Varagha 11
Varagha 11
அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த அந்த ஞாயிற்றுக்கிழமை எந்தவித மாற்றமுமின்றி எப்போதும் போல் விடிந்திருந்தது. காலை 10 மணிக்கு டிசைன் அனுப்பிய அனைத்து கம்பெனிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் எந்த கம்பெனிக்கு ப்ராஜெக்ட் தரப்படும் என்ற தகவல் தெரிவிப்பதாக கூறியிருந்தனர்.
கார்முகிலன் அன்று மிகவும் பதட்டமாக இருந்தான் என்று தான் கூறவேண்டும். ஆனால் அதனை சாமர்த்தியமாக வீட்டினரிடம் இருந்து மறைத்து சாப்பிட வந்தமர்ந்தான். அனைவருக்கும் அவனுடைய அமைதி பழகிய ஒன்றென்பதால் வித்தியாசமாக ஒன்றும் தெரியவில்லை.
மாணிக்கவேலிற்கு அவன் கம்பெனியில் நடப்பது அனைத்தும் அவர் காதிற்கு வந்துவிடும். என்ன தான் தனியாக தொழில் ஆரம்பித்தாலும் ஒரு கஷ்டம் என்று வந்தால் தன் பிள்ளை தனியாக சமாளிக்க சிரமப்படக்கூடாதே என்ற நல்லெண்ணத்தில் தான், அங்கு தனக்கு நம்பிக்கையான ஒருவரை வைத்துள்ளார். இதுவே கார்த்தி என்றால் கவலை இல்லை… அவன் அனைத்தையும் சொல்லிவிட்டே செய்வான். நம் முகிலன் தான் வீட்டில் பேசவே யோசிப்பவன் ஆச்சே.. அதனால் இந்த ஏற்பாடு. அதனால் தான் தன் மனைவியை இந்த ரிசல்டிற்கு பிறகு அவனிடம் பேசுமாறு கூறியிருந்தார்.
அரை குறையாக ஏதோ கொறித்துவிட்டு தன் கம்பெனிக்கு கிளம்பியவனை…
“முகிலா… இன்று சீக்கிரம் வந்திடுவியா…?”
என்று கேட்ட அபிராமியின் குரல் தடுத்து நிறுத்தியது.
என்றும் தன் அன்னை இவ்வாறு கேட்பவர் இல்லையென்பதால்,
“என்னமா… ? ஏன்… ?”
என்று பதில் கேள்வி கேட்க…
அவர் என்னவென்று கூறுவார்… கல்யாண விஷயம் என்றால் வீட்டிற்கு வேண்டுமென்றே தாமதமாக வரும் அறிகுறி உள்ளதால்…
“இல்ல முக்கியமான விஷயம் பேசணும்… அதான்… இன்னக்கி மட்டும் தான்… வந்திருடா..”
என்றார்.
அவனும் “சரி மா” என்று விட்டு பறந்தான்.
வேறு நாளாக இருந்தால் அவன் கண்டுப்பிடித்திருப்பான். இப்போது தான் அவன் உடல், மனம், ஆவி அனைத்தும் ரிசல்ட்டில் இருந்ததே…
இங்கே இப்படி இருக்க… பெரியகுளத்தில் ருத்ராவோ தன் பதட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக தங்கையிடம் தள்ளிவிட்டுக் கொண்டிருந்தாள்.
அந்நாள் காலையில் பத்தாவது முறையாக…
“முத்ரா… நான் அனுப்புன டிசைன் செலக்ட் ஆகுமா..?”
என்று கேட்டவளை அழுதுவிடும் தொனியில் பார்த்தாள் முத்ரா.
“ஏன் ருத்ரா என்னாச்சு உனக்கு.. நானும் அத தான காலையில் இருந்து சொல்றேன்… எல்லாம் நல்லபடியா நடக்கும்… நீ ரிலாக்ஸ் ஆகு…”
என்று அவளும் பத்தாவது தரம் சொன்னாள்.
மேலும்..
“இதோ பாரு ருத்ரா.. முடிவு என்னவா வந்தாலும் ஏத்துக்கோ… இதுல இந்திய அளவுல இருக்குற எல்லா பெரிய பெரிய கம்பெனிகளும் போட்டி போட்டு டிசைன் அனுப்பிருப்பாங்க… ரொம்ப எதிர்பார்த்து அப்புறம் கஷ்டபடாத… இப்போவே எனக்கு நீ நடந்துக்குறது கொஞ்சம் பயமா இருக்கு”
என்றாள்.
தங்கை சொன்னதும் உண்மை தான் என்பதால் தன்னை எந்த முடிவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு தயார்படுத்த தொடங்கினாள்.
காலை 10 மணி…
அபி கன்ஸ்ட்ரக்ஷன்…
வந்த மின்னஞ்சலை அடுத்த நொடியே படித்த கார்முகிலன் முகம் முதலில் மகிழ்ந்து பின் குழம்பி இறுதியில் அதிர்ச்சியில் ஆழ்ந்தது.
அதன் உள்ளே உள்ள சமாசாரம் இது தான்… இவர்களது டிசைன் நன்றாக உள்ளதால் அவர்களை நேரில் வந்து காணுமாறும்… இவர்களுடன் இன்னும் 4 கம்பெனியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால்… யாருக்கு கொடுப்பது என்று நேரில் முடிவு செய்வதாகவும் இருந்தது.
கூடவே அந்த 4 கம்பெனி விவரங்களும் குறிப்பிட்டிருந்தது.
முதலில் தன் கம்பெனி செலக்ட் ஆகிவிட்டது என்று மகிழ்ந்த மனம்… நேரில் வர சொன்னதும்.. டிசைனிற்கு சொந்தக்காரியான ருத்ராவை எப்படி அழைத்து செல்வது என குழம்பியது… பின்னே அழைத்தது ஆந்திராவிற்கு ஆயிற்றே…
அந்த குழப்பத்தில் இருக்கும் போதே… அந்த நான்கு கம்பெனிகளில் ஒன்றாக விகாஷினி கன்ஸ்ட்ரக்ஷனும் இருப்பதை பார்த்து அதிர்ந்தான்.
இவ்வளவு நாள் தலைமறைவு போட்டி முடிந்து விடும் அல்லவா…? கூடவே இந்த ப்ராஜெக்ட்காக எந்த எல்லைக்கும் போக தயங்காது அந்த கம்பெனி என்பதை தெரியாதவனா இவன்…
அடுத்து என்ன என்ற குழப்பத்தில் ருத்ராவிற்கு ரிசல்ட் குறித்து அழைத்து சொல்ல மறந்தானோ…?
அங்கே ருத்ரா தன் டிசைனின் கதி என்னவென்று தெரியாமல் மண்டையை பிய்த்து கொண்டிருந்தாள்… என்ன தான் மனதை சமாதானம் பண்ணினாலும் அது தெரியும் வரை போராட்டம் தானே…
முகிலனிற்கு போன் செய்வதா…? வேண்டாமா…? என்று போனை வைத்து பட்டிமன்றம் நடத்தி கொண்டிருந்தவளை பார்த்த முத்ரா… கடுப்பாகி அவளது கைபேசியை பிடுங்கினாள்.
அடுத்ததாக அழைப்பதற்கு ரெடியாக இருந்த ‘கார்முகிலன் சார்’ என்ற எண்ணிற்கு அழைத்தும் விட்டாள்.
போனை ஸ்பீக்கரில் போட்டவள் பின்பே ருத்ராவிடம் தந்தாள்…
யோசனையில் இருந்த முகிலனை அழைத்தது மேசையில் இருந்த அவனது போன், ‘ருத்ரா கால்லிங்’ என்று…
அதை பார்த்த பின்பே ருத்ராவிற்கு அழைத்து சொல்லவில்லை என்பது நியாபகம் வர உடனே எடுத்து காதிற்கு கொடுத்தான்.
“ஹலோ ருத்ரா… நம்ம கம்பெனி செலக்ட் தான் பட்…”
என்றதோடு நிறுத்தினான்.
அவன் செலக்ட் என்றதும் மனதிற்குள் கத்தி கூசல் போட்டவள்… பட் என்றதும் பட்டென ஆப் ஆகினாள்.
மெதுவாக,
“என்ன சார்… ?”
என்று வினவ…
“நாம மட்டும் செலக்ட் இல்லை”
என்றான்
அவன் கூறியது புரியாமல் சகோதரிகள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர்.
“கூடவே இன்னும் 4 கம்பெனி இருக்கு… நேர்ல பாத பிறகு தான் முடிவு பண்ணுவாங்க”
என்றவன்… பின்பு தயங்கி..
“உன்னால வர முடியுமா..?”
என்றான்.
அவன் கேட்டதும் என்ன செய்வது என்று யோசித்தவள்…
“நான் வேணா அப்பாகிட்ட கேட்டு பார்க்கிறேன்… அவரு சரி சொன்னா வரேன்… இல்லை என்றால், உங்க கம்பெனி இன்ஜினியர் கிட்ட நான் தெளிவா ப்ராஜெக்ட் பற்றி சொல்கிறேன்.. அவரை அதே மாதிரி சொல்ல சொல்லுங்க”
என்றாள்.
முகிலனிற்கு அவளது பதில் பிடிக்கவில்லையோ என்னவோ… எப்போ பாரு அப்பா சொல்றது தான்.. தன் விருப்பம்னு ஒன்னும் இல்லையா இவளுக்கு என்று எண்ணினான். ( எல்லாரும் உன்னை மாதிரி இருப்பாங்களாடா..? )
பின்பு அவன்,
“வேண்டாம்.. வேண்டாம்.. நானே உங்க அப்பா கிட்ட பேசுறேன்… நீ அதை பற்றி எதுவும் சொல்லவேண்டாம்” என்றுவிட்டு போனை அணைத்தான்.
வடிவமைத்தது ருத்ரானு பிளான்ல சொல்லியாச்சு சோ… அவளை தான் கூப்பிட்டு போகணும்.. இல்லைனா அதுவே நமக்கு ஒரு மைனஸ் பாயிண்ட் ஆகிரும்.. என்று எண்ணிய முகிலன்… எப்படி அவளது அப்பாவிடம் எடுத்து சொல்வது என்று அவன் மூளையை கேட்க ஆரம்பித்தான்.
இதனோடே மற்ற வேலைகளையும் செய்து… ஜவுளிகடையையும் போய் பார்த்து வந்தான். மாலையாகவே அம்மா சீக்கிரம் வீட்டுக்கு வர சொன்னாங்க… என்னவென்று போய் பார்ப்போம் என்றவாறு வீட்டிற்கு கிளம்பினான்.
டஸ்டர் கார் அவர்கள் வீட்டு காம்பவுண்ட்க்குள் வந்தது தான் தாமதம்…
“அம்மா அண்ணா வந்தாச்சு..”
என்று கார்த்திகாயினியும்…
“அம்மா உங்க பெர்பார்மன்ஸ்ல அண்ணா கல்யாணத்துக்கு சம்மதிக்கணும்… ஆல் த பெஸ்ட்”
என்று கார்த்திக்கும் கூறி ஆளுக்கொரு சோபாவில் பதுங்கினர்.
அபிராமியோ… தான் முகிலனை கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கப்போவதாக சொன்னதை இவர்களிடம் கூறிய மாணிக்கவேலை முறைத்துக்கொண்டே…
“இருங்கடா… அவன் இப்போ தான் வரான்… போய் கொஞ்சம் ப்ரெஷ் ஆகி வரட்டும்.. நான் போய் அவனுக்கு டீ போட்டு எடுத்துட்டு வரேன்..”
என்றவாறு அடுப்படிக்குள் சென்றார்.
முகிலன் வீட்டுற்குள் வரும்பொழுது பார்த்தது என்றும் இல்லா திருநாளாக அமைதியாக அமர்ந்திருந்த கார்த்திக்கையும் கார்த்திகாயினியையும் தான்… அதுவும் அருகருகில்… அதுவே கூறியது அவன் எதிலோ மாட்ட போகிறான் என்று…
சிறுவயதில் இருந்து பார்க்கிறானே… அவனிற்கு தெரியாதா…? இவர்கள் எப்போ… எப்படி… எவ்வாறு… நடந்துக்கொள்வார்கள் என்று.
யோசனையோடே மாடிக்கு சென்றவன்… குளித்து உடை மாற்ற அப்பொழுது தான் அவனிற்கு தோன்றியது ஒருவேளை இது திருமணம் குறித்து இருக்குமோ… ? என்று..
எத்தனை நாள் ஓடி ஒழிய… என்றாவது ஒருநாள் பேசத்தானே வேண்டும் என்று எண்ணியவன்.. கீழே இறங்கி வந்தான்.
அவன் வந்த பிறகு, அனைவருக்கும் டீயோடு வந்த அவன் அன்னை, அதை அனைவருக்கும் கொடுத்து தானும் ஒன்றை எடுத்து அமர்ந்தார்.
ஆளுக்கொரு யோசனையில் சிறிது நேரம் அமைதியாக கழிந்தது.
அனைவரும் வழக்கத்தை விட சீக்கிரம் குடித்து முடிக்க… முகிலன் மட்டும் வழக்கத்தை விட மெதுவாக குடித்தான்… ( யோசனை பண்றாராம்…. )
அவன் குடித்து முடித்து கோப்பையை டீப்பாவில் வைத்தது தான் தாமதம்…
“முகிலா… நான் சொல்றத முழுசா கேட்டுட்டு பதில் சொல்லு…”
என்று ஆரம்பித்திருந்தார் அபிராமி.
அவனும் நான் உங்களுக்கு சளைத்தவனில்லை என்பதை உணர்த்தும் வகையில்… கல்யாணத்தை தவிர வேற ஏதாவது பேசுங்க..என்று கூற நினைத்து
“அம்…” என்றான்..
ஆனால் அந்தோ பரிதாபம்… அவன் அம்மாவோ முந்திக்கொண்டார்..
“நான் சொல்றேன்ல… முதல நான் பேசி முடிக்கிறேன்.. அப்புறம் நீ பேசு..”
என்றார் கண்டிப்பான கறார் குரலில்.
அந்த குரலில் இருந்த ஆளுமையில் ஒருகணம் ஆச்சர்யப்பட்டான் கார்முகிலன்… ரொம்ப வருடம் கழித்து கேட்கும் கண்டிப்பான குரல் அல்லவா…? கடைசியில் எப்போது கேட்டான்…? நியாபகமில்லை அவனிற்கு…
அதற்குள் அவர் தொடங்கிவிட்டார்…
“உனக்கு வயசு என்னனு நியாபகம் இருக்கா… இன்னும் 10 மாசம் போனா முப்பது… அப்படி என்ன உனக்கு கல்யாணத்து மேல விருப்பம் இல்ல.. யாரையாவது காதலிக்கிறியா…?”
என்றார்.
அவன், “இல்லைமா… வந்து..”
என்று கூற வருவதற்குள்…
அபிராமி,
“இல்லல… அப்புறம் என்ன… நாங்க உனக்கு பொண்ணு பார்த்தாச்சு.. எல்லாம் உனக்கும் தெரிஞ்ச பொண்ணு தான்… நீ சரின்னு ஒரு வார்த்தை சொன்னா நாங்க போய் அவங்க வீட்டுல பேசுவோம்…”
சொல்லலைனா.. என்று கேட்க வந்தவன்… அடுத்து அவர் கூறிய வாக்கியத்தில் பேச மறந்தான்.
“பொண்ணு வேற யாரும் இல்ல நீ காப்பற்றி வீட்டுக்கு கூட்டிட்டு போனியே… அந்த கருணா அண்ணா பொண்ணு ருத்ரா தான்…”
“இப்போ சொல்லு… உனக்கு ஓகே வா..? இல்லையா…?.. இல்லைனா… இதுக்கு அப்புறம் நான் உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன்… பண்ணவே மாட்டேன்டா நீ உன் இஷ்டத்துக்கு இரு…”
என்றார் கோபமாக.
அவன் என்ன பண்ணுவான்… அம்மா கோபமாக பேசியது ஒரு பக்கம் அதிர்ச்சி என்றால், ருத்ராவை திருமணம் செய்ய கூறியது இன்னொரு பக்கம் அதிர்ச்சி.
பதில் கூறாமல் அழுத்தமாக அமர்ந்தவனை கண்டு அபிராமிக்கே பயம் வந்தது… பின்னே வேணாம் என்று கூறிவிட்டால்… இத்தனை நாள் கண்ணாடி முன் நின்று பலமுறை ஒத்திகை பார்த்தது வீணாகி விடுமே…
அபிராமி கணவனை கண்ணால் துணைக்கழைத்தார்.
அவரும் முகிலனிடம்..
“அதான் அம்மா இவ்வளவு தூரம் கேட்குறால… ஏதாவது பதில் சொல்லுப்பா…”
என்றார்.
அவரை நிமிர்ந்து பார்த்த முகிலன்…
“எனக்கு ஓகேப்பா…” என்றான்…
பின்பு,
“அதை நான் கேட்டேன்டா..!!!”
என்ற அம்மாவிடமும்,
“உங்க இஷ்டம்மா..”
என்று விட்டு படி ஏறி தன்னறைக்கு சென்றுவிட்டான்.
அவன் சென்றதும்
“ஒஹ்….!!!!!!!”
என்று சத்தமிட்டவாறு வந்து தன் அம்மாவை கட்டி கொண்டனர் கார்த்திக்கும் கார்த்திகாயினியும்.
“நிஜமாவே அவன் சம்மதிச்சிட்டாங்க… இது தெரிஞ்சிருந்தா நான் கம்மியா ப்ராக்டிஸ் பண்ணிருப்பேனே…”
என்றார் அபிராமி மாணிக்கவேலிடம்.
அதை கேட்டு மற்றவர்கள் அடக்க மாட்டாமல் சிரிக்க ஆரம்பித்தனர்.