VNE 58(1)

VNE 58(1)

58

காரை மிதமான வேகத்தில் இருபுறமும் பார்த்தபடி செலுத்திக் கொண்டிருந்தான் ஷ்யாம். எதிரில், பக்கவாட்டில் என்று எங்காவது மஹாவின் முகம் தென்படுகிறதா என்று கண்களில் கலக்கத்தோடு பார்த்தபடி இருந்தான்.

அவனிடம் வெடித்து விட்டு போனவள் தான்.

எங்கு சென்றாள் என்று தெரியவில்லை.

அவள் சென்றவுடன், எப்படியும் வீட்டுக்கு சென்றுவிடுவாள், உண்மையை எடுத்துக் கூறி சமாதானப்படுத்தலாம் என்று நினைத்துக் கொண்டு, பேசியில் அவளை அழைக்க, ரிங் போய்க்கொண்டிருந்தது.

மஹா எடுக்கவே இல்லை. அதற்கும் முன்னதாகவே அறைக்குள் அடுத்தப் பட சம்பந்தமாக டிஸ்கஷனில் இருந்த கார்த்திக்கும் இயக்குனர் மதியும் வெளியே வந்துவிட, அருகில் கோபத்தோடு நின்று கொண்டிருந்த ஸ்ரீராம் குழப்பமடைந்தான்.

இருவர் மட்டுமாக போவதாக தானே நினைத்தான். இதென்ன இவர்களும் இருக்கிறார்கள் என்றால்? தவறு செய்தது தான் என்பது புரிந்தது!

ஆனால் அவனை எதுவும் கேட்காமல் ஷ்யாம் மஹாவின் செல்பேசிக்கு தொடர்பு கொள்ள முயல, அது அணைக்கப் பட்டுள்ளது என்றே மீண்டும் மீண்டும் தெரிவிக்க, அவனுக்குள் பயம் பீடித்துக் கொண்டது.

“மச்சான்… வீட்டுக்கு கூப்பிட்டு மஹா வந்தா இன்பார்ம் பண்ண சொல்லு” என்று அவசரமாக கார்த்திக்கிடம் கூற,

“ஏன் மச்சான்? என்னாச்சு?” என்று புரியாமல் கேட்டான்.

அவனுக்கு மஹா வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை.

அருகிலிருந்த சௌஜன்யா தான், “மேடம் வந்தாங்க கார்த்திக் சர், சர் கிட்ட என்னவோ சொன்னாங்க. எனக்கும் சட்டுன்னு புரியல. கிளம்பிட்டாங்க…” என்ற போது தான் எதுவோ பிரச்சனை என்று கார்த்திக்கு புரிந்தது.

ஷ்யாமை பார்க்க, அவன் பதட்டமாக, செல்பேசிக்கு முயன்றபடியே இருந்தான்.

“அவளோட செல் எங்க இருக்கு?” யோசனையாய் கார்த்திக்கிடம் கேட்க,

“மஹா கிட்ட தாங் மாமா செல் இருக்கு. என்கிட்ட பேசிட்டு தான வந்தா…” என்று ஸ்ரீராம் சற்று பயத்தோடு கூற, அவனை வெறுமையான முகத்தோடு பார்த்தான்.

“நீங்க தான் மகாவை இங்க வர சொன்னதா?” என்று ஒரு மாதிரியான குரலில் ஷ்யாம் கேட்க,

“எஸ் மாமா…” என்றபடி தலைகுனிந்தான். அவன் நினைத்தது போல இல்லையே. தான் செய்தது தவறல்லவா!

“உங்க பேர் என்ன….?” என்று அவனது பெயரை மறந்து விட்டவன், சற்று இழுக்க,

“ஸ்ரீராம் மாமா… உங்க கல்யாணத்துல பார்த்த ஞாபகம் இல்லைங்களா?” என்று கேட்க,

“ம்ம்ம்… என்ன சொல்லி இங்க வர சொன்னீங்க?” நேரடியாக கேட்கவும், ஸ்ரீராம் மென்று முழுங்கினான். சற்று முன்பு வரை மனதுக்குள் அத்தனை விதமாக ஷ்யாமை அர்ச்சித்துக் கொண்டிருந்தவன். இப்போது அப்படியே மாறிவிட்டதே!

‘என்ன மனிதன் இவன். கிளி மாதிரி பெண்டாட்டி இருந்தாலும், குரங்கு மாதிரி வைப்பாட்டி தேவைப்படுமாம். அது போல அல்லவா இருக்கிறான். எத்தனை வசதி வாய்ப்பிருந்தும் என்ன? இது போன்ற ஒரு வாழ்க்கையை மஹா வாழ வேண்டுமா? அவளுக்கென்ன குறைச்சல்? மருத்துவராக போகிறாள். இன்னும் மேலே படிப்பாள். கட்டாயமாக மற்றவர் நிமிர்ந்து பார்க்கும் படியான வாழ்க்கையைத்தான் வாழ போகிறாள். இதில் இது போன்ற கழிசடைகளை சேர்க்க வேண்டுமா?’ என்றெல்லாம் மனதுக்குள் ஷ்யாமுக்கு சம்மட்டி அடி கொடுத்துக் கொண்டிருந்தான் ஸ்ரீராம்.

ஆனால் தவறு செய்பவர்கள் இப்படி நேருக்கு நேராக நின்று பேசிக் கொண்டிருக்க மாட்டார்களே!

இப்போது தவறியது தான் அல்லவா!

தோழியின் வாழ்க்கையில் தானே கலகமேற்ப்படுத்தியது போல அல்லவா ஆகிவிட்டது. மனதுக்குள் வெகுவாக சங்கடமாக உணர்ந்தவன்,

“ஐ ஆம் சாரி மாமா… பார்த்தவுடனே டென்ஷனாகிட்டேன். கோபத்துல மகாவுக்கு கூப்பிட்டு, நீங்க சௌஜன்யாவோட இங்க இருக்கறதா சொல்லிட்டேன்…” என்று குற்ற உணர்வோடு மெல்லிய குரலில் கூற, ஷ்யாம் தலையில் கைவைத்துக் கொண்டான்.

“ச்சே… இது தெரியாம… நான் வேற…” என்று தலையிலடித்துக் கொள்ள,

“என்ன ஷ்யாம்? என்னாச்சு?” என்று கார்த்திக் கேட்க, ஷ்யாம் மதியை பார்த்து, “நீங்க கிளம்புங்க மதி… உங்களுக்கு கால் பண்றேன்…” எனவும் அவர் விடைபெற்றார். வெளியாட்களை வைத்துக் கொண்டு குடும்ப விஷயங்களை பேச வேண்டுமா என்று எண்ணம் தான்!

சௌஜன்யாவை நோக்கி, “நீங்களும் கிளம்புங்கமா. இந்த அட்வர்டைஸ்மென்ட் பண்றோம். முழுசா வொர்க் அவுட் பண்ணிட்டு உங்களுக்கு மேனேஜரை கால் பண்ண சொல்றேன்…” என்று அவளையும் அப்புறப்படுத்த முயன்றான்.

அவளோ, “சாரி சர். என்னால ஏதோ குழப்பம்ன்னு நினைக்கறேன்..” என்று இழுக்க,

“இல்லம்மா. இது பேமிலி மேட்டர். உங்களுக்கும் அதுக்கும் சம்பந்தமில்ல. நாங்க பார்த்துக்குவோம்…” என்று முடிக்க நினைக்க,

“சர், முன்னாடி எதுவேண்ணா மேடம் கிட்ட நான் பேசியிருக்கலாம். ஆனா இப்ப அப்படி எந்த நினைப்பும் இல்ல. எனக்கு இப்போதைக்கு என்னோட கேரீர் தான் முக்கியம். அதை பத்தி மட்டும் தான் நினைச்சுட்டு இருக்கேன். உங்க மேல எனக்கிருந்த க்ரஷ் எல்லாம் பாசிங் க்லௌட்ஸ் மாதிரி… ப்ளீஸ்… மறந்துடுங்க…” ரொம்பவும் தயவாக கூற,

“இட்ஸ் ஓகே ம்மா. ஐ டோன்ட் மைன்ட்…”

“சர்… நான் எதாவது பண்ணிட்டேன்னு நினைச்சு, என்னோட கேரீரை…” என்று இழுக்க, அவளை அழுத்தமாக பார்த்தான்.

“ம்மா… உங்க கேரீரை ஸ்பாயில் பண்ணனும்ன்னு நினைச்சு இருந்தன்னா அதை எப்பவோ பண்ணியிருப்பேன். இப்படி எங்க ஆட் பிலிமுக்கு கூட உங்களை பிக்ஸ் பண்ண நினைச்சுருக்க மாட்டேன். தேவையில்லாம எதையும் நினைக்காம கிளம்புங்க…” கறாராக கூறிய ஷ்யாமை சற்று பயத்தோடுதான் பார்த்தாள் சௌஜன்யா.

அதே உணர்வு தான் கார்த்திக்கும். அவன் விளையாட்டாக, கேலியாக, குறும்பாக பேசும் சந்தர்ப்பங்களை மனதில் வைத்துக் கொண்டே எல்லா நேரமும் அவனை அணுக முடியாது என்று தெளிவாக அறிந்து கொண்டிருந்தான்.

உதாரணம், நடந்து முடிந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தல். யார் யாரை எப்படி கவிழ்க்க வேண்டுமோ அத்தனையும் செய்திருந்தான். பணத்தால் அடிக்க வேண்டியவர்களை பணத்தாலும், மிரட்டி வழிக்கு கொண்டு வர வேண்டியவர்களை மிரட்டியுமாக தேர்தலில் வெற்றி பெற்று தயாரிப்பாளர் சங்க தலைவராக கார்த்திக்கை பதவியேற்க வைத்து இருந்தான்.

அந்த வகையில் ஷ்யாமை பார்த்து அரண்டு போயிருந்தான் கார்த்திக்.

அவனை, ‘தி கிங் மேக்கர்’ என்று அவ்வப்போது தனக்கு தானே சொல்லிக் கொள்வது வாடிக்கையாகி இருந்தது.

இந்த தேர்தலை அவன் இந்தளவுக்கு ஒரு ஈகோ விஷயமாக எடுத்துக் கொண்டதற்கு ஒரே காரணம், விநாயக மூர்த்தி.

அவர் சொன்ன வார்த்தைகள்.

முன்பும் கூட சங்க நிர்வாகிகள் அவனுக்கு சில குடைச்சல்களை கொடுத்து இருக்க்கின்றனர் தான். ஆனால் தன்னை இந்தளவுக்கு இறக்கிக் கூறியதும் இல்லாமல், விருது வழங்கும் விழாவில், மஹாவை இணைத்து சில்மிஷமாக அவர் குறிப்பட்டதை தனக்கு ஏற்பட்ட பெரிய இழுக்காக நினைத்துக் கொண்டான்.

ஒரு சில வார்த்தைகளுக்கே இப்படி ஒருவரை கட்டம் கட்டி அடிக்கிறான் என்றால், நினைக்கும் போதே கார்த்திக்கு தலை சுற்றத்தான் செய்தது.

இத்தனை நாட்களில் ஷ்யாமை பற்றி புரிந்து கொண்டதெல்லாம் ஒன்று தான்.

உண்மையாக பழகும் பட்சத்தில் உயிரையும் கூட கொடுப்பவனை, சற்று சீண்டி விட்டாலும், துரோகம் செய்ய நினைத்தாலும், உயிர் போவதே பரவாயில்லை என்று எண்ண வைத்து விடுகிறான் என்பதுதான்.

கார்த்திக்கு அவனை எதிர்க்கும் எண்ணமெல்லாம் எப்போதும் வந்துவிட கூடாது. உண்மையில் அவனை சமாளிக்கும் சக்தி தனக்கு கிடையாது என்பதை மனதுக்குள் உணர்ந்து கொண்டிருந்தவன், அதற்கான நிலை வந்து விட கூடாது என்று தான் எண்ணிக் கொண்டான்.

ஆனால் இத்தனை ராட்சத்தனமாக வெளியே உலா வருபவன், மனைவியிடத்தில் அப்படி பம்மிக் கொண்டிருப்பது தான் நகைச்சுவை.

“புலி ஏன் மச்சான் அங்க மட்டும் பூனையாகிடுது?” முந்தைய தினம் தான் சிரித்தபடியே கேட்டான், ஒன்றாக பயணித்துக் கொண்டிருக்கும் போது!

“என்னடா பண்றது? புலிய பட்டினி போட்டே பூனையாக்கி வெச்சுருக்கா…” என்று சிரிப்பவனின் புன்னகைக்கு பின்னால் ரொம்பவும் வலியிருக்கிறதோ என்று தோன்றியது.

“ஏன் ஷ்யாம்? ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்க,

“பிரச்சனை இல்லைன்னா தான் ஆச்சரியம் டா. உன் தங்கச்சிக்கு தினம் எதாவது ஒரு சண்டை போடாம இருந்தா சாப்பிட்ட சாப்பாடு ஜீரணமாக மாட்டேங்குதாம்…” என்று மீண்டும் சிரிக்க,

“அப்படி என்னதான் சண்டை போடுவா? எனக்கே புரியலையே…” குழப்பமாக அவனை பார்க்க,

“காலைலருந்து ஈவினிங் வரைக்கும் நல்லாத்தான் போகும். அப்புறம் தான் இருக்கு மேட்டரே… என்னடா பேசி என்னை ஆப் பண்ணலாம்ன்னு  ப்ளான் பண்ணிட்டே இருப்பா. அதனாலேயே அவ வர்றதுக்கு முன்னாடியே நான் கவுந்தடிச்சு தூங்கிருவேன். இந்த அழகுல என்னைக்காவது லிக்கர் எடுத்துட்டா அன்னைக்கு நான் செத்தேன். சிகரெட் பிடிச்சே எத்தனை நாளாச்சுன்னு தெரியல…” சிரித்துக் கொண்டே கூறியவனை பார்த்து சிரித்தாலும் கார்த்திக்கு உறுத்தியது. இவையெல்லாம் அரசல் புரசலாக தெரிந்தவை தான்.

“ஆடிய ஆட்டமென்ன… பேசிய வார்த்தையென்ன…” வேண்டுமென்றே ஷ்யாமை கிண்டல் செய்து பாடியவனை பார்த்து சிரித்தான்.

“என்ன வேண்ணா சொல்லு கார்த்திக்… ஐ டோன்ட் பாதர்… அவ எத்தனை சண்டை போட்டாலும், அதுல இருக்க ஒரே விஷயம் என்னன்னா…” என்று நிறுத்த, கார்த்திக் கேள்வியாய் பார்த்தான், புன்னகையோடு!

“லவ் அண்ட் லவ் ஒன்லி…”

“ஏன் இவ்வளவு கஷ்டம்ன்னு தோணுது ஷ்யாம்… ஒரு அண்ணனா சொல்லலை… மச்சானாவும் சொல்லலை… உன்னோட ப்ரெண்டா கேக்கறேன்… மஹா விஷயத்தை நீ ஈசியா சால்வ் பண்ணிருக்கலாம். ஆனா பர்பசாவே ரொம்ப டவுன்ப்ளே பண்ணிட்டு இருக்க… அதான் ஏன்னு புரியல…”

கார்த்திக் கூறுவதும் உண்மைதான். ஷ்யாம் நினைத்தால் எளிதாக முடிக்கலாம். ஆனால் அவள் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் போய் கொண்டிருப்பதை பார்த்தவனுக்கு அதுதான் தோன்றியது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!