VET24

நிர்மூலம்

“வாடிடிடிடி… என் தமிழச்சி… வா… உனக்காகதான்டி… காத்திட்டிருக்கேன்” என்று பற்களை கடித்து கொண்டு அழுத்தம் கொடுத்து அழைத்தான்.

அவனை பார்த்ததுமே அவள் திடுக்கிட்டு நின்றாள். சற்று நேரம் முன்பு காதலோடு அவள் கரத்தை அழுந்த பிடித்து கொண்டவனா அவன் என்று உற்று நோக்கியவளுக்கு ஏமாற்றம்தான் மிச்சம். 

வீரேந்திரன் அவள் மீது கொண்ட அத்தனை கோபத்தையும் மொத்தமாய் அந்த அறையின் மீது காட்டி அதனை துவம்சம் செய்திருந்தான்.

அவன் உள்ளே நுழைந்ததும் அவனை அதிசியக்க வைத்த, திகைக்க வைத்த, ஏன் ஒரு நொடி அவள் மீதான மரியாதையை கூட அவனுக்கு அதிகரித்த வைத்தது அந்த அறை. 

யாரும் தெரியப்படுத்தாமலே அவளுக்கு அந்த அறை எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை பார்த்தவுடனே உணர்ந்தும் கொண்ட நொடி அந்த அறையை நிர்மூலமாக்கவும் முடிவெடுத்தான்.

தர்மா சம்பந்தப்பட்ட ஏதாவது ஒன்று அந்த அறையில் இருக்கிறதா என்று தேடுவது அவனுக்கு கிடைத்த ஒரு காரணம் மட்டுமே. அந்த காரணத்தை வைத்து கொண்டு அந்த அறையை முற்றிலுமாய் சர்வநாசம் செய்திருந்தான். 

தமிழ் மீண்டுமே ஒரு முறை அவள் அறையை சுற்றி பார்த்தாள்.

அவள் ரசித்து ரசித்து படித்த புத்தகங்கள் எல்லாம் கேட்பாரின்றி கீழே சரிந்து கிடந்தன.

அவள் தேடி தேடி சேகரித்த பழமையான வரலாற்றை பறைசாற்றும் பொக்கிஷங்கள் எல்லாம் துச்சமாக தூக்கி எறியபட்டிருந்தன.

அவள் படுக்கை கூட பாரபட்சமின்றி கலைத்தெறியபட்டிருந்தது.

தாய்மை உறவையே கண்டிராத அவளுக்கு அந்த அறைதான் பல நேரங்களில் அவளின் உணர்வுகளை சுமந்து கொண்ட தாய் மடி. அவள் தாத்தாவின் மறைவிற்கு பிறகு அந்த அறை அவள் உலகமாக மாறியிருந்தது.

இவையனைத்தும் தான் நேசித்து காதலித்தவை என்பதை உணர்ந்துதான் இப்படி செய்தானா ? என்ற கேள்வி எழ, அவளை பல இன்னல்களில் இருந்து தளர விடாமல் காத்து நின்ற கம்பீரமான பாரதியின் ஓவியத்தின் புறம் தன் பார்வையை திருப்பினாள். 

அந்த விழிகளுமே அவனின் செயலை தடுக்க முடியாமல் இயலாமையோடு பார்ப்பதாய் தோன்ற கோபத்தின் உச்சத்தை எட்டியிருந்தாள்.

யாரும் அவள் அனுமதியின்றி அந்த அறைக்குள் நுழைய கூடவிடமாட்டாள். அவளை தவிர்த்து வேறு யாரும் அங்குள்ள பொருள்களை தீண்டவும் விடாமல் அவள் பாதுகாத்து வைத்திருந்தாள். ஆனால் கொஞ்சமும் யோசிக்காமல் அவன் அத்தனையும் சேதாரம் செய்திருந்தான்.

அவன் தன் கணவனாகவே இருப்பினும் அதனை அவளால் ஏற்க முடியவில்லை. 

அதே நேரத்தில் தன் மொத்த கோபத்தையும் வெளிகாட்டி அந்த உறவை காயப்படுத்திவிடவும் மனம் வராமல் அந்நிலையை எப்படி எதிர்கொள்வது என்ற யோசித்து நின்றவளின் முகத்தில் சரேலன்று ஒரு புத்தகத்தை தூக்கி வீசியெறிந்து அவள் கவனத்தை திருப்பினான். 

அவனின் செயலால் அவமானப்பட்டும் காயப்பட்டும் நின்றவளிடம் “எங்கடி அந்த டைரி?” என்று கோபத்தோடு கேள்வி எழுப்பினான்.

அவனுக்கு எங்கனம் டைரியை பற்றி தெரிந்திருக்கும் என்று குழம்பியவள் அப்போதுதான் கீழே விழுந்த புத்தகத்தை கவனித்து அதிர்ந்து போனாள்.

அது அவளின் மரியாதைக்குரிய பாரதியார் கவிதைகள். அவன் என்ன செய்கிறோம் என்பதை உணர்ந்துதான் செய்கிறானா என்று எண்ணியவள் அதனை குனிந்து எடுக்க போனவளின் கண்களில் பட்டது இந்த வரிகள்தாம்.

‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே’

அதை படித்த நொடி அவள் உணர்வுகள் கிளர்த்தெழுந்துவிட அந்த புத்தகத்தை மூடி எடுத்து மேஜையின் அருகில் சென்று வைத்தாள். 

மீண்டுமே அவள் பார்வை பாரதியின் ஓவியத்தை காண அந்த கூர்மையான விழிகள் நிமர்வாய் பார்த்தபடி ‘எதை உடைத்தாலும் உன் மனோதிடத்தை அவனால் உடைத்தெறிய முடியாது’ என்று நம்பிக்கை தருவது போல தோன்றியது.

அவள் அப்படி சிந்தனையில் நிற்பதை பார்த்து பொறுமையிழந்தவன் அவள் கரத்தை பற்றி தன்னருகில் இழுத்து “கேட்டிட்டே இருக்கேன்… நீ பாட்டுக்கு திமிரா நின்னுட்டிருக்க … கில்டியாவே இல்லையாடி உனக்கு” என்றான்.

“எதுக்கு கில்டியாகனும் நான் என்ன தப்பு செஞ்சேன்”

“பொய் சொல்றதும் திருட்டுத்தனம் பன்றதெல்லாம் உனக்கு தப்பில்லையோ ?!”

“ஹ்ம்ம்ம்… என்னை பொறுத்த வரைக்கும் நியாயமான விஷயத்திற்காக இதெல்லாம் செஞ்சா தப்பில்லை” என்றவளை அவன் நிமிர்ந்து நோக்க அவள் சற்றும் அசராமல் நின்றிருந்தாள். 

வீரேந்திரன் கோபத்தோடு “உன் நியாயத்தை பத்தின விளக்கம் எல்லாம் ஒரு மண்ணும் வேணாம்… எனக்கு தேவை அந்த டைரி ?” என்று கேட்டான்.

“எந்த டைரி ?” என்று ரொம்பவும் நிதானமாய் கேட்டாள். 

“அடிங்க… அந்த தர்மா வீட்டில இருந்து நீ எடுத்து டைரி” கொந்தளிப்போடு கேட்டான்.

“யார் அந்த தர்மா வீர்?” என்று தெரியாதது போல் கேட்கவும்

அவன் பார்வையில் தீப்பொறி பறந்து கொண்டிருந்ததை தமிழும் கவனித்தாள். 

அவன் கோபத்தில் அவள் கழுத்தை இறுக்க “யார் தர்மான்னு உனக்கு தெரியவே தெரியாது…” என்று கேட்டான்.

அவன் பிடியில் அவள் கழுத்து சிக்கியிருந்த போதும் “தெரியாது” என்று பதிலளித்தாள்.

அவன் அவள் கழுத்தை விடுத்து வேகமாக பின்னோடு தள்ள, படுக்கையின் மீது வீழ்ந்தாள்.

வீரேந்திரன் ஒற்றை காலை அதன் மீது வைத்து கொண்டவன் மிரட்டலாய் பார்த்தபடி “நான் என்ன கேட்கிறேன் ? … எதை பத்தி கேட்கிறேன்னு சும்மா தெரியாத மாதிரி நடிக்காதே… கொன்றுவன்” என்று அவன் மிரட்ட அவள் சுதாரித்து எழுந்து உட்கார்ந்தபடி “உங்க போலீஸ் திமிரை காட்டிறீங்களா ?… உங்க மிரட்டலுக்கு எல்லாம் பயப்படற ஆள் நான் இல்ல” என்றாள்.

“என்ன பேசிட்டிருக்க? யார்கிட்ட பேசிட்டிருக்கோம்னு தெரிஞ்சிதான் பேசிறியா ?!” என்று கேட்டான்

“ஏன் தெரியாம? ஏசிபி ராஜ வீரேந்திர பூபதி… கரெக்ட்” என்று கேட்டாள்.

“இல்ல… இந்த நிமிஷம் வரைக்கும் நான் ஏசிபியா நடந்துக்கல… என்னை அப்படி நடந்துக்க வைச்சிருதா… அப்புறம் நீ பெரிய பெரிய விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்”

“அப்போ என் ரூமை இப்படி கலைச்சி போட்டது… ஏசிபி இல்ல… என் ஆருயிர் கணவன் வீர்… அப்படிதானே” என்று கேட்டாள்.

அவளின் கோபத்திற்கும் இந்த எகத்தாளத்திற்கும் காரணம் இந்த அறையின் மீது தான் செய்த தாக்குதல்களா என எண்ணும் போதே அவள் அவனை நோக்கி “உங்க யூனிபார்ம் கசங்கிட கூடாதுன்னு அப்படியே துடிச்சிங்க… அந்த மாதிரிதான் என் ரூமும்… இங்க இருக்கிற ஒவ்வொரு பொருளும் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்… இன்னும் கேட்டா எல்லாமே எனக்கு உயிர்… நான் பார்த்து பார்த்து சேகரிச்சது” என்று சொல்லும் போதே அவள் கண்கள் கலங்கிட, அவசரமாய் அந்த நீரை வெளியே வரவிடாமல் துடைத்தவள் “உங்களுக்கு என்ன கேட்கனும்னாலும் என்னை கூப்பிட்டு ஒரு வார்த்தை கேட்டிருக்கனும்… திஸ் இஸ் அட்டிராஸ்ஸியஸ்… என்னால ஜீரனிக்கவே முடியல… ஹ்ம்ம்… நானே உங்ககிட்ட எல்லாதையும் சொல்லிடலாம்னு நினைச்சேன்… ஆனா இப்ப மாட்டேன்… நீங்க தலைகீழா நின்னாலும் என்கிட்ட இருந்து ஒரு வார்த்தை வாங்க முடியாது… உங்களால என்ன பண்ண முடியுமே பண்ணுங்க… நான் அதை பேஃஸ் பண்ணிக்கிறேன்… போங்க” என்று சொல்லி முகத்தை திருப்பி கொண்டாள்.

வீரேந்திரன் அவள் சொன்னதை கேட்டு மேலும் கோபமடைந்தவனாய் “இதெல்லாம் உடைச்சிட்டன்னு உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு இல்ல… என் நம்பிக்கையை உடைச்சியே… எனக்கு எப்படிறி இருக்கும்?!!… அன்னைக்கு கீழே விழுந்த டாலரை பார்த்துட்டு எதுவும் தெரியாத மாதிரி இருந்துட்ட இல்ல… அதுவும் அரண்மனையில அன்னைக்கு நீ தாத்தா போட்டோவைதான் எடுக்க போனேன்னு… என்னமா நடிச்சடா… மொத்தத்தில என்னை முட்டாளக்கிட்ட இல்ல… ? ! என்னாலயும அதை ஜீரனிக்கவே முடியல” என்றவன் வேகமாய் சுவறே தெரியாத மாதிரி மாட்டியிருந்த அவளின் போட்டோ கலெக்ஷன்ஸில் ஒன்றை கைகளில் எடுத்தான்.

“வேண்டாம் வீர்… அதை வைச்சிருங்க” என்று அவள் சொல்லும் போதே அந்த போட்டோ கீழே விழுந்து கண்ணாடி துகள்கள் சிதறிட அவள் சொல்ல சொல்ல நிறுத்தாமல் வரிசையாய் ஒவ்வொரு படங்களாக சிதறடித்தான்.

அவனை நிறுத்த முடியாமல் செவிகளை பொத்தி கொண்டு கண்களையும் இறுகி மூடிக் கொண்டாள். 

அப்போது கதவை தட்டி ரகு “என்னாச்சுக்கா ?… என்ன சத்தம்?” என்று கேட்டான்.

தமிழ் பதட்டத்தோடு சென்று தன் தம்பி உள்ளே வந்துவிடுவானோ என எண்ணி கதவை தாளிட்டவள் “ஒண்ணுமில்ல ரகு” என்று சொல்லும் போதே வீரேந்திரன் ஒரு போட்டோவை வீம்புக்கென்றே உடைத்தான்.

“அக்கா கதவை திறங்க” அவன் அதிகாரமாக கேட்கவும் அவள் சமாளிப்பாக “போட்டோஸ் கைத்தவறி உடைஞ்சிடுச்சு” என்றாள்.

வீரேந்திரன் எகத்தாளமான புன்னகையோடு “சும்மா கதவை திறடி… என்னை உன் தம்பி என்னதான் பன்றான்னு பார்க்கலாம் ?” என்று சொல்லிக் கொண்டே இன்னொரு போட்டோவையும் கீழே போட்டு நொறுக்கினான்.

அந்த போட்டோக்கள் எல்லாம் அவள் ஆசையாய் பல தொல்பொருள் ஆய்வுகளிலும் கோவில்களிலும் எடுத்தவை.

ரவி விடாமல் “ஏதாச்சும் பிரச்சனையா ?” என்று கேட்டபடி வெளியே நின்று கதவை தட்டவும் வீரேந்திரன் புன்னகை ததும்ப “முடியல… உன் பாச மலர் தம்பி அப்படியே உருகிறான்… திடீர்னு அக்கா மேல பாசம் பொங்கி வழியுது” என்று பரிகாசமாய் உரைத்தவனை முறைத்தவள், ரவியிடம் தீர்க்கமாக “ரவி… நீ போ…. இது எங்க பெர்ஸன்ல்… தேவையில்லாம நீ தலையிடாதே” என்றாள்.

அதற்கு மேல் ரவியின் குரல் கேட்கவில்லை. 

தமிழ் வேகமாக தன் கணவனை நெருங்கி “உடையுங்க…ஏன் நிறுத்திட்டீங்க வீர்… உடைங்க… எல்லாமே நான் பார்த்து பார்த்து எடுத்த போட்டோஸ்… கன்டின்யூ பண்ணுங்க” என்று சொல்லி கையை கட்டி அவனை முறைத்தபடி நின்றாள்.

வீரேந்திரன் அவள் பிடிவாதத்தை உடைக்க முடியாத கடுப்போடு அவளை நெருங்கியவன் “அப்போ நீ எதுவும் சொல்ல மாட்ட ?!” என்று கேட்க ‘மாட்டேன்’ என்பது போல் தலையசைத்தாள்.

“இவ்வளவு நெஞ்சழுத்தம் ஆகாதுடி” என்று சொல்லவும் அவள் மௌனமாகவே நின்றாள்.

சற்று நேரம் மௌனமாய் நின்றவன் பின் 
வசீகரமான புன்னகையோடு “லாஸ்ட்டா என்கிட்ட இன்னொரு ஆயுதம் இருக்கு டார்லிங்… அதுல நீ விழுந்தே ஆகனும்” என்றான்.

அவள் புருவங்கள் முடிச்சிட அவனை பார்க்க வீரேந்திரன் அவள் கைப்பேசியை எடுத்து காண்பித்தான்.

இது எப்படி அவன் கையில் என்று யோசித்தவளிடம் “ரகுகிட்ட இப்பதான் ஜஸ்ட் நவ் பேசினேன்… நீ வேணா பேசிறியா?!” என்று கேட்கும் போதே அவள் விரைவாய் தன் கைப்பேசியை பறித்து கொண்டாள்.

“இனிமே வாங்கி… உன் ரீல் அந்து போச்சு” என்றான்.

ரகுவிடம் இவன் உண்மையிலேயே பேசினானா அல்லது போட்டு வாங்குகிறானா என அவள் மூளை வேகமாய் சிந்திக்க, டைரியை பற்றி அவனை தவிர வேறு யார் சொல்லி இருக்க கூடும் என எண்ணிக் கொண்டு நின்றவளை பார்த்தபடி “ம்ம்ம்… இப்பவாச்சும் சொல்றியா ?!” என்று கேட்டான்.

தமிழ் அவனை கோபமாய் நோக்கி “என் போஃனை எடுத்து எப்படி நீங்க பேசலாம்… கொஞ்சங் கூட மேனேர்ஸே தெரியாதா உங்களுக்கு” என்றாள்.

“ஓ தெரியுமே… அதான் நான் பேசல… ஜஸ்ட் கேட்டேன்… அந்த ராஸ்கல் ரகு பேசினதை… அவன் மட்டும் என் பக்கத்தில நின்னு அப்படி பேசி இருக்கனும்… என்கிட்ட சிக்கி சின்னபின்னாம ஆகியிருப்பான்” என்றான்.

‘அப்படி என்னத்தை பேசி தொலைச்சிருப்பான்’ என்று சிந்தித்தவளின் தலையை நிமிர்த்தி பார்க்க வைத்தவன் ஏளனத்தோடு “நீ எதுவும் சொல்ல வேண்டாம்… நான் அந்த ரகுவை உள்ளே வைச்சி மிதிமிதின்னு மிதிச்சா நீ சொல்ல வேண்டியதையும் சேர்த்து அவனே சொல்லிடுவான்” என்றான். 

தமிழ் யோசனையின்றி வீரேந்திரனின் சட்டையை பிடித்து நெருக்கியவள் “ரகு மேல கை வைச்சீங்க… நான் என்ன பண்ணுவேன்னே தெரியாது” என்றாள்.

“என்னடி பண்ணுவ… அப்படி அவன் யாருடி உனக்கு ?” என்று கேட்க தமிழ் கோபத்தோடு

“அவன் என்” என்று சொல்லும் போதே அவன் குறுக்கிட்டு “உன்…” என்று அழுத்தமாய் கேட்டான். 

அவள் பேச யத்தனிக்கும் போது மீண்டும் அவளை பேசவிடாமல் “ப்ரண்டுன்னு மட்டும் சொல்லி என்னை ஏமாத்த பார்க்காதே தமிழ்” என்றான். 

அவன் வார்த்தை அவளை அப்படியே பேசவிடாமல் ஊமையாக்கிவிட, அத்தனை நேரம் அவள் கொண்டிருந்த தைரியமெல்லாம் மொத்தமாய் உடைய பார்த்தது. அவள் அறையை நிர்மூலமாக்கியவன் இப்போதும் அவளையும் சேர்த்தே நிர்மூலம் செய்துவிட்டான்.

Thanks fot voting and commenting

இந்த முறை படிக்கும் ஒவ்வொருவரும் மறவாமல் vote பண்ணுங்கள். கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Comments


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!