VNE 18 (1)

VNE 18 (1)

18

தயக்கமாக வீட்டினுள் நுழைந்தாள் பிருந்தா. இரவு கார்த்திக் அழைத்தது முதலே அவளால் வீட்டில் இருக்கவே முடியவில்லை. அவளும் கடந்த மூன்று நாட்களாக மஹாவின் எண்ணுக்கு அழைத்த வண்ணம் இருந்தாள். ஆனால் அழைப்பு எடுக்கப்படாமலே போக, அவளுக்கும் சந்தேகமாகத்தான் இருந்தது.

இப்படி எப்போதுமே செய்தவள் இல்லை மகாலட்சுமி. பிசி என்றால் கூட அதையும் சொல்லிவிட்டு பின்னர் அழைத்து பேசும் பழக்கம் கொண்டவள்.

அவர்களுக்குள் அது ஒரு பெரிய விஷயமும் அல்ல. ஆனால் இந்த மூன்று நாட்களில், ஒரு முறை கூட அழைப்பை அட்டென்ட் செய்யாமல் இருக்கும் போதே ஏதோ பிரச்சனை என்று உணர முடிந்தது.

ஆனால் என்னவென தெரியவில்லை. பைரவியுடன் நல்ல பழக்கம் இருக்கிறது தான் என்றாலும், அவர் அளவாகத்தான் பேசுவார். எப்போதுமே அளவை தாண்டி பழகிவிடக் கூடியவர் இல்லை. கிருஷ்ணம்மாள் அதற்கு நேர் எதிர்.

பிருந்தா அவருக்கு இன்னொரு பேத்திதான் என்ற அளவில் அவரது பாசமான அணுகுமுறை இருக்கும். அதற்காக பைரவியை குறைத்து சொல்லிவிட முடியாது. திருமணமாகாத மகன் இருக்கும் போது மகளது தோழியை அளவாகத்தான் ஊக்குவிக்க வேண்டும் என்பது அவரது கொள்கை.

அவரை புரிந்து கொண்டு, பிருந்தாவும் ரொம்பவும் குறைவாகத்தான் வீட்டிற்கு வருவதும். பைரவியின் முன் கார்த்திக்கை ஏறெடுத்தும் பார்த்ததில்லை. எப்போதாவது கிடைக்கும் சந்தர்ப்பத்தில் பார்க்கும் ரகசிய பார்வை மட்டுமே. அதிலும் பார்வை மாறுபாட்டை காட்டிவிட மாட்டாள்.

அதிலெல்லாம் வெகு கெட்டி இவள்!

கார்த்திக்கை பிடித்ததற்கும் கூட ஒருவகையில் மஹா தான் காரணமும்!

மஹாவின் அண்ணன் என்பதுதான் முதல். அதற்கு பின் வந்தது தான் அவன் மேல் கொண்ட ஈர்ப்பெல்லாம். மஹா எப்படி பிருந்தாவை பிரிய முடியாமல் மருத்துவம் படிக்க முடிவு செய்தாளோ, அதுபோலத்தான் பிருந்தாவும்.

கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டால் மஹாவை பிரிய நேரிடாது தானே என்ற சிறு பிள்ளைத் தனம் மட்டுமே அவளது பதின்ம வயதில். அவளது எண்ணத்தை தோழியிடம் கூறவில்லை என்றாலும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அவளது மனதுக்குள் செழித்து வேர்விட்டு வளர்ந்தது இவ்வெண்ணம்!

ஆனால் கார்த்திக் எப்போதும் அவளை நிமிர்ந்தும் பார்த்தது இல்லை. எப்போதாவது பிருந்தா வந்தாலும் கூட, அந்த இடத்தில் அவன் இருந்ததில்லை. பைரவியின் பார்வை வேறுபாட்டை அறிந்தவன், சப்தமில்லாமல் நகர்ந்து விடுவான். பைரவி இல்லாத சந்தர்ப்பத்தில் பேசும் ஒன்றிரண்டு வார்த்தைகளை தவிர வேறு எதுவும் இல்லை.

எப்போதாவது பாட்டியிடம் ஏதாவது கதையடித்துக் கொண்டிருக்கும் போதும், மஹாவும் பிருந்தாவுமாக சேர்ந்து இருக்கும் சந்தர்ப்பத்தில், கார்த்திக்கும் மஹாவும் அடித்துக் கொள்வதை பார்க்கும் போதும் அவளையும் அறியாமல் கார்த்திக்கை சுவாரசியமாக பார்த்து வைப்பதை ஓரிரு முறை அவனும் கண்டிருக்கிறான்.

ஆனால் அடுத்த நொடியே தன்னை மாற்றிக் கொண்டுவிடும் பிருந்தா, வெகு இயல்பாக பேச்சுக்குள் நுழைந்து விடுவாள், தான் கண்டது பொய்யோவென கார்த்திக் எண்ணுமளவு!

ஆனால் சிறு வயது முதலே பார்த்துக் கொண்டிருந்த அவளை சட்டென வேறு மாதிரியாக கார்த்திக்கால் நினைக்க முடியவில்லை என்பதுதான் உண்மை!

அதையும் பிருந்தா புரிந்து வைத்திருந்தாள். ஆனாலும் செழித்து வளர்ந்த காதல் பயிரின் வேரில் அவளே வெந்நீரை ஊற்றுவாளா? அவளால் முடியவில்லை. எப்போதும் முடியாது!

அவனாக புரிந்து கொள்ளட்டும்… இல்லையென்றால் நடப்பது நடக்கட்டும் என்ற முடிவுக்கும் வந்திருந்தாள், மஹா அவளது மனதை கண்டுகொள்ளும் வரை!

எப்போது தோழியே அவளது மனதை கண்டுகொண்டாளோ, அன்றைக்கு ஏனோ மனம் விசித்திரமாக மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தது. மறைத்து மறைத்து அழகு பார்த்த காதல், தோழியின் வாய்வழி அங்கீகாரத்தால் அவளை விண்ணில் பறக்க செய்தது.

அதற்கு பின் அவ்வப்போது இவளை கலாய்த்துக் கொண்டுதான் இருப்பாள் மஹா. அதுவரை பதிலுக்கு பதில் பேசும் பிருந்தா, கார்த்திக்கின் பேச்சை எடுத்து விட்டால் வெட்க சிரிப்போடு மௌனமாகி விடுவாள். அதை பார்க்கும் மஹாவுக்கு மேலும் அவளை கலாய்க்கும் மூட் வந்துவிடும்.

மஹாவின் அந்த சிரிப்பும், பேச்சுமில்லாமல் கடந்த மூன்று நாட்களாக பிருந்தாவால் சரியாக உண்ணக் கூட முடியவில்லை. ஏனென்று யாரையும் கேட்க முடியாமல் மனதுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருந்தவளுக்கு கார்த்திக்கின் அழைப்பு பாலைவனச் சோலையாகியது.

செல்பேசியில் ஒளிர்ந்த கார்த்திக்கின் பெயரை பார்த்தபடியே இருந்தவளுக்கு, அவன் அழைக்கிறான் என்பதே சில நொடிகள் கழித்துத் தான் மண்டையில் உறைத்தது.

‘கார்த்திக்கா? தனக்கா? அவனா? அழைப்பது அவனா?’ நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருக்கத்தான் தோன்றியது. தனக்குத் தானே கொட்டிக் கொண்டு அவனது அழைப்பை ஏற்றவள், அவனது சோர்ந்த குரலில் துணுக்குற்றாள்.

“பிருந்தா?” அவனது குரலில் ஏதோ ஒன்று காணமல் போயிருந்ததை அடுத்த நொடியே உணர்ந்து கொண்டவளுக்கு மனம் படபடத்தது.

“ம்ம்… சொல்லுங்க…”அந்த படபடப்பை வெளிக் காட்டிக் கொள்ளாமல் அவள் கேட்க,

“நான் கார்த்திக்… மஹா அண்ணன்…” என்று விளக்கத்தை வேறு அவன் கூறியது அவளுக்குள் புன்னகையை விதைத்தது.

அவனிடம் அவளது எண் எப்படி வந்தது என்று அவள் அப்போது யோசிக்கவில்லை. அவனது எண் எப்படி அவளுக்கு தெரியும் என்று அவனும் யோசிக்கவில்லை. ஏனென்றால் கார்த்திக் அதுவரை எதற்கும் அவளை செல்பேசியில் அழைத்ததில்லை. அவளும் எதற்காகவும் கார்த்திக்கை அழைத்ததுமில்லை. நின்று பேசியதும் கூட இல்லையெனும் போது மற்றதெல்லாம் எங்கே?!

“தெரியுங்…” என்பதோடு நிறுத்தினாள். அண்ணாவென்று அழைக்க வேண்டுமா என்று போராடியது மனம். முடியாது என்றவள், அதை காட்டிக் கொள்ளாமல் கேட்க,

“அப்பா இருக்காரா?”

“ஏன்? என்னாச்சுங்?” அவளால் சட்டென்று விளங்கிக் கொள்ள முடியவில்லை. எதற்காக தந்தையை கேட்கிறான் இவன்?

“அவர் கிட்ட பேசணும்… கொஞ்சம் கொடுக்கறியா பிருந்தா?”

“அப்பா அவுட் ஆஃப் கண்ட்ரி… கான்பரென்ஸ்காக ஜெனீவா போயிருக்காங்க…” என்று சிறிய குரலில் கூற,

“ஓஓ…” என்று ஏமாற்றமாக ஒலித்த அவனது குரல், அவளது மனதைப் பிசைந்தது.

“என்னாச்சுங்? மகாவும் மூணு நாளா என்னோட போனை அட்டென்ட் பண்ணலை… ஏதாவது பிரச்சனையா?” தயங்கியவாறே கேட்டவளுக்கு என்ன பதில் சொல்வான்? கார்த்திக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. யாரிடமாவது தன்னுடைய துக்கத்தை சொல்லி வெடித்து அழ வேண்டும் போல தோன்றியது!

ஆனால் யாரிடம் அழ?

தந்தையின் உடல்நிலை இருக்கும் நிலையில் அவரிடம் எப்படி சொல்ல? பைரவி எப்படியோ விஷயத்தை வாங்கிவிட்டார் தான்… ஆனால் அவருக்கே தான் அல்லவா தைரியத்தை கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறான். பாட்டி, சொல்லவே தேவையில்லை. தனக்கு முன் அவர் கரைந்து விடுவார்.

அவனது தைரியம் அனைத்தும் மஹா மட்டுமே! சந்தோஷமோ துக்கமோ, தங்கையிடம் பகிர்ந்து மட்டுமே பழக்கம் அவனுக்கு!

இப்போது துக்கமே அவள் இல்லாதது தான் எனும் போது யார் தோளில் சாய?

ஒரு நிமிடம் மௌனமாகவே லைனில் இருக்க, அந்த நீண்ட நொடிகள் பிருந்தாவின் மனதை ரணப்படுத்தியது, காரணம் என்னவென தெரியாமல்!

“கார்த்திக்…” மென்மையான அவளது அழைப்பு, கார்த்திக்கை ஏதோவொரு வகையில் உயிர்க்க செய்தது… ரணத்தை மயிலிறகு கொண்டு தடவியது போலிருந்தது.

அவளது பார்வைகளையும், அதன் அர்த்தத்தையும் அவன் உணர்ந்து தான் இருந்தான். ஆனால் அவர்களுக்குள் அதுவரை காதலை உரைத்துக் கொள்ளவும் இல்லை. உறுதிபடுத்திக் கொள்ளவும் இல்லை.

நடுவில் இருந்த அந்த மெல்லிய இழையை உணர்ந்து இருந்தாலும், கூட்டை உடைத்து வெளியே வர இருவருமே முயலவில்லை.

ஆனால் அந்த நொடியில், அவளது ஒற்றை அழைப்பில் அவன் உணர்ந்த உணர்வும் உண்மையும் வேறு! யுகம் யுகமாக சேர்ந்து பயணித்த ஆன்மாவின் அழைப்பாக உணர்ந்தான். கண்களை மூடி, அமர்ந்திருந்த இருக்கையின் பின்னால் சாய்ந்து கொண்டவனுக்கு ஏதோ ஒருவகை இளைப்பாறுதல் கிடைத்தது போலிருந்தது.

ஆனாலும் மௌனத் திரையை விலக்க முயலவில்லை அவன்!

“ம்ம்ம்…”

“என்னாச்சு?”

“வீட்ல கொஞ்சம் ப்ராப்ளம்…” என்று தயக்கத்தோடு அவன் கூற, அவளுக்கோ பதற்றம். பிரச்சனை என்றால் தன்னுடைய போனை மஹா எடுக்க முடியாத அளவுக்கா?

தலை சுற்றுவது போலிருந்தது. ஆனாலும் முயன்று கால்களை இறுக்கமாக தரையில் அழுத்தினாள். இப்போது பதட்டமடைவது எந்த வகையிலும் சரியாகாது, எதையும் சரிப்படுத்தாது என்று தனக்குத் தானே கூறிக் கொண்டவள்,

“பிரச்சனை மஹாவுக்கா?”

“ம்ம்ம்…”

“நான் இப்ப கிளம்பி வரட்டா?” இரவு நேரம் தான். ஆனால் மஹாவுக்கு பிரச்சனை என்றபோது அவளால் அங்கே நிற்க முடியவில்லை. மனம் பதறியது. அதோடு கார்த்திக்கின் சோர்ந்த குரல் வேறு அவளை அலைகழித்தது.

“ம்ஹூம்… வேண்டாம்… வீட்ல யாரும் இல்ல… எல்லாரையும் கொடைக்கானல் அனுப்பியிருக்கேன்…” அவசரமாக மறுத்தான்.

“அப்படீன்னா அம்மாவுக்கு நான் கால் பண்ணட்டா? மஹா கிட்ட பேசணும்…”

“இல்ல… முடியாது…” கார்த்திக்கு குரல் உடையும் போல இருந்தது. பெரிதும் முயன்று தன்னைக் கட்டுக்குள் வைத்திருக்க முயன்றான்.

“ஏன்?” அவளும் விடாமல் கேட்க, பதில் கூற திணறினான்.

“பிருந்தா… அப்பா எப்ப வருவாங்க? அதை மட்டும் சொல்லு…”

“நீங்க சொல்லுங்க கார்த்திக்… அப்பாவை அப்புறம் பார்க்கலாம்… நீங்க பேசறது சம்திங் என்னமோ சரியா இல்லாதது மாதிரி இருக்கு…” குரல் அனிச்சையாக நடுங்கியது அவளுக்கு.

“இல்ல… சொல்றதை புரிஞ்சுக்க…” பெயர் தெரியாத ஏதோ ஒன்று தொண்டையை அடைத்து வயிற்றுக்குள் உருண்டது அவனுக்கு!

“ப்ளீஸ்… என்ன விஷயம் சொல்லுங்க… நீங்க இந்தளவு உடைஞ்சு போய் பேசி நான் கேட்டதில்லை…” கண்களில் நீர் திரள கேட்டாள் பிருந்தா.

“காலைல வீட்டுக்கு வர்றியா?” பெரும் தயக்கத்தோடு எல்லையை கடந்து கொண்டிருந்தான். ஏனென்றால் அனைத்தையும் தாண்டி சுமைதாங்கியாக அவள் அப்போது அவனுக்கு தேவைப்பட்டாள்.

ஒரு ஆண் எவ்வளவு பாரத்தை வேண்டுமானாலும் சுமப்பான், அவனது குடும்பத்திற்காக, பின்னணியில் அவனுக்கு ஒரு சுமைதாங்கி இருக்கும் பட்சத்தில்! அங்கே பெண் சுமைதாங்கியாகிறாள்… அவனுக்கு இளைப்பாறுதலை கொடுக்கிறாள்.

அதற்காக யாரோ ஒருவரிடம் அந்த இளைப்பாறுதலை அவன் எதிர்பார்க்க முடியாது. இவள் தான் நமக்கு யாதுமாகியவள் என்று மனம் உணர்கின்ற அந்த தருணத்தில் அது நிகழக்கூடும்.

கார்த்திக்கு அது நிகழ்ந்துக் கொண்டிருந்தது. பிருந்தா அதை நிகழ்த்திக் கொண்டிருந்தாள். கண் பாராமல், கதை பேசாமல், தொட்டு உணராமல் வெறும் உணர்வுகளால் அதை நிகழ்த்திக் கொண்டிருந்தாள்.

எப்போது விடியுமென காத்திருந்து மஹாவின் வீட்டுக்கு கிளம்பி விட்டாள் பிருந்தா.

கதவு திறந்தே கிடந்தது. அவ்வளவு காலையிலேயேவா கார்த்திக் எழுந்துவிட்டான் என்ற சந்தேகம் அவளுக்கு வந்தது. அவள் அறியவில்லை. உறங்கினால் தானே எழுவதற்கு?

விடிய விடிய உறங்காமல் சோபாவில் தவம் கிடந்தவனுக்கும் தெரிந்திருந்தது. தான் உறங்காமல் இருப்பதாலோ, உண்ணாமலிருப்பதாலோ எதுவும் நடந்துவிட போவதில்லை என்று.

மெல்லிய கொலுசு சப்தத்தை கேட்டு நிமிர்ந்தவனின் கண்கள் ரத்தமென சிவந்திருக்க, பிருந்தாவுக்கு சகலமும் ஆட்டம் கண்டது.

கண்களில் நீர் திரள அவனிடம் சென்றவள், அருகில் அமர்ந்து கைகளை பிடித்துக் கொள்ள, அவனும் எதுவும் பேசாமல் அவளது கையை இறுக்கமாக பற்றிக் கொண்டான்.

“தூங்கவே இல்லையா?”

“ம்ம்ம்… தூக்கம் வரலை…”

“சாப்பிட்டீங்களா?”

“ம்ஹூம்… பசிக்கல”

“ஏன் இப்படி பண்றீங்க கார்த்திக்? இப்படி நீங்க இருந்தா பிரச்சனை சால்வ் ஆகிடுமா?” என்று கேட்டவளுக்கு தெரியாது என்ன பிரச்சனை என்று! ஆனாலும் கார்த்திக் உறங்காமலிருப்பதும் உண்ணாமலிருப்பதும் அவளுக்கு பெரும் வலியை கொடுத்தது.

“மஹா எங்க இருக்கா… எப்படி இருக்கான்னு தெரியாம எப்படி என்னால நிம்மதியா தூங்க முடியும்?” அதுவரை பொறுமையாக இருந்தவன், அவளிடம் வெடிக்க, அதை கேட்டு ஷாக்கடித்தது போல அவனை பார்த்தாள் பிருந்தா.

“என்ன சொல்றீங்க?” குரல் வெளியே வர முடியாமல் சண்டித்தனம் செய்தது.

“நம்ம படத்துக்கு பைனான்ஸ் பண்ணவனுக்கு நாம இன்னும் பணத்தை செட்டில் பண்ணலை… அதுக்காக…” ஒவ்வொரு வார்த்தையாக தயங்கியபடி ஆரம்பித்தவன், நிறுத்திவிட்டு அவளது முகத்தை நோக்கினான்.

“அதுக்காக?” அவளது குரல் வெகுவாக உள்ளே சென்றிருந்தது. அதிர்வை சமாளிக்க தன்னை தயார் படுத்திக் கொண்டாள்.

“மஹாவை  கஸ்டடி எடுத்துட்டான்….”

அவளுக்கு புரியவில்லை. கஸ்டடி என்பதன் அர்த்தத்தை அவள் எப்படி அறிவாள்?

“அப்படீன்னா?” புருவத்தை நெரித்துக் கொண்டு அவள் கேட்ட தோரணையில் அவனுக்கே சொல்ல தயக்கமாக தானிருந்தது. தவறு அவன் பக்கமும் உள்ளதே! அந்த ராட்சசன் இப்படிப்பட்டவன் என்று தெரிந்தும் சற்று ஏமாந்து தான் விட்டான் அல்லவா. ஆரம்பத்திலேயே இறுக்கி பிடித்து படப்பிடிப்பை முடித்திருந்தால் இப்படி நேர்ந்திருக்காதோ என்ற குற்ற உணர்வும் ஆட்டிப்படைத்தது.

அதோடு கார்த்திக் செய்த மன்னிக்க முடியாத தவறு அந்த ராட்சசனிடம் பணத்தை பெற்றது.

அந்த ஒரு காரணம் தான் அவனது தங்கையை இப்படி ஒரு நிலைக்கு ஆளாக்கியிருக்கிறது அல்லவா!

“பணத்தை கொடுத்தாத்தான் மஹாவ விடுவானாம்…” தலைக்கு கையை முட்டுக் கொடுத்துக் கொண்டு அவன் கூற, அந்த அதிர்ச்சியை பிருந்தாவால் தாளவியலவில்லை.

“என்னது?” என்றபடி சட்டென எழுந்து கொண்டாள்.

இரத்தம் ஜிவ்வென முகத்துக்கு பாய, உள்ளுக்குள் நடுங்க தொடங்கியது. யாருக்கும் சிறு கஷ்டத்தை கூட தர கூடாது என்று எண்ணுபவளாயிற்றே அவளது மகாலக்ஷ்மி.

“மூணு நாளாச்சு பிருந்தா… எல்லா பக்கமும் பணத்துக்கு நாயா அலைஞ்சுட்டு இருக்கேன்… அப்பா கிட்ட ரொம்ப சொல்ல முடியல… ஹார்ட் வீக்… அம்மாக்கு மட்டும் தான் நேத்து சொன்னேன்… சொன்னதுல இருந்து அழுது கரைஞ்சுட்டு இருக்காங்க… நான் என்ன பண்ணன்னே தெரியல…”

தலை குனிந்து அமர்ந்திருந்தவனின் கண்கள் கலங்கியிருந்தது. கண்ணீர் உடைப்பெடுக்க காத்திருக்க, வெறித்து பார்த்துக் கொண்டிருந்த பிருந்தாவின் நிலையை சொல்ல முடியவில்லை.

அவளது ஒரே தோழி. ஒரு நாள் கூட பேசாமல் இருந்ததில்லை, கிட்டத்தட்ட பதினெட்டு வருடமாக!

கிண்டர்கார்டனில் இருந்து ஒரே வகுப்பு. ஒற்றுமை மாறாத நட்பு. கார்த்திக்கை மணந்து கொண்டால் கூடவே இருக்கலாம் என்று எண்ணுமளவான நட்பு!

அவளையும் அறியாமல் கண்கள் உடைப்பெடுத்தது.

ஆனால் அவையெல்லாம் ஒரு சில நொடிகள் தான். அடுத்த நொடியே தன்னை சுதாரித்துக் கொண்டாள் பிருந்தா. அவளது இயல்பான தெளிவான மனதிடத்துக்கு வந்து விட்டாள்.

கண்களை துடைத்துக் கொண்டு கார்த்திக்கை பார்க்க, அவனும் அவளைத்தான் பார்த்தபடி இருந்தான்.

“டோன்ட் வொர்ரி கார்த்திக்… தைரியமா இருங்க… கண்டிப்பா மஹா பயந்துட்டு இருக்க மாட்டா… அப்படிப்பட்ட ஆளும் இல்ல அவ… யாரா இருந்தாலும் ஓட ஓட விரட்டற ஆள் அந்த பக்கி… உங்க தங்கச்சி கிட்ட சிக்கின ஜீவனை நினைச்சு பாவப்படுங்க…” தன்னுடைய நடுக்கத்தை எல்லாம் மறைத்துக் கொண்டு புன்னகைத்தபடி நகைச்சுவையாக பேசி அவனது மனதை மாற்ற முயன்றாள்.

“எனக்கும் தெரியும்… ஆனா மஹா இன்னமும் எனக்கு சின்ன குழந்தை தான் பிருந்தா…”

“தெரியுமே… அவ வந்ததுக்கு அப்புறம் அவளை தொட்டில்ல போட்டு தாலாட்டுங்க… பப்பு புவா ஊட்டுங்க…. ஆனா இப்ப போய் குளிச்சுட்டு சாப்பிட வாங்க… நான் கிட்சன்ல என்ன இருக்குன்னு பார்க்கறேன்…” என்றபடி அவனது கையை பற்றி எழுப்பி விட, அவளையே பார்த்தபடி இருந்தான் கார்த்திக்.

“என்னப்பா?” ஆதூரமாக கேட்டவளை விட்டு பார்வையை நகர்த்தாமலிருந்தான்.

இருவரும் அதுவரையுமே காதலை சொல்லிக் கொள்ளவில்லையே. ஆனால் உணர்வுகளை வெளிப்படுத்தி தான் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமா என்ன?

“ப்ச்… ஒண்ணுமில்ல…”

“ஹேய்… இதெல்லாம் சின்ன மேட்டர் மா… இன்னும் லைப் முழுக்க எவ்வளவோ சவால்களை நாம பார்க்கணும்… உடைஞ்சு உக்கார்ந்துட்டா என்னாகறது? இப்படி சாப்பிடாம தூங்காம வீட்டை காவக்காத்துட்டு இருந்தா பிரச்சனை முடிஞ்சு போயிருமா என்ன? என்ன பண்றதுன்னு யோசிக்கலாம்… இப்ப எந்திரிங்க…”

மிகத் தெளிவாக உரைத்தபடி அவனை எழுப்பி விட்டவளின் கண்களை பார்த்தவனுக்கு ஏதோ ஒரு வகையில் இளைப்பாறுதல் கிடைத்தது. அவனை அனுப்பிவிட்டு விட்டாளே தவிர, மஹாவுக்காக மனம் துடித்தது. கார்த்திக் இந்தளவு உடைந்து போயிருக்கிறான் என்றால் விஷயம் எந்தளவு மோசமாக இருக்க வேண்டும் என்றும் புரிந்தது. அதோடு தோழியின் நேர்மையான இயல்பையும் துடுக்கான குணத்தையும் அறிந்தவளுக்கு அவள் இன்னமும் வம்பை வாங்கி வந்துவிட கூடாதே என்றும் இருந்தது.

error: Content is protected !!