Varaaga22

தன்னிடம் ஒருவன் காதல் கொண்டுவிட்டான் என்பதையோ.. அவன் மறைந்திருந்து தன்னை ரசித்துக்கொண்டிருக்கிறான் என்பதையோ உணராமல் தன் கோபம் போக்க அசுர நீச்சல் அடித்துக் கொண்டிருந்தாள் ருத்ரா.. எப்போதும் இந்நேரத்திற்கு அவள் நிதானத்திற்கு வந்திருப்பாள்.. ஆனால் மனிதர்களை போல கோபத்திற்கும் புது இடத்தின் தண்ணீர்  ஒத்துக்கொள்ள வில்லையோ.. மனம் சலசலத்து ஓடும் ஆற்றின் வாஞ்சையை எதிர்பார்த்தது..

முகிலன் சிறிது நேரம் பொறுத்தான்.. என்ன தான் அவன் மனைவி மீன் போல் அங்கும் இங்கும் நீந்துவதை ரசித்தாலும்.. அது இரவு நேரம் அல்லவா.. ?  அவனிற்கு குளிர் வரும் போல் இருக்கவே.. ருத்ராவிற்கு எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை..

இதற்கு மேல் தாங்காது என்று எண்ணியவன்அவளருகே சென்று மனதின் ரசனையை வெளியே காட்டாத முரட்டு குரலில்

“ருத்ராஎன்ன இது.. இந்த நேரத்துல.. உனக்கெல்லாம் பொறுமைனா என்னனே தெரியாதா.. போதும் உடம்பு என்னத்துக்கு ஆகும்…”

என்று கிட்டத்தட்ட கத்தினான்..

அவனது குரலில் திடுக்கிட்டு ஒரு கனம் வேகத்தை குறைத்தவள்.. அடுத்து அவன் கூறிய பொறுமை வசனத்தை கேட்டு எரிச்சல் அடைந்தாள்..

 வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்தால் அது ருத்ரா அல்லவே..

“ஆமா.. எனக்கு சுத்தமா பொறுமையே இல்லை.. இருந்திருந்தா தான் படகில் நீங்க ரெண்டு பேரும் தனியா  உட்கார்ந்து பேசும்போது.. சும்மா வந்திருப்பேன்னா..

என்று அலட்சியம் போல் மனக்குமுரலை கூறினாள்.

அவளது குமுறலில் சந்தேகம் என்பது சிறிதும் இல்லாமல்… முழுக்க முழுக்க கோபம் மட்டும் இருக்கவே…

எப்படி இருந்தாலும் அவ தான் தனக்கு எல்லாம்அவ கேட்காமல்…எதையும் மனசுக்குள்ள வச்சிக்காம… வாய் விட்டு கேட்டதே பெருசுஇதுவரை யாரு கிட்டயும் சொல்லாததை இவ கிட்ட சொல்ல வேண்டியது தான்.. அப்படி சொன்ன பிறகாவது எனக்கும் அவளுக்கும் நிம்மதி கிடைச்சா போதும் என்ற நல்ல முடிவை எடுத்தான் பின்  

“இப்போ என்ன விகாஷினி யாருன்னு தெரியணும் அவ்ளோ தான.. சரி சொல்றேன்.. இப்போ இந்த குளிர்ல இருந்து வெளியே வா..”

என்றான்.

அவன் கூறிய தொனி… ஏதோ போனா போகட்டும்.. கதை  சொல்றேன் வா… என்று சிறுப்பிள்ளையை சமாதானம் பண்ண சொல்லும் தொனியில் இருக்க..

“ஒன்னும் வேணாம்.. நான் வர மாட்டேன்… இப்போ எனக்கு அது தேவையும் இல்லை..”

என்றாள் பிடிவாதத்தில்...( அட பிடிவாதத்துக்கு பொறந்தவளே… ஒழுங்கா அவன் சொல்றத இப்போவாவது கேளு… )

அதற்கு மேல் சத்தம் இல்லைபோயிருப்பான் என்று நினைத்து கூட முடிக்கவில்லை.. தொப் என்ற சத்தம் கேட்க.. கூடவே திடுமென்று அவளின் முழங்கையைப் பற்றி தரதரவென்று இழுத்து போனான் முகிலன்.

அவன் குதிப்பான் என்று எதிர்பார்க்காததால் அவன் இழுத்த இழுப்பிற்கு சென்றவள்… பின் சுதாரித்து பிசினஸ்ல அவளை தோற்கடிக்க என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டவருக்கு நான் எப்படி போனா என்ன… என்று அவனின் பிடியில் இருந்து கையை உதற முயன்றவாறே கூற…

ஆத்திரத்தில் அவளது கையை விட்ட முகிலன்… இப்பொது அவளது தோளை பற்றிக் கொண்டு அவளது முகத்தோடு முகம் நோக்கினான்.

அதில் ருத்ராவிற்கு மனதின் வெம்மை தணிந்து உடலின் குளிர்ச்சி உள்ளத்தையும் ஊடுருவியது…

“இத்தோட உனக்கு பிசினஸ்காக தான் கல்யாணம் பண்ணுனேங்கற தாட் வரக்கூடாது ருத்ரா… அப்படி நினைச்சிருந்தா எப்பவோ எனக்கு கல்யாணம் ஆகியிருக்கும். உன்னை பிசினஸ்காக கல்யாணம் பண்ணல… பிசினஸ காரணமா வச்சி கல்யாணம் பண்ணியிருக்கேன்… மைன்ட் இட்…”

என்று தன் காதலையும் கடுப்பாகவே தான் உரைத்தான் கார்முகிலன். ( ஒரு ப்ரொபோஸ் கூட பண்ண தெரியாத உன்னையெல்லாம் ஹீரோவா வச்சி… ஹையோ.. )

அவன் கூறியது புரியவே சில நிமிடங்கள் பிடித்தது… அதற்குள் அவன் நீச்சல் குளத்தை விட்டு வெளியேறி.. ருத்ராவின் இடைப்பற்றி தூக்கி வெளியே நிறுத்தியிருந்தான்.

அவனிடம் இருந்து திமிறி விலகியவள்… முறைத்துக்கொண்டே கிடுகிடுவென நடுங்கியவாறே தான் சென்றாள்.

அறைக்கு சென்று ஹீட்டர் ஆன் செய்து குளித்த பின்பே குளிர் அடங்கியது. பின் கையோடு கொண்டு வந்த உடையை பார்க்க… அது இரவு உடையாக தான் இருந்தது. குளிரில் சரியாக பார்க்கவில்லை.. வேறு வழியின்றி அதை அணிந்து வெளியே வர…

அறையிலும் ஹீட்டர் போட்டு விட்டிருந்தான் முகிலன். கூடவே தலையை துவட்டியவாறு பனியன் மற்றும் முக்கால் ஷார்ட்ஸில் அட்டகாசமாக இருந்தான்.

ஆனால் அதை ரசிக்கும் நிலையில் தான் ருத்ரா இல்லை.. மீண்டும் விகாஷினி யார் என்ற கேள்வி மூளையை குடைந்தது.

ஆனால் கேட்க முயலவில்லை.. அவன் சொல்கிறேன் என்று தானே கூட்டி வந்தான் என்று படுக்கையில் அமர்ந்து அவன் முகம் பார்க்க…

அவனும் மறுபக்கம் அமர்ந்து அவளை பார்த்து  பெருமூச்சோடு சொல்ல தொடங்கினான்… அன்றைய  பழைய நினைவுகளை சென்று தூசி தட்டி கூற ஆரம்பித்தான்.

ருத்ராவின் முகத்தில் நவரசமும் வந்து போனது… விகாஷினி ரிஷியின் காதலி என்ற சந்தோசம்… அவள் செய்த காரியத்தின் அதிர்ச்சி… ரிஷி இறந்த சோகம் என்று அவளும் அவனின் உணர்வுகளை உள்வாங்கினாள்.

கடைசியாக அவன் கூறி முடித்ததும்… அவளிற்கு ஒரு சந்தேகம் தோன்றியது… அதை கேட்க வேறு செய்தாள்.

“நீங்க சொல்றத பார்த்தா… விகாஷினி தான் ரிஷிய வேண்டாம்னு சொல்லிட்டாளே அப்புறம் எதுக்கு ரிஷிய கொல்லனும்…”

என்றாள்.

“தெரியல… ஒருவேளை அவன் தொந்தரவு பண்ணுவான்னு நினைச்சிருக்கலாம்… ஆனா அது கொலை தான்… எப்படி வண்டி கிடைக்குது ஆனா ரிஷி கிடைக்கல… நம்புற மாதிரியா இருக்கு”

என்று விரக்தியில் கூற.

“சாரி…” என்று மொட்டையாக கேட்டாள் ருத்ரா…

“எதுக்கு..” என்று இவன் பதில் கேள்வி கேட்க…

“இல்ல… உண்மை தெரியாம…” என்று தயங்கி,

அவன் கூர்ந்து நோக்கவும்…

சுவரைப் பார்த்து…

“உங்களையும் விகாஷினியையும் தப்பா நினைச்சுட்டேன்…”

என்று செப்பினாள்.

ஏதாவது கூறுவான் என்று அவனை நிமிர்ந்து பார்க்க…அவனோ 

“சரி அதான் இப்போ உண்மை தெரிஞ்சிருச்சே… இப்போ தூங்கலாமா… மணி மூன்றரை… நான் காலையில் ஆபீஸ் போகணும்.. நீயும் கொஞ்ச நேரம் தூங்கு…”

என்றவாறு படுத்துவிட்டான்.

மனதின் பாரம் இறங்கிய அயர்வில் அவன் தூங்கிவிட… உடலின் அயர்ச்சியில் ருத்ராவும் தன்னை அறியாமல் உறக்கத்தை தழுவினாள்.

காலையில் முகிலன் எழுந்து ருத்ராவை பார்க்க அவள் அசந்து தூங்கிக்கொண்டிருந்தாள். நேற்று போய் ஜவுளி கடையின் வரவு செலவை மட்டும் பார்த்து வந்திருந்தான்… இனி  மூன்று நாள் வேலையும் தேங்கி இருக்கும் அபி கன்ஸ்ட்ரக்ஷனிற்கு சென்றாக வேண்டும்.

அதை எண்ணி கூடவே நேற்று நீரில் போட்ட ஆட்டத்தையும் நினைத்து ருத்ராவை எழுப்பாமல் குளித்து கிளம்பியவன்… கீழே வர…

அபிராமி தான்…

“எங்க டா கிளம்பிட்ட… ஆபீஸ்கா..”

என்றார்.

“ம்ம்ம்… ஆமா மா”

என்று அவன் கூறி சாப்பிட அமர… ருத்ரா எங்கே என்று கேக்கலாமா வேணாமா… என்று இங்கி பிங்கி பாங்கி போட்டு பார்த்தவர். கடைசியில் கேளு என்று வரவும்…

“ருத்ரா எங்க பா…”

என்றார் அபிராமி…

இவன்,

“தூங்குறா மா…”

என்றதோடு கிளம்ப..

அவர் தான் சரி கீழே வரட்டும் பார்த்துப்போம் என்று விட வேண்டியதானது.

************************************************

மும்பை… அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து யோசித்துக் கொண்டிருந்தாள் விகாஷினி.

இரவு தந்தை கூறியது நினைவுக்கு வந்தது.

“என்ன தான் நாம விதவிதமா முயற்சி செய்தாலும் ரிஷிக்கு கொஞ்சம் கொஞ்சமா சரி ஆகுதே தவிர அவன் நினைவை தட்டி எழுப்ப முடியல..

சோ… அவங்க அம்மா அப்பா கிட்ட சொல்லி கூட்டிட்டு வருவோம்… பெற்றவங்க குரல் கேட்டாவாவது முன்னேற்றம் தெரியுதான்னு பார்ப்போம்… இதுவே ரொம்ப தாமதம் தான்… இதுக்கு மேலயும் தாமதம் பண்ணாத மா…”

என்றார்.

“அவன் பழைய படி முழிச்ச பிறகு அவங்க கண் முன்னாடி நிறுத்த நினைத்தேன் பா… அதையும் மீறி முகிலன் கிட்ட சொல்ல போனேன்… பட் என்னால முடியல… அவன் பேசுன பேச்சுக்கு…”

என்று பல்லை கடித்தவள்…

“இன்னும் மூணு மாசம் இருக்குல்ல டாட்… கொஞ்சம்…”

என்று சொல்லும் போதே குரல் தொண்டைக்குள் அமிழ்ந்தது.

இது போல் பல மூணு மாசம் போனதால் வந்த தயக்கம் இது…

“வேணாம்  மா… நானே ரிஷியோட அம்மா அப்பாவ பக்குவமா சொல்லி கூட்டிட்டு வரேன்… நீ முகில்ல கூப்பிடுற வேலைய பாரு…”

என்று கூற…

“டாட்… முகில் எதுக்கு… வேணாம்”

என்றாள் மகள்.

“பச்… நெருக்கமானவங்க எல்லாரையும் கூப்பிடனும் விகாஷினி…”

என்று கிருஷ்ணகுமார் சலிக்க…

“அப்போ நீங்க கூப்பிடுங்க… என்னால முடியாது”

என்றாள் அவன் மீது இருக்கும் எரிச்சலில்.

“நோ… நான் பெரியவங்கள கூட்டிட்டு வரேன் நீ அவன கூட்டிட்டு வா அவ்ளோ தான்”

என்று விட்டு தூங்க சென்றுவிட்டார்.

அதை நினைத்து இப்பொது வரை போனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

பின் ஒரு முடிவோடு அவனிற்கு அழைக்க

அப்போது தான் அலுவலகம் நுழைந்து தன் அறையை அடைந்த முகிலன் போனை பார்க்க… அது விகாஷினி காலிங் என்றது.

அதனை கண்டு கடுப்பேறியவன் அவள் நம்பரை இன்னும் தன் கைபேசியில் இருந்து அழிக்காமல் இருப்பதை பார்த்து இதனை பிளாக் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து அழித்து… பிளாக்கும் செய்து விட்டான்.        ( டேய்… முடியல டா உன்னோட… )

அவன் கட் செய்ததை உணர்ந்து… அதானே இவன் எடுத்துட்டாலும் என்று வைதவள். 

சரி மெசேஜ் பண்ணுவோம்… இவன் கிட்ட பேசுற வேலை மிச்சம் என்று மெசேஜ் பண்ண… அது போகவே இல்லை… அப்போதே தெரிந்துவிட்டது பிளாக் பண்ணிவிட்டான் என்று.

இவனை… என்று எரிச்சலில் தாங்காமல் தரையில் காலை உதைத்தவள்… நீயே என்கிட்ட பேசுவ… அப்போ இருக்கு உனக்கு என்றுவிட்டு… ருத்ராவிற்கு போனை போட்டாள் விகாஷினி.

தூக்க கலக்கத்தில் இருந்து போனின் மணி அடித்து எழுப்பி விட… தலை சற்று பாரமாக இருந்தது ருத்ராவிற்கு… ஜலதோசம் வந்த அறிகுறிகள் தெரிய… போனை எடுத்து,

“ஹலோ…”

என்றாள் ருத்ரா… சற்று சோர்வான குரலில்.

அந்த குரல் விகாஷினியை அந்த எரிச்சலிலும் யோசிக்க வைக்க…

“ருத்ரா.. ஆர் யூ ஓகே.. ஏன் ஒரு மாதிரி பேசுற..?

என்று தானாக பொங்கிய அக்கறையில் வினவினாள்…

முகிலனை கல்யாணம் பண்ணினா இப்படி தான் என்று அவள் மனதில் எண்ணியது வேறு விசியம்.

அதில் உறக்கம் கலைந்த ருத்ரா… இது விகாஷினி மாதிரி இருக்கே என்று போனை பார்க்க… டுரூ காலரில் விகாஷினி கிருஷ்ணகுமார் என்று ஒளிர்ந்தது.

சன்னமாய் அதிர்ந்த ருத்ரா.. அந்த குரலில் இருந்த வாஞ்சையை உணர்ந்து…

“யா… ஐ அம் பைன்”

என்று கூறினாள். மூளை நேற்று இரவு கணவன் கூறிய குற்றச்சாட்டுகளை நினைவுபடுத்தியது. அதற்கும் இந்த குரலிற்கும் சிறிதும் ஒத்து போகவில்லை என்று தான் தோன்றியது.

“நான் விகாஷினி பேசுறேன்… விகாஷினி கன்ஸ்ட்ரக்ஷன் எம்டி..”

என்று அறிமுகப்படுத்த…

அதுவே அவளின் கன்ஸ்ட்ரக்ஷன் மீதான பிடிப்பை எடுத்து காட்டியது… ஒருவேளை கணவன் கூறியது உண்மையோ என்று மனது இரண்டாக பிரிந்து வாதாடியது.

“ம்ம்ம்… சொல்லுங்க…”

என்று இப்பொது சிறிது ஒட்டாத குரலில் பேச…

இவ்வளவு பெரிய தொழில் நடத்துபவளுக்கு தெரியாதா அவளின் குரல் மாறுபாடு… முகிலன் தன்னை பற்றி  சொல்லியிருப்பானோ… என்று யோசித்தவள்… அதை தெரிந்துக்கொள்ள வேண்டி…

“அதுக்குள்ள உன் புருஷன் என்னை பத்தி சொல்லிட்டானா…? பரவால்லையே ஒற்றுமையா தான்  குடும்பம் நடத்துறிங்க போல…”

என்று சீண்ட…

அது வேலை செய்தது… 

“இப்போ உனக்கு என்ன பிரச்சனை காலங்காத்தால வம்பிழுத்துட்டு அலையுற”

என்று சீற…

“கூல்… கூல்… உன் புருசனுக்கு கால் பண்ணுனேன் எடுக்கல… பிளாக் பண்ணிட்டான்… நீ என்ன பண்ற.. நான் அனுப்புற போட்டோவை மட்டும் அவனுக்கு அனுப்பு… அதுக்கு தான் உன்னை கூப்பிட்டேன்…”

என்று நிதானமாக கூற…

ருத்ரா மலையேறினாள்…

“முடியாது போடி…”

என்று கூற..

“ஹலோ.. மரியாதை மரியாதை”

என்று நக்கலடித்தாள் விகாஷினி. அதற்குள் ருத்ராவின் போனிற்கு போட்டோஸ் வந்திருந்தது.

“நீ மட்டும் அவருக்கு மரியாதை குடுத்தியா… அப்புறம் நான் எதுக்கு உனக்கு குடுக்கணும்”

என்று கேட்டாள் ருத்ரா.

“சரி… நீ தரவே வேண்டாம்… போட்டோஸ் அனுப்பிட்டேன்… அதுல இருக்குறது ரிஷி…”

அதை கூறும் போது மட்டும் இளகியவள்… பின் மீண்டாள்…

“இதை மட்டும் உன் புருசனுக்கு அனுப்பு… அனுப்புவனு நம்புறேன்… அப்புறம் அவனே பேசுவான்”

என்று விட்டு கட் செய்திருந்தாள்.

“ஹலோ… ஏய்… விகாஷினி”

என்று கத்த.. அவள் கேட்டாள் தானே… தொடர்பு துண்டிக்கப்பட்டு இருந்தது.

வந்த போட்டோ வை பதிவிறக்கி பார்க்க… அங்கு ஒரு ஆண்மகன் மருத்துவ உபகரணங்கள் பொருந்தி கண்மூடி உறங்கிக்கொண்டிருந்தான்.

இவன் ரிஷியா என்ற பரபரப்பில் முகிலனிற்கு அனுப்பி வைத்தாள் ருத்ரா.

மெசேஜ் டோன் கேட்டதும் தள்ளி மின்னிய திரையில் எட்டி பார்க்க… ருத்ரா அனுப்பியிருக்கிறாள் என்றறிந்து உடனே எடுத்து பார்த்தான் முகிலன்.

பார்த்தவன்… பார்த்தான் பார்த்தான் பார்த்தபடியே இருந்தான். சந்தோஷத்தில் கண்களில் இருந்து கண்ணீர் வருவதையும் அவன் உணரவில்லை. நெஞ்செல்லாம் நெகிழ்ந்தது அந்த ஆறடி உயர ஆண்மகனிற்கு.

உடனே ருத்ராவிற்கு அழைக்க… அவன் அழைப்பை எதிர்பார்த்து தலை பாரத்தையும் தாங்கி அமர்ந்திருந்தவளோ பாய்ந்து சென்று எடுத்தாள்.

அந்த பக்கம் அவன் வார்த்தை வராமல்…

“ரி…ரிஷி… எ..எப்படி…?”

என்று திக்கி திணற…

“விகாஷினி தான் உங்களுக்கு போன் பண்ணி… நீங்க அட்டென்ட் பண்ணல அப்படினதும் எனக்கு போன் பண்ணுனா… உங்களுக்கு அனுப்பி வைக்க சொன்ன…”

என்று அவசர அவசரமாக கூறினாள்.

“ஹம்… தேங்க்ஸ்…”

என்று மொழிந்தவன்… அடுத்த நொடி விகாஷினியை அழைத்திருந்தான்.