VNE43(3) CV

“என்ன மச்சான்? என்ன பிரச்சனை?” என்று கார்த்திக் கேட்க, மஹாவை உறுத்து பார்த்தவன்,
“சௌஜன்யா சூசைட் அட்டம்ப்ட் பண்ணிட்டாளாம்…” என்று கூற, மஹா அதிர்ந்து பார்த்தாள்.
“வாட்…” கார்த்திக் இன்னமும் அதிர்ந்தான். அவன் அறிவான். சௌஜன்யாவின் படங்கள் பகிரப்பட்டதை! ஒருவேளை இதில் சம்பந்தப்பட்டது… என்று அடுத்து யோசிக்க பயந்து ஷ்யாமை பார்த்தான். மகாவின் குழப்பத்திற்கு ஏதோ விடை கிடைப்பது போல தோன்றியது. ஆனால் வெளிப்படையாக பெரியவர்களை வைத்துக் கொண்டு பேசுவது உசிதமல்ல… இத்தனை நேரம் நடந்த வாக்குவாதமும் இதற்காகத்தான் இருக்கும் என்பதை ஊகித்தான்.
“ம்ம்ம்… எஸ்…” என்றவன், ஜோதியின் புறம் திரும்பி, “ம்மா… எனக்கு கொஞ்சம் அர்ஜன்ட் வேலை இருக்கு… நீங்க காஞ்சீவரம் போயிட்டு வாங்க… குறிச்ச தேதில மேரேஜ் நடக்கும்…” என்று தீர்மானமாக கூறிவிட்டு போக முயல, அவசரமாக மஹா இடையிட்டாள்.
“நீ இப்ப எங்க போற?” என்றவளை சூடாக பார்த்தான் ஷ்யாம். கேள்வி கேட்பதை சற்றும் விரும்பாதவன் அவன். அதிலும் இது சங்கடமான நேரத்தில் சங்கடமான ஆளால் விரும்பாத இடத்தில் கேட்கப்படும் கேள்வி.
“ஹாஸ்பிடல் போறேன் மஹா…”பல்லைக் கடித்துக் கொண்டு அவன் கூற,
“எதுக்கு?”
பதில் கூறாமல் அவளை வெறித்துப் பார்த்தான்.
 “சௌஜன்யாவை பார்க்க…” என்றவனை அடிபட்ட பார்வை பார்த்தாள்.
“வேண்டாம் ஷா.. ஷ்யாம்…” கோபத்தில் அவளுக்கு திக்கியது.
“ஏன்?
“வேண்டாம்னா வேண்டாம் தான்… அவளை எதுக்கு நீ பார்க்க போகணும்?”
“குறைஞ்சபட்ச மனிதத் தன்மை மஹா…”
“தேவையில்லை… உன்னை என்ட்ட இருந்து பிரிச்சு காட்டறேன்னு சவால் விட்டு இருக்கா… அதோட இந்த நேரத்துல… கண்டிப்பா நீ போக கூடாது…” அழுத்தமாக கூறியவளை எரிச்சலாக பார்த்தான். தனக்கு வைக்கப்பட்ட கண்ணி வெடியில் கால் பதித்து இப்போது உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவளை அட்லீஸ்ட் பார்க்கக் கூட கூடாது என்றால்?
“முடியாது…” என்றவன் அதற்கும் மேல் நிற்காமல் நகர பார்க்க, மஹாவின் முகத்தில் தோற்றுப் போன பாவனை வந்து போனது. அதை கவனித்தவனுக்கும் மனதுக்குள் வேதனை. ஆனால் இந்த நேரத்தில் சௌஜன்யாவை பார்ப்பதும் தேவை என பட்டது.
“யாரோ பழிவாங்க அவளை யூஸ் பண்ணி இருக்காங்க மஹா. நான் இப்ப போய் பார்க்காம இருந்தாதான் தப்பு…”
“யாரோ யாரையோ பழி வாங்கட்டும்… ஆனா நீ அவளை பார்க்க போகக் கூடாது…” பிடிவாதமாக கூறியவளை ஆழமாக பார்த்தான்.
“உன்னோட தெளிவெல்லாம் எங்க போச்சுடி? ரொம்ப சராசரியா திங்க் பண்ற?” என்றவனை வெறித்துப் பார்த்தாள்.
“உன்னோட விஷயத்துல என்னை நீ சராசரிக்கும் கீழ இறக்கி விட்டுட்ட ஷ்யாம்…”
“ப்ச்…” என்றபடி எரிச்சலாக முகத்தை திருப்பினான். அவனது ஈகோவை மிகவும் காயப்படுத்திக் கொண்டிருந்தாள் அவள், அதுவும் காயப்படுகிறான் என்பதை அறிந்து கொண்டே!
“சரி… நானும் வர்றேன்…” என்றவளை சூடான பார்வை பார்த்தான். நம்பிக்கை?!
“முடியாது மஹா…” என்றவனுக்குள் வெப்பக்கலன் வெடித்து இருந்தது.
“இல்ல கூட வர்றேன்…” என்று திரும்ப அதை மட்டுமே கூறினாள்.
மூச்சை இழுத்து வெளியே விட்டவனுக்கு தன் கோபத்தை எங்கு கொட்டுவது என்று புரியவில்லை. பல்லைக் கடித்துக் கொண்டு, அவளை பார்த்தான்.
*****
மருத்துவமனை லாபியின் முன்பு பத்திரிக்கையாளர்கள் குவிந்து இருந்தனர். அவ்வப்போது சினிமா துறை விஐபிகள் சௌஜன்யாவை பார்க்க வருவதால், எந்நேரமும் பரபரப்பாக இருந்தது அந்த லாபி!
மின்னல் வேகத்தில் வந்த கார், போர்டிகோவில் நிற்க, காவலாளி அவசரமாக ஓடி வந்து சாவியை வாங்கினான், கார் பார்க்கிங்கில் நிறுத்த!
இறுக்கமாக இறங்கிய ஷ்யாம், மறுபுறத்திலிருந்து இறங்கிய மஹாவை பார்த்தான். பத்திரிக்கையாளர்கள் இருப்பதை பார்வையால் சுட்டிக் காட்டினான்.
மஹா வெகு இயல்பாகத்தான் இருப்பதாக காட்டிக் கொண்டாள், ஆனால் உள்ளுக்குள் அத்தனை வேதனையாக இருந்தது. தன்னுடைய வார்த்தையையும் மீறி அவன் சௌஜன்யாவை பார்க்க வருவதில் முழுவதுமாக உள்ளே உடைந்து போயிருந்தாள்.
ஷ்யாமை கண்டதும் பத்திரிக்கையாளர் கூட்டம் பரபரப்பானது!
சௌஜன்யா விவகாரத்தில் கிசுகிசுக்கப்படுவது ஷ்யாமின் பெயராயிற்றே!
உடன் வந்த மஹாவை பார்த்து பெரும்பாலானவர்கள் புருவத்தை உயர்த்தினார்கள். அழகான கைத்தறி காட்டன் சேலையில் நீண்ட பின்னல் அசைந்தாட ஷ்யாமின் கைபற்றியபடி வந்தவளை பார்த்து வியந்தது பத்திரிக்கை சமூகம்!
“டிவிட்டர் லீக்ஸ் தான் அவங்க சூசைட் அட்டம்ப்ட்க்கு காரணம்ன்னு சொல்றாங்களே…” என்ற கேள்வி அவனை நோக்கி வீசப்பட,
“சாரி பாஸ்… நோ கமெண்ட்ஸ்…” என்றபடி வேகமாக அவளது கையை பிடித்து இழுத்தபடி சென்றான்.
“உங்களுக்கும் சௌஜன்யாவுக்கும் இருந்த லவ், உங்க மேரேஜ் ப்ரோபோசலால ப்ரேக் ஆகிட்டதா சொல்றாங்களே… அதை பற்றி என்ன சொல்றீங்க?” என்ற அடுத்த கேள்வி வீசப்பட,
“அப்படியா?” என்றுதான் அவனுக்கு கேட்க தோன்றியது. அவனுக்கே அது புதிய தகவலாகத்தான் இருந்தது. எப்படியெல்லாம் செய்திகளை இவர்கள் திரிக்கிறார்கள் என்று எரிச்சலாக எண்ணிக் கொண்டவன், எதற்கும் பதில் கூறாமல் அவன் போக்கிற்கு சென்று கொண்டிருந்தான், மஹாவின் கையை பற்றியபடி. செய்தியாளர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்க, மருத்துவமனையின் செக்யுரிட்டி ஆட்களுக்கு எரிச்சலாக கண் காட்டினான். அவர்கள் விரைந்து வருவதற்குள்,
“சர்… அந்த ட்விட்டர் லீக்ஸ் பத்தி…” என்று நிருபர்கள் ஆரம்பிக்க, மஹா மிகுந்த பிரயத்தனப்பட்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள். எதற்கும் பதில் கூறாமல் மருத்துவமனையின் உள்ளே அவன் போக, செக்யுரிட்டிகள் நிருபர்களை கட்டுப்படுத்தினர்.
சௌஜன்யா இருந்த ஐசியூவுக்குள் அழைத்து சென்றான்.
குளிர்ந்த காற்று சில்லென்று முகத்தை தாக்கியது.
மகாவை அவளருகே அனுப்பியவன், கதவருகே நின்று கொண்டான். சௌஜன்யாவின் மனநிலை புரியவில்லை. அவனைப் பொறுத்தவரை பத்தோடு பதினொன்று தான் அவளும். அவளுக்கு தன் மேல் ஈர்ப்பிருந்ததை அவன் அறிவான். ஆனால் அதையெல்லாம் அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தன்னுடைய மனம் அவளில் நிலைக்கவில்லை என்பதை அவளுக்கு புரியவும் வைக்கவில்லை. இந்த நிலையில் இந்த மாதிரியான பிரச்னையை தன்னைப் போலவே அவளும் எதிர்பார்த்திருக்க முடியாது.
அந்த கவலை தான் அவனை அங்கு இழுத்து வந்திருந்தது. மஹா அவனிடம் சண்டை பிடித்தவள், அங்கு எதையுமே காட்டிக் கொள்ளவில்லை.
சோர்வாக படுத்து இருந்தாள் சௌஜன்யா. மகாவை கண்டதும் அவளது முகத்தில் சொல்ல முடியாத வருத்தம். அவளுக்கு பின்னால் நின்றிருந்த ஷ்யாமை கண்டத்தில் அவளது முகம் பிரகாசமடைந்தது, கண்களில் நீர் சூழ அவனைப் பார்த்தாள்.
அவளருகில் சென்ற மஹா, அவளது நாடித்துடிப்பை பார்த்து விட்டு, ஸ்டெத்தை அங்கிருந்த நர்சிடமிருந்து பெற்று, அவளது இதயத்துடிப்பையும் ஆராய்ந்தாள்.
மருத்துவர்கள் குறித்து வைத்த குறிப்புகளை பார்த்தவள், அதையெல்லாம் மனதில் குறித்து வைத்துக் கொண்டாள்.
“எப்படி இருக்கீங்க சௌஜன்யா?” ஒரு மருத்துவரின் தோரணையில் தான் அவள் கேட்டாள்.
“ம்ம்ம்…” பதில் கூற மிகவுமே சிரமப்பட்டாள். ஸ்டமக் வாஷ் கொடுக்க மூக்கில் டியுப் போட்டதில் தொண்டை புண்ணாகி இருக்கக் கூடும் என்று நினைத்துக் கொண்டாள். முகம் நன்றாக வீங்கி விட்டிருந்தது. ஒரு கை தூக்க மாத்திரையை விழுங்கியிருந்தாள்.
“ஏன் இப்படி பண்ணீங்க?” கைகளை கட்டியபடி மஹா கேட்க,
“இவ நடிகை தானே… எப்படி வேண்ணாலும் யூஸ் பண்ணிட்டு தூக்கிப் போட்டுடலாம்… இல்லையா மஹாவேங்கடலக்ஷ்மி?” சிரமப்பட்டு ஒவ்வொரு வார்த்தையாக கூறினாள் சௌஜன்யா.
“கூடாது தான்… அது தப்பு… ஏன் நீங்க முடியாதுன்னு சொல்ல வேண்டியதுதானே?”
“எனக்கும் பிடிச்சு இருந்துது…” கண்கள் கலங்கினாள். வார்த்தைகள் தந்தியடிக்க, தொண்டையடைத்தது. “யாருக்காகவும் நான் மயங்கினது இல்ல… ஷ்யாம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்… அவரை எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துது…” என்று அவனை மட்டுமே பார்த்தபடி கண்களில் கண்ணீரோடு கூற, ஒவ்வொரு வார்த்தைக்கும் மஹா மரித்து தான் போனாள்.
மகாவின் கண்களில் தெரிந்த வலியை வெறித்துப் பார்த்தபடி கதவருகில் நின்றிருந்தான் ஷ்யாம்.
“உங்களுக்கு இன்னொருத்தி புருஷனைத்தான் பிடிக்குமா சௌஜன்யா?” அவளது உணர்வுகளை கொஞ்சமும் காட்டிக் கொள்ளாமல் கத்தியை போல வார்த்தைகளை வீசினாள் மஹா. ஷ்யாம் திடுக்கிட்டான்.
சௌஜன்யா அதிர்ந்து மஹாவை பார்த்தாள்.
“இப்ப நீங்க சூசைட் அட்டெம்ப்ட் பண்ணது பிக்ஸ் லீக் ஆனதுக்காகவா? இல்லைன்னா ஷ்யாமை எமோஷனல் ப்ளாக்மெயில் பண்ணவா?” வெகு நேரடியாக கேட்க, அவளால் அதை எதிர்கொள்ள முடியவில்லை. ஷ்யாமின் தவறு அவனுக்கு லேசாக புரிந்தது. இது இமோஷனல் ப்ளாக்மெயிலாக இருக்கவும் வாய்ப்பிருப்பதை அவன் உணர்ச்சி வேகத்தில் மறந்து இருந்தான்.
“அவர் உங்க கிட்ட ப்ராமிஸ் பண்ணி அதை கீப் அப் பண்ணலைன்னா நீங்க என்ன வேண்ணாலும் கேக்க்கலாம்… நீங்களா தான் இஷ்டப்பட்டு வந்தீங்க இல்லையா?” இறுக்கமான குரலில் அவள் கேட்க, ஷ்யாம் எதுவும் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கும் சரி, சௌஜன்யாவுக்கும் சரி இது போன்ற அறுவை சிகிச்சையும் தேவைதான் என்பது போல!
எதுவும் கூறாமல் சௌஜன்யா மெளனமாக கீழே பார்த்திருக்க,
“நீங்க இப்ப பண்ண காரியத்தால ரெண்டு குடும்பம் பாதிக்கப்படுது… அது தெரியலையா? இல்லைன்னா பாதிப்பை ஏற்படுத்தனும்ன்னு தான் இப்படி பண்ணீங்களா?” நிதானமாக அவள் கேட்க,
“அதுக்காக ட்விட்டர்ல பிக்ஸ் லீக் பண்ணி என்னை இந்தளவுக்கு அசிங்கப்படுத்தனுமா?” என்றவளுக்கு அழுகை தொண்டையை அடைத்துக் கொண்டது. “இவ நடிகை தானே… என்ன வேண்ணா செய்யலாம்ன்னு தைரியம் இல்லையா?” என்று அவள் கேட்க,
“தன்னைத்தானே யாராவது இப்படி அசிங்கப்படுத்திக்க முடியுமா? அதுவும் இன்னும் ஒன் மன்த்ல கல்யாணத்தை வெச்சுகிட்டு?” என்றதும் சௌஜன்யாவின் முகம் இயலாமையில் தடுமாறியது.
“கல்யாணமா?” என்று கேட்டவளுக்கு அழுகை வரும் போல இருந்தது.
“ம்ம்ம் ஆமா…” என்றவள், “இது வேற யாரோ வேண்டாதவங்க செஞ்ச வேலை சௌஜன்யா…” என்று முடித்துவிட்டு, எப்படியெல்லாமோ பேசி அவளது மனதை மாற்ற, அவை அனைத்தையும் பார்வையிட்டு கொண்டு மட்டும் இருந்தான் ஷ்யாம். வந்து பார்க்கும் வரை மனம் பதறியபடி தான் இருந்தது. தன்னால் ஒருத்தி மரணப்படுக்கையில் கிடக்கிறாளே என்று. ஆனால் பார்த்தவுடன் சற்று தைரியம் வந்து இருந்தது. அதோடு மஹா பேசிய எதற்குமே அவன் அங்கே மறுத்துப் பேசவில்லை. தான் பேசினால் அங்கு மஹாவுக்கு மரியாதை இருக்காது. அதோடு அவள் வந்ததால் தான் நன்றாக இருந்தது. இல்லையென்றால் சௌஜன்யாவிடம் பேச தடுமாறி இருக்கக் கூடும் என்று நினைத்துக் கொண்டான்.
அவனை ஆழ்ந்து பார்த்த சௌஜன்யா, “ஐ நீட் எ ஹக் ஷ்யாம்… ஜஸ்ட் எ குட் பை ஹக்…” என்றவளை முறைத்துப் பார்த்தாள் மஹா. ஷ்யாமை திரும்பி பார்க்கவும் செய்தாள்.
என்ன பதில் சொல்ல போகிறாய் என்ற கேள்வியோடு!
ஷ்யாம் மெளனமாக மஹாவை பார்க்க, மகாவுக்கு ஒவ்வொரு நொடியும் நெருப்பின் மேல் நிற்பதை போலிருந்தது.
ஷ்யாமை ஏக்கத்துடன் தழுவியது சௌஜன்யாவின் விழிகள்.
மஹா மெளனமாக வெளியேறினாள்.