VNE 43(1) CV

43
மகாவின் கண்களிலிருந்து கண்ணீர் நில்லாமல் வழிந்தது. அதை துடைக்கும் எண்ணம் கூட இல்லாமல் எங்கோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அவளது நிலை யார் ஒருவருக்கும் வந்துவிட கூடாது என்ற சுயவிரக்கம் அவளை மென்று தின்றுக் கொண்டிருந்தது. ஷ்யாமின் அந்த வார்த்தையில் அவள் என்ன மாதிரியாக உணர்ந்தாள் என்று புரியவே இல்லை. ஒரு பக்கம் அத்தனை வலித்தது. இன்னொரு பக்கம் அவனது ஒப்புதல் அவளது மனதை ஏதோ செய்தது. இப்படி யாரேனும் ஒப்புக்கொள்ள கூடுமா? இது சாத்தியமா?
ஆனால் திருமண வாழ்க்கை என்பது இப்போது போல கிடையாதே! இத்தனை பார்த்த பிறகு அவனை எந்தளவு தனது மனம் ஒப்புக்கொள்ளக் கூடும்?
முடியாது!
கீழே அமர்ந்து முழங்கால்களை கட்டிக் கொண்டு அவள் கண்களில் கண்ணீர் வழிய எங்கோ வெறித்துப் பார்க்க, டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டு தலையை பிடித்துக் கொண்டவனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. இப்படி ஒரு காரியத்தை யார் செய்திருக்க கூடும்? படம் பிடிக்கபட்டதே அவனுக்கு அவ்வளவு அருவருப்பாக இருந்தது. அவனுக்கே இப்படி இருக்கும் போது மகாவை என்ன சொல்லி சமாதானம் செய்வது? அவளது இயல்பை அறிந்தவனுக்கு அவளை சமாதானப்படுத்த முடியும் என்று தோன்றவில்லை.
ஒற்றை நொடியில், ஒற்றை பெருமூச்சில், ஒற்றை வார்த்தையில் ஒரு வாழ்க்கை முடிந்து போக முடியுமா?
முடியுமே…
அதை அனுபவித்துக் கொண்டு இருக்கிறானே!
ஒருவாறாக தன்னை மீட்டுக் கொண்டவள், கண்களை துடைத்துக் கொண்டு எழுந்து, டம்ப்ளரில் நீரை நிரப்பி அருந்தினாள். உள்ளிருந்த வெப்பத்திற்கு அந்த குளுமை அப்போது அவளுக்கு தேவைப்பட்டது. மீதமிருந்த நீரை நிரப்பி அவனிடம் நீட்டினாள்.
மெளனமாக கண்ணாடி குவளையை மட்டும் பார்த்தான் ஷ்யாம். மஹாவை நேராக பார்க்க முடியவில்லை. உள்ளுர அவனை உறுத்திக் கொண்டிருந்த அவமானம் அவனை நிமிர்ந்து பார்க்க விடவில்லை.
வாழ்க்கை வெறுத்து துக்கம் தொண்டையை அடைக்க அவனை பார்த்தவள்,
“குடி ஷ்யாம்…” என்று நீர் அடங்கிய அந்த கண்ணாடி குவளையை நீட்ட,
நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவளது வேதனை அவனைத் தாக்கியது.
“இது இப்ப நடந்தது கிடையாது மஹா…” வலியோடு கூற,
“தெரியும்…” வெறுமையாக கூறியவள், நீரை இன்னமும் நீட்டிக் கொண்டிருக்க,
“உன்கிட்ட எதையுமே நான் மறைச்சது இல்லடி…” வார்த்தைகள் வெளிவர தயங்கியது. ஆனால் தெளிவாக இருந்தது.
“தெரியும்…” அதே வெறுமை தான். “குடி ஷ்யாம்…” என்றவளை நேராக பார்த்தவன், அவளிடமிருந்த நீரை வாங்கி டேபிளின் மேல் வைத்தான். உள்ளுக்குள் எதுவுமே இறங்கும் என்று அவனுக்கு தோன்றவில்லை.
“உன்கிட்ட கமிட்டானதுக்கு அப்புறம் நான் நேர்மை தவறி இருக்கேனா?” என்று நேரடியாக கேட்டான். அவனது கண்களை ஆழமாக பார்த்தாள்.  
“இல்ல…” அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு கூறினாள். துக்கம் தொண்டையை அடைத்தது. அவளுக்கு தெரியும், அவள் மனதுக்கு தெரியும்… அவன் நேர்மையாக இருப்பதை அவள் மட்டுமே உணரவும் முடியும்.
“அந்த நம்பிக்கை உனக்கு இருக்கும் போது இதெல்லாம் பாசிங் க்லௌட்ஸ்டி…” அவளை சமாதானம் செய்ய கூறினாலும், மிகுந்த வேதனையோடு கூறினான் அதை!
“உன்கிட்ட வார்த்தையா கேட்கும் போது இருந்த வலி பெருசா தெரியலடா… இப்ப என்னால இந்த வலியை தாங்க முடியல…” முகத்தை மூடிக் கொண்டு அவள் அழ, எழுந்து வந்தவன், கைகளை கட்டிக் கொண்டு அவள் முன்பு நின்றான்.
“எல்லாருக்குமே ஒரு பாஸ்ட் இருக்கும் மஹா… நீ எப்படி வேண்ணா எடுத்துக்க, சந்தர்ப்பம் கிடைக்காத வரைக்கும் தான் எந்தவொரு ஆம்பிளையும் ராமன்… எனக்கு அந்த சந்தர்ப்பம் கிடைச்சுது… தானா தேடி வந்தது… யாரையும் தேடிப் போகலை… அதை யூஸ் பண்ணிகிட்டேன்… ஆனா எப்ப உன்கிட்ட நான் கமிட் ஆனேனோ, எப்ப தலகுப்பால நீ இல்லைன்னா நான் இல்லைன்னு முடிவு பண்ணினேனோ, அப்புறம் யாரையும் மனசால கூட நினைக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்… அது உனக்கு நான் தர்ற மரியாதை… அப்படி நான் வேற யாரையாவது நினைச்சா தான் அது நான் உனக்கு பண்ற துரோகம்… என்னோட ஹானஸ்டி இவ்வளவுதான்…” என்று நிறுத்த,
நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். கண்களையும் முகத்தையும் அழுந்த துடைத்துக் கொண்டு,
“சந்தர்ப்பம் கிடைச்சாலும் நேர்மையா இருக்கனும்ன்னு நினைக்கற எங்களை மாதிரி ஆளுங்க எல்லாம் யார் ஷ்யாம்?”
அவனால் பதில் பேசமுடியவில்லை.
“கார்த்திக்கு சந்தர்ப்பம் கிடைக்கலைன்னு நீ சொல்வியா?”
மெளனமாக அவளை பார்த்தான்.
“சொல்ல மாட்டேன்… ஆனா உன்கிட்ட எதையுமே மறைக்க நினைக்கலையே…”
“அந்த நேர்மைக்காக மட்டும் தான் இப்ப உன்ட்ட பேசிட்டு இருக்கேன்… இல்லைன்னா உன்னை மனசுல கூட நினைச்சு பார்த்து இருக்க மாட்டேன்…” அவ்வளவு இறுக்கமாக வந்து விழுந்தன அவளது வார்த்தைகள்.
அவளது கண்களை ஆழமாக பார்த்தான். அதில் கடலளவு காயமும் மலையளவு வேதனையும் தெரிய, அதை போக்க வழி அறியாமல் நிர்கதியாக நின்றான்.
அவளது கண்களில் கண்ணீருக்கு தானே காரணமாகிவிட்ட விந்தையை என் சொல்ல?
“எதுவா இருந்தாலும் ஓபனா பேசு மஹா…”
அவளது இறுக்கத்திற்கு சற்றும் குறையாத இறுக்கத்தோடு ஷ்யாம் கூறியதை கேட்டவள்,
“இதே மாதிரி நான் பண்ணிட்டு, இப்ப உனக்கு மட்டும் தான் உண்மையா இருக்கேன்னு சொன்னா உன்னால ஏத்துக்க முடியுமா ஷ்யாம்?” அவனது கண்களை பார்த்தபடி அவள் கேட்க, அவன் மெளனமாக அவளை பார்த்தான்.
“அந்த மாதிரி சந்தர்ப்பம் அமையலையே…”
“சப்போஸ்… அப்படி இருந்தா?” அழுத்தமாக அவள் கேட்க, ஆழ்ந்து ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன்,
“நான் உன்ட்ட ப்ரொபோஸ் பண்ணும் போதே நான் நல்லவன் வல்லவன்னு சொல்லி ப்ரொபோஸ் பண்ணலை மஹா. என்னை பத்தின டீட்டைல்ஸ் உனக்கு கம்ப்ளீட்டா தெரியும்ல?” என்று கேட்க, அவள் மெளனமாக தலையாட்டினாள்.
“ம்ம்ம்ம்…”
“அப்புறமும் எத்தனையோ தடவை இது பத்தின பேச்சு வந்தப்ப கூட நான் உன்ட்ட எதையுமே மறைக்க முடியாதுன்னு சொல்லி உண்மையை மட்டும் தான் பேசி இருந்து இருக்கேன். ஆமாவா இல்லையா?” திரும்பவும் அவன் நேரடியாக கேட்க, இவள் தலையாட்டினாள்.
“ம்ம்ம்ம்…”
 “என்னோட பாஸ்ட்ட விடு… உன்னோட ரிலேஷன்ஷிப்ல இருக்கும் போதே இன்னொருத்தி கூட இருந்தா நீ சொல்றதுல அர்த்தம் இருக்கு… ஆனா உனக்கு நான் முழுக்க முழுக்க உண்மையா இருக்கனும்ன்னு நினைச்சேன்… இப்பவும் நினைக்கிறேன்… இனியும் நினைப்பேன்னு உனக்கு நம்பிக்கை இருக்கா?”
எதுவும் கூறாமல் அவள் அவனது கண்களை பார்க்க, அதில் அடிபட்ட பாவனை தெரிந்தது. நம்பிக்கை இல்லையா என்ற வலி!
“ஒரு ரிலேஷன்ஷிப்ல அந்த நம்பிக்கை மட்டும் தான் முக்கியம் மஹா…” என்று அவன் கூறும் போதே அவனை இடையிட்டவள்,
“அந்த நம்பிக்கை இல்லாம நான் இல்ல… ஆனா என்னோட வலி உனக்கு புரியல …” சிறு குரலில் ஆனால் அழுத்தம் திருத்தமாக கூற,
“ம்ம்ம்… கற்புங்கறதும் பியுரிட்டிங்கறதும் உடம்பு சம்பந்தப்பட்டது இல்லைன்னு நீ தானே சொன்ன?” என்ற அவனது கேள்வியை அவள் எப்படி எதிர்கொள்ள முடியும்? அவளது வார்த்தைகள் தானே அவை?
“அதுக்காக?”
“எந்த பிரச்சனை வந்தாலும் சேர்ந்தே பார்க்கனும்ன்னு சொன்ன மஹா…” என்றவனின் வார்த்தைகளில் என்ன உணர்ந்தாள் என்பது புரியவில்லை. அவனை மெளனமாக அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் பதிலேதும் பேசவில்லை.
 அவனது கண்களில் அவள் கண்ட உண்மை அவளை நிச்சயமாக சுட்டது. அவளிடம் அவன் அப்படித்தான். நீ என்ன செய்து கொண்டாலும், நினைத்துக் கொண்டாலும் பரவாயில்லை. நான் இப்படித்தான் என்று தான் இருப்பான். ஆனால் தன்னால் அப்படி இருக்க முடியுமா?
“இப்ப ஒரு பொண்ணை மனசால நினைச்சா கூட தப்பு… என்னை சட்டைய பிடிச்சு கேக்க உனக்கு ரைட்ஸ் இருக்கு… ஆனா அதுக்கு முன்னாடி நடந்ததுக்கு எல்லாம் எப்படி விளக்கம் சொல்ல முடியும் மஹா?”
ஆனால் காயம் கொண்ட மனது அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறதே. அந்த படங்கள், அது அவனது தனிப்பட்ட அந்தரங்கமல்ல… தன்னுடைய அந்தரங்கம்! தனக்கே உரித்தான அவனது அந்தரங்கம்!
அதை பார்க்கும் போது அத்தனை அசூயையாக இருப்பதை அவளால் எப்படி மறுக்க முடியும். இந்த அசூயையை வைத்துக் கொண்டு அவனோடு வாழ முடியுமா?
அவனது வாழ்க்கையும் பாழ்… தன்னுடைய வாழ்க்கையும் பாழ் அல்லவா!
இங்கு பிரச்சனை ஷ்யாம் அல்ல!
அந்த படங்கள்!
“தயவு செஞ்சு நீ விளக்கம் கொடுக்கவே வேண்டாம்… அந்த கர்மத்தை எல்லாம் கேட்டு கேட்டு எனக்கு காது வலிச்சு போச்சு… என்னவோ உலக சாதனை பண்ண மாதிரி, நான் அப்படி நான் இப்படின்னு… எனக்கு இதை கேட்க கூட பிடிக்கல… விட்டுடு…” என்று நிறுத்த, அவன் கைகளை கட்டியவாறு அவளை ஆழ்ந்து பார்த்தான்.
அந்த படங்களை பார்த்ததில் உள்ளுக்குள் அவமானமாக இருந்தது. அதிலும் தன்னுடைய மஹா அதை காட்டி கேட்கையில் உயிர் போய்விடும் போல தான் இருந்தது. ஆனாலும் தன்னை தானே சுதாரித்துக் கொண்டு தான் நின்றான்.
“சரி வேறென்ன சொல்லனும்ன்னு எதிர்பார்க்கற மஹா?”
“எதையும் எதிர்பார்க்கல… உன்னோட பாஸ்ட் தெரிஞ்சு தான் நானும் அக்செப்ட் பண்ணிகிட்டேன்… ஆனா…” என்று நிறுத்த,
“ஆனா?”
“அந்த வீடியோவையும் பிக்சர்சையும் பார்த்ததுக்கு அப்புறம் நமக்குள்ள ரிலேஷன்ஷிப் சாத்தியமே இல்லைன்னு தோணுது…”
“வீடியோவா?” அதிர்ந்தான் ஷ்யாம். வெறும் இரண்டு மூன்று படங்கள் மட்டுமே என்றுதான் நினைத்திருந்தான். ஆனால் வீடியோ என்றதும் அதிர்வின் விளிம்பிற்கு சென்று விட்டான்.
“ம்ம்ம்…” என்றவள், வாட்ஸ்அப்பை திறந்து, அந்த வீடியோவை அவள் ப்ளே செய்ய, ஒவ்வொரு நொடியும் இறந்து பிறந்தான்.
அவனுக்குள் வால்கனோ வெடித்து விடும் போல இருந்தது.
இந்தளவு தான் ஏமாளியாக இருக்க முடியுமா?
இப்படி தன்னை ஏமாற்ற முடியுமா?
அவ்வளவு முட்டாளாகவா தான் இருந்து இருக்கிறோம்?
இது ஒன்றுதானா? இன்னும் எத்தனையோவா?
யார் செய்திருக்கக் கூடும் இதை?
“போதும் நிறுத்து மஹா…” அதை அவனால் பார்க்க முடியவில்லை. அது நிச்சயமாக அவனது சுயநினைவில் எடுக்கப்பட்ட வீடியோவும் அல்ல!
இப்படி கிறக்கத்தோடு தான் இருப்பதை பார்த்த பின்னும் மஹா தன்னிடம் நின்று பேசிக் கொண்டிருப்பதே பெரிய விஷயமாக தோன்றியது.
“உனக்கே பார்க்க முடியலல்ல?” என்றவளின் கண்களில் மீண்டும் அருவி!
“ஆமா… முடியல… ரொம்ப கஷ்டமா இருக்கு… அசிங்கமா இருக்கு… இப்படி நான் ஏமாந்து இருக்கேனேன்னு நினைச்சா…” என்றவன், கண்களை இறுக்கமாக மூடித் திறந்து தன்னை ஆற்றுப் படுத்திக் கொள்ள முயன்றான்.
முடியவில்லை… பல்லைக் கடித்தான்… அப்போதும் அவனது கண்கள் கலங்குவதை கட்டுப்படுத்த முடியவில்லை…
அவன் உடைந்து போவதை அவளால் பார்க்கவே முடியவில்லை.