Uyirodu Vilaiyadu – 11

‘மாஃபியா’ என்ற சொல் முதலில், ‘சிசிலியன் மாஃபியாவுக்கு’ மட்டுமே பயன்படுத்தப்பட்டது.  பிற்காலத்தில் உலகளவில்  இதே குற்றங்களில் ஈடுபட்டு உள்ள அனைத்து குழுக்களுக்கும், ‘மாபியா’ என்ற பெயர் பொதுவாகி போனது. எ.கா., ‘ரஷ்ய மாஃபியா, ஜப்பானிய மாஃபியா.

‘மாஃபியா’ என்ற சொல் சிசிலியன் மொழியில், ‘மாஃபியுஸிலிருந்து/ mafusia’வில்  உருவானது. இது  ஸ்வாகர்/swagger, தைரியம், துணிச்சல்’ என்ற அர்த்தமாகும்.

19 ஆம் நூற்றாண்டில் மாஃபியுசு அறிஞர், ‘டியாகோ காம்பெட்டாவின்’ கூற்றுப்படி, ‘ சிசிலி/அச்சமற்ற, தொழில்முனைவோர் மற்றும் பெருமை’ என்று குறிப்பதாகக் கூறுகிறார். 

இந்தியாவின் பரப்பளவு, மக்கள் தொகை  மற்றும் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் செழித்து வளர்வதில் ஆச்சரியமில்லை. இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கடத்தலை மோசமாகப் பாதித்துள்ளது என்றே கூறப்பட்டாலும், சட்டவிரோத நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதாக அர்த்தமல்ல.

ஏர்போர்ட், துறைமுகம்  வழியாகத் தங்க கடத்தல், போதை  மருந்துகள், மின்னணு சில்லுகள், செல்போன்கள், ஆயுதங்கள், ஹியூமன் ட்ராபிக்கிங், prostituion ரிங்ஸ், ப்ரோனோக்ராபி, HAWALA ரியல் எஸ்டேட், சைபர் குற்றங்கள்   போன்றவற்றில்  அதிக லாபம்  என்பதை குற்றவாளிகள் உணர்ந்ததால்,  வணிக நடவடிக்கைகளில் (பங்குச் சந்தை உட்பட) இவர்கள் கரங்கள் நீண்டுள்ளன. 

இந்த மாபியாகள் தங்களின்  செயல்பாட்டுத் துறையாக.  உலகத்தையே கருதுகின்றனர்.

குற்றம் ஒரு நாட்டில் செய்வது, அதில் வரும் பணத்தை வேறு நாட்டில் முதலீடு செய்வது, இன்னொரு நாட்டில் தஞ்சம் அடைவது என்று இன்றைய மாபியாக்கள், ஒரு நாட்டில் மட்டும் தங்கள் வெறியாட்டத்தை காண்பிப்பதில்லை.   

Mafia’s became trans national criminals.)

அத்தியாயம் 11

மண மகளே!… மண மகளே!… 

வாழும் காலம் சூழும் மங்களமே!… மங்களமே!… 

குண மகளே!… குல மகளே!… 

பாலும் தேனும் நாளும் 

பொங்கிடுமே!… பொங்கிடுமே!…

குற்றம் குறை இல்லா 

ஒரு கொங்கு மணிச்சரமே

மஞ்சள் வளமுடனே என்றும் 

வாழணுமே!… வாழணுமே!…

வலது அடி எடுத்து வைத்து 

வாசல் தாண்டி  வா வா 

பொன் மயிலே!… பொன் மயிலே!…

புகுந்த இடம் ஒளிமயமாய் 

உன்னால் தானே மாறும் 

மாங்குயிலே!… மாங்குயிலே!…

இல்லம் கோயிலடி 

அதில் பெண்மை தெய்வமடி

தெய்வமுள்ள இடம் 

என்றும் செல்வம் பொங்குமடி…’ என்ற பாடல் தெருவில் ஒலிக்க,  அதை ரசித்தவாறு, புன்னகையுடன் அமர்ந்திருந்த சம்யுக்தாவை பார்க்க,  கேசவனுக்கு ஒருகணம் அங்கு அமர்ந்திருப்பது மாலினி போல் தோன்ற அவர் நெஞ்சை அடைத்தது. 

இதே கோயிலில் தான் மாலினிக்கும், பல்தேவிற்கும் கேசவனின் தந்தை திருமணம் நடத்தி வைத்திருந்தார். கேசவ மூர்த்திக்கு மிகவும் தெரிந்த குடும்பம் மாலினியினுடையது.  மாலினி அவருக்கு  மகள்  போன்றவர்.

“அப்பா!….” என்ற அவரின் பாசமான விளிப்பு   இப்பொழுதும் காதில் ஒலிப்பது  போன்ற பிரமை ஏற்பட அந்தத் தேவதை பெண்ணை நினைத்துக் கண் மூடி நின்றார்.

கோயிலுக்குத் நாள் தவறாமல் வரும் அந்தப் பக்தி, அவரின் உறுதி, அவர் முகத்தில் உள்ள தெய்வீகம், அப்பொழுதும் பூக்கூடையுடன் நேரில் நிற்பது போன்ற எண்ணத்தை விளக்க முடியாமல், அவரிடமிருந்து பெருமூச்சை மீண்டும் வெளிவரச் செய்தது.

‘நல்லவர்களை வெகுசீக்கிரம் அழைத்துக் கொள்வது  தான் இறைவனின் லீலா விநோதங்களில் ஒன்று  போலிருக்கு. 

தாய், தந்தை, சகோதர, சகோதரி என்ற பந்த பாசத்தை   உருவாக்கி, இல்லறத்தில்  நீந்த வைத்து, ஒரே  நொடியில் அத்தனையும்  பறித்து, ‘தான் என்ற கர்வத்தை அழித்து,’ வாழ்க்கையில் மரணம், இழப்பு,  வலி, வேதனையை வைத்து, ‘எதுவும் நிரந்தரமல்ல’  என்று போதிக்கும்,  யுக யுகமாய், நித்தமும் நடக்கும்  கண்ணாமூச்சி விளையாட்டு.

‘மரணம் இல்லா வீடு’என்பது எங்குமே இருக்க  போவதில்லை என்பது  நிதர்சனம். ஜனனம் மாதிரி  மரணமும் வாழ்க்கையின் இன்னொரு பகுதி என்ற தத்துவத்தை விளக்கும் அழகான விளையாட்டு.

தன் தந்தை சிறு வயதில் சொன்ன கதையொன்று நினைவிற்கு வந்தது கேசவனுக்கு.

ஒரு நாள் வாழ்வு, மரணத்தைப் பார்த்துக் கேட்டதாம், ‘என்னை எதற்கு எல்லோருக்கும் பிடித்து இருக்கிறது?… மரணமான உன்னை ஏன் எல்லோருக்கும் வெறுக்கிறார்கள்?” என்று 

அதற்கு மரணம் பதில் சொன்னதாம், “நீ அழகான பொய். ஆனால், நான் வலிக்க வைக்கும் நிஜம். உண்மை. ஏமாற்ற முடியாத ஒன்று… you can cheat anyone in the world but not me because you are a beautiful lie and I am DEATH IS  just a painful truth.’என்று… எத்தனை ஆழமான வார்த்தை.

மரணம் என்ற நிஜத்தை நேராகச் சந்திக்கும் துணிவு எத்தனை பேருக்கு உண்டு?… அது தான் நிஜம் என்று தெரிந்தாலும் வாழ்வு என்ற அழகான பொய்யில் பொய்யாய், போலியாய் வாழத் தானே மனம் ஏங்குகிறது.            

இது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று  தான் என்றாலும், ‘பக்குவம் இல்லா  மனம்’  யாரின் மீதாவது பழி போட  நினைக்கும்போது,  கடவுள், பக்தி என்பது மக்கள் கையில் மாட்டிக் கொள்கிறது.

‘உன்னை எப்படி வணங்கினேன்… ஆனால், இன்று எனக்கு உயிரானவரை பறித்துக் கொண்டாயே!…. இனி உன்னை வணங்கவே மாட்டேன் என்று  நம்  மனதை சமாதானம் செய்து   கொள்ள  இப்படியொரு  வழி.

நாம் வணங்கினாலும், வணங்கா விட்டாலும் மரணம் எங்குமே தவிர்க்க முடியாத ஒன்று.

அறிந்தவன் ஞானி.   

அதைத் தானே கண்ணதாசன் எளிமையான வரிகளில்,

‘போனால்  போகட்டும்  போடா

போனால் போகட்டும் போடா

இந்தப் பூமியில்,  நிலையாய்    

வாழ்ந்தவர்  யாரடா?

போனால்  போகட்டும் போடா

வந்தது  தெரியும், போவது    எங்கே

வாசல்  நமக்கே  தெரியாது

வந்தவரெல்லாம்  தங்கிவிட்டால்

இந்த மண்ணில்  நமக்கே  இடமேது?

வாழ்க்கை என்பது வியாபாரம்

வரும் ஜனனம் என்பது வரவாகும்

அதில் மரணம்  என்பது  செலவாகும்

இரவல் தந்தவன் கேட்கின்றான்

அதை இல்லைஎன்றால் அவன் விடுவானா?

உறவைச் சொல்லி  அழுவதனாலே

உயிரை மீண்டும் தருவானா?

கூக்குரலாலே  கிடைக்காது

இது கோட்டைக்குப் போனால் ஜெயிக்காது

அந்தக்  கோட்டையில்  நுழைந்தால்  திரும்பாது

நமக்கும் மேலே ஒருவனடா

அவன் நாலும் தெரிந்த  தலைவனடா

தினம் நாடகமாடும்  கலைஞடா

போனால் போகட்டும் போடா…’ என்று பாடி விட்டார்.

ஆயிரம்  முறை  கேட்டு இருப்போம். ஆனால்,  நிஜம் என்று வரும்போது,  அதை ஏற்கும்    பக்குவம்  யாருக்கும்   இருப்பதில்லை. இந்த மரண பயத்தை வெல்ல முடியாமல் தானே, இன்னொரு உயிரான சம்யுக்தாவின் எதிர்காலத்தைத் தான் பணயம் வைக்க முயன்றது.

மாலினியின் ஆத்மா தன்னை மன்னிக்கப் போவதில்லை.’ என்ற எண்ணமே கேசவனை கொல்லாமல் கொன்றது.  

சம்யுக்தாவின் பதினைந்தாவது வயதில், ஒரு  கார் விபத்தில், அகால மரணம் அடைந்திருந்தார் மாலினி. 

குடித்து விட்டு வாகனம் ஒட்டியவனின் கவனக்குறைவு,  இன்று சம்யுக்தா அனாதையாய் நிற்கக் காரணம்.

அப்படி தான் வழக்கு பதியப்பட்டு இருந்தது. 

ஆனால், அந்த மரணத்தின் பின் இருந்தது குடி போதையல்ல. மாபியா குழு. 

அது விபத்தால் ஏற்பட்ட மரணம் இல்லை. திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை.  

இந்த விவரம் கூட, ஆறு மாதம் முன்பு தான் கேசவனுக்கு தெரிய வந்தது. 

மாலினி பல்தேவிற்காகத் தன் வீட்டை எதிர்த்து வெளி வந்தபோது துணை நின்றது கேசவன்.

அதே சென்னையின் ஒரு பகுதியில் தான் மாலினியின் குடும்பம் இருக்கிறது. ஆனால், மாலினி இருந்த வரை, இறந்த பிறகும் கூட அவர்களில் யாரும் இவர்களைத் தேடி வந்ததில்லை.

காரணம் சம்யுக்தாவின்  தந்தை, பல்தேவ்  தான் என்ற உண்மை அறிந்தவர்களில் ஒருவர் கேசவ மூர்த்தி.     

சற்று  கூட  மாலினிக்கோ, தங்கள்  குடும்பத்திற்க்கோ பொருந்தாதவர் அவர் என்ற மாலினி  குடும்பத்தின் எண்ணத்தை, உண்மை என்று நிரூபித்தவர்… இன்னும் நிருபித்து கொண்டு இருப்பவர். 

கேசவன் முதலில் அழைத்த நம்பர் பல்தேவுடையது தான்.

அப்படி அழைத்திருக்கவில்லை என்றால், சம்யுக்தா செய்யப் போகும் இந்தத் திருமணம் நிச்சயம் கேசவனுக்கும், அவர் குடும்பத்திற்குமே சுருக்கு கயிறாய் மாறி விடும் என்பதால் பல்தேவை மொபைலுக்கு அழைப்பு விடுத்தார்.    

பல்தேவ்!

சத்ருஜித்தின் தமிழக பினாமி, பரணி, விக்ரமின் தலைவன் சம்யுக்தாவின் தந்தை பல்தேவ் குப்தாவே தான்.  

பல்தேவ் என்ற, ‘வியாபார சக்ரவர்த்தியின்’ இன்னொரு முகத்தை நேரில் கண்ட சிலரில் கேசவனும் ஒருவராகி போனது தான், ஈஸ்வர், சம்யுக்தாவை இப்பொழுது குறி வைத்திருக்கிறது. 

 மற்றவர்கள் முன்னிலையில் எல்லா மனிதர்களும் ஒரு முகமூடி போட்டுக் கொண்டு தான் நடிப்பார்கள். அந்த, ‘நல்லவர்’ என்ற முகமூடி பல்தேவிற்கு கழன்று இருக்கும்போது அதை நேரில் பார்த்தவர் கேசவன். 

விளைவு,  கேசவன் நெற்றியில் துப்பாக்கி. 

‘உன் வீட்டு பெண்களை நாசமாக்கி விடுவேன்’ என்ற பல்தேவ்வின் எச்சரிக்கை.   

பல்தேவின் இந்த முகம் மாலினி இறக்கும் வரையிலும், அந்த நொடிவரை சம்யுக்தாவும் அறியாத ஒன்று. 

பல்தேவ் ஆறடி உயரத்தில், எண்பத்தி ஐந்து கிலோ எடையில், சதா போதையில் இருப்பது போல்  தோற்றமளிக்கும் கண்களையும், உணர்ச்சிகளைச் சட்டென்று வெளிக்காட்டாத பாறை போன்ற முகத்தையும் கொண்டவர்.   

சட்டென்று பார்க்கச் சினிமா நடிகர், ‘சஞ்சய் தத்’ உருவ அமைப்பில் இருப்பவன். ஐம்பத்தி ஐந்து வயது.  

கோவாவை பூர்விகமாய் கொண்டவன். படிப்பு சுத்தமாய் கிடையாது.  சிறுவயதில் தான்தோன்றியாய், பொறுக்கியாய் கோவாவில் அலைந்தவன்.

80களின் கடைசியில், 90களில் கோவாவை ஒட்டுமொத்தமாய் உலுக்கிய, ‘தொடர் பாலியல் வன்கொடுமை வழக்குகளில்’ தேடப்பட்ட முக்கிய குற்றவாளி.  

ஒட்டுமொத்த இந்திய காவல் துறை தங்கள் துறைக்கே கரும்புள்ளி என்று கருதிய வழக்கு அது.

கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் கோவாவை உலுக்கிய, ‘தொடர் பாலியல் பலாத்கார’ வழக்கில்  கோவா போலீஸ் தலை உருண்டதற்கு காரணம் பல்தேவ்.

சிறு ஆதாரம் கூடக் கிடைக்காமல், கோவா போலீஸ் திணறியது. pattern என்று சொல்வார்கள். அது எதுவுமே இந்த வழக்குகளில் இல்லை. குறிப்பிட்ட வயது, இடம், உள்நாட்டு, வெளிநாட்டு பெண்கள் என்ற எந்த எல்லைகளும் இல்லாத நிலை.

கோவா 

இந்தியாவின் மிகச்சிறிய  மாநிலமாகவும், இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் சுற்றுலா இடமாகவும் இருக்கும் கோவா, கடலோர கொங்கன் பிராந்தியத்திலும், அதன் மேற்கு கடற்கரையை உருவாக்கும் அரேபிய கடலின் கரையிலும் அமைந்துள்ளது.

அரபி கடல் அன்னை மடியில், அலைகள் நர்த்தனம் புரிய, தென்னம் தோப்புகளும், நீண்ட வெள்ளை கடற்கரைகள், கோவன் உணவுகளால் உண்டாகும் மீன் கலந்த வாசமும் நித்தம் மக்களைக் கிறங்க வைத்துக் கொண்டிருக்கும் அற்புதமான கடற்கரை மாநிலம். 

கோவா அதன் அற்புதமான நிலப்பரப்பு, இந்தியாவில் புகழ்பெற்ற கடற்கரைகள், வியக்க வைக்கும் நினைவுச்சின்னங்கள் மற்றும் தேவாலயங்கள் மற்றும் சலசலப்பான கோவா இரவு வாழ்க்கைக்கு பெயர் பெற்றது. 

கோவா இந்தியாவில் அதிகம் பார்வையிடப்படும் சுற்றுலா இடங்களில் ஒன்றாகும். இது ஆண்டு முழுவதும் உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.

கோவாவில் திகைக்க வைக்கும் வண்ணம்  சுமார் 7000 பார்கள் உள்ளன.விடிய விடிய நடைபெறும் பார்ட்டிகள், கேளிக்கை நடனங்கள் என்று  சர்வதேச சுற்றுலா தலமாக இருப்பதால், இது அதிக, ‘high spirits’  மற்றும் இலவச  கற்பனைகளின்/free wheeling fantasis  நிலம். 

கடற்கரைகள், காடுகள், பொழுதுபோக்கு கேசினோக்கள், படகுகள், மசாஜ் பார்லர், சூதாட்ட விடுதிகள், ஜென்டல்மேன் கிளப், என்று கையில் பணம் இருந்தால் சுவர்க்கம் காலடியில் கொண்டு வந்து சேர்க்கும் மாய லோகம்.  

30% க்கும் அதிகமான வனப்பகுதி கொண்ட மாநிலம். அதிகமான ஒதுக்குப்புறங்களுக்கு பெயர் பெற்றது. 

இவையெல்லாம் சேர்ந்து வரைமுறை என்பதே இல்லாத ஒரு இடமாய், வாழ்க்கை நெறிமுறைகள் அந்த நொடி இன்பத்தை மட்டும் பெரிதெனக் கருதும் மக்கள் கூடும் இடமாக இருப்பது, தன் வக்கிரங்களை  தீர்த்துக் கொள்ள, பல்தேவிற்கு மிகவும் பெரிய வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது  என்று கூடச் சொல்லலாம். மதுவின் போதையில் எல்லா வரைமுறைகளையும் கடந்த நிலையில் உள்ள பெண்களின் அருகே இருக்கும் வண்ணமாய்  பார்களில் வேலை.  

பதினைந்து வயதில் திடக்காத்திரமாய், ஆஜானுபாகுவாய் இருந்தவன், அப்பொழுதே  பெண்களை, போதை பொருளாய், படுக்கைக்கு மட்டுமே என்று வாலாட்டியவன்.    

வீட்டிற்குள், லாட்ஜ், ஹோட்டலுக்குள் புகுந்து தன் வெறித்தனத்தை காட்டுவதை, மிகப் பெரிய சாதனையாகக் கருதி ஆட்டம் போட்டவன். இவன்  கையில் சிக்கி, கருகிய மலர்கள் ஏராளம்.

நூற்றுக்கணக்கான இந்தப் பாலியல் வழக்குகள் ஒன்றொன்று ஒன்று இணைந்தவை என்று கோவா போலீசுக்கு சந்தேகம் வரவே ஐந்து வருடங்கள் ஓடி விட்டது. இத்தனை பெண்களின் வன்கொடுமைக்கு காரணம், டீனேஜ் வயதில் இருக்கும் பையன் ஒருவன் என்று காவல் துறை மட்டுமல்ல, பொது மக்களுக்கும் சந்தேக பட வாய்ப்பில்லை தான்.  

பல பெண்கள் முன் வந்து தங்களுக்கு நடந்த கொடுமைகளைப் பற்றிப் போலீசிடம் தகவல் சொல்லவும் இல்லை.சொல்லும் நிலையிலும் பல பெண்கள்  இல்லை என்பது தான் உண்மை.

ஜஸ்டிஸ் கிருஷ்ண ஐயர், ‘Rafiq v. State of U.P’ வழக்கில் சொன்னது போல், ‘ஒரு கொலைகாரன் உடலை மட்டும் தான் கொன்றுவிடுகிறான், ஆனால் பாலியல் பலாத்காரம் செய்பவன் ஆத்மாவைக் கொன்றுவிடுகிறான்’ என்பது போல், ஒரு சிலர் தங்களுக்கு நேர்ந்தவற்றுக்கு நியாயம் கோராமல்  ஊமையாகி நின்றவர்கள் ஏராளம். 

ஐபிசி பிரிவுகள் Sec 375, 364 (கொலை செய்வதற்காகக் கடத்தல் ) 376, 302 (கொலை), 392 (கொள்ளை) மற்றும் 201 (ஆதாரங்களை அழித்தல் என்று பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யலாம். ஆனால் யாரின் மீது செய்வது? 

எந்தப் பெண் சுயநிலையில் இல்லையோ, எந்தக் குடும்பம், எந்தப்  பெண்  நடந்ததை வெளியே    சொல்லமாட்டார்கள் என்பதை  நன்கு தெரிந்து கொண்டு, கணக்கு செய்து, பெண்களை நெருங்குவதை பொழுதுபோக்காய் செய்யும் கேடு கெட்ட, சதை வெறி பிடித்த மிருகத்தின் வெறியாட்டத்தில் ஒட்டுமொத்த கோவா என்ற மாநிலம் நடுங்கியது என்றே சொல்ல வேண்டும்.  

கோவா செய்தி துறை காவல் துறையைக் கிழித்து எடுத்தது.

“சார்!… இத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் உங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லையா?”

“பதிக்கப்பட்ட பெண்களில் பாதி பேர் தங்களுக்கு நடந்ததை வெளி சொல்ல விரும்பவில்லை. மீதம் பாதி பேர் தங்களுக்கு என்ன நடந்தது என்று சொல்லும் நிலையிலும் இல்லை.” என்றார் எஸ்.பி பிரிஜ் கிஷோர்.

“அப்படித் என்ன தான் சார் நடந்தது?…”

“Date rape drugs  என்பது  tranquillisers and hallucinogenic drugs, ecstasy, over-the-counter sleeping pills and anti-histamines ஆல்கஹால் மற்றும் சில மருந்துகள் ஆகியவை அடங்கும். 

இவை கலக்கப்பட்ட பானகங்கள்,’spiked drinks’ என்று அழைக்கப்படும்.  

இன்றளவும் பார்ட்டிகளில், ஹோட்டல், டான்ஸ் கிளப்களில் பெண்கள் அவர்களே அறியாமல் இந்த மருந்துகள் கொடுக்கப்பட்டு கடத்தப்படுவதும், பாலியல் வன்முறைக்கு ஆளாவதும், ரயில்களிலும் பேருந்துகளிலும் பயணிகளைக் கொள்ளையடிக்கவும் இந்த மருந்து பயன்படுத்தப்பட்டு கொண்டு தான் இருக்கிறது.

இந்த மருந்துகளின் விளைவுகள் காரணமாக, பாதிக்கப்பட்டவர்கள் உடல் ரீதியாகப் போராட முடியாதவர்களாகவும், தங்களுக்கு நடக்கும் கொடுமைகளைத் தடுக்க முடியாதவர்களாவும்  போகலாம். 

என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்ள முடியாது. அம்னீஷியா மாதிரி நடந்த எதுவும் நினைவிலும் இருக்காது  என்றபோது குற்றவாளியை இவர்களால் அடையாளம் காட்டவும் முடியாமல் போகலாம்.

இது போன்ற மருந்துகள் பெரும்பாலும் நிறம், வாசனை, சுவை  இருக்காது. மேலும் பாதிக்கப்பட்டவருக்குத் தெரியாமல் சுவையான பானங்களில் எளிதில் சேர்க்கப்படுகின்றன.

மருந்துகளின் அனைத்து தடயங்களும் உட்செலுத்தப்பட்ட 72 மணி நேரத்திற்குள் உடலை விட்டு வெளியேறுகின்றன. வழக்கமான நச்சுயியல், இரத்த பரிசோதனையில்  இந்த மருந்தின் தடயம் இல்லாமல் போவதால் பார்ட்டிகளில், உறவினர் வீடுகளில், சுற்றுலா செல்லும் இடங்களில், தங்கும் ரிசார்ட், ஹோட்டல்களில் தங்களுக்கு என்ன நடந்தது என்பதையே பாதிக்கும் மேல் பெண்கள் அறிவதில்லை.  

தளர்வு, மயக்கம், தலைச்சுற்றல், குமட்டல், பார்வையில் உள்ள சிக்கல்கள், மயக்கம்,  வலிப்புத்தாக்கங்கள், சுவாசப் பிரச்சினைகள், நடுக்கம், வியர்வை, வாந்தி, வலி மரத்து போதல், மெதுவான இதய துடிப்பு, கனவு போன்ற உணர்வு, கோமா மற்றும் மரணம் இதில் எல்லாமுமே symptoms ஆக இருக்கலாம்.

நிறைய பெண்கள் தங்கள் உடலில், ‘சர்க்கரையின் அளவு அதிகமாகியோ, குறைந்தோ, சரியாகச் சாப்பிடாமல் இருப்பதால் ரொம்ப நேரம் தூங்கிட்டோம் போலிருக்கு…’ என்று இதைப் பெரிய விஷயமாகக் கருதுவதில்லை. பெண்களுக்குத் தாங்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானதே தெரியாதபோது, குற்றத்தைப் புரிந்தவன் யார் என்று தெரியாதபோது, உதவி கோரி எங்களிடம் வருவதுமில்லை.” என்றார் எஸ்.பி  பிரிஜ் கிஷோர்.

“பெண்களுக்கு உங்கள் அறிவுரை என்ன ? பெண்கள் எப்படி விழிப்போடு இருக்கலாம் ?”

“நீங்கள் வெளியில் இருக்கும்போது, நண்பர்கள், சக ஊழியர்கள், உறவினர்களுடன் தனியாக இருக்கும்போது எந்தப் பானங்களையும், உணவுகளையும் ஏற்க வேண்டாம். கொள்கலன்களை நீங்களே திறக்கவும்.

 நீங்கள் குளியலறையில் செல்லும்போது கூட, எல்லா நேரங்களிலும் உங்கள் பானத்தை உங்களுடன் வைத்திருங்கள். பானங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

பஞ்ச் கிண்ணங்கள் அல்லது பிற பெரிய, பொதுவான, திறந்த கொள்கலன்களிலிருந்து குடிக்க வேண்டாம். அவற்றில் ஏற்கனவே மருந்துகள் இருக்கலாம். சுவை அல்லது விசித்திரமான எதையும் குடிக்க வேண்டாம். 

குடிக்காத ஒரு நண்பரை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள், எதுவும் நடக்காது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் (நீங்கள் மது அருந்தினால்).

நீங்களே அறியாமல் உங்களுக்குப் போதை மருந்து கொடுக்கப்பட்டதாகவோ, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகச் சந்தேகம் எழுந்தால், மகளிர் உதவி எண்ணை அழைக்கத் தயங்க வேண்டாம்.என்றுமே பாலியல் பலாத்காரம் என்பது பெண்ணின் குற்றமே இல்லை.இதற்குக் கூனி, குறுக வேண்டிய அவசியமும் இல்லை.   

உடனே காவல் நிலையம் அல்லது மருத்துவமனைக்குச் செல்லுங்கள். பரிசோதனையைப் பெறுவதற்கு முன்பு சிறுநீர் கழிக்க வேண்டாம். உதவி பெறுவதற்கு முன்பு துணி துவைக்கவோ, குளிக்கவோ, துணிகளை மாற்றவோ வேண்டாம். இந்த விஷயங்கள் கற்பழிப்புக்கான ஆதாரங்களை அளிக்கலாம். “என்றார் பிரிஜ் கிஷோர்.

மாநிலம் முழுவதும் , மக்கள் கூடும் முக்கிய இடங்கள் எல்லாம் காவல் துரையின் நேரடி கண்காணிப்பில் வந்தது. பெண் காவலர்கள் மப்பிடியில் இந்த பார்ட்டி, கேளிக்கை விடுதிகள், நடன அரங்குகள், பார்களில் இரவு பகல் பாராமல் உலவ ஆரம்பித்தார்கள்.

அவர்கள் அறியாத ஒரு விஷயம் போதை மருந்தைப் பயன்படுத்துவது பல்தேவின் ஒரு வழி மட்டுமே என்பது. இன்னொரு ஆயுதமாய் பல்தேவ் கையில் இருப்பது போதை மருந்தைவிட அதி சக்தி வாய்ந்த ஆயுதம் காதல்.      

பெண்களை மயங்க வைத்து, அரங்கேறும்  வக்கிரம் ஒருபுறம் என்றால், காதல் என்ற உன்னதத்தை    கையில் எடுத்து, பேசி, பழகி, பெண்களை  நம்ப வைத்து, தன்  தேவை  தீர்ந்த  பின், தூக்கி எறிவது  இவனின்  இன்னொரு முகம். 

ஆக மொத்தம் எண்ணில் அடங்காப் பெண்களின் வாழ்வை நரகமாக்கிய வக்கிரம் பிடித்தவன் பல்தேவ்.

மகனின் போக்கு பிடிக்காமல், பல்தேவ்வை வீட்டை விட்டு வெளியே அனுப்பி இருந்த சமயம். கோவா காவல் துறை ஷூட் அட்சைட் ஆர்டருடன் துரத்திய நேரம் அது.

பல்தேவ்வை பற்றி அறியாத நண்பன் ஒருவன், பல்தேவை தன்னுடன் தங்க வைத்துக் கொள்ள, அதுவே அவனுக்கு எமனாய் மாறி, பல்தேவ் கோவா காவல் துறையிடமிருந்து தப்பவும் வழிவகுத்தது.

இல்லையென்றால் நடு ரோட்டில் அன்றே என்கவுண்டரில் இறந்திருக்க வேண்டிய மிருகம் அவன்.

ஆயுசு கெட்டி.       

மயிழிரையில் உயிர் தப்புவது என்று சொல்வார்களே அது தான் நடந்தது. பல்தேவ் யாருடன் தங்கி இருந்தாரோ அந்த அப்பாவியைத் தவறுதலாய் சுட்டு, அவன் தான் குற்றவாளி என்று வழக்கை அவசர அவசரமாய் முடித்து இருந்தார்கள்.

அந்த வீட்டில் இருந்த ஆதாரங்களும், அருகில் யாரும் இல்லாத அந்த வீடு அமைந்திருந்த நிலையும், சுடப்பட்டவனோடு இன்னொருத்தன் தங்கி இருந்தான் என்பதை சொல்ல யாரும் இல்லாமல் போனது பல்தேவின் நல்ல நேரம், மாலினியின் கெட்ட நேரம் மற்றுமில்லை, உலகில் பல குடும்பங்களின், பெண்களின் கெட்ட நேரம் என்று தான் சொல்ல வேண்டும்.   

போலீஸ் என்கவுண்டரில் தப்பி மீண்டும் தன் வீட்டிற்கு சென்றவன், அக்காவின் திருமணத்திற்காகவும், தாயின் மருத்துவத்திற்காகவும், பூர்விக சொத்தை விற்று தந்தை சேகரித்து வைத்திருந்த  பணத்தை,  திருடிக் கொண்டு சென்னைக்கு ஓடி  வந்தவன். 

மாலினியிடம் தன் குடும்பத்தைப் பற்றி இவன் சொன்ன எல்லாமுமே வெறும் கட்டுக்கதை மட்டுமே. நிஜ வில்லன் அவர்கள் அல்ல இவன் தான்.

‘ஒரு அக்கா பண வெறி   பிடித்தவங்களாம்…  இல்லைன்னா வீட்டின் ஒரே ஆண்  வாரிசான இவரைப் பணத்திற்காக,  எவளோ  ஒரு பணக்காரிக்கு மூன்றாம்  திருமணம் செய்ய  ஏற்பாடு செய்வார்களா?….

அந்தப்  பெண், ‘ கோடிகோடியாய்  பணம்  தரேன்’ என்று சொன்னதும்,  இவரை  விற்க முயன்று  இருக்காங்க. அது  பிடிக்காமல் தமிழ்நாட்டுக்கு  ஓடி வந்துட்டார்   உங்க  அப்பா…” என்று பல்தேவ் சொன்னதாக, மாலினி, சம்யுக்தாவிடம் சொன்ன எல்லாமே, பல்தேவ் அவிழ்த்து விட்ட கட்டுக்கதை.   

கோவாவில் அதற்கு   மேல்  இருந்தால் மாட்டிக் கொள்வோம் என்று ஓடிவந்தானோ, இல்லை அந்த  ஊரில், அதற்கு மேல்  பெண்கள்  இல்லை என்று    ஓடி  வந்தானோ,  இல்லை புது இடத்தில் தன் இச்சையை தீர்த்துக் கொள்ள வந்தானோ அவனுக்குத்  தான்  வெளிச்சம்.   

குடும்பத்தை நிர்கதியாக நிற்க வைத்து விட்டு, தாய், சகோதரியின் உயிரை, வாழ்வை கேள்விக்குறியாக்கி பணத்தோடு ஓடி வந்தவனின் ஆட்டம்  மது,  மாது, போதை என்று   அதிகமாகவே இருந்தது     

‘குந்தி  தின்றால் குன்றும்  மாளும்’ என்னும்போது, பல லட்சங்கள், ஊதாரிதனத்தால் சில மாதங்களில் கரைந்து போனது.

கையிலிருந்த  காசு கரைய, வயிற்று பிழைப்புக்காக, சுற்றி கொண்டிருந்தபோது தான் இன்னொரு நண்பனின் உதவியால், மகளிர் கல்லூரிக்கு எதிரே இருந்த கடையொன்றில் வேலை கிடைத்தது.   

மகளிருக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும் இடம் அது. கேட்கவும் வேண்டுமோ!… ஓநாயின் பார்வை படும் இடத்தில் மான்கள் கூட்டம்.

ஒவ்வொரு மான் குட்டியாக ஓநாய் வேட்டையாட, சென்னையில் திடீர் என்று கல்லூரி பெண்களின் தற்கொலை அதிகமானது. 

‘தீராத வயிற்றுவலி’ என்று சொல்லபட்ட பல மரணங்களின் பின், ரண காயம் பட்டுத் துடித்து, குடும்ப மானத்தை காக்க தங்களையே மாய்த்து கொண்ட ஒவ்வொரு பெண்ணின் மரணத்திற்கும் பின்  இருந்தது பல்தேவ்.

அந்த மகளிர் கல்லூரியில் படித்த, அழகான பெண்   மாலினி, இவன் கண் பார்வையில் சிக்கியது,   விதியின் சதி என்று  தான்  சொல்ல வேண்டும். 

இவரின்  உண்மை முகம்   தெரியாமல், அப்பாவிபோல் முகத்தை வைத்துக் கொண்டு, நாகரீக ஆடைகள்  அணிந்து,  பெரிய  இடத்து பையன்   மாதிரி  நடித்த, பல்தேவின் வெளிப்புற தோற்றத்தில் ஏமாந்து  போனார் மாலினி.

இப்படி  வெளிப்பகட்டில் சிக்கி, அதற்குக் காதல் என்ற பெயர் கொடுத்து, எல்லாம் இழந்த பிறகு   காமத்திபுராவிலும், பாலியல்  தொழிலும் விற்கப்பட்ட   பெண்கள் ஏராளம்.  

பல்தேவ் போன்ற ஆட்களை நம்பி, வீட்டை விட்டுக்   காதல் என்று  ஓடி, தன்னையே இழந்து விடும் பள்ளி, கல்லூரி பெண்கள், இல்லத்தரசிகள்   லிஸ்ட், ‘infinity’   என்று கணக்கிடவே முடியாத நிலை. ‘என்ன நடந்து விடும். வெளியே தெரியாமல் பழகித்   தான் பார்ப்போமே!…’ என்று பாம்புக்குப் பால்   வார்த்து விட்டு, அதன் விஷத்தால்அழிந்த கூடுகள்  ஏராளம்.

சமூக வலைத்தளங்களிலும், பொது  இடங்களிலும், பள்ளி, கல்லூரிக்கு அருகிலும் பைக்கில், காரில் இது போன்ற ரோடு சைட் ரோமியோக்கள், தங்கள் இச்சையை தீர்த்துக் கொள்ள நிற்பது, சகஜமாகி    போன ஒன்று.

நெருக்கமாய் இருப்பதை போட்டோ, வீடியோ எடுத்து,  இல்லையென்றால்  வீடியோ மார்பிங் செய்து, அதை  வைத்து மிரட்டிப் பணம் பறிப்பதோ, இல்லை தங்களுக்கு அடிபணிய வைப்பதோ   இவர்களின் பொழுதுப் போக்கு.

அழகான ஆத்ம  பந்தமான  காதலை, உயிரைக் கொல்லும் புதைகுழியாக, இவர்கள்  மாற்றிக் கொண்டு  இருக்கிறார்கள்.

இப்படி   பெண்மையை  விளையாட்டு பொருளாய் கருதும்  ஒரு  கேடு  கெட்டவன் பல்தேவ் என்று அறியாத மாலினி, அழகாய் அவன் வலையில் விழுந்தார். விழ வைத்தான் பல்தேவ்.எந்தப் பெண்ணின் குணம் எப்படி, எப்படி பேசி, பழக வேண்டும் என்று எல்லாவற்றையும் விரல் நுனியில் வைத்திருப்பவன்.  

‘நண்பர்களைச் சந்திக்கவும், தன்னை பார்க்கவும்    தான்  தினமும், அந்தக் கடைக்குப் பல்தேவ் வருகிறார்’ என்று தவறாய் புரிந்து, தன் வாழ்க்கையை அழிக்கும் பாதையில் பயணிக்க ஆரம்பித்தார்  மாலினி.

‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல…’  படித்த பழமொழி தான்.

ஆனால்,  நிஜ வாழ்க்கையில், அதையெல்லாம்  வாழ்க்கை பாடமாய் யார் நினைப்பது?… அதுவும்    காதல் வந்து  விட்ட வீட்டு கிளிகளைப் பற்றிக் கேட்கவும் வேண்டுமோ? 

காதல்  வரக் கூடாதவரின் மீது  வந்திருக்க, வாழ்க்கை    மாலினி  மொத்தமாய்  இழந்து விட்டதாய் தான்,    அவர் குடும்பத்திற்கு தெரிந்தது.

காதலிக்கும்போது, அது சொர்கமாய் தெரியும்.  சுற்றிலும் நின்று  தேவதைகள்  பாடுவது போல் இருக்கும். வானத்தையே வளைக்கும் ஆற்றல் இருப்பது  போல்  இருக்கும்.ஆனால், நிஜம் முற்றிலும் வேறு மாதிரியானது என்பதற்கு மாலினி  வாழ்க்கை சிறந்த உதாரணம்.

காதல் என்பதில் உணர்ச்சிகளின்  விளையாட்டுக்கு அடிமை  ஆகக் கூடாது. 

உடல் கவர்ச்சி மட்டும், அந்த நேர ஹார்மோன்களின்   துடிப்பு மட்டும் போதுமா?… அன்பாய், அனுசரணையாய் நாலு வார்த்தை, சினிமா ஸ்டார் மாதிரி முகம், சிக்ஸ் பாக் உடல் அமைப்பு, பர்ஸ், கார், பைக் என்று இருந்தால் மட்டும் போதுமா?… ‘ என்று யோசிக்க தவறும் மனங்களின் வாழ்க்கை நரகம்.

‘நடந்தவை  எல்லாம்  வேஷங்களா

நடப்பவை  எல்லாம்  மோசங்களா

மலரில்  நாகம்  மறைந்திருக்கும்…

மனதுக்குள்  மிருகம்  ஒளிந்திருக்கும்…’ என்பது இது தான்.  

மாலினியின் பின்புலம் தெரிந்தே, காதல்  என்ற வலை வீச, அந்தக் கிளியும், பருந்திடம் மனதை தொலைத்தது.

திருடி வந்த பணம் காலியாகும் சமயம், மாலினி இவரின் பணப்பெட்டியாகக் கண்களுக்குத் தெரிந்தார்.

மாலினி  குடும்பம், பல்தேவ் பற்றி விசாரிக்க,  கையில் கிடைத்த தகவல், ஒன்றுக்கு  ஒன்று முரணாய் இருக்க, வீட்டில் பயங்கர எதிர்ப்பு எழுந்தது.

காதல், இளம் ரத்தம், குடும்பம் கூறிய எந்த நல்லதும்   மூளையில்  ஏறவில்லை.பல்தேவ் என்ற கண்ணாடி அணிந்த கண்களுக்கு மற்றவர்கள்   சொல்லிய   அறிவுரை,  எல்லாம் வேப்பம்  காயாகக் கசந்தது.

மகளைக் காக்க வேண்டிய நிர்பந்தத்தில், இன்னொருத்தருடன் வேக வேகமாய் திருமண ஏற்பாடு நடக்க, கட்டு காவலை மீறி,  யாரும் அறியாமல்  சென்று, பல்தேவ்வை திருமணம்  முடித்துத் திரும்பியவர்களை  தலை  முழுகியது குடும்பம்.

கொஞ்சம் சொத்துக்களை மட்டும் கொடுத்து அதையும்  விற்க முடியாமல் செய்து,  உறவை அறுத்துக் கொண்டார்கள்.எதற்காக மாலினியை காதலிப்பது போல் நடித்துத் திருமணம் பல்தேவ் செய்தேனோ, அதன் அடிப்படையையே தகர்த்து விட்டது மாலினி குடும்பம்.

மிகப் பெரிய ஆப்பு பல்தேவிற்கு.

அவர் குறி ஒட்டுமொத்த சொத்தும் என்னும்போது, இந்தச் சில பல லட்சங்கள் பல்தேவின் வாழ்க்கை முறைக்கு எந்த மூலைக்கு போதும்.  

“சோ…  நீங்களும், அப்பாவும், அப்பவே    ஒரு  சூரியவம்சம்,  கதை  ஒட்டிக் காண்பித்து  இருக்கீங்க!… ஒரே பாட்டில்  கோடீஸ்வரங்களா  அம்மா?…” என்று சம்யுக்தா விளையாட்டுக்குக் கேட்டாலும், அங்குப் பல்தேவ் மாலினி குடும்பத்தின் ஒட்டுமொத்த சொத்தை ஆட்டையை போட்டுக் காட்டிய முழு நீளப் படத்தைப் ஒட்டிக் காட்ட முனைந்தார். 

ஆனால், அங்கே அவரின் பருப்பு வேகவில்லை.

பல்தேவ் சுற்ற   முயன்ற  பூவை  வைத்துக் கொள்ள மாலினி என்ற அப்பாவி பெண்ணைத் தவிர மற்ற யாரும் ,  அங்கே  கேணையனாக இருக்கவில்லை.

‘பல்தேவ்  என்பது  காலை சுற்றிய பாம்பு. உள்ளே   விட்டால், அது விஷத்தை கக்கும்’ என்று தெரிந்தவர்கள், அந்த  வீட்டிற்குள் வரும் எல்லா வழியையும் அடைத்து  இருந்தார்கள்.

சொந்த வீட்டில் ஏற்று கொள்ளாமலும், கணவன் வீட்டிலும், சொத்தை கொடுக்காமல் விரட்டி அடிக்க,மாலினியை திருமணம் செய்ததால், விரட்டி அடித்தார்கள் என்று சொல்லி நம்ப வைத்திருந்தார் பல்தேவ்.

 ‘தன்னால்  தான் கணவனுக்கு இந்த  கதி.தன் குடும்பம் ஏற்படுத்திய சூழ்நிலை தான் கோடீஸ்வரனான தன் கணவன், அந்த சொத்தை எல்லாம் இழந்து தனக்காக நடு தெருவில் நிற்கிறார்.’  என்று  காதல்  கொண்ட    மாலினியின் மனம் உருகி  தான் போனது.

மாலினிக்கு உண்மையாக இருந்தாரா, இல்லை தன் இச்சைகளை இன்னொரு புறம் தீர்த்து கொண்டே இருந்தாரா என்பதெல்லாம், ‘இப்படி ஒருவனை ஏன் படைத்தோம்?…’ என்று தன்னையே   நொந்து கொள்ளும்,   கடவுளுக்கு தான்  வெளிச்சம்.    

மாலினியை  கை பிடித்த   பிறகு, சரியான சமயத்தில் விழித்து கொண்டார்பல்தேவ்.அதுவரை பெண்கள் என்ற போதையில் சுவர்க்கம் கண்டவருக்குப்,  புதிதாய் ரெண்டு போதை பிடிக்க  ஆரம்பித்தது.

உலகத்தில் மிகக்  கொடிய  போதை, அது ரெண்டும்.

ஒன்று  பணத்தின் மீது எழுந்த போதை.  இன்னொன்று பயம் மேல் எழுந்த   போதை.

தன்னை  பார்த்து  மற்றவர்கள்  பயப்பட வேண்டும்  என்று எழுந்த போதை. அதிகாரத்தின்    மீது  எழுந்த  போதை. 

ரெண்டுமே   மிகக்  கொடிய    விளைவுகளை,  மற்றவர் வாழ்வில் கொண்டுவரும்அழிவுச்    சக்தி.

‘பணம்  என்றால் பிணமும் வாயைத்   திறக்கும்’ என்று பெரியவர்கள் ஏற்கனவே சொல்லியது தான்.

அந்தப் பணத்தை கொண்டு   வாங்க   கூடிய அதிகாரம், அந்த அதிகாரத்தால்    மற்றவர்    மனதில்  எழும் பயத்தை கண்டு, ரசிக்க ஆரம்பித்தது வர்மாவின்     ஓட்டம்.

மாலினி  வீட்டினர்கொடுத்த சொத்துக்களை அடிப்படையாக  வைத்து, என்னென்னவோ வேலை    செய்து, சமுதாயத்தில் இன்று கோடீஸ்வரன் என்ற  நிலையில்  இருக்கிறார்.

‘என் பணத்தில் தான் வாழ்க்கையை தொடங்கினோம். அதில்  உங்க அப்பாவுக்கு, தன்மானம்  அடிபட்டுப் போச்சு. பொண்டாட்டி பணத்தில்  குடும்பம்   நடத்தறான்…’என்று  யாரோ  சொன்னதை கேட்டுட்டு  வந்து,  அன்று  எப்படி  என்னிடம் துடித்தார் தெரியுமா  சம்யுக்தா!…

நாலு நாள் அவர் சாப்பிடவே    இல்லை…. யாரோ   அவரைக்  கிண்டல் செய்ததில், ரோஷம் வந்து, இப்படி   நம்மைக் கூட விட்டுட்டு,  தன்னை உருக்கிக் கொண்டு,  ஓடாய் உழைக்கிறார்.’ என்று மாலினி சொன்ன எல்லாமே பல்தேவ் மிக அழகாய் புனைந்த கதை.

மாலினியின் சொத்துடன் வெளிநாட்டுக்கு சென்று தன் மனம்போல் வாழ அவர் நடத்திய நாடகம். 

தந்தையின் தன்மானம், ‘தன்னை ஒரு  வார்த்தை  சொல்லி விட்டார்களே!…’  என்று சமுதாயத்தில்,  வெற்றி  பெற்று காண்பிக்கவேண்டும் என்ற அந்த  ஓட்டம்   ஒரு புறம் பெருமிதத்தை கொடுப்பதாகச் சம்யுக்தா எண்ணியது எல்லாமே வீண்.

பல்தேவை யாரும் எதுவும் சொல்லவில்லை.அப்படி சொன்னாலும் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் சொன்னவனின் வாயில் துப்பாக்கியைச் சொருகும் ஆள் தான் பல்தேவ்.

ஒன்றும்  இல்லாமல் வந்தவர்,  இன்று கோடீஸ்வரன். பல கம்பெனிகளுக்கு    ஓனர். ‘என்ன,  எப்படி?’ என்பது யாருக்கும், ஏன் காதலித்து அவரை மணந்த   மாலினிக்கே தெரியாது  தான்.

“உங்க கணவர் என்ன வேலைங்க செய்யறார்?” என்று மாலினியிடம்  கேட்டால்,

“ஏதோ வெளிநாட்டுக்கு ஏற்றுமதி, இறக்குமதி பிஸினஸ்    செய்யறாருங்க… வெளிநாட்டுக்கு எல்லாம் நினைத்த நேரத்திற்கு பறப்பாருங்க… என்னை   கூட,   நாலு  தடவை    வெளிநாட்டுக்கு எல்லாம் கூட்டி போயிருக்காருங்க..”  என்று சொல்வார்.

“அப்படி எதை ஏற்றுமதி, இறக்குமதி செய்யறார்?… யாரிடம் இந்த    டீலிங்   செய்யறார் என்று உங்களுக்கு  தெரியுமா?” என்று    கேட்டால்,

“சொன்னாருங்க ஏதோ இங்கிலீஷுல பெருசாய்… அது என்னனு தெரியாதுங்களே!… அவர் வியாபாரத்தை    எல்லாம்   புரிந்து கொள்ளும் அளவுக்கு   எனக்கு    அறிவு    இல்லைங்க…”  என்று சொல்வார்.

மனைவியாகப்பட்டவளுக்கு   கணவனின்  தொழில் என்ன,  யார் அவரின்  நண்பர்கள்,  யாருடன் அவர் தொழில் தொடர்பில்    இருக்கிறார், எதை ஏற்றுமதி செய்கிறார்,  என்ன    இறக்குமதி ஆகிறது, ஆண்டு  டர்ன்   ஓவர் எவ்வளவு, வருமானம்   எவ்வளவு என்பதெல்லாம் விரல் நுனியில்  தெரிந்து    இருக்க    வேண்டும்.

அது எந்தத் தொழிலாய்  இருந்தாலும்…

‘எனக்கெல்லாம்  அது  புரியாது’ என்ற எஸ்கேப்பிசம் வாழ்க்கையின் ஆபத்தான தருணங்களில்    உதவாது.

சமையல்  கட்டும், படுக்கை அறையும்  மட்டுமே தங்கள் சாம்ராஜ்ஜியம்’ என்று நினைத்து நெருப்பு கோழி போல், தலையை மண்ணில் புதைத்து கொண்டால், ‘வீட்டின் அச்சாணியாக, நாட்டின் கண்ணாக   இருக்கும்   பெண்மை’   அங்கே  தோற்று விடுகிறது.

தவறுகள் ஆரம்பிக்கும் இடம்,ஒருவரின் வீட்டிற்குள் இருந்து தான். நாமே அறியாமல்,  நம் குடும்பத்தில்   ஒருவர் தவறான பாதைக்கு செல்கிறார்   என்றால், அதை முதலில்   உணருவது பெண்கள் தான்.

யாரையும்  விட, பெண்களுக்கு, உள்ளுணர்வு என்பது எப்பொழுதுமே அதிகமாய் வேலை செய்யும். அந்த   மனசாட்சியின் குரல்  அடங்கும் போது,  அங்கே பல்தேவ்   மாதிரி, ஆட்கள்   உருவாகிறார்கள். இது போன்ற கொடூரன்கள் வானத்தில் இருந்தெல்லாம் குதிப்பதில்லை. யாரோ ஒரு அன்னையின் வயிற்றில் பிறந்தவன். ஏதோ ஒரு குடும்பத்தில்   வளர்ந்தவன்தான். திசை  மாறி இவர்கள் செல்லும் போது, தடுக்காத    குடும்பங்கள்,மற்றவர்களின்அழிவிற்கு ஒரு காரணமாய் அமைத்து விடுகிறார்கள்.

‘தவறு செய்தவன் மகனே’  என்றாலும், அதை மன்னித்து விடாமல், தேர் காலில் இட்டுக் கொன்ற   அந்த  மனுநீதி சோழன் போல் குடும்பங்கள் இருந்தால்  தான், குற்றங்கள் குறையும்.

ஆனால்,  மாலினிக்கு, கணவனின் இந்த இன்னொரு முகம் தெரியவில்லை. தெரியும் படி பல்தேவ்  நடந்து  கொள்ளவில்லை.மாலினியை  பொறுத்தவரை, அவர் ஐடியல் காதல் கணவன்.

சம்யுக்தாவிற்கு வருடத்திற்கு  ஒரு முறையோ, ரெண்டுமுறையோ வந்து  தங்கி விட்டு,செல்லும்  அன்பான  அப்பா.

ஆனால், மாலினி இறப்பிற்கே காரணம், பல்தேவ்  தான் என்பதும், மாலினி மரணம், விபத்தால்  ஏற்பட்ட ஒன்றல்ல. அது  திட்டமிடப்பட்ட கொலை என்பதும்  வேறு யாருக்கும் தெரியாது.

பல்தேவ் நல்ல காதலனாய், கணவனாய், தகப்பனாய் இருக்கலாம். அப்படி தான் மாலினி, சம்யுக்தா நம்பி கொண்டு இருக்கிறார்கள். ஆனால்,  நல்ல மனிதன்  கிடையாது. சமுதாயத்தில்  உள்ள  பல  விஷ கிருமிகளில் அவரும் ஒருவர்.   

மாலினி, சம்யுக்தாவிடம் அவர் காட்டும்   முகம்    ஒன்று.   வெளியே அவருக்கு   இருக்கும்   முகம்    வேறொன்று.

பல்தேவ் வெளிநாடுகளில் கடுமையாகத் தான் உழைத்துக்  கொண்டிருந்தார். என்னவொன்று    அவரின்  கடுமை, தங்கள் பாதையில் வருபவர்களை உயிர்களைச் சாட்சி, தடயம்    இல்லாமல்  அழித்துக் கொண்டிருந்தது.

பல்தேவ்  ‘டான், தாதா, facilitator, equaliser’ என்று எப்படி வேண்டும்  என்றாலும் சொல்லலாம். இந்தியாவை  சிதைப்பதை,  உள்  இருந்தே அழிக்கும் புற்றுநோய்  போல் பல கோர தாண்டவங்களை   பணத்திற்காக   ஆடும், ‘மாபியா ஆப்  இந்தியா’என்ற குழுவின் தமிழக பினாமி பல்தேவ்.

இவரின் இந்த முகம் தெரியாமலே, காதலித்து மணந்து,உத்தமர், நல்லவர் என்ற  எண்ணத்தோடு, கணவனின்   அந்த வாழ்க்கை தான், தன் மரணத்திற்கே காரணம் என்பதை  அறியாமல் போய் சேர்ந்திருந்தார்மாலினி.

ஆக  மொத்தத்தில் இறக்கும்  வரை மாலினியும், அந்த நொடி வரை சம்யுக்தாவும் பல்தேவ் வின் இன்னொரு முகத்தை பற்றி அறிந்திருக்கவில்லை.

மாலினி, சம்யு இருவரின் வாழ்வுமே ஒரு கானல் நீர் தான். பல்தேவ் குப்தா என்ற வடிக்கட்டிய அயோக்கியன் ஒருவன் உருவாக்கிய சிறை, பற்றி எரியும் நரகம்.

தந்தையின் இந்த கொடூர முகம்,  அவரின் சுயரூபம் சம்யுக்தாவிற்கு தெரிய வரும் போது, அன்னையை இழந்தது போல் ‘ஈஸ்வர் என்பவன் உயிரோடு இருக்க போவதில்லை’ என்பதை மட்டும் முன்னரே   அறியும் சக்தி சம்யுவிற்கு இருந்திருக்கலாம்.

சம்யுக்தா  தனது தந்தையின் வாழ்வு,  தாயை பலி கொண்டது போல்,  தன்னை துரத்த போகிறது, இனி  தன்  வாழ்வே  தலை கீழாக மாற போகிறது  என்ற  உண்மை அறியாதவளாய், வண்ண கனவுகளைசுமந்து  கொண்டிருந்தாள்.

‘தன் தாய்க்கு கிடைத்ததுபோன்ற காதல் கணவன், தனக்கும் கிடைக்கபோகிறான்’  என்ற நிம்மதியில்   சம்யுக்தா  இருக்க,தன் தந்தையால் அந்த காதல் அழிய போகிறது, தன் காதலன் தனக்கு   இல்லாமல் போவான் என்பதை யாராவது அவளுக்கு சொல்லி இருக்கலாம்.

மணப்பெண் அலங்காரத்தில் கோயிலில் தன்னவனை, எதிர் நோக்கி காத்திருந்தாள் அந்த பூவை  ஆயிரம்  கனவுகளுடன்.

அந்தக்  கனவுகள் சிதைய போகும் கனவுகள்.

சிதைக்கபடப்  போகும்  கனவுகள். 

நடந்து கொண்டிருக்கும் யுத்த களத்தில் பலி கொடுக்கப்படும்  கனவுகள். 

அந்த கனவை சுக்குநூறாக்க, பல்தேவ் அமெரிக்காவில் இருந்து தன் சொந்த விமானத்தில் இந்தியாவை நோக்கி பறக்க ஆரம்பித்திருந்தார். அவருடன் விக்ரம்.   

ஆட்டம் தொடரும்.