vkv 23

vkv 23

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 23

வாழ்க்கை ஒரு ஒழுங்கிற்கு வந்திருந்தது உமாவிற்கும், சுதாகரனிற்கும். காலையில் எழுந்தால் ஒரு காஃபி போடுவது மட்டும் தான் உமாவின் வேலை. சில சமயங்களில் அதையும் சுதாகரனே செய்து விடுவான்.

ஒரு எட்டு மணி போல் பார்வதி அம்மா வந்து விடுவார். காலைப் பலகாரத்தை அவர் முடிக்க, இருவரும் உண்டு விட்டு கிளம்பி விடுவார்கள். அந்த black Audi பெரும்பாலும் இப்போது எஜமானி வசமே. சுதாகரனை மில்லில் விட்டு விட்டு அம்மா வீட்டுக்குப் போய் விடுவாள் உமா. சில நேரங்களில் ஹாஸ்பிடலுக்குச் சென்று குந்தவியோடு நேரங் கழிப்பாள்

குந்தவியும் தற்போது வழமைக்கு திரும்பி இருந்தார். உடலில் மெல்லிய சோர்வு இருந்தாலும், வீட்டில் சோம்பி உட்கார அவரால் முடியவில்லை. அதனால் காலையில் ஒரு இரண்டு மணித்தியாலங்கள் ஹாஸ்பிடலில் வந்து உட்காரப் பழகிக் கொண்டார். அத்தையும், மருமகளும் அந்நேரத்திற்கு ஒன்று சேர்ந்தால் அந்த இடமே கிடு கிடுக்கும். பேச்சும், சிரிப்புமாக பொழுது போகும்

மத்தியானம் சாப்பாட்டிற்கு வீட்டுக்கு வந்து விடுவான் சுதாகரன். உமாவோடு அதிக நேரம் செலவழிக்க அவன் கண்டுபிடித்த உத்தி இது. இருவரும் சேர்ந்தே மதிய உணவை உண்பார்கள். அதிகம் பேசா விட்டாலும் அவள் சொல்லும் ஒன்றிரண்டு பதில்களே அவனுக்குப் போதுமானதாக இருந்தது.

உண்டு முடித்த பின் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு சுதாகரன் மில்லுக்குக் கிளம்பினால், உமாவிற்கு போரடிக்கும். வீட்டில் ஏதாவது உருட்டிக் கொண்டிருப்பாள். பெரும்பான்மையான நேரம் அவள் பொழுது அந்த லைப்ரரியிலேயே கழிந்து விடும்.

எத்தனை வேலைகள் செய்து கொண்டிருந்தாலும், பின்னணியில் சுதாகரன் நினைப்பே ஓடிக்கொண்டிருக்கும் உமாவிற்கு. தன்னை சமாதானப் படுத்தவே அவன் இத்தனை முயற்சிகள் எடுக்கிறான் என்று புரிந்தாலும், ரணப்பட்ட மனது எதையும் ஏற்றுக்கொள்ள மறுத்தது

எத்தனை வீராப்பு மனதில் இருந்தாலும், அவன் அண்மையை அவள் மனது ரசித்ததென்னவோ உண்மைதான். அவன் வீட்டில் இருக்கும் பொழுதுகள் நொடியில் கரைவதும், அவனில்லாத பொழுதுகளை நெட்டித் தள்ளுவதும் வாடிக்கையாகிப் போனது உமாவிற்கு.

நெருங்க முடியவில்லையே தவிர, நெருங்கி வருபவனை வெறுக்கவும் முடியவில்லை அவளால். அன்பு வைத்த மனது அல்லாடித் தவித்தது.

அன்று ஞாயிற்றுக்கிழமை. விச்ராந்தியாக உட்கார்ந்திருந்தான் சுதாகரன். பார்வதி அம்மா காலையிலேயே வந்து காலை ஆகாரம் செய்து கொண்டிருந்தார். குந்தவி வீட்டில் வேலை செய்யும் பெண்மணியின் தங்கை இந்தப் பார்வதி.

நம்பகமான ஆள் வேண்டுமென்று சுதாகரன் சொல்லவே, இவரை குந்தவியே ஏற்பாடு பண்ணி இருந்தார். சிறு வயது முதலேயே சுதாகரனையும், உமாவையும் தெரிந்திருந்ததால் மிகவும் பாசமாக நடந்து கொண்டார் அந்த அம்மா.

உமாக்கண்ணு, தம்பிக்கு இடியாப்பம் ரொம்பவே பிடிக்கும். அதனால இன்னைக்கு அதுதான் பண்ணி இருக்கேன்.”

அப்பிடியாம்மா.” பொதுவாகப் புன்னகைத்து வைத்தாள் உமா.

நான் ஒன்னு சொல்லுறேன் கண்ணு, நல்லாக் கேட்டுக்க. இந்த ஆம்பிளைங்களை நம்ம கைக்குள்ள போட்டுக்கனும்னா நல்லா சமையலைக் கத்துக்கனும். வெளியே வீம்பாப் பேசிக்கிட்டாலும் எத்தனை நாளைக்கு ஹோட்டல்ல சாப்பிட முடியும் சொல்லு?”

ம்…” சிரிப்பென்ற பெயரில் இப்போது இளித்து வைத்தாள் உமா.

அதுலயும் நம்ம சுதாகர் தம்பிக்கு நாக்கு கொஞ்சம் நீளம்தான். சாப்பாடெல்லாம் எந்தக் குறையும் இல்லாம இருக்கனுமாம், எங்க அக்கா சொல்லிச்சு. அதனால்தான் சொல்லுறேன் கண்ணு, தம்பியை கெட்டியாப் புடிச்சுக்கனும்னா சீக்கிரமே சமையலைக் கத்துக்க.” பெரிய அறிவுரையை சொல்லிவிட்ட பெருமிதம் பார்வதி அம்மா முகத்தில் தெரிந்தது

எப்படா ஒட்டிக்கலாம்னு நேரம் பாத்துக்கிட்டு சமாதானக் கொடி புடிக்குது உங்க சுதாகர் தம்பி. இதுல நான் வேற சமையல் கத்துக்கிட்டேன்னு தெரிஞ்சுது, அவ்வளவுதான். எல்லாத்தையும் தூக்கித் தூரப் போட்டுட்டு குடும்பம் நடத்த ஆரம்பிச்சிருவாரு.’ வெளியே சொல்ல முடியாமல் மனதுக்குள் முணுமுணுத்தாள் உமா.

மது…” சுதாகரன் குரல் வெளியே கேட்கவும் கிச்சனை விட்டு வெளியே வந்தாள் உமா. டீவி பார்த்துக் கொண்டிருந்தவன் இவளைக் காணவும்,

மது, இன்னைக்கு எங்கேயாவது வெளியே போகலாமா?” என்றான். சட்டென்று அவன் கேட்கவும் அவளுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. சில வினாடிகள் அவள் சிந்திக்கவும்,

அடேங்கப்பா! யோசனை ரொம்பவே பலமா இருக்கு. நான் எங்கேயும் கடத்திக்கிட்டு போகமாட்டேன் அம்மணி, நீங்க தாராளமா என்னை நம்பி வரலாம்.” என்றான்

இல்லையில்லை, திடீர்னு கேக்கவும் எனக்கு என்ன சொல்றதுன்னு புரியலை. எங்க போகலாம்?” அவள் மறுப்பை எதிர்பார்த்தவன், அவள் சம்மதம் சொன்னதும் உற்சாகமாகிப் போனான்.

அதெல்லாம் சூப்பர் ப்ளேஸ் இருக்குது. நீ பார்வதி அம்மாகிட்ட சொல்லி லன்ச்சை பாக்ஸ்ல போட்டு எடுத்துக்கோ. இன்னொரு செட் ட்ரெஸ்ஸும் எடுத்துக்கோ மது.” வரிசையாக சொல்லி முடித்தான்.

எதுக்கு ட்ரெஸ்ஸெல்லாம்? நைட் வீட்டுக்கு வந்திருவோம் தானே?”

சொன்னா செய் மது.” சொன்னவன் முகத்தில் புன்னகை இருந்தது. அவன் சந்தோஷத்தைக் கெடுக்க விரும்பாமல் உமாவும் புறப்பட்டாள்.

அந்த black Audi திருமூர்த்தி ஃபால்ஸுக்கு வந்திருந்தது. சமீப காலமாக கேரளாவில் பெய்த கடும் மழை காரணமாக வழி நெடுகிலும் புதுப் புது அருவிகள் புதிதாக முளைத்து முகங் காட்டிச் சிரித்தன

சுதாகரன் அனுபவித்தானோ இல்லையோ, உமா மயங்கிப் போனாள். உடலைத் தழுவிய மெல்லிய பூங்காற்றும், காரில் ஒலித்த இளையராஜாவின் மெல்லிசையும் மனதை மயக்கியது. பக்கத்தில் இருந்தபடி காரை ஓட்டிக்கொண்டிருந்த மன்மதனும் இன்னொரு காரணமோ!

சுற்றுவட்டாரம் மிகவும் ரம்மியமாக இருந்தது. அருவிக்குப் போகும் முன்னம் மலையடிவாரத்தில் இருந்த சிவன் கோவிலைத் தரிசித்து விட்டு, மேலே ஏறத் தொடங்கினார்கள். உமா அணிந்திருந்த காலணிகள் ஏறுவதற்கு சிரமம் கொடுக்க, அவன் மட்டும் தன் க்ளைம்பிங் ஷூவை மாட்டிக்கொண்டு ஜம்மென்று ஏறினான்

இங்க தான் போகப் போறோம்னு முன்னாடியே சொல்லி இருந்தா நானும் ஷூ எடுத்துக்கிட்டு வந்திருப்பேன் இல்லை.” அங்கலாய்த்த உமாவைப் பார்த்தவன்,

ஸாரி மது, எனக்கு அது மறந்து போச்சு.” என்றான், அவள் கண்களைப் பார்க்காமல். ‘அத்தனையையும் பக்காவாக ப்ளான் பண்ணியவன், இதை மட்டும் மறந்து போனானா என்ன?’ சந்தேகத்தோடு உமா பார்க்கவும், சிரிப்பை விழுங்கிக் கொண்டான் சுதாகரன். பின்னேஷூவை மாட்டிக்கொண்டு நீயும் ஜம்மென்று ஏறினால், உதவுகின்ற சாக்கில் உன்னை உரச முடியாதே மதுஎன்று அவனால் சொல்ல முடியுமா என்ன?

மேலே ஏறியவன் அவள் பின்தங்குவதைப் பார்த்து, சற்று நேரம் தாமதித்தான். மூச்சு வாங்க மேலேறி வந்தவளுக்கு ஏறுவதற்கு வசதியாக அவன் கை கொடுக்க, மறுக்காமல் பற்றிக் கொண்டாள் உமா

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. ‘ஹோவென்ற பேரிரைச்சலோடு அருவி கொட்டிக் கொண்டிருக்க, ஆண்கள் ஒரு பக்கம், பெண்கள் ஒரு பக்கம் என குளித்துக் கொண்டிருந்தார்கள். சில வாலிப வட்டங்கள் ஜலக்கிரீடை நடத்திக் கொண்டிருந்தார்கள். சுதாகரனுக்கு உற்சாகம் பீறிட்டது.

மது நாமளும் குளிக்கலாமா? என்றான்.

ஐய்யைய்யோ! இங்கயா? இங்க எப்பிடிக் குளிக்கிறது?”

ஏன்? இவங்க எல்லாரும் குளிக்கிறாங்க தானே. அங்க லேடீஸுக்கு தனியா இடம் இருக்குது. நீ அங்க போய் குளி மது.”

ம்ஹூம்நீங்க குளிங்க, நான் அதுவரைக்கும் வெயிட் பண்ணுறேன்.”

என்னது? வெயிட் பண்ணப் போறியா! இவ்வளவு தூரம் வெயிட் பண்ணத்தான் வந்தியா? இன்னொரு செட் ட்ரெஸ் இருக்கில்லை? அதனால பயப்படாம குளி மது.”

இல்லையில்லை, எனக்கு இப்பிடி ஓபன் பிளேஸ்ல குளிச்சு பழக்கம் இல்லை. இவ்வளவு பேருக்கு முன்னால எப்பிடி?” அவள் சங்கடப்பட,

ஹேய்! அதுக்காக இப்போ இங்கே உனக்கு பாத்ரூம் கட்டவா முடியும்?” கேலியாகச் சொன்னவனைப் பார்த்துவெவ்வெவ்வேஎன பழிப்புக் காட்டிவிட்டு நகர்ந்து போனாள் உமா. நகர்ந்தவள் கையைப் பிடித்து நிறுத்தியவன்,

இப்போ பண்ணினது ரொம்ப நல்லா இருக்கு. அடிக்கடி இப்பிடிப் பண்ணனும் என்ன?” என்றான் சிரித்தபடி. அவனை முறைத்துக் கொண்டே அவள் நகரப் போக, அவளை நிறுத்தியவன்,

இன்னும் மேலே ஏறிப் போகலாம் மது.” என்றான். ஆச்சரியப் பட்டவள்,

இதுக்கு மேலேயும் போகலாமா என்ன?” என்றாள். அவள் பாவனையில் சிரித்தவன்,

அத்தானை என்னன்னு நினைச்சே!” என்றான் டீ ஷேர்ட் காலரை உயர்த்தியபடி. அவள் வாய்க்குள் ஏதோ முணுமுணுக்க, அவளை நெருங்கி வந்தவன்,

மது, எதுக்கு இப்பிடி ஒதுங்கி ஒதுங்கிப் போற? உன்னை எந்த வகையிலயும் கஷ்டப் படுத்தக் கூடாதுன்னுதான் இத்தனை நாள் மௌனமா இருந்தேன். ஆனா இனிமேலயும் என்னால பொறுக்க முடியலை. ‘அத்தான்னு கூப்பிடக் கூடவா உனக்கு மனசு வரலை.” என்றான் ஏக்கமாக

இப்படியொரு திடீர்த் தாக்குதலை உமா எதிர்பார்க்கவில்லை. தனிக் குடித்தனம் வந்த பிறகு எந்த வகையிலும் சுதாகரன் உமாவை தொல்லை பண்ணவில்லை.

அவள் பக்கத்தில் இருந்தால் அதுவே போதும் என்பது போலவே நடந்து கொண்டான். முடிந்தவரை அவள் பக்கத்தில் இருக்கும்படியும் பார்த்துக் கொண்டானே தவிர, எந்த எதிர்பார்ப்பும் அவனிடத்தில் இருந்ததில்லை

இதற்கே பழக்கப்பட்டிருந்த உமா திடீரென்று அவன் கேட்கவும், சற்று திணறிப் போனாள். அவள் பக்கத்தில் இன்னும் நெருங்கி வந்தவன், அவள் கைகள் இரண்டையும் பற்றி,

இப்போ இங்க வர்றப்போ நாம ரெண்டு பேரும் சிறுவானிக்குப் போனது ஞாபகம் வருது மது. எவ்வளவு சந்தோஷமா போனோம் மது. அந்தப் பொழுதும், அந்த மதுவும் எனக்கு

 வேணும்டா.” என்றான். உலகத்துக் காதலெல்லாம் அந்தக் குரலில் இருந்தது

சொல்லு மது, எதுக்கு இந்த ஒதுக்கம்? உனக்காகவே நான் என்னைத் திருத்திக்க நினைக்கிறது உனக்குப் புரியலையா? நான் இன்னும் என்ன பண்ணினா உன்னோட கோபம் குறையும் மது? எது உன்னை மறுபடியும் எங்கிட்டே கொண்டு வரும் மது? எது உன்னை மறுபடியும் என்னை அத்தான்னு கூப்பிட வைக்கும்?” அவன் கிறக்கத்துடன் பேசிக் கொண்டே போக, ஒரு பெருமூச்சுடன் அவனை விட்டு நகர்ந்து போனாள் உமா.

இப்படிப் பேசும் சுதாகரன் அவளுக்குப் புதிது. தன் பிடியையே வென்று பழகியிருந்தவனைப் பார்த்தவளுக்கு, அவன் கெஞ்சுவது கஷ்டமாக இருந்தது. எதையும் சிந்திக்காமல் மேலே ஏறிப் போனாள். அதற்கு மேல் ஏற அனுமதி கிடைக்காமல் போக, தனக்குத் தெரிந்த ஒரு ஃபாரெஸ்ட் ஆஃபிஸரின் பெயரைச் சொல்லி அனுமதி பெற்றான் சுதாகரன்.

யாருமற்ற தனிமை அங்கிருந்தது. ஏகாந்தம் இருவரையும் சூழ்ந்திருக்க, அந்த நீர்ப்பரப்பை பார்த்தபடி நின்றாள் உமா. அருவியின் ஆரம்பப் புள்ளி அது. இங்கு இத்தனை அமைதியாகத் தேங்கி நிற்கும் நீர்தான், அத்தனை பேரிரைச்சலுடன் கொட்டிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் யாராலும் நம்ப முடியாது. நீருக்குள் நடப்பது அத்தனை சுகமாக இருந்தாலும் கொஞ்சம் பயமாக இருந்தது உமாவிற்கு.

அவள் எத்தனை தூரம் அவனைப் புற்கணித்தாலும், அவள் அருகாமை கொடுத்த மலர்ச்சி அவன் முகத்தில் வாடாமல் இருந்தது. அவள் நீருக்குள் நடக்கப் பயப்படுவது அவனுக்கு நன்றாகப் புரிந்தாலும், அவளாக வாய்விட்டு உதவி கேட்கட்டும் என்று மௌனமாகவே நடந்தான்.

எனக்கு தனியா நடக்கப் பயமா இருக்கு.” சொல்லிவிட்டு அவள் காத்திருக்க, அவன் எதையும் சட்டை செய்யாமல் மேலே நடந்தான்.

நான் பேசுறது கேக்குதா உங்களுக்கு?” சத்தமாக அவள் குரல் கொடுக்க, இப்போதும் மௌனமாகவே நடந்தான் சுதாகரன். அவன் வேண்டுமென்றே இப்படிப் பண்ணுகிறான் என்று புரியவும், அவளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

ஏய்சுதாகரா!” என்றாள் சத்தமாக. இப்போது சட்டென்று அவன் நடை நிற்க, திரும்பிப் பார்த்தவன்,

அடிங் கொய்யால! பேர் சொல்லியா கூப்பிர்ற நீ? பொறுடி, இதோ வர்றேன்என்றவன், விடு விடுவென அவள் பக்கம் வந்தான். அவன் வருவதையே கைகளைக் கட்டிக்கொண்டு பார்த்திருந்தவள்,

இவ்வளவு நேரமும் நான் பேசினது கேக்கலை, இப்போ மட்டும் கேட்டுச்சா?” என்றாள்.

நீ யார்கூடவோ பேசுறேன்னு நான் எம்பாட்டுக்கு போனேன்.”

ம்ஊர் மொத்தமும் இங்கே கூடி நின்னு திருவிழா நடத்துது பாருங்க, நீங்க அப்பிடி நினைக்கிறதுக்கு.”

அதுக்காக, நீ பேர் சொல்லிக் கூப்பிடுவியா?”

உங்களுக்குப் பேர் வெச்சதே நான் கூப்பிடத்தான்.” அவன் கண்களுக்குள் பார்த்து அவள் சொல்ல அவன் ஸ்தம்பித்துப் போனான். அவளின் அந்த உரிமையான வார்த்தை அவனை என்னவோ செய்தது.

மது…” அவன் ஏதோ சொல்ல வாயெடுக்க, ஒற்றைக் கையை உயர்த்தி அவனைத் தடுத்தாள் உமா.

போதும் அத்தான். இந்தக் கண்ணாமூச்சி ஆட்டத்தை இதோட நிறுத்திக்கலாம். நீங்க இப்பிடிக் கெஞ்சிக்கிட்டு நிக்குறதைப் பாக்கும் போது எனக்கு கஷ்டமா இருக்கு. நீங்க பண்ணினதை எந்த அளவுக்கு என்னால ஏத்துக்க முடியலையோ, அதே அளவுக்கு உங்களை விட்டுக் கொடுக்கவும் என்னால முடியாது.” அவள் சொல்லி முடிக்கவும் பேச மறந்து நின்றான் சுதாகரன். அவளின்அத்தான்என்ற ஒற்றை வார்த்தை அவனை அத்தனை பரவசப்படுத்தி இருந்தது.

மது, நான் சொல்லுறதைக் கொஞ்சம் கேளு மது. சில இடங்கள்ல நான் மௌனமா இருக்கிறதால உம்மேல எனக்கு அன்பு இல்லைன்னோ, உன்னை நான் விட்டுக் குடுக்கிறேன்னோ அர்த்தம் இல்லைம்மா.”

உண்மைதான் அத்தான். நானும் அதை ஒத்துக்கிறேன். அந்த ஒரு இடத்துல நீங்க என்ன மட்டும் விட்டுக் கொடுக்கலை, உங்க அம்மாவையும் தான் விட்டுக் குடுக்கிறீங்க. நாளைக்கு நமக்கு ஒரு குழந்தை பொறந்தா அதையும் அந்த ஒரு இடத்துல விட்டுக் கொடுப்பீங்க.” வேண்டுமென்றே அழுத்தி ஒரு வெறுப்போடே அவள் சொல்லி முடிக்க, அவள் அருகில் வந்து அவள் கன்னத்தைத் தடவிக் கொடுத்தவன்,

சரி, நீ சொல்ற மாதிரியே வெச்சுக்கிட்டாலும் எங்கம்மா படுற கஷ்டத்தை நான் உனக்கு குடுக்கலையே மது.” என்றான்.

ஆமா, அந்த விஷயத்துல உங்களை நான் பாராட்டியே ஆகனும். ஆனா, இது நிரந்தரமான முடிவு இல்லை அத்தான்.”

எனக்கும் தெரியும் டா. எல்லாத்துக்கும் காலம் பதில் சொல்லும். இதுவரைக்கும் என் வீட்டுக்கு நான் ஒரு நல்ல மகனாத்தான் நடந்திருக்கேன். இனிமே என் மதுக்கு ஒரு நல்ல புருஷனா இருந்தா போதும். இதை நான் மட்டும் சொல்லலை, உங்க மாமியாரும் தான் சொன்னாங்க.” சொன்னவனை வியப்பாகப் பார்த்தாள் மது. அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் ஒன்று வைத்தவன்,

குளிக்கலாமா மது?” என்றான். அவள் லேசாகத் தலையாட்டவும், அத்தனையையும் மறந்து அந்தப் பொழுதை அனுபவிக்கத் தொடங்கினான் சுதாகரன். ஒரு பாறைமேல் உட்கார்ந்து இடையளவு நீரில் முங்கிக் குளித்தவள், முகம் மலர்ந்து போய்க் கிடக்க, குதூகலமாகக் குளிக்கும் அவனையே இமைக்க மறந்து பார்த்திருந்தாள்.

                                            ————————————————————–

அந்த black Audi வாசலில் வந்து நிற்கவும், உள்ளே பார்த்து குரல் கொடுத்தார் இளமாறன்.

விசாலி, சுதாவும், உமாவும் வந்தாச்சு.”

அட, மாமாவோட ரொமான்ஸைப் பாத்தியா மது. விசாலியாம்!” காரிலிருந்து இறங்கியபடி கேலி பண்ணினான் சுதாகரன். மலர்ந்த புன்னகையை வாய்க்குள் விழுங்கியவள், அந்தப் பையை எடுத்துக்கொண்டு இறங்கினாள்.

இந்தாங்க சித்தப்பா, உங்களுக்கும், சித்திக்கும் ஸ்பெஷல்ஞானிப்பூவன்பழம்.” பையை இளமாறனிடம் நீட்டினாள் உமா

அடடே, ஃபால்ஸ் போயிருந்தீங்களா என்ன? சூப்பர்! பூவன் பழமா உமா, குடு குடு.” அந்தப் பழத்தின் தித்திப்பை விட அவர்கள் இருவரும் ஒன்றாக வெளியே உலாப் போனது இனித்தது இளமாறனுக்கு. அதற்குள் வெளியே வந்த விசாலாட்சி,

வாங்க வாங்க. இப்போதான் எங்க வீட்டுக்கு வர்றதுக்கு வழி தெரிஞ்சுதா ரெண்டு பேருக்கும்? உக்காருங்கப்பா.” கலெக்டர் என்ற பந்தா எதுவுமில்லாமல் இளமாறனின் மனைவியாக மாத்திரம் நின்றிருந்த அந்தப் பெண்மணியை உமா இமைக்காமல் பாத்திருந்தாள்.

என்ன உமா, அப்பிடிப் பாக்குற?” இளமாறன் ஆச்சரியமாக வினவ, அவரைத் திரும்பிப் பார்த்தவள்

எப்பிடிச் சித்தப்பா! எப்பிடி சித்தியால இவ்வளவு நார்மலா இருக்க முடியுது? எனக்குத் தெரிஞ்சு இவ்வளவு சிம்பிளான ஒரு கலெக்டரை இது வரைக்கும் நான் பார்த்ததில்லைப்பா.” கேலியாக அவள் சொல்லி முடிக்க,

ஆமா, ரொம்பத்தான் கண்டுட்டே.” என்ற இளமாறன் செல்லமாக அவள் முதுகில் ஒரு அடி வைத்தார். இவர்களின் அன்னியோன்யத்தை சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தார் விசாலாட்சி.

ஆனாலும் சித்தி, உங்க மேல எனக்கு சின்னதா ஒரு கோபம் உண்டு.” உமா சொல்லவும், இளமாறனும், விசாலாட்சியும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டனர்.

என்ன உமா? அப்பிடி என்ன கோபம் இந்தச் சித்தி மேல?” புன்முறுவலுடன் கேட்டார் விசாலாட்சி.

எங்கப்பாவை நீங்க ரிஜெக்ட் பண்ணிட்டீங்களே, இது நியாயமா?” சிரித்தபடியே உமா கேட்க, இப்போது விசாலாட்சியின் முகம் சிரிப்பைத் தொலைத்திருந்தது. தலை குனிந்த படி அவர் அமர்ந்திருக்க, இளமாறன் இப்போது தன் மனைவிக்காக பேச ஆரம்பித்தார்.

அது வந்துஉமா…” அவர் திக்கித் திணறிய தோரணையில் பக்கென்று சிரித்தவள்

எதுக்கு சித்தப்பா மென்னு முழுங்குறீங்க? நான் சும்மா விளையாட்டுக்குத்தான் அப்பிடிச் சொன்னேன்.”

மது, என்ன பேசுற நீ?” எதுவும் தெரியாத சுதாகரன் ஆச்சரியப் பட்டபடி கேட்டான்

உமாஅது என்ன நடந்ததுன்னாசித்தி மேல எந்தத் தப்பும் இல்லைடா.” இளமாறன் மீண்டும் மனைவியை நியாயப்படுத்தவும், சுதாகரனை முறைத்துப் பார்த்தாள் உமா.

ஐயையோ, நான் என்ன பண்ணினேன்? எதுக்கு என்னை முறைச்சுப் பாக்கிற?”

ம்சித்தப்பாக்கிட்ட கத்துக்கங்க. சித்திக்கு ஒன்னுன்னா எப்பிடி வரிஞ்சு கட்டிக்கிட்டு வர்றார் பாத்தீங்கல்ல.” அவள் முறைத்தபடியே பேசவும் நொந்து போனான் சுதாகரன். ‘ராட்சசி, எந்தப் பக்கம் போனாலும் அடிக்கிறாளே!’ 

தப்பு தான் உமா. அன்னைக்கு…” விசாலாட்சியை தொடர்ந்து பேச விடாமல் தடுத்தவள்

ஐயோ சித்தி, வீட்டுல அன்னைக்கு சும்மா கேலியா பேசிக்கிட்டாங்க. அதை நான் சொன்னா நீங்க சீரியஸ் ஆகிட்டீங்க?” சிரித்தவளையே விசாலாட்சி பார்த்திருக்க,

யாரு பேசினாங்க உமா?” என்றார் இளமாறன்.

அதை ஏன் கேக்குறீங்க சித்தப்பா! அம்மாவும், பாட்டியும் சேந்து அப்பாவை ஒரு வழி பண்ணிட்டாங்க. பாவம் அப்பா, அசடு வழிய சிரிச்சிக்கிட்டே உக்காந்திருந்தாங்க.” அன்றைய நாள் நினைவில் உமா வாய்விட்டுச் சிரிக்க, இப்போது இளமாறனும் புன்னகைத்தார். அமைதியாக உட்கார்ந்திருந்த விசாலாட்சியை கவனித்த உமா, அவர் பக்கத்தில் போய் அமர்ந்து அவர் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.

நீங்க எதுக்கு சித்தி இப்பிடி கில்டியா ஃபீல் பண்ணுறீங்க? உங்களை யாருமே எதுவும் தப்பா சொல்லலை. வீட்டுல எல்லாரும் எங்கப்பாவைத் தான் கேலி பண்ணினாங்க. உங்களைப் பத்தி தப்பா பேசி இருந்தா என்னால இப்பிடி ஃப்ரீயா பேச முடியுமா?” உமா சொல்லவும், கலக்கம் தீர புன்னகைத்தார் விசாலாட்சி

எங்கம்மா என்ன சொன்னாங்க தெரியுமா?” கேட்டவளைக் கேள்வியாகப் பார்த்தார் விசாலாட்சி.

விசாலாட்சிக்கு நான் நன்றிதான் சொல்லனும் அத்தை, இல்லைன்னா அன்னைக்கு கோயில்ல என்னோட நிலைமை என்ன ஆகியிருக்கும்னு சொன்னாங்க.” ஆராதனாவின் திருமணத்தில் ஏற்பட்ட குழப்பத்தை ஏற்கனவே இளமாறன் மூலம் அறிந்திருந்த விசாலாட்சி புன்னகைத்தார்.

அதுக்கு எங்க பாட்டி, விசாலாட்சி தப்பிச்சுட்டா, நீ மாட்டிக்கிட்டேன்னு சொல்லிச் சிரிச்சாங்க.” சொல்லிவிட்டு உமா சிரிக்க, இப்போது எல்லோரும் சிரித்தார்கள்

சாப்பிடலாமா விசாலி?” இளமாறன் கேட்கவும், உள்ளே எழுந்து போனார் விசாலாட்சி. கூடவே உமாவும் உள்ளே அவரோடு செல்ல,

என்ன நடந்தது மாமா?” என்றான் சுதாகரன். இளமாறன் ஆதியோடு அந்தமாக எல்லாவற்றையும் சொல்லி முடிக்க,

…! இவ்வளவு நடந்திருக்கா? எங்கம்மா மூச்சு விடலை பாருங்களேன்.” என்றான்

அவ என்னைக்கு எங்களை விட்டுக் குடுத்திருக்கா?” என்றார் இளமாறன் பெருமையாக.

அது உண்மைதான்.”

சுதாகரனையும், உமாவையும் அன்று டின்னருக்கு அழைத்திருந்தார்கள் இளமாறன் தம்பதியினர். கல்யாணம் முடிந்த பிறகு யார் வீட்டிற்கும் போகாதவர்கள் இங்கே வர சம்மதித்து இருந்தனர்.

கலகலவென பேசிக்கொண்டே உண்டு முடித்தார்கள். இத்தனை நாளும் சற்று ஒதுக்கத்தையே காட்டிய உமா, அன்று சற்று மனம்விட்டுச் சிரித்தது சுதாகரனுக்கு ஆனந்தமாக இருந்தது. இருவரும் வீடு வந்து சேர பத்தைத் தாண்டி விட்டது. கதவை சுதாகரன் திறக்க உள்ளே நுழைந்தவளைத் தடுத்தது அவன் குரல்.

மது, இன்னைக்கு நியூஸ் பாத்தியா?” அவள் முன்னால் வந்து நின்று அவன் கேட்க,

இல்லையே, ஏதாவது ஸ்பெஷல் நியூஸ் இருக்கா?” என்றாள்

வெதர் ரிபோர்ட்ல இன்னைக்கு இடி, மின்னல், மழைன்னு சொன்னாங்க.” அவன் கேலியாக சொல்ல, அவனை முறைத்து விட்டு நகர்ந்து போனாள் உமா. அவள் கையைப் பிடித்து நிறுத்தியவன்,

எனக்கு வர வேண்டியது எல்லாம் விசாலாட்சி அத்தைக்குப் போகுதுஎன்றான். அவள் மௌனமாகத் தரையைப் பார்த்து நிற்க,

இன்னும் எத்தனை நாளைக்கு மது?” ஏக்கமாகக் கேட்டவன், ஒரு பெருமூச்சோடு ரூமிற்குள் சென்று கதவடைத்துக் கொண்டான். அவன் பண்ணாத தொல்லையை அவன் வார்த்தைகள் செவ்வனே செய்து முடித்தன. துவண்டு போனாள் மாதுமையாள்

 

 

 

error: Content is protected !!