Va Nisha’s Uyir vidum varai unnodu thaan 10

Va Nisha’s Uyir vidum varai unnodu thaan 10

 

அத்தியாயம் 10

(ஒருவருக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. அவற்றில் வயது மிக முக்கியமான காரணமாக விளங்குகிறது. 32 வயதிற்குப்ப்பிறகு ஒரு பெண்ணுக்கு கருவளம் குறையத்தொடங்குகிறது என்றால் அதுவே ஒரு ஆணுக்கு 50 வயதுக்குப் பின்னர் குறையத்தொடங்குகிறது)

அருகில் மணியைப் பார்த்த தும் திக்கென்றிருந்தது பிரகாஷிற்கு. அவசரமாக புன்னைகையை முகத்தில் அப்பியவன்,

“ போன்ல என் கசினோட டாட்டர் கிட்ட பேசிட்டு இருந்தேன் மணி.” என சொன்னவன் காதில் எப்போதும் இருக்கும் அவன் இரட்டை சகோதரனான சிறிய ப்ளுதூத் டிவைசை சுட்டிக் காட்டினான். பிஸ்னஸ் லைனில் இருப்பதால் எப்பொழுதும் போன் வந்துக்கொண்டே இருக்கும். அதுவும் வெளிநாட்டு போன் கால்கள் தான் அதிகம்.

குழப்பத்தோடு மணி பார்க்கவும்,

“அட் தே சேம் டைம், வீட்டுப் போன் அடிச்சது, நீயும் வரல. அதான் என்னோட காலை கட் பண்ணாமலே உங்க லேண்ட் லைன் கால் எடுத்தேன். உன் அக்கா சித்ராதான். என்னைப் பேசவே விடல. படபடன்னு பேசி வச்சிட்டாங்க. “ சித்ரா சொன்ன வேலைகளை சொன்னவன்,

“இரு மணி, இந்தக் காலை பேசி முடிச்சிருறேன்.” என இல்லாத கசினுடைய மகளிடம் வராத காலை ப்ளூதூத் வழியாக பேசி முடித்தான்.

“குட்டிப் பாப்பா நேஹாக்கு என் மேல அவ்வளவு பாசம் மணி. எனக்கும் தான். தீபாவ பார்த்தா எனக்கு அவ ஞாபகம் வந்துரும். இப்போ லண்டன்ல இருக்காங்க. ஹ்ம்ம். பாசம் வைக்கிறதே பாவம் மணி. போன் செய்யறப்ப எல்லாம் எப்ப வரன்னு கேட்டு நச்சரிப்பா. ஐ லவ் யூ சொன்னாதான் சிரிச்சுட்டே போனை வைப்பா. இல்ல ஒரே அழுகைதான். நேஹாக்கு வாங்கின டாய்ஸ்தான் தீபா கேட்டான்னு குடுத்துட்டேன். தீபா வேற நேஷ வேறன்னு பிரிச்சுப் பார்க்க முடியல மணி. அது தப்பா மணி?”

“அப்படிலாம் இல்ல ஜீஜு. குழந்தைனா எல்லாருக்கும் பிரியம் வரது சகஜம்தானே. நீங்க அதுக்கும் மேல போய் வாந்தியெல்லாம் துடைச்சி விட்டிருக்கீங்க. அந்த மாதிரி பாசம் யாருக்கு வரும்!”

“உனக்குப் புரியுது மணி, ஆனா உன் சிஸ்டருக்கு புரியலையே. சிக் கேர்ள்கு பொம்மை வாங்கி தந்தேன்னு கோபப்பட்டாங்க என் கிட்ட. எனக்கு ரொம்ப பீல் ஆயிருச்சு மணி. என்னை மாதிரி நீயும் ஒரு பாய் தானே. ஆம்பள மனசு ஆம்பளைக்குத் தான் தெரியும்னு சொல்வாங்களே.” உருக்கம் அவன் குரலில்.

“அக்கா அப்படிதான். சட்டுன்னு யாரையும் எங்க குடும்ப வட்டத்துக்குள்ள இணைச்சிக்கமாட்டாங்க. அவங்க ஹார்சா பேசியிருந்தா நான் சாரி சொல்லிக்கிறேன் ஜீஜூ.”

“நோ, தட்ஸ் ஓகே. அப்படி இருக்கறது தான் நல்லது. குடும்பம்னு சொல்லுற ஆனா போட்டோல உங்கள தவிர வேற யாரையும் காணோமே” லேசாக பிட்டைப் போட்டான் பிரகாஷ்.

“அது வந்து, ஹ்ம்ம்!” தடுமாறினான் மணி.

“சொல்லக் கூடாத விஷயம்னா பரவாயில்ல மணி. சில விஷயங்கள வெளி ஆள் கிட்ட சொல்ல முடியாதுதான்.” பட்டும் படாத குரலில் பேசினான் பிரகாஷ். ஓரளவுக்கு இவன் அறிந்து வைத்திருந்த விஷயங்கள் தான், இருந்தாலும் வீட்டு ஆளிடமிருந்து கேட்கும் போது அவர்களின் மனநிலையை நன்கு புரிந்துக் கொள்ள முடியும் என்று தான் வலை வீசிப் பார்த்தான்.

“அக்காவுக்கு இதைப் பற்றி பேசினா பிடிக்காது. அவளுக்குப் பிடிக்காதத நான் என்னைக்குமே செய்ய மாட்டேன் ஜீஜு.”

மெல்லிய சிரிப்பு பிரகாஷின் முகத்தில்.

“சித்ரா ரொம்ப கொடுத்து வச்சவங்க மணி. ஓகே மணி, நான் கிளம்பறேன். போன் நான் தான் எடுத்தேன்னு சித்ராவுக்கு தெரிய வேணாம். நீன்னு நினைச்சு உரிமையா அதட்டிப் பேசிட்டாங்க. அது நீ இல்லன்னு தெரிஞ்சா சங்கடப் படுவாங்க. அதுக்குத்தான் சொன்னேன்”

“சொல்லமாட்டேன் ஜீஜு.” கள்ளமில்லாமல் சிரித்தான் மணி.

வாசல் வரை போனவன், கதவு பக்க சுவரில் தீபாவின் போட்டோவைப் பார்த்து நின்றான். திரும்பி மணியைப் பார்த்தவன்,

“தீபாவப் பார்த்தா நான் நேஹாவ ரொம்ப மிஸ் பண்ணுறேன். எனக்குன்னு யாரும் இல்ல மணி. நேஹா குட்டி மட்டும் தான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாம பாசத்தக் காட்டுவா” குரலில் மனதைப் பிழியும் சோகம். புது ப்ரண்ட் உருகிப் போனான்.

“அப்ப கொஞ்ச நேரம் இருங்க ஜீஜூ. நான் தீபாவ தூக்கிட்டு வரேன். பார்த்துட்டுப் போங்க.”

முகம் மலர திரும்பியவன், பின் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு,

“இல்ல மணி, அக்காவுக்கு தெரிஞ்சா கோபப்படபோறாங்க. எதுக்கு வம்பு!”

“நான் சொல்ல மாட்டேன். அப்படி தீபா சொல்லிட்டா, உங்கள கடையில பார்த்து கூட்டி வந்தேன்னு சொல்லுறேன். தீபாட்ட மட்டும் அம்மா கிட்ட சொல்ல வேண்டாம்னு சொல்லிறாதீங்க ஜீஜு. நாங்க தீபாவுக்கு பொய் சொல்லவோ உண்மைய மறைக்கவோ இது வரை கத்துக் குடுத்தது இல்ல.” என்றவன் பிரகாஷை வீட்டிலேயே விட்டுவிட்டு தீபாவை அழைத்து வர சென்றான்.

அவன் தலை மறைந்ததும், வீட்டை நோட்டமிட்டான் பிரகாஷ். நம்பி வீட்டில் தனியாக விட்டு சென்றிருக்கும் மணியின் நம்பிக்கையைக் குலைக்க கூடாது என கையைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தான். இருந்தாலும் ஆசையை அடக்க முடியவில்லை. அவசரமாக இரண்டு ரூம் கதவுகளையும் திறந்துப் பார்த்தான். கட்டிலில் பொம்மைகள் இருந்த ரூம் தான் சித்ராவின் ரூம் என் அனுமானித்து உள்ளே நுழைந்தான்.

கட்டிலில் அமர்ந்து ரூமை சுற்றி பார்வையிட்டான் அவன். பின் எழுந்து ரூமை சுற்றி நடந்தவன்,

‘என் மோட்டி இங்கதான் படுப்பா, இங்கதான் தலை சீவுவா, இங்கதான் போன் சார்ஜ் போடுவா, இங்கதான் துணிய அடுக்கி வைப்பா’ என மனதில் பேசிக் கொண்டே ஒவ்வொன்றாக தொட்டுப் பார்த்தான்.

ட்ரெஸ்சிங் டேபிளில் இருந்த ஹார்ட் வடிவ சில்வர் தோட்டில் அவன் கண் இளைப்பாறியது.

‘உன் ஹார்ட தான் கொடுக்கல, இந்த ஹார்டையாவது எடுத்துக்கறேன்’ ஜோடியில் ஒன்றை மட்டும் அடுத்துப் பேன்ட் பாக்கேட்டில் போட்டுக் கொண்டான். பெரிய பிஸ்னஸ் டீலை முடித்ததைப் போன்ற சந்தோஷம் அவன் முகம் முழுக்க. பின் நல்ல பிள்ளை மாதிரி ஹாலில் முன்பு அமர்ந்திருந்த இடத்தில் மீண்டும் அமர்ந்து கொண்டான். வெளியே ஆள் வரும் அரவம். தீபா மணியின் கையைப் பிடித்துக் கொண்டு குதித்துக் கொண்டே வந்தாள். பிரகாஷை பார்த்ததும், தாவி வந்து அணைத்துக் கொண்டாள்.

“பிகாஷ்!!!!! சாப்டியா பிகாஷ்?” மறக்காமல் கேட்டாள்.

கண் கலங்கினாலும், உதடு சிரிப்பால் மலர்ந்தது பிரகாஷிற்கு.

“சாப்டேன்டா குட்டிமா. நீங்க சாப்டீங்களா?”

“பத்தும்மா கோழி தம்பி சூப் வச்சாங்க. நான் சாப்டேன்”

“கோழி தம்பியா?” புரியாமல் மணியைப் பார்த்தான் பிரகாஷ்.

“ப்ரோகோலி சொல்லுறா. ப்ரோன்னா என்னனு கேட்டா, நான் தம்பின்னு சொன்னேன். அதுல இருந்து ப்ரோகோலி, கோழி தம்பியா ஆயிருச்சு.”

“ஆமா பிகாஷ். யம்மி சூப். உனக்கு வேணுமா? பத்துமா வீட்டுக்குப் போலாமா? பத்துப்பா வந்திட்டாரு சிங்பூரூல இருந்து. அதுக்கு ஏன் சிங்பூருன்னு பேரு வச்சாங்க? எல்லாரும் பாடிட்டே இருப்பாங்களா?”

கேள்விக் கேட்டவள் அவன் பதில் சொல்லும் முன்னே பாட ஆரம்பித்து விட்டாள். நாற்காலியை சுற்றி, வீட்டை சுற்றி என ஓடி ஓடி பாடினாள். தமிழிலும், ஆங்கிலத்திலும் கலந்தடித்தாள். அவள் சுற்றி சுற்றி ஓடுவதைப் பார்க்க பிரகாஷிற்க்கு தலை சுற்றியது. அவளைப் பிடித்து அருகில் அமர்த்தியவன்,

“முன்ன காலத்துல அந்த ஊருல சிங்கம் இருந்துச்சாம். அதனால சிங்கம் + ஊர், சிங்கப்பூர்னு பேர் வச்சாங்களாம். புரியுதா தீபா?”

“ஓ புரியுதே! சிங்கம் மட்டும் தான் அங்க இருந்தாரா? இல்ல அனுஷ்கா ஆன்டியும் இருந்தாங்களா பிகாஷ்?” மணிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

“இங்க டீவில கார்ட்டூன் மட்டும் தான் ஜீஜு. பத்மாக்கா வீட்டுல நல்லா படம், சீரியல் எல்லாம் பார்ப்பா. நிலா கண்டிச்சு சொல்லவும், இவ இருக்கறப்போ ரொம்ப டீவி போடறது இல்ல அவங்க. ஆனாலும் அக்கா சமையல் செய்யப் போய்ட்டா மேடம் சொந்தமா டீவி தொறந்துருவாங்க.”

“மணி நாட்டி! ஏன் ஆல் பேட் பேட் சொல்ற என்னைப் பத்தி. பிகாஷ் நாம மட்டும் வெளையாடலாம். மணி வேணாம்” ரூமிற்கு சென்று அவளது விளையாட்டுப் பெட்டியை தூக்கி வந்தாள் தீபா.

“வேணா தீபா. அந்த விளையாட்டு வேணாம். உள்ள கொண்டுப் போய் வை” அதட்டினான் மணி.

உதட்டை உப்பி, அழ ரெடியானாள் தீபா.

“நீ போய் அக்கா சொன்ன சமையலை கவனி மணி. நான் விளையாடுறேன். பாவம் தீபா”

“ஜீஜு, வேணாம்! பின்னால வருத்தப் படுவீங்க”

“போ மணி, அதெல்லாம் நாங்க பார்த்துக்குவோம்” என மணியை விரட்டி விட்டான் பிரகாஷ்.

எப்படியோ போங்க எனும் ரீதியில் சமயலறைக்குள் நுழைந்தான் மணி.

தனக்கு சிக்கிய அடிமையை பாசமாகப் பார்த்த தீபா, அவனின் காலடியில் அமர்ந்தாள். சிறிய மர ஸ்டூலில் அவன் காலை தூக்கி வைக்க சொன்னவள், அவளது பெட்டியைத் திறந்தாள். அதில் கலர் கலராக நெயில் பாலிஸ்கள் அணிவகுத்து நின்றன.

“அரே பாப் ரே! மணி இது தான் நீ சொன்ன பின்னால வருத்தப் படுவீங்களா? நானா தான் சிக்கிட்டனா?” ஹாலில் இருந்து குரல் கொடுத்தான் பிரகாஷ்.

கிச்சனில் இருந்து சிரிப்பு சத்தம் தான் வந்தது.

“பயப்படாதீங்க பிகாஷ். அம்மாலாம் நாம் பெடிகூர் செஞ்சா ஹேப்பியா அழுவாங்க” சொன்னவள் தன் வேலையை ஆரம்பித்தாள்.

ஒவ்வொரு விரலுக்கும் ஒவ்வொரு விதமான வர்ணத்தைப் பூசினாள். நகத்துக்கு மட்டுமில்லாமல் விரலுக்கே அப்பியிருந்தாள். செய்து முடித்து திருப்தியாக நிமிர்ந்தவள், அவளது குட்டி கண்ணாடியை விரல் நகத்துக்கு காட்டி,

“நல்லாயிருக்கா பிகாஷ்? ரெயின்போ கலர்ஸ். உனக்கு மட்டும் ஸ்பெஷல். “ சந்தோஷமாக கேட்டாள்.

“ரொம்ப அழகா இருக்குடா பட்டு. என் லைப்பே ரெயின்போ மாதிரி கலர்புல்லா ஆயிருச்சு. ஆல் பிகாவ்ஸ் ஆப் யூ” அவளைத் தூக்கி கன்னத்தில் முத்தமிட்டான். அவளுடன் இன்னும் சிறிது நேரம் விளையாடியவன், இரு பெண்களும் வருவதற்குள் கிளம்பினான். பாசமாக மணி கட்டி கொடுத்த உப்புமாவை கையில் எடுத்துக் கொண்டவன், முகம் முழுக்க புன்னகையுடன் வெளியேறினான்.

அன்று நிலா ஷூட்டிங் முடிந்து வரும் போது, ஏவிஎம் வாசலில் காத்திருந்தான் சிவா. அவனைப் பார்த்தும் பார்க்காதது போல் ஆட்டோ பிடிக்க நடந்தவள் அருகில் பைக்கைக் கொண்டு வந்து நிறுத்தினான் அவன்.

“ஏறு வைசி!”

“நான் ஆட்டோலயே போய்க்கிறேன். வழிய விடு” நகர்ந்தாள் அவள்.

“உன் கிட்ட முக்கியமான விஷயம் பேசனும் வா!”

“நீ முக்கிக்கிட்டு பேசற விஷயம் எதையும் கேட்க வேண்டிய அவசியம் எனக்கில்ல. தூர போ, காத்து வரட்டும்”

“வர வர கொழுப்பு வச்சு போச்சுடி உனக்கு! மனுஷன் சொல்லுற எதையும் கேட்கறதில்லைன்னு முடிவு பண்ணிட்டியா? இப்போ பைக் மேல நீ ஏறுறியா? இல்ல பைக்க உன் மேல ஏத்தட்டுமா?”

அந்த மாலை மங்கும் நேரத்தில், முத்து முத்தாக வியர்வை முகமெங்கும் பூத்திருக்க, கைகளை கட்டிக் கொண்டு அவனை முறைத்தவாறு நின்றிருந்தாள் நிலா.

‘ரோஜாவுக்கு வேர்த்தா இவ மாதிரி தான் இருக்குமோ? மேலுதட்டில் பூத்திருந்த வியர்வை துளியை ரசனையுடன் பார்த்தவன்,

‘சாக்லேட் தடவிய

எக்லேர்(éclair) இவளோ

தேன் விரவிய

ப்ரெட்ஷல்(pretzel) நிலவோ

பால் ஊற்றிய

ஸ்ட்ருடல்(strudel) இதழோ

சுவைத்து நான் அறிய

என்றுதான் விடிவோ?’ என மனதினுள்ளே ஒரு கவிதையையும் அரங்கேற்றம் செய்தான்.

“ப்ளீஸ் வைசி, வண்டியில ஏறு. உனக்குப் பிடிச்ச சமோசாவும், பாவ் பஜ்ஜியும் வாங்கிட்டு பீச்சுக்கு போலாம். ப்ளிஸ்டா” கெஞ்சினான்.

முறைத்தவாறே பைக்கில் ஏறினாள் அவள். சந்தோஷமாக பைக்கைக் கிளப்பினான் சிவா. எப்பொழுதும் அவன் பைக்கில் ஏறினால், இரண்டு கைகளையும் அவன் தோளில் போட்டுக் கொண்டு காற்றையும் கிழிக்கும் குரலில் வளவளத்துக் கொண்டு வருபவள், அவன் சட்டையை மட்டும் பாதுகாப்புக்காகப் பிடித்துக் கொண்டாள்.

மெரினா பீச்சில் பைக்கை நிறுத்தியவன், அவளுக்குப் பிடித்த திண்பண்டங்களை வாங்கினான். யாருக்கு வந்த விருந்தோ என்பது போல நின்றிருந்தாள் நிலா.

“வா வைசி, அங்க போய் உட்காரலாம்” என முன்னே நடந்தான் சிவா. அமைதியாக அவன் பின்னே வந்தாள். பண்டங்கள் இருந்த பாலிதின் பையைக் கீழே வைத்தவன், தனது கர்சீப்பை எடுத்து விரித்து நிலாவை அமர சொன்னான். அதன் மேல் அமராமல் சற்று நகர்ந்து, மணலில் தொப்பென அமர்ந்தாள் நிலா. கொலை வெறியானான் சிவா.

“திமிரு!” முணுமுணுத்தவன் அந்த கர்சீப்பில் அவனே அமர்ந்தான். அவள் பங்கு சமோசாவை அவளிடம் நீட்டியவன், கடலைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தான்.

சமோசாவை வாங்கியவள், பிச்சை எடுத்துக் கொண்டிருந்த சிறுவனை அழைத்து அவனிடம் கொடுத்தாள். முகமெல்லாம் சிரிப்பாக வாங்கிக் கொண்டு போனான் அவன். பக்கத்தில் இருந்தவனோ, முகமெங்கும் ஆத்திரம் பரவ அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.

“என்ன வைசி? என்னைக் கடுப்பேத்தவே இப்படி செய்யறீயா? நானும் மொதப் புடிச்சுப் பார்க்கறேன், என்னை கோபப்படுத்திட்டே இருக்க. ஏன்டி என்னை இப்படி டார்ச்சர் பண்ணுற?”

“யாரு யார டார்ச்சர் பண்ணுறா? நீதான் எனக்கு விவரம் தெரிஞ்ச நாளுல இருந்து என்னை டார்ச்சர் பண்ணுற! சாப்படறப்ப, தூங்குறப்ப, படிக்கறப்ப, ஆடறப்ப சுத்தி சுத்தி வந்து டார்ச்சர் பண்ணுற. என்னால முடியல சிவா. கனவுல வரியா, இல்ல நினைவுல வரியான்னு எனக்குத் தெரியாம நானே முழி பிதுங்கிப் போய் கிடக்கேன். நீ என்னைப் போய் டார்ச்சர்னு சொல்லுற” குரலில் வலி, முகம் மட்டும் பாறைப் போல் இறுகி இருந்தது. கண்கள் கடல் அலைகளின் மேலேயே நிலைக்குத்தி நின்றன.

“வைசி!” அவன் குரலில் நடுக்கம்.

“ஏன்டா சிவா எம் மேல இவ்வளவு பாசமா இருந்த? என்னைப் பெத்தவங்க போன போது ஏன்டா என்னை மடி சாய்ச்சு தலை கோதி விட்ட? அழுது துடிச்ச நேரத்துல ஏன்டா என்னை கட்டிப் பிடிச்சு ஆறுதல் சொன்ன? சொல்லு சிவா! நான் வயசுக்கு வந்த போது, எதுக்கு சாக்லட் வாங்கி குடுத்து அணைச்சிக்கிட்ட? அதுக்கப்புறம் ஏன்டா நான் தனியா எங்கப் போனாலும் துணைக்கு வந்த? எனக்கு ஏதாவது கஸ்டம் வரும் போது, நான் சொல்லாமலே எப்படிடா என்னைத் தேடி வந்து உதவி செஞ்ச? இப்படி எல்லாத்தயும் செஞ்சு என் மனசுல ஏன்டா காதல வளர்த்த? இப்படி என்னை கொல்லாம கொல்லறதுக்கு பதிலா, தோ அந்தக் கடலுல தள்ளி விட்டிரு. சந்தோஷமா உசிர விட்டுரறேன்.” கண்கள் கலங்கினாலும் அவனை விழியோடு விழி நோக்கினாள்.

“நான் யூஎஸ் போறேன் வைசி”

“என்ன? என்ன சொன்ன?” குழப்பம் அவள் விழிகளில்.

மணலைக் கைகளில் அலைந்தவன்,

“நான் அமெரிக்கா போறேன் வைசி. இங்க எனக்கு மூச்சு முட்டுது. என்னால சிந்திக்க முடியல. எனக்கு என்ன முக்கியம்னு எனக்கே புரியல. நான் போறேன். கொஞ்ச நாள் தனிச்சு இருக்கேன். தள்ளிப்போட்டு கிட்டே இருந்த காண்ரேக்ட இன்னிக்குதான் சைன் பண்ணேன். மூனு வருஷத்துக்கு இங்க வர மாட்டேன்.”

திரும்பி அவனைப் பார்த்தவள் கண்களில் கண்ணீர் பொல பொலவெனெ கொட்டியது. பதறி துடைக்க வந்தவன் கையைத் தட்டிவிட்டவள், சடாரென எழுந்தாள்.

“போ!” சொன்னவள் மணலில் கால் புதைய புதைய வேகமாக நடந்தாள்.

“வைசி” அவள் பின்னாலேயே ஓடி வந்தான் சிவா.

“வைசி செத்துப் போயிட்டா! இப்ப இருக்கறது வெறும் வைகாசி நிலா. என் பின்னால வந்த, வீட்டுக்குப் போகாம அப்படியே கடலுக்குள்ள போயிருவேன்” அழுது கொண்டே கத்தியவள், கீழே குனிந்து மணலை அள்ளி அவன் மேல் வீசினாள்.

“நல்லா இருடா சிவா! இத என் அசீர்வாதமா நினைச்சிக்க.”

ரோட்டுக்கு வந்து ஆட்டோவைக் கைக்காட்டி நிறுத்தி ஏறிக்கொண்டாள்.

ஆட்டோவில் அமர்ந்தவளின் கண்கள் சொல் பேச்சுக் கேட்காமல் கண்ணீரைக் கொட்டியது. புறங்கையால் துடைக்க துடைக்க கொட்டியது வற்றாத ஜீவநதி. கோபம், ஆற்றாமை, சோகம், மாறி மாறி அவளைத் தாக்கியது. வலது கையை மடக்கி நெஞ்சில் குத்திக் கொண்டாள்.

‘இங்க தானடா இருக்க. வெளிய போ! வெளிய போ! ‘ என குமுறிக் கொண்டே ஓங்கி ஓங்கி குத்தினாள். ஆட்டோ ஓட்டுபவனுக்கே அல்லு விட்டது.

“யம்மா, இன்னாம்மா மேட்டரு? ஏன் இப்படி பண்ணுற? மண்டை மூளை நல்லா

கீதா? இல்லாங்காட்டி கீழ்பாக்கத்துல இருந்து தப்ச்சி வந்த கேசா? ஆட்டோல

இருந்து குதிச்சி கிதிச்சி தொலைச்சிறாதெ மோ” அதட்டினான்.

“இன்னா நைனா, நான் சோக்காத்தான் கீறேன். ஒரு கேப்மாரி என்னாண்ட டபுள் கேம் ஆடிட்டான். மன்சு வய்க்கிது நைனா. என்னோட அஞ்சலை நைனா அவன். பேஜாரா இருக்கு லைப்பூ. நீயா இருந்தா இன்னா பண்ணுவ சொல்லேன்”

“யம்மோ, இந்த சிங்கார சென்னையில டாவுக்கா பஞ்சம்? ராமன் போனா சோமன், அவனும் போனா இன்னோரு பீமன். மாத்திட்டு போய்ட்டே இரும்மே. கிளி கணக்கா சோக்கா இருக்கே, இந்த பிசாத்துப் பயல துடைச்சி போட்டுட்டு வேற வேலைய பாருமே. வயிறு ரொம்பி போய் இருக்கறவனுக்கு தான் காதல் கத்திரிக்காய் எல்லாம் வரும். நாலு நாளு வயிரு காஞ்சா டாவுலாம் புட்டுக்கினு போயிரும். பசி வந்தா பத்தும் பறந்துகினு போயிரும்னு படிச்சவங்கோ சொல்லிருக்காங்கமே. அதுல ஒன்னுதேன் இந்த லவ்வு. இது எங்காத்தா குப்பாயி மேல சத்தியம்மே”

சிரித்து விட்டாள் நிலா.

“சோக்கா சொன்ன நைனா. இனி அழ மாட்டேன். நான் வேணும்னா, அந்த கேப்மாரியே என்னைத் தேடி வரட்டும். இனி நான் உண்டு என் லட்சியம் உண்டுன்னு வாழ போறேன். டேங்சு நைனா”

“எனக்கு எதுக்குமே டேங்சு. எதோ என்னால முடிஞ்ச பொது சேவை. தலைவர் சொல்லிருக்காருமே அச்சுக்கு இன்னா அச்சுக்கு தான் கும்க்கு இன்னா கும்க்கு தான்னு. அதான் மே என் போலிசி”

வாய் விட்டு பொங்கி பொங்கி சிரித்தாள் நிலா.

பாங்கில் வேலையை முடித்த சித்ரா, சேல்ஸ் பிகரை கீ இன் செய்து விட்டு கை விரல்களை நீவியவாறே எழுந்து நின்றாள். நின்ற இடத்திலே ஸ்ட்ரெச்சிங் செய்தவள், மீண்டும் அமர்ந்து இவள் கிளையண்ட்களின் முதலீட்டு நிலவரத்தைக் கண்காணித்தாள். அவள் பார்வை ஸ்கிரீனில் தெரிந்த புள்ளி விவர கணக்கில் நிலைக்குத்தி நின்றது.

“எப்படி ஆச்சு?” வாய் முணுமுணுக்க கண்கள் சொறுகி மேசை மேலேயே மயங்கி சரிந்தாள் சித்ரா.

(தொடர்ந்து உன்னோடுதான்)

கருத்துக்களை தெரிவிக்க 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!