vkv 13

vkv 13

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 13

இரவு உணவை முடித்துவிட்டு திருக்குறள் படித்துக் கொண்டிருந்தார் நாராயணன். தொன்மையான அந்த ஹைக்கூவில் அவருக்கு மோகம் அதிகம். அப்பாவின் பக்கத்தில் வந்து அமர்ந்த ரஞ்சனி அவரைப் பார்த்து சிரித்தாள்.

சாப்பிட்டியாம்மா?”

ம்ஆச்சுப்பா.” புத்தகத்தை மூடி வைத்தார் நாராயணன்.

சொல்லும்மா, அப்பாகிட்ட என்ன சொல்லனும்?”

அப்பா…”

என்ன தயக்கம் ரஞ்சனி? எதுவா இருந்தாலும் சொல்லும்மா.”

பேசப்போற விஷயம் என்னைப் பத்தி இருந்தா எனக்கு எந்தத் தயக்கமும் இல்லைப்பா.”

சரி, அப்போ பேச்சு உங்கண்ணா பத்தினது, சரியா?”

ம்…” மௌனமாக தலை அசைத்தாள் ரஞ்சனி.

அபிக்கு என்னம்மா பிரச்சினை?”

பிரச்சினை எல்லாம் ஒன்னும் இல்லைப்பா. அண்ணாவை அவன் போக்கிலேயே நீங்க விட்டுட்டீங்களோன்னு எனக்குத் தோணுதுப்பா.”

எதை வச்சும்மா அப்படி சொல்லுற?”

அண்ணாக்கு இருபத்தி எட்டாகுது. இன்னும் ஏன் அண்ணாக்கு கல்யாணம் பண்ண நீங்க நினைக்கலை?”

வயசுப் பொண்ணு வீட்டுல இருக்கும் போது அண்ணாக்கு எதுக்கு அவசரம்? எப்படியும் உன்னோட கல்யாணத்தை இந்த வருஷத்துக்குள்ள நான் முடிச்சிடுவேன். அதுக்கப்புறம் அபிக்கு பாக்கலாம்னு நானும், உங்கம்மாவும் பிளான் பண்ணி இருக்கோம்.”

இதை நான் உங்ககிட்ட சொல்லுறது சரியா, தப்பான்னு எனக்கு தெரியலைப்பா. அண்ணா நேத்து வீட்டுக்கு வரும்போது ரொம்பவே லேட் ஆகிடிச்சு.”

என்ன, ஒரு 1:54 இருக்குமா?”

அப்பா…!”

பையன் கிட்ட தொழிலை ஒப்படைச்சுட்டு, அக்கடான்னு உக்கார்ர அப்பன் நான் இல்லைம்மா.”

ஐயையோ! நான் உங்களைத் தப்பா சொல்லலைப்பா. அண்ணாவோட ஸ்நேகிதங்கள் அவ்வளவு நல்லதா தோணலைப்பா.”

ம்என் காதுக்கும் வந்ததும்மா. ஆனா அபி எல்லாத்தையும் ஒரு லிமிட்டோட வச்சிருக்கான்னுதான் எனக்கு தகவல் வந்தது.”

அண்ணா எதையுமே எங்கிட்ட மறைக்காதுப்பா. முன்னாடியெல்லாம் பசங்க பேர் மட்டும் தான் அண்ணா பேச்சுல அடிபடும். ஆனா இப்போ புதுசா பொண்ணுங்க பேரும்…”

ம்புரியுதும்மா. புதுசா ஏதோ டை ஃபாக்டரி ஆரம்பிக்கிறேன்னு கிளம்பி இருக்கான். கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம்னு நினைச்சேன். காலந் தாழ்த்த வேண்டாங்கிறயாம்மா?”

அங்கேயும் ஒரு சின்ன சிக்கல் இருக்குப்பா?”

அங்க என்னம்மா ஆச்சு?”

நல்லூர்ல உமான்னு ஒரு அக்காவை அண்ணா இன்ட்ரடியூஸ் பண்ணி வச்சாங்க. டாக்டருக்கு படிக்கிறாங்க அந்த அக்கா. ஃபைனல் இயர்.”

ம்…”

அவங்களை அண்ணாக்கு பிடிச்சிருக்குமோன்னு எனக்கு ஒரு டவுட்.”

ஏம்மா, பொண்ணை உனக்குப் பிடிக்கலையா?”

ஐயோ அப்பா! ரொம்பப் பிடிச்சிருந்தது. ஆனா, அந்த அக்காவை அழைச்சிக்கிட்டுப் போக அவங்க அத்தான் வந்திருந்தாங்க. அவங்க ரெண்டு பேரோட பார்வையையும், பேச்சையும் பாத்தா அது வெறும் சொந்தத்தோட நிக்குற மாதிரி தெரியலைப்பா.”

அந்த விஷயம் உங்கண்ணனுக்கு தெரியாதா?” 

உமா அவங்க அத்தானோட கிளம்பிட்டாங்கன்னு சொன்ன உடனே, அவங்க கார் டீடெய்ல்ஸ் அண்ணா சொல்லுறான்.”

அவன் சொல்லலைன்னா தான் நான் ஆச்சரியப் படுவேன். சோ, அபிக்கு அந்தப் பொண்ணைப் பத்தி அத்தனையும் தெரிஞ்சிருக்கு.”

தெரிஞ்சுமா அண்ணா அந்தப் பொண்ணு மேல…”

இல்லைம்மா, நிச்சயமா இருக்காது. இந்த விஷயம் தெரிஞ்சும் அந்த பொண்ணு கூட பேசுறான்னாஒன்னு அது வெறும் நட்பா இருக்கனும், இல்லை அந்தப் பொண்ணால இவனுக்கு ஏதோ ஆகனும், அவ்வளவுதான்.”

அண்ணா உமாவை பாக்குற பார்வை அவ்வளவு நல்லதா படலைப்பா.”

ம்அப்பா அங்கேயும் ஒரு கண்ணை வெக்கிறேம்மா. நீ கவலைப்படாதே. அந்த டாக்டர் பையனோட ஜாதகம் நல்லா பொருந்தி வந்திருக்கும்மா. அதையே முடிச்சிரலாமா?”

நீங்க எப்படி சொன்னாலும் சரிப்பா.” ரஞ்சனி எழுந்து செல்ல, யோசனையில் ஆழ்ந்தார் நாராயணன்.

                                —————————————————-

டின்னரை முடித்து விட்டு கொஞ்சம் நடக்கலாம் என்று வீட்டை விட்டு வெளியேறினான் சுதாகரன். இரவு நேர நிசப்தமும், மெல்லிய பூங்காற்றும் அத்தனை ரம்மியமாக இருந்தது. மது இன்னும் கால் பண்ணவில்லையே என்று நினைத்துக் கொண்டே இரண்டு எட்டு நடந்திருப்பான், கையிலிருந்த அவன் ஃபோன் சிணுங்கியது. சிரித்துக் கொண்டே ஆன் பண்ணினான்.

சொல்லு மது.”

என்ன பண்ணுறீங்க அத்தான்?”

சாப்பிட்டுட்டு ஒரு வாக் வந்தேன்டா, நீ சாப்டியா?”

ம்இப்பதான் ஆச்சு அத்தான். வேலை எல்லாம் எப்பிடி போகுது?”

அது நல்லபடியா போகுதுடா, ஆனா மாறன் மாமா தான் புதுசா கொஞ்சம் வேலை குடுத்திருக்கார்.”

என்னவாம்?”

புதுசா நம்ம ஊர்ல ஒரு டை ஃபேக்டரி ஆரம்பிக்கப் போறாங்களாம். அதுக்கு பெரிய தலை ரெண்டும் பயங்கர எதிர்ப்பு.”

ரெண்டு தலையும் சேந்து ஆடுதுன்னா, ஏதோ சீரியஸான காரணம் இருக்கும் அத்தான்.”

கண்டிப்பா, ஒவ்வொன்னா சொல்லும் போது தலை சுத்துது.”

அப்படியா?”

இதுல பிரச்சினை என்னன்னா, இந்தக் காரணங்கள் எல்லாம் நம்ம ஊர் மக்களுக்கு தெரியாது. அவங்களுக்கு தெரிஞ்சது எல்லாம், புதுசா ஃபாக்டரி வந்தா நிறைய வேலைவாய்ப்பு வரும் எங்கிறது மட்டும் தான்.”

ம்அவங்க நினைக்கிறதும் கரெக்ட் தானே அத்தான். இன்னைக்கு இன்டர்நெட்டை தட்டினா சகலதும் வருது. பாவம், படிப்பறிவில்லாத ஜனங்களுக்கு அது தெரியாது இல்லையா? சித்தப்பா இதுக்கும் ஏதாவது ஐடியா வச்சிருப்பாங்களே?”

மாறன் மாமாவா கொக்கா? அதெல்லாம் பக்காவா ப்ளான் ரெடி.”

என்ன பண்ணப் போறாங்களாம்?”

உங்க தாத்தா மூலமா ஊர் பெரியவங்களைக் கூட்டி இது சம்பந்தமான சாதக, பாதகங்களை முதல் கட்டமா விவாதிக்கப் போறாங்க. அதுக்கு அடுத்ததா, ஊர் ஜனங்களை ஒன்னு கூட்டி அவங்களோட மனசுல பதியுற மாதிரி சின்னதா ஒரு வீடியோ க்ளிப் போடப்போறோம்.”

குட், இது நல்ல ஐடியா அத்தான். படிச்சவங்க சொன்னா புரிஞ்சுக்குவாங்க. ஆனா, எல்லா மட்டத்துல இருக்கிறவங்களையும் விஷுவல் போய்ச் சேரும்.”

மகேஷ் ஃபுல்லா இதுல இறங்கி வேலை பண்ணுறான். டைரக்டாவும், இன்டைரக்டாகவும் ஹெல்த்தை இது எவ்வளவு தூரம் பாதிக்குதுன்னு நம்ம ஜனங்களுக்கு புரியணும், அதுதான் முக்கியம்.”

ம்ரொம்ப நல்ல விஷயம் அத்தான். கண்டிப்பா நீங்க இதுக்கு ஃபுல் சப்போர்ட் குடுங்க.”

அம்மணி சொல்லிட்டீங்க இல்லை, இனி பாருங்க நான் எப்பிடி இறங்கி வேலை பாக்குறேன்னு.” சுதாகரனின் குரலில் கேலி இருந்தது.

கேலி பண்ணாதீங்க அத்தான். நான் சீரியஸா பேசிக்கிட்டு இருக்கேன்.” 

இல்லைடா, நானும் சீரியஸாகத்தான் சொல்லுறேன். விவரம் தெரிஞ்சவங்க எல்லாம் தான் உண்டு தன் பாடுண்டு அப்பிடீன்னு போயிட்டா பாமர மக்களுக்கு யாரு நல்லது, கெட்டது சொல்லிக் குடுக்கிறது? தமிழ் மாமாக்கும், மாறன் மாமாக்கும் இதெல்லாம் பண்ணனும்னு என்ன தேவை சொல்லு மது? வாழ்க்கையில நல்ல லெவெல்ல காசு பணத்தோட இருக்காங்க. அவங்கவங்க வேலையை பாத்துட்டு போய்க்கிட்டே இருக்கலாம். ஆனா, அப்பிடிப் பண்ணாம ஊருக்கு ஒரு கெடுதல் எங்கிறப்போ இறங்கி வேலை பண்ணுறாங்க பாரு, அதைப் பாராட்டனும்.”

ம்நீங்க சொல்லுறதும் சரிதான் அத்தான். எல்லாரும் சுயநலமா வாழப் பழகிட்டாங்க. அது ரொம்பவே தப்பு.”

சரி சரி, ஊருக்காகப் பேசினது போதும் அம்மணி. இப்போ நம்மைப் பத்திப் பேசலாம்.”

பேசுங்க அத்தான்.” அழகாகச் சிரித்தாள் உமா.

எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்?” சுதாகரனின் குரலில் ஒரு நெகிழ்ச்சி இருந்தது.

நீங்க நாளைக்குன்னு சொன்னாலும் நான் ரெடி அத்தான்.” உனக்கு சளைத்தவள் நான் இல்லை எனக் காட்டினாள் உமா.

ம்பாக்காம இருக்கிறது கஷ்டமா இருக்கு மது. மாறன் மாமா இந்த வேலையில இழுத்து விடாட்டி நாளைக்கே கிளம்பி வந்திருப்பேன்.”

பரவாயில்லை அத்தான். அந்த வேலையை முதல்ல முடியுங்க, அப்புறமா இங்க வர்றதப் பத்தி யோசிக்கலாம்.”

ம்…” சுதாகரனின் குரலில் இப்போது அதிருப்தி இருந்தது.

அத்தான், என்னாச்சு? ஏன் டல்லாகிட்டீங்க?”

ஒன்னுமில்லைடா.”

நீங்க எல்லாரும் ஒன்னா இருக்கீங்க, நான் இங்க தனியா உக்காந்திருக்கேன். ப்ளீஸ், கொஞ்சம் கல கலப்பா பேசுங்க அத்தான்.” சட்டென்று தன்னைச் சுதாகரித்துக் கொண்டவன்,

ஏய் மது, அம்மணி அன்னைக்கு கார்ல வச்சு கருணை காட்டச் சொன்னீங்களே, அது ஞாபகம் வந்திடுச்சு.”

“………..”

இப்போ அம்மணி பக்கத்துல இருந்து அப்பிடிக் கேட்டா எப்பிடி இருக்கும்?”

எப்பிடி இருக்கும் அத்தான்?” குறும்பாகச் சிரித்தபடி கேட்டாள் உமா.

இங்கப்பார்ரா, எம் மாமன் மகள் போட்டுத் தாக்குறதை! கோயம்புத்தூர் வரும்போது காட்டுறேன்டி அது எப்பிடி இருக்கும்னு. பக்கத்துல இல்லையேங்கிற தைரியம் உனக்கு. வந்து வச்சுக்கிறேன் கச்சேரியை.”

ஐயோ அத்தான்! நான் விளையாட்டுக்கு சொன்னேன்.” பொங்கிச் சிரித்தாள் உமா.

நீ விளையாட்டுக்குச் சொன்னியோ, இல்லை விளையாடச் சொன்னியோ, எனக்கு அதெல்லாம் தெரியாது. சீண்டிப் பாக்குற இல்லை, வர்ரேன்டி.” அத்தனைக்கும் உமாவிடமிருந்து சிரிப்பே பதிலாகக் கிடைத்தது.

மது…” சுதாகரனின் குரலில் இப்போது அத்தனை கிறக்கம் இருந்தது.

ம்…”

அந்தப் பட்டுப் புடவையிலே அன்னைக்கு எவ்வளவு அழகா இருந்தேன்னு தெரியுமா?”

நீங்க சொல்லவே இல்லையே அத்தான்.”

நான் சொன்னாத்தான் உனக்குப் புரியுமா மது?”

அத்தான்…”

சில சமயம் எனக்கே எம்மேல கோபம் வருதுடா.”

அதேன் அத்தான்?”

இந்தப் பொண்ணு பின்னால ரொம்பவே வழியுறேன்னு எனக்கே வெக்கமா இருக்குடி.”

ம்ஹூம்…”

பை மது.” சொல்லாமல் கொள்ளாமல் சட்டென்று அழைப்பைத் துண்டித்தான் சுதாகரன். காதலுக்கும், ஈகோவிற்கும் நடுவில் அவன் சிக்கித் தவிப்பது அழகாகப் புரிந்தது உமாவிற்கு. தனக்குள் புன்னகைத்துக் கொண்டவள், ஒரு மெஸேஜை உடனே அனுப்பி வைத்தாள்.

லவ் யூ அத்தான்.” அதற்கு அவன் அனுப்பிய பதிலில் கொஞ்சம் வெட்கிப் போனாள் உமா.

                                          —————————————————

கடிகாரத்தை ஒரு முறை பார்த்துக் கொண்டார் இளமாறன். 6:45 என்றது. அந்த விசாலமான கலெக்டர் பங்களாவின் போர்டிகோவில் அமர்ந்திருந்தார். சகல வசதிகளுடனும் இருந்தது அந்த அரசாங்க இல்லம்.

விசாலாட்சியின் அழைப்பின் பேரில் அங்கு வந்திருந்தார் மாறன். அவசர பணியொன்று எதிர்பாரா விதமாக வந்து விட்டதால் கொஞ்சம் தாமதமாவதாக விசாலாட்சி ஃபோன் பண்ணி சொல்லி இருந்தார். கவனிப்பிற்கு குறைவில்லாமல் காஃபி, புதினப் பத்திரிகைகள் என அனைத்தும் வந்தது. என்ன, அனைத்தையும் வேலையாட்கள் கொண்டு வந்தார்கள். சொந்தம் என்று சொல்ல அந்த வீட்டில் ஒரு கூட இல்லை.

மாறனின் சிந்தனையைக் கலைத்தது அந்தக் காரின் சத்தம். வாயிலில் நின்ற கூர்க்கா அவசரமாக கேற்றைத் திறந்துவிட, போர்ட்டிகோவில் வந்து நின்றது கார். ட்ரைவர் ஓடி வந்து கதவைத் திறப்பதற்கு முன் அவசரமாக இறங்கினார் விசாலாட்சி. அவசர அவசரமாக மாறனை நோக்கி வந்தவர்,

ரொம்ப சாரி மாறன், முதல் தடவை வீட்டுக்கு வந்திருக்கீங்க. இன்னைக்குன்னு இப்படி லேட் ஆகிடிச்சு. ஆம் ரியலி சாரி.”

இப்போ என்ன ஆச்சுன்னு இவ்வளவு பதட்டம் விசாலாட்சி?”

ரொம்பவே காக்க வச்சிட்டேன் மாறன்.”

அதெல்லாம் ஒன்னும் இல்லை, ரொம்ப டயர்டா தெரியுறே, போய் ஃப்ரெஷ் பண்ணிக்கிட்டு வாம்மா.” மாறன் சாதாரணமாக சொன்னது தான் தாமதம், விசாலாட்சியின் கண்கள் சட்டென்று குளமானது.

விசாலி என்னாச்சு? ஏன் கண் கலங்குது?” மாறன் பதட்டமாகக் கேட்க, புன்னகைத்தார் அந்தக் கலெக்டர்.

ஒன்னுமில்லை மாறன், ஒரு பத்து நிமிஷம் இதோ ஓடி வந்தர்ரேன்.” உள்ளே ஓட்டமும், நடையுமாக போனவரை பின் தொடர்ந்தது மாறனின் குரல்.

ஓடி எல்லாம் வர வேணாம், நிதானமாவே வாம்மா. எனக்கு ஒரு அவசரமும் இல்லை

சரி சரி.” உள்ளிருந்த வாறே சத்தம் போட்டார் விசாலாட்சி

அந்தப் பெண்ணின் செய்கைகளில் தெரிந்த உற்சாகத்தில் மாறன் கொஞ்சம் நெகிழ்ந்து போனார். சின்னப் பெண் போல நடந்து கொள்ளும் அவர், ஊருக்குள் ஒரு பெரிய கலெக்டர் என்று நினைக்கும் போது சிரிப்பு வந்தது இளமாறனுக்கு. அன்பு ஒரு மனிதனை எத்தனை தூரம் ஆட்டி வைக்கிறது. எண்ணத்தின் நாயகியே கையில் ட்ரேயை ஏந்தியபடி வந்து கொண்டிருந்தார். அவசர கதியில் புடவை மாறியிருந்தது.

அடேங்கப்பா, மின்னல் வேகம் தான் போல விசாலாட்சி?”

இல்லையா பின்னே, முதல் முதலா வீட்டுக்கு வந்திருக்கீங்க. இன்னைக்கு உங்களை காக்க வச்சுட்டேனே மாறன்.”

ஓஹோ! அப்போ அடுத்தடுத்த தரத்துல காக்க வெச்சா பரவாயில்லையா மேடம்?”

ம்அப்போ பரவாயில்லை மாறன்.” அவர் சொல்லி முடிக்க, இருவரும் சிரித்தார்கள். கெட்டிலில் இருந்த டீயை இரண்டு கப்புகளில் ஊற்றினார் விசாலாட்சி.

நான் இப்போதுதான் காஃபி குடிச்சேம்மா.”

பரவாயில்லை மாறன், எங்கூட இன்னொரு முறை சாப்பிடுங்க.” சொல்லியவர் கப்பை மாறனிடம் நீட்டினார்.

அப்படீங்கிறே.” சொல்லிக்கொண்டே கப்பை வாங்கியவர், ஏதோ புதிதாக உணர்ந்தார். தன் வாழ்க்கையில் இன்று வரை தான் அனுபவித்திராத உணர்வு இது என்று அவரது உள் மனதுக்கு புரிந்தது.

அப்புறம், சொல்லு விசாலாட்சி, எதுக்கு அவசரமா வரச் சொன்னே?”

மாறன், ஒரு கலெக்டரா நான் இதைப் பண்ணக் கூடாது. ஆனாலும் நீங்க பண்ணுறது நன்மையான ஒரு காரணத்துக்காக எங்கிறப்போ என்னால சொல்லாமலும் இருக்க முடியலை.”

எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லும்மா. ஒரு கை பாத்திரலாம்.”

பாத்தீங்களா, நீங்க கோபப் படுறீங்க. இது வேணாம் மாறன். நிதானமா நம்மை காரியத்தை நடத்திக்கப் பாக்கனுமே தவிர கோபப் படக்கூடாது.”

சரி, கோபப்படலை நீ சொல்ல வந்ததைச் சொல்லு.”

பெரிய லெவல்ல இருந்து ப்ரஷர் மாறன். நான் மாக்ஸிமம் ட்ரை பண்ணுறேன். அபிமன்யு நான் நினைச்சதை விட கொஞ்சம் பெரிய இடத்துப் பையன் போல தோணுது.”

இப்போ எந்த லெவல்ல இருக்கு ப்ராப்ளம்?”

அவங்களுக்கு சாதகமா முடியும் போல தான் தோணுது. என்னால முடிஞ்ச வரை நான் இழுத்தடிக்கலாம். என்ன, என்னைத் தூக்கிட்டு அவங்களுக்கு சாதகமான ஆளைப் போட்டு அவங்க வேலையை முடிச்சிருவாங்க.”

ம்இப்போ என்ன பண்ணலாம்?”

எனக்கு ஒன்னு தோணுது, ஆனா மாறன் கோபப் படக்கூடாது.”

இல்லை, சொல்லு விசாலாட்சி.”

அபிமன்யு கிட்ட நேரடியா இந்த விஷயத்தைப் பத்தி பேசினா என்ன?”

அந்த பொடிப் பயல்கிட்ட என்னைக் கெஞ்சச் சொல்லுறியா?”

இளமாறன் தன்னோட சொந்தத் தேவைக்காக ஒரு சின்ன பயல்கிட்ட கெஞ்சுறதை நான் அனுமதிக்க மாட்டேன். ஆனா ஊருக்கு ஒரு நல்லது எங்கிறப்போ அது தப்பில்லை மாறன்.”

ம்…” கர்ஜனையாக வந்தது மாறனின் பதில்.

நான் மிஸ்டர் தமிழ்ச்செல்வன் கிட்ட இது சம்பந்தமா பேசட்டுமா?”

தேவையில்லை, நானே சொல்லிக்கிறேன்.”

கோபமா இருக்கீங்களா மாறன்?”

ம்ச்கோபம் எல்லாம் இல்லைம்மா, சலிப்பா இருக்கு. நமக்கு இருக்கிற அக்கறை ஏன் மத்தவங்களுக்கு இல்லைன்னு நினைக்கிறப்போ, வேதனையா இருக்கு.”

கவலைப் படாதீங்க. ஏதோ ஒரு நல்ல முடிவு வரும்.”

ம்பார்க்கலாம். நான் கிளம்பட்டுமா விசாலி.”

இப்பதானே மாறன் வந்தீங்க, அதுக்குள்ள கிளம்பிட்டீங்க. இன்னைக்கு என்னோட சமையல். சாப்பிட்டுட்டு தான் போறீங்க.”

ஐயையோ! சமைக்கத் தெரியுமா விசாலி?”

மாறன், திஸ் இஸ் டூ மச். ஆனாலும் நீங்க என்னை இப்பிடிக் கேவலப் படுத்தக் கூடாது.”

சாரிம்மா, நாளைக்கு முக்கியமான வேலையெல்லாம் மில்லுல இருக்கு. நான் கண்டிப்பா போயே ஆகணும். பேசாம காஃபி போட்டுக் குடுத்த அம்மாவையே சமைக்கச் சொல்லிரலாமே.”

அவங்க கிளம்பிப் போய் ரொம்ப நேரமாச்சு. இன்னைக்கு நான் பண்ணுறதுதான் உங்களுக்கு டின்னர். அதையும் பாக்கலாம்.”

மாறனையும் இழுத்துக் கொண்டு சமையலறைக்குள் புகுந்தார் விசாலாட்சி. பேச்சும், சிரிப்பும், கிண்டலுமாக ஒரு இரண்டு மணித்தியாலங்கள் காற்றாய்ப் பறந்தது. மட்டன் பிரியாணியும், சிக்கன் ஃப்ரையும், இற்றாலியன் ஸ்டைல் சாலடும் கொடுத்த சுவையையும், நிறைவையும் விட அந்த நண்பர்களின் மனங்கள் வேறு ஏதோ ஒன்றால் நிறைந்திருந்தது.

 

 

 

   

error: Content is protected !!