vizhi23
vizhi23
மின்னல் விழியே 23
காலை நேர தென்றல் காற்று முகத்தில் மோத ஜன்னல் வெளியே
தெரிந்த இயற்கை அழகை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் திரு.
அவன் சென்னையில் இருந்த போது கூட இது போன்ற கிராமங்களுக்கு
சென்றதில்லை.. பள்ளி கல்லூரி என அனைத்துமே அவனுக்கு நகர
வாழ்க்கையே.. இப்போது சிட்டியில் இருந்து கிராமத்திற்கு வருவது புதுவித
அனுபவமாக இருந்தது.,,
சென்னை சிட்டியின் அவுட்டரில் இருந்தது அந்த ஊர்… கிராமம்
என்றும் சொல்ல முடியாமல் நகரம் என்றும் சொல்ல முடியாமல்
இடைப்பட்ட நிலையில் இருந்தது.. போக்குவரத்து வசதிகள் இருந்த
போதும் இயற்கையை அழிக்காமல் பசுமையாக காட்சியளித்தது. சுற்றிலும்
பச்சை போர்வையை போர்த்தியது போல் இருந்த அழகு சொட்டு
சொட்டாய் திருவினுள் இறங்கியது.. அதைவிட தன்னருகே தன் தோள்
மேல் சாய்ந்நவாறு தூங்கிக் கொண்டிருந்த மனைவியே அவனை அதிகம்
கவர்ந்தாள்…
“பிடிவாதக்காரி!!!!” மெல்ல முணுமுணுத்தவன் வேனின்
குலுங்கலுக்கேற்ப தகதிமிதா ஆடிக் கொண்டிருந்தவளின் தலையை
தன்னோடு இறுக்கிக் கொண்டான்…
வினுவின் மொத்த குடும்பமும் வினுவின் தாய் மாமன் வீட்டிற்கு
வேனில் சென்றுக் கொண்டிருந்தது.. அனைவரும் சீட்டில் சாய்ந்தவாறு
தூங்கிக் கொண்டிருக்க.. திரு மட்டும் உறங்காமல் வெளியே தெரிந்த
அழகையும் மனைவியின் அழகையும் ரசித்துக் கொண்டிருந்தான்…
“எவ்வளவு கோபம் வருதுடி உனக்கு.. முன்னாடி இந்த
கோபத்தையெல்லாம் எங்கடி ஒளிச்சி வச்சிருந்த??? எப்பவும் ஈஈஈஈ ன்னு
பல்ல காட்டிட்டு இருக்கிற அந்த வினு எங்க போனா???” தோளில் துயில்
கொண்டிருக்கும் மனைவியை மனதுக்குள் செல்லமாக திட்டியவன்
அவனது வலது கையால் அவள் கன்னத்தில் அடிப்பது போல் பாவனை
செய்ய, அவனுக்கே அவனது சிறுப்பிள்ளைத்தனமான செய்கையில் சிரிப்பு
வந்தது..
சிரிப்பை கஷ்டப்பட்டு விழுங்கியவன் தன் மேல் ஊசி குத்துவது
போன்ற உணர்வில் திரும்பி பார்த்தான்… விக்கி தான் அவனை உஷ்னமாக
முறைத்துக் கொண்டிருந்தான்….
விக்கியை பார்த்ததும் ஓங்கிய கையை இறக்கியவன் மீண்டும்
வெளியே பார்க்க.. இப்போது முகம் தாராளமாக சிரிப்பில் விகசித்தது
திருவிற்கு…
நேற்று இரவு மொட்டை மாடிக்கு பூட்டு போட்டு பூட்டிவிட்டு, “இனி
யாரு மொட்டை மாடில தூங்குறிங்கன்னு பார்க்கிறேன்” என்று தனக்கு
தானே வீர வசனம் பேசிவிட்டு சென்றவனை பார்த்ததில் இருந்து
திருவால் சிரிப்பை அடக்க முடியவில்லை… அதை வினுவிடமும் சொல்லி
அவன் சிரிக்க, அவன் மனைவி பொங்கிவிட்டாள்..
“என் தம்பி என் மேல இருக்கிற அக்கறையில் செய்றதை கிண்டல்
பண்ணுவியா நீ????” திருவின் தலை முடியை பிடித்து ஆட்டாத குறையாக
வினு எகிற, திரு வாய்விட்டு சிரித்தான்..
“ப்ளீஸ் புஜ்ஜி.,.. ஐ காண்ட் கன்ட்ரோல் மைசெல்ஃப்… ஹாஹாஹா…
அது எப்படி டா அவனால மட்டும் இப்படியெல்லாம் யோசிக்க முடியுது????
எனக்கு சிரிப்பு வருது… அவன் எப்பவுமே இப்படி தானா???? சச் ய
இன்டிரெஸ்டிங் பாய்…” திரு விக்கியை சிலாகிக்க,… வினு அவனை
அங்கிருந்த தலையனையால் அடித்து நொறுக்கிவிட்டாள்..
“வாயை மூடிட்டு தூங்கு டா…” என்றவள் கோபமாக கட்டிலில் ஒரு
ஓரத்தில் சென்று படுத்துக் கொள்ள, திரு சிரிப்பதை விடுத்து அவளை
ஒட்டியவாறு கட்டிலில் சென்று படுத்துக் கொண்டான்..
“ப்ச்ச் தள்ளி படு…” அவனை அதட்டியவள் நகர்ந்து படுக்க, அவன்
மேலும் அவளை ஒட்டி படுத்து அவள் அசைய முடியாதபடி அவள் மீது
கையால் சிறை பிடித்தான்…
“கோச்சிக்காத புஜ்ஜி.. இந்த ரெண்டு நாளா நான் எவ்வளவு
சிரிக்கிறேன் தெரியுமா??? இதுக்கு காரணம் நீயும் உன் குடும்பமும் தான்…”
அவன் சொல்லி முடிக்கவும் சட்டென்று திரும்பி அவன் வாயில் ஒரு
அடியை போட்டவள்,
“நம்ம குடும்பம்” என்றாள் அவன் சொன்னதை திருத்தி… அவள்
முகத்தை கூர்ந்து பார்த்தவன்,
“லவ் யூ டி…” என்க, வினுவும் அவனை கண்சிமிட்டாமல் பார்த்தாள்…
அவளின் மறுமொழிக்காக காத்திருந்தவன் அவன் எதுவும் கூறாது
போகவும், “திரும்ப சொல்ல மாட்டியா” என்றான் ஏக்கமாக…
அவள் எதுவும் கூறாமல் மீண்டும் திரும்பி படுத்துக் கொள்ள, அவன்
இன்னும் அவளை நெருங்கி அணைத்தவாறு,
“இந்த சிரிப்புக்கு காரணம் நீ தான்.. என் தங்கச்சி வாழ்க்கையை சரி
பண்ணி கொடுத்திருக்க.. அதுக்காக எவ்வளவு தேங்க்ஸ் சொன்னாலும்
போதாது.. ஆனா எனக்கு ஒரே ஒரு குறை தான்..” என்றவனின் கூற்றில்
வினு திரும்பாமல் புருவத்தை உயர்த்த,
அவள் கவனிக்கிறாள் என்று உணர்ந்தவன், “என் தங்கச்சி
வாழ்க்கையை சரி பண்ணி கொடுத்த மாதிரி அப்படியே என்
வாழ்க்கையையும் சரி பண்ணி கொடுடா புஜ்ஜி… என்னோட பழைய வினு
மறுபடியும் எனக்கு கிடைச்சிட்டா… நான் ரொம்ப ஹேப்பி ஆகிடுவேன்..
ப்ளீஸ் கொஞ்சம் சீக்கிரம் அவனை என்கூட சேர்த்து வையேன்..” பாவமாக
கூறியவனை காணும் போது வினுவிற்குள்ளும் ஏதோ ஒன்று அசையவே
செய்தது.. ஆனாலும் அவள் அமைதி காக்க, திரு அவளது கன்னத்தில்
முத்தமிட்டுவிட்டு அவளை விட்டு நகராமலே தூங்க ஆரம்பித்தான்…
வினு தான் அவனை எண்ணிக் கொண்டு வெகுநேரம்
விழித்திருந்தாள்..
மறுநாள் அதிகாலையிலே சுதா அனைவரையும் எழுப்பிவிட,
அனைவரும் கிளம்பி தாங்கள் ஏற்கனவே புக் செய்திருந்த வேனில்
சுதாவின் சொந்த ஊரிற்கு பயணப்பட்டுக் கொண்டிருந்தனர்…
காலையில் மீண்டும் விக்கியை பார்த்ததும் திருவிற்கு சிரிப்பு வர,
வினு முறைத்த முறைப்பில் வாயை மூடிக் கொண்டான்… வினுவோ
விக்கியின் கைகளை பிடித்துக் கொண்டு புன்னகைக்க, அந்த பாசக்காரனும்
தன் அக்காவின் கைகளை பத்திரமாக பிடித்துக் கொண்டான்…
வேனிலும் அவர்கள் இருவருமே சேர்ந்து ஒரு சீட்டில் அமர, திரு
தான் பாவாமாக அவளை பார்த்திருந்தான்.. அகில் தான் தனது நண்பனின்
பார்வையை உணர்ந்து விக்கியை மாறி உட்கார சொல்லிவிட்டு திருவை
வினுவின் அருகில் உட்கார வைத்தான்…
அனைத்தையும் அசைப்பபோட்டவாறே திரு வர, சுதாவின் தம்பி
இசக்கியின் வீடும் வந்திருந்தது… அனைவரும் இறங்க… அவர்களை
ஆரவாரமாக வரவேற்றார் இசக்கிமுத்து…
தலைமுடி ஆங்காங்கே நரைத்திருக்க.. பெரிய மீசையுடன் கம்பீரமாக
இருந்தவர் பார்ப்பதற்கு அப்படியே கிராமத்தான் போலவே இருந்தார்…
அவரை பார்த்ததும் ஹனி பயந்து வினுவின் இடுப்பில் ஏறிக்கொள்ள,
அவர் ஆர்ப்பாட்டமாக சிரித்தார்..
“என் பேத்தி என்னை பார்த்து பயப்படுறாளாக்கும்..” ஹனியை
பார்த்து கூறியவர் பின் தன் அக்காவின் கையை பற்றிக் கொள்ள,
திருவிற்கு வினுவையும் விக்கியையும் பார்ப்பது போல தான் இருந்தது..
“அக்கா… என்னை பார்க்க வர்றதுக்கு இவ்வளவு நாளாச்சுதா???”
தோற்றத்தில் கம்பீரமாக இருந்தாலும் கலங்கிவிட்டார் அந்த மனிதர்..
“உன் மாமாவை பத்தி தான் தெரியுமே டா… இப்போ கூட அவருக்கு
தெரியாம தான் வந்திருக்கோம்.. நடக்கிற விஷயமெல்லாம் தெரியும்
போது உன் அக்கா நிரந்திரமா இங்க வந்துட்டாலும்
ஆச்சரியப்படுறதுக்கில்லை…” சிரிப்போடு கூறினாலும் சுதாவின்
வார்த்தைகளில் சோகம் இழைப்போடியது…
“என்ன வார்த்தை பேசுற அக்கா?? அப்படியெல்லாம் மாமாவை
விட்டுருவோமா??? உன் தம்பி நான் இருக்கேன்… உன் வாழ்க்கை
என்னோட பொறுப்பாக்கும்.. நீ எதுக்கும் விசனப்படாத….” என்றவர் தன்
மீசையை நீவிக் கொள்ள… விக்கி அவரை சென்று கட்டித் தழுவினான்…
“போதும் மாமா.. எவ்வளவு நேரம் தான் உங்க அக்காவையே
கொஞ்சுவிங்க.. இந்த மருமகனையும் கொஞ்சம் கவனிங்க..” என்றவன் தன்
தாய்க்கும் மாமாவிற்கும் இடையில் நின்றுக் கொள்ள… அவர் அவனை
வாஞ்சையுடன் பார்த்தார்..
“வா ராசா.. உன்னை பார்க்காம தான் இந்த மாமா ஏங்கி
போய்டேன்…”
“பொய் சொல்லாதிங்க மாமா… அவனை பார்க்காம தான் ரெண்டு
ரவுண்டு வெயிட் போட்டுருக்கிங்க” என்றபடி வினு சென்று விக்கிக்கும்
அவளது மாமாவிற்கும் இடையில் நிற்க, அவள் கையில் இருந்த ஹனி
அவரின் மீசையை பார்த்து மிரண்டாள்..
“மம்மி.. ஹீ இஸ் எ ஏலியன்..” இசக்கியை பார்த்து பயந்தவாறு
ஹனி வினுவின் கழுத்தில் முகத்தை புதைத்துக் கொள்ள.. இசக்கி
அவளை வினுவின் கையில் இருந்து தூக்கினார்…
“ஆஆஆ.. மம்மி ஹெம்ப் மீ… ஏலியன்..ஏலியன்…!!! பக்கி மாமா!!!”
ஹனி அலற.. அவளை தன் முகத்துக்கு நேராக தூக்கியவர்..
“ஹாய் பேபி… ஐ யம் நாட் அ ஏலியன்.. யுவர் க்ரான்னி…” என்றவர்
அவளை தூக்கிப் போட்டு கேட்ச் பிடிக்க, அவள் கத்த ஆரம்பித்துவிட்டாள்…
“ஹனி குட்டி.. தாத்தா டா… பயப்படாதிங்க..” வினுவும் விக்கியும்
அவளை அமைதிபடுத்த அவளும் சற்று அமைதியாகி அவரின் கையில்
இருந்தாள்…
ஹனியை கையில் வைத்துக் கொண்டே அவர் ரித்தினையும்
மற்றொரு கையில் தூக்க, அவன் அவரோடு நன்றாகவே ஒட்டிக்
கொண்டான்… வாசலில் நின்றுக் கொண்டு அவர் அனைவரையும் நலம்
விசாரிக்க, வீட்டினுள் இருந்து ஆர்த்தி தட்டோடு வந்தார் அவரது மனைவி
பொன்னி…
நெற்றியில் பெரிய குங்கும பொட்டுடன்.. பட்டுப் புடவையில்
மங்களகராமாக இருந்தார் அவர்.. அவர்கள் அனைவரையும் பார்த்த பூரிப்பு
முகத்தில் அப்படியே தெரிய, அவரது கள்ளம் கபடமற்ற சிரிப்பே அவரை
பார்த்ததும் அனைவரின் மனதுக்குள் இதத்தை பரப்பியது…
“வாங்க அண்ணி வாங்க.. என் ராஜாப்பையன் எப்படி இருக்கான்???”
விக்கியை பார்த்து கேட்டவாறே வந்தவர் கணவனிடம் திரும்பி,
“பிள்ளைகளை மருமவ கையில குடுங்க.. ஆரத்தி சுத்தணும்..” என்க,
அவரும் மறுபேச்சில்லாமல் குழந்தைகளை சுமியின் கையிலும் வினுவின்
கையிலும் கொடுத்தார்…
அனைவரையும் ஒன்றாக நிறுத்தி ஆலம் சுற்றிய பின்னரே
அவர்களை வீட்டினுள் விட்டார் பொன்னி. கையில் இருந்த ஆரத்தி தட்டை
வேலைக்கார பெண்மணியிடம் ஒப்படைத்துவிட்டு வேகமாக சென்று
அனைவரிடமும் நலம் விசாரித்தார்…
அதிலும் திருவிடமும் சுமியிடமும் அவர் பல நாள் பழகியது போல்
பேச, அவர்கள் இருவரும் தான் என்ன பேசுவதென்று தெரியாமல்
தடுமாறினார்கள்…
“நாளைக்கே.. கோவிலுக்கு போய் பொங்கல் வச்சிடணும்.. குலசாமி
குறை தான் பிள்ளைங்களுக்கு இப்படி கஷ்டத்தை கொடுத்திருக்கு…”
வெள்ளந்தியாக பொன்னி கூற, இசக்கியும் ஒத்துக் கொண்டார்..
சிறிது நேரம் ஹாலில் அமர்ந்து பேசியவர்கள் அதன்பின்
தங்களுக்கென ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றனர்… தங்களது அறைக்கு
வந்ததும் திரு பொத்தென்று மெத்தையில் விழ, வினு சென்று
ஜன்னல்களை திறந்தாள்… ஏ,சி இல்லாமலே குளிர்ந்த காற்று அறையினுள்
வர, அதை ஆழந்து அனுபவித்தான் திரு…
“ஹ்ம்ம்.. சொர்க்கம் இப்படி தான் இருக்குமா இருக்கும் புஜ்ஜி மா..
அவ்வளவு சுகமா இருக்கு…” என்றவன் திரும்பி வினுவை பார்க்க, அவளும்
அவனை பார்த்து ஆமோதிப்பாய் புன்னகைத்தாள்…
“ம்ம் ஆமா அரசு.. இங்க கிடைக்கிற நிம்மதி வேற எங்கயும்
கிடைக்காது.. முன்னாடியெல்லாம் லீவுக்கு நானும் விக்கியும் இங்க ஓடி
வந்துடுவோம்….. ஆனா வளர்ந்த அப்புறம் எங்க அப்பா விடமாட்டாங்க..
அவர் இந்த மாதிரி எங்கயாச்சும் வெளியூர் போயிருக்க சமயம் நாங்க
தப்பிச்சி இங்க வந்துடுவோம்..மாமா ரொம்ப நல்லவங்க.. அவங்களுக்கு
குழந்தைங்க கிடையாது அதனால எங்க எல்லார் மேலயும் பாசம் ஜாஸ்தி.
அது விக்கின்னா ரெண்டு பேருக்குமே உயிரு”
அவள் கூறுவதை கேட்டவன் அந்த பாசமான தம்பதியினருக்கு
குழந்தை இல்லை என்றதும் அவர்களுக்காக வருந்தினான். “உங்க அப்பா
அவ்வளவு ஸ்ரிக்ட்டா புஜ்ஜி.. அத்தை கூட வெளிய வச்சி அதை தான்
சொன்னாங்க…ஏற்கனவே தன் தங்கையின் இந்த நிலைக்கு அவரும் ஒரு
காரணம் என அறிந்திருந்தாலும் அவனால் அவரை மொத்தமாக குறை
சொல்ல முடியவில்லை.. அகில் உறுதியாக நிற்காத போது அவரை
மட்டும் குற்றம் சொல்ல அவனுக்கு தோன்றவில்லை.. அதனால் தான்
அவர் இல்லாமல் திருமணம் நடத்த கூறி சுதா கேட்ட போதும் அவன்
சற்று தயங்கினான் ஆனால் சுதாவும் அகிலும் வற்புறுத்தவும் தான்
ஒத்துக் கொண்டான்..
“ஸ்ரிக்ட்டா??? நீ ஹிட்லருன்னா அவரு முசோலினி…. சரியான
முசுடு.. அவர் இருக்கிற டைம் எங்க வீடு ஜெயில் மாதிரி தான் இருக்கும்..
அவ்வளவு அமைதி.. ஹம்ம் நல்ல வேளை அந்த ஜெயில்ல இருந்து
தப்பிச்சி ஓடி வந்துட்டோம்..” வினு பெருமூச்சுவிட்டவாறு கூற, திரு
அவளை புரியாமல் பார்த்தான்..
“என்ன சொல்ற புஜ்ஜி?? ஓடி வந்திங்களா?? எதுக்கு???”
“ஓடி வராம போயிருந்தா என்னை இந்நேரம் அந்த சப்ப மூக்கு
ராம்க்கு கட்டி வச்சிருப்பாங்க…” வினு சலித்துக் கொள்ள, திரு யாரவன்
என்ற ரீதியில் பார்த்தான்.. அதையே அவன் அவளிடம் கேட்க,
“அவன் தான் எங்கப்பா எனக்கு பார்த்த மாப்பிள்ளை….எங்கப்பாவோட
பிஸ்னெஸ் பார்ட்னரோட பையன்.. சரியான பொறிக்கி.. அவன் கிட்ட
இருந்து தான் தப்பிச்சி வந்தோம்… என்றவள் அன்று நடந்த
அனைத்தையும் கூற, திரு வாய் பிளக்காத குறை தான்..
“அப்போ உன் அப்பா வந்ததும் அவனுக்கும் உனக்கும் கல்யாணம்
நடக்கிறதா இருந்துச்சா???”
“ச்சீய்.. அவனையெல்லாம் யாரு கல்யாணம் பண்ணிக்குவா… எனக்கு
இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு நானே நாலு தடவை
அவனை பார்த்து சொல்லிருக்கேன்.. ஆனா அந்த பைத்தியக்காரன்
என்கிட்ட… யார் கூட வேணும்னாலும் போ ஆனா என்னை கல்யாணம்
பண்ணிக்கோன்னு சொல்றான்.. டுபாக்கூர் தலையன்.. அதான் அங்கிருந்து
எஸ் ஆகிட்டோம்…” வினு முகத்தை சுழித்தவாறு கூற, திருவுக்குமே அந்த
முகம் தெரியாத ராம் மீது கோபம் வந்தது…
என்ன மனிதன் இவன்.. !!! அருவெறுப்பாக நினைத்தவன், “என்ன
இருந்தாலும் நான் அவனுக்கு தேங்க்ஸ் தான் சொல்லணும்… அவன்
கெட்டவனா இருந்ததுனால தான் நீ எனக்கு கிடைச்சிருக்க…” என்றவன்
தன் அருகில் அமர்ந்திருந்தவளின் மடியில் தலை வைத்து படுத்துக்
கொண்டான்…
அவ்வளவு நேரம் மடை திறந்த வெள்ளம் போல் பேசிக்
கொண்டிருந்தவள் சட்டென்று அமைதியாக, அவன் அவளை பார்த்தவாறு
படுத்திருந்தான்…
சரி உன் மாமா நிறைய படிச்சிருக்காங்களா??? அவர் ஆங்கிலத்தில்
உரையாடிதை வைத்து திரு கேட்க, வினுவும்,
“ஆமா.. பி.ஹெச்டி முடிச்சிருக்காங்க.. ஆனா கிராமத்தை விட்டு
போக மனமில்லாம இங்கயே தங்கிட்டாங்க..” என்றவள் அமைதியாக
அதற்குள் வெளியே வினுவை அவனது அம்மா அழைக்கும் சத்தம்
கேட்டது.. வினுவும் போகவா என்பது போல் அவனை பார்க்க, அவன்
நகர்ந்து படுத்துக் கொண்டான்.. வினுவும் அவனை பார்த்தவாறே
அங்கிருந்து சென்றாள்..
மறுநாள் அனைவரும் கோவிலுக்கு செல்ல தயாராக, வினு பட்டுப்
புடவையில் தேவதையாக மிளிர்ந்தாள்… சுமியும் புடவை அணிந்து வர,
அகில் யாரும் அறியாமல் அவளை ரசித்திருந்தான்… அனைவரும்
கோவிலுக்கு தேவையான பொருட்களை அவர்கள் நேற்று வந்திருந்த
வேனில் ஏற்றிக் கொண்டிருக்க, வினு அவளது மாமாவின் புல்லட் அருகே
நின்று அதை தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள்..
அவளது அப்பாவிற்கு என்றுமே அவளோடு விளையாடவோ, நேரம்
செலவழிக்கவோ நேரம் இருந்ததில்லை.. நிகிலும் அகிலும் தான்
தந்தையாக இருந்து அவளை பார்த்துக் கொள்வது… மற்ற பிள்ளைகளை
போல் தந்தையின் பைக்கின் முன்னால் அமர்ந்து செல்ல வேண்டும்
என்பது அவளது நீண்ட நாள் கனவு.. ஆனால் அவள் தந்தைக்கு இரண்டு
கார்கள் இருந்ததே தவிர பைக் இருந்ததில்லை.. நிகிலும் அகிலும் பைக்
ஓட்டக் கற்றுக் கொண்ட போது அவள் பைக்கின் முன்னால் அமரும்
வயதை கடந்துவிட்டாள்.
வினு வண்டியின் அருகே நிற்பதை பார்த்து திரு அவளை நெருங்க..
விக்கியும் அவளருகில் வந்தான்..
“என்ன வினு வண்டியை பார்த்துட்டு இருக்க??? ஒரு ரைட்
போவோமா????” அவளுக்கு வண்டியின் மீது இருக்கும் பிடித்தம் தெரியும்
என்பதால் அவன் கேட்க, திரு உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருந்தான்..
விக்கியின் முகத்தை சோகமாக பார்த்தவள், “ஹ்ம்ம் போலாம் டா..
உன் கூட மட்டும் தான் போக முடியும்.. வேற இவன்கிட்ட கேட்டா
கூடிட்டா போகப் போறான்???” என்றவள் திருவின் முகத்தை ஏறிட… திரு
அவள் சொல்வது புரியாமல் “ஙே” என்று விழித்தான்..
“என்ன சொல்றா இவ?? நான் எப்போ கூட்டிட்டு போக மாட்டேன்னு
சொன்னேன்..” திரு பரிதாபமாக இருவரையும் பார்க்க, விக்கி திருவின்
புறம் திரும்பினான்..
“மச்சான்!!! கார்ல இடம் இல்லை.. அதனால நீங்க வினுவை
புல்லட்ல கூட்டிட்டு வாங்க….”
“அதெல்லாம் முடியாது.. நான் எதுக்கு கூட்டிட்டு வரணும்??? உன்
அக்காவை நீயே கூட்டிட்டு போ..” திருவும் முறுக்கிக் கொள்ள.. விக்கி
அவனை கேலியாக பார்த்தான்..
“அப்போ கூட்டிட்டு வர மாட்டிங்க???? சரி அப்போ பரவாயில்லை..
நாங்க ஃபர்ஸ்ட் கோவிலுக்கு போய் பூ மிதிக்கிற நிகழ்ச்சியில உங்க
பெயரை கொடுத்துடுறோம்…” விக்கி அசால்ட்டாக சொல்ல, திரு அது
என்ன நிகழ்ச்சியென்று தெரியாமல் பார்த்தான்..
“பூ மிதிக்கிற ஃபங்க்ஷனா??? அப்படின்னா??? ஃப்ளவர்ல வாக்கிங்
போகணுமா???” சிட்டியில் வளர்ந்தவன் என்பதால் இது போன்ற
நிகழ்ச்சியை பற்றி அறியாமல் கேட்க, வினு வாயை மூடி சிரித்தாள்..
ஏன் சிரிக்கிறாள் என்று தெரியாமல் திரு இருவரையும் மாறி மாறி
பார்த்தான். விக்கியே, “வாக்கிங் தான் மச்சான்.. பட் ஃப்ளவர்ல இல்லை..
நெருப்புல மச்சான்.. தீமிதிக்கிறத தான் அப்படி சொன்னேன்… “
விக்கி கூறியதும் திருவின் முகம் அஷ்டகோணலாக, வினுவும்
விக்கியும் ஹை-பை கொடுத்துக் கொண்டனர்..
“இப்போ என்ன மச்சான் சொல்றிங்க?? என் அக்காவை கூட்டிட்டு
வர்றிங்களா இல்லையா????” விக்கி மிரட்ட, திரு இதற்கு மேல் தாங்காது
என்பது போல்
“உன் அக்காவை அழைத்து வருவது இந்த அடியேனின் பாக்கியம்
மன்னா…” என்று இடைவரை குனிந்து வினுவை வணங்க… வினு
பக்கென்று சிரித்துவிட்டாள்.. திருவும் அவளை பார்த்து புன்னகைத்தான்..
புல்லட் சாவியை விக்கி கொண்டு வந்து கொடுக்க அதை பெற்றுக்
கொண்ட திரு வண்டியில் ஏறி அதை கிளப்ப, ஹனி ஓடி வந்தாள்..
“மம்மி.. நானும்…” வினுவின் சேலை முந்தானையை பிடித்துக்
கொண்டு ஹனி தொங்க… வினு அவளை கையில் அள்ளிக் கொண்டாள்..
“கண்டிப்பா டா.. என் பொண்ணு இல்லாமலா வா வா…” என்றவள்
திருவின் முன்பு அவளை அமர வைக்க போக, சட்டென்று சுமி வினுவின்
கையில் இருந்து ஹனியை வாங்கிக் கொண்டாள்… அதில் வினுவின்
முகம் வாடிவிட, சுமி அதை கண்டுக் கொள்ளவில்லை..
“நாங்க சேர்ந்து வர்றோம்..” இருவருக்கும் பொதுவாக அவள் தகவல்
சொல்ல திருவிற்கு கோபம் வந்தது..
“ஓ சரி சுமி.. அவ உன்னோட பொண்ணு.. உனக்கு தான் எல்லா
உரிமையும் இருக்கு.. நீயே வச்சிக்கோ..” அவளது முகம் பாராமல் அவன்
பேச, சுமியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..
“அண்ணா அப்படி சொல்லாத.. இவ எப்பவுமே உனக்கு தான்
பொண்ணு.. இந்தா உன் பொண்ண நீயே வச்சிக்கோ..” ஹனியை திருவின்
முன்பே அமர வைத்தவள் அங்கிருந்து சென்றுவிட்டாள்…
செல்லும் சுமியை பார்த்தவாறு நின்றிருந்த வினுவின் கையை
பற்றியவன், “வா போலாம் புஜ்ஜி” என்க, வினுவும் சிரித்த முகமாகவே
புல்லட்டில் ஏறி அமர்ந்தாள்..
அதன் பின் கோயில் செல்லும் வழி முழுதும் வினுவும் ஹனியும்
சலசலத்துக் கொண்டே வர, திருவிற்குள் அப்படியொரு நிம்மதி..
கோயிலும் வந்துவிட அனைவரும் ஒன்றாக இறங்கி சென்றனர்..
இவர்களை போல் நிறைய புது மண தம்பதிகள் பொங்கல் வைக்க
ஆயத்தமாக, வினுவின் அத்தை வினுவையும் சுமியையும் தனித்தனியாக
பொங்கல் வைக்க சொன்னார்..
திரு வினுவிற்கு உதவ, அவள் பொங்கல் வைக்க அடுப்பை தயார்
செய்துக் கொண்டிருந்தாள்.. சுமிக்கு பொங்கல் வைக்க தெரியும் என்றாலும்
இப்படி விறகடுப்பில் வைத்து பழக்கமில்லை.. அவள் மிரட்சியாக பார்க்க,,
அகிலுக்கு சிரிப்பு வந்தது..
“சுமிம்மா.. என்னாச்சு???” வேண்டுமென்றே அவன் தெரியாதது போல்
கேட்க,
“அகி.. எனக்கு கேஸ் ஸ்டவ்ல தான் வைக்க தெரியும்.. இங்க ஸ்டவ்
கிடைக்காதா???” அப்பாவியாக கேட்டவளை இழுத்தனைக்க சொல்லிய
மனதை அடக்கியவன்,
“எனக்கு வைக்க தெரியும். நான் ஹெல்ப் பண்றேன்” என்றான்
கிடைத்த வாய்ப்பை விடாமல்… சுமியும் உதவிக்கு ஆள் கிடைத்த
மகிழ்ச்சியில் சரி என்க, இருவரும் ஒன்றாக சேர்ந்து பொங்கல் வைக்க
துவங்கினர்..
இருவரையும் வியப்பாக பார்த்தனர் திருவும் வினுவும்..
அவர்களுக்கும் மிக்க மகிழ்ச்சியே.. இருவரின் வேண்டுதலும், சுமியும்
அகிலும் சீக்கிரம் சேர்ந்துவிட வேண்டும் என்பது மட்டுமே..
பொங்கல் வைத்த பின் சாமிக்கு படைத்து மனமுருக
வேண்டியவர்கள், மாலை வரை அங்கேயே அவர்களது சொந்த
பந்தங்களோடு பேசிக் கொண்டிருந்தனர்.. திருவையும் சுமியையும்
ஊர்க்காரர்களுக்கு அறிமுகப்படுத்தினார் சுதா..
இசக்கிமுத்து, ரித்தினையும் ஹனியையும் கையில் வைத்துக்
கொண்டு அனைவரிடமும் தன் பேரப்பிள்ளைகள் என்று பெருமையாக
கூறிக் கொண்டிருந்தார்… முதலில் அவரிடம் போகவே பயந்த ஹனி,
ரித்தின் பயப்படாமல் அவரோடு விளையாடவும் தானும் அவர்களோடு
சேர்ந்துக் கொண்டாள்.
மாலை வரை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் இடைவெளிவிட்டு
நடந்துக் கொண்டே இருக்க, திருவும் சுமியும் ஆச்சரியமாக பார்த்துக்
கொண்டிருந்தனர்..
மாலையில் அனைவரும் திருவிழாக் கடைகளை சுற்றிப் பார்க்க
செல்ல.. ஹனி வினுவோடு ஒட்டிக் கொண்டாள்.. சுமி அவளை அழைக்க
செல்ல அகில் தடுத்துவிட்டான்…
“ஹனி அவங்க கூட இருக்கட்டும் சுமி.. நாம கடைக்கு போகலாம்”
என்றவன் அவளது பதிலை எதிர்பாராமல் அவளை இழுத்துக் கொண்டு
அங்கிருந்த கடைகளை சுற்றினான்.. அனைத்து கடைகளையும் வியப்பாக
பார்த்தாளே தவிர சுமி எதுவும் வாங்கவில்லை.. சிறிது நேரம் பொறுத்துப்
பார்த்த அகிலுக்கு பொறுமை பறக்க, அவனே அவளை ஒரு கடையினுள்
இழுத்துச் சென்றான்..
“என்னப் பண்ற?? எனக்கு எதுவும் வேண்டாம்..” அவன் கையில்
அடங்கியிருக்கும் தன் கையை உருவ முடியாமல் அவள் திணற,
“உனக்கு வேண்டாம்னா பரவாயில்லை.. ஆனா என் பொண்டாட்டிக்கு
நான் செய்வேன்..” என்றவன் கடைக்காரனிடம் கேட்டு அங்கிருந்த
வளையல்களை எடுத்து அவள் கைகளில் போட்டுவிட்டான்.. அவள்
உடுத்தியிருந்த புடவைக்கு ஏற்றவாறு கலர் தேர்ந்தெடுத்து அவன்
போட்டுவிட்டுக் கொண்டிருக்க, சுமி அவனை விலக்கவும் முடியாமல்
அவன் அணிவதை ஏற்கவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தாள்,..
“போதும் அகி…” சுமி மறுக்க,
“என்ன நீ.??? வளையல் போட்டா அவ்வளவு அழகா இருக்கும்..
எவ்வளவு தான் தங்க வளையல், பிரேஸ்லெட், மெட்டல் வளையல்னு
வந்துட்டாலும் இந்த கண்ணாடி வளையலோட அழகு எதிலும் வராது…”
என்றவன் எதிர்புறத்தில் இருந்த கடையில் இருந்த வினுவை சுட்டிக்
காண்பித்து, “அங்க பாரு வினுவ.. உன் அண்ணா பர்சை காலி பண்ற
மாதிரி வாங்கி அடுக்கிட்டு இருக்கா..”என்க, சுமியும் திரும்பி பார்த்தாள்..
அகில் சொன்னது போல் கை நிறைய வளையலோடு திருவின்
முகத்தின் முன்பே தன் இருகைகளையும் ஆட்டிக் காண்பித்துக்
கொண்டிருந்தாள்.. அவளை பின்பற்றி ஹனியும் அதையே செய்ய.. அவள்
கையிலும் நிறைய வளையல்களை அடுக்கிவிட்டிருந்தாள் வினு.. அந்த
காட்சியே ரசனையாக இருக்க சுமிக்கே ஒரு நிமிடம் ஹனியை காண
அவர்களின் மகள் போல தான் இருந்தது…
“இந்த புடவையில் நீ ரொம்ப அழகா இருக்க சுமிம்மா”
மென்மையான குரலில் அகில் கூற, சுமி விழி விரித்து பார்த்தாள்.. ஏனோ
இன்றிருக்கும் மனநிலையில் அவனை திட்டவும் தோன்றாமல்
வெறுமையாக பார்த்து வைத்தாள்.. அவளின் வெறுமை அவனை
தாக்கினாலும் சீக்கிரம் அனைத்தும் சரியாகிட வேண்டும் என கடவுளிடம்
வேண்டிக் கொண்டான் அகில்.
அங்கு திரு வினுவின் கையில் சிக்கி சின்னாபின்னமாகிக்
கொண்டிருந்தான்.. அனைத்து கடைகளிலும் ஏறி இறங்க வைத்து, பார்க்கும்
அனைத்தையும் வாங்க வைத்து, என ஹனியை விட அதிகமாக
அழிச்சாட்டியம் செய்துக் கொண்டிருந்தாள் வினு… ஆனாலும் திருவால்
அவளை கோபித்துக் கொள்ள முடியவில்லை.. அனைத்தையும் மறந்து
அவனோடு சகஜமாக பேசுபவளை தடுக்க விருப்பமில்லாமல் இருவரையும்
அவர்கள் வழிக்கே விட்டுவிட்டான்…
கை நிறைய வளையல்களை வாங்கியவள் அடுத்ததாக அங்கிருந்த
ஐஸ்கடையை நோக்கி செல்ல திருவும் அவர்களை பின் தொடர்ந்தான்..
ஆளுக்கு இரண்டு என இருவரும் ஐஸ்கீரிமை சுவைக்க, திரு கையில்
இரண்டு கவர் நிறைய திருவிழா கடைகளில் வாங்கியதை சுமந்துக்
கொண்டிருந்தான்…
ஹனியோடு சரிசமமாக அரட்டை அடிப்பவளை பார்க்கும் போது
இன்னொரு ஹனியாக தோன்ற, அவர்கள் இருவரையும் ரசித்து அந்த
நொடிகளை தன் மனப்பெட்டகத்துக்குள் சேமித்துக் கொண்டிருந்தான் திரு
ஒரு வழியாக இருவரையும் கிளப்பிக் கொண்டு திரு
மற்றவர்களோடு இணைந்துக் கொள்ள, அனைவரும் அவனை கேலியாக
பார்த்தனர்.. ஏனென்றால் யாரின் கையிலும் இத்தனை பொருட்கள்
இல்லை.. அந்த அளவிற்கு திருவை சுமை தாங்கியாக மாற்றியிருந்தாள்
வினு..
அவனின் நிலமையை பார்த்து விக்கியும் அகிலும் பொங்கும்
சிரிப்பை வாய்க்குள்ளே அடக்க, திரு அசடு வழிந்தான்.. ரித்தினை
பார்த்ததும் திருவின் கையில் இருந்த ஒரு பையை வாங்கி அவனிடம்
கொடுத்தவள் அது போல் மற்றவர்களுக்கும் அவர்களுக்காக வாங்கிய
பொருட்களை கொடுத்தாள்.. சுமி அதை வாங்காமல் நிற்க, அவள் சார்பாக
அகில் வாங்கிக் கொண்டான்..
கிளம்பும் சமயத்திலும் ஹனியும் வினுவும் போட்டிப் போட்டுக்
கொண்டு ஐஸ் வாங்கி சாப்பிட, சுமிக்கு பதட்டமாக இருந்தது.. அவள்
எதாவது கூறினால் திரு வருத்தப்படுவான் என்பதற்காக அவளும்
அமைதியாக, அனைவரும் வீட்டிற்கு கிளம்பினர்..
நாள் முழுதும் வெளியே இருந்த அலுப்பில் அனைவரும் சீக்கிரமாக
உறங்கிவிட, ஹனி இரும ஆரம்பித்தாள்.. வரும் போதே சுமி தேவையான
மருந்துகளை எடுத்து வந்ததால் அதை அவளுக்கு கொடுத்து உறங்க
வைத்தாள்.. ஆனால் நடுவிரவில் ஹனிக்கு காய்ச்சலும் சேர்ந்துக் கொள்ள
சுமி பயந்து போனாள்…
“அகி.. அகி.. எழும்பு.. இங்க பாரு.. ஹனிக்கு காய்ச்சல் அடிக்குது..”
சுமி அகிலை எழுப்ப, தரையில் போர்வை விரித்து படுத்திருந்தவன்
வேகமாக எழுந்து ஹனியிடம் வந்தான்..
“என்னாச்சு???” ஹனியை தொட்டுப் பார்த்தவாறே அவன் கேட்க, சுமி
பதட்டமாக காய்ச்சல் அடிப்பதை கூறினாள்..
அவளை போல் பதட்டப்படாமல், “டேப்லெட் இருந்தா கொடு மா..
காலையில ஹாஸ்பிட்டல் போகலாம்..” என்றவன் தண்ணீரை எடுத்து
கொடுக்க. சுமியும் ஹனியை எழுப்பி மாத்திரையை கொடுத்தாள்.. ஆனால்
அடுத்த பதினைந்தாவது நிமிடம் ஹனி அனைத்தையும்
வாந்தியெடுத்துவிட சுமிக்கு திக்கென்று இருந்தது..
வாந்தி எடுத்ததோடு அல்லாமல் ஹனியின் கண்கள் மேலே நோக்கி
சொருக ஆரம்பிக்க, சுமி அழ தொடங்கிவிட்டாள்.. அகில் தான்
இருவரையும் பார்த்து பதறிப் போனான்..
“அகி அகி.. என் பொண்ணுக்கு என்னமோ ஆகிடுச்சு..” சுமி கதற,
அகில ஹனியை தூக்கிக் கொண்டு வெளியே வந்தான்..
“அழாதே சுமி.. நாம ஹாஸ்பிட்டல் போய்டலாம்” என்றவன்
அவளையும் அழைத்துக் கொண்டு புல்லட்டில் ஹாஸ்பிட்டலை நோக்கி
பறந்தான்… பதட்டத்தில் அவன் யாரிடமும் கூறாமல் செல்ல.. வண்டி
சத்தம் கேட்டு அனைவரும் விழித்தனர்…
ஹனியை ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்துவிட்டு தவிப்பாக
வெளியே காத்திருந்தனர் சுமியும் அகிலும்… வீட்டில் இருந்து ஏகப்பட்ட
அழைப்புகள்… எதையும் ஏற்கவில்லை… சுமி ஒரு பக்கம் அழுது கரைந்துக்
கொண்டிருந்தாள்.. அவளை சமாதனம் செய்தவன், விடாது அழைத்துக்
கொண்டிருந்த வினுவின் அழைப்பை ஏற்று நடந்ததை கூறினான்.
அடுத்த பத்து நிமிடத்தில் மொத்த குடும்பமும் அங்கு வந்துவிட்டது..
அவர்கள் வரவும் டாக்டரும் சரியாக வெளியே வர, சுமி பதட்டமாக
ஹனியை பற்றி விசாரித்தாள்..
“டாக்டர் என் பொண்ணுக்கு என்னாச்சு??? அவளுக்கு எதுவும்
இல்லையே???” கண்களில் இருந்து கண்ணீர் பொலபொலவென கொட்ட
அகிலின் கையை பற்றியவாறே கேட்டாள் சுமி,
“பயப்படுறதுக்கு ஒன்னும் இல்லை.. சாப்பிட்டது ஒத்துக்கலை.. ஃபுட்
பாய்சன் ஆகிடுச்சு.. இப்போ எல்லாம் நார்மலா இருக்கு.. ட்ரிப்
போட்டிருக்கேன்… முடிஞ்சதும் அழைச்சிட்டு போலாம்.. ரெண்டு நாளைக்கு
லைட் ஃபுட் கொடுங்க…” என்றவர் அனைவரையும் ஒரு முறை
பார்த்துவிட்டு சென்றுவிட, வினு சுமியை நெருங்கினாள்…
“அண்ணி என்னாச்சு?? ஹனிக்கு எதுவும் இல்லையே??? எங்க
அவ???” அழுதழுது முகம் சிவந்து போயிருக்க சுமியின் கையை பற்றிக்
கொண்டு ஹனியை தேடி வினு கண்களை சுழல விட, சுமி அவள்
கையை தட்டிவிட்டாள்..
அதை உணராத வினுவோ அடுத்ததாக தன் அண்ணணிடம்
ஹனியை பற்றி விசாரிக்க, அவன் டாக்டர் கூறியதை கூறினான்..
“ஃபுட் பாய்சனா??? நான் தான் நிறைய ஐஸ்கிரிம் வாங்கி
கொடுத்திட்டேன்.. நானே என் பொண்ணை இப்படியாக்கிட்டேன்..” திருவின்
நெஞ்சில் சாய்ந்துக் கொண்டு அழுதவளை காண்கையில் அனைவருக்கும்
நெஞ்சையடைத்தது…
திருவும் சுதாவும் ஹனியை பற்றி விசாரிக்க அகில் பொறுமையாக
அனைவரிடமும் கூறினான்… யாரிடமும் சொல்லாமல் வந்ததற்காக சுதா
அவனை கடிந்துக் கொள்ள, வினு இன்னும் தன் அழுகையை
நிறுத்தியபாடில்லை…
“எனக்கு ஹனியை பார்க்கணும்..” என்றவள் கதவை திறந்துக்
கொண்டு உள்ளே செல்ல போக அவளை தடுத்து நிறுத்தியது சுமியின்
குரல்…!!!
“எங்க போற??? என் பொண்ணை இங்க படுக்க வச்சது போதாதா??
இதுக்க மேல என்ன வேணும்???” சுமி அடக்கி வைத்திருந்த கோபத்தை
வெளிக்காட்ட… வினு செய்வதறியாமல் திகைத்து நின்றாள்.. அவள் கூறிய
குற்றச்சாட்டில் வெதும்பியவள்,
“அண்ணி ப்ளீஸ்.. நான் வேணும்னு பண்ணல.. ஒரே ஒரு தடவை
ஹனியை பார்த்துக்கிறேன்…” வாழ்க்கையில் யாரிடமும் கெஞ்சியிராதவள்
கெஞ்ச துவங்க, அங்கிருந்த அனைவருக்குமே கோபம் வந்தது.. ஆனால்
சுமியை திட்ட முடியாமல் அனைவரும் நிற்க,
“நீ எதுக்காக பார்க்கணும்??? அவ என்னோட பொண்ணு.. எனக்கு
தெரியும் அவளை பார்த்துக்கிறதுக்கு… நீ கிளம்பு.. எதுக்காக எப்பவும்
அவளை உன்னோட பொண்ணுன்னு சொல்ற???” சாட்டையாக
வார்த்தைகளை சுழட்டியவளை தடுக்கும் வழியறியாமல் அனைவரும்
அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்..
“ஸ்டாப் இட் சுமி..“ இதற்கு மேல் பொறுமையாக நிற்பது தன்
மனைவியை தானே விட்டுக்கொடுப்பதற்கு நிகர் என்றெண்ணிய திரு
வெடிக்க, சுமி அவனது அதட்டலில் நடுங்கியே போனாள்..
விழிகள் தொடரும்……..