அத்தியாயம் 20

குரல் வந்த திசையை நோக்கி ஷ்யாம் வேகமாக நகர பார்க்க, மஹா அவனது கையை பிடித்து இழுத்து நிறுத்தினாள்.

“விடு மஹா… என்னன்னு பார்க்கணும்…” அவளது கையை வலுகட்டாயமாக பிரித்தபடி அவன் போக முயல,

“ஒரு நிமிஷம் வெய்ட் பண்ணு ஷ்யாம்… ஏதாவது வைல்ட் அனிமல்ஸ் இருந்தாலோ, வேற ஏதாவது ஆபத்து இருந்தாலோ நாம கூட சேர்ந்து தான் மாட்டனும்…” அவள் சொல்வதில் அர்த்தம் இருந்தாலும், அந்த அலறல் உதவியை எதிர்பார்த்து கத்திய கதறலாக தெரிந்தது.

மீண்டும் மீண்டும் அந்த கதறல் ஒலித்துக் கொண்டிருக்க, அவளது கையை வம்படியாக பிரித்து விட்டு,

“ஏதோ எமெர்ஜென்சி சிச்சுவேஷன்… அதை கேட்டுட்டும் சும்மா நின்னா நமக்கு அசிங்கம்… நீ வேண்ணா இங்கயே இரு… நான் போய் பார்த்துட்டு வரேன்…” என்றவன், அந்த திசையை நோக்கி வேகமாக போக, அவனுக்கு பின்னே ஓடினாள் அவள்.

“ஹேய் நானும் வரேன்…” என்றபடி அவன் பின்னே ஓட, அதை கண்டுக்கொள்ளாமல் அவன் முன்னிருந்த புதரை விலக்கி விட்டபடி கவனமாக முன்னேறினான்.

அருகேயிருந்த குடிசையிலிருந்து தான் அந்த சப்தம் வந்தது.

அது ஒரு ஒற்றை குடிசை. பொதுவாக மலை வாழ் மக்கள் கூட்டமாகத்தான் வசிப்பது. ஒரு பிரிவினரின் குடியிருப்புகள் ஒரே இடத்தில் தான் அமைந்திருக்கும். இது போன்ற ஒற்றை குடிசை இருப்பது வெகு அபூர்வம்.

காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாத்து கொள்ளவும், விவசாய பணிகளை மேற்கொள்ளவும், இந்த பகுதி மக்களின் முக்கிய தொழிலான தேனெடுக்கும் வேலைக்கும் குழுவாக இருப்பதுதான் பாதுகாப்பும் கூட!

குடிசைக்கு வெளியே வயதான பெண் ஒருவர் பதட்டமாக கண்ணீர் வழிய நின்று கொண்டிருக்க, வேகமாக வந்தவன், அவரிடம் என்னவென்று கேட்டான், அவர்களது மொழியில்!

அவன் பின்னே வந்தவளுக்கு அவன் கேட்டதும் புரியவில்லை. அந்த பெண் கூறிய மறுமொழியும் புரியவில்லை. இருவருமாக பேசிக்கொண்டிருக்க, இவள் எதுவும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். உள்ளிருந்து அந்த கதறல் கேட்டுக் கொண்டுதானிருந்தது.

“என்னாச்சு?” அவனது கையை பிடித்து மஹா கேட்க,

“இவங்க பொண்ணுக்கு டெலிவரி டைமாம்… ஊரை விட்டு இவங்களை ஒதுக்கி வெச்சுருக்காங்களாம். இவங்க சன் இன் லா வண்டியை அரேன்ச் பண்ண போயிருக்கானாம்… அந்த பொண்ணுக்கு பெயின் வந்துடுச்சு போல… அதான்…” என்று அவசர கதியில் இவன் கூற,

“என்னன்னு பார்க்கலாம் வா…” என்று அவனையும் இழுத்துக் கொண்டு உள்ளே போக பார்க்க,

“ஏய் நான் இங்கயே நிக்கறேன்…” அவள் இழுத்த இழுப்பிற்க்கு வராமல், அவன் வெளியே தேங்க நினைத்தான். உள்ளே ஒரு பெண் பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு ஆண் உள்ளே செல்ல கூடாது என்ற நினைப்பில் தான் அவன் தேங்கியது.

“நீ இங்க நின்னா? அவங்க பேசறது எனக்கு எப்படி புரியும்? உள்ள வா…” என்று அவனையும் இழுத்துக்கொண்டு உள்ளே போக, அந்த வயதான பெண்ணிடம், அவருக்கு புரிகிறார் போல சூழ்நிலையை எடுத்துக் கூறினான்.

“என்ன சொன்ன அவங்க கிட்ட?”

“என் ஒய்ப் ஒரு நல்ல டாக்டர்… கவலைப்படாதீங்க… அவங்க என்னன்னு பார்ப்பாங்கன்னு சொன்னேன்…” என்றபடி உயரம் குறைவாக இருந்த தலைவாசலில் இடித்துக் கொள்ளாதபடி குனிந்து உள்ளே நுழைந்தான்.

அவனது பதிலை கேட்டு, அவனை முறைத்தவள், “இருடா… உன்னை அப்புறம் வெச்சுக்கறேன்…” என்றபடி வீட்டிற்குள் நுழைய, அங்கே தடுப்புக்கு அடுத்து மறைவாக படுத்திருந்தாள் அந்த பெண்.

அவசரமாக அந்த பெண்ணிடம் சென்றவள், அவளது வயிற்றில் கை வைத்து அழுத்திப்பார்த்தாள்.

ஒவ்வொரு முறை வலி வெட்டி இழுக்கும் போதும் அந்த பெண் இன்னமும் கதறினாள்.

வலி வந்து கொண்டிருக்கும் வேகத்தையும், குழந்தை இருக்கும் விதத்தையும் கணக்கிட்டவள்,

“இது டெலிவரி பெயின் தான் ஷ்யாம்… அந்த அம்மாகிட்ட சொல்லு… ஹாஸ்பிடல் கொண்டு போற வரைக்கும்லாம் தாக்குபிடிக்க முடியாது…” என்று கூற, அவசரமாக அந்த வயதானவரிடம் அவள் கூறியதை மொழிபெயர்த்தான்.

அதை கேட்ட அவரின் கண்களில் கண்ணீர் ஆறாக பெருகியது. அனைத்து தெய்வங்களையும் துணைக்கழைத்தார். அவளுக்கே அது புரிந்தது.

நொடியில் முடிவெடுத்தவள், “ஷ்யாம்… அந்த அம்மாவை கொஞ்சம் சுடு தண்ணி வைக்க சொல்லு… ரொம்ப கொதிக்க வேண்டாம்… கை பொறுக்கற சூடு போதும்… இன்னொரு அடுப்புல தண்ணிய நல்லா கொதிக்க வைக்க சொல்லு…” என்று அவசரமாக கூற,

“நீயே டெலிவரி பார்க்க போறியா மஹா?” அவனது குரலில் அச்சம் ப்ளஸ் வியப்பு.

படித்து கொண்டிருந்தாலும், படித்து முடிக்கும் முன் இத்தனை பிரசவங்கள் தனியாக பார்க்க வேண்டும் என்ற விதிமுறையில் அவள் தனியாகவே டெலிவரியை பார்த்து இருக்கும் தைரியத்தில் ஆரம்பித்து விட்டாள். உள்ளுக்குள் பதட்டம் தான், ஆனாலும் இரண்டு உயிர் இப்போது தனது கையில் இருக்கிறது என்ற எண்ணம் அவளை வேகமாக செலுத்தியது. தன்னை தானே அமைதிப்படுத்திக் கொண்டாள்.

“ஆமா… டைம் இல்ல… சீக்கிரம் சொல்லு…” என்று கூற, அவனும் அதை அவரிடம் கூறிவிட்டு வெளியேற எத்தனித்தான்.

“எங்க போற ஷ்யாம்? கூட ஹெல்ப் பண்ணு…” அந்த பெண்ணை பரிசோதனை செய்து கொண்டே அவனை இருத்த முயன்றாள்.

“ஸ்டுபிட் மாதிரி பேசாத… நான் எப்படி இருக்க முடியும்?” அவனுக்கு எரிச்சல்.

“நீ தான் ஸ்டுபிட் மாதிரி பேசற… ஒருத்தரை வெச்சுட்டு டெலிவரி பார்க்க முடியாது… அவசியம் நீ இருக்கணும்… ஏன் ஜென்ட்ஸ் டாக்டர்ஸ் டெலிவரி பார்க்கறது இல்லையா?”

அவளுக்கு அது பெரிய விஷயம் இல்லைதான். ஆண்களும் பெண்களுமாக சேர்ந்துதான் ஆபரேஷன் முதற்கொண்டு அனைத்தும் செய்வதும். அறுவை சிகிச்சைகளின் போதெல்லாம் ஆண் நர்ஸ்கள் பெரும்பாலும் உதவிக்கு இருக்கும் பழக்கம் வேறு. அதனால் அவளுக்கு அது இயல்பு. ஆனால் ஷ்யாமுக்கு அப்படி இல்லையே.

அந்த பெண் கதற கதற அவனுக்கு நடுங்கியது. அது போன்றதொரு உணர்வை அவன் வாழ்க்கையில் அனுபவித்ததே இல்லை. குலை நடுங்கியது என்று சொல்வார்களே! அந்த உணர்வு! அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்த அந்த பெண்ணின் தாயாரின் கண்ணீர் வேறு அவனை சோதித்தது!

“ப்ளீஸ் மஹா… வேண்டாம்… எனக்கு மயக்கமே வர்ற மாதிரி இருக்கு…” கிட்டத்தட்ட மகாவிடம் கெஞ்சினான்.

நிமிர்ந்து அவனை பார்த்தவள், “ரெண்டு உயிர் இப்ப நம்ம கைல இருக்கு ஷ்யாம்… நீ ஒரு ஜென்ட்ங்கறதை மறந்துடு… ஒரு உயிரை இந்த உலகத்துக்கு கொண்டு வர போறோம்… அதை மட்டும் ஞாபகத்துல வெச்சுக்க… ப்ளீஸ் ஷ்யாம்… உனக்கு தான் இவங்க லாங்குவேஜ் தெரியும்… நீ இல்லைன்னா என்னால முடியாது…” என்று அழுத்தமாக கூறிவிட்டு, அந்த பெண்ணின் கீழாடையை விலக்கி பிரசவத்துக்கான ஆயத்தங்களை செய்ய ஆரம்பித்தாள்.

அவனால் பதில் பேச முடியவில்லை. அதோடு சங்கடமாகவும் இருந்தது. படுத்திருந்த பெண்ணை பார்ப்பதை தவிர்த்தவனால் அந்த கதறலை கேட்காமல் இருக்க முடியவில்லை. நொடிக்கு நொடி கூடிக்கொண்டே சென்ற அந்த கதறல் அவனை நடுங்க செய்தது.

மஹாவோ எந்தவித பதட்டமுமின்றி அவளது வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“உன்னோட ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸை எடு…” அந்த பெண்ணை கவனித்துக் கொண்டே அவனை பார்க்காமல் கையை மட்டும் நீட்டினாள்.

சட்டென பையை திறந்தவன், பாக்ஸை எடுத்து அவளிடம் நீட்ட, அதிலிருந்த கத்தரிக்கோல் மற்றும் தையல் இடும் உபகரணங்களை கொடுத்து, “இதை கொதிக்கற தண்ணில போட்டு கொதிக்க வெச்சு தர சொல்லு…” என்று கூற, அதை அவன் அவரிடம் கூறினான்.

அந்த பெண்ணும் அதை செய்ய, மிக தீவிரமான முகத்தோடு, வயிற்றை அழுத்திப் பிடிக்க ஆரம்பித்தாள்.

அந்த பெண் மேலும் கீழுமாக மூச்சு வாங்க,

“மேல் மூச்சு விட வேண்டாம்ன்னு சொல்லு… குழந்தை உள்ள போக பார்க்கும்… மூச்சை நல்லா வெளிய விட்டு, அழுத்தி வெளிய தள்ள சொல்லு…”

அவள் எந்தவிதமான தடுமாற்றமும் இல்லாமல் அவனிடம் கூற, அவன் தான் சற்று தடுமாற்றத்தோடு அந்த பெண்ணிடம் அதை கூறினான்.

அதன் பெண் ஒவ்வொன்றையும் ஷ்யாமிடம் சொல்லியே இருவரிடமும் சொல்ல வைத்து, கடைசியில் ஷ்யாமையே வயிற்றை பிடித்து வெளியே அழுத்த சொல்லி, ஒரு வழியாக அரை மணி நேர போராட்டத்துக்கு பின் அந்த ஜனனம் நிகழ்ந்தது. அதற்குள் இவன் வியர்த்து கொட்டி ஒருவழியாகி விட்டான்.

பெண் குழந்தை!

லாவகமாக குழந்தையை வெளியே எடுத்து, தொப்புள் கொடியை வெட்டிவிட்டு, குழந்தைக்கு செய்ய வேண்டியதை எல்லாம் எந்த விதமான அசூயையும் இல்லாமல் செய்தவள், ஒரு துணியை கொண்டு துடைத்து ஷ்யாமை அழைத்து, அவன் கையில் கனமான துணியை விரித்து, குழந்தையை அவனது கைகளில் வைத்தாள்.

அந்த பெண்ணின் தாயை பிரசவித்த மகளுக்கு செய்ய வேண்டியவற்றை செய்ய தன்னோடு இருத்திக் கொள்ள, கையில் குழந்தையை ஏந்தியவாறு தடுப்புக்கு அப்பால் சென்று நின்று கொண்டான் ஷ்யாம்.

அவன் என்ன மாதிரி உணர்கிறான் என்று அவனுக்கே தெரியவில்லை. உள்ளுக்குள் பரவியிருந்த நடுக்கமெல்லாம் அந்த சிறிய ஜீவனை கண்டபோது பரவசமாக மாறியிருந்தது. அந்த உயிர் இந்த உலகத்திற்குள் வர தானும் ஒரு காரணம் என்பதில் அவனுக்கு அவ்வளவு பெருமிதமாக இருந்தது.

எத்தனை கோடி கொடுத்தாலும் இந்த திருப்தியும் சந்தோஷமும் வருமா என்பது அவனுக்கு சந்தேகம் தான்.

கண்கள் பனித்து கண்ணீர் துளி தேங்கியது.

கண்கள் திறக்காத அந்த புத்தம் புது பூவை கையில் ஏந்திக் கொண்டு அந்த குட்டி கைகளையும் கால்களையும் செப்பு இதழ்களையும் பார்த்துக் கொண்டே இருந்தான்.

மெய்மறந்த நிலையில் அந்த குழந்தையோடு ஐக்கியமாகியிருந்த நேரத்தில், “ஷ்யாம்… இங்க வா…” என்றழைத்து குழந்தையை வாங்கி லேசாக வெதுவெதுப்பான நீரை ஊற்றி குழந்தையை குளிக்க வைத்தாள் மஹா.

அத்தனையும் ஆச்சரியமாக பார்த்தபடி அவளுக்கு உதவி கொண்டிருந்தான் அவன்.

பிரசவித்த பெண் மயக்க நிலைக்கு செல்லும் முன் இருவரையும் நன்றியாக பார்த்த பார்வையை அவனால் ஆயுளுக்கும் மறக்க முடியுமோ? அது போன்றதொரு பார்வையை பணத்தை கொடுத்து வாங்கிவிடத்தான் முடியுமா?

அனைத்து வேலைகளையும் முடித்த பின், அவர்களை மருத்துவமனைக்கு போக சொல்லி, முன்னேற்பாடாக எடுத்துக் கொள்ள வேண்டிய மாத்திரைகளையும் எழுதிக் கொடுத்து விட்டு தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு நிமிர்ந்தவளின் காலில் அந்த வயதான பெண் சாஷ்டாங்கமாக விழுந்திருந்தார்.

அதிர்ந்து அவள் நகர்ந்து கொள்ள பார்க்க, அந்த பெண்ணோ அவளது காலை பிடித்து கதறினார்.

அவர் என்ன சொல்கிறார் என்பது அவளுக்கு புரியாவிட்டாலும், அது நன்றி நவிலல் என்பது கூடவா அவளால் உணர முடியாது?

ஷ்யாம் மஹாவை பெருமிதமாக பார்த்துக் கொண்டிருந்தான். இவர் என்ன சொல்கிறார் என்பதை இவள் பார்வையால் கேட்க, அவன் புன்னகையோடு,

“நீ தான் அவங்களுக்கு குலதெய்வமாம். அவங்க குலதெய்வம் தான் உன் ரூபத்துல இங்க வந்து டெலிவரி பார்த்து இருக்காம்… குழந்தைக்கு நீ தான் பேர் வைக்கணுமாம்…” என்று கர்வமாக கூறினான்.

அந்த கர்வத்தில் தான் அவ்வளவு மகிழ்ச்சி, பேரின்பம், பெருமை என்று அனைத்தும் வழிந்தது.

“அதெல்லாம் வேண்டாம்ன்னு சொல்லு ஷ்யாம்… இது ரொம்ப சாதாரண ஹெல்ப்…” என்று அவள் மறுக்க, அவன் அதை அப்படியே மொழிபெயர்த்தான். அதற்கு அவர் மீண்டும் அதையே வலியுறுத்திக் கூற, இவள் மறுக்க, அவனை பெயர் வைக்க சொல்லி அந்த பெண் வேண்டினார்.

துணியோடு குழந்தையை கையில் வாங்கியவன்,

“மஹா, என் செயினை கழட்டேன்…” என்று அவளிடம் தலையை சாய்த்தான். ஆச்சரியமாக அவனை பார்த்தவள், அவன் சொன்னதை செய்தாள்.

“குழந்தைக்கு போட்டு விடு…” என்று அவன் கூற, அவளும் மறுக்காமல் அதை செய்ய, குழந்தையின் காதுக்கருகில் குனிந்தவன்,

“மகாவேங்கடலக்ஷ்மி…” என்று மூன்று முறை கூறினான், கண்கள் பனிக்க!

அவளது பெயரை சொன்னபோது அவனது முகத்தில் தெறித்த அன்பையும், கருணையும், அதை தாண்டிய பெருமிதத்தையும் உணர்ந்தவளுக்குள் எதுவோ தடம் புரண்டது.

அவளது விழியோரம் மெல்லிய ஈரம்!

அவர்களது குடிசையிலிருந்து வெளியே வந்தவர்கள் மௌனத்தை தத்தெடுத்து இருந்தனர். இருவரது மனதிலுமே மகிழ்ச்சி அலை பொங்கிக் கொண்டிருந்தது. அந்த சந்தோஷத்தில் வார்த்தை வெளிவரவில்லை. அந்த மௌனமும் சுகம் தான். அளவிற்கு அதிகமான மகிழ்வும் சரி, தாங்க முடியாத துக்கமும் வார்த்தைகளை மௌனிக்க வைத்து விடும்.

இருவருமே அதை தான் கடந்து கொண்டிருந்தனர்.

எதையோ சாதித்த உணர்வு அவனுக்குள்! இது போன்றதொரு உணர்வை அவன் உணர்ந்ததே இல்லை.

சற்று நேரம் நடந்தவன், செண்பக மரத்தினடியில் நின்றான். செண்பகப் பூவின் வாசம் கும்மென்று வீசிக் கொண்டிருந்தது. அவன் நின்றதால் அவளும் நின்றாள்.

ஆழ்ந்து அவளை பார்த்த அவனது பார்வையில் என்ன இருக்கிறது என்பதை அவளால் உணர முடியவில்லை. சொல்ல முடியாத உணர்வு குவியலின் பால் ஆட்பட்டிருந்தான்.

“என்ன ஷ்யாம்?”

“ஒண்ணுமில்ல…” என்றவனின் கண்கள் நீரில் பளபளத்தது. கைகளில் இன்னமும் நடுக்கம் போகவில்லை.

ஏதோ பேச வந்தவளை தடுத்து, இழுத்து அணைத்துக் கொண்டான்.

“ஷ்யாம்… என்ன இது? விடு…” அவனிடமிருந்து விடுபட அவள் முயல,

“கொஞ்ச நேரம் இப்படியே இரு மஹா… ஐ ஆம் ஷிவரிங்…” மறைக்காமல் உண்மையை சொன்னவனை என்ன சொல்வது? அந்த நேர்மையை அவ்வளவு பிடித்தது அவளுக்கு.

“ஹே என்னடா… இதுக்கே இப்படி நடுங்கற? பயம்னா என்னன்னே தெரியாதுன்னு சொல்வ?” என்று மெலிதாக சிரித்தபடி அவனது முதுகை தட்டிக் கொடுக்க,

“ம்ம்ம்… அது வேற… இது வேற… இந்த மாதிரி நான் நடுங்கினதும் இல்ல… இவ்வளவு சந்தோஷத்தை நான் அனுபவிச்சதும் இல்ல… ஆல் பிகாஸ் ஆப் யூ டார்லிங்…”

“ஆஹான் அப்படியா? அப்படீன்னா தியேட்டர்ல உன்னை தினம் ஹெல்ப்புக்கு வெச்சுக்கலாம் போலவே…” சிரித்தபடியே சொல்லி விட்டு அவனிடமிருந்து மெல்ல விடுபட,

“எப்பா சாமி… தினமெல்லாம் இந்த டென்ஷன் நமக்கு ஆகாது… நீங்கல்லாம் தெய்வங்க…” என்றவன், அவளது கையை விடாமல் பிடித்துக் கொண்டிருக்க, அவனது நடுக்கத்தை உணர்ந்தாள் மஹா.

அவனது கண்களை நேருக்கு நேராக பார்த்தவள், “ஒரு உயிரை இந்த உலகத்துக்கு கொண்டு வர்றதுக்கு ஒரு பொண்ணு எவ்வளவு வலியை அனுபவிக்க வேண்டியிருக்கு இல்லையா ஷ்யாம்? அது ஒரு மறுபிறவி… அந்த பொண்ணுங்க தான் உனக்கு வெறும் ஸ்பீசிஸ்ஸா?” என்று நிதானமாக கேட்க, அவனிடம் அதற்கு பதிலில்லை.

“குழந்தைய உருவாக்கறதுக்கு ரெண்டு பேர் தேவை… அதுல ஆண்களுக்கு வெறும் சந்தோஷம் மட்டும் தான்… ஆனா அட் தி என்ட் ஆஃப் தி டே ஒரு பொண்ணு அனுபவிக்கற வலியை எந்த ஆணாவது அனுபவிக்க முடியுமா?” அவளது கேள்விக்கு மௌனத்தை மட்டுமே பதிலாக்கினான்.

“இடுப்பெலும்பை பிரிச்சு, யோனியை கிழிச்சு, ரத்தத்தை கொட்ட வெச்சு தான் நாம நம்ம அம்மாவுக்கு பிறந்தோம். அந்த அம்மாவும் மரியாதைக்குறியவங்க கிடையாதா ஷ்யாம்? அந்த அம்மா தான் எல்லா உறவுக்குமே அடிப்படை… உறவுகள் மேல நம்பிக்கை இழக்கறது, சமூகத்தோட அடி வேரை அசைக்கற விஷயம்… நீ மாறணும்ன்னு நான் நினைக்கல… ஆனா ஒரு நண்பனா உன்னை அவ்வளவு பிடிக்குது… சோ எனக்கு தெரிஞ்சத நான் சொல்றேன் ஷ்யாம்… எந்த ஆணியையும் நீ புடுங்காதன்னு சொன்னா கூட எனக்கு சந்தோஷம் தான்…” என்று முடித்து விட்டு அவனது முகத்தை பார்த்தாள்.

அவனது முகத்தில் குழப்பமுமில்லை, மகிழ்ச்சியுமில்லை.

எந்த உணர்வையும் வெளிக்காட்டாத மௌனம் மட்டுமே!

“கொஞ்ச நேரம் உன்னை கட்டிக்கட்டா மஹா?” வெகு இயல்பாக கேட்டவனை கேள்வியாக இவள் பார்க்க, அவளது பதிலை எதிர்பார்க்காமல் அவன் அவளை கட்டிக் கொள்ள, இப்போது அவன் நடுங்கவில்லை. அந்த நடுக்கம் அவளுக்குள் பரவ துவங்கியிருந்தது.

சற்று நேரம் பொறுத்தவன், அவளை விடுவித்துவிட்டு, “போலாமா?” என்று கேட்க, அவள் இயல்புக்கு திரும்ப வெகு நேரமாகியது.

Written by

Ardent reader, kirukkufying something, want to travel with characters around me.

error: Content is protected !!