் கொம்பென்சேட் பண்ணுவாங்க. மேய்பீ ஒரு ரெண்டு மூனு லட்சம் பே பண்ணுவாங்க. அது கூட இனிமே எனக்கு போனஸ் , இன்க்ரீமெண்ட் இப்படி எல்லாத்தையும் கட் பண்ணிருவாங்க”
“சரிக்கா. இப்போ பேங்க்ல இரண்டு லட்சம் குடிக்கறாங்கன்னு வச்சிக்குவோம், நாம மீதம் 18 லட்சம் ரெடி பண்ணனுமா?” கேட்டாள் நிலா.
“ஹ்ம்ம் ஆமா நிலா. பேரென்ஸ் இறப்பப்ப கிடைச்ச இன்சுரன்ஸ்ச உங்க ரெண்டு பேர் பேருலயும் போட்டு வச்சேன்ல. அத இப்ப எடுக்கனும்.” குரலில் அவ்வளவு சோகம்.
“எடுக்கலாம்கா. கஸ்டத்துக்கு உதவ தானே அந்தப் பணம்.” அக்காவின் கைப்பற்றி சொன்னான் மணி.
“அப்பாவுக்கு உன்னை வெளிநாட்டுல படிக்க வைக்கனும்னு ஆசைடா. அதனால தான் அவ்வளவு கஸ்டம் வந்தும் அந்தப் பணத்த நான் தொடல. அதோட நிலா கல்யாணத்துக்கும் தேவைன்னு போட்டு வச்சது. எனக்கு மனசே ஆறலடா” கண் கலங்கியது சித்ராவுக்கு.
“அக்கா, இப்ப நான் இந்தியாவிலே படிச்சா மட்டும் பொழைக்க முடியாதா என்ன? அதெல்லாம் நீ மனச போட்டுக் குழப்பிக்காதக்கா”
“ஆமாக்கா, இப்ப என் கல்யாணத்துக்கு என்ன அவசரம்? இன்னும் ஒரு மூனு வருஷம் போகட்டும். இந்தப் பணத்த எடுத்து கம்பேன்சேட் பண்ணு உன் கிளையண்டுக்கு”(மூனு வருஷ கணக்கு ஏன்னு புரியுதா?)
“நம்ம கிட்ட ஒரு எட்டு லட்சம் இருக்கு. பேங்க்ல ஒரு இரண்டு லட்சம். மொத்தம் பத்து தான் வருது. இன்னும் ஒரு பத்து தேவைப்படுதே. என்ன செய்யறது?” மலைத்தாள் சித்ரா.
“அக்கா நான் ஒரு மூனு லட்சம் தரேன்” சொன்னாள் நிலா. டான்ஸ் ஆட ஒத்துக் கொண்டால் மூன்று லட்சம் சம்பளமாக தருவதாக டைரக்டர் மீண்டும் வற்புறுத்தி இருந்தார். பணம் கூடும்போது, துணி குறையும் என்பது இவளுக்குப் புரிந்திருந்ததால் இன்னும் சம்மதத்தைத் தரவில்லை. இப்பொழுது வேறு வழி இருக்கவில்லை நிலாவுக்கு.
விலுக்கென நிமிர்ந்த சித்ரா,
“ஏதுடி அவ்வளவு பணம்?” என கேட்டாள்.
“அது வந்துகா, டான்ஸ் அகடாமியில பழகறவங்கலாம் பெரிய பணக்காரங்க. எஸ்ட்ரா கிளாஸ் சொல்லிக் கொடுத்தா பணம் புரளும் கா. அத தான் நான் இத்தனை வருஷமா செய்யறேன். அப்படி சேர்த்தது.” சாமார்த்தியமாக புழுகினாள்.
“அக்கா நான் வேணும்னா ஒரு கிட்னிய வித்துருவா?” கேட்டான் மணி.
இரண்டு அக்காக்களும் அதிர்ச்சியில் அவனைப் பார்த்தனர்.
“உன் கிட்னி என்ன, தேங்காய் சட்னியாடா? அசால்ட்டா சொல்லுற! வாயில மிதிச்சிருவேன்” கடுப்பானாள் நிலா.
“உன்னால மட்டும் ஹெல்ப் பண்ண முடியுது. என்னால முடியலையே அதனால தான் கேட்டேன். இது தப்பா? அக்காவுக்காக கிட்னி என்ன என் உயிரையே குடுப்பேன்”
பாசத்துடன் தம்பியை அணைத்துக் கொண்டாள் சித்ரா.
“கண்டிப்பா எதாச்சும் வழி இருக்கும்டா. சாவி இல்லாத பூட்டு இல்ல, முடிவில்லாத பிரச்சனை இல்ல.” சொன்னாள் சித்ரா.
“அம்மா!” மூவரும் திரும்பி பார்த்தார்கள். நிலாவின் ரூம் கதவருகே கண்ணை கசக்கியபடி நின்றிருந்தாள் தீபா. சித்ரா கைநீட்டி வா என்பது போல் காட்டவும், ஓடி வந்து அவள் மடியில் அமர்ந்து கொண்டாள் மகள்.
“அம்மா, தலை வலி நல்லா போச்சா?” தன் அம்மாவின் நெற்றியை தொட்டுப் பார்த்தவாறே கேட்டாள் தீபா.
“உன்னைப் பார்த்தவுடனே நல்லா போச்சுடா குட்டிமா”
“என்ன பேசுறீங்க என்னை விட்டுட்டு?”
“அம்மாவுக்கு காசு இல்லையாம். அத பத்திப் பேசுறோம்” என்றான் மணி. சித்ராவின் மடியில் இருந்து இறங்கியவள் தனது ரூமுக்கு சென்றாள். திரும்பி வரும் போது அவளின் பார்பி உண்டியல் கையில் இருந்தது. சித்ராவிடம் நீட்டியவள்,
“எடுத்துக்கோமா! நிறைய இருக்கு. சோ மச் வாங்கலாம் இத வச்சு. இன்னும் வேணும்னா நான் பேப்பர்ல காசு படம் வரைஞ்சு கட் பண்ணி தரேன். இப்போ தூக்கமா இருக்கு. டுமோரோ செஞ்சு தரேன். ஓகேவா?”
“ஓகேடா” என்ற சித்ரா மகளை வாரி அணைத்துக் கொண்டாள். கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. தன் மடியிலே மகளை படுக்க வைத்து தட்டிக் கொடுத்தாள். அவள் தூங்கியவுடன்,
“நீங்களும் போய் படுங்க. நாளைக்கு பேசலாம். இப்படி பிரச்சனை வரும் போது செட்டல் பண்ண ஓன் மன்த் குடுப்பாங்க. அதுக்குள்ள எதாவது செய்யலாம்.” என்றாள் சித்ரா.
“அக்கா, கடைசி வரைக்கும் எந்த கிளையண்ட் அக்கவுண்ட்னு சொல்லவே இல்லையே!” கேட்டான் மணி.
“ஹ்ம்ம். என் கிரகம், ஆப்படிச்சது அந்த கப்பூரோட அக்கவுன்ட் தான்”
“ஓ” கோரசாக நிலாவும் மணியும் இழுத்தார்கள்.
“ப்ரௌனி ஏற்கனவே பண விஷயத்துல ரொம்ப கறாரு. இன் அண்ட் அவுட் தெரிஞ்சு வச்சிருப்பான் அவனோட பணவரவ பத்தி. எப்படி சமாளிக்கப் போறேன்னு தெரியல.” அவள் சொல்லி வாய் மூடவில்லை அவளது போன் அடித்தது.
“ப்ரௌனி தான் அடிக்கறான்.” பதட்டம் அவள் குரலில்.
“பேசுக்கா. அவர் நல்லவர் தான். கொஞ்சம் டைம் கேளு” சொன்னான் மணி.
“இவனுக்கு எல்லாம் தெரியும்! போடா!” தம்பியை முறைத்தாள்.
நிலா மடியில் இருந்த தீபாவைத் தூக்கினாள்.
“நான் இவள உள்ளப் படுக்க வைக்கிறேன். நீ பேசு” என்றவள் ரூமிற்குள் நுழைந்தாள்.
போன் காலை அட்டேண்ட் செய்து காதில் வைத்தாள் சித்ரா.
“சிமி!” குரலில் கோபமா, வருத்தமா, கடுப்பா இல்லை கொலைவெறியா கணிக்க முடியவில்லை அவளால்.
“சொ,, சொல்லுங்க சார்.”
“ஐ நீட் டு சீ யூ நவ்! உன் வீட்டு வெளிய கார்ல நிக்கறேன். ஜல்தி ஆவோ” இவளுக்குப் பேச இடம் கொடுக்காமல் போனை வைத்திருந்தான்.
‘அரே பகவான்! இப்பவே சலங்கைய கட்டிட்டானே! இனி ஸ்ட்ரெய்ட்டா அரங்கேற்றம் தான்.’
ரூமிற்குள் நுழைந்து கையில் கிடைத்த டீ சர்டையும், ஜீன்சையும் மாட்டிக் கொண்டாள். அவளுக்கு இருந்த மன உளைச்சலில் தலையைக் கூட வாரவில்லை. அப்புறம் எங்கே முகத்துக்கு அலங்காரம் செய்வது. பாஸ்மினா சால்வை ஒன்றை அலமாரியில் இருந்து எடுத்தவள், தலையை சுற்றி முக்காடு மாதிரி போட்டுக் கொண்டாள்.
‘அவன் குரல கேட்டாலே எல்ல விஷயமும் தெரிஞ்சிருச்சு போலருக்கு. முழுக்க நனைஞ்ச பின்ன முக்காடு அதுக்கு’ என கேட்ட மனசாட்சியை,
‘அடேய்!! இது குளிருக்குடா. வெளிய பனி கொட்டுறது தெரியலையா’ என கேட்டு அடக்கி வைத்தாள்.
“மணி, நிலா! கதவை சாத்திட்டுப் படுங்க. ப்ரௌனி வந்துருக்கான். நான் போய் பேசிட்டு வரேன். என் கிட்ட சாவி இருக்கு. தீபா பத்திரம்” என சொல்லிக் கொண்டே பர்சையும் போனையும் எடுத்துக் கொண்டு வெளியேறினாள்.
காரினுள்ளேயே அமர்ந்திருந்தான் பிரகாஷ். முக்காடோடு வந்தவளைப் பார்த்ததும் அவன் மனதிற்குள் சிறு கவிதை. (ஹிந்தில தாங்க நினைச்சான். கவிதைய கூட ஹிந்தில போட்டா மொத்திருவீங்கன்ற பயத்துல தமிழ்லயே தரேன்)
‘முக்காடு போட்ட
மூன்றாம் பிறை
இம்மென சொல்லு
உனை எடுப்பேனே சிறை!!!
மேரே பியாரி மோட்டி என கொஞ்சிக் கொண்டான். ஆனால் முகத்தை மட்டும் பாறை போல் வைத்திருந்தான் அவன்.
கார் கதவைத் திறந்து அவன் பக்கத்தில் அமர்ந்தாள் சித்ரா. அவன் முகத்தைப் பார்க்காமல்,
“சொல்லுங்க சார்” என்றாள்.
கார் சீறி பாய்ந்தது. திடுக்கிட்டவள்,
“எங்க போறோம்? அப்படியே கார்ல இருந்தே பேசலாம் தானே?” என கேட்டாள்.
“உன்னைய எங்கும் கடத்திட்டு போகல. பேசதான் கூட்டிட்டு போறேன்.”
“வெளிய எங்கும் போற மாதிரி நான் ட்ரேஸ் பண்ணிட்டு வரல சார்”
“பரவாயில்ல சிமி. உன்னோட ‘லவ் மீ ஓர் லீவ் மீ’ டீசர்ட் நல்லாதான் இருக்கு. நத்திங் டு வொரி”
‘நடந்து வந்த த்ரீ செகண்ட்ல என் டீசர்டுல என்ன எழுதியிருக்குன்னு படிச்சிட்டானா? கடவுள் உனக்கு கண்ணு வச்சதுக்கு பதிலா புண்ணு வச்சிருக்கலாம்.’
கார் ஐஐடி மெட்ராஸ் சாலையில் சென்று ஒரு மரத்தடியில் நின்றது. இரவில் அந்த இடம் பார்க்கவே ரம்யமாக இருந்தது. இறங்கிய பிரகாஷ் கைக்கட்டிக் கொண்டு காரில் சாய்ந்தபடி நின்று கொண்டான். அவனைப் பின்பற்றி சித்ராவும் இறங்கி அவன் அருகில் வந்தாள்.
ஆள் நடமாட்டம் இல்லாத அந்த இடம் இவளுக்கு பீதியை கிளப்பியது.
‘பேசறதுக்கு பிடிச்சிருக்கான் பாரு இடம். லவ்வர் கூட வந்தா நல்லா தான் இருக்கும் போல. நாம இவன் கூட வர வேண்டியதா போச்சே! நிக்கிறான் பாரு ஸ்டைலா. ரன்பீர் கப்பூரு அண்ணன்னு நினைப்பு போல’
“சார்!”
“எப்படி இப்படி ஆச்சு சிமி?”
“அது வந்து, நான் சரியாத்தான் கீ இன் செஞ்சேன். எனக்கே புரியல எப்படி ஆச்சுன்னு”
“லுக் சிமி! இது ஒரு ரூபா, ரெண்டு ரூபா இல்ல, இருபது லட்சம்! அத சம்பாரிக்க நான் என்ன பாடு பட்டுருப்பேன்னு உனக்கு புரியுதா? ஈசியா புரியலன்னு சொல்லுற! பேவகூப்” கத்தி இன்றி ரத்தம் இன்றி கொல்லறது இப்படிதானோ!
சித்ராவுக்கு கண்ணீர் முட்டியது. இவன் முன்னே அழக்கூடாது என கல் மாதிரி நின்றாள்.
“சொல்லு சிமி! ஐ நீட் எக்ஸ்பிலனேஷன்”
‘டேய்! பேசுனா தான் எகிறிருயே! அப்புறம் பேசு பேசுன்னா எப்படிடா பேசறது. நீதாண்டா பேவகூப்’
“கொஞ்ச நேரம் அமைதியா நான் சொல்லுறத கேளுங்க சார்”
“கேரி ஓன்!” கைகளைக் கட்டிக் கொண்டு அவளை நேர் பார்வைப் பார்த்தான். அவனின் ப்ரௌன் விழிகள் அவளை தூள் தூளாக துளைத்தது.
அவனின் பார்வை வீச்சு அவளுக்குள் எந்த ரசாயன மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக பயத்தில் அவளுக்கு வயிற்றை தான் பிரட்டியது.
‘ஏன்டா கப்பூரு என்னை முழுங்கற மாதிரி பாக்குற? கானா காலோ நஹியா? (சாப்பிடலையான்னு கேக்கறா)’
தலையைக் குனிந்துக் கொண்டவள்,
“நடந்ததுக்கு இதுக்கு மேல என்ன விளக்கம் சொல்லட்டும்? நடந்தது நடந்துருச்சு. நெக்ஸ்ட் ஸ்டேப் என்ன செய்யலாம்னு யோசிப்போம்.” குரல் கம்மியிருந்தது.
தலைக் கவிழ்ந்து பேசியவளை, ஆசைதீர கண்களால் தழுவினான் பிரகாஷ். அவள் சோகமாய் இருப்பதை அவனாலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அள்ளி அணைத்துக் கொள்ள துடித்த இரு கைகளையும் பேன்ட் பாக்கேட்டில் நுழைத்துக் கொண்டான்.
‘இப்படி லட்டு மாதிரி ஒரு சந்தர்ப்பம் வந்திருக்கு. ஏதாவது ஏடாகூடமா பண்ணி காரியத்தக் கெடுத்தறாதேடா’ என தன்னைத் தானே அடக்கிக் கொண்டான்.
“தென் டெல் மீ, என்ன நெக்ஸ்ட் ஸ்டேப்?”
“உங்க பணத்த நான் திருப்பிக் குடுத்துருறேன்”
ஹார்ட் அட்டாக்கே வருவது போல் இருந்தது பிரகாஷிற்கு.
‘இவ்வளவு பணம் வச்சிருக்காளா? எல்லாத்தையும் கண்டுபிடிக்க முடிஞ்ச எனக்கு இவளோட பணவரவ மட்டும் கண்டுபிடிக்க முடியலையே. பேங்கர்ல இவ, எங்க எப்படி பணத்த பாதுகாப்பா வைக்கிறதுன்னு தெரிஞ்சிருக்கு’
“இருபது லட்சம் வச்சிருக்கியா சிமி?”
“ஒரு பத்து லட்சம் வரைக்கும் முதல்ல புரட்ட முடியும். இன்னும் கொஞ்சம் டைம் குடுத்தீங்கன்னா, கண்டிப்பா மொத்தப் பணத்தையும் திருப்பிருவேன்”
இழுத்துப் பிடித்திருந்த மூச்சை, ஆசுவாசமாக விட்டான் பிரகாஷ். இருண்டிருந்த முகம் மெல்ல தெளிவடைந்தது.
‘அக்காவும், தம்பியும் டைம் மட்டும் நல்லா கேக்கறீங்கடா.’ புன்னகைத்துக் கொண்டான்.
“டைம்னா எவ்வளவு டைம்? பத்து வருஷமா?” கிண்டல் தொனியில் கேட்டான்.
விலுக்கென நிமிர்ந்துப் பார்த்தாள் சித்ரா.
“யூ சீ சிமி, நான் ஒரு பிஸ்னஸ்மேன். இங்க இருக்கறத அங்க தூக்கிப் போட்டு, அங்க இருக்கறத இங்க தூக்கிப் போட்டு ரோல் பண்ணுறவன். இப்படி இருபது லட்சம் ஒரு இடத்துல முடங்கிப் போய்ட்டா நான் எப்படி பிஸ்னஸ் பண்ணறது? நீ என் அக்கவுன்ட் மேனேஜர் தானே, நீயே சொல்லு”
அவன் சொல்வதில் உள்ள நியாயம் அவளுக்கு நன்றாகவே புரிந்தது. இருந்தாலும் பணத்தை எப்படி புரட்டுவது என மலைப்பாக இருந்தது அவளுக்கு. வேறு என்னதான் செய்வது என்றும் புரியவில்லை. தன்மானத்தை விழுங்கிக் கொண்டு,
“ப்ளிஸ் சார். கொஞ்சம் டைம் குடுங்க. நான் எப்படியாவது மேனேஜ் பண்ணுறேன்” வார்த்தைகளை மென்று துப்பினாள்.
அவளை ஒரு முழு நிமிடம் ஆழ்ந்து நோக்கினான் பிரகாஷ்.
“இந்த மேட்டர செட்டல் பண்ண நான் ஒரு வழி சொல்லுறேன் கேக்கறியா சிமி?”
“சொல்லுங்க சார்”
“என் அக்கவுண்டோட சேர்த்து என்னையும் நீ மேனேஜ் பண்ணறியா? இந்த இருபது லட்ச மேட்டர மறந்துறலாம்!”
பேவென முழித்தாள் சித்ரா.
“என்ன சொன்னீங்க?”
“உன் பைசோ ங்கா இன்தெஜாம் நஹி கர் சக்தே தோ முஜ்சே ஷாதி கர்லோ” (காசு கொடுக்க முடியலைனா என்னை கல்யாணம் பண்ணிக்கோ)
(தொடர்ந்து உன்னோடுதான்)