vanjam 4

vanjam 4

வஞ்சம் – 4

அன்று (சோளகாடு கிராமம்)

தாயிடம் கன்னத்தில் இரண்டு இடியை (அடியை) வாங்கிக் கொண்டு, அவர் கொடுத்த சூப்பர் காபியை குடித்தவள் வீட்டின் பின்கட்டுக்கு சென்று கைகால்களை அலம்பியவள், ஆற்றங்கரையில் துவைத்து கொண்டு வந்த துணியை காயபோட்டாள்,

பூஜையறைக்கு சென்று அங்கிருந்த அவளின் செல்ல பிள்ளையாருக்கு ஒரு “ ஹாய் “ சொல்லி, அவர் முன் இருந்த கொழுக்கட்டை ஒன்றை எடுத்து கடித்துக் கொண்டே,

“ என்னை மன்னிசுக்கோ கணேஷா… இன்னும் ஒரு மாசத்துல நான் பொறுப்பா மாறிவிடுவேன்.. அப்புறம் உன்னோட கொழுகட்டையில் கையை வைக்க ஆளே இருக்கமாட்டாங்க… அதுவரை உன்னோட சுண்டெலியா என்னை நினைத்துக் கொள் கணேஷா “ என்று அவருக்கு ஒரு லட்டர் அனுப்பியவள் பூஜையறையை விட்டு வெளியில் வந்தாள்…

எதிரில் தேவேந்திரன், அவனின் அம்மா தங்கத்தின் கையை பிடித்துக் கொண்டு வர, அவனை முறைத்துக் கொண்டே சோபாவில் அமர்ந்து கொண்டாள்… அவளை பார்த்துக் சிரித்த தங்கம் அந்தபக்கம் நகர,

அவளையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்த தேவேந்தரன் “ அத்தை “ என அழைத்துக் கொண்டே அவள் அருகில் சென்றான்,

“ போடா.. என்கிட்ட பேசாத. ஆத்தா கிட்ட என்னை மாட்டிவிட்ட தானே.? “ என அவனை முறைக்க,

“ இனி அப்படி பண்ணமாட்டேன் அத்தை “ என அவளிடம் கெஞ்சலாக கூறினான்..

அவனையே யோசனையாக பார்த்தாள் துரைச்சி, ஒவ்வொரு நேரம் இப்படி காமாட்சியிடம் அவளை மாட்டிக் கொடுத்து விட்டு, அவளிடம் வந்து கெஞ்சுவான்.. அவளும் அவனிடம் சிறு பிகு பண்ணிவிட்டு மீண்டும் அவனுடன் கூட்டணி வைத்துக் கொள்வாள்…

ஆனால் அவனை இன்று அவள் நம்ப தயாராக இல்லை… அவனையே பார்க்க,

“ என்ன அத்தை “ என்றபடி அவளை உலுக்க,

அவனையே பார்த்தவள் “ நாளையில் இருந்து உன் அப்பத்தா என்னை வீட்டை விட்டு வெளியில் விடமாட்டாங்க, ஆனா என்னை டெய்லி ஆத்தங்கரைக்கு நீ தான் கூட்டிட்டு போகணும், அப்படின்னா என்கிட்ட பேசு, இல்லன்னா பேசாத “ என முகத்தை திருப்பிக் கொண்டாள்…

அவளுக்கு ஆத்தங்கரையில் குளிக்கவில்லை என்றால், அந்த நாள் நல்லா தொடங்கவே செய்யாது.. 

தன் அத்தை தன்னிடம் பேசினாலே போதும் என்று எண்ணிய தேவ் “ சரி அத்தை “ என வேகமாக தலையாட்டினான்…

“ என் செல்ல மருமகன்டா நீ “ என்றபடி அவனை கட்டியணைத்துக் கொண்டாள் துரைச்சி…

 “ வாடா வாங்கடா.. ஒருத்தன் ஊருல இருந்து வந்திருக்கானே வீட்டில் கொஞ்ச நேரம் இருக்க விடுறீங்களா.? அவன் வந்ததும் எங்கையோ பயணம் போக அழைச்சுட்டு போனீங்க… சரி அப்போவாது நேரமே வீட்டுக்கு வரணும்னு  தோணிச்சா உங்களுக்கு.. கோவில் திருவிழா நடந்திட்டு இருக்கு, இப்படி அரக்க பரக்க அலைய கூடாதுன்னு, தெரிஞ்சும் பாண்டியை சுத்த வெளிய அழைச்சுட்டு போயிருக்கியே.. நீ எல்லாம் உருபடுவியா..? “ என அப்பொழுது தான் வீட்டுக்கு வந்த ராஜாவை மருதுவின் அப்பத்தா திட்டி தீர்த்துக் கொண்டு இருந்தார்…

ஆனால் அவனோ அவர் கூறுவது எதையும் காதில் வாங்காமல் வழியில் வரும்பொழுது பெருமாள் கடையில் வாங்கிய பொரியை பத்து விரலிலும் மாட்டிக் கொண்டு “ கறிச்.. கறிச்..” என்று கடித்துக் கொண்டு இருந்தான்..

அதிலும் வயல் வெளியில் சுற்றி விட்டு வரும் பொழுதே, பருத்தி காட்டுக்கு சென்று இரண்டு பருத்தியை உடைத்து அதில் இருந்த பஞ்சை எடுத்து இரண்டு காதிலும் அடைத்துக் கொண்டான், அவன் செயலை யோசனையாக பார்த்துக் கொண்டிருந்த மருதுவுக்கு இப்பொழுது அவனின் செயல் புரிந்தது,

“ விடு அப்பத்தா.. நான் தான் அவனை ஆத்து பக்கமா அழைச்சுட்டு போனேன் “ என சமாதான உடன்படிக்கை வாசிக்க,

“ ஏலேய்.. நீ அவனுக்கு வக்காளத்து வாங்காதலேய் “ என மருதுவையும் சாட,

“ சரி விடு அப்பத்தா… நான் இங்க வரும்போது ஏதோ சொல்லுறேன்னு என்னை ஆர்வமாய் அழைச்சியே.. என்ன விஷயம் “ என மருது அடுத்த விசயத்துக்கு தாவினான். இல்லையென்றால் ராஜாவை தனது அப்பத்தா ஒரு வழிபண்ணி விடுவார் நன்கு அறிந்தவனாய் கேட்டான்..,

உடனே ராஜாவை விட்டுவிட்டு, அடுத்த விஷயத்துக்கு தாவினார் அப்பத்தா…

“ அது ஒன்னும் இல்லை ராசா, நாளைக்கு உனக்கு பொண்ணு பார்க்க போறோம், ரொம்ப அழகா இருப்பா அவா… நம்ம பஞ்சாயத்து பொண்ணு தான், உனக்கு பொருத்தமா இருப்பா.. “ என்றபடி துரைச்சியை பற்றி கூறினார் அப்பத்தா…

அந்த நேரம் மருது மனதில் அந்த ஆற்றங்கரையில் பார்த்த பெண்ணின் முகம் மின்னி மறைந்தது… “ இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம் அப்பத்தா.. அடுத்த லீவில் பார்க்கலாம் “ என கூறிய மருது போர்வையை முகம் வரை மூடிக் கொண்டு படுத்துவிட்டான்… அவள், பெயர், வீடு எதுவும் தெரியாது.. அப்படி இருக்கையில் அவளை பற்றி எப்படி அப்பத்தாவிடம் கூறுவது, என்ற யோசனையுடன் படுத்துக் கொண்டான்…

“ டேய்.. நாளைக்கு நாம அவங்க வீட்டுக்கு போறோம், அவ்வளவு தான் சொல்லுவேன்… இனியும் இந்த வயசான காலத்தில் என்னை தனியா வதைக்காதே.? “ என்றபடி அவனை விட்டு எழுந்த அப்பத்தா அடுப்பங்கரை நோக்கி சென்றார்..

அவர் செல்லவும் “ என்னாச்சு மாப்ள.. என்னமோ மாதிரி இருக்க, அப்பத்தாவும் பாவம்டா.. இன்னும் எத்தனை நாளைக்கு அது உயிருடன் இருக்கும் என்று தெரியாது, உனக்காக தான் இன்னும் உயிரை பிடிச்சு வச்சுருக்கு, இப்போவே ரொம்ப கஷ்டபடுதுடா… நான் இருக்கதினால தான் அது கொஞ்சம் வாய் பேசுது, இல்லன்னா பாவம்டா, நான் நைட் மட்டும் தான் இங்க வாறேன்.. மத்த நேரம் எனக்கு தோட்டத்திலே நேரம் சரியாபோகும், அதுக்கு பேச்சு துணைக்காவது கல்யாணம் பண்ணு மருது,  பஞ்சாயத்து பொண்ணு ரொம்ப அழகா இருப்பா.. உனக்கு அவளை தெரியும் தானே “ என ராஜா கேட்க

“ இல்லைடா நியாபகம் இல்லை, சின்ன வயசுல பார்த்தது “ என கூறியவன் யோசனையில் ஆழ,

“ என்னாச்சுடா.. “ என அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த ராஜா கேட்டான்…

“ பச்.. ஒன்னும் இல்லைடா “ என்றவன் வெளி திண்ணையில் வந்து அமர்ந்துக் கொண்டான்….

அந்த இரவு நேரத்திலும் தெருவில் சிறுவர்கள் நொண்டி விளையாடிக் கொண்டிருந்தனர்… அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான் மருது… மனமோ சிறுவர்களாவே இருந்திருக்கலாமே என்ற எண்ணம் எழாமல் இல்லை,

“ டேய் என்னாச்சு சொல்லு “ என்றபடி அவன் அருகில் வந்த அமர்ந்த ராஜா கேட்க,

தலையும், வாலும் தெரியாத பெண்ணை பற்றி அவனிடம் கூற விரும்பாத மருது, தலைக்கு கையை கொடுத்து அப்படியே வானத்தை பார்த்து படுத்துக் கொண்டான்..

அவனையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்த ராஜா “ என்னமோ தெரியல, நீ ஒரு மார்க்கமா தான் இருக்க, ஆனா நல்லா தெரிது, உன் மனசுல ஏதோ இருந்து அழுத்துகிறது, நாளைக்கு எப்படியும் அந்த பொண்ணுக்கு உன் அப்பத்தா பூ வச்சு, வாக்கு குடுப்பாங்க, அப்போ உன் மனசில் இருக்கிறதை நீ சொல்லு கல்யாணம் நின்று விடும் “ என கூறிய ராஜா அவனை பார்த்துக் கொண்டு இருந்தான்….

டக்கென்று எழுந்த மருது “ உண்மையா ராஜா “ என சந்தோசத்துடன் கேட்டான்,

“ ஆமாடா “ என்றவன், அவனுடன் அந்த திண்ணையில் படுத்துக் கொண்டான்… மருது மனதோ அவளை மீண்டும் எப்படி பார்ப்பது, அவளிடம் எப்படி, எங்கே, என்ன பேசுவது என்று சிந்தனையில் ஆழ்ந்தது..

அடுத்த நாள் நல்லபடியாக விடிய, துரைச்சி வீடே பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தது… இன்று துரைச்சியை பெண்பார்க்க வருகிறார்கள்…

அவளோ ஒரு கரையில் இருந்து கையில் இருந்த நகத்தை எல்லாம் கடித்து குதறி துப்பிக் கொண்டு இருந்தாள்…

எழுந்ததில் இருந்து அவளை காமாட்சி அங்கும், இங்கும் அசையவிடவில்லை.. இருந்த இடத்தை விட்டு கொஞ்சம் நகர்ந்தாலும் உடனே நெற்றிக் கண்ணை திறந்து விடுகிறார்…

அவள் மலைபோல் நம்பிய தேவ் தன் தாயுடன் சமையல் கட்டே கடவுள் என்னும் விதமாக அங்கையே அமர்ந்து விட்டான்… அவளின் அண்ணன் செந்தூரோ “ சோள காட்டுக்கு நீர் பாய்க்க ஆட்களை ஏற்பாடு செய்து விட்டு வருகிறேன் “ என்று கூறி சென்றுவிட்டான்…

செந்தூர் இருந்தாலாவது எப்படியாவது கெஞ்சி கூத்தாடி, ஆற்றை சந்தித்து விட்டு வந்து விடுவாள்…. அவளும் அந்த ஆறும் இணைபிரியாதவர்கள்… சிறுவயதில் இருந்தே அவளின் சந்தோசம், துக்கம் இப்படி எல்லாம் அந்த ஆறு தான்…

பன்னிரண்டாம் வகுப்புக்கு மேல் அவளை வீட்டில் படிக்க வைக்கவில்லை… அவள் மட்டும் அல்ல அங்கிருக்கும் எந்த பெண்ணும் கல்லூரி வாசலை ஏறியது கிடையாது.. அந்த ஊரில் அது ஒரு சட்டம் போல், வயதுக்கு வந்த மூன்றாவது வருடத்தில் அங்கிருக்கும் பெண்களுக்கு திருமணத்தை நடத்தி முடித்து விடுவார்கள்… இவள் செட்டில் இவளுக்கு மட்டும் தான் இன்னும் திருமணம் முடியவில்லை…

வீட்டில் கூறிவிட்டாள் இந்த ஊரில் இருப்பது போல் தான் எனக்கு மாப்பிள்ளை பார்க்கவேண்டும் என்று.. அப்படி பார்த்தது தான் மருது பாண்டியன்.. அவன் இருப்பது அசாமில்.. அவன் நாட்டுக்காய் உழைப்பவன், இவள் தன் ஊருக்காய் உழைப்பவள்…. அந்தளவு அவளுக்கு அவளின் ஊரை பிடிக்கும்… இயற்கையை அழிக்க விடவேமாட்டாள்…

அவனின் தொழில் வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை, ஆனால் அந்த தொழிலுக்காகவே அவனை திருமணம் செய்கிறாள் அவள்… அந்தளவுக்கு அந்த பட்டாளம் அவளுக்கு பிடிக்கும்…

“ இன்னும் கொஞ்ச நேரத்தில் அவங்க வீட்டில் இருந்து வருவாங்க, துரைச்சி சீக்கிரம் ரெடியாகு “ என நூத்தியோறாவது முறையாக காமாட்சி கூறுகிறார்.. ஆனால் என்னவோ எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காக, அசையாமல் கையில் இன்னும் மீதம் இருக்கும் நகத்தை குதறிக் கொண்டு இருக்கிறாள் துரைச்சி..

“ அடியே ஏண்டி.. இப்படி என் உயிரை வாங்குற “ என காமு ஒரு சத்தம் போட,

அவரை அடிகண்ணால் ஒரு பார்வை பார்த்துக் கொண்டே, துணியை எடுத்துக் கொண்டு வீட்டின் பின்புறம் சென்றாள் துரைச்சி..

அப்புறம் என்ன அக்கா அப்படியே, ஓலை தட்டியில் ஓட்டை போட்டு அந்த பக்கம் சென்றுவிட்டாள்,

“ ஆத்தோரத்திலே ஆலமரம், ஆலமரம் “ என்ற பாடலை பாடிக் கொண்டே, தாவாணியின் முந்தானை நுனியை பிடித்து ஆட்டிக் கொண்டே ஆற்றங்கரைக்கு சென்றாள்… மனமோ சோட்டுவை சரமாரியாக திட்டிக் கொண்டு இருந்தது…..

அந்த நேரம் மருதுவும் அந்த பக்கமாக நடந்து வந்தான்.. காலையில் எழுந்ததும் அவளை பார்க்க வேண்டும் போல் இருக்க, அப்படியே ஆற்று பக்கமாய் நடையை கட்டினான்…

அதே நேரம் தூரத்தில் அவள் வருவதை கண்டவன், அப்படியே நடையை நிறுத்தி, அங்கிருந்த ஆலமரத்தின் பின் மறைந்துக் கொண்டான்,

அந்த மரத்தில் இருந்து மெதுவாக அவள் என்ன செய்கிறாள் என எட்டிப் பார்க்க, அவள் ஆற்றில் இறங்குவதை கண்டவன் “ டேய்.. மருது பொட்டபுள்ள குளிக்கிறதை பாக்கிறது ரொம்ப தப்புடா “ என அவனுக்கு அவனே கூறியவன், அந்த மரத்தின் பின்னிருந்து மெதுவாக தள்ளி, ஆற்றுக்கு எதிர் பக்கம் பார்த்து நின்றுக் கொண்டான்..

அவள் குளித்து வெளியில் வரும்வரை அவளை பார்க்காமலே அவளுக்கு பாதுகாப்பாக நின்றவன் அவள் செல்லவும் அவன் வீட்டை நோக்கி சென்றான்… மனதிலோ “ எப்படியும் இன்று இவளை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் “ என்றும் எண்ணிக் கொண்டான்…

“ குளிக்க போனவளை இன்னும் காணுமே “ என்றபடி காமாட்சி வீட்டின் பின் புறம் வர,

அப்பொழுது தான் துரைச்சி வெளியில் இருந்து தட்டியில் இருந்த ஓட்டை வழியாக கையை உள் நுழைக்க,

இந்த பக்கம் இருந்து அவள் கையை பிடித்து யாரோ இழுக்க, துரைச்சி மனதோ “ டேய். சோட்டு லேட் ஆனாலும், சரியான நேரத்துக்கு வந்து காப்பாத்துறடா, சூப்பர்டா மருமகனே “ என அவனுக்கு பாராட்டு பத்திரம் வாசித்தவள், மெதுவாக காலை எடுத்து வைத்து உள்ளே வர,

அங்கு பத்திரகாளியாக அவளை முறைத்துக் கொண்டு காமாட்சி நின்றிருந்தார்… அதிர்ந்து விழித்த துரைச்சி மனதோ “ ஆஹா…!! காமு கையில மாட்டினா நம்மளை பாம் ஆகிருவா “ என தனக்குதானே எண்ணியவள், குனிந்துக் கொண்டே மெதுவாக கண்ணை மேல் நோக்கிப் பார்த்தாள்,

ஈரம் சொட்ட சொட்ட நின்றவளை கண்டு கோபம் வர அருகில் கிடந்த பைப்பை கையில் எடுக்க அந்த பக்கம் குனியவும்,

“ இதோ வந்துட்டேன் அப்பா “ என்றபடி அவள் அறைக்குள் ஓடி மறைந்தாள்…

“ தன் கணவர் வருகிறார் “ எனவும் பைப்பை எடுத்த இடத்தில் வைத்த காமாட்சி வீட்டின் உள் ஓடிவந்தார்.

அதற்குள் மருது வீட்டில் இருந்து ஆள் வந்துவிட்டார்கள் எனவும், அமைதியாகிய காமாட்சி, தன் மகளை காண சென்றார்…

கோவில் சிலையென தயாராகி இருந்த மகளை கண்டவர், அவள் மேல் இருந்த கோபம் பறந்துப் போக அவளை பாசத்துடன் அணைத்துக் கொண்டார்..

“ அப்பா மாப்பிள்ளை வந்துட்டார் “ என செந்தூர் குரல் கொடுக்க, வாசல் நோக்கி ஓடினர் பஞ்சாயத்தும், காமாட்சியும்,

ஆறு பேர் கொண்ட குழு வீட்டில் நுழைய, வெள்ளை வேஷ்டி, அரக்கு சட்டை அணிந்த மருது மெதுவாக வீட்டின் உள் நுழைந்தவன், மனதோ “ ஆண்டவா…. என்னோட பதிலில் யாரும் வருந்த கூடாது “ என ஆயிரத்து மூன்றாவது முறையாக வேண்டிக்கொண்டான்…

அவனின் அப்பத்தா, ஏற்கனவே உறுதியாக கூறி இருந்தார்… இப்பொழுது பொண்ணு பிடிக்கவில்லை என்றால், அடுத்து அவளுக்கு திருமணம் நடப்பது கேள்விக் குறியே அந்த பயத்தில் தான் விடாமல் இறைவனை வேண்டி நின்றான்…. இது பெரும்பாலும் கிராமத்தில் நடக்கும் பெரும் கொடுமை, ஒரு மாப்பிள்ளை வீட்டினர் வந்து பெண்ணை பார்த்துவிட்டு பூ வைக்கும் தருணம் பெண்ணை பிடிக்கவில்லை என்றால், அவளுக்கு அடுத்து திருமணம் நடப்பது என்பது குதிரை கொம்பை பிடிக்கும் கதையாக தான் இருக்கும்… 

அடுத்த கொஞ்ச நேரத்தில், தங்கம், துரைச்சியை அழைத்து வர, தேவ் அவளின் கையை பிடித்துக் கொண்டே வந்தவன், மருதுவை பார்த்து அவளின் கையை விட்டுவிட்டு மருது அருகில் வந்து நின்றுக் கொண்டான்…

துரைச்சியோ “ யோவ் பட்டாளம் உனக்கு இந்த டிரஸ் செமையா இருக்குய்யா “ என்றபடி அவனை சைட் அடித்து கொண்டு நின்றாள்..

அவளை கண்ட அவளின் தாயோ “ அடியே.. இன்னைக்காவது தலையை குனிஞ்சு நில்லுடி.. இப்படி பார்த்துட்டு இருந்தா மாப்பிள்ளை பையன் எழுந்து ஓட போறான் “ என அடிக்குரலில் அவளிடம் கூற,

“ அட.. நீ சும்மா இரு ஆத்தா, யாரவது ஒருத்தர் பார்க்கணும்ல, பட்டாளம் என்னமோ என்னை பார்க்கலை நானாச்சும் நல்லா பாத்துகிறேன்.. நாள, பின்ன உன்னை பார்க்காமலே நான் கல்யாணம் பண்ணுனேன் என்று பட்டாளம் சொல்லிச்சுன்னு வை, “ நீ தான் என்னை பார்க்கலை நான் உன்னை நல்லா பார்த்து தான் கட்டிகிட்டேன்னு பெருமையா சொல்லணும்ல அதுகாச்சும் நான் பாத்துகிறேன் “ என்று அவர் காதில் கிசுகிசுக்க..

அவளை முறைத்தவர் “ நீ எல்லாம் திருந்தவே மாட்டியாடி..? “ என்றபடி முறைக்க,

“ ஹே.. அதெல்லாம் நாங்க திருந்தினா, இந்த உலகம் அழிஞ்சுரும், இந்த உலகத்தை காப்பாத்தவே நாங்க திருந்தாமலே இருக்கோம் “ என்று கெத்தாக கூறியவள் அவரின் முறைப்பை கண்டும் காணாமல் மீண்டும் அவளின் சைட் அடிக்கும் வேலையை ஆரம்பித்தாள்…

மருது அருகில் அமர்ந்திருந்த ராஜா “ டேய் மாப்ள, உனக்கு பொண்ணை பிடிக்லைன்னு இப்போவே சொல்லு இது தான் அதுக்கான சரியான நேரம் “ என அவன் காதில் மெதுவாக கிசுகிசுத்தான் ராஜா…

“ சரிடா மாப்ளை “ என்றபடி மருது திரும்ப, அவன் அருகில் சென்ற தேவ் “ மாமா, அன்னைக்கு எதுக்கு எங்க அத்தையை முறைச்சு, முறைச்சு பார்த்தீங்க “ என கேட்டபடி மருது முன் நின்றான்..,

இத்தனை நேரம் தலையை குனிந்து யோசனையில் இருந்த மருது, தேவ் கூறியதை கேட்டு டக்கென்று தலையை நிமிர்த்தி அவளைப் பார்த்தான்,

அவன் இப்படி பார்ப்பான் என்று அறியாத துரைச்சியோ, என்ன செய்வது என்று அறியாமல் ஒரு நிமிடம் தயங்கி, கண்களை சிமிட்டி பின் தலையை குனிந்துக் கொண்டாள்…

பச்சைநிற புடவை கட்டி, கனகாம்பரமும், மல்லியும் சேர்ந்து தலையில் சூடி, அழகு தேவதையாக, அவளையும் அறியாமல் அவள் முகத்தில் தோன்றிய வெக்கமும், அவள் கண்களை படப்படவென சிமிட்டி தலை குனிந்ததை காதலுடன் பார்த்தான் அந்த பட்டாளத்துக்காரன்….

“ மாமா, இப்போவும் எங்க அத்தையை முறைச்சு, முறைச்சு பாக்குறீங்களே எதுக்கு..? “ இப்பொழுது உச்ச டெசிபலில் கத்தினான் தேவ்…        

அவனின் கத்தலில் பேசிக் கொண்டிருந்த பஞ்சாயத்தும், மருதுவின் அப்பத்தாவும் தேவ்வை நோக்கி “ என்ன “ என்பதாய் பார்க்க,

அவனோ “ இந்த மாமா, அன்னைக்கும் எங்க அத்தையை இப்படி முறைச்சு, முறைச்சு பார்த்தாங்க, இப்போவும் அப்படி தான் பாக்குறாங்க “ என்றபடி கண்ணை உருட்டி உருட்டி கூறினான்,

அவன் செயலில் துரைச்சிக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது “ அடேய் சொட்டு “ என்றவள் மருதுவை பார்க்க, அவனோ வேகமாக தலையை குனிந்துக் கொண்டான்.. அப்பொழுது தான் பலருக்கும் உண்மை புரிய சந்தோசத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்…

செந்தூரோ “ டேய் தேவ் “ என அவனை அதட்ட,

அவன் அருகில் இருந்த ராஜாவோ, “ஆஹா, இது தான் சங்கதியா “ என எண்ணியவன் “ அடடே.. நம்ம பட்டாளத்துக்கே வெட்கம் வர வச்சுட்டானே சின்ன பஞ்சாயத்து “ என்று வேகமாக கூறியவன் தேவ்வை அணைக்க,

அவனிடம் இருந்து திமிறி வெளியேறியவன், மருது அருகில் போய் நின்றுக் கொண்டு  “ எங்க அத்தையை எதுக்கு முறைச்சு, முறைச்சு பார்த்தீங்க “ என்றபடி ஆரம்பித்த இடத்துக்கே வந்து நின்றான்…

மருது பாவமாக, அவனின் அப்பத்தாவை பார்க்க, எழுந்த அவர் துரைச்சி அருகில் சென்று தான் கொண்டு வந்திருந்த பூவை அவள் தலையில் வைத்து விட்டு, திருவிழா முடிந்த அடுத்த வாரத்தில் திருமணம் என நாள் குறித்தனர்…

ஆனால் தேவ் மீண்டும் அதே கேள்வியில் வந்து நிற்க, அவனை இழுத்துக் கொண்டு வெளியில் போன ராஜா “ உங்க அத்தைக்கும், அந்த மாமாவுக்கும் கல்யாணம் “ என கூற,

ராஜாவை பார்த்தவன் “ இந்த தாலி கட்டி, பூ போடுவாங்களே அதுக்கு தான் இப்படி பார்த்தாங்களா.? “ என அதிபுத்திசாலியாக கேட்டான் தேவ்..

“ எப்படி விவரமா கேட்குறான் பாரு “ என்றபடி அவனை முறைத்த ராஜா “ ஆமா “ என கூறியவன் “ உனக்கு எப்படிடா  தெரியும் “ என யோசனையாக கேட்க,

“ இது கூட உனக்கு தெரியாதா.? “ என்றவன் வாயில் கையை வைத்து சிரித்துக் கொண்டு “ ப்பூ.. சின்னபய “ என்று அவனை வெறுப்பேத்தியவன் “ அதுவா “ என இழுத்து “ இந்த பக்கத்துக்கு வீட்டுல ஒரு அக்காக்கு கல்யாணம் முடிஞ்சுல்ல, அந்த அக்காவுக்கும் அந்த மாமா கழுத்தில ஒன்னு கட்டுனாங்களா.? நாங்க மேடையில் இருந்த பூவை பிச்சு போட்டோமா..? அதுக்கு பேர் தான் கல்யாணம்னு என்னோட கிளாஸ் பையன் சொன்னான் ” என்று ஒரு கதையை கூறியவன் ராஜாவை கேலியாக ஒரு லுக் விட்டவன் வீட்டின் உள் ஓடிப் போனான்…   

 “ பயபுள்ள நல்லா விளைஞ்சிருக்கு, இருந்தாலும் இவனுக்கு இந்த குசும்பு ஆகாது “ என்றபடி ராஜா வீட்டில் செல்ல, எல்லாரும் பூ வைக்கும் நிகழ்ச்சியை நல்ல படியாக முடிந்துக் கொண்டு கிளம்பினார்கள்…

அடுத்து வந்த நாட்கள், திருவிழா ஆரம்பிக்க, மருதுவால் துரைச்சியை பார்ப்பது தான் பெரும் பாடாக இருந்தது…

ராட்டு, சவ்மிட்டாய், வளையல் எல்லாம் கோவிலை சுற்றி கடை போட்டிருக்க, மருதுவோ முழுவதும் அந்த கடையையே சுற்றி சுற்றி வந்தான்…

ராஜாவின் கண்களோ எல்லா திருவிழாவையும் போல் “ தனக்கேத்த பச்சைக்கிளி கண்ணில் படுமா “ என்று அங்கிருந்த கடையில் வாங்கிய, வண்ண வண்ண நிறத்தை காட்டும் பைனாகுலர் ஒன்றை கையில் வைத்திருப்பதும், அடுத்த கொஞ்ச நேரத்தில் கண்ணில் வைத்து தூரத்தில் பார்பதுமாக சுற்றிக் கொண்டு இருந்தான்….

அந்த திருவிழா நாளில் நிறைய இளம் வட்டங்களுக்கு காதல் கைகூட, நமது பட்டாளத்துக்கோ கை கூடிய காதல் கண்ணில் மட்டும் சிக்கவேஇல்லை… ராஜாவுக்கு இந்த திருவிழாவிலும் அவன் மனதுகேத்த பச்சைக்கிளி கிட்டவேஇல்லை…

அன்று மாவிளக்கு ஊர்வலம்.. “ இன்றாவது துரைச்சி வருவாளா “ என்றபடி ஊர்வலம் வரும் பாதையில் தவம் இருந்தான் மருது …

தூரத்தில் மாவிளக்கை ஏந்தி பெண்கள் வந்தனர், அந்த இரவு நேரம் கையில் மாவிளக்கை ஏந்தி வந்த காட்சி கண்கொள்ளா காட்சியாக மருது கண்களுக்கு தெரிய, அவன் கண்களோ ஆசையாக அந்த கூட்டத்தில் துரைச்சியை தேடி அலைந்தது…

பக்கத்தில் வந்துக் கொண்டிருக்கும் தோழியுடன் மெதுவாக ஏதோ கூறிக் கொண்டே மெது மெதுவாக நடந்து வந்த துரைச்சி கண்களை சுழல விட, அவள் கண்களில் போஸ்ட் அருகில் நின்ற மருது கண்ணில் பட, படபடக்கும் இமைகளை தரை நோக்கி குனிந்துக் கொண்டாள்…

அவளின் சிறகடிக்கும் கண்களை கண்ட மருது குதுகலமாக, ராஜாவை நோக்கி கண்ணசைக்க, கனகச்சிதமாக தன் வேலையை பார்க்க சென்றான்…

மெதுவாக நடந்து மருது அருகில் வரவும், ஊர் கரண்ட் மொத்தமாக ஆப் ஆக டக்கென்று துரைச்சியை தன் பக்கம் இழுத்துக் கொண்டான் மருது…

“ ஏலேய்.. யாருல அது., இந்த நேரம் கரண்ட்ல கை வச்சது “ என்றபடி ஒரு பெரிசு அந்த பக்கம் நகர்ந்து செல்ல, அருகில் நின்ற ராஜாவோ, எதுவும் அறியாததுப் போல் “ எவம்ல அது திருவிழா நேரம் கரண்ட்ல கைவைக்கிறது “ என அந்த பெரியவருக்கு மேல் சத்தம் போட்டுக் கொண்டே அந்த பக்கம் நகர்ந்தான்…

“ என்ன பண்ணுறீங்க, கையை விடுங்க “ என்றபடி ஒரு கையில் தட்டை ஏந்தியவள், மறுகையால் மருதுவிடம் இருந்து தன் கையை விடுவிக்க போராட,

அவளை ஒரு முறை ஆழ்ந்துப் பார்த்தவன் “ என்ன நீ எப்போ பார்த்தாலும் என்னை விட்டு ஓடுறதிலையே குறியா இருக்க “ என்றபடி அவளை பிடித்திருக்க, மாவிளக்கு ஊர்வலத்தில் எல்லாரும் மெதுவாக நகர்ந்து செல்ல ஆரம்பித்தனர்,

“ விடுங்க எல்லாரும் போய்ட்டாங்க “ மெதுவாக கூற,

அவளின் முகத்தை ஒரு நிமிடம் அசையாமல் பார்த்தவன் “ உன்னை பார்க்கணும்ன்னு தோணிச்சு அது தான் வேற ஒன்னும் இல்லை பயபடாத.., இப்போ போ  “ என்றவன், அவளின் கையை  விட,

அவனை செயலில், அவன் மேல் மீண்டும் காதல் பெருக, ஒரு நொடி அவன் முகத்தை தயக்கமாக பார்த்தவள், அடுத்த நிமிடம் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டாள்… அவளை தொடர்ந்து வந்த மருது தூரத்தில் நின்று முகத்தில் தோன்றிய புன்னகையுடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்…

அடுத்து வந்த நாட்கள் திருவிழா ஜோராகவும், மருதுவுக்கும், துரைச்சிக்கும் சந்தோசமாகவும், கனவுலகில் மிதந்துக் கொண்டும் நாட்கள் சென்றது…

கொ(வெ)ல்வாள்…

“ பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்

பக்கத்திலே வேணும் – நல்ல

முத்துச் சுடர்போலே – நிலாவொளி

முன்பு வரவேணும், அங்கு

கத்துங் குயிலோசை – சற்றே வந்து

காதிற் படவேணும், – என்றன்

சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாயிளந்

தென்றல் வரவேணும். “

 

error: Content is protected !!