VNE 62(3)

VNE 62(3)

சோபாவில் இருந்த குஷனை எடுத்து அவனை நோக்கி எறிந்து,

“ஓ உனக்கு அவ்வளவு ஆகிபோச்சா? நான் இல்லைன்னா ஷப்பான்னு இருப்பியா? இருப்படா இருப்ப… இருக்க விட்ருவேனா?” என்று எழுந்து வந்தவள், சரமாரியாக குஷனை வைத்து அவனை அடிக்க, அதை பார்த்தவர்களுக்கு கோபம் வருவதற்கு பதில் சிரிப்புத்தான் வந்தது.

“ஏய் என்னடி மாப்பிளைய இப்படி அடிக்கற… அதுவும் அவங்க அப்பா அம்மா முன்னாடி… பைரவி தவிக்க,

“ம்மா… கொஞ்சம் நீ சும்மா இரு… எனக்கு இருக்க கோபத்துக்கு, இவன் மண்டைல கல்லைத் தூக்கிப் போட்டாலும் போட்டுடுவேன். நான் இல்லைன்னா அவ்வளவு நிம்மதியா இருப்பானா?” என்று இன்னமும் மொத்த,

“இந்த ரெண்டுத்துக்கு நடுவுல நாம போக கூடாதுங்க அண்ணி… பாருங்க இந்நேரம் வரைக்கும் நம்மளை டென்ஷன் பண்ணிட்டு இப்ப உங்களை போக சொல்லுதுங்க…” என்று ஜோதி சிரிக்க,

“அட ஆமா அண்ணி…” என்று வாய் மேல் கை வைத்த பைரவி, தலையிலடித்துக் கொண்டு டைனிங் டேபிளை நோக்கி போனார். டிபன் எடுத்து வைக்க!

அதையெல்லாம் சற்றும் கண்டுக்கொள்ளாமல், “வீட்ல நீ பண்ற கொடுமை பத்தாதுன்னு இங்கயும் ஏன்டி இப்படி கொடுமை பண்ற?” என்று அவளது கையை இறுக்கமாக கையை பிடிக்க,

“ஐயோ… எருமை மாடே… வலிக்குதுடா… விட்டுத் தொலை… பரதேசி…” சரமாரியாக திட்ட, அவளது கையை இன்னமும் இறுக்கமாக பிணைத்துக் கொண்டான்.

“நீ அடிப்ப… அதை நான் வாங்கனுமா? போடீ…” என்றவனை பல்லைக் கடித்துக் கொண்டு முறைத்துப் பார்க்க,

“சரி… அடிக்கல விடு…” என்று சரண்டரானவளை மெல்ல விடுவிக்க, இரண்டு கைகளின் மணிக்கட்டையும் ஆராய்ந்தாள். சிவந்து கன்றி போயிருந்தது.

“எருமை…” என்று திட்ட,

“ம்ம்ம் ஒரு நாள் முழுக்க பட்டினியா சுத்த வெச்ச தான… அதுக்கு தேவைதான்…” என்றான் முறைத்துக் கொண்டே!

“ஏன் மச்சான்… என் தங்கச்சி தான் உன்னை பட்டினியா சுத்த சொன்னாளா? வாடா சாப்பிட்டுட்டு வந்துடலாம்ன்னு கூப்பிட்டா, என் டார்லிங்க பாக்காம சாப்பிட மாட்டேன், பேபிம்மாவ பாக்காம தூங்க மாட்டேன், பல்லு கூட வெளக்க மாட்டேன்னு அடம் பண்ணிட்டு இப்ப இப்படி பேசறியா?” என்று கார்த்திக் வார,

“டேய் மச்சான்.. அந்த பேபிம்மா யாருடா? அந்த பிகராச்சும் நல்லா இருக்குமா?” என்று ஷ்யாம் கேட்க,

“ஆனாலும் உன்னோட மன தைரியத்தை பாராட்டியே ஆகணும் மச்சான்…” என்று கார்த்திக் சிரிக்க,

“இவ தான் எதுக்குமே ஆக மாட்டா… அந்த பேபிம்மாவாச்சும் தேறுமா?” என்று கண்ணடிக்க, அப்போதுதான் கவனித்தான், பிருந்தா ஓரமாக நின்று கொண்டிருப்பதை! கணவன் மனைவி சண்டைக்குள் பெரியவர்கள் இருக்கும் போது தான் உள் செல்வது சரியல்ல என்று நின்றுகொண்டிருந்தாள். இந்த பேச்சு எங்கெல்லாம் போகும் என்பதை உணர்ந்தவன்,

“நான் இந்த வெள்ளாட்டுக்கு வர்ல சாமியோவ்…” என்று தப்பிக்க பார்க்க, பார்த்துக் கொண்டிருந்தவர்கள் டென்ஷனை மறந்து சிரித்தனர்.

இருவரையும் வெட்டி விடுவதை போல முறைத்த மஹா,

“இரு… கார்த்திண்ணா இரு… அடுத்தது உன்கிட்ட தான் வர்றேன்…” என்றவள், அவனுக்கு முன் சென்று இடுப்பில் கையை முட்டுக் கொடுத்து நின்று கொண்டாள்.

“என்ன பாப்பா?” என்று கார்த்திக் கேட்க,

“டேய் அது ஒன்ற டன் பீப்பாடா…” என்று வாரினான், வேறு யார், ஷ்யாமே தான். முகம் கோபத்தில் சிவக்க, அவனை கடுப்பாக பார்த்து,

“இரு உன்னை அப்பறமா வெச்சுக்கறேன்…” என்று மூக்கை விடைத்தபடி கூற,

“என்னடி இப்படி சொல்ற? வெச்சுக்க போறியா?” என்று வார, இன்னொரு குஷன் பறந்தது. முருகானந்தமும் ஆத்மநாதனும் ஒரு வழியாக பெருமூச்சு விட்டனர். ஜோதி சிரித்தார்.

கார்த்திக்கை பார்த்து மஹா, “டேய் அண்ணா…” என்றழைக்க, ‘ஆஹா லட்டு பார்முக்கு வந்துடுச்சு’ என்றவன் அவளை பார்த்து சிரித்தான்.

“சொல்லு லட்டு…” என்று கூற,

“தியேட்டர் யார் பேர்ல இருந்துது?” என்று கேட்டாள்.

“ஏன் பாப்பா? அது உன் பேர்ல இருந்தது தான?” என்று பதிலுக்கு கேட்க,

“சரி… அது யாரோடது?”

“உன்னோடதுதான?” என்று கேட்டான் கார்த்திக்.

“அப்புறம் எப்படி கார்த்திண்ணா என் புருஷனுக்கு அதை வித்த? அதுவும் இருபது கோடிக்கு? அது பதினஞ்சே பொறாது…” கிடுக்கிப் பிடியாக கேட்க, அதுவரை அமர்க்களங்களை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த முருகானந்தம் சிரித்தார்.நாதன் பெருங்குரலில் சிரிக்க, ஜோதி வயிற்றை பிடித்துக் கொண்டார்.

“அடிப்பாவி…” அயர்ந்து தான் போனான் கார்த்திக்.

“பின்ன? என் புருஷன் ஏமாளின்னா என்ன வேண்ணா பண்ணுவியா?” என்று இடுப்பில் வாய்த்த கையை எடுக்காமல் இவள் கேட்க,

“யாரு? உன் புருஷன் ஏமாளியா?” கார்த்திக்கால் அந்த அதிர்ச்சியை தாள முடியவில்லை.

“பின்ன? பதினஞ்சு கோடி பொறாது… அதுவும் இல்லாம அது என்னோடது… அதைப் போய் இவ்வளவு பணம் கொடுத்து வாங்கினா அவன் ஏமாளி தான?” என்று தனி வியாக்கியானம் அவள் கூற, கார்த்திக் வாயடைத்துப் போனான். ஷ்யாமால் வெளிப்படையாக சிரிக்கவும் முடியவில்லை,. சிரிக்காமலிருக்கவும் முடியவில்லை.

“ஏய் அது கல்யாணத்துக்கு முன்னாடி…”

“முன்னாடியோ பின்னாடியோ… எப்படியோ என் ஏமாளி புருஷனை நீ ஏமாத்தி இருக்க…”

“திரும்ப திரும்ப மச்சானை ஏமாளின்னு சொல்லாத பாப்பா. எனக்கு லைட்டா ஹார்ட் அட்டாக் வர்ற மாதிரி இருக்கு…”

“இப்படியெல்லாம் சொன்னா நீ பண்ணது இல்லைன்னு ஆகிடுமா?” மஹா வெகு தீவிர குரலில் கேட்பதை போல கேட்டு வைக்க, பிருந்தா உட்பட அனைவருமே வயிற்றைப் பிடித்து கொண்டனர்.

“பாவி… கொடுத்துடறேன்டி… என் மானத்தை வாங்காத…” தங்கையிடம் வம்பு வளர்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.

“சரி போனா போகுது… அந்த பணத்துல எனக்கு ஹாஸ்பிடல் கட்டிக் கொடுத்துடு…” மிகவும் சீரியசாகவே கூற,

“ஏன் பக்கி… அதான் உன் புருஷன் கிட்ட அவ்வளவு பெரிய ஹாஸ்பிடல், மெடிக்கல் காலேஜ்ன்னு அத்தனை இருக்குல்ல… இன்னொரு ஹாஸ்பிடல் எதுக்குடி?”

“நோ… அந்த ஹாஸ்பிடல் எனக்கு வேணா… நான் சுயமா என்னோட கால்ல நிப்பேன்… இந்த ஹாஸ்பிடல்ல நானே சம்பாரிச்சு, நானே ஒரு மெடிக்கல் காலேஜ் கட்டி… அதை பெரிய யுனிவர்சிட்டி ஆக்கல… என் பேர் மஹா இல்ல….” என்று சிரிக்காமல் கூறியவளை பார்த்து,

“ஷப்பா… எல்லாருக்கும் ஆறறிவுன்னா என் பொண்டாட்டிக்கு மட்டும் ஏழாம் அறிவு எங்க இருந்து தான் வருதோ?” சிரித்தான் ஷ்யாம்!

“ஒரு தென்றல் புயலாகி வருதேன்னு ஒரு பாட்ட போடுங்கய்யா… பன்ச் டைலாக் அடிக்கறா பாரு…” கார்த்திக் சிரித்தபடி கூற, பைரவி சமையலறையிலிருந்து சப்தமாக கூறினார், “மகா… எல்லாரையும் சாப்பிட கூப்பிடு… யாரும் இன்னும் சாப்டல…” எனவும், முதல் ஆளாக ஷ்யாமிடம் போய் நின்றாள் அவள்!

“கைகழுவிட்டு வா ஷ்யாம்…” என்று கூற,

“எனக்கு வேணாம்…” இப்போது முறுக்கிக் கொள்வது அவனது முறையானது!

“ரொம்ப பண்ணாத… ஒழுங்கா வா…” ஒற்றை விரலைக் காட்டி மிரட்ட, எதையோ செஞ்சுக்கங்க பிசாசுங்களா என்று இருவரையும் கண்டுக்கொள்ளாமல் எல்லாருமே டிபனில் பிசியாக தொடங்கி இருந்தனர்.

“எனக்கு வேணாம். நீயே கொட்டிக்க…” பல்லைக் கடித்தான்.

“இப்ப வர போறயா இல்லையா?” என்று அவனது கையை பிடித்து இழுக்க,

“ஏய்… உனக்கு இந்த வெ மா சூ சொல்லாம் இல்லையா?” என்று கேட்டான் ஷ்யாம்!

“அதெல்லாம் இருந்து இருந்தா நான் ஏன் தலகுப்பாலருந்து உன் பின்னாடி வர போறேன்? பை பர்த் எனக்கு அதெல்லாம் கம்மியாவே வெச்சு பெத்துடுச்சு பைரவி…” என்று சிரிக்காமல் கூற,

“ஏய் என்னடி அங்க என் பேர் உருளுது?” சமையலறையிலிருந்து பைரவி கேட்க,

“ஒண்ணுமில்ல மாதாஜி… சும்மா பேசிட்டு இருக்கேன்…” என்று கிண்டலாக கூற,

“ஏய் மஹா… உனக்கு சத்தியமா வெ மா சூ சொ எல்லாம் கம்மிதான்டி…” அதுவரை இத்தனை அட்டகாசங்களையும் மெளனமாக பார்த்துக் கொண்டிருந்த பிருந்தா சிரித்தபடி கூற,

“தேங்க்ஸ் தேங்க்ஸ்… தேங்க் யூ வெரி மச்டி அண்ணியாரே…” என்று வேண்டுமென்றே சிரிக்க,

“பிருந்தா, அவகிட்ட வெட்டியா பேசிட்டு இருக்காத… சாப்பிட்டுட்டு நீ கிளம்பு… டேய் கார்த்திக், புள்ளைய கொண்டு போய் விட்டுட்டு வா. பாவம் அதுவும் களைச்சு போச்சு….” என்றபடி உள்ளே போக,

“அடப்பாவிபயளுகளா… பட்டினியா ஊர் சுத்தின நான் பாவம் இல்லையாம். வீட்ல ஜாலியா ஏசில உட்கார்ந்துட்டு இருந்த நீ பாவமா? மாஆஆத்த்தாஆஆஜி….” பல்லைக் கடித்துக் கொண்டு கத்தினாள் மஹா!

அதற்கு மேலும் ஷ்யாமால் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. வாய்விட்டு சிரித்தவனை பார்த்து,

“சிரிக்கறவங்களுக்கு எல்லாம் நாலு நாளைக்கு சாப்படு கட்… ஞாபகம் இருக்கட்டும்…” என்று விரலை நீட்டி மிரட்ட,

“நீயே நாளைக்கு விழுப்புரம் ஓட போறியாம். இதுல எனக்கு சாப்பாடு கட்டா?” என்று மீண்டும் சிரிக்க, மஹா பேந்த பேந்த விழித்தாள்.

‘ஆமால்ல…’ என்று நினைத்தவள், ‘இவனை எப்படித்தான் மிரட்டறது?’ புரியவில்லை அவளுக்கு! அதையே நினைத்துக் கொண்டு தான் குளித்துவிட்டு வந்தாள். காலை முதல் அலைந்தது கசகசவென இருந்தது. அதோடு இருவருக்குமாக பைரவி திருஷ்டி கழித்து விட்டு கண்டிப்பாக குளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஒருவழியாக சாப்பிட்டுவிட்டு, அங்கேயே இரவு தங்கி விடுவதென முடிவாக, ஷ்யாம் முதலிலேயே அவளது அறைக்கு சென்றுவிட, மஹா அவனுக்கு பாலை எடுத்துக் கொண்டு சென்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!