VNE44(3)

VNE44(3)

போயஸ் கார்டன் வீட்டில் ஷ்யாமுக்கு முன் அமர்ந்திருந்தான் விஜி.
சுற்றிலும் விஷ்ணு, இளங்கவி, சிவச்சந்திரன்.
மூன்று நான்கு பவுன்சர்கள் வேறு, ஒப்புக்கு சப்பாணியாக!
சற்று தள்ளி கார்த்திக் அமைதியாக நின்றிருந்தான்.
அவனை பொறுத்தவரை விஜய் செய்தது தவறு தான். ஆனாலும் ஷ்யாமின் அந்த புகைப்படங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. வீட்டில் யாரிடமும் காட்டிக்கொள்ளவில்லை. எந்த முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல முடியும்? 
எதற்காக இந்த காதல் என்று புரியவில்லை.
கார்த்திக்கை பொறுத்தவரை திருமணம் என்பது மட்டுமே இன்னபிற சிலவற்றுக்கான சாவி… அந்த திருமணம் இல்லாமல் பிருந்தாவை ஏறெடுத்து பார்க்கக் கூட யோசித்தவன் அவன். தான் இன்னொரு பெண்ணை தவறாக பார்த்தால் இன்னொருவன் தன்னுடைய தங்கையை தவறாக பார்க்க எத்தனை நேரமாகி விட போகிறது? அதற்காகவே பிருந்தாவை பிடித்திருந்த போதும் அவளிடமிருந்து விலகி நின்றிருந்தான். மிக மோசமாக தோள் தேவைப்பட்ட போதில் தான் அவனது மனதை அவளிடம் வெளிகாட்டியது. அதற்கு பின்னும் கூட அவளிடம் பெரிய நெருக்கத்தை எல்லாம் காட்டியதில்லை.
காரணம் மஹா!
அவளுக்கு தானொரு தவறான முன்னுதாரணமாகி விட கூடாது என்ற அச்சம்!
அந்த அச்சமே அவனை அத்தனை இடத்திலும் கட்டுப்பாடாக இருக்க வைத்தது.
ஆனால் அந்த கட்டுப்பாடே இல்லாமல் வாழ்ந்து விட்டு, எதன் அடிப்படையில் இவன் காதலிக்கிறான் என்பது கார்த்திக்கு புரியவில்லை. எதை தன் மனைவிக்காக சேமித்து வைத்திருக்கிறான் என்பதும் தெரியவில்லை.
அவனை பற்றி முன்னமே அறிந்தது தான். ஆனாலும் கண்ணால் கண்ட உண்மை கசந்தது.
வெறும் படங்களை பார்த்தே கசந்து போனான்.
ஆனால் காதல் என்பது உடல் சார்ந்ததும் அல்ல… மனம் சார்ந்ததும் அல்ல… அது ஆன்மாவின் ஆத்மார்த்த பந்தம் என்பதை கார்த்திக்கும் உணரும் நாள் வரும் என்பதை இப்போது அவன் அறிய மாட்டான். 
அமைதியாக விஜியை பார்த்தான் கார்த்திக். ஒருவகையில் அவனை நினைத்தால் சற்று பாவமாக கூட இருந்தது. மகாவை ஷ்யாம் கஸ்டடி எடுத்தபோது அவனோடு இருந்தவன் விஜி ஒருவனே. அவனது கண்களில் உண்மையான வேதனையை பார்த்திருந்தான். ஷ்யாமிடம் போராடி இருந்தான். அதற்கு பின்னும் கூட கார்த்திக்கு ஆதரவாக நின்றவன் அவன். அவன் மட்டும் தவறான வழிகளில் போகவில்லை என்றால் கண்டிப்பாக ஷ்யாமை தான் ஆதரித்து இருக்க போவதில்லை. அவனது அந்த குணத்தால் வெறுப்பை சம்பாதித்து கொண்டவனை வெறித்துப் பார்த்தான்.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக ஷ்யாம் அவனிடம் பேசியிருந்தான். அவனிடம் இருக்கும் ஆதாரங்களை கொடுக்கும் படி.
பத்து பேரை அழைத்துக் கொண்டு போன விஷ்ணு, விஜியின் வீட்டை செங்கல் செங்கல்லாக பிரித்து விட்டிருந்தான். அதையும் அவன் கண் முன்னே!
முன்னதாக அவன் சென்று கொண்டிருந்த காரை நான்கு புறமிருந்தும் கார்னர் செய்து தான் அவனை நீலாங்கரைக்கு அழைத்து சென்றார்கள்.
அவன் கண் முன்னாலேயே வீட்டை பிரித்து போட்டு தேடியும் எதுவும் கிடைக்காததால் அந்த எரிச்சலில் அங்கேயே விஜியை அடிக்கும் ஆத்திரம் வந்து விட்டது விஷ்ணுவுக்கு!
“ண்ணா சொல்லிருங்க… இப்ப தேவையில்லாம அடி வாங்காதீங்க…” என்று கையை ஓங்கியவனை வெறித்துப் பார்த்தபடி இருந்தான் விஜி. தான் பார்த்து இங்கு வளர்ந்தவன். தன்னையே அடிக்க கை ஓங்குவதை பார்த்துக் கொண்டும் இருந்தான்.
வாயே திறக்காமல் இருந்தவனை எப்படி பேச வைப்பது என்று விஷ்ணுவுக்கு தெரியவில்லை.
அதை ஷ்யாமிடம் கூற, அவனை அழைத்துக் கொண்டு போயஸ் கார்டன் வீட்டுக்கு வர சொல்லியிருந்தான்.
“ஏன் விஜி இப்படி பண்ண?” என்று ஷ்யாம் இறுக்கமாக கேட்க,
விஜய் மௌனமாகவே அமர்ந்திருந்தான். இவ்வளவு நடந்தும் கொஞ்சம் கூட அசராமல் அமர்ந்திருப்பதை பார்க்கையில்,
“நீ பிறப்பிலேயே திருடன் டா… நான் தான் உன்னை ரொம்ப நம்பிட்டேன்…” என்று ஷ்யாம் கூற,
“மகாவை எனக்கு நீங்க விட்டுத் தந்திருந்தா இப்படி ஆகி இருக்காது பாஸ்…” என்று முதன் முறையாக வாயை திறக்க, அவன் கோபத்தில் இறுக்கமாக கண்களை மூடித் திறந்தான்.
“முட்டாள்… இன்னொரு தடவை மஹா பேரை சொன்ன, இப்பவே சுட்டுத் தள்ளிட்டு போயிட்டே இருப்பேன்…” பல்லைக் கடித்தபடி, ஷர்ட்டை முழங்கை வரை மேலே இழுத்து விட்டபடி அவன் எழ, அவன் வெறித்துப் பார்த்தான்.
“நீங்க என்ன சொன்னாலும் அவங்க என்னோட மஹாவா இருந்திருக்க வேண்டியவங்க. நடுவுல நீங்க வந்துருக்காம இருந்திருந்தா, அன்னைக்கு அந்த லைட் மியுசிக் ப்ரோக்ராமுக்கு மட்டும் உங்களை கூட்டிட்டு போகாம இருந்திருந்தா, இன்னைக்கு அவங்க மகாவேங்கடலக்ஷ்மி விஜய்….” என்று அசராமல் கூறினான்.
மீண்டும் அவன் அப்படியே கூற, கோபம் கொந்தளித்தது அவனுக்கு. “நான் உன்கிட்ட கேட்டேனே… நீ அந்த பொண்ணை லவ் பண்றியான்னு? அதுக்கு என்ன சொன்ன?”
“அதுதான் நான் பண்ண முட்டாள்தனம் பாஸ்…”
“நீ எப்பவுமே முட்டாள் தான் டா…” என்றவன், “மஹா விஷயம் இப்பதான் ஆறு மாசமா இருக்கு… ஆனா நீ நாலு வருஷமா பணத்துல கை வெச்சு இருக்க… என்னோட பெர்சனலை நீ படமெடுத்து இருக்க… இதுக்கெல்லாம் பேர் என்ன? இப்ப நீ மகாவோட பேரை யூஸ் பண்ணி தப்பிக்க பார்க்கற…”
“ஏன் பாஸ் இல்லைன்னா மட்டும் நீ ரொம்ப நல்லவங்களா? உங்க ஆக்டிவிட்டியை தானே எக்ஸ்போஸ் பண்ணேன்?”
“என்னோட ஆக்டிவிட்டியை பத்தி நீ எதுக்குடா கவலைப் படற? அது என்னோட பர்சனல்… அப்படியேன்னாலும் நீ என்ன ஒழுங்கா? என்னோட பேரை எந்தளவு யூஸ் பண்ண, மிஸ்யூஸ் பண்ண, அத்தனையும் எனக்கும் தெரியும். ஆனா உன்னை நான் விட்டு வெச்சது எதுக்கு? நம்பிக்கையான ஒருத்தன் வேணும்ன்னு தான்… ஆனா அடிமடிலையே கை வெச்சுருக்க நீ…”
“ஆமா பாஸ்… பண்ணேன்… தேனெடுக்கறவன் புறங்கையை நக்காம இருப்பானா? நான் நக்கினேன்… அதை நீங்க கேக்கும் போது உங்களை கார்னர் பண்றதுக்காக அப்பப்ப இப்படி பண்ணி வெச்சு இருக்கேன். அதை நீங்க கண்டுபிடிக்க முடியாது. என்ன வேணும்னாலும் பண்ணிக்கங்க… உங்களால அதை மட்டும் செய்யவே முடியாது…” அவ்வளவு உறுதியாக கூறியவனை ஆழ்ந்து பார்த்தான் ஷ்யாம்.
“சரி… அதுக்கு விலை என்ன?” தடாலடியாக கேட்டவனை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தான் விஜய்.
“மத்தவங்களை உங்க பணத்தால ஏமாத்தற மாதிரி என்னை ஏமாற்ற முடியாது பாஸ்…” என்று சிரித்தான்.
கைகளை கோர்த்து நெட்டி முறித்த ஷ்யாம், இரண்டு ஷர்ட் கையையும் மேலே இழுத்து விட்டுக் கொண்டு,
“டென் சி…” என்று கேட்டான்.
விஷம் தோய்ந்த புன்னகையோடு, இடம் வலமாக தலையாட்டினான் விஜய்.
“ட்வென்டி…”
கார்த்திக் அதிர்ந்து பார்வையிட்டுக் கொண்டிருந்தான். விஷ்ணுவுக்கும் இளங்கவிக்கும் கூட அதிர்ச்சிதான். இந்தளவுக்கு விஜி இருப்பான் என்று அவர்கள் கனவிலும் எண்ணியதில்லை. தேவைக்கு மேலேயே கொடுக்கும் முதலாளிக்கு குறைந்தபட்ச விசுவாசத்தைக் கூட காட்டாமல் எத்தகைய துரோகத்தை செய்திருக்கிறான் விஜி என்று கசப்பு அவர்கள் முகத்தில்.
ஷ்யாம் கண் காட்டிவிட்டால் அவனை அடித்து துவம்சம் செய்ய தயாராக இருந்தார்கள்!
விஜி தொடர்ந்து மறுக்க,
“ஃபிப்டி…” என்றான்.
அதற்கும் மறுக்கவே, விஷ்ணுவை அழைத்து,
“இவன் அந்த டாக்குமென்ட்சை கொடுக்கற வரைக்கும் விடாத… என்ன வேண்ணா பண்ணு… ஐ நீட் தோஸ் ப்ரூஃப்ஸ்…” எனவும், விஷ்ணு கையிலிருந்த காப்பை இழுத்து விட்டுக் கொண்டு தயாரானான், தன்னுடைய பவுன்சர்களுக்கும் கண்ணை காட்டினான்.
“ஆனா… இப்படியே இல்ல விஷ்ணு…” என்று விஜய்யை ஆழ்ந்து பார்த்தவன், ஓரகண்ணால் கார்த்திக்கை பார்த்தான். என்னவென்று விஷ்ணு கேள்வியாக பார்க்க,
“உடம்புல ஒட்டுத் துணி கூட இல்லாம விட்டு அடி… சாகற வரைக்கும் இவன் அந்த அடியை மறக்கக் கூடாது…” என்றவனின் முகத்தில் அத்தனை ரவுத்திரம்.
விஜய் அதிர்ச்சியின் விளிம்பில் நின்று ஷ்யாமை பார்த்தான். கார்த்திக்கு அதிர்ச்சியின் அளவைக் கூட உரைக்க முடியவில்லை. இது போன்ற அசாதரணமான சூழ்நிலைகளை அவன் எந்த காலத்திலும் எதிர்கொண்டதும் இல்லை.
ஆனால் விஜி அறிவான். அந்த டாக்குமென்ட்டையும் பென் டிரைவ்களையும் கொடுத்தாலும் கூட ஷ்யாம் இதை தான் செய்வான் என்பது புரிந்தது.
“வேண்டாம் பாஸ்…” அதிர்ந்து கூறியவனை பார்த்தவன்,
“ஏன்டா உனக்கு மட்டும் தான் வெக்கம் வேலாயுதமெல்லாம் இருக்கா? மத்தவனுக்கெல்லாம் இல்ல? ஊருக்கே போஸ்டர் அடிச்சு ஒட்டுனியே, அப்ப இது தோணலை?” என்று வெடுக்கென்று கேட்க,
பவுன்சர்கள் அவனை நோக்கி வந்தனர்.
“பாஸ்… வேண்டாம் பாஸ்…” என்றவனின் கண்களில் முதன் முதலாக கலக்கம் தோன்றியது.
“மஹாங்கற பேரைக் கூட நீ நினைச்சு பார்த்து இருக்கக்கூடாது. ஆனா அவ கிட்டவே பேசி, மிரட்டி, அதையும் மீறி வீடியோ வரைக்கும் எடுத்து பார்க்கனும்ன்னு தைரியம் வந்துடுச்சோ, அப்ப இதையும் நீ ஃபேஸ் பண்ணித்தான் ஆகணும்…” என்றவன், கடைசி முறையாக ஆழ்ந்து பார்த்தபடி கிளம்பினான்.
கார்த்திக் கலக்கமாக விஜியை பார்த்தான். விஜியின் பார்வையில் எப்படியாவது என்னை காப்பாற்றேன் என்ற செய்தி இருக்க, ஒரு முறை ஷ்யாமிடம் பேசிப் பார்க்கலாம் என்று தோன்றியது.
“மச்சான்… இந்தளவு தேவையா?” என்று தயங்கியபடி கேட்க, அவனை உறுத்துப் பார்த்தான் ஷ்யாம்.
“கண்டிப்பா தேவைதான்… நாளைக்கு உன் தங்கச்சி அந்த பிக்சர்ல இருந்து இருந்தா உனக்கு எப்படி இருந்திருக்கும்?” என்று கேட்க, கார்த்திக்கு இதயம் வெடித்து விடும் போல இருந்தது.
உண்மைதானே!
நக்குகிற நாய்க்கு செக்கு என்று தெரியுமா? சிவலிங்கம் என்று தெரியுமா? இரண்டையும் ஒன்றாகத்தானே பார்க்கும்?
அன்று இரவு சன் செய்திகளில்…
“முக்கிய செய்திகள்… மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள அண்ணா சாலையில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, அமெரிக்க தூதரகம், எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி வரை உடைகள் எதுவுமின்றி ஓடிய வாலிபரை துரத்திய கும்பல். ஓடியவரை செல்பேசியில் படமெடுத்த இளைஞர்கள்… எங்கே போகிறது இந்த உலகம்?”
செய்தியாளர் செய்தியை படிக்க, கேட்டுக் கொண்டிருந்த மஹாவுக்கு உலகம் தட்டாமாலை சுற்றியது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!