Vathsala Ragavan Priyangaludan Mugilan- 11
Vathsala Ragavan Priyangaludan Mugilan- 11
ப்ரியங்களுடன்…. முகிலன் 11
ஊட்டியை தாண்டி இருபது கிலோமீட்டர் தொலைவில் இருந்தது அவனது கெஸ்ட் ஹவுஸ். வழி நெடுகிலும் சைப்ரெஸ் மரங்களும், யூகலிப்டஸ் மரங்களும் அதிலிருக்கும் வண்டுகளின் ரீங்கரததையும் பறவைகளின்
மெட்ராஸில் இருக்கும் அவனது வீட்டு தோட்டமே அழகு என அடிக்கடி ரசிப்பாள் இவள். அதை விட நூறு மடங்கு அழகை தாங்கி இருந்தது இந்த கெஸ்ட் ஹவுசும் தோட்டமும்.
எங்கும் பசுமையும், குளுமையும் ஆட்சி செய்துக்கொண்டிருக்க மாசில்லாத குளிர் காற்றில் யுகலிப்டஸ் வாசமும் கலந்து தாலாட்ட லேசான சாரல் மழை சிலிர்க்க வைக்க விழிகளில் ஊஞ்சலாடிய ரசிப்பின் பாவத்துடன் இறங்கினாள் மீரா.
எல்லாவற்றுக்கும் மேலாக அந்த கெஸ்ட் ஹவுசின் கண்ணாடி ஜன்னல்களின் வழியே தெரிந்த அருவியும், மலைகளும், பள்ளத்தாக்குகளும் அவள் மனதை கொள்ளையடித்து இருந்தன.
இது எதையும் பெரிதாக ரசித்து விடவில்லை மாதவன். அவன் எண்ணம் முழுவதும் அந்த ஷூட்டிங்கிலேயே இருந்தது.
‘எங்கேடா அண்ணன் ஷூட்டிங்’ திரும்ப திரும்ப மூன்று நான்கு முறை கேட்ட பிறகும் சரியாக பதில் சொல்லவில்லைதான் கண்ணன்.
அன்று இரவுக்குள் ஊட்டி ஏரியில் ஒரு முறை படகு சவாரி செய்துவிட்டு வந்தாயிற்று. பைக்காரா அருவியை ஒரு முறை சுற்றிவிட்டு வந்தாயிற்று.
‘தம்பிக்கு எந்த ஊரு படம் பார்த்தியா? அதிலே காதலின் தீபம் ஒன்று பாட்டு இங்கேதான் எடுத்தாங்க’ கண்ணன் சொன்ன கூடுதல் தகவலில் அந்த அருவியை கூடுதல் ரசிப்புடன் பார்த்திருந்தாள் மீரா.
இரவு அணிந்திருந்த ஸ்வெட்டரையும் தாண்டி ஊசிப்போட்டுக்கொண்டிருந்தது அக்டோபர் மாத ஊட்டி குளிர். உடலில் லேசான நடுக்கம் கூட வந்திருந்தது அப்பாவும், அம்மாவும் அவர்கள் அறையில் உறங்கிவிட, இங்கே அந்த கெஸ்ட் ஹவுசின் தோட்டத்தில் இருந்த புல்தரையில் அமர்ந்திருந்தனர் நண்பர்கள் இருவரும்.
அந்த தோட்டத்தை ஒட்டிய அறையை ஒட்டிய பால்கனியில் இருந்த சோபாவில் அமர்ந்திருந்தாள் மீரா. அவள்மடியில் இருந்த அந்த டேப் ரெகார்டரில் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன.
அங்கே அமர்ந்து அவர்கள் இருவரையும் கண்களால் அளந்துக்கொண்டிருந்தாள் அவள். அவர்கள் இருவருக்கும் இடையிலிருந்த ஆழமான நட்பும் பாசமும் அவர்கள் கலகலத்து சிரித்து அவ்வபோது தோள்கள் அணைத்துக்கொண்டு பேசிக்கொண்ட விதத்திலேயே புரிந்தது அவளுக்கு.
அங்கிருந்து சில மரக்குச்சிகளை, சுள்ளிகளை தேடி எடுத்துக்கொண்டு வந்து குவித்தான் கண்ணன். சட்டென தனிச்சையாய் தனது பேக்கட்டில் இருந்த தீப்பெட்டியை எடுத்தான் மாதவன். அதைப்பார்த்த கண்ணனின் கண்களில் கனல்.
‘இல்லடா. இல்லடா. சும்மா தீப்பெட்டி மட்டும் இருக்கு’ சமாளித்தான் மாதவன். இடம் வலமாக தலை அசைத்தான் கண்ணன்.
‘ஏற்கனவே நிறைய தடவை சொல்லிட்டேன். இதனாலே என்ன என்ன நடக்க போகுதுன்னு உனக்கு சொல்லிட்டேன். நீ என் வாழ்க்கையும் சேர்த்து அழிக்குற. எப்பவுமே கண்ணன் சொன்னா சொன்னதுதான் ஞாபகம் வெச்சுக்கோ’ என்றபடியே அவனிடமிருந்து தீப்பெட்டியை வாங்கி தீயை பற்ற வைத்தான் கண்ணன்.
தீ பற்றி எரிய ஆரம்பித்தது. இத்தனை நேரம் அவர்களிடமிருந்த அந்த கலகலப்பு சட்டென காணாமல் போயிருந்தது. பேசாமல் நெருப்பின் மீது சில நிமிடங்கள் கையை காட்டிய கண்ணன் பின்னர் கண்களை மூடி அப்படியே தரையில் படுத்துக்கொண்டான்.
இந்த இறுக்கத்தை எப்படி கலைக்க என்று யோசித்த மாதவன் சட்டென மீராவின் பக்கம் திரும்பி அவளை பார்த்து வாவென கையசைத்தான். கொஞ்சம் திகைத்து மறுப்பாக தலை அசைத்தாள் மீரா.
‘பச்.. வா..’ மறுபடியும் இவன் அழைக்க வேறே வழி இல்லாமல் எழுந்தவள் அந்த டேப் ரெகார்டருடன் அவர்கள் அருகில் நெருப்பின் முன்னால் அமர்ந்தாள். சட்டென மலர்ச்சியுடன் எழுந்து அமர்ந்தான் கண்ணன்.
அவனுடைய எல்லா வருத்தங்களுக்கும மீராதான் மருந்து. மீராதான் அவனது வடிகால். மீராதான் அவனது வாழ்க்கையின் பிடிப்பு என அறிந்தவன்தானே மாதவன். மாதவனும், கண்ணனும் அருகருகே. மாதவனின் அருகில் மீரா.
‘திரும்ப திரும்ப இந்த இதயக்கோவில் படம் பாட்டுத்தானா? சூழ்நிலையை இயல்பாக்க முயன்றான் மாதவன்.
‘எவ்வளவு அருமையா இருக்கு தெரியுமா? அப்படியே உயிரோட கலந்து போறா மாதிரி இருக்கு.’ அவள் சொல்ல மாதவன் கண்ணனின் முகம் பார்க்க அதில் வெறுமை மட்டுமே குடி இருந்தது. நடுக்கும் குளிரை குறைக்க நெருப்பின் மீதே கைகளை காட்டிக்கொண்டு அதையே வெறித்திருந்தான். என்னனவோ உறுத்தல்கள் மாதவனின் மனதிற்குள்.
‘இதயம் ஒரு கோவில்’ பாடலுக்குள் கரைந்து உருகிக்கொண்டிருந்தார் எஸ்.பி பாலசுப்ரமணியன். அந்த பாடலுக்குள் கரைந்தது போலவே கண்ணனின் முகத்தில் இருந்த இறுக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் தளர்ந்தது. மூவரையுமே அந்த வரிகள் ஆட்கொண்டிருந்தன என்றுதான் சொல்ல வேண்டும்.
இப்போது மெதுவாய் விழிகளை திருப்பி மீராவின் பக்கம் பார்த்தான் கண்ணன். அவள் மெல்ல விழிகளை தாழ்த்திக்கொண்டாள்.
‘மீரா. உனக்கு கண்ணனை பிடிக்குமா மீரா? கேட்டே விட்டான் மாதவன். புருவங்கள் உயர கொஞ்சம் மலர்ச்சியுடன் திரும்பினான் கண்ணன்.
சடக்கென நிமிர்ந்தாள் மீரா. இருவரையும் மாற்றி மாற்றி பார்த்தவள் என்ன தோன்றியதோ அவசரமாக தலை அசைத்தாள் மீரா ‘எனக்கு வேண்டாம்’
‘வேணுமா வேண்டாமான்னு அவன் கேட்கலை. பிடிக்குமானு கேட்டான். அதுக்கு பதில் சொல்லு. நீ பிடிக்காதுனு சொல்ல மாட்டே. எனக்கு தெரியும்’ படபடத்தான் கண்ணன். இது கண்ணனின் வழக்கமான அவசரம்.
‘இருடா இரு’ என்று அவனை சற்றே ஆசுவாசப்படுத்தியவன் ‘ஏன் வேண்டாம்னு காரணம் சொல்லு மீரா’
‘எனக்கு வேண்டாம் ப்ளீஸ்..’ இப்போது இவள் குரல் இடறி தடுமாறியது.
‘அதுதான் ஏன்னு சொல்லு. இங்கே நாம மூணு பேர்தான் இருக்கோம். மனசிலே இருக்கறதை யாருக்கும் பயப்படாம தைரியமா சொல்லு’
‘இல்ல இவங்க அந்தஸ்திலே, பணத்திலே, முக்கியமா அழகிலே நிறத்திலே என்னை விட ரொம்ப மேலே இருக்காங்க. எனக்கு அவங்க வேணும்னு யோசிக்க கூட தகுதி இல்லை’
‘முட்டாள்தனமா பேசாதே’ பட்டென வெடித்தான் கண்ணன். உனக்கென்ன நீ தேவதைடி’
‘இல்ல. அதெல்லாம் இல்ல. என்னை யாருக்கும் பிடிக்காது. ப்ளீஸ்… என்னை விட்டுடுங்க ரெண்டு பேரும்’ எழப்போனாள் மீரா.
‘கொஞ்ச நேரம் உட்காரு மீரா’ அவள் கை பிடித்து இழுத்து அமர வைத்தான் மாதவன்.
இன்னும் பாடல் ஒலித்துக்கொண்டே இருக்க ‘உனக்கு என் மேலே நம்பிக்கை இல்லை. அதுக்கு மேலே உன் மேலேயே உனக்கு நம்பிக்கை இல்லை ரஸ்னா அதுதான் பிரச்சனை’ என்றான் கண்ணன் அவள் முகம் பார்த்து ‘உனக்கு ஏன் இத்தனை தாழ்வு மனப்பான்மை?’
‘இல்ல… அதெல்லாம் இல்லை… நான் போகணும்..’ இப்போது மீராவின் கண்களில் கண்ணீர் சேர்த்திருந்தது.
‘மீரா…’ இது மாதவன். ‘என் கண்ணன் மேலே எனக்கு ரொம்ப நம்பிக்கை இருக்கு மீரா. உன்னை நல்லா பார்த்துப்பான். நீ சரின்னு சொல்லு. உன் படிப்பு முடிஞ்சதும் வீட்டிலே பேசிட்டு நானே உன் கையை பிடிச்சு அவன் கையிலே கொடுக்கிறேன்’ என்றான் அவள் கை பற்றி தனது கைகளுக்குள் வைத்துக்கொண்டு.
‘ம்ஹூம்… வேண்டாம் மாதவ்..’ அவள் கண்ணீருடன் தலை அசைக்க
‘வேண்டாம்னு திரும்ப திரும்ப சொல்றியே தவிர நீ இதுவரைக்கும் என்னை பிடிக்கலைன்னு சொல்லலை’ என்றான் கண்ணன் அழுத்தமாக
‘இல்ல அது இல்ல கண்ணன்…’
‘அது இல்லன்னுதான் நானும் சொல்றேன்’ ‘அதென்னடா மாதவா படிப்பு முடிஞ்சதும்? இதோ இந்த நெருப்பு சாட்சியா இப்போவே அவ கையை என் கையிலே கொடுடா.’ என்றான் கண்ணன். கண்ணனுக்கு எப்போதும் அவசரம்.
மாதவன் கொஞ்சம் திகைக்க ‘கொடுன்னு சொல்றேன்லே’ மாதவனின் விழிகளை பார்த்து கண்ணன் சொல்ல ‘மீராவின் கண்ணன் மீராவிடமே’ பாடலின் வரிகள் ஒலித்துக்கொண்டிருக்க
சில நொடிகள் யோசித்தவன் தனது கைகளுக்குள் இருந்த அவன் கரத்தை எடுத்து கண்ணனின் கையில் கொடுத்தான் மாதவன். விழிகளில் நீர் வழிய கண்ணனின் முகம் பார்த்தாள் மீரா.
‘அக்னி சாட்சியா அக்னி என்ன அதை விட எனக்கு எங்க நட்பு மேலே நம்பிக்கை ஜாஸ்தி அந்த நட்பு சாட்சியா, என் மாதவன் சாட்சியா நீ என் பொண்டாட்டி. நான் இருக்கும் வரை உன் கண்ணிலே இனிமே தண்ணி வர விட மாட்டேன் ரஸ்னா.’ என்றபடியே அவள் கண்ணீரை துடைத்தான் கண்ணன். மூவருமே நெகிழ்ச்சியின் பிடியில் நின்றனர்.
‘இப்படி ஒரு பிடிப்பு கண்ணனின் வாழ்வில் கண்டிப்பாக தேவை. என்னை தாண்டியும் அவன் யோசிக்க வேண்டும்‘ மாதவன் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டான் தனக்குள்ளே.
சில நொடிகள் கழித்து கண்ணனிடமிருந்து கையை விடுவித்துக்கொண்டு எழுந்தாள் மீரா. மனதில் இருந்த ஒரு நிறைவை முகத்தில் கொஞ்சம் கூட காட்டிக்கொள்ளவில்லை அவள்.
‘எனக்கு தூங்கணும். நான் ரூமுக்கு போறேன்’’ பொதுப்படையாக சொல்லிவிட்டு டேப் ரெக்கார்டரை எடுத்துக்கொண்டு நகர்ந்தாள் அவள். கண்ணன், மாதவன் இருவர் விழிகளிலுமே ஈரம். அவள் போகும் திசையையே பார்த்திருந்தனர் இருவரும்.
மறுநாள் காலை குளித்து தயாராகி தோட்டத்துக்கு வந்து அலைஅலையாய் செல்லும் மேகங்களை வைத்துக்கொண்டு கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்த மலைத்தொடர்களை விழி அகற்றாமல் பார்த்திருந்தாள் மீரா. மனதிற்குள் நேற்றிரவின் நிகழ்வுகள் அலைஅலையாய்.
அப்போது திடீரென அவளை தாண்டி பாய்ந்தது அங்கிருந்த குரங்கு ஒன்று. எப்போதுமே மிருங்கங்களை பார்த்தால் அவளுக்கு பயம் அதிகம்தான். ‘அம்மா’ என அவள் அலறி சாய்ந்து பின்னால் விழுந்தது கண்ணனின் தோள்களாக இருந்தது.
‘குட் மார்னிங் மி டியர் ரஸ்னா பொண்டாட்டி’ என்றான் அவன். சடக்கென விலகி நகர்ந்தாள் இவள்.
‘அப்படி என்னடி பொண்டாட்டி பண்ணிடும் அந்த குரங்கு உன்னை?’ என்றான் அவள் கண்களுக்குள் பார்த்து ரசித்தபடியே.
‘ப்ளீஸ்… பொண்டாட்டி, பொண்டாட்டின்னு சொல்லாதீங்க. அதெல்லாம் சரியா வராது’ என்றாள் இவள் வேறு பக்கம் பார்த்தபடியே. ‘ நேத்து ரெண்டு பேரும் ஏதோ படபடன்னு பேசிட்டீங்க. அதெல்லாம் மறந்திருங்க. யோசிச்சு பார்த்தா உங்களுக்கே நான் சொல்றது சரின்னு புரியும்’
‘ப்ச்… மறுபடியும் உன் பாட்டை ஆரம்பிக்காத ரஸ்னா’ என்றான் இவன் கொஞ்சம் தளர்ந்த குரலில்.
‘நான் உண்மையைத்தான் சொல்றேன். நீங்க ரசிச்சு கல்யாணம் பண்ற அளவு என்கிட்டே ஒண்ணுமே இல்லை. வயசாக வயசாக இன்னும் அழகில்லாம போயிடுவேன். சொல்லிகுற மாதிரி படிப்போ திறமையோ கூட என்கிட்டே எதுவும் கிடையாது. கொஞ்ச நாள் போகப்போக உங்களுக்கும் என்னை பிடிக்காம போயிடும். விட்டுடுங்க என்னை.’ சொல்லிக்கொண்டே பார்வையை திருப்பியவளின் கண்களில் விழுந்தது அங்கிருந்த பெஞ்சின் மீது அவன் வைத்திருந்த கேமரா.
‘ரஸ்னா… நான் சொல்றதை நீ ஏன் நம்ப மாட்டேங்கிற. நான் என் நட்பு மேலே வாக்கு கொடுத்திருக்கேன்’ அவன் சொல்லிக்கொண்டே இருக்க
‘நீங்க என்ன சொன்னாலும் நான் இதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டேன். அந்த பேச்சை விடுங்க …இது உங்க கேமராவா?’ கேட்டவளின் விழிகளில் ஆர்வம்.
‘ஆமாம் ரஸ்னா..’ என்றான் கண்ணன். ‘இந்த காமெராவை வைத்து உன்னை எத்தனை படமெடுத்து வைத்திருக்கிறேன்’ சொல்லிக்கொள்ளவில்லை அவளிடம்..
‘இதிலே எப்படி போட்டோ எடுக்கணும்?’ அவள் கேட்க அவளுக்கு கற்றுக்கொடுத்தான் கண்ணன்.
இந்த கேமரா வெச்சு ‘நான் இந்த ட்ரிப்லே போட்டோ எடுத்திட்டு தரவா?’ அவள் ஆர்வம் பொங்க கேட்க
‘கண்டிப்பா. இப்போதான் உங்களை எல்லாம் போட்டோ எடுக்கலாம்னுதான் ஃப்லிம் லோட் பண்ணேன். என்ஜாய்’ இவன் அழகாய் புன்னகைக்க
‘தேங்க்ஸ்’ அழகாய் மலர்ந்தது இவள் முகம்.
அன்று மதியம். அன்று உதகையில் பார்க்க வேண்டிய இடங்களை சுற்றிவிட்டு அனைவரும் கெஸ்ட் ஹவுசுக்கு திரும்பி இருக்க
அமுதன் ஷூட்டிங் நடக்கும் இடத்தை கண்ணனை அரித்து எடுத்து தெரிந்துக்கொண்டான் மாதவன். அடுத்த நிமிடம் அவன் அங்கே கிளம்ப தயாராக அவனுடன் இணைந்துக்கொண்டான் கண்ணன். கண்டிப்பாய் இவனை அமுதனிடத்தில் தனியாய் அனுப்புவதாக இல்லை அவன். இவர்கள் இருவரும் காரில் கிளம்பும் நேரத்தில் எதிர்ப்பட்டாள் மீரா.
‘ஓய்… ரஸ்னா…‘நாங்க ஷூட்டிங் போறோம் நீ வரியா? கேட்டான் கண்ணன்.
‘சந்தோஷ தலை அசைப்புடன் ஏறிக்கொண்டாள் மீரா’ அங்கே அவளுக்கென காத்திருக்கும் விபரீதம் அறியாமல்.
அமுதனின் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்திருந்தனர் மூவரும். ஊட்டியை தாண்டி முப்பது கிலோமீட்டர் தொலைவில் இருந்த அந்த ஏரிக்கரையில் நடந்துக்கொண்டிருந்தது. அமுதன் பங்கு பெரும் ஒரு பாடல் காட்சி போலும். அங்கங்கே சில குதிரைகள் வேறே நின்றிருந்தன. அவைகளுக்கு இடையில் அமுதனும் கதாநாயகியும் நடனமாடவேண்டும்.
இதை பார்க்கும் போது கண்ணனுக்கு சிரிப்புதான் வந்தது. இவன் நடனமாடி யார் பார்ப்பதாம் என்று இருந்தது அவனுக்கு. ஆனால் மாதவனுக்கு தலை கால் புரியவில்லை. முதல் முறையாக அமுதனின் படப்பிடிப்புக்கு வந்திருக்கிறானே இவன் பின்னே இருக்காதா என்ன?
மூவரும் அருகருகே அமர்ந்துதான் படப்பிடிப்பை பார்த்துக்கொண்டிருந்தனர். கண்ணன் அமுதனின் தம்பி என்று பலருக்கு தெரியும் என்பதால் அங்கே அவனுக்கு தகுந்த மரியாதை கிடைக்கத்தான் செய்தது. குடிக்க மூவருக்கும் சூடாக காபி வர அதை குடித்துக்கொண்டே படப்படிப்பை பார்த்துக்கொண்டிருந்தனர்,
மாதவனுக்கு கண்ணன் ஒரு காவல் போல் அமர்ந்திருந்தான் என்றுதான் சொல்ல வேண்டும். அவனை யாரும், முக்கியமாக அமுதன் அவனை எதுவும் சொல்லிவிடக்கூடாது என்ற தவிப்பு அவனுக்கு.
‘டேய்… ஒரு தடவை அண்ணனை பார்த்து வணக்கம் சொல்லிட்டு வரவா? மாதவன் கேட்க முறைத்தான் கண்ணன்.
அமுதன் ஒரு முறை மாதவனை பார்த்துவிட்டு அலட்சியமாய் பார்வையை திருப்பிக்கொண்டது கண்ணுக்குள் கோபத்தை கிளறியது. இவன் கூட அண்ணனிடம்
‘இங்கேயே வாயை மூடிட்டு வேடிக்கை பார்த்திட்டு கிளம்பு. யாருக்கும் எந்த வணக்கமும் சொல்ல வேண்டாம்’ என்றான் கண்ணன் சூடாக.
அப்போது ‘ஹேய்…. மாதவ்… வெங்கட்ராமன் சித்தப்பா’. அங்கே அமர்ந்திருந்த இயக்குனரை பார்த்து கூவினாள் மீரா.
ஆம் அது இயக்குனர் வெங்கட்ராமன்தான். இது அவர் இயக்கிக்கொண்டிருக்கும் முதல் திரைப்படம்.
வெங்கட்ராமன் மாதவனின் இன்னொரு தாய்மாமன் என்ற போதும் அவரிடம் பெரிய நெருக்கம் இல்லைதான் இவனுக்கு. இவன் அவரிடம் எந்த உதவியும் கேட்டு வந்துவிடுவானோ என்ற பயத்திலேயே இவனிடம் எந்த நெருக்கமும் வைத்துக்கொள்ள விரும்புவதில்லை அவர்.
ஒரு நடன அசைவையே திரும்ப திரும்ப எடுத்துக்கொண்டிருக்க அலுப்பு தட்டியது கண்ணனுக்கு. அதற்குள் அவனுக்கு தெரிந்த நடிகன் ஒருவன் வந்துவிட எழுந்து சற்றே தள்ளி சென்று நின்றுக்கொண்டு அவனோடு பேசலானான்
இங்கே மாதவனுக்குள் பல நூறு யோசனைகள் பிரவாகம் எடுத்தன. ஒரு முறை ஒரே ஒரு முறை வெங்கட்ராமனிடம் சென்று நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டால் என்ன என்று தோன்றியது அவனுக்கு.
அமுதன் வாய்ப்பு வாங்கிக்கொடுப்பதென்றாலுமே சில நாட்கள் ஆகுமே. இவர் மனது வைத்தால் அமுதனுடன் நடிக்க உடனே வாய்ப்பு கிடைத்துவிடுமோ? அலையடித்தது மாதவனுக்குள்ளே.
கண்ணன் சற்றே விலகி சென்று நிற்கிறான் என்பதை பார்த்துவிட்டு வெங்கட்ராமனை நோக்கி நடந்தான்
‘மாமா..’ என்றான் அவரிடம் சென்று. மீராவும் அவன் பக்கத்தில் வந்து நின்றாள் அவர்களை பார்த்தவுடன் அடையாளம் தெரிந்ததுதான் வெங்கட்ராமனுக்கு. இருப்பினும் யாரென அடையாளம் தெரியாதவர் போலவே நெற்றி சுருக்கினார் அவர்.
‘என்னை தெரியலையா மாமா? நான் மாதவன். உங்க அக்கா பையன்’
‘ஓ…’ என்றபடியே திரும்பிக்கொண்டார் அவர்.
‘எப்படி இருக்கீங்க சித்தப்பா?’ கேட்டாள் மீரா.
‘நல்லா இருக்கேன்மா’ பெயருக்கு அவளை பார்த்து புன்னகைத்தார்.
அண்ணன் வீட்டோடு கடித போக்குவரத்து மட்டும் உண்டு அவருக்கு. மற்றபடி பெரிய ஒட்டுதல் எல்லாம் இல்லை. இவர்களை அப்படியே அலட்சிய படுத்திவிட்டு அங்கே இருந்த அவரது இணை இயக்குனருக்கு ஏதோ ஆணைகள் கொடுக்கலானார் அவர்.
‘மாதவ் வா போயிடலாம் நாம’ கிசுகிசுத்தாள் மீரா அவளுக்கு அங்கே நிற்க ஏனோ பிடிக்கவே இல்லைதான்.
‘இரு இரு அஞ்சு நிமஷம் இரு’ என்றான் மாதவன்.
பேச்சு சுவாரஸ்யத்தில் இதை கவனிக்கவே இல்லை கண்ணன். அவர் முடிக்கட்டும் என்று காத்திருந்து விட்டு சில நிமிடங்கள் கழித்து திரும்பினார் வெங்கட்ராமன்.
‘மாமா…’ என்றான் இவன் மறுபடியும்.’
‘ம்..’ என்றார் அவர். அந்த தொனியில் நிறைய எரிச்சல்
‘இந்த படத்திலே எனக்கு நடிக்க ஏதாவது ஒரு சான்ஸ் கிடைக்குமா மாமா?’
‘டேய்… போய் வேறே வேலை ஏதாவது இருந்தா பாரு போ. சினிமான்னா என்னன்னு உன் மூஞ்சிக்கெல்லாம் சினிமா ஆசை வேறேயா? அவர் குரலில் அத்தனை செருக்கும், இருமாப்பும்.
‘இல்ல மாமா ஒரே ஒரு சீன் போதும். எனக்கு அமுதன் சார்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். அதான் கேட்கறேன் மாமா’ இவன் கெஞ்சும் தொனியில் கேட்க எல்லார் முன்னிலையிலும் இவன் மாமா என்று அழைப்பதே அவருக்கு எரிச்சலை தந்துக்கொண்டிருக்க ஒரு சிலர் இவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டிருக்க
‘மாமா ப்ளீஸ் மாமா..’ இவன் மறுபடி கேட்க எரிச்சலின் உச்சியில் அவனை பளார் என அறைந்தே இருந்தார் வெங்கட்ராமன். அதனோடு அவனை பிடித்து அவர் ஒரு தள்ளு தள்ளிவிட இவன் தடுமாறி விழப்போக மாதவனை அப்படியே தாங்கிக்கொண்டது கண்ணனின் கரம். அடுத்த நொடி கண்ணனின் கை வண்ணத்தில் வெங்கட்ராமனின் கன்னம் பழுத்திருந்தது.
‘என்ன திமிரு இருந்தா என் மாதவன் மேலே கை வைப்பே?’
‘டேய்… டேய்… கண்ணா. அவர் என் மாமாதான்டா’ மாதவன் பதற
‘இருக்கட்டும். அவன் எவனா வேணும்னாலும் இருக்கட்டும். எனக்கென்ன? என்ன தைரியம் இருந்தா உன் மேலே கை வைப்பான் அவன்’ கர்ஜித்தான் கண்ணன். சுற்றி இருந்தவர்கள் அத்தனை பேரும் ஸ்தம்பித்து போயினர். படப்பிடிப்பே நின்று போனது அப்படியே.
‘சரி விடு வா நாம போகலாம்’ மாதவன் அவன் கையை பிடித்து இழுக்க
‘முடியாது. நான் இங்கிருந்து நகர மாட்டேன். அந்தாளை முதல்லே மன்னிப்பு கேட்க சொல்லு. அதுவரைக்கும் ஷூட்டிங் நடக்காது இங்கே’ உறுமினான் கண்ணன்.
சற்றே ஆடிப்போயிருந்தார் வெங்கட்ராமன் அவரது முதல் படம் இது. அவன் தனது அக்காவின் மகன் என்ற தைரியத்தில்தான் அவர் அவன் மீது கைவைத்தது. இப்படி அமுதனின் தம்பி அங்கு வந்து நிற்பான் என்று அவர் எதிர்பார்க்கவில்லை
‘கண்ணா வேண்டாம் கண்ணா. வா போகலாம்’ மாதவன் சொல்ல.
‘முடியாது..’ எகிறியது கண்ணனின் கோபம். அவன் கண்களில் கனல். கண்ணனை இப்படி பார்த்ததே இல்லை மீரா மெல்ல மெல்ல அங்கிருந்து பின்வாங்கினாள் அவள்.
நடப்பதை கவனித்தபடியே அமுதன் அவர்கள் அருகில் வந்தான் ‘என்னாச்சு கண்ணா’
‘முதல்லே உங்க டைரக்டரை இவன்கிட்டே மன்னிப்பு கேட்க சொல்லு’ என்றான் அதிகாரமாய்.
மன்னிப்பு கேட்பது பெரிய அவமானம் வெங்கட்ராமனுக்கு. அவர் மறுக்க அங்கே கண்ணனின் கோபம் ஏறிக்கொண்டிருக்க அங்கிருந்து மெல்ல நகர்ந்த மீரா அந்த ஏரியின் ஓரத்துக்கு வந்திருந்தாள். அந்த ஏரியின் ஓரத்தில் சில குதிரைகள் நின்றுக்கொண்டிருந்தன.
‘டே.ய்… அவர் அடிச்சதுக்கு நீயும் அடிச்சிட்டே இல்ல விடு கண்ணா’ மாதவனின் மன்றாடுதல்கள் எதுவுமே கண்ணனிடம் எடுபடவில்லை.
தனது பிடியிலிருந்து கொஞ்சமும் இறங்கி வரவில்லை கண்ணன். அமுதனும் தம்பியின் பக்கம் சாய்ந்துவிட அந்த சூழ்நிலையை சரி செய்ய வேறே வழி எதுவுமே தெரியவில்லை வெங்கட்ராமனுக்கு.
‘என்னை மன்னிச்சிடு மாதவா’ வெங்கட்ராமன் சொல்லிவிட ஒரு ஆழ்ந்த மூச்சுடன் கண்ணன் சற்று தளர அமுதனே ஆடிப்போயிருந்தான் கண்ணனின் கோபத்தையும் அவன் மாதவன் மீது வைத்திருக்கும் நட்பையும் பார்த்து.
இங்கே குதிரைகளின் அருகில் மீரா வந்து நிற்க அதில் ஒரு குதிரை இவள் அருகில் வர இவள் பயந்து பின்வாங்கி நகர அது இவளை துரத்த ஆரம்பிக்க பயந்து ஓடத்துவங்கினாள் அவள். இங்கே இருந்த களேபரத்தில் யாரும் அவளை கவனிக்கவில்லை.
சில நொடிகள் எந்த உள்ளுணர்வு அவனை எழுப்பியதோ திடீரென கண்ணனின் கண்கள் மீராவை தேட அவள் கண்ணுக்கு தட்டுப்படவில்லை.
‘மாதவா மீரா எங்கே?’ இவன் கேட்க அவனும் தேட அவசரமாக அவனை இழுத்துக்கொண்டு கூட்டத்திலிருந்து ஒதுங்கி வந்தவனின் கண்களில் தட்டுப்பட்டாள் தூரத்தில் ஓடிக்கொண்டிருந்த மீரா.
‘அய்யோ… குதிரை மீராவை..’ அவன் சொல்லி முடிப்பதற்குள் அப்படியே தடுமாறி ஏரிக்குள் விழுந்திருந்தாள் மீரா.
‘ர…ஸ்..னாஆஆஆஆஆஆஆ.’ கண்ணன் அலறிய குரல் மட்டும்தான் மாதவனுக்கு கேட்டது. அதன் பின் அவன் எப்போது நீருக்குள் குதித்தான் என மாதவனுக்கு தெரியவே இல்லை.
‘மீரா… மீரா.. மீரா’ வெனவே அலறியது ஏரிக்குள் நீந்திக்கொண்டிருந்தவனின் உள்ளமும், உயிரும்.
‘எங்கேடி போன பொண்டாட்டி’ தண்ணீருக்குள் அவனது கண்ணீரும் கலந்து ஓடியது.
‘ரஸ்னா… ரஸ்னா… என் ரஸ்னா…….’ நீருக்குள் துடித்து அலைந்த கைகளுக்கு கிடைத்தாள். கிடைத்தேவிட்டாள் அவன் ரஸ்னா…. ஏரியின் இன்னொரு பக்க கரைக்கு தூக்கி வந்தான் அவளை. அருகில் யாரும் தட்டுப்படவில்லை.
‘மூச்சு இருக்கிறதா அவளுக்கு? மூச்சு இருக்கிறதா? எதற்கும் கலங்காத கண்ணனின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து ஓடிக்கொண்டிருந்தது. மூச்சு இருந்ததுதான். இன்னும் கொஞ்சம் மூச்சு மிச்சமிருந்தது. அவளை இப்போது தூக்கிக்கொண்டு ஓடும் அளவுக்கு அருகில் எந்த மருத்துவமனையும் இல்லையே.
‘என்ன செய்ய? இப்போது என்ன செய்ய?
படபடப்புடன் அவனது பத்து நிமிட போராட்டம். மெல்ல விழிகளை திறந்தவளின் கண்களில் ‘ரஸ்னா.. ரஸ்னா.. கண் திறந்து பாருடி என்னை’ என தேம்பி தேம்பி அழுதுக்கொண்டிருக்கும் கண்ணன்தான் விழுந்தான்.
சற்று முன் நடந்தவைகள் ஒவ்வொன்றாய் அவள் நினைவுக்கு வர அங்கே அப்படி கோபத்தில் கொதித்த கண்ணனா இவன் என வியப்பாய் இருந்தது அவளுக்கு
சட்டென அவளை பார்த்து ‘ர…ஸ்……னா’ கண்ணீரினூடே மகிழ்ந்து சிரித்தான் கண்ணன். அடுத்த நொடி என்ன தோன்றியதோ அப்படியே அவளை கையில் அள்ளிக்கொண்டு அவள் முகத்தில் மாறி மாறி முத்தமிட்டான் அவன். அவனது ஒவ்வொரு முத்தமும் அவன் அவள் மீது வைத்திருக்கும் ஆழமான காதலை அவளிடம் சொல்லிக்கொண்டிருந்தன.
தொடரும்…