VNE 21

இருவரும் அந்த செங்குத்தான பாதையில் கழியை ஊன்றி மெளனமாக ஏறிக் கொண்டிருந்தனர். ஷ்யாமின் முகத்தில் இருந்த புன்னகை மாறவே இல்லை. அதை கவனித்தவளின் முகத்திலும் அதே புன்னகை!

அவளது கேள்விகளுக்கு அவன் கூறிய பதிலும் கூட அவளுக்கு பிடித்திருந்தது. தன்னுடைய நிலையில் ஸ்திரமாக இருந்தது கூட அவனுக்கு அழகாக இருந்தது.

“நான் மாற என்ன இருக்கு மஹா? உன் மேல எனக்கு ரொம்ப மரியாதை வந்துருக்கு… உன்கிட்ட இருக்க அளவுக்கு நான் எங்கயும் வெளிப்படையா இருந்ததுமில்ல… பேசினதுமில்ல… அந்த கம்ஃபோர்ட் உன்கிட்ட மட்டும் தான் எனக்கு இருக்கு… அதை நான் மறுக்க மாட்டேன்… ஆனா உன்னை மாதிரியே எல்லாரும் இருக்க மாட்டாங்க…” என்றவன், அவளது கண்களை நேராக பார்த்து, “ஓபனா ஒரு விஷயம் சொல்லட்டா?” என்று கேட்டான்.

“ம்ம்ம்… சொல்லு…” கைகளை கட்டிக் கொண்டு அவனை நேராக பார்த்தாள்.

“ஜஸ்ட் ஒரு சினிமா சான்ஸ்க்காக என்னோட பெட்’டை ஷேர் பண்ணிகிட்ட பொண்ணுங்களை பார்த்தே எனக்கு பழகிடுச்சு மஹா. பைனான்ஸ்க்காக ஒருத்தியை அனுப்பி வைப்பாங்க… அதை நாம ஏன் வேண்டாம்ன்னு சொல்லணும்ன்னு நான் யூஸ் பண்ணிக்குவேன்… அவ்வளவுதான்…”

அவன் சொல்வதை கேட்டவளுக்கு இப்போது ஏனென்று தெரியாமல் வலித்தது. இவன் இந்தளவு வெளிப்படையாக கூற வேண்டுமா என்று விசாரமாக இருந்தது. ஆனால் அவன் தொடர்ந்தான்…

“அந்த பொண்ணுங்க கிட்ட மொராலிட்டியை நான் எதிர்பார்க்க முடியாது. இப்படியே தான் லைஃப் போயிட்டு இருக்கு… எல்லாத்தையும் தாண்டி ஏதோ ஒன்னை மனசு தேடுது… ஆனா அது என்னன்னு புரியல… அதை நானும் தேடிட்டே இருக்கேன்…” என்று பெரிய மூச்செடுத்து தன்னை நிலைப் படுத்திக் கொண்டவனை ஊன்றிப் பார்த்தாள்.

அவனது தேடல் என்னவென அவளுக்கு புரிந்தது. ஆனால் அவனுக்கு தான் புரிய வைப்பதை விட, அவனாக தானாக புரிந்து கொண்டால் மட்டுமே அதில் நிலையாக நிற்க முடியும் என்பதை புரிந்து கொண்டாள். அவனது இயல்புக்கு ஒரு இடத்தில் நிலையாக நிற்பது என்பது ஆகாத ஒன்று. அதையும் தாண்டி நிற்க வேண்டும் என்றால் அதை குறித்த புரிதல் அவசியம் எனப் பட்டது. சொல்லிக் கொடுத்த வார்த்தையும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளைக்கு?

யோசனையாக தன்னைப் பார்த்துக் கொண்டிருந்தவளை புருவத்தை உயர்த்தி என்னவென கேட்டான். அவள் புன்னகையோடு ‘ஒன்றுமில்லை’யென தலையை ஆட்டினாள்.

மீண்டும் அவர்களை மௌனம் ஆட்கொண்டது.

வரும் வழியில் கிடைத்த பழங்களை கூட மஹா உண்ணவில்லை. டெலிவரி பார்த்துவிட்டு குளிக்காமல் அவளால் உண்பதை நினைக்கவும் முடியவில்லை.

“குளிக்கணும் ஷ்யாம்… ரொம்ப கசகசப்பா இருக்கு…” அவள் தான் முதலில் மீண்டும் அந்த மௌனத்தை உடைத்தது.

அருகில் தான் ஏதேனும் அருவி இருக்கக் கூடும். அதன் சப்தமும், நீரோடு சேர்ந்த மண்வாசனையும் மூக்கை துளைத்தது.

“இன்னொரு பத்து நிமிஷம்… வந்துடும்…” என்றவன், கொடிகளை பிடித்துக் கொண்டு ஏறி அங்கிருந்த சமதளத்தில் நிற்க, அவள் அந்த கொடியை பிடித்து ஏற திணறினாள்.

“முடியலையா?”

“இல்ல… சமாளிச்சுடுவேன்…” என்றபடி மீண்டும் அவள் முயற்சிக்க, அவளால் முடியவில்லை.

கையை உயர்த்தி தொங்கிக் கொண்டிருந்த கொடியை பிடிக்க முயன்றவளை, இவன் கீழே குனிந்து ஒரே இழுவையில் தூக்க, அவள் பயத்தில் கத்த ஆரம்பித்து இருந்தாள்.

“ஏய்… என்னடா பண்ற?”

“ஷப்பா… கத்தாதடி… உன்னை தூக்கறதே பெரிய வேலை…” என்றபடி அவளது இடையை அழுத்தமாக பிடித்து அந்த சமதளத்தில் நிற்க வைக்க, தள்ளாடியபடி நின்றாள் மஹா.

“இப்ப ஓகே வா?” அவளது இடையை விடாமல் அவன் கேட்க,

“ஐயோ எப்படி தூக்கின? எனக்கு தலையே சுத்திடுச்சு…” அவன் இடையை பிடித்துக் கொண்டிருப்பதை உணராமல் அவள் கேட்க,

“என்ன பண்றது? இதுக்காக கிரேனா கொண்டு வர முடியும்?”

“கிரேனா? ஹலோ நான் ஒன்னும் அவ்வளவு வெய்ட் இல்ல…”

“என்ன? அறுபத்தி அஞ்சு கிலோ உனக்கு வெய்ட் இல்லையா? அதுவும் ஒரு குட்டை கத்தரிக்கா…” கிண்டலாக கூறியவனை முறைத்தாள்.

‘மறுபடியும் அவனது ஃபார்முக்கு வந்துட்டான். போச்சு… இனிமே ஒவ்வொன்னுக்கும் கவுண்ட்டர் கொடுக்கறதுக்குள்ள நமக்கு நாக்கு தள்ளுமே!’

அப்போதுதான் கவனித்தாள், அவனது கை இன்னும் இடையிலிருப்பதை! அதே முறைப்போடு அவனது கையை பட்டென எடுத்து விட, ஷ்யாம் சிரித்துக் கொண்டான்.

“சரி வா…” என்று அவளை அழைத்தவன், அழைத்துச் சென்றது ஒரு செங்குத்தான இறக்கத்திற்கு.

இறங்குவதற்கான பாதை வெறும் கற்களால் இருந்தது. அதுவும் அந்த ஈரப்பதத்தில் வழுக்குவது போல இருந்த பாதையில், அவனது கையை பிடித்துக் கொண்டே இறங்கியவளின் வாய் அவளையும் அறியாமல் கந்த சஷ்டி கவசத்தை முனுமுனுத்தது.

“என்ன சொல்ற மிர்ச்சி?” இறங்கிக்கொண்டே கேட்டவனின் முகத்தில் நையாண்டி சிரிப்பு.

“ம்ம்ம்… சஷ்டி கவசம்…”

“அதை சொன்னா என்னாகும்?”

“ஜஸ்ட் ஒரு தைரியத்துக்கு சொல்றேன்…”

“இப்ப நான் தான் உன்னை பத்திரமா கூட்டிட்டு போகணும்… அப்ப நான் தானே உன்னோட கடவுள்?” கண்ணை சிமிட்டிக் கொண்டு அவளை பார்த்து சிரித்தபடி அவன் கேட்ட கேள்வியில் முகத்தை அஷ்ட கோணலாக சுளித்தவள்,

“போஓஓறியா…” என்று இழுத்துக் கூற, சிரித்தபடி கீழே இறங்கினான்.

அடர்ந்த மரங்களுக்கிடையில் இறங்கியவர்கள் வந்தடைந்தது அமைதியாக விழுந்து கொண்டிருந்த ஒரு குட்டி அருவிக்கு!

சுற்றிலும் அரணாக அடர்ந்த மரங்களும், மலைகளும்.

நடுவே மனிதன் தீண்டா பால் அருவியாக விழுந்து கொண்டிருந்ததை பார்த்தவள்,

“வாவ்…” என்று வாயை பிளந்தாள்.ஆனால் அந்த அருவியில் குளிக்கவெல்லாம் இடமில்லை. நேராக நிலத்தையடைந்து அந்த பகுதி முழுவதும் பரந்து விரிந்த நீர்பரப்பாக மாறி, ஓடிக் கொண்டிருந்தது.

தெள்ள தெளிவான நீர். அதன் வாசனையை ஆழமாக இழுத்து முகர்ந்தாள்.

கீழே வந்தது முதல், அவளது ஆச்சரியங்களையும் மகிழ்வையும் ஒவ்வொரு கணமாக உள்வாங்கிக் கொண்டிருந்தான் ஷ்யாம்.

“பால்ஸ்ல குளிக்க முடியாதா ஷ்யாம்?” ஏக்கமாக கேட்டவளை சிரித்தபடி பார்த்தான்.

“முடியாது… அங்க போறது ரொம்ப டேஞ்சர்… ஸ்விம் பண்ணித்தான் போகணும்…” என்று கூற,

“ப்ச்… ஆனா இப்படி ஒரு இடத்தை எப்படி கண்டுபிடிச்ச? செம…” என்று சிலாகிக்க, அவன் இல்லாத காலரை தூக்கி விட்டு சிரித்தான்.

“டைம் கிடைக்கும் போதெல்லாம் வந்துடுவேன்… எனக்கு ரொம்ப பிடிச்ச பிளேஸ் இது…” அதே புன்னகையோடு அவன் கூற, அவள் புருவத்தை உயர்த்தினாள்.

“உனக்கு தகுந்த பிளேஸ் தான்…” என்று கேலியாக கூறியவளை கேள்வியாக பார்த்தான்.

“அதென்ன எனக்கு தகுந்த பிளேஸ்?” புருவத்தை உயர்த்தி கேட்க, அவள் சிரித்தபடி,

“வெரி ரொமாண்டிக்… லவ்லி பிளேஸ்… உன்னோட கேர்ள்ப்ரெண்ட்ஸ் கூட டைம் ஸ்பென்ட் பண்ண சூட்டபில் பிளேஸ்…” என்ற கிண்டலில் சற்று எரிச்சலும் ஒளிந்திருந்ததோ என்று எண்ண தோன்றியது அவனுக்கு. இதுவரை அவளிடம் இது போன்ற இடக்கான வார்த்தைகள் இல்லையே. அவளையும் அறியாமல் அந்த இடத்தில் அவளுக்கு எரிச்சல் வருகிறது என்பதை உணர்ந்து கொண்டவனுக்குள் என்னன்னெவோ ராகங்கள்!

“எஸ்… வெரி ரொமாண்டிக்… ஆனா ஒரு குரங்கை மட்டும் தான் இதுவரைக்கும் கூட்டிட்டு வந்துருக்கேன்… அது கூட ரொமான்ஸ் பண்ணவெல்லாம் முடியாது டார்லிங்…” என்று கண்ணடிக்க, ‘குரங்கா?’ என்று அவள் யோசிக்க, ‘அடியே அது நீதான்டி’ என்று அவளது மனசாட்சி குத்தியதில், அவனை குதறுவது போல முறைத்தாள்.

“நான் குரங்கா?” அதே கோபத்தோடு அவள் கேட்க,

“ச்சே… சொல்லாமையே தெரிஞ்சுருக்கே…” என்று அவன் சிரித்தான்.

“உனக்கு திமிர் ரொம்ப ஓவர்…”

“கேர்ள்ப்ரெண்ட்ஸ் கூட வந்துருக்கேனான்னு நீ நூல் விட்டு பார்த்தல்ல?”

“நானா? நூல் விட்டு பார்த்தேனா? வை? எதுக்கு? பிச்சுடுவேன் பிச்சு… நூலும் விடல… பட்டமும் விடல… போறியா நீ?!” வார்த்தைகளிலிருந்த மிரட்டல் குரலில் இல்லை. தன்னுடைய உள்ளர்த்தத்தை எப்படித்தான் இவன் புரிந்து கொள்கிறானோ என்று மண்டை காய்ந்தது அவளுக்கு.

அவளது தொனியிலேயே அவளது பதட்டம் தெரிய, சிரித்தபடி,

“சரி அதை விடு… ஸ்விம்மிங் தெரியுமா?” அவன் புருவத்தை உயர்த்தி கேட்க,

“ம்ம்ம் தெரியும்… ஓரளவுக்கு… ஸ்விம்மிங் பூல்ல நீந்தியிருக்கேன்…” வேறு புறம் பார்த்தபடிதான் பதில் கொடுத்தாள். அம்மணி கோபமா இருக்காங்களாமாம்!

“ஆஹா ஜஸ்ட் மிஸ்…” தலையை இவன் உலுக்கிக் கொள்ள,

“ஏன்?” புரியாமல் கேட்டாள்.

“தெரியலைன்னா சொல்லிக் கொடுக்கலாம்ல…” என்று இவன் கண்ணடிக்க,

“அடங்கவே மாட்டியா?” என்று அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, சுமந்து கொண்டிருந்த பேக்பேக்கை கழட்டி கீழே வைத்தவன், சற்று மறைவாக சென்று உடைகளை களைந்து விட்டு ஷார்ட்ஸ் மட்டும் அணிந்தபடி வந்தான். தோளில் ஒரு துண்டு!

திரும்பிப் பார்த்தவளுக்கு திக்கென்று இருந்தது.

அவளுக்கு அது போன்ற அனுபவங்கள் புதிதில்லை தான். சென்னையில் அவளுக்கு நீச்சல் சொல்லிக் கொடுத்ததே ஒரு ஆண் ட்ரைனர். அதோடு இவள் பெரும்பாலும் செல்வதும் ஜெனரல் பேட்ச் என்பதால் ஆண்களும் தான் நீந்திக் கொண்டிருப்பார்கள்.

அவையெல்லாம் ஒரு பொருட்டாக கூட நினைத்ததில்லை. அவளும் பிருந்தாவுமாக நீந்திவிட்டு வருவார்கள்.

ஆனால் இப்போதைய சூழ்நிலையும், ஷ்யாம் என்ற பெயரும், அவனை அந்த கோலத்தில் கண்டபோது அவளுக்குள் இனம் புரியாத திகில் சூழ்ந்தது.

அவளது அரண்ட முகத்தை பார்த்தவன், புருவத்தை ஏற்றி ஏனென்று கேட்க, அவள் ஒன்றுமில்லையென்று தலையாட்டினாள். ஆனால் அவளது எண்ணம் புரிந்து,

“வேறெப்படி ஸ்விம் பண்ணுவாங்க? வேண்ணா நீயும் ஷார்ட்ஸ் மட்டும் போட்டுட்டு ஸ்விம் பண்ணு டார்லிங்… ஐ டோன்ட் ஹேவ் எனி அப்ஜெக்ஷன்…” என்று கண்ணடிக்க, அவள் பல்லைக் கடித்தாள்.

“டேய்… வேண்டாம்… அடங்கிடு…”

“சான்ஸே இல்ல…” என்று சிரித்தவன், “சரி… நீயெப்படி ஸ்விம் பண்ண போற?”

“த்ரீ போர்த் தானே… நோ ப்ராப்ளம்…”

“ஓரத்துல ஷாலோவா இருக்கும்… உட்கார்ந்து குளிச்சுக்க… நான் டீப்க்கு போகணும்…” என்றபடி துண்டை அங்கிருந்த கல்லின் மேல் போட்டவன், உடலை வளைத்து நெளித்து உடற்பயிற்சி செய்யத் துவங்கினான்.

சங்கடமாக இவள் நெளிய துவங்கினாள். திரண்டிருந்த புஜங்களும் முறுக்கேறியிருந்த தசைகளும் முன் எப்போதும் இல்லாத அளவு அவளை தயங்க வைத்தன.

“வேற பக்கமா போய் எக்சர்சைஸ் பண்ணேன்…” கடைசியில் பொறுக்க முடியாமல் இவள் கூறிவிட, அவன் சிரித்தான்.

“ஏன்?”

“ஒரு பொண்ணு இருக்கான்னு நினைப்பு இருக்கா உனக்கு?” கடுப்பாக கேட்டவளை பார்த்தவன்,

“அது யாரு டார்லிங் புதுசா?” என்று கண்ணடிக்க,

“எருமை…” தனக்குள் கூறிக் கொண்டு பல்லைக் கடித்தாள்.

“வேணுன்னா நீயும் இப்படி எக்சர்சைஸ் பண்ணு… எனக்கொண்ணும் அப்ஜெக்ஷன் இல்ல… கொஞ்சம் கொழுப்பாவது குறையும்…”

அவனை முறைத்தபடி ஏரியை பார்த்தவாறு திரும்பி நின்று கொண்டு சூரிய நமஸ்காரத்தை ஆரம்பித்தாள். “ஏய் நூத்தியெட்டு நமஸ்காரத்தையாவது செய் மஹா… உடம்பு வெச்சுட்டே போகுது…” அவ்வப்போது பைரவி பாடும் பாடல் இப்போது காதில் கேட்டது. அதோடு இவனும் அவளுடைய பூசிய உடல்வாகை அவ்வப்போது கிண்டல் செய்ய, ஒரு முடிவோடு சூரிய நமஸ்காரத்தை ஆரம்பித்து இருந்தாள்.

அவளது முடிவெல்லாம் ஒரு சில தினத்துக்கு தான் என்பதும் அவளுக்கு தெரியும். ஆர்வமாக ஆரம்பிப்பாள், உடன் பிருந்தாவையும் சேர்த்துக் கொண்டு. ஆனால் அந்த ஆர்வம் ஒரு வாரத்திற்கு தான் தாக்கு பிடிக்கும். அதற்கும் மேல் தாக்குபிடிக்க வேண்டுமென்றால் பிருந்தாவின் வற்புறுத்தல் இருக்க வேண்டும்.

ஸ்விம்மிங், டிரைவிங், யோகா என்று அனைத்துமே அப்படிதான். அவள் பின்வாங்க வேறு ஒரு காரணத்தையும் சொல்ல முடியாது. அவளது சோம்பேறித்தனம் மட்டுமே!

காலையில் இழுத்து போர்த்திக் கொண்டு தூங்குவதை விடுத்து உடலை வளைக்க வேண்டுமா? என்ற கேள்வியே, அவளை இழுத்து போர்த்திக் கொள்ள சொல்லிவிடும்.

நாலாவது நாட்டடவோட கணக்கென்ன? ஷப்பா இந்த கணக்கையெல்லாம் ஞாபகம் வெச்சுக்கணுமா? ஊத்தி மூடு, பரத நாட்டியத்தை!

இந்த ஸ்பீடுக்கு எந்த கியரை போட? ச்சே இதையெல்லாம் எவன் தான் கண்டுபிடிச்சானோ? இந்த ட்ரைவிங்கே வேண்டாம் சாமி!

இப்படியாகத்தான் இருக்கும் அவளது ஆர்வங்களுக்கான முடிவுகள்! இந்த படு சோம்பேறியை தன்னை தவிர வேறு யாருமே மேய்க்க முடியாது என்பது பைரவியின் தீர்மானமான முடிவு. அப்படியாகப்பட்ட மஹாவை ஒருவன் சூரிய நமஸ்காரத்தை செய்ய வைத்திருக்கிறான் என்பதை அறிந்தால் அவருக்கு நெஞ்சு வலி கண்டுவிடும்.

உடலை வளைத்து ஒரு நான்கு முறை செய்தவள், ‘நூத்தியெட்டா? ஆளை விடு ஆத்தா’ என்றெண்ணியவாறு, அந்த ஏரியை கண்களால் அளந்தாள். படு அமர்களமாக பரந்து விரிந்திருந்தது. ஆழத்தை நினைத்து கொஞ்சம் கலக்கமாக இருந்தது. நீந்துவாளே தவிர, ஆழமென்றால் பயமுண்டு!

“இங்க எவ்வளவு ஆழமிருக்கும்?”

செருப்பைக் கழட்டி விட்டு நீரில் காலை வைத்துப் பார்த்தாள். சில்லென்று இருந்தது.

“எவ்வளவு டீப் போயிருக்க?” உடற்பயிற்சியை தொடர்ந்தபடியே அவன் கேட்க,

“ம்ம்ம்… ட்வெல்வ் ஃபீட் வரைக்கும் போயிருக்கேன்…” கொஞ்சம் பெருமையாகத்தான் கூறினாள். அதை கேட்டவனுக்கு புன்னகை மலர்ந்தது.

“என்ன ஸ்டைல் நல்லா வரும்?”

“மோஸ்ட்லி ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக் அன்ட் ஃப்ரீ ஸ்டைல்…”

“ஏன் பட்டர்ஃபளை ட்ரை பண்ண மாட்டியா?” சிரித்துக் கொண்டே கேட்டான். ஏனென்றால் நன்றாக நீந்துபவர்கள் மட்டுமே அந்த ஸ்டைலை தேர்ந்தெடுப்பர். நிறைய உழைப்பு தேவைப்படும் ஸ்டைல் அது என்பதால் மஹா அதை முயற்சித்துக் கூட பார்க்க மாட்டாள்.

“ம்ஹூம்… மாட்டேன்… எனக்கு வளையாது…” என்று அவளும் சிரித்தாள்.

“இங்க ஓரத்துல ஆழம் கம்மி… உள்ள போக போக ஆழம் அதிகம்.. ஒரு எழுபத்தியஞ்சு அடிக்கு மேல தான் இருக்கும்… எங்க ஸ்விம் பண்ணனும்ன்னு நீயே டிஸைட் பண்ணிக்க…” என்றவனை அதே பயத்தோடு பார்த்தாள்.

“அவ்வளவு ஆழம் நீ போவியா?”

“ம்ம்ம்… எனக்கு ரொம்ப பிடிக்கும்…” என்று கூறிவிட்டு, “மோர்ஓவர்…” என்று அவளது முகத்தை பார்த்தவன், “நான் ஸ்கூபா டைவிங் பண்ணுவேன்…” என்று முடிக்க, அவளது முகம் வெளுத்தது. ஸ்கூபா டைவிங் பற்றி கேள்வி பட்டிருந்தாலும், அதையெல்லாம் அவள் பரிட்சித்து பார்த்திருக்கிறாளா என்ன?

“உனக்கு பயமே கிடையாதா ஷ்யாம்?” கண்களை விரித்து அவள் பார்த்த தோரணையில் அவனது மனம் தடுக்கி விழுந்தது.

புன்னகையோடு, “பயமா? எனக்கா?” என்று சிரித்தவன், “இந்த மாதிரி அட்வெஞ்சர்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்…” என்று கூறிவிட்டு, நீருக்குள் சற்று தூரம் நடந்து சென்று நீந்தியவன், நீருக்கு நடுவில் இருந்த செங்குத்தான பாறை மேல் ஏறினான். கைகளை சேர்த்து ‘வி’ வடிவத்தில் உடலை குத்தீட்டியாக முன்னே வளைத்து மூச்சை இழுத்துப் பிடித்தவன், அம்பாக நீருக்குள் பாய்ந்தான்.

கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்களுக்கு அவன் வெளியே வரவே இல்லை.

பதட்டமாக அவள் ஏரியின் நடுவே பார்த்துக் கொண்டிருக்க, அவளுக்கருகில், ‘பே’ என்ற சப்தத்துடன் நீரை கிழித்துக் கொண்டு எழுந்தான்.

நடு ஏரியை பார்த்துக் கொண்டிருந்தவள், இவன் இங்கே வருவான் என்று எதிர்பார்க்காததால் பயந்து, ‘தொபுக்கடீர்’ என்று நீருக்குள் விழுந்தாள்.

அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. வாய்விட்டு சிரித்தான்.

மூச்சை இழுத்துப் பிடித்து நீரின் மேற்பரப்புக்கு வந்தவள், அவனை முறைத்தாள்.

“பிசாசே… அறிவில்ல? இப்படித்தான் பயமுறுத்துவியா?”

“பின்ன? ஸ்விம் பண்ணாம சுடுதண்ணியா பச்சத்தண்ணியான்னு நீ ரிசர்ச் பண்ணிட்டே இருக்க? அதான் ஒரு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்தேன்… எப்பூடி?” பெருமையாக இவன் கேட்க, குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தவளுக்கோ அவனது விளையாட்டு எரிச்சலாக இருந்தது.

“உன் வேலைய பார்த்துட்டு போயேன்… நான் எப்படியோ நீந்திட்டு போறேன்…” என்று கடுப்பைக் காட்ட,

“இதான்டி என் வேலையே…” என்று அவன் கண்ணடிக்க,

“என்ன ‘டீ’ யா? வேணான்டா ரொம்ப பண்ற” கைகளை குறுக்கிக்கொண்டு ஒற்றை விரலைக் காட்டி மஹா எச்சரிக்கை செய்ய,

“நீ டா சொன்ன, நானும் டீ சொன்னேன்…”

“நான் டா சொல்றதுக்கு முன்னாடியே நீ டீ சொன்ன…”

“ம்ம்ம்… நீ முன்னாடி சொன்ன டா வுக்கு இது காம்பென்சேஷன்… போடீ…”

“நான் வந்தேன்னா உன் மண்டை காலிடா…”

“வந்து தான் பாரேன்…” என்றவன் நடு ஏரியை நோக்கி நீந்த ஆரம்பித்தான்.

சிறு பிள்ளையை போல அவளிடம் வம்பளக்க அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. வேண்டுமென்றே அவளை தூண்டிவிட்டு அவன் முன்னேற,

“மாட்ன சங்கு தான்டா” என்று கத்தியபடி நீருக்குள் பாய்ந்து அவனை துரத்தினாள் மஹா, வேகமாக நீந்தியபடி.

“முடிஞ்சா பிடி…” என்று அவனும் கத்த,

“பிடிச்சுட்டா என்ன பண்ணுவ?” நீந்தியபடியே அவள் கத்திக் கேட்டாள்.

சற்றே வேகம் குறைந்து நிதானித்தான் ஷ்யாம். ‘இது இன்னும் நல்லா இருக்கே… கோக்குமாக்கா என்ன வேண்ணாலும் கேக்கலாமே…’ என்று சிரித்தவன்,

“உன்னை கொண்டு போய் உன் அண்ணன் கிட்ட விட்டுடறேன்…” என்றிவன் நல்ல பிள்ளையாய் பதில் கொடுக்க, இப்போது நிதானிப்பது அவளது முறையாயிற்று! ஐந்து நொடிகள் தான் அந்த நிதானமும். மீண்டும் வேகமெடுத்தவளை,

“பிடிக்கலன்னா?” என்று கேட்டு அவளை மீண்டும் நிதானிக்க வைத்தான். அதுவரை ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்கில் உள்ளும் புறமுமாக சென்று வந்தவன், இப்போது அப்படியே மல்லாந்து நீரின் மேல் படுத்துக் கொண்டு மிதக்க ஆரம்பித்து இருந்தான்.

‘பிடிக்கலன்னா என்ன செய்றது?’ என்று அவள் யோசித்துக் கொண்டிருக்க,

“என் கூடவே இருந்துடணும்… ஓகே வா டார்லிங்?” வானத்தை பார்த்தபடி இவன் கேட்க, அதை கேட்டவள் பல்லைக் கடித்தாள். நீரின் சுக தாலாட்டில் கண் மூடி, அந்த சூழ்நிலையை ரசித்தபடி மிதக்க துவங்கியிருந்தான் ஷ்யாம், அந்த நடு ஏரியில்!

“எருமை… இருடா வர்றேன்…” என்றபடி அவனை நோக்கி வேகமாக முன்னேறியவள், அப்போதுதான் சுற்றிலும் பார்த்தாள்.

கிட்டத்தட்ட ஏரியின் நடு மையத்தை நோக்கி வந்திருந்தாள். சுற்றிலும் நீர்… நீர்… நீர் மட்டுமே! அதை தவிர வேறொன்றுமில்லை. அது போன்றதொரு சூழ்நிலையில் அவளுக்கு நீந்தி பழக்கமே இல்லை. நீச்சல் குளத்தில் நீந்தியிருக்கிறாள். அவளே சொன்னது போல பனிரெண்டு அடி ஆழம் வரை மட்டுமே அங்கிருக்கும். அதோடு சுற்றிலும் பாதுகாப்பு வேறு. நொடி நேரம் மூழ்கினால் கூட உடனே உள்ளே குதித்து வெளியே இழுத்து வந்துவிடும் பயிற்சியாளர் என்ற பாதுகாப்பில் மட்டுமே நீந்தி வழக்கம்.

அதை விடுத்து இது போல, பல அடியாழமுள்ள ஏரியில் நீந்திய பழக்கமே இல்லாததால், சட்டென பயம் சூழ்ந்தது.

“ஐயோ… கடவுளே…கீழ எவ்ளோஓஓஓ ஆழம்?!” என்றெண்ணியவளுக்கு மூச்சடைத்தது.

நீச்சலில் மூச்சு மிக முக்கியமான ஆயுதம். அதை கட்டுப்படுத்துவதில் தான் நீந்தும் சூட்சுமமும் இருக்கிறது. சற்று பதட்டமடைந்து விட்டாலும் நன்கு பயின்றவர்கள் கூட நிலை தடுமாற வெகுவான சாத்தியங்கள் உண்டு.

ஆழத்தை நினைத்தவளுக்கு, மிக தீவிரமாக பயமுண்டாகி விட்டது.

அந்த ஒரு நொடி நேர பயம், அவளை புரட்டிப் போட்டது. கால்கள் சிக்கிக் கொண்டது போல பிரமை. கைகளால் நீரை அளக்க முடியவில்லை.

நடு ஏரியில் மூழ்க ஆரம்பித்தாள்!

Comments