VNE 29

29

கார்டியோ எமர்ஜென்ஸி பிரிவில் அவசரமாக அட்மிட் செய்யப்பட்டிருந்தார் மஹாவின் தந்தை. வெகு சீரியசான கண்டிஷன் தான் என்று மஹாவுக்கும் தெரியும். வீட்டில் அவர் மயங்கி விழுவதை பார்த்த மூவருக்குமே அதிர்ச்சி தான் என்றாலும், அந்த அதிர்ச்சியிலிருந்து முதலில் வெளிவந்தது மஹா தான்.

இது போன்ற எமர்ஜென்சிக்களை நிறைய பார்த்துக் கொண்டிருக்கிற அனுபவம் உண்மையிலேயே அப்போது பேசியது.

நாடியை பிடித்துப் பார்த்தவள், அவளது ஸ்டெத்தெஸ்கோப்பை அவசரமாக எடுத்து வந்து இதயத்துடிப்பை ஆராய்ந்தாள்.

கார்த்திக், தந்தை மயங்கி விழுந்த அதிர்ச்சியிலிருந்தே மீளவில்லை. பைரவி அவனை கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தார். அவன் சற்று பொறுமையாக இருந்திருந்தால் பிரச்னையை கொஞ்சம் எளிதாக கையாண்டிருக்க முடியும் என்பதை மீண்டும் மீண்டுமாக பைரவி அவனை குத்திக் காட்டிக் கொண்டே தானிருந்தார்.

அவனது அவசர புத்தியால் தன்னுடைய கணவருக்கு தான் அத்தனை துன்பமும் என்பதை அவரது பேச்சு விடாமல் உணர்த்திக் கொண்டிருக்க, அதை கேட்டுக் கொண்டிருந்தவனின் மனதுக்குள் ஏகத்துக்கும் குற்ற உணர்ச்சி.

“ம்மா… கொஞ்சம் நிறுத்தறியா? நான் அப்பாவை பாக்கறதா? உன்னோட புலம்பலை கேக்கறதா?” என்று அவள் கடித்து வைத்தப் பின் தான் அவர் சற்று அமைதியானார். ஆனாலும் அவரது கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.

கோபம் சற்று குறைகையில் யோசிக்கும் போது அவனது வார்த்தைகளை நினைத்து அவனுக்கே வருத்தமாக இருந்தது. அவனொன்றும் தங்கையின் வாழ்க்கையை கெடுக்கவென பேசவில்லை. அதிகபட்ச அக்கறை இருக்கிறது. ஆனால் இப்படியொரு நிலையில் எந்த சகோதரனால் அமைதியை கடைபிடிக்க முடியும்?

ஷ்யாமை நினைக்கும் போது உண்மையிலேயே அவனை கொன்று விடும் ஆத்திரம் வந்தது கார்த்திக்கு!

பணத்தை கொடுத்து தங்கையை மீட்கும் வரை அவனது உயிர் அவனிடத்தில் இல்லை என்பதுதான் உண்மை. அப்படிப்பட்டவனை நம்பும் தங்கையை நினைத்தால் கோபத்தை காட்டிலும் ஒரு பரிதாப உணர்வு வருவதை அவனால் தவிர்க்க முடியவில்லை.

அடக்கிவைக்கப்பட்ட அந்த உணர்வுகளெல்லாம் இன்று வெடித்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

தன்னை தனது தங்கை புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆற்றாமையோடு தந்தையை பார்த்தான். அவனது குற்ற உணர்வு இன்னும் அதிகரித்தது.

அவரை நினைத்தாவது தான் சற்று கட்டுப்பாடாக இருந்திருக்கலாம் என்று தோன்றியது. முதலிலேயே ஹார்ட் அட்டாக் வந்த உடம்பு. அதிர்ச்சிகளை கொடுக்கக் கூடாது என்று கூறியிருந்தும் தான் பேசிய பேச்சுக்களை நினைத்து வருத்தமாக இருந்தது.

ஆனாலும் இப்போதும் அவள் மேல் கொண்ட கோபமும் ஆத்திரமும் குறையவில்லை. தந்தைக்காக வருத்தம் மட்டுமே!

நெஞ்சில் கையை குவித்து வைத்து சிபிஆர் செய்து கொண்டிருந்த தங்கையை பார்த்தான்.

“பிரச்சனை இல்லல்ல?” பயத்தோடு கேட்ட தமையனை நிமிர்ந்து பார்த்தாள். பதிலேதும் கூறாமல் வாய் வழியாக செயற்கை சுவாசத்தை கொடுத்து சிபிஆரை தொடர, முருகானந்தத்தின் உடல் இருமலோடு தூக்கி வாரிப்போட்டது.

மிகவும் லேசாக விழித்துப் பார்த்தார்.

“காரை ஸ்டார்ட் பண்ணி வெச்சுட்டு வாட்ச்மேனை கூப்பிடு ண்ணா …” என்கவும் அவசரமாக ஓடினான்.

தாயை பார்த்து, “ம்மா… அப்பாவோட மெடிக்கல் கிட்ல லோடிங் டோஸ் இருக்கும்… அதை எடுத்துட்டு வா…” என்று அவரை விரட்ட, அவர் ஒரு பக்கம் ஓடினார்.

மெடிக்கல் கிட்டை எடுத்துக் கொண்டு வந்தவர்,

“இதுல லோடிங் டோஸ் எதுன்னு எனக்கு தெரியல பாப்பா…” என்கவும், மஹா எடுத்து நீரோடு மாத்திரைகளை கொடுக்க, அவர் பலவீனமாக விழுங்கினார்.

எழுந்து வந்த கிருஷ்ணம்மாளை சமாதானம் செய்து வீட்டிலேயே இருக்க செய்து விட்டு இவர்கள் மட்டுமாக முருகானந்தத்தை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு போனதாகட்டும், அட்மிட் செய்ததாகட்டும், எந்த இடத்திலும் மஹா தனது உணர்வுகளை காட்டவே இல்லை.

முக்கியமாக அழவே இல்லை.

பைரவி தான் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே இருந்தார். 

கார்டியோ எமர்ஜென்ஸியில் டியூட்டி டாக்டர்ஸ் மட்டுமே இருந்தனர். ஸ்பெஷலிஸ்ட் யாரும் இல்லாததனால் கார்த்திக்கு சற்று பயமாக இருந்தது. மருத்துவ மாணவியாக மஹா அவர்களுடன் ட்ரீட்மெண்ட் கலந்து பேசிக் கொண்டிருக்க, பைரவியும் கார்த்திக்கும் உடன் இருந்தனர்.

“மேசிவ் ஹார்ட் அட்டாக் தான் சர்… லக்கிலி இவங்க ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிட்டாங்க…” என்று மஹாவை காட்டி சொல்லிக் கொண்டிருந்த அந்த மருத்துவர், “ஆனாலும் கண்டிஷன் ரொம்ப வொர்ஸ்ட்டா தான் இருக்கு… நாங்களும் எங்களோட இன்புட்ஸ் போட்டுட்டு இருக்கோம்…” என்று கூற,

“வெண்டிலேட்டர்ல போட வேண்டியிருக்குமா டாக்டர்?” மஹா தான் கேட்டாள். உள்ளுக்குள் பதற்றம் எக்கச்சக்கமாக இருந்தது.

இந்த துன்பமே தன்னால் தானே என்ற வேதனை வேறு! யாருடைய தோளிலாவது சாய்ந்து கொள்ள முடியாதா? கார்த்திக் இன்னமும் அவளை முறைத்தபடி தான் இருந்தான். பைரவி அழுது கரைந்து கொண்டிருந்தார். ஒரு மருத்துவ மாணவியாக தந்தையின் நிலை புரிந்து இருந்தது. ஆனால் ஒரு மகளாக ஏற்க முடியவில்லை. என்ன செய்வது என்று புரியாமல் நின்று கொண்டிருந்தாள்.

தன்னை சுற்றிலும் இருள் சூழ்ந்து விட்டது போன்ற பிரமை!

தந்தை அவளது ஹீரோ. ஃப்ரென்ட், ஃபிலாசபர் அன்ட் கைட் என்று சொல்வார்களே. அப்படி ஒருவர் தான் அவளது தந்தை. அவளிடம் தந்தை என்று கண்டிப்பாக இருந்ததில்லை. ஆனாலும் அவர் சொன்னால் அவள் எதையுமே மறுத்ததில்லை. தாயிடம் கூட ஒட்டுதல் சற்று குறைவு, ஆனால் தந்தை தான் அனைத்தும். அவர் இல்லாத உலகத்தில் தான் எங்கனம் ஜீவிக்க முடியும் என்று சம்பந்தமில்லாமல் தோன்றியது.

“ட்ரீட்மென்ட் கோர்ஸ கார்டியோ எமர்ஜென்ஸி சீஃப் தான் டிசைட் பண்ணனும் மேடம்…” என்று சற்று சிறிய குரலில் கூற, மஹாவுக்கு உள்ளுக்குள் நடுங்கவே ஆரம்பித்து விட்டது. மற்ற இருவரிடமும் அதை காட்டிக் கொள்ளாமல், அங்கிருந்த நீளமான இருக்கையில் அமர்ந்து விட்டாள், தலையை குனிந்தபடி.

நிமிர்ந்தால் தன்னால் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதோ என்று தோன்றியது. கண்ணீர் கரை உடைக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தது.

‘இன்னும் எத்தனை துன்பங்களை தான் தாங்குவது இறைவா?’

துன்பம் எதுவாகிலும் தாங்கி விடலாம். ஆனால் பிரியத்துக்குரியவர்கள் இல்லாமல் போவது உயிர் வேதனை. அந்த வேதனை மட்டும் வேண்டாமே என்று மனம் கிடந்து அரற்றியது.

தலை வலித்தது. பிடித்துக் கொண்டாள்.

தந்தைக்கு எதுவுமாகாது என்று ஜெபிக்க துவங்கியிருந்தாள்.

“டாக்டர் இட்ஸ் எமர்ஜென்சி… ப்ளீஸ் அவங்களை சீக்கிரமா வர சொல்லுங்க…” என்று கார்த்திக் பதட்டப்படவும்,

“சீஃப் ஒன் ஹவர் பிஃபோர் தான் வீட்டுக்கு போனாங்க… இன்ஃபார்ம் பண்ணிட்டோம்… வந்துடுவாங்க… ஆனா கண்டினியுஸ் கம்யுனிகேஷன்ல தான் இருக்கோம்…”

“கொஞ்சம் சீக்கிரமா வர சொல்லுங்க டாக்டர் …” என்ற கார்த்திக்கிடம்,

“ஃபர்ஸ்ட் லெக் ஆஃப் ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணியாச்சு… இங்க இருக்கறது மோஸ்ட் அட்வான்ஸ்ட் எமெர்ஜென்சி மேனேஜ்மென்ட் ப்ரொடோகால்… இந்த செட் அப் சென்னைல வேற எங்கயும் கிடையாது… சோ டோன்ட் ஒர்ரி சர்…” என்றவர், திரும்புவதற்காக முயல, அந்த நீண்ட காரிடாரில் அவசர நடையிட்டு வருபவனை பார்த்து அப்படியே நின்றார்.

இந்த நேரத்தில் மருத்துவமனையின் சேர்மனான ஷ்யாமை அவர் அங்கு எதிர்பார்க்கவில்லை!

 “டாக்டர்…” என்று அழைத்த கார்த்திக்கை,

“ஜஸ்ட் எ மினிட்…” என்று தவிர்த்துவிட்டு, அவசரமாக ஷ்யாமை நோக்கிப் போக முயல, அதற்குள் அவனே, கார்த்திக்கை நோக்கி வந்தான்.

உடன் விஷ்ணு மட்டும்!

எந்த உணர்வையும் வெளிக்காட்டாத முகம். காலை முதலே சூழ்நிலை அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருப்பதை சற்றும் அவன் காட்டிக் கொள்ளவில்லை. செல்பேசியில் மகாவை தொடர்பு கொள்ள முடியவில்லை எனும் போது அவளுக்கு பிரச்சனை ஏதும் பெரிதாகிவிட போகிறது என்ற எண்ணத்தில் சிவச்சந்திரனை மஹாவின் வீட்டினரை கண்காணிக்க சொல்லியிருந்தான்.

மஹாவின் தந்தையை மருத்துவமனையில், அட்மிட் செய்துள்ளார்கள் எனும் போதே அவனால் உத்தண்டியில் அமர்ந்திருக்க முடியவில்லை. அவசரமாக குளித்துவிட்டு கிளம்பிவிட்டான்.

பிரச்சனையின் ஆதி மூலம் இவன். ஆரம்பப்புள்ளி. என்ன தான் என்ன சொல்லி சப்பை கட்டினாலும் அது மறுக்க முடியாத உண்மை! தான் செய்த காரியங்களின் வீச்சு இது போல முடியும் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லையே. தொழிலில் எவ்வளவோ கடினமாக இருந்திருக்கிறான். நினைத்துப் பார்க்க முடியாத அளவு இறுக்கமாக இருந்திருக்கிறான். இரக்கமற்றும் நடந்திருக்கிறான். ஆனால் ஒரு உயிரை இப்படி ஒரு வேதனையில் இதுவரையில் தள்ளியதில்லை. யாரோ விளையாடியது தான். ஆனால் மையப் புள்ளி? இவன் தானே!

எத்தனை இருந்தாலும் சுஷ்ருதாவில் தான் அனுமதிக்கப் பட்டிருக்கிறார் என்பதில் நேரடி கவனிப்பும், கண்காணிப்பையும் கொடுக்க முடியும் என்ற வகையில் சற்று நிம்மதி.

தன்னை நோக்கி புன்னகைத்து அதீத மரியாதையுடன், “குட் மார்னிங் பாஸ்…” என்ற மருத்துவரை பார்த்து லேசாக புன்னகைத்தவன், “குட் மார்னிங்… ஹொவ் இஸ் மிஸ்டர் முருகானந்தம்?” என்று நேரடியாக கேட்க,

“யூ மீன் ஹிஸ் ஃபாதர்?” என்று மரியாதையாக கார்த்திக்கை காட்டி அவர் கேட்க,

“எஸ்…”

கார்த்திக்கு அவனை சட்டென அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. எங்கும் ஷ்யாம் என்ற பெயர் மட்டும் இருந்தாலும், அவனே பேசப்படும் பொருளாகவே இருந்தாலும், எங்குமே அவனது நிழல் பிம்பம் இருக்காது. காலையில் தொலைகாட்சியில் ஒரே ஒரு புகைப்படத்தை மட்டும் வைத்துக் கொண்டு விவாதித்து கொண்டிருந்தனர். அதுவும் கூலர்ஸ் அணிந்த புகைப்படம். அதனை கொண்டு அவனை அடையாளம் கண்டுக்கொள்ள முடியவில்லை. நேரில் அவனை பார்ப்பதும் அரிது என்பதுதான் முதலிலேயே தெரிந்த விஷயமாயிற்றே!

யார் இவன் என்று யோசித்தான். அதுவும் தனது தந்தையை பற்றி விசாரிக்க இவன் யார்? குழப்பமாக அவனை பார்த்தான். ஆனால் பார்த்தவுடன் வசீகரிக்கும் பிம்பம். அத்தனை கம்பீரம். ஹீரோக்களையே தூக்கி சாப்பிட்டு விடுவான் போல. மடித்து விடப்பட முழுக்கை ஷர்ட்டை முழங்கைக்கு இழுத்து விட்டு அவன் பேசிய தோரணை ஏனோ அத்தனை ஆளுமையுடன்! ஆனால் கண்களில் மட்டும் அத்தனை சோர்வு! மருத்துவர் அவ்வளவு மரியாதையாக பேசுவதால் இவன் தான் சீப் டாக்டரோ என்று எண்ணிக் கொண்டிருந்தான்.

அவனது குரல் கேட்டவுடன், அவனது வருகையை புரிந்து கொண்டாலும், மஹா தலை நிமிர்ந்து பார்க்கவில்லை. பார்க்க முடியவில்லை. உள்ளுக்குள் கோபமும், ஆற்றாமையும், அவமான உணர்வுமாக அத்தனையும் பொங்கியது. கார்த்திக்கிடம் விட்டுக் கொடுக்காமல் பேசினாலும் உள்ளுக்குள் அவ்வளவு கோபம். அதோடு தந்தையின் நிலை வேறு!

அத்தனைக்கும் காரணம் அவனே என்று மனம் கூற, அவனை நிமிர்ந்து பார்த்தால் தான் உடைந்து விடக் கூடும்.

தந்தைக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கக் கூடாது… வந்திருக்கக் கூடாது என்றால் கார்த்திக் அப்படி பேசியிருக்கக் கூடாது… பேசியிருக்கக் கூடாது என்றால் காலையில் அந்த செய்தி வந்திருக்கக் கூடாது… அது வந்திருக்கக் கூடாது என்றால் இவன் தன்னை கஸ்டடி எடுத்திருக்கக் கூடாது… கஸ்டடி எடுத்திருக்க கூடாது என்றால் இவனிடம் கொடுக்கல் வாங்கலே இருந்திருக்கக் கூடாது… ஆனால் கொடுக்கல் வாங்கல் மட்டுமா காரணம்? அவன் கூறியது போல…

‘உன்னோட கண்ல கண்ணீரை பார்க்கணும் மிர்ச்சி’ அன்று அவன் சவால் விட்டது திரும்ப திரும்ப அவளது காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.

ஒரு மனம் அவனுக்கும் இந்த பிரச்சனைக்கும் தொடர்பில்லை என்று அடித்துக் கூறினாலும், இன்னொரு மனம் அவன் மேல் கோபத்தை ஏற்றி வைத்துக் கொண்டு வெடிக்க சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

“ஹீ இஸ் இன் எ கிரிடிகல் ஸ்டேஜ்… அக்யுட் மயோ கார்டியல் இன்ஃபார்க்ஷன் ஜி…” மருத்துவர் அவளது தந்தையின் நிலையை ஷ்யாமிடம் பகிர்ந்து கொண்டிருக்க,

“வேர் இஸ் டாக்டர் சாமுவேல் ரோட்ரிக்ஸ்?” அவர் தான் கார்டியோ எமெர்ஜென்சியின் சீப் டாக்டர் என்பதால் அவரை கேட்க,

“ஆல்ரெடி கம்யுனிகேட்டட்  பாஸ்…” என்று கூற,

“ஏன் இன்னும் வரலை?” என்று கேட்டவன், அந்த சாமுவேல் ரோட்ரிக்ஸ்க்கு அழைத்தான்.

“ம்ம்ம் மார்னிங் டாக்டர்…” என்றவன், மகாவின் தந்தையின் பெயரை குறிப்பிட்டு, “பேஷண்ட்டை ஹைலி க்ரிடிக்கல் ஸ்பெஷல் கேர் விஐபி வார்டுக்கு மாத்திடுங்க… ஸ்பெஷல் டீம் ஆஃப் டாக்டர்ஸ் டுவென்டி ஃபோர் பை செவன் இருக்கணும்… வேற ஸ்பெஷாலிட்டி டாக்டர்ஸ் வேணும்னா சொல்லுங்க… அரேஞ்ச் பண்ணிடலாம்…” என்றவன், “இன்னும் பத்து நிமிஷம் தான் உங்களுக்கு டைம்… என் முன்னாடி நீங்க இருக்கணும்… வெரி அர்ஜன்ட்…” என்று முடித்துவிட்டு வைக்க, கார்த்திக்கின் பார்வையில் வெகுவாக மரியாதை கூடிப்போனது.

அவன் இதுபோல யாருக்காகவும் செய்ததில்லை என்பதால் அந்த பக்கத்தில் அந்த மருத்துவர் பரபரப்பானார்.

இவனது உத்தரவுகளை கேட்ட இங்கிருந்த டியூட்டி டாக்டர் அவசரமாக நகர்ந்தார், பேஷண்டை ஷிப்ட் செய்ய அவரை தயார் படுத்த வேண்டுமே!

அந்த இடமே நொடியில் பரபரப்பானது!

எங்கிருந்தோ வந்த இளங்கவி மற்ற விஷயங்களை பொறுப்பெடுத்துக் கொள்ள, உடன் விஷ்ணுவும் இணைந்து கொண்டான். அவசரமாக விஜியும் வர கார்த்திக்கு உறுதியானது. இவன் ஷ்யாம் என!

‘எதுவும் பேசாதே’ என்று விஜி கண்ணைக் காட்டினான்.

பல்லைக் கடித்துக் கொண்டு ஷ்யாமை பார்த்தான் அவன்.

“அதுக்குள்ளே நீ எப்படி வந்த விஜி?” என்று விஜியை ஷ்யாம் கேட்க,

“இல்ல பாஸ்… இங்க சிச்சுவேஷன் சரி இல்லாதப்ப அங்க எப்படி இருக்கறது? அதான் உடனே ப்ளைட் பிடிச்சுட்டேன்…” என்க,

ஷ்யாமிடம் ஒரு விலகல் பார்வை தெரிந்தது. அவனை நம்புவதை போல காட்டிக் கொண்டாலும், அவனுக்குள் விழுந்திருந்த சந்தேக விதை முளைவிட்டு வளரத் துவங்கியிருந்தது.

எதுவும் பேசாமல் கார்த்தியையும் பைரவியையும் நோக்கி வந்தவன், “இளங்கவி முழுசா இங்க தான் இருப்பார் கார்த்திக். நீங்க எதுன்னாலும் அவர் கிட்ட கேட்டுக்கலாம்… கூட ஹெல்புக்கு வேற யாராவது வேணும்னா கேளுங்க…” என்க,

“நாங்க வேற ஹாஸ்பிடலுக்கு ஷிப்ட் பண்ணிக்கறோம்…” கோபம் கொப்பளிக்க கார்த்திக் கூற, ஷ்யாம் அவனை ஆழ்ந்து பார்த்தான்.

“அவசரப்படாதீங்க கார்த்திக்… சர் ரொம்ப கிரிடிகல் ஸ்டேஜ்ல இருக்காங்க…”

“பரவால்ல… ஆனா இங்க வேணா… இன்னும் கொஞ்ச நேரம் உன்னை பார்த்துட்டு இருந்தேன்னா உன்னை கொலை பண்ணிடுவேன்… அவ்வளவு கோபத்துல இருக்கேன் ஷ்யாம்… தயவு செஞ்சு போய்டு…” ரவுத்திரத்தை அடக்கிக் கொண்டு கார்த்திக் கூற,

கைகளைக் கட்டிக் கொண்டு மஹாவையும் கார்த்திக்கையும் பார்த்தான்.

அவள் தலை நிமிரவில்லை. ஆனால் அவளது நிலை அவனுக்கு புரிந்தது. வெகுவான காயம்… பெருங்காயம்! அவள் உள்ளுக்குள் துடித்துக் கொண்டிருப்பதை அவள் கூறாமலே உணர்ந்தவன்,

“நீங்க கோபத்துல இருக்கீங்க கார்த்திக்… இந்த நேரத்துல கொஞ்சம் நிதானம் அவசியம்… தப்பெல்லாம் நான் செய்ததாவே இருக்கட்டும்… காலைலருந்து ஓடிகிட்டு இருக்க பிரச்சனைக்கும் நான் மட்டும் தான் காரணமாவே இருக்கட்டும்… எல்லாத்தையும் அப்புறம் பேசிக்கலாம்… இப்போதைக்கு மஹா அப்பாவுக்கு ஒன்னுமாகக் கூடாது… அது மட்டும் தான் முக்கியம்…” என்று வெகு நிதானமாக கூற,

“சாத்தான் வேதம் ஓதக் கூடாது…” கார்த்திக்கின் மறுமொழியை கேட்ட விஷ்ணு கைகளை முறுக்கிக் கொண்டான். கண்களால் அவனை அடக்கியவன்,

“நீங்க என்ன பேசினாலும் நான் ரியாக்ட் பண்ண மாட்டேன் கார்த்திக்… அதுக்கு ஒரே ரீசன்… நீங்க மகாவோட அண்ணன்…”

அவனது அந்த மறுமொழி கார்த்திக்கின் கோபத்தை இன்னுமே கிண்டி விட,

“இன்னொரு தடவை மஹான்னு சொன்ன மரியாதை இருக்காது… உன்னோட பணத்தை தான் தூக்கி எறிஞ்சாச்சே… அப்புறமும் ஏன்டா இத்தனை பிரச்சனை பண்ற?” என்று கோபமாக பேசவும்,

“இங்க பிரச்சனை வேண்டாம் கார்த்திக்… இது ஹாஸ்பிடல்…” பைரவியும் கெஞ்ச,

“ம்மா கொஞ்சம் சும்மா இரு… எனக்கு தெரியும்…” என்று அடக்கி விட்டு,

“என் தங்கச்சி தான் கிடைச்சாளா உன்னோட கேவலமான ஆசைக்கு? அதான் நீ கண் அசைச்சா அத்தனை பேர் வருவாளுங்கல்ல… அவளுங்களை வெச்சுக்க வேண்டியதுதானே… என் தங்கச்சிய விட்டுடு ஷ்யாம்…” கோபமாக ஆரம்பித்து கெஞ்சலாக முடித்த கார்த்திக்கை எந்த உணர்வுமின்றி பார்த்தான்.

இவனால் பொறுமையாக இருக்க முடிந்தது. ஆனால் விஷ்ணுவால் முடியவில்லை. அவனுக்கு ரத்தம் கொதித்தது.

“டேய் யார்கிட்ட பேசற? அதுவும் வாடா போடான்னு…” என்று கார்த்திக்கை அடிக்க கையோங்கிக் கொண்டு போனவனை தடுத்து நிறுத்திய ஷ்யாம், விஷ்ணுவை முறைத்தான்.

“விஷ்ணு… நீ லாபிக்கு போ…” இறுக்கமான குரலில் கூறியவனை,

“இல்ல பாஸ்…” என்று மறுத்துக் கூற,

“உன்னை போன்னு சொன்னேன்…” கத்தியை பாய்ச்சுவது போன்ற அழுத்தமான குரலில் ஷ்யாம் கூற, வேறெதுவும் பேசாமல் கார்த்திக்கை முறைத்தபடி நகர்ந்தான் விஷ்ணு.

அருகில் நின்று கொண்டிருந்த இளங்கவி கைகளை இறுக்கமாக பிணைத்தபடி இருந்தான். யாரிடமும் ஷ்யாம் இந்தளவு இறங்கிப் பேசி பார்த்ததில்லை. இது அவர்களுக்கு புதிது! ஆனால் எப்போதும் குதிக்கும் விஜி, இன்று அமைதியாக இருந்தான். அவனது அமைதியே அவன் மேல் சந்தேகத்தை கிளப்பி விட்டது. அவனது பார்வை மொத்தமும் மஹா மேல் மட்டுமே இருப்பதை ஷ்யாமும் உணர்ந்தான். அது அவனுக்கு புழுக்கத்தை கொடுத்தது.

“கவி… சிவச்சந்திரனை ஃபாலோ அப் பண்ணு… அந்த நியுஸை கொடுத்தவன் இன்னும் ஒன் ஹவர்ல என் முன்னாடி நிற்கணும்…” என்று அவனை முடுக்கி விட,

“சியூர் பாஸ்… எவனா இருந்தா என்ன? மாட்டினா அவனை நானே கொன்றுவேன்…”

“கவி… சொன்னதை மட்டும் செய்… அதுக்கு மேல நான் பார்த்துக்கறேன்…” என்றவன், சற்று இடைவெளி விட்டு, “கூடவே விஷ்ணுவை மீடியாவை இன்னும் கொஞ்சம் கவனிக்க சொல்லு… அவன் ரொம்ப கோபத்துல இருக்கான். எவன் மேலயாவது கை வெச்சுர போறான் பார்த்துக்க… எந்த சேனல்லையும் நமக்கு ஆப்போசிட்டா எவனும் பேசக் கூடாது… நம்ம லாபி மட்டும் தான் அங்க ஒர்க் ஆகணும்… முக்கியமா ‘மஹா’ங்கற பேரை எவனும் சொல்லிடக் கூடாது…” என்று அழுத்தமாக அவன் கூறியதை கேட்டுக் கொண்டவன்,

“ஓகே பாஸ்…” என்று நகர்ந்தான்.

இவற்றை பார்த்துக் கொண்டிருந்த விஜிக்கு உள்ளுக்குள் புளியை கரைத்ததென்னவோ உண்மை! கார்த்திக்கு நிச்சயமாக குழப்பமாக இருந்தது. இவனது உண்மை முகம் தான் என்ன?

இவர்கள் இருவரையும் அனுப்பி வைத்து விட்டு கார்த்திக்கை பார்த்தான்.

“சாரோட ஹெல்த்தை பாருங்க கார்த்திக். இந்த விஷயம் என்னோட பொறுப்பு…” என்று கூற, அவன் இன்னமும் கோபத்தை கைவிடவில்லை. எரிச்சலாக திரும்பிக் கொண்டான்.

அமைதியாக கார்த்திக்கை பார்த்துவிட்டு, அமர்ந்திருந்த மஹாவை பார்த்தான்.

இத்தனை களேபரங்களிலும் அவள் தலைநிமிர்ந்து பார்க்கவில்லை.

ஒரு வார்த்தையும் பேசவில்லை.

அணிந்திருந்த நைட் பேண்டோடு தான் மருத்துவமனைக்கு வந்திருந்தாள்.

மெளனமாக அவளருகில் சென்றவன், அருகில் அமர்ந்து கொண்டு அவளது கைகளை தனக்குள் எடுத்துக் கொண்டான்.

“அவளை டிஸ்டர்ப் பண்ணாத ஷ்யாம்… கிளம்பு…” என்ற கார்த்திக்கை நிமிர்ந்து பார்த்தான். அந்த பார்வையில் அனல் பறந்தது. அத்தனை நேரம் அவ்வளவு பொறுமையாக பதில் கூறிக் கொண்டிருந்தவனின் பார்வை அல்ல அது. இதுதான் உனது லிமிட். அந்த லிமிட்டை தாண்டி வந்துவிடாதே என்று எச்சரித்தது அந்த பார்வை!

அவனது அந்த பார்வையில் சட்டென அமைதியானான் கார்த்திக். பேச முடியவில்லை.

“மஹா…” நடுங்கிக் கொண்டிருந்த அந்த கைகளை இறுக்கமாக பிடித்தவன், மென்மையாக அழைக்க, அவள் இன்னமும் நிமிர்ந்து பார்க்கவில்லை.

“நான் இருக்கேன்டி… பார்த்துக்க மாட்டேனா?” அவளுக்கு மட்டும் கேட்குமாறு சொல்ல,

“நோ கமெண்ட்ஸ்ன்னு சொன்னியா?” தலையை குனிந்தவாறே கேட்டாள். அவளால் பேச முடியவில்லை. தொண்டையை அடைத்தது.

“அப்படி சொல்வேன்னு நம்பறியா? அப்படி சொன்னா என்னை நானே அசிங்கப்படுத்திக்கற மாதிரி இல்லையா?” அவன் சொன்னது அங்கிருந்த அனைவருக்கும் கேட்டது.

அவனால் என்னை அசிங்கபடுத்தி பார்க்கவே முடியாது என்று அவ்வளவு உறுதியாக சொன்ன மஹாவை நினைத்துப் பார்த்தார் பைரவி. ஆச்சரியமாக இருந்தது.

விஜிக்கு ரத்த அழுத்தம் கூடிக் கொண்டு போனது.

“ரொம்ப அசிங்கப்பட்டாச்சு ஷ்யாம்… இதுக்கும் மேல என்ன இருக்கு? உன்னை நான் பார்த்தே இருக்கக் கூடாது…” மெல்லிய அழுகையோடு வெளிவந்த வார்த்தைகளை வலியோடு உள்வாங்கினான் ஷ்யாம்.

அவளது கைகளை தன்னிரு கைகளால் இறுக்கி தன் நெஞ்சோடு சேர்த்து பிணைத்துக் கொண்டான். அத்தனை பேர் முன்பும் தான் உடைய முடியாது. பிணைத்திருந்த கையின் மேல் தலை கவிழ்ந்தவன்,

“சாரிடி… ஐம் ரியலி சாரி…” மிக மெல்லிய குரலில் அவளுக்கு மட்டும் கேட்குமாறு கூற,

“என்னை அழ வெச்சு பார்க்கனும்ன்னு ரொம்ப ஆசைப்பட்டல்ல… இப்ப பார்த்துக்க… நல்லா பார்த்துக்க…” என்றவள், அதற்கும் மேல் கட்டுப்படுத்த முடியாமல் உடைந்து கதற ஆரம்பித்தாள்.

அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு,

“ஸ்டுபிட் மாதிரி பேசாத மஹா…” என்றவனுக்கும் கண்கள் நீரில் பளபளத்தது.

“அப்பா வேணும் ஷ்யாம்… எனக்கு பயமா இருக்கு…” என்று கதறியவளை இன்னுமாக தன்னோடு சாய்த்துக் கொண்டு,

“நான் பார்த்துக்கறேன்டா… என்ன பண்ணியாவது அவரை மீட்டுக் கொண்டு வர வேண்டியது என்னோட பொறுப்பு…”

“அவருக்கு ஒன்னும் ஆகாது தானே?” தான் ஒரு மருத்துவ மாணவி என்பதை மறந்துவிட்டு, சிறுபிள்ளை போல அவனது நெஞ்சில் சாய்ந்து கதறிக் கொண்டிருந்தவளை என்ன சொல்லி தேற்றுவது என்று புரியாமல் அவளது தலையை தன்னோடு சேர்த்துக் கொண்டு,

“அதெல்லாம் ஒன்னுமாகாது… இப்ப அந்த ஹைலி க்ரிடிக்கல் கேர் வார்டுக்கு ஷிப்ட் பண்ணிடுவாங்க… அங்க சாருக்கு தனியா ஒரு ஸ்பெஷல் டீமே இருக்கும்… நீயும் பார்த்துக்கலாம்… ட்ரஸ்ட் மீ டார்லிங்… ஐ ஸ்வேர்… அவர் நல்லாகிடுவார்…” என்று சிறுபிள்ளைக்கு சொல்வது போல கூறிக் கொண்டிருந்தவனை அத்தனை பேரும் ஆச்சரியமாகத் தான் பார்த்தனர்.

கார்த்திக் மட்டும் நெருப்பின் மேல் நிற்பதை போல உணர்ந்தான். பைரவிக்கு அவனது எதிர்மறையான குணங்கள் அனைத்தும் மறந்து போனது. தன் பெண்ணோடு சேர்த்து அவனைப் பார்க்கும் போது கண்கள் நிறைந்து போனது. அவ்வளவு பொருத்தமான ஜோடியாக தெரிந்தான். அதோடு மகள் மீது அவன் கொண்டுள்ள பிரியம் அத்தனை வெளிப்படையாக தெரிந்தது. ஆனால் அந்த ப்ரியம் நிலைத்திருக்க வேண்டுமே என்ற பயம் உள்ளுக்குள் எழாமல் இல்லை. எப்படி இருந்தாலும் ஆத்மநாதன் அண்ணனின் மகன் என்ற தைரியம் வேறு.

அவனால் கெட்டுப் போன பெயரை அவனைக் கொண்டு மட்டுமே மீட்க முடியும் என்று யோசித்தது அன்னை மனது!

அதுவும் இத்தனை நேரமாக யாரிடமும் அழாத மகள், இப்போது அவனிடம் மட்டும் அழுகிறாள் என்றால் அதற்கு என்ன அர்த்தம் என்றும் யோசித்தது அவரது மனது!

பார்த்துக் கொண்டிருந்த விஜிக்கு உள்ளுக்குள் கொலைவெறி தாண்டவமாடியது!

“குட்டிம்மா… நீ எவ்வளவு தைரியமான பொண்ணு… இப்படி சின்ன பிள்ளையாட்டம் அழலாமா சொல்லு?” என்று அவன் கேட்க,

“ம்ம்ம்…” என்று கண்களை துடைத்துக் கொண்டவள், “அதான் அழ வெச்சு பார்த்துட்டல்ல…” என்று அவனை இன்னமும் பாராமல் தான் முனகினாள்.

 “ப்ச்… விளையாட்டுக்குக் கூட அப்படி சொல்லாத… உன் கண்ல ஒரு துளி கண்ணீரை யார் வரவெச்சாலும் அவங்க தான் என்னோட மிகப்பெரிய எதிரி… வேரோட அழிச்சுடுவேன்… சும்மா சொல்லலை மஹா… ஐ மீன் இட்…” என்றவனின் குரல் அத்தனை தீவிரமாக இருந்தது.

முகத்தில் அத்தனை ரவுத்திரம். எழுந்து கொண்டவன்,

“ஒருத்தனையும் விட மாட்டேன்… ஓட ஓட விரட்டுறேன்… பார்த்துட்டே இரு…” கோபத்தில் முகம் சிவக்க கூறிவிட்டு, திரும்பிப் பார்க்காமல் வேகமாக சென்றான்.