வண்ணம் கொண்ட வெண்ணிலவே 8
2018 இன்று, காலை 7:00 மணி.
மகேஷ் அமைதியாக டைனிங் டேபிளில் உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தான். ஃபோன் சிணுங்கவே எடுத்துப் பார்க்க, உமா என்றது. ‘இவ எதுக்கு காலங்காத்தால கூப்பிடுறா?’ யோசனை செய்தபடியே அழைப்பை ஏற்றவன்,
“குட் மார்னிங் உமா.” என்றான்.
“மகேஷ், அத்தான் எங்க?”
“ஏன்? உன் கண்ணுக்கு என்னைப் பாத்தா அத்தான் மாதிரி தெரியலையா?’
“விளையாடாத மகேஷ், அத்தான் எங்கன்னு சொல்லு?”
“சோஃபாவில உட்காந்து பேப்பர் படிக்கிறான். என்ன ஆச்சு உமா?”
“நேத்து நைட்ல இருந்து அத்தான் ஃபோன் ஸ்விச்ட் ஆஃப் ன்னு வருது.”
“ஆஹா, என்னங்கடா நடக்குது! அம்மணி எதுக்கு அவர் போனுக்கு ட்ரை பண்ணுறீங்க?”
“வேற எதுக்கு? பேசத்தான்.”
“இது எப்போ இருந்து?” மகேஷ் ஆச்சரியத்தின் உச்சத்தில் சத்தம் போட்டான். குரலில் குறும்பு இழையோட வந்தது உமாவின் பதில்.
“நேத்து அத்தான் ஃபோன் பண்ணினாங்க. வெளியே ஒரு ட்ரைவ் போனோம்.”
“பாத்தியா, அத்தானை பாத்த உடனே மகேஷை மறந்துட்டயே. பசங்க தான் ஃபிகரை பாத்தா ஃப்ரெண்டை கழட்டி விடுவாங்க, நீயுமா தாயீ…” சிவாஜி ஸ்டைலில் அங்கலாய்த்தான் மகேஷ்.
“உனக்கு கூப்பிட்டு சொல்லனும்னு தான் நினைச்சேன் மகேஷ், அதுக்குள்ள அத்தான் திரும்ப கால் பண்ணினாங்க.”
“யாரு? நம்ம கூடப் பொறந்ததா! அது அப்படியெல்லாம் பண்ணாதே…!”
“ஆமா, நீ இப்படியே நினைச்சுக்கிட்டு இரு. ஐயா ஃபீலிங்ஸோ ஃபீலிங்ஸ் நேத்து.”
“என்ன ஆச்சு உமா?”
“மூஞ்சை பாறாங்கல்லு மாதிரி வெச்சுக்கிட்டு என்னமா ரொமான்ஸ் பண்ணுறாரு தெரியுமா?”
“என்னடி உமா சொல்லுற? எனக்கு மயக்கம் வரும் போல இருக்கே.”
“நான் மயங்கியே போய்ட்டேன் மகேஷ்.” இரு பொருள் பட வந்தது உமாவின் பதில்.
“இது டபுள் மீனிங் மாதிரி இருக்கே..!”
“அதை விடு, நைட் அத்தான் பேசும் போது சும்மா தமாஷுக்கு ரவீனா பத்தி பேசினேன். கோபத்துல ஃபோனை ஆஃப் பண்ணிட்டாரு.”
“கெட்டது குடி, சொதப்பிட்டயா? நேத்துத் தான் பேசவே ஆரம்பிச்சிருக்கான், அதுக்குள்ள அவனை சீண்டி விட்டுட்டயா?”
“ஜஸ்ட் ஃபோர் ஃபன் மகேஷ், நாம எப்பிடியெல்லாம் பேசிக்கிறோம். நீ எதையாவது தப்பா எடுத்துக்கிறயா? இல்லையில்லை?”
“இங்கப்பாரு உமா, நான் வேற அவன் வேற. சின்ன விஷயத்தை கூட பெரிசா யோசிப்பான். ஸச் அன் இமோஷனல் இடியட், அவன் கூட பேசும் போது கவனமா பேசனும், புரியுதா?”
“ம்…”
“இப்ப என்ன பண்ணப் போறே? என்னை வேற காச்சப் போறான். எதுக்கு ரவீனா பத்தியெல்லாம் உமாகிட்ட சொன்னேன்னு.”
“திட்டினா வாங்கிக்கோ. அத்தானை ஃபோனை ஆன் பண்ணச் சொல்லு மகேஷ்.”
“திட்டுவான் உமா.”
“அப்ப நீ நைஸா ஆன் பண்ணிடு.”
“பின் நம்பர் கேக்குமேடி? அதுக்கு நான் எங்க போவேன்?”
“யாமிருக்க பயமேன் மகேஷ். அம்மணியின் டேட் ஒஃப் பேர்த்தை அழுத்து, அத்தானின் சொர்க்க வாசல் திறந்து கொள்ளும்.” நாடக பாணியில் உமா சொல்ல,
“என்னங்கடி நடக்குது இங்க?” பெருங்குரலெடுத்து கத்தினான் மகேஷ். வாய்விட்டு சிரித்த உமா,
“என்னென்னமோ நடக்குது மகேஷ்!” என்றாள்.
இவன் போட்ட சத்தத்திற்கு அங்கிருந்த படியே திரும்பிப் பார்த்த சுதாகரன் ‘என்ன?’ என்பது போல் கேள்வியாகப் பார்த்தான்.
“ஒன்னுமில்ல அண்ணா, ஃபோன் ஆஃப் ல இருக்கா என்ன?” என்றான்.
சுதாகர் எதுவுமே பேசவில்லை. பேப்பரை தூக்கி டேபிளில் போட்டவன், தனது ரூமிற்குள் சென்று கதவடைத்துக் கொண்டான்.
“என்னாச்சு மகேஷ்?”
“ரூமுக்குள்ள போய்ட்டான். உமா, இன்னைக்கு மில்லுக்கு போகணும்னு நேத்து அம்மாக்கிட்ட சொல்லிக் கிட்டு இருந்தான். நீ அங்க போய்ப்பாரு.”
“திட்டினா என்ன பண்ண மகேஷ்?”
“ஆ… பேசுறதுக்கு முன்னாடி இந்த புத்தி எங்க போச்சு?”
“நீயும் திட்டாத மகேஷ், முப்பத்தி ரெண்டு தடவை கால் பண்ணிட்டேன்டா.”
“சரி விடு, அரசியல்ல இதெல்லாம் சகஜம். சொதப்பாம போய்ப் பேசணும் என்ன?”
“ம்…பை மகேஷ்.”
“பை.”
________________________________
தமிழின் ஆஃபிஸ் அறையில் உட்கார்ந்து தமிழ்ச்செல்வன், இளமாறன், சுதாகரன் மூவரும் காரசாரமாக அடுத்த ஏற்றுமதி பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். சட்டென்று கதவைத் திறந்து கொண்டு உமா உள்ளே நுழைந்தாள்.
“அடடே! உமா வா வா, என்ன திடீர்னு வந்திருக்கே.” மாறன் வியப்பாக வினவினார்.
“சித்தப்பா, அத்தானை எங்கூட பேசச் சொல்லுங்க.” விட்டால் அழுதுவிடும் முகத்தோடு மாறனிடம் புகார் வைத்தாள் உமா.
“என்ன சுதா, எத்தனை நாளைக்குத் தான் உமாவோட பேசாம இருக்கப் போற? இது நல்லா இல்லை நான் சொல்லிட்டேன்.”
“இல்லை சித்தப்பா, அத்தான் நேத்து எங்கூட பேசினாங்க. இன்னைக்குத் தான் பேச மாட்டேங்கிறாங்க.”
“ஐய்யைய்யோ! சின்ன பசங்க மாதிரி இது என்ன ரெண்டு பேரும்? பேசு சுதா, பாவம் புள்ளை முகமே வாடிப்போச்சு.”
“நேத்து பேசின அத்தான் இன்னைக்கு பேசலைன்னா நீ என்ன பண்ணின?” சரியாக பாயின்டை பிடித்தார் தமிழ்.
“என்னப்பா தமிழ் நீ, சும்மா குறுக்கு விசாரணை பண்ணிக்கிட்டு. நம்ம அத்தான் தானேன்னு உமா ஏதாவது பேசி இருக்கும். அதுக்கு நீ கோவிச்சுக்கலாமா சுதா? புள்ளை கூட பேசு.” கட்டளையிட்டார் மாறன்.
“எல்லாரும் செல்லம் குடுத்து குடுத்து வாய் இப்ப கொஞ்சம் அதிகமாகிருச்சு உமா. பொண்ணுங்களுக்கு இத்தனை வாய்த்துடுக்கு நல்லதுக்கில்லை. சுதாக்கு கோபம் வர்ற அளவுக்கு அப்பிடி என்ன பேசின?”
ஒரு தகப்பனாக தமிழ் கண்டிக்க உமாவுக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது. இத்தனையும் பேசும் போதும் சுதாகர் அமைதியாக உட்கார்ந்து இருந்தான், எதுவும் பேசவில்லை. பொறுக்க முடியாமல் கண்களில் கண்ணீர் வழிய ரூமை விட்டு வெளியேறினாள் உமா.
“நில்லு உமா.” மாறனின் அழைப்பை அவள் காதில் போட்டுக் கொள்ளவில்லை.
“எதுக்கு மாமா இப்ப அவளைத் திட்டினீங்க?” சுதாகரன் தமிழை நோக்கி கேட்க, விக்கித்துப் போன தமிழ்…
“உனக்காகத் தானேப்பா நான் பேசினேன்!” என்றார்.
“அதை நான் பாத்துக்குவேன் இல்லை, எனக்கு கோபம் வந்தா நான் அவளை திட்டுவேன், நீங்க எதுக்கு திட்டுறீங்க? இப்ப பாருங்க அழுதுகிட்டே போறா.” சுதாகரன் சட்டென எழுந்து உமாவின் பின்னோடு போக,
“என்னப்பா நடக்குது இங்க?” என்றார் தமிழ்.
“ஒன்னும் புரியல தமிழ். நீ பெத்த பொண்ணை அவன் திட்டுவானாம், ஆனா நீ திட்டக் கூடாதாம்.”
இளமாறன் விளக்கம் சொல்ல இரண்டு பேரும் வெடிச் சிரிப்பு சிரித்தார்கள். அவர்கள் சிரிப்பை மீறிக் கொண்டு தொலைபேசி அலறியது.
“ஹலோ, தமிழ்ச்செல்வன் ஸ்பீக்கிங்.”
“தமிழ், குந்தவி பேசுறேன்பா.”
“சொல்லு குந்தவி.”
“ஹாஸ்பிடல் பக்கத்துல வரப்போற டை ஃபேக்டரி பத்தி கலெக்டருக்கு ஒரு மனு குடுத்திருந்தோம் இல்லையா?”
“ஆமா.”
“அது சம்பந்தமா பேசுறதுக்கு வரச்சொல்லி சப் கலெக்டர் கிட்டயிருந்து லெட்டர் வந்திருக்குப்பா. நீயும், மாறனும் ஒரு எட்டு இங்க வந்து போறீங்களா? ப்ரபா இன்னும் டெல்லியில இருந்து வரலை.”
“சரி குந்தவி, பின்னேரம் போல நாங்க வந்திர்ரோம். பேசலாம்.” பேசிவிட்டு தமிழ் தொலைபேசியை வைக்க, மாறன் கேள்வியாகப் பார்த்தார்.
“ஒன்னுமில்லைப்பா, அந்த டை ஃபேக்டரி பத்தி மனு குடுத்திருந்தோம் இல்லையா? அது சம்பந்தமா கலெக்டர் ஆபீஸில் இருந்து லெட்டர் வந்திருக்காம். குந்தவி வரச் சொல்லுது.”
“தமிழ், இந்த விஷயத்துல முழு மூச்சா இறங்கி நான் வேலை பண்ணுறதுன்னு நான் முடிவு பண்ணியிருக்கேன். அவங்க ஊரையெல்லாம் விட்டுட்டு எதுக்கு கேரளாவிலிருந்து இங்க ஃபேக்டரி கட்ட வாறானுங்க?”
“வேற எதுக்கு? நம்ம ஊரை நாசம் பண்ணத்தான்.”
“அதைச் சொல்லு. ஜனங்களுக்கு வேலை வாய்ப்பு கூடுது எங்கிறது மட்டும் தான் கண்ணுக்கு தெரியுமே தவிர, இவனுங்க பண்ணி வைக்கப்போற நாசம் தெரிய மாட்டேங்குது. நம்ம ஊர் ஏரியை ஒரு வழி பண்ணத்தான் இவனுங்க வாறானுங்க தமிழ்.”
“ம்… கண்டிப்பா மாறா. பக்கத்துல ஹாஸ்பிடல் வேற இருக்கு. கழிவுகளையெல்லாம் ஒழுங்கா அப்புறப்படுத்தினா பிரச்சினை இல்லை. ஆனா இவனுங்க ஒழுங்காவா இதெல்லாம் பண்ணப் போறானுங்க?”
“கிழிப்பானுங்க. எத்தனை நியூஸ் பாக்குறோம், நமக்குத் தெரியாதா இவனுங்க என்ன பண்ணுவானுங்கன்னு.”
“அது சரிதான். கலெக்டரை அவனுங்க கைக்குள்ள போட்டுக்கிட்டா நம்மளால ஒன்னும் பண்ண முடியாது மாறா.”
“அதையும் தான் பாப்போமே. அவனுங்க கைக்குள்ள போடுறதுக்கு முன்னாடி நாம போட்டுக்கலாம். எந்த லாபமும் இல்லாம சேவை அடிப்படையில தான் இந்த ஹாஸ்பிடல் நடக்குதுன்னு அந்த கலெக்டருக்கு எடுத்துச் சொல்லுவோம். அவரும் மனுஷன் தானே, புரிஞ்சுக்க மாட்டாரா என்ன?”
“முடிஞ்சவரை முயற்சி பண்ணி பாப்போம் மாறா.”
“ம்… பசிக்குது, சாப்பிடலாம் தமிழ்.”
“சரிப்பா, இதுங்க ரெண்டும் எங்கப்பா?”
“அதுங்க அடிச்சு மூட்டிட்டு ஆறுதலா வரட்டும், வா நாம சாப்பிடலாம்.” இருவரும் சிரித்தபடி போனார்கள்.
___________________________
என்றுமே இப்படிப் பேசியிராத அப்பா இன்று சற்று குரலை உயர்த்திப் பேசவும் கண்கள் குளமாகிவிட்டது உமாவுக்கு. சுதாகரனின் பாராமுகமும் அவளை வாட்ட சட்டென்று வெளியே வந்தவள் ஸ்கூட்டியையும் மறந்து வேகமாக ரோட்டில் இறங்கினாள்.
“அம்மா, வண்டியை விட்டுட்டு போறீங்களே!” வாட்ச்மேன் சத்தமாகக் கூற எதையும் பொருட்படுத்தாமல் ரோட்டை க்ராஸ் பண்ணினாள். கண்களில் வழிந்த கண்ணீர் அனைத்தையும் மறைக்க எதிரே வந்த அந்த விலை உயர்ந்த பென்ஸை அவள் கவனிக்கவில்லை. திடீரென அடித்த ப்ரேக்கில் கார் கிறீச்சிட்டது. கண்ணாடி மெதுவாக இறங்க ட்ரைவர் சீட்டில் இருந்த அந்த இளைஞன் இவளைத் திட்ட வாய் திறந்துவிட்டு மூடிக் கொண்டான்.
“ஹேய் ப்ரிட்டி வுமன், என்ன யோசனையில ரோடைக் க்ராஸ் பண்ணுறீங்க? ம்…” என்றான் சிரித்த முகமாக. அதிர்ச்சி மேலிட மலங்க விழித்தாள் உமா.
“ஸாரி, நான்… ஏதோ யோசனையில…” அவள் தடுமாற, அந்த தடுமாற்றத்தை ரசித்தவன்,
“இட்ஸ் ஓகே, டோன்ட் வொர்ரி. அழகான பொண்ணுங்க தப்புப் பண்ணினாலும் அழகுதான்.” மலையாளம் கலந்த தமிழில் அப்பட்டமாக ஜொள்ளு விட்டான்.
“எங்க போகணும்? ட்ராப் பண்ணட்டுமா?” கர்ண பிரபுவாக அவன் கேட்க, விழித்தவள்…
“நோ தான்க்யூ” என்றுவிட்டு அவசரமாக மீண்டும் மில்லுக்குள் நுழைந்தாள். நீண்ட பின்னல் அசைய அவள் போவதையே சுவாரஸ்யமாக பார்த்திருந்தான் அந்த இளைஞன்.
தன் ஸ்கூட்டியை நோக்கி அவசரமாகப் போனவள் சுதாகரன் மேல் மோதிக் கொண்டாள். அவளைப் பிடித்து நிறுத்தியவன்,
“என்னாச்சு மது?” என்றான். அதற்கிடையில் ஓடி வந்த வாட்ச்மேன்,
“அம்மா, அடி ஒன்னும் படலையே?” என்றார்.
“என்னாச்சு அண்ணா?”
“என்னன்னு தெரியலை தம்பி, அம்மா அவசரமா வந்தவங்க கவனிக்காம ரோட்டை க்ராஸ் பண்ணிட்டாங்க. அந்தப் பக்கமா இருந்து வந்த கார் அம்மா மேல மோதப் பாத்திடுச்சு. நல்ல காலம், ட்ரைவர் ப்ரேக்கை பிடிச்சிட்டான்.”
“சரிங்கண்ணா, நான் பாத்துக்குறேன். நீங்க போங்க.”
“சரி தம்பி.” வாட்ச்மேன் நகர, உமாவைப் பார்த்தவன்,
“மது, கார்ல ஏறு.” என்றான். அவள் அசையாமல் அப்படியே நிற்க,
“மது, இங்க நின்னு சீன் க்ரியேட் பண்ண வேணாம், கார்ல ஏறு.” என்றான். அப்போதும் அவள் அப்படியே நிற்க,
“நீ இப்படியே நின்னேன்னா நான் உன்னை தூக்கிக்கிட்டு போய் கார்ல உக்கார வைப்பேன், அதுக்கப்புறம் உன் இஷ்டம்.” அவன் சொல்லி முடிக்க, தன் கண்களை அழுந்த மூடித் திறந்தவள் காரில் ஏறி அமர்ந்தாள்.
ஊரைத் தாண்டி அன்று போல் இன்றும் அந்த black Audi சீறிக்கொண்டு போனது. ஆள் அரவமற்ற ஒதுக்குப் புற சாலையில் காரை நிறுத்திய சுதாகரன், கண்ணாடியை ஏற்றிவிட்டு ஏ சி ஐ ஆன் பண்ணினான். அந்த மதிய வெயிலுக்கு இதமாக காருக்குள் ஒரு குளுமை பரவியது.
இருவருமே பேசவில்லை. யாராவது ஒருவர் இறங்கி வந்தால் தானே பேச முடியும். உனக்கு நான் சளைத்தவன் இல்லையென இருவருமே மௌனமாக இருந்தார்கள். உமாவைத் திரும்பிப் பார்த்த சுதாகரன்,
“மது” என்றான். கண்கள் சாலையை வெறித்திருக்க அமைதியாக இருந்தாள்.
“மது, பேசமாட்டியா?”
“நீங்க பேசினீங்களா அத்தான்? எத்தனை மிஸ்ட் கால் உங்க ஃபோன்ல இன்னைக்கு இருந்தது. நீங்க ஒரு தரமாவது பேசினீங்களா அத்தான்?”
“கோபம் வந்தது மது, அதான் பேசலை.”
“அப்பிடியென்ன கண் மண் தெரியாத கோபம் அத்தான்? நான் அப்பிடி என்ன சொல்லிட்டேன்னு உங்களுக்கு இவ்வளவு கோபம். நான் சொன்னது பிடிக்கலைன்னா சொல்லுங்க திருத்திக்கிறேன். இல்லை உங்க கோபத்தை கொஞ்ச நேரம் பிடிச்சு வச்சுக்கோங்க. இது என்ன மாதிரியான தண்டனை அத்தான்?”
“மது, போதும்! மத்தவங்க யார்கிட்டேயும் நான் இப்படி நடந்துக்கிறதே இல்லை. அது என்னன்னு எனக்கே தெரியாது. நீ என்னை நோகடிச்சா என்னால தாங்க முடியுதில்லை.” கண்களை இறுக மூடிக் கொண்டு அவன் சொல்ல, மௌனமாக இருந்தாள் உமா.
“என்னைக் கோபப் படுத்தாத மது. நீ சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலயும் என்னால நிதானமா நடக்க முடியலை, புரிஞ்சுக்க மது.”
“ட்ரை பண்ணுறேன் அத்தான். என்னால முடிஞ்ச வரை உங்களை புரிஞ்சுக்க ட்ரை பண்ணுறேன். ஏன்னா என் அத்தானை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.”
“மதூ…” அவளைத் தன்னருகே இழுத்தவன், அவள் முகத்தை தன் கைகளில் தாங்கி,
“மது, நேத்து நான் எவ்வளவு சந்தோஷமா இருந்தேன் தெரியுமா? இத்தனை நாளும் உன்னோட பேசாத ஏக்கமெல்லாம் தீர்ந்து போய், ஏதோ சாதிச்ச மிதப்புல இருந்தேன். தூங்கினா தூக்கமே வரலை. அப்பவே உன்னைப் பாக்கணும் போல இருந்தது. அதான் கால் பண்ணினேன். நீ என்னடான்னா…”
“சாரி அத்தான், நான் சும்மா விளையாட்டுக்குத்தான்…”
“தப்புடா, இனிமேல் அப்படிப் பேசக்கூடாது. அந்தப் பொண்ணு மேல எனக்கு நாட்டம் இருந்திருந்தா நான் ஆசைப்பட்டதை நடத்திக்கிட்டு போயிருப்பேன். எனக்கு அப்படியெல்லாம் தோணலை. என் மனசுல இந்த ராங்கிக்காரிதான் இருந்தா.” அவள் தலையோடு தன் தலையை மோதிச் சிரித்தான் சுதாகரன்.
தன் முகத்தை தாங்கியிருந்த அவன் கைகளைப் பற்றியவள், அவன் உள்ளங்கையில் லேசாக முத்தம் வைத்தாள். அவளையே பார்த்திருந்தவன்,
“ஏன்? அடுத்த கை என்ன பாவம் பண்ணிச்சு?” என்றான். மெல்லச் சிரித்தவள் அடுத்த கையிலும் முத்தம் வைத்தாள். அவளருகே நகர்ந்து அமர்ந்தவன், அவன் ஒரு கன்னத்தைக் காட்ட தயங்கினாள் உமா.
“மதூ…” அவன் அதட்டல் போடவே, அந்தக் கன்னத்திலும் முத்தம் வைத்தாள். அவன் யேசுநாதர் பரம்பரை என்று நிரூபிக்க மறு கன்னத்திலும் முத்தம் வைத்தாள். லேசாகச் சிரித்தவன்,
“பிரியப்பட்டா இன்னும் கொஞ்சம் கருணை காட்டலாம்.” என்றான். அவனை விட்டு சட்டென தள்ளி அமர்ந்தவள், தலையை மறுபுறம் திருப்பிக் கொண்டாள்.
“அம்மணி இப்போ எதுக்கு அந்தப் பக்கம் திரும்பிக்கிட்டீங்க?”
“அத்தான் போகலாம் ப்ளீஸ்.”
“ம்ஹூம், நான் கேட்டது கிடைக்காம போக முடியாது.”
“நீங்க கேட்டது நான் குடுத்துட்டேன்.”
“இல்லையில்லை, முக்கியமானதை குடுக்கலை மது.” அவன் சட்டமாக உட்கார்ந்திருந்தான்.
“எனக்கு அதெல்லாம் குடுக்கத் தெரியாது அத்தான்.” விட்டால் அழுது விடுவாள் போல இருந்தது உமாவின் குரல்.
“ஆ… இது பேச்சு மது. இதை வேணும்னா நான் ஏத்துக்கிறேன்.”
“அப்பாடா…! அப்போ கிளம்பலாம் அத்தான்.”
“பொறு மது, உனக்குத்தானே தெரியாது? எனக்குத் தெரியாதுன்னு யாரு சொன்னா?”
“அத்தான்…!” அவள் கண்கள் பயத்தினில் விரிய, அவன் கைகள் அவளை வளைத்துக் கொண்டது. எதில் பிடிவாதம் பிடிப்பது என்று விவஸ்தை இல்லாமல் இருவரும் மல்லுக்கு நிற்க, அந்த அழகான black Audi அவஸ்தைப் பட்டது.