VNE39(1)

VNE39(1)

39
தலையைப் பிடித்தபடி அமர்ந்திருந்தாள் மஹா. அவளது உடலில் இன்னமும் நடுக்கம் மீதமிருந்தது. விடாமல் துரத்திய அந்த லாரிகளிடமிருந்து அத்தனை லாவகமாக தப்பியிருந்தான் ஷ்யாம்.
“சீட் பெல்ட் போடு மஹா…” என்றவன், அடுத்து ஒன்று… இரண்டு… மூன்று… நான்கு… என்பதற்குள் ஆக்சிலேட்டரை அழுத்திய வேகத்தில் இவளுக்கு நெஞ்சு பதறியது.
அவசரமாக சீட் பெல்ட்டை அணிந்தாள்.
வாய்ப்பு கிடைத்தால் மோதி காரை கவிழ்த்து விடும் ஆத்திரம் அந்த லாரிகளுக்கு.
யார் எவர் என்பதையெல்லாம் இப்போது ஆராய முடியாது. இந்த நேரம் வெகு முக்கியமானது. கோல்டன் ஹவர் என்பது போல… ஒரு நொடி தவறினாலும், முற்றிலுமாக முடிந்து விட வாய்ப்பு அதிகம். ஆனால் பதட்டமடையவும் முடியாது. நம்முடைய பதட்டம் எதிராளிக்கு கொண்டாட்டம். அந்த வாய்ப்பை கொடுக்க கூடாது என்று முடிவு செய்து கொண்டவன், மூச்சை ஆழமாக இழுத்து விட்டுக் கொண்டான்.
தான் மட்டும் இருந்தால், அவனை பொறுத்தவரை கவலையே இல்லை. எப்படி வேண்டுமானாலும் சமாளித்து விட முடியும். ஆனால் மஹா உடனிருப்பது தான் அவனுக்கு உண்மையில் உள்ளுக்குள் பதட்டமாக இருந்தது.
அவளிடம் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் அவளுக்கு சிறு கீறல் கூட ஏற்பட்டு விட கூடாது என்பதில் வெகு தீவிரமாக இருந்தான்.
“ஷ்யாம்… கொஞ்சம் பார்த்து போ…” வாகனங்களை ஒதுக்கி விட்டு அவன் ஓட்டிய வேகத்தை பார்த்து உண்மையில் கலங்கியது. ஆனால் அவனது வேகத்துக்கு இணையாக அருகில் வந்தது இன்னும் இரண்டு பென்ஸ் ஈ கிளாஸ்.
அத்தனை வேகம்… அத்தனை வஞ்சம்…
சென்னை சாலைகளில் கார் ரேஸ் விடுவதை அவ்வப்போது பார்த்து இருக்கிறாள் மஹா. அடையாரில் இருந்து ஒரே ஸ்ட்ரெச். கார்கள், அதிலும் விலையுயர்ந்த கார்கள் சீறிப் பாய்வதை பார்த்து பயந்து இருக்கிறாள்.
அதிலும் ட்ராபிக் அதிகம் இருக்கும் சமயத்தில் கூட அவர்களை போன்றவர்கள் அடங்குவதில்லை. திடீரென்று நடுவில் சிக்கும் அப்பாவிகளை பார்க்கும் போது மனம் பதைக்கும். திருந்தாத ஜென்மங்கள்!
ஒரே நிமிடத்தில் என்ன வேண்டுமானாலும் ஆகக் கூடிய வாய்ப்பு இருக்கும் அந்த ரேசாகட்டும், பைக் ரேஸ் என்ற பெயரில் கடற்கரை சாலைகளிலும், கத்திப்பாரா சந்திப்புகளிலும் கண் மண் தெரியாமல் ஓட்டுவதை பார்த்து கண்கள் கட்டிப் போய் இருந்திருக்கிறது.
இப்போது அதை காட்டிலும் அதிக வேகத்தில் ஷ்யாம்!
அவ்வளவு வேகம்… கண்மண் தெரியாமல்… ஒரு நொடி எங்காவது டைமிங் மிஸ் ஆகிவிட்டால் கூட வாகனம் பறந்து விடும் என்பது போன்ற வேகம்…
அத்தனை வண்டிகளையும் ஒதுக்கி விட்டு துரத்திய அந்த கார்களிடமிருந்து தப்பித்து வீடு வந்து சேர்வதற்குள் அத்தனை க்ளோஸ் கால்ஸ். அதாவது மயிரிழையில் உயிர் தப்பும் அனுபவம்.
ஒரு நொடிகளின் ரகசியம் புரிந்தது!
அத்தனை வேகமாக வந்து ‘க்க்க்க்கிரீச்சென்று’ பெசன்ட் நகரில் அவளது வீட்டில் நிறுத்தியதை கூட உணராமல் தலையைப் பிடித்துக் கொண்டு, கண்களை இறுக்கமாக மூடியவாறு, “காக்க காக்க… கனகவேல் காக்க… நோக்க நோக்க நொடியில் நோக்க…” என்று தன்னையும் அறியாமல் கூறிக் கொண்டிருந்தவளின் தோளைப் பற்றினான்.
விலுக்கென்று தூக்கி வாரிப் போட்டது அவளுக்கு. கண்கள் சிவந்திருந்தது.
“வீட்டுக்கு வந்தாச்சு மஹா…” என்று கூற, அவள் அதை காதில் வாங்காமல் அவனையே பார்த்திருந்தாள்.
எதுவும் பேசவும் இல்லை. கைகள் மட்டும் இன்னமும் நடுங்கிக் கொண்டிருந்தது.
இது போல அவள் இதுவரை கனவில் கூட கண்டதில்லை.
வீடியோ கேமில் கார் ரேஸ், டெம்பிள் ரன்  என்றால் கூட அதை விளையாட மாட்டாள். ‘நம்மளால அந்த டென்ஷன் தாங்க முடியாதுப்பா…’ என்று கூறிவிட்டு, பார்பி ட்ரசிங் கேம் விளையாடுபவள் இவள்.
இப்போது அந்த ரேசை லைவாக நிகழ்த்தி காட்டிய காதலனை என்ன செய்வது?
நடுங்கிக் கொண்டிருந்த உடலை, கால்களை அழுத்தி கீழ வைத்து கட்டுக்குள் கொண்டு வர முயன்றாள். முடியவில்லை. கண்களும் கலங்கிவிடும் போல இருந்தது.
“என்னடா?” ஆதரவாக கேட்டவனை அணைத்துக் கொள்ள மனம் பரபரத்தது. ஆனால் கை கால்கள் அவளது மூளையின் பேச்சை கேட்கவில்லை. துளி கூட அசையவில்லை. உறைந்து போயிருந்தது!
நடுங்கிக் கொண்டிருந்த அவளது கைகளை பற்றிக் கொண்டான். அவனது இயல்பு மாறவே இல்லை. இவையெல்லாம் வெகு சாதாரணம் போல அவனது செய்கை இருக்க, அவளுக்கு தான் மயிரிழையில் உயிர் மீண்டு வந்திருந்தது.
எதுவும் கூறாமல் தலையை மட்டும் இடம் வலமாக ஆட்டியவள், மெல்ல அவனிடமிருந்து கைகளை உருவிக் கொண்டு கார் கதவைத் திறந்தாள்.
கார் வந்து நின்ற சப்தம் வீட்டினுள் இருந்தவர்களுக்கு கேட்டது. அதிலும் பைரவியும் கார்த்திக்கும் உறங்காமல் வெளி ஹாலில் தான் காத்துக் கொண்டிருந்தனர், கதவை ஒருக்களித்து திறந்து வைத்துக் கொண்டு.
கேட்டை திறந்து கொண்டு மஹா போக, அவளை பின்தொடர்ந்த ஷ்யாமை சிவச்சந்திரன் அழைத்தான்.
“பாஸ்… உங்க கோஆர்டினேட்ஸ் இப்ப பெசன்ட் நகர் காட்டுது… ஆர் யூ சேஃப்?” வெகு பதட்டமாக ஒலித்தது அவனது குரல். ஈசிஆரில் துவங்கியது அவனது பதட்டம். இன்னுமே அது குறையவில்லை. ஆனால் இது போல நிறைய தடவைகள் நடந்திருப்பதால் சந்திரனுக்கு உள்ளுக்குள் ஏதோவொரு தைரியம் இருந்தது.
“எஸ் சந்த்ரா… வீ ஆர் சேஃப்… ஆனா யாரோட வேலை இது? ஏதாவது தெரிஞ்சுதா?” என்று கேட்டவனின் குரலில் அத்தனை கோபம். கொதித்துக் கொண்டிருந்தான். ஆனால் அதை வெளிப்படையாக காட்டிக் கொள்ள முடியாது. மஹா இன்னமுமே பயந்து விடுவாள்.
‘க்க்க்க்க்ரீச்’ சென்ற சப்தத்தை கேட்டு அவசரமாக வெளியே வந்தனர் பைரவியும் கார்த்திக்கும்.
வெளிறிய முகத்தோடு வந்து கொண்டிருந்த தங்கையையும், அவளுக்கு பின்னால் வந்த ஷ்யாமையும் பார்த்தவர்களுக்கு எதுவோ சரியில்லை என்று தோன்றியது. அதற்கு தகுந்தார் போல, சிட் அவுட்டிலிருந்த சேரிலேயே சரிந்து அமர்ந்தாள் மஹா.
உடல் வெடவெடவென நடுங்கிக் கொண்டிருக்க, பைரவி பதறினார்.
இவ்வளவு நேரமாகியும் வீட்டிற்கு வராமல் இருந்த மகளை அதுவரை கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தவர், அவள் வந்த நிலையைப் பார்த்து பதறி விட்டார்.
“மஹா… என்னடி ஆச்சு?” என்று கேட்க, அதற்கும் அவளால் பதில் கூற முடியவில்லை.
ஷ்யாம், சற்று தள்ளி நின்றவாறு சந்த்ரனிடம் பேசிக் கொண்டிருந்தான்.
“நம்ம விஜி சர் தான் பாஸ்…” என்று சற்று தயங்கிக் கொண்டே கூறினான் சிவச்சந்திரன்.
“ஆர் யூ சியூர்?” உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது ஷ்யாமுக்கு.
“எஸ் பாஸ்…” என்றவன், “இன்னைக்கு மதியம் வரைக்கும் அவரோட பழைய நம்பர் கூட இன்னொரு புது நம்பரும் அவரோட பிளேஸ்ல இருந்து ஆக்டிவேட் ஆச்சு… ரெண்டையும் ட்ராக் பண்ணிட்டு தான் இருந்தோம்… கன்பர்ம் பண்ணிட்டு உங்ககிட்ட சொல்லலாம்ன்னு இருந்தேன்…”
“ம்ம்ம்ம்…”
“நைட் ஒரு ஒன்பதரை மணி இருக்கும்… அந்த நம்பர்ல இருந்து ஒரு அனானிமஸ் நம்பருக்கு கால் போச்சு… அதுல உங்க காரை அடிச்சு தூக்க சொல்லிட்டு இருந்தார் விஜி… ரெண்டு காலோட கோஆர்டினேட்ஸ் செக் பண்ணி… ஆத்தன்டிசிட்டி செக் பண்ணிட்டு தான் உங்க கிட்ட சொல்லனும்ன்னு இருந்தேன்… கால் பண்ணா நீங்க பிக் பண்ணவே இல்ல பாஸ்…” என்று முடிக்க, நெற்றியை சுரண்டினான்.
மகாவோடு பேசிக்கொண்டிருந்த நேரம். இடையூறு வேண்டாமென சைலன்ட்டில் போட்டது எவ்வளவு பெரிய விளைவை கொடுத்திருக்கிறது என்ற குற்றஉணர்வில் நெற்றியை சுருக்கினான்.
“இப்ப அந்த இன்னொரு கால் எங்க இருந்து ஆரிஜினேட் ஆச்சு சந்திரா?”
“அப்ராக்சிமேட்டா ராயபுரம் டவர் பாஸ்…” என்றவன், “நாளைக்கு காலைல அக்யுரெட்டா சொல்லிடறேன்…” எனவும்,
“ஓகே… அதை ஃபாலோ பண்ணிக்க சந்த்ரா…” என்றவன், “இவன் எங்க இருக்கான்?” என்று கேட்க,
“அதை ட்ராக் பண்ணிடறேன் பாஸ்…”
“ஓகே ட்ராக் பண்ணிக்க, அப்புறம்…” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே, சிட் அவுட்டில் மூங்கில் நாற்காலியில் சரிந்து அமர்ந்திருந்த மஹா, பதட்டம் தாள முடியாமல் முகத்தை மூடியபடி நடுங்கிக் கொண்டிருக்க, பைரவி,
“மஹா… என்னாச்சு? சொல்லுடி…” என்று அவளை உலுக்கிக் கொண்டிருந்தார்.
கார்த்திக்கு எதுவும் புரியவில்லை. கொஞ்ச நேரத்திற்கு முன்னர் தானே ஷ்யாம் அவ்வளவு விளையாட்டாய் பேசிக் கொண்டிருந்தான். அதற்குள் என்னவாயிற்று? இந்த கேள்வியில் அவனது கற்பனை எங்கெல்லாமோ போக, ஷ்யாமை கேள்வியாக பார்த்தான்.
“சந்த்ரா… அப்புறமா பேசறேன்…” என்று வைத்தவன்,
“மஹா…” அழுத்தமாக அழைத்தான். அவள் நிமிர்ந்து பாராமல் முகத்தை மூடியபடி அமர்ந்திருந்தாள். உடல் தானாக நடுங்கிக் கொண்டிருந்தது.
“மஹா… உள்ள போ…” இன்னமுமே அழுத்தமாக கூறியவன், பைரவியிடம் திரும்பி, “கொஞ்சம் ஏதாவது அவளுக்கு குடிக்க கொடுங்க… டென்ஷன்ல இருக்கா…” என்றவனை,
“என்ன டென்ஷன் தம்பி?” அவனை உறுத்து விழித்தபடி கேட்டார். நன்றாக இருந்த பெண், அவ்வளவு மகிழ்ச்சியாக நிகழ்ச்சிக்கு போனவள், மேடையில் வைத்து இவள் தான் தனது எதிர்கால மனைவி என்றும் அறிமுகப்படுத்தி இருக்கிறான், அதையும் எத்தனையோ பேர் அழைத்து கேட்டுமாகி விட்டனர்.
ஷ்யாமை பிடிக்கும் தான். பொறுப்பான மனிதனாக, கணவரை மீட்டுக் கொடுத்த மீட்பராகத்தான் பார்த்தார் பைரவி. ஆனால் அவன் செய்வதை எல்லாம் ஒப்புக் கொள்ள முடியாதே.
மரியாதைக்காக கூட தங்களிடம் ஒரு வார்த்தை கூறாமல் தன்னிச்சையாக அறிவிப்பானா?
ஆத்மநாதன் அண்ணனுக்கு கூட தெரியவில்லை என்றாரே!
என்னதான் எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை, தெரிவித்தாலும் வேலைக்கு ஆகாத நிலை என்றாலும் இதென்ன எல்லாவற்றிலும் தன்னிச்சையான முடிவு என்ற கோபம் பைரவிக்கு இருந்தது.
ஆனால் கணவரிடமோ மாமியாரிடமோ காட்டிக் கொள்ளவில்லை. இருவருமே உடல்நிலை சரியில்லாத நிலையில் இந்த பிரச்சனைகளை அவர்களது தலையில் ஏற்ற பிடிக்கவில்லை.
“ஒன்னும் இல்ல… நீங்க உள்ள கூட்டிட்டு போங்க…” என்று எப்போதும் போல எதையும் கூறாமல் முடிக்க பார்க்க,
“நீங்க சொல்லுங்க தம்பி… என்ன நடந்தது?” என்று கேட்க,
“சொல்றேன் அத்தை… மஹா கொஞ்சம் ஆசுவாசம் ஆகட்டும்… நீங்க போங்க… நான் கார்த்திக்கிட்ட பேசிட்டு உள்ள வரேன்…” எனவும், அவனை ஒரு மார்கமாக பார்க்க,
“உள்ள போம்மா… என்னன்னு மச்சான் கிட்ட நான் கேட்டுக்கறேன்…” என்று அனுப்பவும், ‘நீயும் தான் கூட்டுக் களவானியா?’ என்பது போல அவனைப் பார்த்தார்.
“என்னை உள்ள அனுப்பிட்டு அடுத்தது எவனை அடிக்கலாம்ன்னு யோசிப்ப… அவன் அதுக்கப்புறம் உன்னை அடிப்பான்… அப்படியே செயின் ரியாக்ஷன் மாதிரி போயிட்டே இருக்கணும்… இல்லையா?” முகமெல்லாம் சிவந்து, அழுகையை அடக்கி வைத்தால் வீங்கி, உடைந்து போன குரலுடன் மஹா ஆவேசமாக கேட்க, அவளது அந்த வெடிப்பை எதிர்பார்த்திருந்தான், மகாவின் இயல்பை அறிந்த அவளது ஷ்யாம்!
மெளனமாக அவளை பார்த்தபடி இருக்க, கார்த்திக் பதறினான்.
“என்ன ஷ்யாம்? என்னாச்சு?” என்று அவனை பார்த்து கேட்க, பைரவிக்கும் பதற்றம் தொற்றிக் கொண்டது.
“அங்க கேட்டு என்ன யூஸ்? ஈசிஆர்ல இருந்து காரை சேஸ் பண்றானுங்க… மூணு லாரி… ரெண்டு கார்… அப்படி என்ன வெஞ்சன்ஸ்? இந்த அளவுக்கு பகைய வளர்த்து வெச்சு இருக்காங்க ண்ணா…” என்றவளுக்கு இன்னமும் நடுக்கம் தீரவில்லை. கார்த்திக்கு தூக்கி வாரிப் போட்டது. பைரவி பயந்து போய் பார்த்தார்.
ஷ்யாமை அவசரமாக ஆராய்ந்தான். அவனுக்கு ஏதுமில்லையே என்ற தவிப்பு அவனது முகத்தில் வெளிப்படையாக தெரிந்தது. ஒன்றுமில்லையென உறுதிப் படுத்திக் கொண்டு அவனிடம்,
“என்ன மச்சான்? என்ன சொல்றா?” என்று கேட்க,
“சொல்றேன் கார்த்திக்…” என்று கண்ணில் சைகை காட்டினான். இப்போது பேசாதே என்று! அதை புரிந்து கொண்டவன்,
“மஹா… நான் என்னன்னு கேட்டுக்கறேன்… நீ போ டா…” என்றாலும் அவள் அசையவில்லை.
“என்னாச்சு சொல்லு மச்சான்?” அவளது பிடிவாதத்தை பார்த்து கார்த்திக் கேட்க,
“விஜி விஷயம் தான்…” என்றவனின் வார்த்தைகளை உடனே புரிந்து கொண்டான் கார்த்திக். காதில் விழுந்தாலும் அதையெல்லாம் வாங்கிக் கொள்ளவில்லை மஹா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!