VI 8

VI 8

ஆர்த்தி ரவியின் “விலகிடுவேனா இதயமே?” 

அத்தியாயம் 08

மனம் நிறைய ஆவல் கொண்டு இப்பயணத்தைத் தொடங்கி இருந்தாலும், ஒரு மூலையில் முணுமுணுவெனக் கோபம் கனன்று கொண்டு தான் இருக்கிறது. இவன் இல்லையெனத் தனக்குத் தானே மறுத்துக் கொண்டான்.

விமானத்தின் வேகத்திற்கு ஈடாக அதிவிரைவாகப் பயணித்தது பார்த்திபனின் எண்ணமும். எல்லாம் அவனது திருமண வாழ்வைப் பற்றித் தான்.

ஒரே மாதத்தில் அவசரமாக நடந்த திருமணம் என்ற போதும், மிக நிறைவாக அனைத்தும் நடந்தது. நடத்தப்பட்டது. அப்போது பாக்கியராஜ் மற்ற அனைவரையும் விடக் கூடுதல் மன நிறைவோடு இருந்தார். மகளின் வாழ்வை ஒரு நல்லவன், அன்பான உறவில் ஏற்படுத்திக் கொடுத்த நிறைவு.

ராஜாராம், கிருஷ்ணசாமியின் பண்புகளை அறிந்தவர். ஆதலால், பெரிய மனபாரம் குறைந்த திருப்தியில் இருந்தார். அதன் பிறகு வந்த நாட்களில் அவரது உடல்நிலை கூட ஒரே சீராகச் சென்ற மாதிரி இருந்தது.

அதனால் ப்ரியாவும் ஆசுவாசமாக உணர்ந்திருந்தாள். ப்ரியா ~ பார்த்திபனின் மண வாழ்வில் பெரிதாகக் கூறும் அளவு எந்தவொரு சுணக்கம் இருக்கவில்லை. ஏனைய புதுமணம் புரிந்தத் தம்பதியரைப் போன்றே அனைத்து நிகழ்வுகளும் நடந்தன. ஒன்றைத் தவிர.

இருவரின் தாம்பத்திய உறவுநிலையில் ஒரு தயக்கம் இருந்தது.

மனதளவில், உடலளவில் ஒன்றுதல் என்பது மிகப் புரிந்து, நேசத்தை உணர்ந்து நடப்பது. சும்மா கணவன், மனைவி என்று ஆனவுடன் உடலுறவு கொள்ளல் என்ன மாதிரி என்று இருவரிடமும் ஒரே எண்ண அலை இருந்தது.

இருவரும் இதனைத் தனிப்பட்ட நேரத்தில் கூடப் பேசி இருக்கவில்லை. ஆனால், ஒருவரின் எண்ணம் மற்றவருக்குத் தெரிந்து போனது. திருமணம் முடிந்து சில நாட்களே ஆன போதும், ஒரு வித உணர்வால் மொழிப் பகிர்தலின்றிப் புரிதல் மெல்ல மெல்ல புகுந்திருந்தது.

மற்றபடி அனைவரின் முன் ஒருவருக்கொருவர் சகஜமாகப் பேசி, கவனித்து, அக்கறை கொண்டு நடந்து கொண்டனர். ஒரு நட்புணர்வு இழையோடிய நிலை.

பார்த்திபனுக்கு ப்ரியாவைப் பிடித்ததால் தானே மணமுடிக்கச் சரியென்றிருந்தான்.

அதே போல ப்ரியாவும், தன் தந்தையின் உடல்நிலையை முன்னிட்டு என்றாலும் வேறொருவருக்கு உடனே சரியெனச் சொல்லியிருப்பாளா என்பது சந்தேகமே!

இந்நிலையிலேயே இருவருக்கும் பிடித்தம் இருந்திருக்க வேண்டும். அப்பிடித்தம் நிச்சயம் காதல் அல்ல. மெல்லிய ஈர்ப்பு? ஹூம்! இருந்திருக்க வாய்ப்புகள் குறைவு.

ஆனால், இருவரும் முன்பே அறிந்தவர்கள். அந்த அறிதல் சொந்தம் என்பதைத் தாண்டி, இருவரின் பண்புகள், பொதுவான பழக்கவழக்கங்களைத் தெரிந்து இருந்ததால் வந்தது. அதனாலேயே பிடித்தம் ஏற்பட்டு இருந்ததோ?

எது எப்படியோ, பார்த்திபன் மனதில் தன் மனைவி. இவளின் விருப்பு வெறுப்பு, சுகம் துக்கம் என எதுவாகினும் பார்த்துக்கிட வேண்டும் என்ற உறுதி வந்திருந்தது. தன் இயல்பையும் மீறி நிரம்பப் பொறுமையாக நடந்து கொண்டான்.

சுஜாதா ஒரு பக்கம் ப்ரியாவை விழுந்து விழுந்து கவனித்தார்.

‘தர்ஷிமா தர்ஷிமா’ என்று தான் விளிப்பார். அவளின் ருசி அறிந்து உணவு வகைகளை மெனு போட்டுச் சமைப்பார்.

“எங்கம்மா மகனை மறந்துட்டாப்ல ப்ரியா. நான் சாப்பிட உட்கார்ந்தது கூட அவங்க கண்ணுக்குப் படுதான்னு பாருடி.”

இப்படிச் சொன்ன பார்த்தியின் தலையில் நங்கென்று கொட்டு வைத்து, “அதென்ன உங்கம்மான்னு சொல்ற? தர்ஷிமா, நீ அவன் பேச்சுக்கு விட்டுக் கொடுத்த அம்புட்டுத்தேன். எனக்கும் சுஜாம்மா அம்மான்னு உரிமையா சண்டை போடுடா.” மருமகளுக்கு எடுத்து கொடுத்தார்.

அவள் புன்சிரிப்புடன் அவரைப் பார்த்து நின்றிருந்தாள். பதில் சொல்லவில்லை. இப்படி அவர் பேசுவது அவளுக்கு வியப்பளித்திருந்தது. இந்த மாதிரி ஒரு குடும்பச் சூழலை அவள் நிச்சயம் எதிர்பார்த்திருக்கவில்லை.

“என்கிட்ட சண்டை போடுவியா நீ? அம்மாவை ஏன் பார்க்கிற? என்னைப் பார். என் கண்ணைப் பார். இப்ப உன் பதிலைச் சொல்லுடி!”

அதிகாரம் போலச் சொன்னாலும், அவனின் குரலில் குறும்பு கூத்தாடியது. முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. இதழ்களை மடித்துச் சிரிப்பை மறைத்தான். இப்படிப் பேசுவதும் மனைவியை வம்பிழுப்பதும் அவனுக்குச் சுவாரசியமாக இருந்தது.

எப்பவும் ஓடி ஓடி உழைப்பவன் தான் பார்த்திபன். திருமணத்திற்குப் பிறகு மனைவிக்காகத் தன் நேரத்தை சற்று ஒதுக்கினான். வெளி வேலைகளைச் செய்ய உரியவர்களை நியமித்துக் கண்கானித்துக் கொண்டான்.

இவன் நேரிடைத் தலையீடு இல்லாமல் எதுவும் சரி வர இயங்காது தான். ஆனாலும், நன்றாக இயக்கினான். கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் வீட்டிற்கு வந்து நிற்பான்.

மீராவின் உடல்நிலை மாற்றம், தொடர்ந்த தொய்வு, உபாதைகள், மறைவு, இழப்பு எனச் சில வருடங்கள் உழன்று கொண்டிருந்தவள் ப்ரியா. தன்னியல்பாக இருந்த கலகலப்பு, அனைவருடனும் வார்த்தையாடல் என இல்லாமல் இருந்தவளை மீண்டும் துளிர்க்க வைத்துக் கொண்டிருந்தனர் புகுந்த வீட்டு உறவுகள்.

“சுஜாம்மா எனக்குத் தான் முதல் உரிமை தந்து இருக்காங்க. அப்படித் தானேம்மா?”

தன் அத்தையின் தோளில் உரிமையாகச் சாய்ந்து கொண்டு, கணவனுக்குப் பழிப்பு காட்டினாள். சுஜாதா மகளில்லாத குறையை முற்றிலும் களைந்த மருமகளை அப்படித் தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

“பழிப்பா காட்டுற? உம்ம்! உன்னை…”

மனைவியின் செவியைத் திருகினான். செல்லமாகத் தான் என்றாலும் எஃகுறுதியான தேகம் கொண்டனின் விரல்களில் சிக்கியிருந்த இடது காது மடல் வலியால் சிவந்து விட, சுஜாதா மகனை வறுத்தெடுத்து விட்டார்.

விமானத்தில் அமர்ந்திருந்த பார்த்திபனுக்கு இந்த நினைவில் எங்கோ பதுங்கி இருந்த கோபம் முணுமுணுவென ஸ்பார்க் ஆனது.

“அதெப்படிடி உங்க அத்தையைத் தவிக்க விட்டுட்டுப் போன? இப்ப நேர்ல வர்றேன்ல. வச்சுக்கலாம்.”

‘எதைடா வச்சுக்கலாம்ங்கிற? எப்படியும் அவ தான் உன் பொண்டாட்டி. இதையெல்லாம் அவட்ட தானே வச்சுக்க முடியும்?’

ராங் டைமிங்கில் கிண்டலாக எழும்பிய உள் குரலை அடக்கினான்.

“பஞ்சாயத்து வச்சுக்கப் போறதைச் சொன்னா… ச்சை நீ வேற?”

‘எதுக்கு மாஸ்க் பண்ணுற? டேய் அவளைப் பிரிஞ்சதுலயிருந்து நீ ஏங்கவே இல்லையாக்கும்? ம்க்கும்.. சும்மா உன் கோபத்தையெல்லாம் இந்த எமிரேட்ஸ் விமானத்திலேயே விட்டுட்டுப் போ!’

ஹ்ம்… பார்த்திபன் பெருமூச்சுடன் சற்று வசதியான அந்த எகானமி ப்ளஸ் இருக்கையில் நெளிய, அந்த நேரம் தான் அழகிகள், ஆணழகனாகத் திகழும் ஹோஸ்ட்ஸ் மற்றும் ஸ்டூவர்ட்ஸ் என அழைக்கப்படும் விமானப் பணியாளர்கள் தங்கள் உணவு சேவையைத் தொடங்கினர்.

பார்த்திபன் இப்போது உண்ணும் மனநிலையில் இல்லை. தன் உணவை மறுத்துவிட்டுக் கொஞ்சம் டிரிங்க்ஸ், எஸ் லிக்வர் தான்… வாட்கா மட்டும் வாங்கிக் கொண்டு அமைதியாகப் பருகத் தொடங்கினான்.

அவனுக்கு இப்போது தேவையாக இருந்தது. அவ்வப்போது அளவாக எடுப்பது தான்.

சென்‍னை கல்லூரியில் படித்த போது இல்லாமல், மேற்படிப்புக்காக அமெரிக்காவில் தங்கி இருந்த போது ஒரு கட்டத்தில் தேவை எனக் காரணம் சொல்லி பழகியது. பிறகு முற்றிலும விட்டும், இப்போது ஊரில் ஶ்ரீபதியுடன் வாரம் ஒரு முறை என நிற்கிறது.

பரபரவென அத்தனை வேலலைகளையும் ஓய்வின்றி முடித்துவிட்டு கிளம்பிய அலுப்பிருந்தும் தூங்க முடியவில்லை. கொஞ்சமாகக் குடித்தால் தூக்கம் வரும் என நம்ப, எங்கே வந்தது தூக்கம்? டூ விட்டுத் தொலைவில் ஓடிப் போனது.

மீண்டும் ப்ரியா… மீளா ப்ரிய நினைவலைகள்!

“என்னத்தைச் சொல்ல? படுத்துறா! டீ ப்ரீ…”

ஆழ்ந்த குரலில் மிக மெலிதாக ஒலித்தது. அடர்ந்த சிகையைக் கலைத்து மீண்டும் விரல்களைக் கொண்டு அழுத்தினான்.

பழைய நினைவுகள் அள்ளிக் கொண்டன.

வீட்டில் யாரும் ப்ரியாவை எதற்காகவும் கட்டுப்படுத்தவில்லை. அவளாகவே அனைவருடனும் ஒன்ற முற்பட்டாள். பழக்கவழக்கங்கள் புதியன என்ற போதும், அவற்றைத் தெரிந்து கொள்ள, செய்து பார்க்க விளைந்தாள்.

சுஜாதா அவளது விருப்பம் அறிந்து சில சின்னச் சின்ன வேலைகளைச் செய்ய விட்டார். இருவரும் பேசியபடியே வேலைகளைப் பார்ப்பர். ராஜாராமும் ஓய்வாக டி. வி முன் அமரும் போது மருமகளை அழைத்து அருகில் அமர்த்திக் கொள்வார்.

அவருக்கு அரசியல் பிடிக்கும். இவளுக்கு‍ எங்கே இந்திய அரசியல் தெரியும்? முழிப்பாள். தலையை வெறுமனே அசைப்பவளைப் பார்க்கும் பார்த்திபனுள் அச்செயல் ரசனையைத் தூண்டும். குறும்புக்காரன் இன்னும் அப்பாவின் பேச்சை ஏற்றி விடுவான்.

அவள், “ஏன் இப்படிப் பண்றீங்க?” என முறைத்தால் உல்லாசமாகச் சிரிப்பான்.

மாமனார், மருமகள், மகன் மூவரும் ஆங்கிலச் செய்திகள், படங்கள், நிகழ்ச்சிகள் எனப் பார்ப்பதும் உண்டு.

இரவின் தனிமையில் தங்கள் அறையில் வைத்துப் பாடம் வேறு எடுப்பான். அட, அரசியல் பாடந்தாங்க! கணவனாக அப்ரோச் பண்ண சிறிது காலம் எடுத்துக் கொண்டான்.

முதலில் இவனுக்குள் ஈர்ப்பு தோன்றி மனைவி மேல் ஆர்வம் எழும்பியது. அது மட்டும் போதுமா?

அவளையும் கொஞ்சம் அறிந்தவனுக்கு அவள் பிறந்து வளர்ந்து வந்த நாட்டின் சூழலும், திருமணத்திற்கு முன்னர் ஒருவரை ஒருவர் அறிந்து, பழகிக் காதலித்து எனச் செல்லும் அந்தப் பாதையும் நன்றாகத் தெரியும்.

நிறையப் பேர்ப் பள்ளி இறுதியில், தங்கள் காதல் மனதைக் ண்டு கொள்வதுண்டு. அப்படி இல்லையென்றால் கல்லூரியில். இப்படி அமையும் காதல் பெரும்பாலும் திருமணம், குடும்பம் என்று சீராகச் செல்லும்.

சில சமயம் நம்மவர்கள் தங்கள் பிள்ளைகள் வேறு நாட்டவர், வேறு மதம், மொழி எனக் காதலை கட்டுப்படுத்த விளையும் போது பிள்ளைகள் தங்கள் காதலை விட்டுக் கொடுப்பர். ஆனால், அதன் பிறகு வேறு ஒரு வாழ்க்கை அமைத்துக் கொள்ள மிகவும் காலத் தாமதம் ஆகி விடுகிறது. முதலில் அமையும் ஒரு புரிதல் கிடைப்பது சிரமமாகி விடுகிறது.

பெரும்பாலும் பெற்றோர் பிள்ளைகளின் வாழ்வில் குறுகிக்கிடுவது இல்லை. பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம் என்பது வெகு அரிது என்பதைவிட, அந்த மாதிரி ஒரு கான்செப்ட் அமெரிக்க மக்களிடையே இல்லை. அங்கு மட்டுமல்ல வேறு நாடுகளில் காணப்படுவது இல்லை.

அரேன்ஜ்ட் மேரேஜ்? வாட் இஸ் இட்? என உயரும் புருவங்கள், விளக்கம் தந்தப் பின், விழிகளும் இதழ்களும் அகல அதிர்ச்சியைப் பிரதிபலிக்கும் முகங்கள் எத்தனை கண்டிருப்பான் பார்த்திபன்?

அதனாலேயே தனக்குள் காதல் முளை விட்ட பிறகும் காத்திருந்தான். அக்காத்திருப்பும் முடிவிற்கு வந்ததே!

மனைவியை முதன் முதலில் தழுவி அணைத்தது ஒரு சாயுங்காலம் அல்லவா? இந்த நிமிடம் அந்நினைவால், அந்த அணைப்பின் வேகம் மற்றும் தாக்கம் இப்போது நடந்தது போல உணர்ந்தான்.

முதல் முறை என்பது ஸ்பெஷல் தான். என்றும் நினைவில் இருக்குமே! ஆனால், அன்று முதல் முறை போலவா இருந்தது?

“நிச்சயமாக இல்லை தான்!”

இடம் வலமாகத் தலையாட்டி முறுக்கு மீசையின் கீழ் முறுவல் மலர அமர்ந்திருந்தவனின் வசீகரம், மெல்லிய வெளிச்சத்திலும் இவனைக் கடந்து சென்றவளை மிகவும் கவர்ந்தது. உழைப்பில் வந்திருந்த கட்டுமஸ்தான உடம்பை இவன் விமானத்தில் நுழையும் போதே பார்த்திருந்தாள் அவள்!

அவள் வேறு முக்கிய வகையில் அறிமுகம் செய்து கொள்ளக் கூடியவளாக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். தற்போது பார்த்திபனின் சக பயணி மட்டுமே!

தன்னை இப்படி ஒருத்தி உன்னிப்பாகக் கவனிக்கிறாள் என்பதைப் பார்த்தி அறியவில்லை. ஒரு நொடி கூட அவளின் முகம் பார்க்கவில்லை. இதில் அந்த நவநாகரீகமான யுவதி ஹர்ட் ஆனது நிச்சயம்!

பார்த்திபனின் எண்ண அலைகள் இவ்வாறு பயணித்த நேரம் தான் ப்ரியா தன் வேலையில் ஒன்ற முடியாமல் மருத்துவமனையில் தவித்தது. நேசத்தில் இதைப் போல் நிறைய விசித்திரங்கள் உண்டு. நம்புங்கள்!

உங்களின் நேசம் கூட வெரி ஸ்பெஷல் தான். கதைகளைப் போல பகிரங்கமாக வெளியே தெரிவதில்லை. அவ்வளவே!

Comments 

error: Content is protected !!