VNE37(1)

VNE37(1)

37

மெளனமாக கடற்கரை மணலில் கால் புதைய நடந்து கொண்டிருந்தாள் மஹா. உடன் ஷ்யாம்!

உத்தண்டி வீட்டுக்கு பின்னாலிருந்த கடற்கரையை தான் அவள் தஞ்சமடைந்து இருந்தாள். மனதுக்குள் சொல்ல முடியாத பயம்… ஏதோவொரு அச்சம். என்னவென்று அவளுக்கு சொல்ல தெரியவில்லை. மனதை கவ்வியது.

சௌஜன்யாவின் கண்களை பார்த்தது முதல் மகாவின் மனதுக்குள் அந்த அச்சம் பரவியிருந்தது.

அதை என்ன வகையான பார்வை என்று வகைப்படுத்த முடியவில்லை. அவனது பார்வையில் அத்தனை கடுமை.

மஹா வெகு தைரியமான பெண் தான், மிகுந்த தெளிவும் கூட. ஆனால் ஷ்யாம் அவளை பலவீனப்படுத்தி இருந்தான். அவனது காதலால் அவளை பலவீனப்படுத்தி இருந்தான்.

அவனால் ஏற்பட்ட குழப்பம், அவளை தெளிவாக சிந்திக்க விடவில்லை. இவளெல்லாம் இப்படி குழம்பும் ஆளே கிடையாதே… எஸ் ஆர் நோ… அதற்கும் மேல் பேச்சுவார்த்தை இல்லை என்று போய்விடுபவள்.

அவளே இப்படி குழம்பியிருந்தாள் என்றால் அதற்கு ஒரே காரணம், அவன் மட்டுமே.

விருது வழங்கும் நிகழ்ச்சியில் எல்லாமே சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. சினிமா பாடல்களுக்கு தாளிமிட்டு ரசித்துக் கொண்டிருந்தான். அவளை தாண்டி கார்த்திக்கிடம் ஒவ்வொன்றுக்கும் கமென்ட் அடித்துக் கொண்டு அப்படியொரு மனநிலையில் அந்த சூழ்நிலையை அனுபவித்துக் கொண்டிருந்தான்.

அதிலும் எவன்டோய் நானிகாரு என்ற தெலுங்கு பாடலுக்கு  யாரோ நடனமாட, அதை புன்னகையோடு தாளமிட்டு ரசித்தான். என்ன இருந்தாலும் தாய்மொழியில் ரசிப்பது என்பது தனிதான் இல்லையா?!

அனைத்தையும் தாண்டி மகாவோடு பரிமாறிக் கொண்ட முத்தம், அவனை சந்தோஷத்தின் உச்சியில் நிறுத்தியிருந்தது. வெளிப்படையாக காட்டிக் கொள்ளவில்லை என்றாலும், அவனது விகசிப்பு அதை காட்டிக் கொடுத்தது.

சிறந்த திரைப்படத்துக்கான விருதை அறிவித்து, அந்த விருதை தருவதற்கு ஷ்யாமை அழைக்க, திரும்பி மகாவையும் கார்த்திக்கையும் பார்த்து புன்னகைத்தவன், மேடையை நோக்கி போனான்.

மகாவின் முகத்தில் பெருமிதம்… அதே பிரகாசத்தோடு கார்த்திக்கையும் பார்க்க, அவனது முகத்தில் சந்தோஷம் தாண்டவமாடியது.

“இன்னைக்கு அந்த மதியையும் ப்ரானேஷையும் ஆட்டி வெச்சாரு பாரு லட்டு… அதையெல்லாம் நீ பார்க்கலை… ரெண்டு பேரும் அப்படி பம்மிட்டு போறாங்க…” தங்கையிடம் ஷ்யாமை பற்றி பெருமையாக கூற,

“கட்டபஞ்சாயத்து பேசறதெல்லாம் ஒரு பெருமையா ப்ரோ?” என்று மகா சிரித்தாலும், அவளது பார்வை மொத்தமும் மேடையில் இருந்த ஷ்யாமின் மேலேயே இருந்தது. வெகு ஆடம்பரமான மேடை. பிரபல தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள் இருவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தனர்.

அவனது மரியாதையின் அளவை அப்போதுதான் பார்த்தாள். தன்னிடம் குழைந்து கொண்டு நிற்பவனா இவன் என்ற சந்தேகம் வந்தது.

அத்தனை கம்பீரம்… அத்தனை வசீகரம்…

“நான் பேசினா மதிப்பாங்களா லட்டு? அதுக்குன்னு ஒரு கெத்து வேணும்டி… ஷ்யாம் மச்சான் செம போ…” என்று மனம் விட்டு கூற,

“யாரோ போலீஸ் கம்ப்லைன்ட் கொடுப்பேன்னு குதிச்சாங்கய்யா…” என்று இவள் சிரிக்க,

“அது போன மாசம்…” கிண்டலாக அவன் கூற,

“அப்ப இது…?” விளையாட்டாக கேட்டாள் மஹா.

“இந்த மாசம்…”

“வெளங்கும் …” என்று சிரிக்க,

“நிஜமா லட்டு… அந்த விஜியை ஒரு வழி பண்ணிட்டாங்க.. எனக்கே அதை பார்க்கும் போது கொஞ்சம் கஷ்டமா இருந்துது…” என்று வார்த்தையை விட, என்னவென்று அவனது முகத்தை பார்த்தாள்.

“ஏன்டா? அந்த விஜிக்கு என்ன?”

“மச்சான் கிட்ட நிறைய பணத்தை கையாடிட்டான் போல இருக்கு லட்டு… ரொம்ப பெரிய தொகை… ஆளுங்களை விட்டு வெளுத்துட்டாறு…” என்று சற்று இறங்கிய சுருதியில் கூறவும்,

“ஓஓ…” என்றவளுக்கு பாகற்காயை உண்டது போல தொண்டைக்குள் கசப்பு இறங்கியது. அடிப்பதெல்லாம் என்ன பழக்கம்?

“அடிச்ச பணத்துக்கு ஈடா சொத்தை எழுதி கொடுன்னுட்டார் லட்டு…” என்றவனை, அதிர்ந்து திரும்பிப் பார்த்தாள்.

“என்னண்ணா சொல்ற?”

“ம்ம்ம்… பின்ன? சும்மா விடுவாங்களா? பணத்தை விடு… இது பச்சை துரோகம் இல்லையா?”

“ம்ம்ம்…” என்றாள். ஆனாலும் மனம் பிசைந்தது. ஷ்யாமை விட்டு தரவும் முடியவில்லை. அவன் செய்வதை சரியென்று ஒப்புக்கொள்ளவும் முடியவில்லை. அவன் ஏமாற்றினாலும் சட்டம் இருக்கிறது, போலீஸ் இருக்கிறது, கோர்ட் இருக்கிறதே!

‘உன்னுடைய விஷயத்தில் எந்த போலீஸ் வந்தது?’ என்ற மனசாட்சியின் கேள்விக்கு அவளால் பதில் கூற முடியவில்லை.

கார்த்திக்கிடமிருந்து திரும்பி, மேடையை பார்த்தாள். அவனுக்கு பின்னாலிருந்த ஸ்க்ரீனில், ஷ்யாம் மிகப் பெரிதாக தெரிந்தான். அவனை காட்டும் போதே, அவனைத் தொடர்ந்து வரிசையில் அமர்ந்திருந்த சௌஜன்யாவை காட்டினார்கள்.

செய்து வைத்த மெழுகுப் பாவையாக அமர்ந்திருந்தாள். அத்தனை அழகு. ஆளை அடித்து வீழ்த்தும் அழகு. தொட்டால் குழைந்து விடும் தேகம். வெகு கவர்ச்சியான உடை. கழுத்துப் பகுதியில் அபாயகரமாக இறங்கியிருந்தது. அழுத்தமான லிப்ஸ்டிக். எடுப்பான அங்க அவயங்கள், என்னை பார் என்று கூறியது. இவர்களது வரிசையில் தான் அமர்ந்திருந்தாள். ஷ்யாமை அமர்ந்திருந்த இருக்கையை அடுத்து இரண்டு இருக்கைகள் தள்ளி அமர்ந்திருந்தாள். கேமராக்கள் அவளையே அதிகமாக வளைத்துக் கொண்டிருந்தன.

அவளும் வெட்கமாக சிரித்தாள்… பறக்கும் முத்தங்களை கொடுத்தாள்… என்னவெல்லாமோ சேஷ்டைகள் செய்து கொண்டிருந்தாள். வாயில் சூயிங் கம் வேறு. மென்று கொண்டிருந்தவளை கேமரா விடாமல் படமெடுத்துக் கொண்டிருந்தது.

“பெஸ்ட் ஃபியுச்ச்சர் ஃபிலிம் ஆஃப் திஸ் இயர் கோஸ் டூ…” என்ற ஷ்யாம், கையிலிருந்த சிறு உறையை திறந்தான். பெயரைக் கூறவும், அதுவும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்ற படமாகையால் ஆராவாரம் அதிகமாக இருந்தது.

தயாரிப்பாளர் வராதபடியால், அந்த படத்தில் நடித்த சௌஜன்யா மிகுந்த ஆரவாரத்துக்கிடையில் மேடையேறினாள்.

ஷ்யாமை பார்த்து வெட்கப் புன்னகை வேறு… அவனுக்கு வெகு அருகில் போனவள், மரியாதைக்காக அவனைக் கட்டி அணைக்க, ஷ்யாமும் சிறு அணைப்போடு விலக எண்ண, சௌஜன்யா அவனை விடாமல் வலது கையால் இடையோடு வளைத்தாள்.

“ஹவ் ஆர் யூ ஷ்யாம் சர்?” சிரித்தபடி கேட்டவளுக்கு,

“இயாஹ் ஃபைன்…” என்று அவனும் புன்னகையோடு கூற,

“வாட் அபௌட் ஹாவிங் எ டேட்? அப்புறம் கால் பண்ணவே இல்ல…” என்று கேட்க, ‘கால் செய்வதாக கூறியிருந்தோமா?’ என்று அவனுக்கு சந்தேகம் வந்தது.

“அப்படி சொன்னேனா?” என்று புன்னகை மாறாமல் கேட்டுவிட, அது மேடை என்பதை கஷ்டப்பட்டு நினைவில் கொண்டாள் சௌஜன்யா.

“எஸ்…” என்றவளின் குரல் தொண்டையில் சிக்கிக் கொள்ளும் போல இருந்தது.

“சாரி மா… எனக்கு ஞாபகம் இல்ல…” என்றுக் கூறிக் கொண்டிருக்கும் போதே விருதை எடுத்துக் கொண்டு அந்த அழகுப் பெண் அருகில் வந்துவிட, பேச்சு அதோடு தடைப்பட்டது.

நிகழ்ந்த பேச்சு அத்தனையும் கிசுகிசுப்பாகத் தான். ஆனால் பார்பவர்களுக்கு இருவரும் நெருக்கமாக பேசுவதாக தோன்றும். ஏற்கனவே இருவரைப் பற்றியும் புரளிகள் கிளப்பி விடப்பட்டுக் கொண்டிருந்த இந்த நேரத்தில் இது தேவையா என்று தோன்றியது ஷ்யாமுக்கு!

விருதை கொடுத்து முடித்தவுடன், சௌஜன்யா நன்றி கூறிவிட்டு, நகர்ந்து நிற்க, நிகழ்ச்சி தொகுப்பாளர், ஷ்யாமை நோக்கி திரும்பினான்.

“ஷ்யாம் சர்… உங்களுக்கு ஒரு கேள்வி…” எனவும், மைக்கை பிடித்து, “கேளுங்க ப்ரோ…” என்றான் ஷ்யாம், ஒட்டி வைத்த புன்னகை மாறாமல்!

அந்த தொகுப்பாளர் குறும்பாக சௌஜன்யாவை பார்த்து புன்னகைத்தபடி, “நீங்க நடிக்க வந்தா உங்களுக்கு யாரை ஹீரோயினா சூஸ் பண்ணுவீங்க?” என்று கேட்க,

அதற்கு புன்னகைத்தவன், “ஹைப்போதெட்டிகல் க்வெஷின்…” என்று சிரிக்க,

“சர்… சும்மா சொல்லுங்க…” என்று ஊக்கினான்.

“நாம வேலைய நம்ம செய்யணும்… அதுக்கெல்லாம் வேற லெவல்ல கிரேட் ஆக்டர்ஸ் இருக்காங்க…” என்று நழுவ,

“சர்… அவங்களுக்கு எல்லாத்துக்கும் மேல நீங்க ஹேண்ட்சம்… ஷ்யாம் சர் ஒரு வார்த்தை சொன்னா, எல்லா ஹீரோயினும் வரிசைல நிற்க மாட்டாங்களா? ஏன் சௌஜன்யா மேடம்… உங்களுக்கு ஓகே தானே?” என்று அவளிடமும் வம்பிழுக்க, அவள், சிரித்தபடி, “சர் சொன்னா டபுள் ஓகே…” என்றாள்.

“பாருங்க… நீங்க ஒரு வார்த்தை சொல்லுங்க…”

“நடிக்க ஹேண்ட்சம்மா இருந்தா மட்டும் போதாது ப்ரோ… டேலன்ட் வேணும்…”

“அதெல்லாம் நம்ம டைரக்டர்ஸ் பார்த்துக்குவாங்க… நீங்க ஒரு வார்த்தை மட்டும் சொல்லுங்க…” என்று விடாமல் அவன் கேட்க,

“ம்ம்ம்… அதை என்னோட ஹீரோயின் கிட்ட தான் கேக்கணும் ப்ரோ… கேட்டா கல்யாணம் பண்ணாமையே என்னை அவங்க டைவர்ஸ் பண்ணிடுவாங்க…” என்று புன்னகையோடு மகாவை பார்த்தபடியே கூற, செக்கர் சிவந்த வானமாகியது அவளது வதனம்!

வெட்கத்தோடு இதழ்களை கடித்தபடி, ஒற்றை விரலை காட்டி மிரட்ட, “ஓஓஓஹோஓஓ…” என்று சிரித்தான் அந்த தொகுப்பாளன்.

அனைத்தும் கேமராவில் சுருண்டு, ஷ்யாமுக்கு பின்னால் இருந்த திரையில் உடனடியாக ஒளிபரப்பப்பட, மஹா சங்கடமாக நெளிந்தாள்.

அருகில் நின்று கொண்டிருந்த சௌஜன்யாவின் முகம் கறுத்து பின் மீண்டது!

அங்கிருந்த நடிகைகளில் நிறைய பேருக்கு சுருக்கென்று இருந்தாலும், யாரும் அவனோடு இமோஷனல் பாண்டிங் ஆனது கிடையாது. அதனால் யாருக்கும் வலி என்ற உணர்வெல்லாம் இல்லை. சௌஜன்யாவுடனும் அவனுக்கு இமோஷனல் பாண்டிங் கிடையாது… அவளாக வளர்த்துக் கொண்டது அந்த உணர்வு.

“வாழ்த்துகள் ஷ்யாம் சர்… சீக்கிரமா கல்யாண சாப்பாடு உண்டுன்னு சொல்லுங்க…”

புன்னகையோடு கீழே இறங்கி அருகில் வந்தமர்ந்தவனை பார்த்து முறைத்தாள். அத்தனை பேரின் முன்பும் எப்படி இவ்வளவு தைரியமாக அறிவித்து இருக்கிறான்? பெரியவர்களின் சம்மதம் வேண்டாமா? முதலில் தான் ஒப்புக் கொள்ள வேண்டாமா? இருக்கும் குழப்பத்தில் இது வேறா?

முறைத்தவள் எதுவும் பேசாமல் அமர்ந்திருக்க, அவளை தாண்டி அமர்ந்திருந்த கார்த்திக்கை பார்த்து கண் சிமிட்டினான். பதிலுக்கு அவனும் கண்ணை சிமிட்ட,

“ஹால் ரொம்ப சூடா இருக்கே மாப்ள…” என்று வேண்டுமென்றே வம்பிழுக்க,

“அடி கன்பார்ம் மச்சான்…” சிரித்த கார்த்திக், “ஆனா ரெண்டு பக்க பேரன்ட்ஸ் கிட்ட சொல்லிட்டு இந்த வேலைய பண்ணிருக்கலாம்…” என்று யோசனை தெரிவிக்க,

“ம்ம்ம்… ஆமா…” என்று இடைவெளி விட்டவன், “ஆனா என்னோட பியான்சே மகா தான்… அவளை பத்தி யாரும் நினைக்கக் கூட கூடாதுன்னு எப்படி கன்வே பண்றது? இப்படித்தான் பண்ண முடியும் கார்த்திக்… எனக்கு இப்போதைக்கு வேற எந்த இண்டென்ஷனும் இல்ல… பேசறாங்களா, என் பொண்டாட்டியா பேசட்டும்… வேற மாதிரி வேண்டாம்…” மிகவும் தீவிரமான குரலில் கூற, கார்த்திக் புன்னகைத்துக் கொண்டான்.

விழா முடிந்தவுடன் கிளம்ப, ஒவ்வொருவரும் வாழ்த்து தெரிவிக்க, ஷ்யாம் புன்னகை மாறாமல் ஒவ்வொருவரிடமும் பேசினான். கூடவே கார்த்திக்கை வைத்துக் கொண்டான். இவன் தன்னுடைய மச்சான் என்று ஒவ்வொருவருக்கும் தெரியப்படுத்தினான். கார்த்திக்கை அறியாதவர்கள் கூட, ஷ்யாமின் மச்சான் என்ற மரியாதையை வெகுவாக கொடுத்தனர்.

அப்போது அந்த தயாரிப்பாளர் வந்தார். விநாயக மூர்த்தி. பணத்துக்காக கார்த்திக் போராடிக் கொண்டிருந்த போது ஆரம்பத்தில் உடனிருந்தவர். அதன் பின் ஷ்யாமின் தலையீட்டால் சற்று ஒதுங்கி கொண்டார்.

“என்ன கார்த்தி?! புடிச்சாலும் புடிச்ச புளியங்கொம்பா புடிச்சுட்ட போல இருக்கே… அதுவும் தங்கச்சியை வெச்சே புடிச்சுட்ட போல இருக்கே…” என்று கிண்டலாக கூற, கார்த்திக்கு கோபம் சுர்ரென்று ஏறியது.

ஷ்யாம் வேறு யாரிடமோ பேசிக்கொண்டிருந்தான். மஹா அவனுடன் நின்று கொண்டிருந்தாள். இதே வார்த்தையை அவனை வைத்துக் கொண்டு இவரால் கூற முடியாது. இவர்களை போன்றவர்களுக்கு சாப்ட் டார்கெட் என்று யாராவது தேவை… தங்களது இது போன்ற சில்மிஷ பேச்சுகளுக்கு. திரும்பி கிடைத்து விடும் என்றோ, இது மாதிரி பேசினால் நிச்சயம் தொலைந்தோம் என்றோ தெரியும் இடங்களில் கண்டிப்பாக பேசிவிட மாட்டார்கள். பெருந்தன்மையாக போவார்கள் என்றோ, திரும்ப பேச மாட்டார்கள் என்றோ தெரியும் இடங்கள் மட்டுமே இவர்களது டார்கெட், சாப்ட் டார்கெட். ஆக இவர்களை போன்றவர்களுக்கு பெருந்தன்மை தவறு… யாரும் நெருங்க முடியாது என்ற பிம்பம் நல்லது…

“ரெண்டு பேரும் லவ் பண்ணாங்க… அவ்வளவுதான் சர்…” கார்த்திக்கு வேறு பேச பிடிக்கவில்லை. ப்ளைனாக கூறிவிட்டு நகர முயன்றான்.

“ஹைதராபாத் ஷ்யாம் லவ் பண்றாப்லன்னா அது பெரிய விஷயம் கார்த்தி… ஆனா உனக்கு பெரிய மனசு… அத்தனையும் தெரிஞ்சும் உன் தங்கச்சியை அவரோட பழக விடற பாரு… அதுக்கே தனி கட்ஸ் வேணும்… சீக்கிரமா கல்யாணத்தை முடிச்சுடு… எப்ப வேண்ணாலும் மாறிக்கிவாப்ள… கல்யாணம் ஆகிட்டா ஒரு சேப்டி…” என்று இலவச அறிவுரை கொடுத்து விட்டு போக, பல்லைக் கடித்தான்.

“உங்க அட்வைஸ்க்கு ரொம்ப நன்றிங்க…” என்று நகர்ந்து விட்டான்.

கண்டிப்பாக இது போல இன்னும் நிறைய சந்திக்க வேண்டியிருக்கும் என்று கார்த்திக்கு புரிந்தது. ஒரு சிலர் அக்கறையில், ஒரு சிலர் எரிச்சலில், ஒரு சிலர் பொறாமையில் என்று கண்டிப்பாக வார்த்தைகளின் வீச்சு இருக்கும்.

இதை தான் சமாளித்து விட முடியும். ஆனால் மஹா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!