44
மஹா வெளியேறிய போது அவனை ஆழமாக, இல்லை இறுக்கமாக, அதுவும் இல்லை, வெறித்து பார்த்தாளா? அதுவும் இல்லை… ஆனால் அந்த பார்வையில் இருந்த ஏதோவொன்று அவனை கொன்றது. அது என்ன வகையான பார்வை என்பதை அவனால் கணிக்க முடியவில்லை. அவளது கண்களை கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவள் என்ன உணர்வில் வெளியேறினாள் என்பதை சத்தியமாக உணர்ந்து கொள்ள முடியவில்லை. ஆனால் ஏன் வெளியேற வேண்டும்? அப்போது வரைக்குமே தன்னுடையவன் என்பதில் அத்தனை அழுத்தமாக இருந்தவள் ஏன் வெளியேற வேண்டும்? அதையும் சௌஜன்யாவின் முகத்துக்கு நேராகவே கூற வேண்டியதுதானே? தன்னவன் இவன் என்று!
மகாவையே பார்த்துக் கொண்டிருந்தவன், திரும்பி சௌஜன்யாவை பார்த்தான். ஒருவகையான விடுதலைப் பார்வை பார்த்தபடி பெருமூச்சு விட்டாள். மஹா வெளியேறியதாலா?
ஷ்யாமின் மனம் திடுக்கிட்டது!
சௌஜன்யா எப்போதுமே தன்னை காதலிப்பதாக கூறியதில்லை. கொஞ்சமான ஈர்ப்பு மட்டுமே. அதிலும் கடந்த காலத்திலும் கூட தான் அவளுக்கு இடம் கொடுத்ததில்லை. ஆனால் இப்போது ஆத்மார்த்தமான காதலியை போல பேசுவதும் நடந்து கொள்வதும் எதற்கு?
அவள் செய்வது அதிகபட்சமாக தோன்றியது. இருக்கலாம்… காதலித்து இருக்கலாம்… ஆனால் தான் அதற்கு எப்போதுமே ஒப்புதல் கொடுத்ததில்லையே. பின் எந்த தைரியத்தில் மகாவிடம் இவள் சவால் விட்டாள்? இப்போது எந்த தைரியத்தில் குட் பை ஹக் கேட்கிறாள். அதையும் கேட்டுக் கொண்டு இந்த அரைவேக்காடு அறையை விட்டு வெளியேறுகிறது என்றால் இவர்கள் எல்லாம் என்ன தன்னை உருட்டி விளையாடும் பொம்மை என்று நினைத்து விட்டார்களா?
கோபத்தில் பல்லைக் கடித்தபடி அருவருப்பாக சௌஜன்யாவை பார்க்க, அவளது கண்கள் தாழ்ந்தது. உண்மை இல்லை அந்த கண்களில்.
“என்ன விளையாடுறியா? என்னை பத்தி தெரிஞ்சுகிட்டே இந்தளவு போறன்னா பேக் அப் இல்லாம இருக்காது…” என்று கூர்மையாக அவளை பார்த்தபடி கூறியவன், இடைவெளி விட்டு, “தொலைச்சுடுவேன்… நாளைக்கு நீ இல்லாத மாதிரி பண்ணிடுவேன்… ஜாக்கிரதை…” என்று படு இறுக்கமாக கூறியவனை படபடத்துப் போய் பார்த்தாள் சௌஜன்யா.
“இல்… இல்ல… ஷ்… ஷ்யாம்… சர்…” என்று திக்க, அவளது தடுமாற்றத்தையும், விஜியின் வார்த்தைகளையும் வேகமாக கணக்கிட்டான், ஒன்றும் ஒன்றும் இரண்டு என்றது அவனது அறிவு!
“யாரை நம்பி இப்படி இறங்கினயோ அவனையே நான் காலி பண்ண நேரமாகாது… இன்னொரு தடவை நான் சொல்லிட்டு இருக்க மாட்டேன்…” என்றவன், அதே கோபத்தோடு சடாரென வெளியேற, படுக்கையில் சாய்ந்து கொண்டிருந்தவளுக்கு பகீரென்றது!
கண்டுகொண்டானே என்று சற்று பயமாக இருந்தது. நடந்த விஷயத்தில் ஒரே ஒரு உண்மை என்னவென்றால், இந்த சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்திக் கொள் என்ற விஜியின் போதனை ஒன்று தான்.
“இல்…” என்பதற்குள்ளாக வெளியேறி இருந்தான்.
கொதித்துக்கொண்டிருந்தது அவனுக்கு.
சௌஜன்யா இருந்த அறையிலிருந்து வெளியேறியவன், அவசரமாக சிகரெட்டை துளாவினான். டென்ஷன் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. விஜியின் கைகள் இன்னும் எங்கெல்லாம் நீண்டு இருக்கக் கூடும் என்ற கோபம். தன்னிடம் வேலை செய்தவன் முதுகில் குத்திவிட்ட கோபம், எவளோ ஒருத்தியின் தற்கொலை முயற்சியை உண்மையென்று நம்பி வந்த கோபம். அவளையும் நம்பி தன்னை அவளிடம் விட்டு சென்ற மஹாவின் மேல் கோபம்.
சிகரெட் பாக்கெட்டை காரிலேயே வைத்து விட்டது நினைவுக்கு வந்தது.
ச்சே… எரிச்சலாக சுவற்றை குத்தினான்.
மகாவை பார்த்தான்… அமைதியாக தலையை இரு கையால் தாங்கியபடி நாற்காலியில் அமர்ந்திருந்தவளை பார்த்தான். அவளது மனம் படும் பாட்டை அவன் அறிந்து இருந்தான்.
அருகில் சென்றான். அவனது கால்களை பார்த்தும் அவள் நிமிரவில்லை. தலையை தாங்கியபடியே குனிந்து இருந்தாள்.
“இப்ப வர்றியா? இல்லைன்னா இங்கேயே இருந்து இன்னும் சேவையாத்த போறியா?” கோபமாக ஒலித்த அவனது குரலை கேட்டு நிமிர்ந்தாள். கண்கள் இரண்டும் கலங்கி கோவைப் பழமென சிவந்து இருந்தது. மூக்கு விடைத்து சிவந்திருக்க, முகமும் வீங்கி இருந்தது.
“ஆமா அது ஒன்னு தான் பாக்கி… ஒரு வெளக்கை கைல கொடுத்துடு… இங்கயே உட்கார்ந்துக்கறேன்…” பல்லைக் கடித்துக் கொண்டு அவள் கூற,
“வேண்டாம் மஹா… ரொம்ப வார்த்தையை விடற…” என்று கை நீட்டி எச்சரித்தவனை எரிச்சலாக பார்த்தவள்,
“ஏன்… ப்ரைவசி பத்தலையா?”
கண்களை மூடியபடி தன்னை தானே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பார்த்து, மூச்சை இழுத்து விட்டான். அதில் ஓரளவு வெற்றியும் கண்டான்.
அவளை நிர்கதியான பார்வை பார்த்தவன், அருகிலிருந்த சுவரை வெறும் கையால் குத்தினான். அவனது அந்த வேகத்துக்கு, கை எதுவும் ஆகாமல் இருக்க வேண்டுமே என்று பதறியது அவளுக்கு!
“ஷ்யாம்…” அடிபட்டு விட்டதோ என்று பயந்தபடி அவனது கையை பிடிக்க வர, கைகாட்டி அவளை நிறுத்தினான்.
“வேண்டாம்…”
“ஏன் வேண்டாம்?” அவனை வெறித்தவள், கேள்வி கேட்க,
“வேண்டாம்னா வேண்டாம்…” என்றவன், “இப்ப எதுக்காக நீ வெளிய வந்த?” என்று கேட்க, நிமிர்ந்து அவனைப் பார்த்தவளின் கண்கள் கலங்கியது.
“அவ ஹக் பண்ண கேக்கும் போது நான் எப்படி இருக்கறது? எனக்கு அவ்வளவு பரந்த மனசு இல்லடா…” என்றவள், “பரதேசி… அதையும் வேற நான் இருந்து பாக்கணுமா?” என்று கடுகடுப்பான குரலில் கண்களில் நீர் சூழ கேட்க,
கோபத்தில் கண்களை இறுக்கமாக மூடித் திறந்தான். வார்த்தைகளால் கசை வீசிக்கொண்டிருக்கிறாள். அத்தனையும் தாங்கித் தானாக வேண்டும் என்று மூளை சொல்கின்றது ஆனால் மனமோ அவளது வார்த்தைகளின் வேகத்தை தாங்கவியலாமல் அடிபட்டு தவித்தது.
மெளனமாக முன்னே சென்றவனை பின்தொடர்ந்தாள். அவளும் அறிவாள். தான் மிகவுமே பேசுவதை. ஆனால் அவளால் வெடிக்காமல் இருக்க முடியவில்லை. இப்போது வெடிக்காமல் விட்டால் வேறொரு சமயத்தில் மொத்தமாக வெடித்துவிடும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவே!
யாரையும் பார்க்காமல் காரில் ஏறி அமர்ந்தவன் கதவை அறைந்து சாத்தினான்.
எதுவும் பேசாமல் அவளும் அமர்ந்தாள். அத்தனை கோபத்தை அவள் கண்டதில்லை. ஷ்யாமின் கோபம் அவளுக்குள் பயத்தையும் பதட்டத்தையும் விதைத்தது. அந்த கோபத்துக்கு தூபம் போட்டதே தான் தான் என்பதை வசதியாக மறந்து போனாள் மஹா.
ட்ராபிக்கில் காரை பறக்க விட்டான்!
எப்போதும் அவனது கோபத்திலும் ஒரு வித தாளம் தப்பாத நிதானமிருக்கும். எடுத்து வைக்கும் அடியைக் கூட அளந்து வைத்துத்தான் பார்த்திருக்கிறாள்.
ஆனால் இன்று, இது முற்றிலும் நிதானம் தவறிய ஆக்ரோஷம்.
அவனை சொல்லியும் குற்றமில்லை.
முதுகில் குத்தப்பட்ட வலி, அதோடு தானும் காயப்படுத்திக் கொண்டிருக்கும் வலி!
அந்த தீவிரம் இருக்கும் தான். ஆனால் இத்தனை கோபம்…!!அவன் ஓட்டிய ஓட்டலை பார்த்து வாயை மூடிக் கொண்டாள்.
பேய் வேகம்… சாலைகளில் ட்ராபிக்கில் காத்திருந்த போது காட்டிய உச்சபட்ச எரிச்சல்… வாகனங்களை மோதிவிடுவது போன்று அவன் காட்டிய வன்மை… அத்தனையும் அவளுக்கு புதிது தான்.
அதிர்ந்து போனாலும் கைகளை இறுக்கமாகக் கட்டிக் கொண்டு அமர்ந்து கொண்டிருந்தாள்.
“அவன் கிடைச்சுட்டானா சந்த்ரா?” வந்த அழைப்பை அட்டென்ட் செய்தவன், நேரடியாக கேட்க,
“இன்னும் இல்ல பாஸ்…” என்று அவன் சற்று சுனங்கியதை ப்ளூடூத்தின் வழியாக இவளும் கேட்டாள்.
“இல்லைன்னு சொல்லவா கால் பண்ண?” சீற்றமாக இவன் கேட்க,
“விஜியோட லைனை இன்னும் டேப் பண்ண முடியல பாஸ்… அவரோட போனை ஆப் பண்ணி வெச்சு இருக்கார்…”
“வேற எந்த மெத்தட்சும் யூஸ் பண்ண முடியலையா?”
“இல்ல பாஸ்…” என்றவனின் குரலில் சுருதி குறைந்து இருந்தது.
“ஓகே… உன்னோட ஆளுங்க எத்தனை பேரை வேண்ணா அனுப்பிக்க… என்ன வேண்ணா பண்ணிக்க… ஆனா அவன் கிட்ட இருக்க ப்ரூப் அன்ட் டாக்குமெண்ட்ஸ் அத்தனையும் என் கைக்கு வந்தாகனும்…” என்று கடுமையான குரலில் கூற, மறுப்பக்கத்தில் அதனை கேட்டுக் கொண்டிருந்த சிவச்சந்திரன் உண்மையில் பீதியடைந்தான்.
ஷ்யாமின் இந்த கோபம் சந்த்ராவுக்கே புதிது.
அவனுடைய பாஸ் எப்போதுமே நிதானம் தவறியதில்லை.
கோபம் இருந்தாலும் அதை பெரிதாக காட்டிக் கொண்டதில்லை. அத்தனை கோபத்தையும் இவர்களிடம் விட்டுட்டு அவன் ரிலாக்ஸ்டாக அதை வேடிக்கை பார்ப்பது மட்டுமே அவனது வேலையாக இருக்கும்.
அவனது கோபத்தின் அளவை அவனை சார்ந்தவர்கள் அனைவருமே நன்கு புரிந்து வைத்திருந்தனர். அந்த அளவை அவனும் கோடிட்டு காட்டியும் விடுவான். விஷ்ணுவிடம் ஒரு காரியத்தை ஒப்புவித்தால் அவர்களுக்கு அடி நிச்சயம், இளங்கவி என்றால் சற்று மென்மையாக கையாள வேண்டியவர்கள், சிவச்சந்திரன் என்றால் கண்டிப்பாக கடுமையோ கடுமைதான். சிவச்சந்திரன் ஷ்யாமின் கீழ் வேலை பார்ப்பவன் இல்லை. அவனது தொழில் தனியார் துப்பறியும் நிறுவனம் தான். ஆனால் முற்றிலுமாக வேலை பார்ப்பதென்னவோ ஷ்யாமுக்காக மட்டும் தான்.
வேலையை கூறிவிட்டு, பவுன்சர்களையும் உடன் அனுப்பி வைப்பான்.
யாரை வெளுக்க வேண்டுமோ, வெளுத்து வாங்கி விடுவார்கள்.
அது போன்ற வேலைகளுக்கு விஷ்ணுவையோ, இளங்கவியையோ உபயோகிக்க மாட்டான்.
முன்னர் என்றால் இவை அத்தனையும் விஜியின் மேற்பார்வையில் இருந்தது. ஆனால் எப்போது விஜி ஒதுக்கப்பட ஆரம்பித்தானோ, அப்போதிருந்தே ஷ்யாமின் நேரடி கண்காணிப்பில் வந்துவிட்டது இவர்களின் செயல்பாடுகள்!
அப்படியிருக்கும் போது ‘என்ன வேண்ணா பண்ணிக்க’ என்ற அவனது வார்த்தை சிவச்சந்திரனுக்கே சற்று பதற்றத்தை உண்டு செய்து விட்டது.
“பாஸ்… இன்னும் அரை மணி நேரத்துக்குள்ள, அவர் எங்கன்னு ட்ராக் பண்ணிடறேன்… ரொம்ப டென்ஷனாகாதீங்க…” எனவும்,
“ஓகே சந்திரா…” என்று பேசியை அணைத்தான்.
ஏன் இத்தனை கோபம். சற்று நிதானமாக செயல்பட கூடாதா என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, உச்ச வேகத்தில் சென்று கொண்டிருந்தவன், கிட்டத்தட்ட ஒரு இரு சக்கர வாகனத்தை தூக்கியிருப்பான்.
கடைசி நிமிடத்தில் ஸ்டியரிங்கை ஒடித்துத் திருப்பினான் ஷ்யாம்.
“பார்த்து ஓட்டு ஷ்யாம்…” என்று கூறிக்கொண்டே அவனது முகத்தைப் பார்க்க, அவன் இன்னமும் சாதாரண நிலைக்கு வரவில்லை.
முகத்தின் இறுக்கமும் குறைந்தபாடில்லை.
எத்தனை தான் புரிதல் இருக்கும் தம்பதியராக இருந்தாலும் கூட சமயத்தில் அவள் கூறியது போன்ற குத்தல் வார்த்தைகளை எதிர்கொண்டே தான் தீர வேண்டும் என்பது இவனுக்கும் புரியவில்லை.
இது போல குத்திப் பேசி தன்னுடைய கோபத்தை ஆற்றிக் கொள்வது தவறு என்பதையும், ஒரு வழி பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிட்ட பிறகு, அதை மீண்டும் தணிக்கை செய்ய முற்படுவது முட்டாள்தனம் என்பது அவளுக்கும் புரியவில்லை.
வெளியே அவனை கிஞ்சிற்றும் விட்டுக் கொடுத்துவிட மாட்டாள். ஆனால் வெடிப்பதெல்லாம் அவனிடம் மட்டும் தான் என்ற நிலையில், அதுவும் அவன் இப்போதுள்ள மனநிலையில், ஷ்யாமால் அதை ஜீரணிக்க முடியவில்லை. காரை ஓட்டியபடியே வெடிக்க துவங்கியிருந்தான்.
“அவளை இழுத்து ரெண்டு அரை வெச்சு இருந்தா கூட நான் கோபப்பட மாட்டேன்… ஆனா எப்படிடி அப்படி வந்த? நான் உன்னோட…” என்றவனுக்கு குரல் கம்மியது… எப்படி இவள் விட்டுக் கொடுக்கலாம் என்ற கோபம்!
“அதை நீ அவ கிட்ட சொல்லணும் ஷ்யாம்…” என்றவள் எங்கோ பார்த்திருந்தாள். ஆனமட்டும் அவள் கண்ணீரை கட்டுப் படுத்த முயன்று கொண்டுதான் இருந்தாள். ஆனால் அவளுடைய கட்டுப்பாட்டையும் மீறி கண்கள் அவளுக்கு துரோகம் புரிந்து கொண்டுதானிருந்தது.
அவன் மெளனமாக பார்க்க,
“என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்னு பாட சொல்றியா? அந்த கேவலத்தை என்னால பண்ண முடியாது…”
“என்னை புருஷன்னு சொல்லிக்க உனக்கு அவ்வளவு கேவலமா இருக்கா மஹா?” ஒரு மாதிரியான குரலில் அவன் கேட்க,
“உனக்கு முன்னாடியே உன் வருங்கால புருஷனை பத்தி எனக்கு அத்தனையும் அத்துபடி… எனக்கு அப்புறம் தான் நீன்னு அவ சொல்லிட்டா எனக்கு கேவலமில்லையா ஷ்யாம்?”
திரும்பி அவளை அவன் பார்த்த பார்வையில் என்ன உணர்விருந்தது?
ஆற்றாமையா? கோபமா? அவமானமா? வெறுமையா?
என்னவென தெரியவில்லை.
Leave a Reply