VNE 63 (2)

VNE 63 (2)

இந்த தெளிவும் அறிவும் புத்திசாலித்தனமும் தான் ஷ்யாமை நோக்கி ஈர்ப்பவை. அவனிடம் எத்தனை குறைபாடுகள் இருப்பதாக யார் சொன்னாலும், அவனை விட்டுக் கொடுக்க விடாமல் செய்வதும் இந்த புத்திசாலித்தனம் தான்.

“அப்படீன்னா பணப்பசி நல்லதுன்னு சொல்ல வர்றியா ஷ்யாம்? பெரியவங்க எல்லாம் பணத்து மேல ஆசை வைக்காதன்னு சொல்லி தந்தா… நீ இப்படி சொல்ற?”

“வயிற்று பசி மாதிரி, பணப் பசி கார்த்திக்… வயித்து பசிக்கு சாப்பிடனும்… பணப் பசிக்கு பணத்தை பார்க்கணும்… அந்த பணப் பசியும் அதிகாரப் பசியும் மனுஷனை ஈசியா திருப்தி அடைய வைக்காது… இன்னும் வேணும்… இன்னும் வேணும்ன்னு டிமான்ட் பண்ணும்… நாம இன்னும் வேகமா ஓடுவோம்… ஓடு ஓடு ஓடுன்னு நம்மளை துரத்தும்… நாம ஜெய்க்கனும்னா நமக்கு அந்த பசி வேணும்…”

“ஜெய்க்கலாம் சுவாமிஜி… ஆனா ஒரு பாயின்ட் ஆப் லைப்ல நம்மளை சுத்தி பணம் மட்டும் தான் இருக்கும்… மனுஷங்க இருக்க மாட்டாங்க…” மஹா சிரித்தபடி மாடிப்படியிலிருந்து இறங்கியவாறே கிண்டல் செய்தவளை புன்னகையோடு பார்த்தான் ஷ்யாம்.

எப்போதுமே அவனுக்கு எதிராக ஒரு கருத்தை கூற முடியுமென்றால் அது அவனது மனைவியால் மட்டுமே முடிந்த ஒன்று!

“இது ஜெய்க்க தெரியாதவன் சொல்ற வறட்டு வாதம் சிஷ்ய பொண்ணே…”

“உங்களை மாத்த முடியுமா சுவாமிஜி…”

“இந்த விஷயத்துல மட்டும் மாத்தனும்ன்னு நினைக்காத சிஷ்ய பொண்ணே…” சிரித்தான்.

“அடப்பாவிகளா… நல்ல சுவாமிஜி… நல்ல சிஷ்ய பொண்ணு…” கார்த்திக் சிரிக்க,

“சுவாமிஜி பேசியே ஆளை கவுத்துடுவார் கார்த்திண்ணா… ரொம்ப மயங்காத… இப்பவே தோஸ்தானா ரேஞ்சுக்கு நீ மயங்கி இருக்கறதா சமூகம் சொல்லுது…” என்று சிரிக்க, அவளது அந்த சிரிப்பை ஆழ்ந்து பார்த்தபடி இருந்தான்.

அவனது மனைவி, அவனை கவிழ்த்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டாள் போல… ஆளை அடித்து வீழ்த்துவது போல இருந்தது அவளது தோற்றம்!

எளிமையான தோற்றம் தான். அர்லைட் மஞ்சள் நிற ஷிபான் சேலை உடலை ஒட்டியபடி இருக்க, இடையை தாண்டி முழங்காலை தொட்டுக் கொண்டிருந்த முடியை சிறு கேட்ச் கிளிப்பில் மட்டும் அடக்கியிருந்தாள். வாழைத் தண்டாக கைகள், வெண்பளிங்காக மின்னிய தேகம்… சற்று முன் அரைகுறையாக அவளை பார்த்தது வேறு அவன் கண் முன் வந்து அவனை இம்சித்தது.

“அடப்பாவி தோஸ்தானாவா? ஏன்டி தங்கச்சி உனக்கு இப்படியொரு புத்தி?” கார்த்திக் கிண்டலாக கேட்க,

“ஆமா… இப்பவே நான் பொண்டாட்டியா? நீ பொண்டாட்டியான்னு தெரியல… நாள் முழுக்க சுவாமிஜி கூட நீ தான் சுத்தற…” என்று சிரிக்க,

“நானெல்லாம் உனக்கு போட்டியா பாப்பா?” கார்த்திக் பாவமாக கேட்க,

“நீ மட்டும் தான் எனக்கு போட்டி கார்த்தி…” என்றவளின் கிண்டலில் நாதன் சிரிக்க, முருகானந்தம் உடல் முழுக்க திருநீற்றை பூசியபடி பக்தி பழமாக வந்தார். அவர் வரவும் மஹாவும் கார்த்தியும் அமைதியானார்கள்.

முருகானந்தம் பூஜை செய்யும் சமயத்தில் மஹா வீட்டிலிருந்தால் அவருக்கு அவள் கண்டிப்பாக பாடியே தீர வேண்டும். அதிலும் தீவிரமான முருக பக்தர் அவர்… மகள் பாடும் போது நெக்குருகி பாடலோடு ஐக்கியமாகி பக்தியில் திளைப்பார். மஹாவுக்கு மணமானதால் முக்கியமாக இதை இழந்திருந்தார்.

‘மகாகணபதிம்… மனசாஸ்மராமி…” பூஜையறையில் கீழே அமர்ந்தபடி கம்பீரமான குரலில் மஹா பாட ஆரம்பிக்க, ஊசி விழுந்தால் கேட்குமளவு அமைதியானது அந்த ஹால்.

ஹாலிலிருந்த சோபாவில் அமர்ந்தபடி பூஜையறையில் பாடிக்கொண்டிருந்தவளையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஷ்யாம்.

இந்த குரல் தான் அவனை வஞ்சித்து தலைகுப்புற விழ செய்தது. இந்த குரல் தான் அவனது வாழ்க்கையின் போக்கை மாற்றி, தனக்குள்ளாக அவனை அடக்கிக் கொண்டது. இந்த குரல் தான் அவனை அமைதியடைய செய்தது. இந்த குரல் தான் அவனுக்குள் ஐஸ்கிரீமாக கரைந்து அவனை உருகச் செய்தது. இந்த குரல் தான் அவனை வசியம் செய்து, அவளின்றி ஓர் அணுவும் அசையாது என்ற நிலைக்கு அவனைக் கொண்டு வந்தது. இந்த குரல் தான் அவனை ஆற்றுப் படுத்தியது. இந்த குரல் தான் அவனை ஆண்டது. இந்த குரல் தான் அவனை அவளுள் ஆழ்ந்து போங்க செய்தது.

முதன் முதலாக மிர்ச்சி குல்ஃபி என்று அவளுக்கு செல்ல பெயரிட்ட காரணமும் அவளது இந்த குரல் தான்… இன்று வரை அவனை உறக்கத்திலும் விழிப்பிலும் துரத்திக் கொண்டிருப்பதும் இந்த குரல் தான்.

மனசாஸ்மாராமியை அவ்வளவு ஸ்பஷ்டமாக சுத்தமாக பாடிக் கொண்டிருந்தவளை கண்களால் நிரப்பிக் கொண்டவனின் கண்கள் அவனையும் அறியாமல் மூடிக் கொண்டன!

‘ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்

மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

அவன் வாய் நிறைய மண்ணை உண்டு மண்டலத்தை காட்டிய பின்

ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ

ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ’

தன்னை மறந்த நிலையில் அடுத்த பாடலை ஆரம்பித்தாள் மகாவேங்கடலக்ஷ்மி!

இது அவளுக்கான பாடல்… அவளது கணவனுக்கான பாடல்… அவளது கண்ணனுக்கான பாடல்… அவளுக்கே அவளுக்கான ஷ்யாமள வண்ணனுக்கான பாடல்…

பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு

மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ

அந்த மந்திரத்தில் அவர் உறங்க

மயக்கத்திலே இவன் உறங்க

மண்டலமே உறங்குதம்மா ஆராரோ

மண்டலமே உறங்குதம்மா ஆராரோ

கணவனை தன்னுடைய குழந்தையாக வரித்தவளுக்கு அவனது செல்ல சீண்டல்கள் யாவுமே கிருஷ்ண லீலைகளாகத்தான் தோன்றியது. அவனுடைய குணவிசேஷங்களை கூட குழந்தையின் சேட்டையாக உருவகப்படுத்திப் பாடத் துவங்கியிருந்தாள்.

நாகபடம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்

தாகமெல்லாம் தீர்த்துகொண்டான் தாலேலோ

அவன் மோகநிலை கூட ஒரு யோகநிலை போலிருக்கும்

யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ

யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ

அவனாடிய நர்த்தனங்களை யார் தாள முடியும்? அந்த ஷ்யாமளனோ, அவனது கணவன் ஷ்யாமளனோ இருவராடும் நர்த்தனமும் ஒன்று தானோ? கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் நடுங்க வைப்பதில்! ஆனால் அந்த ஷ்யாமளனின் உண்மைக் காதல் ராதையின் மீது மட்டும் தான்! இந்த ஷ்யாமளனின் நெஞ்சில் குடியிருப்பதும் இந்த மகாலக்ஷ்மி மட்டும் தான்!

கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்

அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ

அவன் பொன்னழகை காண்பதர்க்கும்

போதை முத்தம் பெறுவதற்கும்

கன்னியரே கோபியரே வாரீரோ

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்

மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

பாடலில் கரைந்து கண்களை மூடி கிட்டத்தட்ட உறக்க நிலைக்கே சென்றிருந்தான் ஷ்யாம். அந்தளவு மயக்கம் அவனுக்குள்! அவனது அந்த மயக்கத்தை கண்கூடாக கண்டான் கார்த்திக்.

‘எனக்கு மகாவோட வாய்ஸ் ரொம்ப பிடிக்கும் கார்த்திக்… மெஸ்மரைசிங் வாய்ஸ்… ஒரே ஒரு பாட்டு பாடுன்னு தான் கேட்டேன்… இன்னமும் போக்கு காட்டிட்டு இருக்கா…’ சிரித்தபடி ஒருமுறை அவன் சொன்னதை நினைத்துப் பார்த்தான்.

உண்மைதான் போல… ராட்சசனுக்குள் இவ்வளவு தீவிரமான ரசனையா?

கண்களை திறந்து அவன் பார்க்க, தீபாராதனை தட்டை அவன் முன் ஏந்தியவாறு அவனுக்கு திருநீறு இட்டுக் கொண்டிருந்தாள் மஹா.

மிகவும் புதிதாய் தெரிந்தாள் அவனது கண்களுக்கு!

******

உத்தண்டி வீட்டுக்கு மஹாவை அழைத்து வந்திருந்தான். அன்று முழுவதுமே அவனையே சுற்றிக் கொண்டிருந்தாள். அவ்வப்போது ‘சூயிங் கம் வேணுமா பாவ்வ்வா’ என்று ஹஸ்கி வாய்ஸில் கேட்டு அவனை வம்பிழுத்துக் கொண்டிருந்தாள்.

‘தலைக்கு மேல வேல இருக்குடி’ என்றவன் கூட, அவளை அழைத்துக் கொண்டு சென்றவன் தான். அங்கிருந்தே ஒவ்வொரு வேலையாக பார்த்துக் கொண்டிருந்தான், பேசி மூலமாக மட்டும். ஜோதியும் நாதனும் கிளம்பியிருந்தனர். இத்தனை நாட்களாக உத்தண்டி வீட்டை கிட்டத்தட்ட ஒதுக்கி வைத்திருந்தான். கசப்பெல்லாம் நினைவடுக்கின் ஒரு மூலைக்கு செல்ல துவங்கியிருந்தது.

ஒரு மாதம் பிரியப் போகும் துயரம் இருவருக்குள்ளும் இருந்தது. எப்படி ஒரு மாதத்தை நெட்டித் தள்ள போகிறோம் என்ற பயம் மகாவின் மனதுக்குள் இருந்தது தான் உண்மை. அவனே வேண்டாம் என்று பிரிய எப்படி முடிவெடுத்தோம் என்று அவளுக்கே புரியவில்லை.

பிரிவு நேரப்போகிறது எனும் போது தான், மனம் கிடந்து தவித்தது!

‘போகாதன்னு மட்டும் சொல்லேன் ஷ்யாம்… எனக்கு எதுவுமே வேணா… நான் இப்படியே இங்கயே இருந்துடுவேன்…’ மனதுக்குள் விதவிதமாக புலம்பிக் கொண்டிருந்தாள்.

அவனுக்குள்ளும் அந்த துயர் இருந்தது தான். ஆனால் இந்த இடைவெளி அவசியம் என்பதை உணரத் துவங்கியிருந்தான். நெருப்புக்கு காற்று எப்படியோ, காதலுக்கு பிரிவு!

சிறு நெருப்பை காற்று ஊதி அணைத்து விடும். ஆனால் பெரு நெருப்பை கிளறி விட்டு இன்னும் பெரிதாக்கி விடுமல்லவா!

அவளுடைய காயங்களும் ஆற வேண்டும். தன்னுடைய காயங்களும் ஆற வேண்டும் என்று நினைத்திருந்தான். நினைத்து விட்டானே தவிர, அவனால் ஒரு மாதம் எப்படி அவளை விட்டு இருப்பது என்று சத்தியமாக புரியவில்லை. உடன் இருந்தால் மட்டும் போதும் என்று எண்ணியது மனது!

அவளை அருகில் வைத்துக் கொண்டிருப்பதே பெரிய ஆறுதலாக இருந்தது. ஆனால் அவளை அருகில் வைத்துக் கொண்டு மட்டுமிருப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது தான் உண்மை!

அலைந்து திரிந்து சோர்வாக வரும் நேரத்தில் சரியாக சூடாக காபியுடன் இருப்பவளை இன்னும் மாதத்துக்கு மிஸ் செய்ய வேண்டியிருக்கும். அவசர கால சிகிச்சையின் போது தவிர, வேறெப்போதும் அவள் வீடு திரும்ப தாமதிப்பதில்லை. அவன் வரும் முன்பே வீடு வந்து சேர்ந்து விடுவதை கடந்த மூன்று மாதத்தில் வழக்கமாக்கி இருந்தாள்.

அவன் நாடும் மது வகைகளுக்கு பதிலாக அவளது சூடான பில்டர் காபி இடம்பிடித்துக் கொண்டது!

வீட்டில் மஹா காத்திருப்பாள் என்ற விஷயமே அவனை விரைவாக வேலைகளை முடித்து விட்டு வீட்டை நோக்கி பறக்க செய்திருக்கிறது. இனி ஒரு மாதம் அவளது புன்னகைத்த முகத்தை பார்க்காமல் எப்படி நாட்களை கடத்துவது என்று அவனுக்கு புரியவில்லை.

காலை கிளம்பும் அவசரத்தில் அவளால் சமைக்க முடியாது. மதியமும் ஷ்யாம் வீட்டிலிருந்தால் மகேந்திரன் தான் சமைப்பது. ஆனால் இரவுணவு கண்டிப்பாக மகா மட்டும் தான் செய்வாள். கணவனுக்காக மிக மிக விரும்பி அவள் செய்வதை ஷ்யாம் மிகவும் எதிர்பார்க்க துவங்கி இருந்தான்.

மஹா செய்வதை எல்லாம் ஆசையாக சாப்பிட்டுவிட்டு அவளையே வம்பிழுத்து, கிண்டல் செய்து, அதன் பின் ருசியை ஒப்புக் கொள்வது எப்போதுமேயான வழக்கமாகி இருந்தது, இந்த மூன்று மாதத்தில்!

இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் எப்போதும் இருப்பதுதான். அதை எப்போதுமே களைய முடியாது. ஒருவருக்காக இன்னொருவர் விட்டுக் கொடுத்ததுமில்லை, ஒரு சில விஷயங்களை தவிர! ஆனால் அந்த கருத்துக்களை இருவருமே புரிந்து வைத்திருந்தனர்.

இது பிடிக்கும் பிடிக்காது என்பதை உணர்ந்து இருந்தனர்.

முழுமையாக ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டிருந்த நேரத்தில் தான் திருஷ்டி பொட்டாக நூறாவது நாள் சம்பவம் நடந்தது. ஆனால் அதுவும் கூட ஒருவரையொருவர் இன்னமும் நன்றாக புரிந்து கொள்ளத்தான் உதவியது என்றாலும், அதில் இருவருமே கொண்ட காயங்களும் அதிகம்!

பகல் முழுவதும் ஷாப்பிங் செய்து, மனைவியோடு சேர்ந்து சமைத்து, வம்பிழுத்துக் கொண்டு, பதிலுக்கு பதில் பேசிக் கொண்டிருந்தவனுக்கு மாலை சூழ, மனம் கனமாகிக் கொண்டிருந்தது.

காலை அவள் கிளம்ப வேண்டுமே!

போயஸ் கார்டனிலிருந்து கிளம்பினால் கண்டிப்பாக ட்ராபிக்கில் மாட்டிக் கொள்ள நேரிடும் என்பதால் தான் அன்றே கிளம்பி உத்தண்டி வந்திருந்தான். பிருந்தாவை கார்த்திக் அழைத்துக் கொண்டு வருவதாக திட்டம். பிருந்தாவின் தந்தையும் அதற்கு அனுமதியளித்து இருந்தார்.

மகாவை பொறுத்தவரை சொல்லவே தேவையில்லை. ஒரு மாதம் தான் என்று மனதை சமாதானம் செய்து கொள்ள முடியாத நிலையிலிருந்தாள். மனதில் ஓரத்திலிருந்த குற்ற உணர்வு வேறு நேரமாக நேரமாக விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருந்தது.

ஷ்யாம் கூறியது புரிந்தாலும் அவளால் அந்த உணர்விலிருந்து வெளிவர முடியவில்லை.

கனமான அமைதி சூழ, இருவரும் கைக் கோர்த்து கொண்டு அந்த கடற்கரையில் நடந்து கொண்டிருந்தனர். ஷ்யாம் எப்போதும் போல பெர்முடாஸ் டி ஷர்ட்டில்… மஹா அதே சேலையில்… அவனது முழங்கையோடு சேர்த்து கோர்த்தபடி நடக்க, அலைகள் இருவரது கால்களையும் தீண்டி சென்றது.

காற்று மென்மையாக தழுவி செல்ல… லேசாக குளிரத் துவங்கியது!

சூரியன் விடைபெற்று தனது கூட்டுக்குள் செல்லும் நேரம்… ஆரஞ்சு நிற வானம், கறுத்து கொண்டிருக்க, ஊதற்காற்று உடலை தீண்டி செல்ல, குளிரில் வெடவெடத்தாள் மஹா!

error: Content is protected !!