VNE 28

VNE 28

அத்தியாயம் 28

தலையில் கை வைத்தபடி சோஃபாவில் அமர்ந்திருந்தான் ஷ்யாம். மனம் கொதித்துக் கொண்டிருந்தது. எவ்வளவு தைரியம் இருந்தால் மஹாவின் பெயரை இழுத்திருப்பார்கள் என்ற கோபம். அவனைப் பொறுத்தவரை மீடியாவில் இது போல பல பிரச்சனைகளை சந்தித்தவன்… எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் ஊதி தள்ளிவிட்டு போய்விடுவான். அல்லது எதற்குமே பதில் கூறாமல் தவிர்த்து விடுவான். எதிரில் இருப்பவர்கள் பேசிப் பேசி ஓய்ந்து விடுவார்கள்… பிரச்சனையும் ஓய்ந்து விடும்.

ஆனால் இப்போது அப்படி செய்ய இயலாது. ஏனென்றால் அவனது மஹாவை வலுகட்டாயமாக இழுத்து வைத்து செய்தி பகிரப்பட்டு இருக்கிறது. அது அவனது ரத்தத்தை கொதிக்க செய்திருந்தது. அதுவும் அவனிடம் எதுவும் கேட்காமலேயே அவன் பதில் கூறியதாக செய்தி வேறு! தான் எப்போது இவர்களுக்கு பதில் கூறியிருக்கிறோம்?

எதிரில் நியுஸ் சேனல்களில் அனல் பறந்து கொண்டிருந்தது. திரைப்பட துறையில் தவிர்க்க முடியாத கட்டபஞ்சாயாத்துகளை பற்றி தொகுப்பாளர் கேள்வி எழுப்ப, அதற்கு சூடாக விவாதித்துக் கொண்டிருந்தனர் அந்த துறையிலிருந்த பல்வேறு தரப்பட்ட பிரமுகர்கள்.

பத்தாவது முறையாக விஷ்ணு அழைத்திருந்தான். அவன் ஷ்யாமின் அறிவிக்கப்படாத பிஆர்ஓ. எந்த வேலையாக இருந்தாலும் பார்ப்பான். யாரையாவது அடிக்க சொன்னால் யோசிக்காமல் அடித்து விட்டு வருவான். தனக்கு பின்னால் ஷ்யாம் இருப்பான் என்ற தைர்யம்.

நிருபர்கள் பொதுவாக விஷ்ணுவிற்கு தான் தொடர்பு கொள்வார்கள்.

அதனால் தொலைகாட்சிகளும் பேப்பர் ஆட்களும் அவனை சுற்றி வளைத்து இருக்கலாம். அதனால் தான் அவன் அழைத்துக் கொண்டே இருப்பது.

செய்தியை பார்த்தது முதல் யாருக்கும் பதில் சொல்லும் பொறுமை போய்விட்டிருந்தது. விஷ்ணு, இளங்கவி, சந்தரன் என்று ஒரு டீம்’மை இறக்கி விட்டு, பிரச்சனைகளை சமாளிக்க சொல்லிவிட்டு இவன் உத்தண்டி வீட்டில் அமர்ந்திருந்தான்.

தொலைகாட்சிகள் நேரடியாக பேச நினைக்கலாம். அதனால் தான் விஷ்ணு அழைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை கணித்தவன், அவனது அழைப்பை ஏற்கவில்லை. பேச தயக்கமில்லை… ஆனால் அவன் பேசியபின் வேறு வார்த்தைகளை யாரும் பேச முயற்சிக்கக் கூட கூடாது. அவனது வார்த்தைகளே கடைசி வார்த்தையாக இருக்க வேண்டும்… அப்படிப்பட்ட உறுதி இருந்தால் மட்டுமே தான் பேச முடியும் என்று எண்ணினான்.

ஆனால் அந்த உறுதியை எப்படி கொணர்வது? அந்த உறுதியை அவன் மட்டுமாக கொண்டு வர முடியாது. அதற்கு மஹா வேண்டும். அவள் இந்த செய்தியை மறுக்க வேண்டும்… அல்லது கார்த்திக்! இவை இரண்டுமே நடைபெற போவதில்லை. மகாவை இவனே பேச விட மாட்டான். கார்த்திக் அவனாக வாயை திறப்பது கடினம், ஷ்யாமிற்கு ஆதரவாக!

சமையல் செய்யும் மகேந்திரன் காலை உணவை கொண்டு வந்து வைத்து விட்டுப் போய் அரை மணி நேரமாகியிருந்தது. உண்ண தோன்றவில்லை. உத்தண்டி வீட்டில், சமையல் செய்ய ஒரு ஆள், மேல் வேலைக்கு ஒரு ஆள், ஒரு வாட்ச்மேன் மட்டுமே. அவர்களையும் ஜோதியின் கட்டாயத்தில் தான் வைத்திருந்தான். முதலிலெல்லாம் அவனது அனைத்து வேலைகளுக்கும் இந்த வீடு தான் உபயோகப்பட்டுக் கொண்டிருந்தது. இப்போதெல்லாம் அவற்றை முழுவதுமாக தவிர்த்து இருந்தான்.

காதல் வயப்பட்ட பின்னர், மஹாவுக்கு முழுமையாக நேர்மையாக இருந்தான். எந்தவிதத்திலும் அந்த நேர்மையை கைவிட அவன் தயாராக இல்லை.

இப்படியொரு நிலையில் இது போன்ற நிகழ்வு!

காரணமானவன் கையில் கிடைத்தால்…. பல்லைக் கடித்தான் ஷ்யாம்!

“மகி…” என்றழைக்க, அவன் அவசரமாக வந்தான்.

டிபன் தட்டை காட்டி, “எடுத்துட்டு போ…” என்றான். மகேந்திரன் தயக்கத்தோடு எடுத்துக் கொண்டான்.

அவன் உண்ணும் மனநிலையில்லை. காலையிலிருந்து ஆறு பாக்கெட் சிகரெட் காலியாகி இருந்தது. விடாமல் புகைத்துக் கொண்டிருந்தான்.

“ஜூஸ் கொண்டு வரட்டுங்களா?” என்று மகி கேட்க,

“வேண்டாம் மகி… டிஸ்டர்ப் பண்ணாத…” என்றவனின் கைகளில் வெண்குழல் வத்தி புகைந்து கொண்டே இருந்தது!

உணர்வில்லாமல் தொலைகாட்சியை பார்த்துக் கொண்டிருந்தான்.

“இந்த பிரச்சனைல சம்பந்தப்பட்ட பைனான்ஸியர், ரொம்ப பெரிய அளவுல பைனான்ஸ் பண்ணக் கூடியவர் தான்… எப்ப பணம் கேட்டாலும் கிடைக்கும்… ஆனா சொன்ன தேதில திருப்பலைன்னா கண்டிப்பா நிறைய பிரச்சனைகளை கொடுக்க கூடியவர் அவர்…” என்று ஒருவர் கூற,

“பணத்தை வசூல் பண்ண என்ன வேண்ணா பண்ணுவாங்க இல்லையா?” என்று ஒரு பைனான்சியரை நோக்கி தொகுப்பாளர் கேள்வி எழுப்ப,

“சர்… நீங்க ஒரு பக்கம் மட்டும் பார்க்கறீங்க… ஆனா பைனான்ஸ் பண்றதோட இன்னொரு ரிஸ்க்க நினைக்க மாட்டேங்கறீங்க… கொடுத்த பணத்தை வாங்க முடியாம எத்தனை பைனான்சியர் தற்கொலை பண்ணிட்டு இருக்காங்க தெரியுமா? பணத்தை வாங்கிட்டு பட்டை நாமம் சாத்திட்டு போறவங்க எத்தனை பேர் தெரியுமா? எங்களுக்கும் ஒன்னும் பணம் மரத்துல காய்க்கலை… கொடுத்த பணம் வந்தா தான் அடுத்த படத்துக்கு கொடுக்க முடியும்…”

“நீங்க சொல்றது கொஞ்சம் அதீதமா தெரியுதே…”

“கிடையாதுங்க…” என்று மறுத்தவர், ஒரு பைனான்சியரின் பெயரைக் கூறி, “அவர் இந்த ஃபீல்ட்ல கிட்டத்தட்ட இருபது வருஷமா இருந்தவர்… போன மாசம் தற்கொலை பண்ணிக்கிட்டார்…” என்று நிறுத்தியவர், இன்னொருவரின் பெயரை கூறி, “அவர் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி குடும்பத்தோட சூசைட் பண்ணிக்கிட்டார்…” என்றவர்,

“இங்க நிறைய பிரச்சனை இருக்குதுங்க… படம் தயாரிக்க வர்றவங்களுக்கு பைனான்ஸ் கொடுக்கும் போது அது திரும்பி வர்றதுக்கு நாங்க மினிமமா கியாரண்டி வாங்கறோம்… அந்த படம் சக்சஸ்புல்லா போயிடுச்சுன்னா எங்க பணம் பிரச்சனை இல்லாம வந்துடும்… ஆனா ஓடலைன்னா, நாங்க எப்படியாவது பணத்தை வாங்க தான் ட்ரை பண்ண வேண்டியிருக்கு… வாங்க முடியலைன்னா, நாங்க இன்னொரு பக்கம் வாங்கியிருப்பம் இல்லையா, அவங்க கிட்ட நாங்க எப்படி சமாளிக்க? அந்த மாதிரி சிச்சுவேஷன்ல தான் தற்கொலை முடிவுக்கு போறாங்க…” என்று இடைவெளி விட்டவர்,

“மத்தவங்க சூசைட் பண்ணிகிட்டா அதை பரிதாபமா பார்க்கற சமூகம், பைனான்சியர் பண்ணிகிட்டா, எத்தனை பேர்கிட்ட வட்டி வாங்கியிருப்பான்… போகட்டும்ன்னு சொல்லும்… ஆனா இவ்வளவு வட்டின்னு தெரிஞ்சு தானே வாங்கறாங்க? நாங்க என்ன சோஷியல் சர்விஸ் பண்ண வர்றமா? எங்களுக்கும் பொழப்பு இருக்கு… குடும்பம் இருக்கு…” என்று மீண்டும் இடைவெளி விட்டு,

“எந்த தொழில் ஆரம்பிக்கும் போதும் இதே மாதிரியான ஒரு ரிஸ்க் இருக்கு… சினிமான்னு மட்டும் இல்ல… கொங்கு பெல்ட்ல எத்தனை சூசைட் நடந்துருக்கு தெரியுமா? எத்தனை பேர் ஐபி கொடுத்துட்டு போயிருக்காங்க தெரியுமா? நீங்க சொல்ற மாதிரி நாங்க கொஞ்சம் கறாரா நடந்துக்கறோம் தான்… இல்லன்னா நாங்களும் இப்படிதாங்க தூக்கு மாட்டிக்கணும்…” என்று அவர் விடாமல் கூற, கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு சற்று அதிர்ச்சி தான்.

“அதோட கந்து வட்டி வாங்கறாங்கன்னு ஒரு கம்ப்ளைன்ட் போய்ட்டா போதும்… நாங்க திரும்ப அவங்க கிட்ட கொடுத்த பணத்தை நினைச்சு கூட பார்க்க முடியாது…” என்று விடாமல் முட்டுக் கொடுத்தார் அந்த பைனான்சியர்.

“அதுக்காக பொண்ணுங்களை கடத்தி பணத்தை வசூல் பண்ணலாமா? அது முறையா சொல்லுங்க?”

“எனக்கு அது பற்றி தெரியல… ஆனா இதுவரைக்கும் அவர் மேல அப்படி ஒரு அலிகேஷன் இல்ல… வேற எப்படி வேணும்னாலும் கட்டபஞ்சாயத்து பண்ணியிருக்கார்ன்னு கேள்விப்பட்டு இருக்கேன்… ஆனா இந்த மாதிரி கிடையாது…” என்று இன்னொரு தயாரிப்பாளர் அடித்துக் கூறினார். அவர் ஷ்யாமிடம் பணம் வாங்கி இருந்தவர்.

“ஆனா கட்டபஞ்சாயத்து நடக்கும்… அது சட்ட விரோதமில்லையா?” தொகுப்பாளர் விடாப்பிடியாக கேட்க,

“கேள்விப்பட்டு இருக்கேன்… எனக்கு அப்படி எதுவும் நடந்தது இல்ல… இத்தனைக்கும் பணம் கொடுக்க ரொம்ப லேட் பண்ணிட்டேன்… ஆனா தம்பி ரொம்ப பெருந்தன்மையா தான்  இருந்தாங்க… மத்தவங்க சொல்றதை நான் நம்ப மாட்டேன்…” என்று அவர் அடித்து கூறிவிட, இவனுக்கு மெலிதாக புன்னகை மலர்ந்தது.

அவரது மகனை இரண்டு நாட்கள் உத்தண்டி வீட்டில் வைத்திருந்ததை நினைவு வைத்திருப்பார் போல… தங்கு தடையில்லாமல் ஷ்யாமுக்காக பேசிக் கொண்டிருந்தார்.

“இந்தளவு சொல்றீங்க சரி… ஆனா அநியாய வட்டிக்கு பணம் கொடுக்கறதும்… அந்த வட்டியையும் பணத்தையும் கொடுக்கலைன்னா வலுக்கட்டாயமா சொத்துக்களை பிடுங்கறதும் இல்லைன்னு சொல்றீங்களா?” என்று தொகுப்பாளர் கூற,

“பத்து பேர் தொழில் பண்ற இடத்துல ரெண்டு பேர் அப்படி இருக்கலாங்க… அதுக்காக அந்த பத்து பேரையும் தப்பு சொல்ல கூடாது இல்லையா? அதுவும் ஷ்யாம் தம்பி அப்படி கிடையாது… நியாயமான ஆள்… எல்லாருக்கும் எக்சாம்பிள்லா இருக்கறவர்…” என்று அந்த பைனான்சியர் கூற,

“சர்… இந்த சினிமா துறையில பைனான்ஸியர்ங்கறவங்க ரொம்ப முக்கியம்… அவங்க நல்லா இருந்தா தான், இந்த ஃபீல்ட் நல்லா இருக்கும்…” என்று தயாரிப்பாளர் கூற,

பார்த்துக் கொண்டிருந்த ஷ்யாமுக்கே, ‘டேய் இவன் அஞ்சு ரூபாய்க்கு நடிக்க சொன்னா அஞ்சு லட்சத்துக்கு நடிக்கறான்டா…” என்று சிரிக்க தோன்றியது. ஆனால் அவர்கள் கூறிய பாயிண்ட்ஸ் பெரும்பாலும்  உண்மையும் கூடத்தானே!

இதையெல்லாம் சமாளித்து விட முடியும்… ஆனால் மஹாவின் பெயரை இந்த விஷயத்தில் யார் இழுத்தது என்பதையும், நடந்த விஷயத்தை மீடியாவுக்கு சொல்லுமளவு யாருக்கு தைரியம் உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளலாமல் அவனால் இருக்க முடியவில்லை.

சிவச்சந்திரனை முடுக்கி விட்டு இரண்டு மணி நேரங்களாகி இருந்தது. ஆனால் இன்னமும் அவனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. கண்டிப்பாக அவன் கண்டுபிடித்து விடுவான். ஆனால் அதுவரையும் கூட ஷ்யாமுக்கு பொறுமையில்லை.

செல்பேசி அழைத்தது. விஜி அழைத்துக் கொண்டிருந்தான். இத்தனை நேரம் வரை இவன் என்ன செய்து கொண்டிருந்தான்? இவனல்லவா உடனே தொடர்பு கொள்பவனாக இருக்க வேண்டும்? ஷ்யாமின் புருவம் முடிச்சிட்டது.

கையிலிருந்த செல்பேசியை உணர்வில்லாமல் பார்த்து வெறித்தான்!

“சொல்லு விஜி…” அட்டென்ட் செய்தவன், அமைதியாக கேட்க,

“பாஸ்… என்னென்னவோ டிவில பேசிட்டு இருக்காங்க…” என்று கேட்டான், ஒன்றுமறியாதவன் போல!

“ஏன் விஜி… உனக்கு இன்னும் ஒன்னும் தெரியலன்னு நான் நம்பனுமா?” வெகு நேரடியான கேள்வி… பதில் கூற ஒரு நிமிடம் யோசித்த விஜய்,

“பாஸ்… நான் தஞ்சாவூர்ல இருக்கேன்… ஆக்சுவலா அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்… இங்க தான் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்கோம்… வேற எந்த ரீசனும் இல்ல பாஸ்…” என்றவனின் காரணம் உண்மைதான். அவனது தந்தைக்கு ஹார்ட் அட்டாக் என்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்தார்.

ஆனால் இந்த சந்தர்ப்பம் தான் சரியானது என்று தேர்ந்தெடுத்தது இவன் தான் என்பதை ஷ்யாம் அறிய முடியாது என்ற இறுமார்ப்பில் வெகு சுலபமாக பேசினான் விஜய்.

“ஓஓ… அப்படியா? இப்ப மட்டும் எப்படி தெரிஞ்சுது விஜி?”

“போன் வந்தது பாஸ்… அதுக்கப்புறம் தான் டிவி பார்த்தேன்…” என்று கூறியதை இவனால் நம்ப முடியவில்லை.

“ஏன் முன்னாடியே சொல்லிட்டு போகல?”

“ஷார்ட் ட்ராவல்ன்னு நினைச்சு வந்தேன் பாஸ்… அப்பாவை பார்த்துட்டு போலாம்ன்னு… ஆனா வந்தப்புறம் தான் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாம போச்ச…”

பாம்பின் கால் பாம்பறியுமே!

ஆனால் இவன் உண்மையாக இருக்கவும் வாய்ப்பிருப்பதை உணர்ந்து கொண்டவன்,

“பணம் எதுவும் தேவைப்படுமா விஜி?”

“வேணும்னா கேக்கறேன் பாஸ்…”

“ஓகே… முடிஞ்ச அளவு சீக்கிரம் வரப் பாரு…” என்று கூறிவிட்டு செல்பேசியை வைத்தான். அவன் வேறென்ன பிரச்சனை என்று ஆராயவில்லை. மஹாவை கஸ்டடி எடுத்த போது அவன் பேசிய பேச்சுக்கள் அனைத்தையும் மனதுக்குள் ஓட்டி பார்த்தான். அவனது அப்போதைய செய்கைக்கும் இப்போதைய செய்கைக்கும் மலையளவு வித்தியாசம் இருப்பதை உணர்ந்தான். மகாவின் வாழ்க்கைக்காக அன்று அவ்வளவு போராடியவன், இன்று இதோடு நிறுத்தி இருக்கிறான் என்பதை ஷ்யாமால் நம்ப முடியவில்லை. அதாவது இது அட்டன்டன்ஸ் போடுவதற்கான அழைப்பு!

ஆனால் அவனது தந்தை மருத்துவமனையிலிருக்கும் டென்ஷனாக கூட இருக்கலாமே!

ஆனாலும் அவனது செய்கை ஒட்டவில்லை என்பது உறுதி!

சிவச்சந்திரனுக்கு அழைத்தான்.

பேசிவிட்டு நிமிர்ந்தவனின் நெற்றியில் யோசனைக் கோடுகள்!

மனம் குழம்பியிருந்தது. தனக்கெதிராக இன்னும் நிறைய விஷயங்கள் திரும்பக் கூடுமென்று புரிந்தது.

மஹாவின் வீட்டில் கண்டிப்பாக பிரச்சனை வெடித்திருக்கும் என்பதை உறுதியாக நம்பினான். அவளை எப்படி சமாதானப்படுத்துவது, இதிலிருந்து எப்படி அவளை காயப்படாமல் வெளிக் கொணர்வது என்று யோசித்தவன், பதில் தெரியாமல் இடது கையிலிருந்து செல்பேசியை வலது கைக்கு மாற்றி, அதை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளை அழைக்கவா? வேண்டாமா?

சமாதானப்படுத்துவது என்பது அவ்வளவு சுலபமல்ல என்பதும் அவனுக்கு தெரியும். ஆனால் வேறு வழியில்லை. அவள் வேண்டும் என்றால் செய்துதானாக வேண்டும். அவள் இல்லாமல் இருக்க முடியாது என்பதை உறுதியாக உணர்ந்து கொண்டபோதிருந்தே அவளை கஸ்டடி எடுத்ததற்காக மனம் வருந்திக் கொண்டிருந்தது. தான் அவளை நல்ல முறையில் அணுகியிருந்தால் அன்று தன் காதலை உரைத்த தினத்தில் ஒப்புக் கொண்டிருக்கக் கூடுமோ என்று யோசித்தான். ஆனால் நடந்துவிட்ட சம்பவங்களை மாற்ற முடியாது எனும் போது இது போன்ற பிரச்சனைகளாவது வராமலிருக்கலாம்.

மனம் கசங்கி ஷ்யாம் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, மகாவின் வீட்டில் பிரச்சனை வேறு மாதிரியாக திரும்பியிருந்தது.

சொந்தகாரர்கள் ஒவ்வொருவராக அழைக்கத் துவங்கியிருந்தனர்.

வீடே துக்கம் அனுஷ்டித்துக் கொண்டிருந்தது.

“நம்ம மஹாவுக்கும் ஏதோ பைனான்சியருக்கும் கசமுசான்னு நியுஸ்ல சொல்றாங்களே முருகா…” என்று ஆரம்பித்து,

“அவனோட பத்து நாள் இருந்துட்டு வந்தாளாமே…” என்பது வரை விதம் விதமான கேள்விகள்.

இந்த சமூகம் எப்போதுமே ஒற்றை சார்பில் நிற்பது! ஆண்களின் சமூகம் இது! ஆண்கள் எந்தவிதமான தவறுகளை செய்தாலும், கேள்விக்கணைகள் அவர்களை நோக்கி பாய்வதை விட, வசதியாக அந்த பெண்களை நோக்கி பாய்ந்து விடும்.

பெண்களை குற்றம் சொல்வதென்பது எளிது!

ஆண்களை திட்டுவதற்கு கூட அவர்களது குடும்பத்து பெண்களையும், தாயையும், சகோதரிகளையும் இழுக்கும் உலகமிது!

முருகானந்தம் இடிந்து போய் அமர்ந்து விட்டிருந்தார்.

பைரவி… எதுவுமே பேசாமல் கீழே அமர்ந்து தலைக்கு கையை முட்டுக் கொடுத்திருந்தார்.

கார்த்திக் கோபத்தில் கன்னாபின்னாவென கத்தினான்.

“அவனை விட்டுக் கொடுக்க மாட்டேன்னு சொன்னியே… பாரு… அவன் செஞ்சு வெச்ச வேலைய…” என்று அவன் கத்த, மறுவார்த்தை பேசாமல் மெளனமாக தரையை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் மஹா.

அவனிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டிருந்தால் அதை மறுத்திருக்க வேண்டாமா?

‘நோ கமெண்ட்ஸ்’ என்பதும் அதை ஒப்புக் கொள்வதும் ஒன்றல்லவா!

இதை ஒப்புக்கொண்டு எவ்வளவு பெரிய அநியாயத்தை செய்ய துணிந்திருக்கிறான்.

ஆனால் இப்படி ஒரு அநியாயத்தை அவளுக்கு ஷ்யாமால் செய்து விடக் கூடுமா? கண்டிப்பாக முடியாது என்றது ஒரு மனம்.

“தீ சுடும்ன்னு சொன்னா அதை ஏத்துக்கணும் மஹா… இல்ல அது என் ஃப்ரெண்டு… அது என்னை மட்டும் சுடாதுன்னு சொன்னதுக்கு எவ்வளவு பெரிய கிப்ட் பார்த்தியா…” மெளனமாக இருந்த பைரவி, உண்மையை கூற, அவள் பதிலேதும் பேசாமல் அமர்ந்திருந்தாள்.

“பேசு மஹா… அவனுக்கு அத்தனை சப்போர்ட் பண்ணியே… இப்ப பேசு…” என்றவன், டிவி வால்யுமை அதிகம் செய்தான்.

பாதி பேர் ஷ்யாமை திட்ட, பாதி பேர் ஷ்யாமுக்கு ஆதரவும் கொடுத்தனர்.

“அவன் ஒரு கேடுகெட்ட பொறுக்கி… கட்டபஞ்சாயத்து, ஆள் கடத்தல்ன்னு ஆரம்பிச்சு கொலை மிரட்டல் வரைக்கும் ரொம்ப ஈசியா பண்ணிட்டு போறவன்… உனக்கென்னடி தெரியும்? இந்த பீல்ட்ல இருக்க எனக்கு தெரியாதா? நாம ஒன்னு சொன்னா அதுல அர்த்தம் இருக்கும் ன்னு நினைக்க மாட்ட? அதையும் மீறி பழகினதுக்கு பண்ணிட்டான் பார்த்தல்ல…” என்று அவ்வளவு கொதிப்பாக கார்த்திக் கூறவும், அவளது கண்களில் கண்ணீர் தேங்கியது.

ஆனால் அழவில்லை.

‘உன்னை அழ வைப்பேன்’ என்று அவன் சவால் விட்டது ஏனோ நினைவுக்கு வந்தது.

‘மாட்டேன்… அழ மாட்டேன்…’ என்று தனக்குள்ளாக உறுதியெடுத்துக் கொண்டாள்.

தந்தை செல்பேசியில் அழைத்தவர்களுக்கு எல்லாம் இல்லை… அது தன் பெண் இல்லையென்று பதில் கொடுத்துக் கொண்டிருந்தார்.

“உன் பெண் இல்லையென்றால் பின் வேறு யார்?” என்ற வம்பு பேசவென்றே ஒரு கூட்டம் வேறு.

அனைவருக்கும் பதில் கூற முடியாத நிலை வந்தபோது எந்த அழைப்பையும் ஏற்காமல் அமர்ந்து கொண்டார்.

கிருஷ்ணம்மாள் ப்ரெஷர் அதிகமாகி படுத்து விட்டார். அவருக்கு எதையும் பார்க்கும் தெம்பு இல்லை.

மஹாவால் யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. எந்த முகத்தோடு நிமிர்ந்து பார்ப்பது? இப்படி ஒரு செய்தியை அவள் சற்றும் எதிர்பார்க்காதபோது!

கத்தி முடித்து அவனது அறைக்கு சென்ற கார்த்திக், ஒரு வெள்ளைத் தாளை எடுத்துக் கொண்டு வந்தான். அவனது முகத்தில் தாங்க முடியாத அவமானம்… அதனால் வந்த ரவுத்திரம்.

டைனிங் டேபிளில் இருந்தபடி தரையை வெறித்தபடி அமர்ந்திருந்த மகாவின் முகத்தில் அந்த காகிதத்தை விட்டெறிந்தான் கார்த்திக்.

அவள் திடுக்கிட்டு நிமிர்ந்து தமையனை பார்த்தாள்.

“கையெழுத்து போடு…” அதீத கோபத்தில் கத்தினான். முகமெல்லாம் சிவந்து வெப்பமாக இருந்தது. கோபத்தில் கத்திக் கொண்டிருந்த மகனை தடுக்கக் கூட தோன்றாமல் முருகானந்தமும், பைரவியும் அமர்ந்திருந்தனர்.

தனது மகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி நிற்பதை பார்க்க அவர்களால் முடியவில்லை.

தொலைகாட்சியில் பேசிக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் ஷ்யாமுக்கு ஆதரவாகவோ, எதிராகவோ மட்டும் தான் பேசிக் கொண்டிருந்தனரே தவிர, மகாவின் பெயரை யாரும் உபயோகிக்கவில்லை. அதுவரை சற்று மனம் ஆசுவாசப்பட்டாலும், பத்திரிக்கைகளில் கொட்டை எழுத்துக்களில் அல்லவா வந்து விட்டிருந்தது.

“என்ன பேப்பர் கார்த்திக்…” முருகானந்தம் தான் கேட்டார், மகனிடம்!

“அவன் மேல் கேஸ் கொடுக்கணும்… கம்ப்ளைன்ட் ரெஜிஸ்டர் பண்றதுக்கு இவ கையெழுத்து வேணும்…” இறுக்கமாக பதிலளித்தவனை குழப்பமாக பார்த்தார்.

“கார்த்திக் அவசரப்பட்டு முடிவு பண்ணாத… நம்ம பொண்ணு இதுல சம்பந்தப்பட்டு இருக்கா…” கண்களில் கண்ணீர் வழிய பைரவி ஹீனமாக கூறினார்.

“எல்லாம் முன்னாடியே முடிவு பண்ணதுதான் ம்மா… அவன் பக்கத்துல இருக்க ஒரு ஆள் சொன்னதுதான்…” பல்லைக் கடித்துக் கொண்டு அவன் கூற, வெறுமையாக அவனைப் பார்த்தாள் அவனது தங்கை!

ஷ்யாம் மேல் கேஸ் கொடுப்பதா? முன்னர் என்றால் கார்த்திக்கு முன் இவள் தாண்டியிருப்பாள். அவனை ஒரு வழியாக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவள் தானே … ஆனால் இப்போது? மகாவால் அது முடிகிற காரியமா?

அது அவளையே தண்டித்து கொள்வது போலத்தான் என்று அவளது மனசாட்சி கூற, மஹா அதை அதிர்ச்சியாக உள்வாங்கிக் கொண்டிருந்தாள்.

“கையெழுத்துப் போடு மஹா…” கோபமாக கத்தியவனை ஆழ்ந்து பார்த்தவள்,

“முடியாதுண்ணா…” என்று தீர்க்கமான குரலில் கூற,

“தெரியும்… நீ இப்படித்தான் சொல்வ… அவன் இந்தளவு அசிங்கப்படுத்தி விட்டு இருக்கான்… அப்ப கூட இப்படி இருக்கியே மஹா… அப்படி என்னதான் அவன் பண்ணான்?” கோபத்தில் வார்த்தைகளை விட ஆரம்பித்தான் கார்த்திக்.

“ண்ணா…” என்று அதிர்ச்சியாக இவள் கத்த, மற்றவர்களுக்கு அதற்கும் மேலான அதிர்வு!

“நான் கேட்டதுல என்ன தப்பு? அவன் மேல அவ்வளவு மயக்கமா? நம்ம குடும்பத்தை இப்படி சந்தில இழுத்து இருக்கான்… அவன் மேல உனக்கு கோபமே வரலையா? முன்னாடி நீ இப்படி இல்ல மஹா…” வரிசையாக அவனது கேள்விகள் அவளை காயப்படுத்தினாலும், தன்னைத் தானே தேற்றிக் கொண்டவள்,

“ண்ணா இந்த மாதிரி நியுஸ் வந்ததுக்கு காரணம் அவன் தான்னு எப்படி நீ சொல்ற? வேற யாராவது கூட இப்படி செய்து இருக்கலாம்ல…”

“வேற யாராவது செஞ்சா தான் அவனுக்காக இப்படி சப்போர்ட் பண்ணிட்டு இருப்பாங்களா? அவனோட டேக்டிக்ஸ் எல்லாம் உனக்கு தெரியாதுடி… உனக்கு இன்னும் புரியல…”

“அவன் கண்டிப்பா செய்து இருக்க மாட்டான் கார்த்திண்ணா…” என்றவளுக்கு உள்ளுக்குள் தொண்டையை அடைத்தது.

அவளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. தெளிவானவள் தான். அவளது வயதுக்கு! ஆனால் இவையெல்லாம் அவளது வயதுக்கு மீறிய ஒன்று. எப்படி கையாள்வது என்பது புரியாமல் தடுமாறினாள்.

அதற்காக ஷ்யாம் மேல் கம்ப்ளைன்ட் கொடுக்க முடியாது. அதையும் தானே செய்ய முடியாது. உறுதியாக நினைத்துக் கொண்டவள், அதே தீர்க்கத்தோடு தான் கூறினாள்.

அவளது அந்த வார்த்தைகள் அவனது கோபத்தை கொழுந்து விட்டெரிய செய்தது. அனைவரின் மத்தியிலும் இப்படி ஒரு நிலைமைக்கு கொண்டு வந்தது ஷ்யாம் தான் என்பதை உறுதியாக நம்பினான்.

கடன் கொடுக்கல் வாங்கல் என அனைத்தும் மறந்து போனது, அவன் மேல் இருந்த கட்டுக்கடங்காத கோபம் மட்டுமே மிஞ்சி நின்றது.

“இப்ப நீ கையெழுத்து போட்டே ஆகணும் மஹா…” கறாராக அவன் கூறியதை ஏற்க முடியாத பார்வை பார்த்தாள்.

“வேண்டாம் கார்த்திக்… மகாவை இதுக்கும் மேல இந்த விஷயத்துல இழுக்காத…” முருகானந்தம் கூறிதை அவன் காதில் வாங்கவில்லை.

“இப்ப போட முடியுமா முடியாதா?” டைனிங் சேரிலிருந்து அவளை வலுக்கட்டாயமாக எழுப்பியவன், படு தீவிரமாக கேட்க, முருகானந்தத்திற்கு நடப்பவை எதையும் ஜீரணிக்க முடியவில்லை.

“கார்த்திக்… கண்ட்ரோல் பண்ணிக்க… மச்சான் கிட்ட உட்கார்ந்து நிதானமா உட்கார்ந்து பேசலாம்…” என்றவரையும் முறைத்தவன்,

“உங்க ப்ரெண்டுக்காக நீங்க விட்டுக் கொடுக்கலாம் ப்பா… ஆனா அவன் அசிங்கப்படுத்தி இருக்கறது என்னோட தங்கச்சிய… என் குடும்பத்தை… தயவு செஞ்சு உங்க ப்ரென்ட்ஷிப்பை இதுல கொண்டு வராதீங்க…” என்றவனை,

“புரியுதுடா… ஆனா கல்யாணம் ஆகாத பொண்ணை இன்னும் எவ்வளவு தான் அசிங்கப்படுத்தறது? நீ பண்றது ரொம்ப அதிகம்… என் பொண்ணு பேரை இன்னும் சந்தி சிரிக்க வெச்சுடாத…”

“அவன் ஆல்ரெடி சிரிக்க வெச்சுட்டான்… இதுக்கும் மேல சிரிக்க வைக்க ஒண்ணுமே இல்ல ப்பா… இப்ப ரெண்டுல ஒன்னு பார்க்கணும்… அவனா இல்ல நானான்னு…”

“முடியாது டா… நீ வேற எப்படி வேண்ணா செஞ்சுக்க… என் பொண்ணை விட்டுடு கார்த்திக்… உன் கால்ல வேண்ணா விழறேன்…” என்றவர் அதற்கும் மேல் தாங்கவியலாமல் உடைந்தார்.

“ப்பா… புரிஞ்சுக்காம நடந்துக்கறீங்க… அவனை ஒரு வழி பண்ணனும்… அவனை அழிக்கனும்… அவனோட மொத்த வியாபாரத்தையும் நாசம் பண்ணணும்… எழுந்திருக்கவே முடியாத அளவு அடிக்கணும்… தயவு செஞ்சு இதுல தலையிடாதீங்க…” கத்தினான் கார்த்திக்.

“கார்த்திக்… கொஞ்சம் பொறுமையா இரு… அப்பாகிட்டவே இப்படி நடந்துக்கற?” வேறு வழியில்லாமல் பைரவி மகனை அடக்கப் பார்க்க,

“அம்மா… நீயும் புரிஞ்சுக்காம பேசாத…. அவன் கை வெச்சது என் தங்கச்சி மேல… இன்னும் எப்படி பொறுமையா இருக்க சொல்ற? பணம் கொடுத்து அவளை மீட்கற வரைக்கும் வயத்துல நெருப்பை கட்டிட்டு இருந்தேன்… அவ்வளவு பொறுமையா இருந்தும் இப்படி ஒரு நியூசை லீக் பண்ணிருக்கான்… அதையும் பொறுமையாவே பார்த்துட்டு இருக்க சொல்றியா?” என்று தாயை பார்த்து கத்தியவன், மகாவின் புறம் திரும்பி,

“கையெழுத்து போடு மஹா…” பொறுமையை இழுத்துப் பிடித்து வைத்துக் கொண்டு கேட்டான்.

“முடியாது…” பொறுமையாகவே பதில் கூறினாள் மஹா.

“இப்ப போடலைன்னா என்னோட இன்னொரு முகத்தை காட்ட வேண்டியிருக்கும்டி… தாங்க மாட்ட…” அவளது மறுப்பு கார்த்திக்கை மிருகமாக்கிக் கொண்டிருந்தது.

“முடியவே முடியாது ண்ணா….” நிர்தாட்சனியமாக மறுத்தவளின் கன்னத்தில் பளாரென அறைந்தான் கார்த்திக்.

“போட போறியா இல்லையா?”

“கார்த்திக்…” ஏக நேரத்தில் தாயும் தந்தையும் பதறிக் கொண்டு எழுந்தனர், அவன் அறைந்ததை பார்த்து.

“பக்கத்துல வராதீங்க… என்னை இன்னும் மிருகமாக்காதீங்க…” என்று இருவரையும் பார்த்து உச்சபட்ச கோபத்தில் கத்தியவன்,

“போடு மகா…” என்று அவளை பார்த்து மீண்டும் கூற, சற்றே பின்னடைந்தவள், “முடியாது ண்ணா… கண்டிப்பா அவன் பண்ணிருக்க மாட்டான்… அவனால என்னை இப்படி அசிங்கப்படுத்திப் பார்க்க முடியாது… இதுல வேற என்னமோ நடந்துருக்கு…” என்ற அவளது விளக்கம், விழலுக்கு இறைத்த நீரானது.

“உன்கிட்ட எந்த விளக்கமும் கேக்கல… உன்னால இப்ப கையெழுத்து போட முடியுமா முடியாதா?” இன்னொரு முறை அறைவதற்காக கையை ஓங்கவும், மகாவின் செல்பேசி அழைக்கவும் சரியாக இருந்தது.

டைனிங் டேபிள் மேல் இருந்த போனை பார்க்க, ஷ்யாம் தான் அழைத்துக் கொண்டிருந்தான்.

அவனது பெயரைப் பார்த்த கார்த்திக் கோப மிகுதியில், அந்த பேசியை எடுத்தவன், அதை சுவற்றின் மேல் தூக்கி எறிந்தான்.

பேசி சுக்கு நூறாக உடைந்தது!

மஹா அதிர்ந்து தமையனை பார்த்தாள்.

அவனது முகம் கோபத்தீயில் ஜ்வலித்துக் கொண்டிருந்தது.

“பைனலா கேக்கறேன்… கையெழுத்துப் போட்டா லீகலா போவேன்… நீ கையெழுத்து போடலைன்னா நாளைக்கு அவன் மேல லாரி விட்டுத்தான் ஏத்த போறேன் மஹா… அவ்வளவு கோபத்துல இருக்கேன்…”

“அண்ணா… கொஞ்சம் பொறுமையா இரு… அப்பா சொல்ற மாதிரி பண்ணலாம்…” என்றவள், தந்தையை பார்க்க,

முருகானந்தம் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு மயங்கி சரிந்து கொண்டிருந்தார்.

“அப்பாஆஆ….”

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!