vkv12

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 12

காலை நேரத்து பரபரப்பு அந்த கலெக்டர் அலுவலகத்தில் தெரிந்தது. தமிழ்ச்செல்வனும், மணிமாறனும் கலெக்டரின் அழைப்பின் பேரில் அவரைச் சந்திக்க வந்திருந்தார்கள். தங்கள் முறை வரவும், லேசாக கதவைத் தட்டிவிட்டு இருவரும் உள்ளே நுழைந்தார்கள்.

வணக்கம் மேடம்.” மாறன் வணக்கம் வைக்கவும் தலை நிமிர்ந்து பார்த்தார் விசாலாட்சி. அந்த ஆளுமையிலும், கம்பீரத்திலும் தமிழ் ஒரு கணம் அசந்து போனார்

வாங்க, உக்காருங்க.” இருவருக்கும் பொதுவாகச் சொன்னார் கலெக்டராக.

இது தமிழ்ச்செல்வன், என் நண்பன், நலன் விரும்பி எப்பிடி வேணும்னாலும் நீங்க எடுத்துக்கலாம் மேடம்.” அறிமுகம் செய்தார் மாறன்.

அப்பிடியா மாறன்.” என்றார் ஒரு நேசப் புன்னகையுடன். தமிழும் பொதுவாக சிரித்து வைத்தார்.

அபி மில்ஸ், அவங்களோட பிளான் எல்லாத்தையும் கரெக்டா குடுத்திருக்காங்க மாறன். அது சம்பந்தமா பேசத்தான் நான் உங்களை கூப்பிட்டேன்.”

சொல்லுங்க மேடம்.”

ஃபாக்டரியிலிருந்து வரப்போற இரசாயனக் கழிவு நீர் ஏரியோட கலக்கும் போது, அதிலிருக்கிற நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயன பொருட்களால மனித ஆரோக்கியத்திற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தீங்குகள் ஏற்படும் எங்கிறது உங்களோட வாதம் இல்லையா?”

மனுஷங்களுக்கு மட்டும் இல்லை மேடம், கழிவு நீர் சேரச் சேர மண் கடினப்பட்டு, அதோட உற்பத்தி வளமும் குறைஞ்சு போகும். பருத்தி விளைச்சலை மட்டுமே நம்பி வாழுற மக்களோட நிலமை என்ன மேடம்?”

ம்நீங்க சொல்லுறது சரி மாறன், இது சம்பந்தமா நான் மிஸ்டர் அபிமன்யு கிட்ட பேசினேன். அவர் என்ன சொல்லுறார்னா, கழிவு நீரை ஃபேக்டரியிலிருந்து அவங்க வெளியேற்றாம, அதே நீரை மீள் பாவனை பண்ணப் போறாங்களாம்.” மாறனும், தமிழும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அதெப்பிடி மேடம்?”

டையிங் மெதட்ல நீரோட பங்கு ரொம்பவே ஜாஸ்தியா இருக்கு மாறன். டை பண்ணப் போற பொருள்ல கெமிக்கலை சேர்க்கிறதுல இருந்து, கடைசியா கழுவுறது வரைக்கும் அவங்களுக்கு நிறைய நீர் தேவைப்படுது. அதனால கழிவு நீரை வாஷ் பண்ணி அதை ரீயூஸ் பண்ணப் போறாங்களாம்.” இதுவரை மௌனமாக இவர்கள் உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்த தமிழ்ச்செல்வன்

மேடம், தொழில்துறை சார்ந்த நீர் மாசுபடுதலுக்கு தோராயமா 17-20% இது போன்ற டை ஃபேக்டரிகள் தான் காரணமா இருக்காங்கன்னு புள்ளி விவரங்கள் சொல்லுது. மீள் பாவனை பண்ணினா இந்த நிலமை எப்பிடி வந்திருக்கும்?”

நீங்க சொல்லுறதும் நியாயமான பாயின்ட் தான் மிஸ்டர் தமிழ்ச்செல்வன்.” விசாலாட்சி சொல்லவும், தமிழ் மனதிற்குள் சிரித்துக் கொண்டார். நான் மிஸ்டர் தமிழ்ச்செல்வன், ஐயாவை உரிமையா மாறன்னு  சொல்லுவாங்களாமா? நடத்துங்க நடத்துங்க.

அது மட்டுமில்லை மேடம், டை நீர் கழிவுகளால 72 டாக்சிக் கெமிக்கல்ஸ் (toxic chemicals) நீர் நிலைகளில கண்டுபிடிக்கப் பட்டிருக்கு. இதுல பயங்கரம் என்னன்னா, இதுல 30 வகை கெமிக்கல்ஸ் சுத்திகரிப்பில கூட நீக்கப்பட முடியாதவையாம்.”

ம்…”

எத்தனை நாளைக்கு இவங்க நீரை ரீயூஸ் பண்ணப் போறாங்க? ஒரு கட்டத்துல ஏரியில கழிவு நீர் சேரத்தான் போகுது. அதுக்கு வசதியாத்தான் ஏரிக்கு பக்கத்துல இடம்பிடிச்சிருக்காங்க மேடம்.”

ம்புரியுது மாறன்.”

இவங்க மில்லோட சைஸ் ஏதாவது சொல்லி இருக்காங்களா மேடம்?”

ஆரம்ப கட்டம் எங்கிறதால சின்ன சைஸ் மில்லுன்னுதான் சொல்லி இருக்காங்க மிஸ்டர் தமிழ்ச்செல்வன்.”

ஒரு ஆவரேஜ் சைஸ்ல இருக்கிற மில்லுல ஒரு நாளைக்கு 8000kg பொருட்கள் டை பண்ணுறாங்களாம். இதுக்கு எவ்வளவு நீர் தேவைப்படுது தெரியுமா மேடம்?” தமிழ்ச்செல்வனின் கேள்வியில் அவரை ஆச்சரியமாகப் பார்த்தார் விசாலாட்சி.

” 1.6 மில்லியன் லீட்டர். இவ்வளவு நீருக்கும் எங்க போவாங்க மேடம்? காசு குடுத்து வாங்கப் போறாங்களா? இல்லை மழை நீர் சேகரிப்பு திட்டம் ஏதும் வச்சிருக்காங்களா?” ஏளனமாகக் கேட்டார் தமிழ்ச்செல்வன். தன் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தார் விசாலாட்சி.

சல்ஃபர், ஆர்சனிக், காட்மியம், மேர்க்யூரி, நிக்கல் எல்லாம் மிகவும் நச்சுத்தன்மை கொண்டது மேடம். இதெல்லாம் ஏரில கலந்தா, மனுஷனுக்கு மட்டுமில்லை ஏரியில வாழுற எத்தனையோ உயிர்களுக்கும் ஆபத்து தான்.” தமிழ்ச்செல்வன் சொல்லி முடிக்க, கொஞ்ச நேரம் அங்கே நிசப்தம் நிலவியது.

எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க, நான் இது சம்பந்தமா உரிய அதிகாரிகள் கிட்ட பேசிட்டு ஆதார பூர்வமா தடுக்கப் பாக்குறேன். அதுவரைக்கும் பொறுமையா இருங்க, ப்ளீஸ்.”

கே மேடம், நீங்களும் எங்களுக்கு உதவி பண்ணத்தான் முயற்சி செய்யுறீங்கன்னு எங்களுக்கு நல்லாவே புரியுது. நாங்க காத்திருக்கோம்.” சொல்லிய மாறன், விடைபெற்றுக்கொண்டு விடு விடு வென்று வெளியேறிவிட்டார். அவரைத் தொடர்ந்த தமிழ்ச்செல்வன் கதவை நெருங்கும் போது,

மிஸ்டர் தமிழ்ச்செல்வன்!” அவரைத் தடுத்தது விசாலாட்சியின் குரல். நின்றவர், திரும்பிப் பார்க்க எழுந்து நின்று வணக்கம் வைத்தார். தமிழ்ச்செல்வன் கேள்வியாகப் பார்க்க,

காலந் தாழ்ந்து வந்தாலும், மனசுல இருந்து வர்ற வார்த்தை இது. என்னை மன்னிச்சிடுங்க.” என்றார். ஒரு கணம் திகைத்த தமிழ்ச்செல்வன் தன்னை சுதாகரித்துக் கொண்டார்.

நீங்க பண்ணின காரியத்தால நான் பாதிக்கப் பட்டிருந்தா இந்த மன்னிப்பு அவசியந்தான். ஆனா, அந்த காரியத்தினால எனக்கு அழகான, அன்பான ஒரு வாழ்க்கைத் துணை கிடைச்சிருங்காங்க. அப்போ நான் தானே உங்களுக்கு நன்றி சொல்லனும்?” தமிழின் பதிலில் விசாலாட்சியின் முகம் மலர்ந்து சிரித்தது.

உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா நான் அவங்களை பாக்கலாமா?”

கண்டிப்பா மேடம், நீங்க எப்ப ஃப்ரீன்னு சொல்லுங்க. நம்ம வீட்டுல ஒரு டின்னர் அரேன்ஜ் பண்ணிடலாம். அப்படியே நீங்களும் உங்களுக்குன்னு ஒரு துணையை தேடிக்கங்க மேடம்.”

இத்தனை வயசுக்கு அப்புறமா மிஸ்டர் தமிழ்ச்செல்வன்?”

இத்தனை வயசுக்கு அப்புறம்தான் வாழ்க்கையில துணை அவசியம் மேடம்.”

ம்அப்படியே இருந்தாலும் எனக்காக இதையெல்லாம் எடுத்துப் பண்ண யாரு இருக்கா?”

யாருமே தேவையில்லை மேடம். உங்களை சுத்தி இருக்கிறவங்களை நல்லா பாருங்க. ஒருவேளை நீங்க தேடுறவங்க உங்களுக்கு பக்கத்துல தான் இருக்காங்களோ என்னவோ?” தமிழின் பதிலில் விசாலாட்சி ஆச்சரியமாகப் பார்க்க, மர்மமாகப் புன்னகைத்தவர் தலையசைத்து விடைபெற்றுக் கொண்டார்.

                                    ————————————————-

ஆளத்தூர், பாலக்காடு டிஸ்ட்ரிக்ட்.

அழகான அந்தக் காலைப் பொழுதில், வீடு முழுதும் சாம்பிராணி மணத்தது. பூஜையறையில் கேட்ட மணியோசை அப்பா பூஜை செய்வதை சொல்லாமல் சொல்லியது அபிக்கு. இரண்டு நாட்கள் ஓய்வெடுத்துக் கொள்ள ஆளத்தூர் வந்திருந்தான்.

அபிமன்யுமலையாள மண்ணிற்கே உரிய நிறம், முக அமைப்பு எல்லாம் கொண்ட ஒரு அழகான வாலிபன். சின்ன வயதிலிருந்தே அப்பா நாராயணனிடம் தொழில் கற்ற லாவகம் இருந்ததால், பார்வையிலும், நடையிலும் எப்போதும் ஒரு மிடுக்கு இருக்கும்.

நாராயணன் கோயம்புத்தூர் வாசி. தொழில் நிமித்தம் பாலக்காடு வந்தபோது, சீமாவின் அழகில் மயங்கி அவரையே கைப் பிடித்தார். அபிமன்யு, ரஞ்சனி என அழகான குழந்தைகளோடு நிறைவாக வாழ்பவர். வசிப்பது ஆளத்தூர் என்றாலும், தமிழர் பண்பாடுகளை பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுத்து இன்று வரை தானும் அவற்றையெல்லாம் பின்பற்றும் மனிதர்.

கண்களில் சுள்ளென அடித்த சூரிய வெளிச்சத்தில் முகம் சுளித்தான் அபி. ரூமின் கேர்டனை நன்றாக இழுத்து விட்டாள் ரஞ்சனி. நீண்ட நாட்களுக்குப் பிறகு பப்பிற்குப் போய் நண்பர்களுடன் கூத்தடித்து விட்டு பின்னிரவில் வந்து தூங்கிய அபிக்கு இன்னும் கண்களில் தூக்கக் கலக்கம் இருந்தது.

ரஞ்சீவெளிச்சம் வருது, அதை மூடூ ப்ளீஸ்.” என்றான் அபி, முகத்தின் மேல் தலையணையை போட்டுக் கொண்டு.

ம்அப்பா பூஜையை முடிச்சாச்சு, உனக்கு என்ன தைரியம் இருந்தா இப்படி தூங்குவ?” 

நைட் வர லேட்டாச்சு ரஞ்சனிம்மா, ப்ளீஸ்டா இன்னும் கொஞ்சம் தூங்க விடு.”

ஏன் லேட்? பப்புக்கு போனியா?”

ம்…”

இரு, முதல்ல அப்பாக்கிட்ட இதை சொல்லிக் குடுக்கனும்.” ரூமை விட்டு வெளியேறப் போனவளை பாய்ந்து பிடித்துக் கொண்டான் அபி.

ப்ளீஸ் ரஞ்சிம்மா, இதுதான் லாஸ்ட் டைம். இனிமே போகமாட்டேன், நம்ம செத்துப் போன பாட்டி மேல சத்தியம்.”

செத்துப் போனவங்க மேலயே சத்தியம் பண்ணிப் பண்ணி அதை மீறுறதே உனக்கு வேலையாப் போச்சுண்ணா.” சொன்னவளை கட்டிலில் அமர்த்தி, அவள் பக்கத்தில் கால் நீட்டி அமர்ந்து கொண்டான்

டூ மத்ஸ் அந்தப் பக்கம் போகவே இல்லை. ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் நேத்து அவ்வளவு கூப்பிட்டாங்க, மறுக்க முடியலை ரஞ்சிம்மா.”

அண்ணா ப்ளீஸ், இந்தப் பழக்கத்தை விட்டுரு. பப்புக்கு போறதும் பொண்ணுங்களோட கூத்தடிக்கிறதும் நல்லாவா இருக்கு? அப்பாக்கு தெரிஞ்சா என்ன ஆகும்னு யோசிச்சு பாத்தியா?”

எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குத் தானேடா? ஒரு வயசுக்கு அப்புறம் இதெல்லாம் பண்ண முடியாதுடா. நான் தப்பு பண்ண நினைச்சா எல்லாத்தையும் உங்கிட்ட வந்து சொல்லுவேனா ரஞ்சிம்மா?”

நீ எங்கிட்ட சொல்லுறதாலேயே நீ பண்ணுறது தப்பில்லைன்னு ஆகிடுமா அண்ணா? நான் ஒன்னு சொல்லட்டுமா? நீ சீக்கிரமா ஒரு கல்யாணம் பண்ணிக்க, அப்ப எல்லாம் சரியாகிப் போகும்

என்னது? கல்யாணமா…! அதிர்ந்த அபி எழுந்து உக்கார்ந்தான்

எதுக்கு இவ்வளவு அதிர்ச்சி? எப்ப இருந்தும் பண்ணிக்கத்தானே போற, அதை இப்பவே பண்ணிக்கோ.”

ரஞ்சிம்மா, கல்யாணம் பண்ணினா வர்றவ நிறைய கண்டிஷன்ஸ் போடுவா. அதையெல்லாம் கேட்டு நடக்குறது அண்ணாக்கு கஷ்டம்டா.”

அப்போ கண்டிப்பா உனக்கொரு கல்யாணத்தை சீக்கிரம் பண்ணிடனும். அப்பதான் நீ அடங்கி உக்காருவ.”

ஒரு தங்கையாக ரஞ்சனியின் மனதில் கவலை ஏறிக்கொண்டது. அண்ணா மிகவும் நல்லவன் தான், அதில் அவளுக்கு சந்தேகம் இல்லை. ஆனால் கையில் பணம் புரளத் தொடங்கிய பிறகு அவனின் சகவாசங்கள் அத்தனை நல்லதாகத் தெரியவில்லை

அது மட்டுமல்லாது அண்மைக் காலமாக அண்ணாவின் பேச்சில் இடம் பிடிக்கும் பெண்களின் பெயரில் ரஞ்சனி கவலை கொண்டிருந்தாள். அப்பாவிடம் பேச வேண்டியது தான். இல்லாவிட்டால் தன் கண் முன்னாலேயே, ‘சீரழிந்து போகும் பணக்கார வாலிபர்கள் வரிசையில்தன் அண்ணனும் சேர்ந்து விடுவான். எண்ணமிட்டபடி ரூமை விட்டு வெளியேறினாள்.

                                         ———————————————————

இரவு உணவை முடித்து விட்டு சோஃபாவில் விச்ராந்தியாக அமர்ந்திருந்தார் இளமாறன். சமையலுக்கென வரும் அம்மா அப்போது தான் எல்லாவற்றையும் ஒழுங்கு பண்ணி விட்டு போயிருந்தார். கையில் ஒரு ஃபைலை வைத்துக்கொண்டு அதில் மூழ்கி இருந்தவரைக் கலைத்தது டெலிஃபோன். புது எண்ணாக இருந்தது. சிந்தனையோடே அழைப்பை ஏற்றவர்,

ஹலோஎன்றார்.

ஹலோ இளமாறன், என்ன பண்ணுறீங்க? டிஸ்டேர்ப் பண்ணிட்டேனா?” விசாலாட்சியின் குரல் இனிமையாக காதில் விழுந்தது

அப்படியெல்லாம் இல்லை மேடம்.”

ஐயோ மாறன்! இது கலெக்டர் ஆஃபிஸ் ஃபோன் இல்லை, என் சொந்த நம்பர். பேசுறது கலெக்டரும் இல்லை விசாலாட்சி புரியுதா?”

ம்புரியுது விசாலாட்சி சொல்லுங்க, என்ன இந்த நேரத்துல கூப்பிட்டிருக்கீங்க?” சிரித்துக்கொண்டே கேட்டார் இளமாறன்.

ஏன் மாறன், கூப்பிடக்கூடாதா?”

ஐயையோ! தாராளமா கூப்பிடலாம்.” 

அப்போ சரி, சாப்பிட்டீங்களா மாறன்?”

“……………”

மாறன், ஹலோமாறன் லைன்ல இருக்கீங்களா?”

சொல்லுங்க விசாலாட்சி.”

என்னாச்சு மாறன்? ஏன் சைலன்ட் ஆகிட்டீங்க?”

நீங்க அப்பிடிக் கேட்டது, எங்கம்மா கேட்ட மாதிரி இருந்தது விசாலாட்சி.”

உங்களை காயப்படுத்திட்டேனா மாறன்?”

இல்லைம்மா, நிச்சயமா இல்லை.”

நான் சாப்பிட்டுட்டேனான்னு கேக்க மாட்டீங்களா மாறன்?”

ஐயோ விசாலாட்சி, நான் உங்களை அப்பிடியெல்லாம் எப்படி கேக்குறது. நீங்க எவ்வளவு பெரிய கலெக்டர்?”

ம்பெரிய்ய்ய்ய கலெக்டர். என்னன்னு கேக்க நாதியில்லாத கலெக்டர்.” அவர் குரலில் அத்தனை விரக்தி இருந்தது.

விசாலாட்சி, என்ன இப்பிடி பேசுறீங்க?”

அம்மா, அப்பா, தம்பின்னு அத்தனை சொந்தமும் இருந்தும், ஒரு சின்னத் தலை வலின்னா ஆறுதல் சொல்ல யாருமில்லாத பொழைப்பு என்ன பொழைப்பு மாறன்.”

ஏம்மா இப்பிடியெல்லாம் பேசுறீங்க? நாங்கெல்லாம் உங்களுக்கு இல்லையா?”

எல்லாரும் வேணாம் மாறன், நீங்க இருக்கீங்களா?”

விசாலி…!”

நல்லாருக்கு, நீங்க இப்பிடி உரிமையா கூப்பிடுறது ரொம்பவே நல்லா இருக்கு மாறன்.”

இப்பிடியெல்லாம் பேசாதீங்கம்மா.”

ஏன் மாறன்?”

வாழ்க்கையில எந்தப் பொண்ணும் இதுவரைக்கும் என்னைக் கவரல்லை. அது நீங்களா இருந்திருவீங்களோன்னு நான் பயப்படுறேன்.”

எதுக்கு அப்பிடியொரு பயம்?”

உங்க உயரம் என்ன? என் உயரம் என்ன விசாலாட்சி?”

கண்டிப்பா நான் உங்களை விட உயரம் குறைவாத் தான் இருப்பேன் மாறன். ஹாஹா…” 

நான் சீரியஸாப் பேசுறேன்மா.”

புரியுது மாறன், நல்லாவே புரியுது. இத்தனை வருஷமும் படிப்பு, தொழில்னு காலம் ஓடிடுச்சு. வயசு போகப் போக தொலைஞ்சு போன உறவுகளுக்காக மனசு ஏங்குது. ஆதரவா தலை கோத நமக்குன்னு யாருமில்லையேன்னு ஏக்கமா இருக்கு.”

நீ சாப்பிட்டயா விசாலி.” மாறனின் கேள்வியில் ஒரு கணம் ஸ்தம்பித்துப் போனார் விசாலாட்சி.

மாறன்…” 

சொல்லும்மா, சாப்பாடு ஆச்சா இல்லை இனிமேத்தானா?”

இனிமேத்தான் மாறன்.” விசாலாட்சியின் குரல் தழு தழுத்தது.

சரி, சாப்பிட்டுட்டு எனக்கு ஃபோன் பண்ணி என்ன சாப்பிட்டேன்னு சொல்லனும், சரியா?”

“……….”

என்ன சத்தத்தைக் காணலை?”

சரின்னு தலையாட்டினேன் மாறன்.”

அட என் அறிவுக் கொழுந்தே! ஹாஹா…” மாறன் வாய்விட்டுச் சிரிக்க, கூட விசாலாட்சியும் சேர்ந்து கொண்டார்.