VNE 64 final (2)

VNE 64 final (2)

“சௌபாக்கியவதி ஸ்ரீபிருந்தாவுக்கும், திருநிறைச்செல்வன் கார்த்திகேயனுக்கும் நிகழும் விளம்பி வருடம் ஐப்பசி மாதம் இருபத்தி மூன்றாம் தேதி கன்யா லக்னத்தில் திருமணம் செய்வதாக பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டு நிச்சயிக்கப் படுகிறது.”

சமூக பெரியவர் லக்ன பத்திரிக்கை வாசிக்க, கார்த்திக் புன்னகைத்தபடி வெட்கத்தோடு நின்ற பிருந்தாவின் கைப்பற்றி மோதிரத்தை அணிவித்தான்.

“ஹேய்ய்ய்ய்ய்…” இளசுகளின் ஆர்ப்பாட்டம்!

பிருந்தா இளநிலை மருத்துவத்தை முடித்த பிறகுதான் திருமணம் என்பதில் பிடிவாதமாக இருந்த கார்த்திக், அதுபோலவே தான் அவள் படித்து முடித்தப் பின் தான் ஒப்புக் கொண்டான்.

நடுவே பல்லைக் கடித்த பிருந்தாவிடம், “ஷ்யாமை பாரு பிருந்தாகுட்டி… அங்கயும் இங்கயுமா அல்லாடுறான்… மஹாவை விட்டுட்டும் இருக்க முடியல… கூடவே வெச்சுக்கவும் முடியல… இந்த நிலைமை நமக்கும் தேவையா சொல்லு?” என்று கோக்குமாக்காக கேட்டு வைக்க, அவள் இன்னமும் பல்லைக் கடித்தாள்.

“நான் வந்தாதான் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் போவேன்னு உங்க தங்கச்சி அடம் பிடிக்கறா… அப்ப என்ன பண்ணுவீங்க ஆஃபீசர்?” என்று கடுப்பாக கேட்க,

“அது எப்படியும் இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு தான்னு ஷ்யாமே முடிவு பண்ணிட்டது உனக்கு தெரியாதா செல்லக் குட்டி?” என்று கார்த்திக் சிரிக்க,

“என்ன சொல்றீங்க?” என்று கண்களை விரித்தாள் பிருந்தா!

“ஆமா… ஆமா… இப்போதைக்கு இங்க டிப்ளமா ஜாயின் பண்ணிக்கறதாம்… டிஜிஓ இல்லைன்னா வேற எதாச்சும்… ரெண்டு வருஷம் கழிச்சு எம்டி எம்பிஏ க்கு அனுப்பிக்கலாமாம்… அப்பவும் உங்க ரெண்டு பேர் கூட அம்மாவையும் அத்தையையும் பேக் பண்ணிருவானாம்… மாசத்துல பாதி நாள் அங்கேயே இருந்துக்குவானாம்… நான் வேணும்னா வந்துக்கறதாம்…” என்று சிரித்தான் கார்த்திக், பெருமையாக!

தங்கைக்காக பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் யோசிக்கும் ஷ்யாமின் மேல் அளவு கடந்த அன்பு, தோழமை அவனுக்கு!

மச்சான்களின் பெருமை பீதாம்பரம் எப்போதுமே அதிகமாகத்தான் இருக்கும் என்பதை பிருந்தா அறிவாள் என்றாலும், உண்மையிலேயே ஷ்யாமின் இந்த பொறுப்பையும் அன்பையும் நினைத்து உவகையில் ஆழ்ந்தாள். இது தெரியாமல் புலம்பிக் கொண்டிருந்த மஹாவை நினைக்கையில் சிரிப்பு வந்தது. கணவனை பிரியவும் முடியாமல், படித்தேயாக வேண்டும் என்ற அவனது பிடிவாதத்தை மீறவும் முடியாமல், தினம் புலம்புவதுதான் வாடிக்கையாக இருந்தது.

“இதையே நீ படிக்கறதால தான் படிக்கறேன்… இல்லைன்னா நான் எதுக்குடி அண்ணி இங்க வர்றேன்?” என்று புலம்பியவள், “இதுல இன்னும் அஞ்சு வருஷம், ஏழு வருஷம்… ம்ஹூம்… நான் வாங்கி வந்த வரம் அப்படி…” என்று விடாமல் புலம்பியிருந்தாள் முந்தைய தினம்!

“விடு மஹா… இப்பதான் படிக்க முடியும்… கிழவியானதுக்கு அப்புறம் உன்ன யாராச்சும் சேர்ப்பாங்களா?” என்று சமாதானம் செய்ய முயன்றாலும்,

“ம்ஹூம்… அவங்களை விட்டுட்டு என்னால அவ்ளோலாம் இருக்க முடியாது பிருந்தா…” என்றவள், அழுதே விட, பிருந்தா அணைத்து ஆறுதல்படுத்தி இருந்தாள்.

“மத்த ப்ரொபஷன் மாதிரி கிடையாது மஹா இந்த டாக்டர் ப்ரொபஷன். ரொம்ப அர்ப்பணிப்பு வேணும்ன்னு உனக்கே தெரியும். நிறைய விஷயத்தை தியாகம் பண்ணித்தான் ஆகணும். அதுவும் நீ வெறும் டாக்டர் இல்ல… சுஷ்ருதாவோட எதிர்கால எம்டி… நிறைய விஷயத்தை தெரிஞ்சுக்கணும். எல்லா பிரச்சனைகளையும் சமாளிக்கற சாமர்த்தியம் இன்னும் நிறைய வரணும். நீ தான் எல்லாத்துக்கும் பொறுப்பு. ஹாஸ்பிடல், காலேஜ் எல்லாமே உன்னோட கண்ட்ரோல்லங்கும் போது இப்படியா படிக்க மாட்டேன்னு புலம்புவ?” என்று ஷ்யாம் வேறு கொட்டு வைத்திருந்தானாம்.

அதை சொல்லி வேறு இன்னும் புலம்பினாள் மஹா. அதையும் ஒருவாறாக சமாளித்து சமாதானம் செய்திருந்தாள் பிருந்தா. அதை நினைத்து தான் சிரித்தாள். ஷ்யாம் இப்படி திட்டமிட்டு இருப்பது தெரிந்தால் கண்டிப்பாக மகிழ்ச்சியில் குதிப்பாள் என்பது திண்ணம்!

“எங்க அண்ணன் எவ்ளோ ப்ளான் பண்றாங்க… நீங்க என்னதான் பண்றீங்க?” என்று கார்த்திக்கை முறைத்தாள்.

“அதான் எனக்கும் சேர்த்து அவனே ப்ளான் பண்றான்ல செல்லம்…” என்று சிரித்தான் கார்த்திக்.

“ப்ச்… என்னங்க இது எப்ப பார்த்தாலும் வீட்டு மாப்பிள்ளைய அவன் இவன்னே சொல்லிட்டு இருக்கீங்க? மரியாதையாவா இருக்கு?” என்று பிருந்தா கடிய,

“வாங்க போங்கன்னு சொன்னா ஷ்யாமே ஓடிடுவான் பிருந்தாகுட்டி…” என்று அதற்கும் கார்த்திக் சிரிக்க,

“ம்ம்ம்ம்…” என்று அவனை முறைத்தவள், “அதுக்காக மத்த எல்லார் கிட்ட பேசும் போதும் அவன் இவன்னே சொல்வீங்களா? இன்னைக்கு இல்லைன்னாலும் என்னைக்காவது மஹாவுக்கு கோபம் வராதா? அவளுக்கு கோபம் வரலைன்னாலும் இதே பழக்கம் தான எல்லா இடத்திலும் வரும்? அது தப்பில்லையா?” கொஞ்சம் தீவிரமான குரலிலேயே பிருந்தா கூற, சற்று சிந்தனை வயப்பட்ட கார்த்திக்,

“ம்ம்ம்… ஆமா பிருந்தா… இதை தான் நினைக்கவே இல்ல… அவனை நல்ல ப்ரெண்டா பார்த்தே பழகிட்டேனா, எனக்கு அப்படியே பழகிடுச்சு… இனிமே மத்தவங்க கிட்டயாவது மரியாதையா சொல்லணும்…” என்று கூற,

“இதுக்குதான் ஒரு ஆல் இன் ஆல் அழகுராணி வேணுங்கறது…” என்று கலாய்த்தா பிருந்தாவின் குறும்பை எண்ணியவாறு தான் அவளுடைய கைப்பிடித்து மோதிரம் போட்டு விட்டான் கார்த்திக்.

“என்ன பட்டர்ஹாஃப்…ரெடியா?” என்று அவள்புறம் குனிந்து கிசுகிசுப்பாக கேட்க, அவள் நிமிர்ந்து பார்க்க முடியாமல் வெட்கத்தில் தலைகுனிந்தவாறே உதட்டை கடித்தபடி நின்றாள்.

“டேய்… இன்னும் பத்து நாள்ல கல்யாணத்தை வெச்சுக்கிட்டு இப்பவே காத கடிக்கிறியே மச்சான்…” அருகில் நின்று கொண்டு ஒவ்வொன்றுக்கும் கார்த்திக்கை வாரிக் கொண்டிருந்தான் ஷ்யாம். அவனுக்கு ஆதரவாக ஒரு தொண்டர் படை வேறு!

“ஹலோ… நீங்க செய்யாததையா எங்க அண்ணன் செஞ்சுட்டாங்க? பாருங்க உங்க தங்கச்சி தான் ஊமை குசும்பி… மத்த நாள்ல அப்படி பேசுவாங்க… இப்ப என்னமா சீன் போடறாங்களாமாம்… வெட்கம்ம்ம்ம்…” ஷ்யாமுக்கு எதிராக நின்று கொண்டு கார்த்திக்கு ஆதரவாக, பெண்கள் கூட்டத்தோடு களமிறங்கி இருந்தாள் மஹா.

“மேடம்ஜி… உங்களுக்கு தான் அந்த ஐட்டத்துக்கு அர்த்தமே தெரியாதே… ஏதோ என் தங்கச்சிக்கு தெரிஞ்சு இருக்கு. கொஞ்சம் கத்துக்கங்க மேடம்ஜி…” என்று வகைதொகையில்லாமல் ஓட்ட, மற்ற இளசுகளுக்கும் உற்சாகம் பீறிட்டது.

அலங்கார பொம்மையாக பவனி வந்து கொண்டிருந்தாள் மஹா. அவளது திருமணத்தின் போது கூட எத்தனையோ குழப்பங்கள், மன வருத்தங்கள். அதில் அழகையும் மீறி பயம் அப்பியிருக்கும் அவளது முகத்தில், வாழ்க்கையை நினைத்து. ஆனால் இப்போது மனம் நிறைந்த இல்லறத்தின் பலனாக அவளது மணிவயிற்றில் சூல் கொண்டிருந்த புது வரவால் குடும்பமே குதூகலத்தில் இருந்தது.

ஷ்யாமை கேட்கவும் வேண்டுமோ?

மனைவியை உள்ளங்கையில் வைத்து தாங்கினான். சொர்க்கம் என்பது இதுதான் என்பதை அவனும் உணர்ந்து அவளுக்கும் உணர்த்திக் கொண்டிருந்தான். அவனோடு சேர்ந்து இரண்டு பக்கமும் அவளை தாங்க, அம்மணி கொஞ்சம் அதிகமாகத்தான் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

அதே சந்தோஷத்தோடு தமையனின் திருமண நிச்சயத்தில் தேவதையாக வலம் வந்து கொண்டிருந்தவளையே தொடர்ந்து கொண்டிருந்தது ஷ்யாமின் பார்வை!

அனைவரின் நண்பர் குழாமும் வந்திருக்க, அதில் ஸ்ரீராம் மட்டும் ஷ்யாமிடம் சற்று தள்ளியே நின்றிருந்தான்.

“டேய்… என்னடா பக்கத்துலையே வர மாட்டேங்கற?” என்று உரிமையாய் அவனது தோளில் கைபோட்டு தன்னோடு இழுத்துக் கொள்ள, அவன் நெளிந்தான்.

“சாரி மாமா… உங்க கிட்ட சாரி கேக்கக் கூட உங்க முன்னாடி வர ரொம்ப சங்கடமா இருந்துது… அதான் வரல…” திக்கித் திணறி கூறிவிட்டாலும்,

“பிரச்சனை எதுவா இருந்தாலும், அதுல ஒரு வாய்ப்பை இருக்கும் ஸ்ரீராம்…” என்று சிரித்த ஷ்யாமை ஆச்சரியமாக பார்த்தான் ஸ்ரீராம்.

“என் மேல உங்களுக்கு கோபமே இல்லையா மாமா?” என்று கேட்க,

“நீ அப்படி பண்ணதால தான, மஹா எந்தளவு என்னை லவ் பண்றான்னு அவளுக்கும் புரிஞ்சுது… அவ இல்லைன்னா நானே இல்லைன்னு எனக்கும் புரிஞ்சுது ஸ்ரீராம். இன்பாக்ட் நான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்…” என்று கூறியவனை உண்மையில் வியந்து பார்த்தான்.

“யு வார் சான்ஸ்லெஸ் மாமா…” என்றவனை, அணைத்துக் கொண்டான்.

“அடுத்த டார்கட் ஸ்ரீராமா? கலக்கு ஜிலேபி கலக்கு…” என்று கிண்டல் செய்துவிட்டுப் போன மனைவியை பார்த்து சிரித்தான் ஷ்யாம்.

“ஏய் பாத்துப் போ…” எப்போதும் போல துள்ளிக் கொண்டிருந்த மனைவியை பார்த்து அவ்வப்போது இப்படி அடக்குவது வாடிக்கையாகி இருந்தது அவனுக்கு!

நிச்சயத்திற்கு வந்திருந்த விஜய் முழுமையாக குணமாகி இருந்தான். பழைய தோற்றப் பொலிவு அவனிடம் வந்திருந்தது. ஷ்யாம் அருகிலேயே இருந்து அவன் சொல்லும் வேலைகளை முன்பை போலவே செய்து கொண்டிருந்தான். நடுவில் நடந்த கசப்புகளை எல்லாம் மறக்க முயற்சித்துக் கொண்டிருந்தான். அதே போலத்தான் ஷ்யாமும்… ஆனால் திரும்ப வேலைக்கு எல்லாம் வரவில்லை. ஆனால் பார்க்கும் போதெல்லாம் அதே பழைய விஜி தான்!

ஷ்யாமும் தான்!

அவனுக்கு எப்போதும், ‘டேய் விஜி’ தான். விஜிக்கு எப்போதுமே ஷ்யாம், ‘பாஸ்’ தான்.

முன்பு சொன்னதை போல தனியாக தொழில் தொடங்கிருந்தான். ஷ்யாமே ஊக்கப்படுத்தினான். ஆனால் எதையும் விட்டுக் கொடுத்துவிட மாட்டான். விஜியும் எதிர்பார்க்க மாட்டான். இந்த பீல்ட் வெகு பழக்கமானது என்பதால் விஜிக்கு சற்று சுளுவாக இருந்தது. ஆனாலும் அத்தனை போட்டிகளையும் சமாளிக்கத்தான் வேண்டியிருந்தது. யாருக்குமே ரோஜா பாதை கிடைப்பதில்லையே! ஷ்யாமாக இருந்தாலுமே, அவனும் கடந்த வந்த பாதை என்பது முட்கள் சூழ்ந்தது தான் என்பதை விஜி உணர்ந்து இருந்தான்.

எப்போதாவது விஜியின் திருமணம் பற்றி வீட்டில் பேச்சு வரும் போதெல்லாம், மஹாவின் முகம் லேசாக நிழலாடும். ஆனால் அடுத்த நிமிடமே மனதை மாற்றிக் கொண்டு விடுவான்.

திருமண நிச்சயத்துக்கு வந்திருந்த விகாஷினி விஜியை திரும்பிப் பார்த்தபடி இருந்தாள். அதை அவ்வப்போது சிறு புன்னகையோடு மஹா கவனித்தும் கொண்டிருந்தாள். அதை விஜி அறியவில்லை.

பார்க்கலாம்… விதி என்ன வைத்திருக்கிறது என்று!

பிருந்தாவுக்கு தாய் இல்லையென்பதால் முழுக்க அந்த ஸ்தானத்தை எடுத்துக் கொண்டது ஜோதி தான். மனமுவந்து அத்தனை சடங்குகளையும் செய்து, தன் பெண்ணாகவே வரித்துக் கொண்டார் அவர். மகள் இல்லாததற்கு பிருந்தாவுக்கு அத்தனையும் செய்து அழகு பார்த்தார். ஜோதியின் ஒவ்வொரு செயலையும் நாதனும் சரி, ஷ்யாமும் சரி ரசித்து பார்த்து ஊக்கமும் படுத்தினர்.

ஷ்யாமுக்கும் மஹாவுக்கும் செய்த அனைத்தையும் பிருந்தாவுக்கும் கார்த்திக்கும் ஒரு குறையும் இல்லாமல் செய்ய வேண்டும் என்பதில் பைரவி வெகு தீர்மானமாக இருந்தார்.

இதில் ரொம்பவும் நெகிழ்ந்து போனது பிருந்தாவின் தந்தை சுப்பிரமணியம் தான்.

பணம் எவ்வளவுதான் இருந்தாலும், சிறு வயதிலேயே தாயை இழந்து விட்ட பிருந்தாவை தனிமையை உணர வைக்காமல் இருந்தது மஹா மட்டும் தான் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அதிலும் பெரும்பாலும் அவர் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டிய கட்டாயங்களின் போதெல்லாம் மஹா தான் பிருந்தாவுடன் நேரங்களை கழித்தது என்பதால் அவள் மேல் மிகுந்த பற்றுண்டு!

பிருந்தா மஹாவுடன் இருக்கிறாள் என்றாலே நிம்மதி பெருமூச்சு விடுபவர், இன்று அந்த மஹாவின் அண்ணனே தன்னுடைய மகளுக்கு மணவாளனாக போகிறான் என்பதில் வெகுவான நிம்மதி அவருக்கு!

அதோடு பைரவி, ஜோதி என்று ஒவ்வொருவரின் மேலும் அவ்வளவு மரியாதை வேறு!

அவர் தான் அவ்வளவு சந்தோஷாமாக அன்று வளைய வந்ததும்!

அதே சந்தோஷத்தோடு அடுத்த பத்தாவது நாளில் பிருந்தாவின் கழுத்தில் பொன் தாலியை அணிவித்தான் கார்த்திக். ஷ்யாம் புன்னகையோடு மஹாவை பார்க்க, அவளும் அவனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது முகத்தில் அத்தனை நிறைவு… அந்த நிறைவை பார்த்த ஷ்யாமின் முகம் விகசித்தது!

கண்ணே கனியே உன்னை கைவிடமாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே!

மாலை சூடிய காலைக் கதிரின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே!

ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம் புனிதமானது…

****

“ஹேய் டார்லிங்ங்ங்ங்…” என்றபடி வீட்டுக்குள் பெரிய புன்னகையோடு உள்ளே நுழைந்தான் ஷ்யாம்.

அவனது குரலை கேட்டு வேகமாக தவழ்ந்து வந்தது குட்டி பூந்தோட்டம், தான்யலக்ஷ்மி, ஷ்யாமின் செல்ல மகள்.

சுருக்கமாக தான்யா.

ஏழு மாதங்கள் மட்டுமேயான அழகி! தந்தையை நோக்கி அத்தனை ஆர்வமாக கைநீட்டிய மகளை வாரி அள்ளியணைத்துக் கொண்டான் ஷ்யாம்!

அவனது குரலுக்கு மஹாவும் ஆர்வமாக திரும்பிப் பார்க்க,

“ஏய் பொண்டாட்டி… நீ எதுக்குடி பார்க்கற? டார்லிங்னா என் செல்லக்குட்டி, பூக்குட்டி, பட்டுக் குட்டி மட்டும் தான்…” என்று முகத்துக்கு நேராக அந்த சின்னக்குட்டியை தூக்கி அதன் வயிற்றில் உதட்டை வைத்து குறுகுறுப்பூட்ட, கிளுகிளுத்து பொக்கை வாய் திறந்து சத்தமாக சிரித்தாள், அவன் மகள்!

“உன் டார்லிங்க நீயே வெச்சுக்க… இனிமே ரெண்டு பேருமே என் கிட்ட வராதீங்க…” என்று புன்னகையோடு கூறிவிட்டு மகளுக்கு இரவுணவு தயார் செய்ய போனாள் மஹா.

“டேய் பூனைக்குட்டி… நமக்கு அந்த டர்ட்டி அம்மா வேணா… அப்பா மட்டும் போதும் தான…” என்று அந்த பெரிய மனுஷியிடம் கேட்க, அது என்ன புரிந்ததோ சத்தமாக சிரித்தது. அவளுக்கு தந்தையை கண்டால் மட்டும் போதும், குஷியாகி விடுவாள். தந்தையின் பின்னேயே சுற்றிக் கொண்டிருக்கும். அவன் ஏதாவது வேலையாக இருந்து தூக்கவில்லை என்றால் கண்டிப்பாக கத்தி ஆர்ப்பாட்டம் செய்து விடும்.

அவனது முகத்தை சப்பி வைத்து, கன்னத்தை கடித்து வைத்து, வாயில் கைவிட்டு உலப்பி விளையாண்டு என்று அத்தனையும் செய்து முடித்தாலும் தந்தையிடமிருந்து கீழே இறங்க மனம் வராது அந்த மகாராணிக்கு!

“ஏய் உன்னை வேணான்னு என் மக சொல்லிட்டா…” என்று அதற்கும் அவனது மனைவியையே அழைத்தான்.

“உன் மக வேறென்ன சொல்லுவா? உன்னை மாதிரிதான இருப்பா…” கேழ்வரகு கஞ்சியை கிண்டியபடியே வேண்டுமென்றே கணவனை சீண்டினாள் மஹா. இரவுணவின் போது மகேந்திரன் அருகில் வருவதில்லை. அது தங்களது குடும்பத்துக்கான நேரம் என்பதில் மஹா தெளிவாக இருந்தாள். சிரமமாக இருந்தாலும் அவள் மட்டும் தான் சமைப்பாள். குழந்தை பிறப்பதற்கு நான்கைந்து மாதங்கள் முன்பிருந்தே ஜோதியும் உடன் சேர்ந்து கொண்டார்.

“ஆமா… அவளுக்கும் போரடிக்காதா?” மகளின் மூக்கோடு மூக்கை உரசி விளையாடியபடியே மஹாவுக்கு பதில் கொடுத்தவனை பார்த்து தலையிலடித்துக் கொண்டார் ஜோதி.

 

error: Content is protected !!