varaga14

varaga14

கல்யாணத்தை நிறுத்தி விடலாம் என்று கூறி ருத்ரா விறுவிறுவென்று பின்வாசல் வழியாக உள்ளே செல்லவும்.. முகிலனிற்கு உள்ளே எதுவோ தடம் புரண்டது.. என்னவோ ஏதோ என்று அவள் பின்னால் விரைந்து சென்றான்.. கிட்டத்தட்ட ஓடினான் என்று சொல்ல வேண்டுமோ.. ?

அதற்குள் அவள் உள்ளே நுழைந்திருக்கஅவளை தடுக்க வேண்டும் என்பது மட்டுமே பிரதானமாய் இருந்தது அவனிற்குஏன்..?  எதற்கு..? என்றெல்லாம் யோசிக்கும் நிலையில் அவன் இல்லை..

ஆனால் அந்தோ பரிதாபம்அடுப்பறையில் யாரோ அவளை பேச பிடித்துக் கொண்டனர். இவனும் உள்ளே நுழைய தயங்கி வெளியே சுவரோரம் நின்றுவிட்டான்.

ருத்ராவை பேச பிடித்துக்கொண்டவர் வேறு யாரும் இல்லை.. தெய்வமே தான்

ருத்ராவை கடித்து குதறும் மனநிலையில் இருந்தவருக்கு வெளியே நடக்கும் அவளின் கல்யாண சம்பாஷணை பிடிக்காமல் போனதில் ஆச்சர்யமில்லை... வேலை இருப்பதாக பாவலா காட்டிக்கொண்டு  உள்ளே வந்திருந்தார்..

ஆனால் அவரே எதிர்பார்க்காதது ருத்ரா தனியாக பின்வாசல் வழி வந்தது… அவரிற்கு முகிலன் மற்றும்  ருத்ரா தனியாக பேச சென்றது தான் தெரியாதே..

ருத்ரா கோபத்தில் கண் மண் தெரியாமல் அடுப்பறையை தாண்டி செல்ல பார்க்க… தெய்வம் சத்தமிட்டார்…

“ஏய்.. நில்லுடி… நான் ஒருத்தி இங்க நிக்குறேன்… கண்ணு தெரியாத மாதிரி போற… என்ன..? கல்யாணம் நிச்சியம் ஆகியிருக்குற திமிரா…?”

என்றார்.

அவளும் சலிக்காமல்… முகிலனின் மேல் உள்ள கோபத்தை வார்த்தைகளில் காட்டி…

“ஆமா… நிச்சியம் ஆகியிருக்குற திமிரு தான்… இப்போ அதுக்கு என்ன…?”

என்றாள்.

வெளியே நின்றுக்கொண்டிருந்த முகிலனிற்கு ஆச்சரியமாக இருந்தது… இங்கே கல்யாணத்தை நிறுத்த ஆடிய ஆட்டம் என்ன…? அங்கே நடப்பது என்ன…? என்று.

தெய்வம் சும்மா இருந்திருந்தாலும் அவர் ஆசைப்பட்டது நிறைவேற தொண்ணூறு சதவீத வாய்ப்பு இருந்திருக்கும்.

எங்கயோ போற மாரியாத்தா… என் மேல வந்து ஏறு ஆத்தா.. என்று சொல்வது போல்.. எங்கயோ… யார் மேலோ இருந்த கோபத்தை தெய்வம் தான் அறியாமலேயே ருத்ராவிடம் இருந்து வாங்கி கொண்டிருந்தார்.

“ஒஹ்… பாக்கலாம்… எப்படி கல்யாணம் நடக்குதுன்னு… அப்படியே நடந்தாலும் நீ எப்படி வாழ்ந்து காட்டுறன்னு.. உன் புத்திக்கு ரெண்டு நாள் தாக்கு பிடிக்குறதே பெருசு… பாப்போம்டி….”

என்று ஒரு கல்யாணம் ஆக போகும் பெண் என்ற நினைவின்றி.. தானும் ஒரு பெண் என்ற மனதுமின்றி… நாக்கில் எலும்பில்லாமல் பேச..

வெளியே இருந்து கேட்டுக்கொண்டிருந்த முகிலனிற்கே சே… என்ன பொம்பளை இது என்று தான் தோன்றியது. இருந்தாலும் ருத்ரா அதற்கு கூறும் மறுமொழியை கேட்காமல் உள்ளே சென்று தலையிட விருப்பம் இல்லை.

அதற்கு மேலும் சும்மா இருந்தால் அது ருத்ரா அல்லவே…

“பாருங்க… நல்லா பாருங்க.. எனக்கு கல்யாணம் நடக்க தான் போகுது… நானும் அவரும் நூறு வருஷம்… ஏன் அதுக்கு மேலயும் நல்லா வாழ்ந்து காட்ட தான் போறோம்… என்ன அதை பார்க்க நீங்க இருப்பீங்களோ இல்ல போய் சேர்ந்துருவீங்களோ”  

என்று கோபத்தில் வார்த்தை விட… சொன்ன பிறகே தான் செய்ய நினைத்த வேலையும் தான் செய்த கொண்டிருக்கும் வேலையும் நினைவுக்கு வந்தது.

கோபம் போய் அந்த இடத்தை தவிப்பு ஆக்கிரமித்தது. இப்போது போய் கல்யாணத்தை நிறுத்தினால், கொண்டாட்டம் யாருக்கு…? அத்தை என்ற அற்ப பிறவிக்கு ஆகிவிடாது. அந்த சந்தோசத்தை அவருக்கு தர ருத்ரா சற்றும் விரும்பவில்லை. நிறுத்தாவிட்டால் முகிலனிடம் ஜம்பமாக சொல்லிவிட்டு வந்தது பொய்யாகிவிடுமே.

தன்னை பற்றி அவன் என்ன நினைப்பான் என்ற கூச்சத்தில் அவள் அடுப்பறையை விட்டு தெய்வத்தை மதிக்காமல் சென்றுவிட…

தெய்வம் அவள் கூறிய பதிலடியில் வாயடைத்து போயிருந்தார். இது போல் இருக்கும் மனிதர்கள் அவர்கள் அறியாமலேயே செய்யும் நல்லதுகளால் தான் அவர்கள் செய்யும் பாவம் கரைகிறதோ என்னமோ…

சுவரருகே இருந்த முக்கியமான ஆளை விட்டுவிட்டோமே… ருத்ராவின் பதில் அவன் சற்றும்  எதிர்பார்க்காததாய் இருக்க… அவள் வாய்மொழி அவனது மனதை மத்தாப்பூ போல் ஒளிர செய்தது.

அந்த மத்தாப்பூவிற்கு பின்னே ஆந்திரா செல்லும் காரணம் கிஞ்சித்தும் இருக்கவில்லை. கிட்டத்தட்ட ருத்ராவின் வார்த்தைகளை தவிர அவன் மனதிலோ, மூளையிலோ வேறு சிந்தனை எதுவும்  ஆக்கிரமிக்கவில்லை என்றே சொல்லலாம்.

ஒரு மாதிரி உல்லாச மனநிலையில் மெதுவாக நடந்து வந்த வழியே சென்றான்.

அதற்கு முன்பே…

பின்வாசல் வழியாக வந்த ருத்ராவிடம்..

“என்னமா பேசியாச்சா.. நீ மட்டும் தனியா வர மாப்பிள்ளை எங்க..?”

என்றார் கருணாகரன்.

சிறிது தடுமாறியவள்.. பின் அனைவரும் இவள் பதிலிற்காக காத்திருப்பதை பார்த்து..  

“அ.. அவர் போன் பேசிட்டு இருக்காரு.. நா.. நான்.. அப்படியே நடந்து பின்வாசல் வழியா வந்துட்டேன் என்றுவிட்டு தன் அறைக்கு விரைந்து விட்டாள்.

அவள் சென்ற சிறிது நேரத்தில் முன்வாசல் வழியாக வந்த முகிலனிடம் அவனது தந்தை,

“போன் வந்துச்சா… ஏதாவது முக்கிய விசியமா…? கிளம்பலாமா…?”

என்றார்.

அவரை பார்த்து புருவம் சுருங்க யோசித்தவன்.. பின் ருத்ராவின் சமாளிப்பு என்பதை உணர்ந்து…

“ஆ…ஆமாம் பா… மேனேஜர் தான் கால் பண்ணுனாரு… ஜவுளி கடையில் எல்லா புது ஆடைகளும் வந்துருச்சாம்… அதான்..”

என்றான். ( பரவால்ல… இப்போதே சமாளிக்க கத்துகிட்டான்…)

உண்மையில் அது நேற்று இரவே வந்துவிட்டது… அதை இப்பொது உபயோகப்படுத்திகொண்டான்.

அதை கேட்டதும் மாணிக்கவேல்…

“புதுசு வந்துருச்சா… அப்போ நம்ம கல்யாண ஜவுளி அங்கேயே எடுக்கலாமே… கருணா.. என்ன சொல்ற.. ஒரு 10 நாள்ல எல்லாம் எடுத்து வச்சிருவாங்க… நம்ம கடைலயே எல்லாருக்கும் எடுப்போமா…?”

என்றார்.

ஆனால் கருணாகரன் தயங்கினார்…

“இல்ல சம்பந்தி… நாம மதுரையில் எடுப்போமே… பொண்ணுக்கு நிறைய செய்யணும்.. அங்க வந்தா கொஞ்சம் சங்கோஜமா இருக்கும்…”

என்றார். எங்கே ஜவுளி செலவையும் அவர்களே எற்றுகொள்வார்களோ என்ற கவலையில்.

அவரோ பதிலுக்கு…

“என்ன திடீர்னு சம்பந்தி எல்லாம்.. என்னை மாணிக்கம் கூப்பிடுற ஒரே ஆளு நீ மட்டும் தான்… நீயும் கூப்பிடலை அப்படின்னா.. என் பேர் எனக்கு மறந்து போயிறாதா…?”

என்று வேடிக்கையாக கூறி… பின்,

“உன் பெண்ணிற்கு என்ன வேணும் என்றாலும் எடுப்பா.. நாங்க ஒன்னும் சொல்ல மாட்டோம்… நாங்களே சொந்த கடையில் ஜவுளி எடுத்தாலும் பில் கட்டுற வம்சம்… உன்னை விட்ருவோமா அப்படியே..”

என்றார்.

கருணாகரனும் பதிலுக்கு புன்னகையோடு…

“அடுத்து வர நல்ல நாளுல கண்டிப்பா கோவை வருகிறோம்”

என்று கூறினார்.

பின் அனைவரும் உணவுண்டு கோவை கிளம்பினர்… அவர்களை வழி அனுப்ப ருத்ராவே வந்திருந்தாள்… சீதாவின் உபதேசத்தில்…

அவளும் கீழே வந்து அனைவருக்கும் புன்னகையோடு விடைகொடுத்தாள்.. முகிலனை தவிர.. ஆனால் நம் முகிலனோ தன் தம்பி தங்கையோடு சிரித்து பேசிக்கொண்டிருக்கும் அவளை… அவளை மட்டுமே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான்.. மற்றவர்கள் அறியாமல்…

இவ்வாறு இவர்களின் கண்ணாமூச்சி ஆட்டத்தோடு அன்றைய நாள் முடிவடைந்தது.

அடுத்து வந்த நாட்களில் ருத்ராவை முகிலன் அதிகம் வேலை வாங்கினான் என்றால் மிகையல்ல. சின்ன சின்ன ப்ராஜெக்ட்டையும் விடாமல் இவளிற்கு அனுப்பினான். முடிந்தால் செய்து தரவும் என்ற குறிப்போடு…

கண்டதையும் யோசித்து மனதை கெடுக்காமல் இருக்க இந்த டெக்னிக்காம்…

முடிந்தால் செய்து தரவும் என்ற வார்த்தைக்காகவே இவள் ரோசப்பட்டு மாங்கு மாங்கு என்று அனைத்து வேலைகளையும் செய்து அனுப்பிக்கொண்டிருந்தாள்…

அதை பார்த்து முத்ரா காண்டாகி… முகிலனிற்கு அழைத்து..

“மாமா… அக்கா எப்போ பாரு கம்ப்யூட்டரே கதியா இருக்கா… அவ இங்க இருக்குற வர எங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணட்டுமே… அப்புறம் அவ அங்க வந்த பிறகு எவ்ளோ வேணும்னாலும் வேலை வாங்குங்க.. நான் கேள்வியே கேட்க மாட்டேன்… ப்ளீஸ்… ப்ளீஸ்”

என்று கெஞ்சி அந்த வேலையை கல்யாணத்திற்கு பின் தள்ளி போட்டது வேற கதை.

ராம் ஜவுளிகடை…

அந்த பரந்து விரிந்த பட்டுபுடவை பிரிவில்… கார்முகிலன் மற்றும் ருத்ரா குடும்பத்தினர் குழுமியிருக்க… கார்முகிலன் மட்டும் வேலை இருப்பதாக கூறி தனது அறையில் இருந்து அவர்களை சிசிடிவியில் பார்த்துக்கொண்டிருந்தான். தான் போனால் ருத்ரா ஒதுங்கி விடுவாளோ என்று எண்ணி,

ஆனால் இவன் இல்லாமல் அவர்கள் புடவை பார்ப்பதை விட்டு மற்றவர்கள் வாய் பார்த்துக்கொண்டிருக்கவும் அதான்… அரட்டை அடித்துக்கொண்டிருக்கவும் இது வேலைக்காவாது என்று எண்ணி கிளம்பினான்.

கார்த்திக் எப்போதோ அவனிற்கு தேவையானதை எடுக்க ஆண்கள் தளத்திற்கு சென்றிருந்தான்.

முகிலன் வரவும் புடவை செலக்ட் செய்யுமாறு கூறி கூட்டத்திற்குள் இழுத்தனர்…

அதே நேரம்… அபிராமிக்கும் காயுவுக்கும் சின்ன வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது… சற்று தள்ளி இருக்கும் தூணிற்கு பின்னிருந்து இருவரும் சண்டையிட்டு கொண்டிருக்க, முகிலன் வந்ததும் புடவை பார்ப்பது போல் நகர்ந்து சென்ற ருத்ராவின் காதில் அவர்களின் சம்பாஷனை விழுந்தது.

“அம்மா ப்ளீஸ் மா… நான் கேட்டுப்பார்க்கிறேன் மா.. அண்ணிக்கிட்ட… அவங்க ஒன்னும் சொல்லமாட்டாங்க மா… உனக்கே தெரியும்ல என்னோட டிரெஸ்ஸிங் சென்ஸ்… நான் செலக்ட் பண்ணுறதுல அப்படியே அண்ணி தேவதை மாதிரி இருப்பாங்க மா…”

என்றாள்.

அபிராமியோ…

“காயு.. சும்மா இரும்மா… ஒவ்வொரு பொண்ணுக்கும் கல்யாணத்துல இப்படி இருக்கனும்.. அப்படி இருக்கணும்ன்னு ஆசை இருக்கும்… நீ போய் அதை கலைச்சு.. நான் எடுக்குறேன்னு சொன்னா… நாத்தனார் கொடுமைன்னு நினைச்சுற போறாங்க… நீ மத்தவங்களுக்கு எடு.. எனக்கு அப்பாக்கு கார்த்திக்குன்னு… ருத்ராவும் முகிலனும் பேசி பழகி எடுக்கட்டும்… ( அஹான்…)

இதுக்கு மேல அத பத்தி பேசாத.. அவ்ளோ தான்… இப்போ போய் உனக்கு புடவை எடு.. வா போகலாம்”

என்று கூற…

ருத்ரா அதை கேட்டுக்கொண்டே அவர்களை கடந்து போனாள். தன் மேல் அவர்கள் வைத்திருக்கும் அன்பும் புரிந்தது.

புடவை எடுப்பதில் அனுபவமோ ஆசையோ இல்லாத ருத்ராவிற்கு காயு ஆசையாக கேட்டது மனதை என்னமோ பண்ணியது… சுற்றும் முற்றும் அவளை தேட… ஒரு ஓரமாக உம்மென்று உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவளருகே ஒரு அடர் ஊதா புடவையை எடுத்து சென்றவள்… அவளிற்கு பக்கவாட்டில் இருந்த கண்ணாடியில் புடவையை தோளில் வைத்து பார்க்க…

காயு இவளை கவனிப்பது தெரிந்தது… அவளிடம்..

“இந்த டிசைன் நல்லாருக்கு… பட்.. கலர் எனக்கு செட் ஆகல இல்லையா”

என்று கேட்டாள்…

அவ்ளோ தான்… காயுவும் கண்ணில் ஒரு மின்னலுடன்..

“ஆமா அண்ணி.. இதுவே உங்களுக்கு லாவெண்டர் கலர்ன்னா பொருத்தமா இருக்கும்”

என்று உளற…

ருத்ராவும்…

“அப்படியா… அப்போ எனக்கு ஹெல்ப் பண்ணேன்.. நான் அவ்ளோவா புடவை எடுத்ததில்லை”

என்று அழைக்க..

கரும்பு தின்ன கசக்குமா…? இல்ல பிடிச்சதை சாப்பிட  வாய் தான் வலிக்குமா..?  

காயுவும் உற்சாகத்தோடு தன் வருங்கால அண்ணி ஆக போகும் ருத்ராவிற்கு மிகப்பொருத்தமானதை தேர்ந்தெடுக்க ஆரம்பித்தாள்.

அதை பார்த்து அனைவரும் உள்ளுக்குள் மகிழ்ந்தனர். எப்பொதும் ஒட்டுப்புல் போல் ஒட்டிக்கொண்டிருக்கும் முத்ராவிற்கும் சேர்த்தே காயு புடவை எடுக்க… அவள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொன்றும் அவர்களை பேரழகியாக காட்டிக்கொண்டிருந்தது.

 

 

 

  

 

 

 

error: Content is protected !!