VNE46(2)CV

“சாரிடி… கோபம் தான்… அத்தனை கோபம்… நானும் மனுஷன் தானே? என்னோட சாச்சுறேஷன் பாயின்ட் தாண்டிப் போகுது… கண்ட்ரோல் பண்ண முடியல…” என்று அவளது கையை பிடித்துக் கொண்டு கூற, அவனிடமிருந்து கையை உருவிக் கொண்டவள்,

“விட்டுடு விட்டுடுன்னே சொல்றியே… வேண்ணா நீ விட்டுடு ஷ்யாம்…” கண்கள் சிவந்து போயிருக்க, வார்த்தைகளில் வெப்பம்!

“அது என்னால முடியாதுன்னு உனக்கே தெரியும்…” இறுக்கமாக அவன் கூற,

“எனக்கு மட்டும் முடியுமா? விடறதுன்னா எப்பவோ விட்டு இருக்கணும்… விட்டுத் தொலைக்க முடியாமத்தான கஷ்டபட்டுட்டு இருக்கேன்…” சுறுசுறுவென சூடான சொற்கள். ஆனால் தாங்கியேயாக வேண்டுமாயிற்றே!

கார்த்திக் முன்பு இன்னும் ரசாபாசமாக வேண்டாமென அவன் மௌனமாகினான்.

“மஹா… நீ பேசறது தப்பு… நாங்க எல்லாரும் வேண்டாம்ன்னு சொன்னப்ப, மச்சானுக்கு நீ முழுசா சப்போர்ட் பண்ண… ஆனா இப்ப என்ன பாப்பா பண்ற? அப்ப இருந்த மாதிரி தான் இப்பவும் இருக்காப்ல… எவனோ ஒருத்தன் ஏதாவது பண்ணா, அதுக்கு மச்சான் என்ன பண்ணுவாரு?” என்றவன்,

“ஒரு அண்ணனா இதை நான் உன்கிட்ட பேசக் கூடாது… ஆனா உன்னோட நல்லதுக்காக சொல்றேன்… ஆம்பிளைங்கள்ல முக்கால்வாசி பேர் வீட்டுக்கு தெரியாம தப்பு பண்றவங்க தான்… ஆனா அதையெல்லாம் வெளிப்படையா ஒத்துக்க மாட்டாங்க… அதெல்லாம் சூப்பர் சீக்ரட், அவங்களை பொறுத்தவரைக்கும். ஆனா ஷ்யாம் உன்கிட்ட எவ்வளவு உண்மையா இருக்கார் ன்னு எனக்கு தெரியும்டா… மச்சான்கிட்ட அந்த உண்மை இல்லாட்டின்னா நீ என்ன பண்ணிருந்தாலும் நான் மேரேஜுக்கு அக்செப்ட் பண்ணிருக்க மாட்டேன்… இந்த நேரத்துல நாங்க இருக்கமோ இல்லையோ, நீ இருக்க வேண்டாமா?” என்று கேட்க, அவள் மெளனமாக கேட்டுக் கொண்டிருந்தாள்.

அத்தனையும் அவளும் அறிவாள். ஆனால் வார்த்தைகள் வாய் தாண்டி குதிப்பதை அவளாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. முயலவில்லை. காயம் கொண்ட புலியாக, தன் காயத்தை தானே ருசித்து, அவனையும் காயப்படுத்திக் கொண்டிருந்தாள்.

“நான் எப்பவும் போலத்தான் இருக்கேன். அவனுக்கு கில்டி கான்ஷியஸ்… அதான் ரெஸ்ட்லஸ்ஸா இருக்கான்…” பல்லைக் கடித்துக் கொண்டு கொஞ்சமும் இரக்கமில்லாத தொனியில் அவள் பியைத்து எடுத்தாள்.

“கில்டி கான்ஷியஸ்… எனக்கெதுக்கு?” எழுந்து கொண்டவன், நிமிர்ந்து நின்று கேட்க, அவனுக்கு முன்பாக அவனது ஆண் என்ற ஈகோ எழுந்து நின்று கொண்டது.

அவனை உறுத்துப் பார்த்தவள், “அதெல்லாம் உனக்கெதுக்கு ஷ்யாம்? அது மனுஷங்களுக்கு இருக்க ஒரு விஷயம்…” என்று கூற,

“ஆமா நான் மனுஷனே இல்ல… மிருகம் தான்… ஆனா உன்னோட லைப் முழுக்க இந்த மிருகத்தோட தான் குப்பை கொட்டியாகனும்…”

அத்தனை ரவுத்திரமாக அவன் கூற, அவள் அதிர்ந்து அவனை பார்த்தாள். அவன் கோப எல்லைகளை தாண்டுகிறான் என்றதும் சற்று மௌனமாகினாள்.

“மச்சான்… வேண்டாம்… வார்த்தையை ரொம்ப விடாத… ரெண்டு பேருக்குமே தான் கஷ்டம்…” கார்த்திக் நடுநிலையோடு பேச, கைகளை கட்டிக் கொண்டு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்து விட்டான் ஷ்யாம்.

சற்று நேரம் மௌனத்தில் கழிய, மஹா மெல்லிய குரலில் கூறினாள்.

“எனக்கு ரொம்ப பயமா இருக்கு… நாளைக்கு இதே ஆட்டிடியுட் தானே உன் பையனுக்கும் வரும்? ஒரு நல்ல மனுஷனா நீ ஒரு உதாரணமா இருக்க வேண்டாம்… அது முடியாது… ஒரு நல்ல புருஷனா இருப்பியான்னு எனக்கு தெரியாது… ஆனா ஒரு நல்ல அப்பாவா நீ இல்லைன்னா அடுத்த தலைமுறையே நாசமாகிடும்… உன்னை மாதிரியே உன் மகனும் வந்து நின்னு, அவன் எத்தனை பேரோட லைப்பை வீண் பண்ணுவானோன்னு நினைச்சா எனக்கு பயமா இருக்கு…”

அவளது பேச்சை கேட்டபடி நின்றிருந்தவனுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. மனதுக்குள் ஏதோவொரு ஓலம். கத்த வேண்டும் போல இருந்தது.

ஆனால் அவன் செய்யவில்லை. அவன் எப்போதும் அவன் தான். தன்னுடைய செயல்களை எப்போதும் நியாயப்படுத்தவும் முயல மாட்டான், அதே சமயத்தில் குற்ற உணர்வும் கொண்டதில்லை. தொழிலில், வாழ்க்கையில், உறவு வகைகளில் அவன் எடுக்கும் முடிவுகளுக்கும், அவனது செயல்பாடுகளுக்கும் அவனே பொறுப்பு என்பது போலத்தான் அவனது செய்கை இருக்கும்.

மகாவுடைய விஷயத்தில் கூட அவனது செயல்பாடு மாறியதில்லை. நான் உன்னை காதலிக்கிறேன் என்று மட்டுமே தெரிவித்தான். அவளை காதலி என்று வற்புறுத்தவில்லை. ஆனால் அனைத்தும் தானாக நடந்தது. சூழ்நிலைகளை அவனுக்கு ஏற்றார் போல மாற்றிக் கொண்டான்.

அவன் நிதானம் தவறிவிட்ட ஒன்று உண்டென்றால் அது விஜியின் விஷயம் மட்டும் தான்.

“சரி… இப்ப என்ன சொல்ல வர்ற?”

“விஜய்ய போய் பார்க்கணும்… அவன் கிட்ட சாரி கேக்கணும்…” என்று கூறியவளை வெறித்துப் பார்த்தான்.

“எதுக்கு சாரி கேக்கணும் மஹா?” ஒரு மாதிரியான குரலில் அவன் கேட்க,

“உனக்கும் அவனுக்கு என்ன சண்டைன்னு எனக்கு முன்னாடி தெரியாது… ஆனா காரணம் நான் தான்னு நினைக்கும் போது என்னால அதை தாங்க முடியல… வேதனையா இருக்கு…”

“அவன் உன்னோட பேரை யூஸ் பண்றான்னு நான் சொல்லியும் என்னை நீ பைபாஸ் பண்றல்ல…”

“உன்னை நான் பைபாஸ் பண்ணலை… எனக்குன்னு தனிப்பட்ட கருத்து இருக்கு… எனக்கு அவனை போய் பார்க்கனும்ன்னு மனசுக்கு படுது… ஆனா நீ வேண்டாம்னு சொல்ற… உனக்காக பேசி, உனக்காக வாழ்ந்து, உனக்காக சாப்ட்டு, உன்னோட வார்த்தைகளை நான் பேச எனக்கெதுக்கு தனியா ஒரு முகம்? என்னோட சுயம் எங்க?”

கைகளை கட்டிக் கொண்டு அவள் கேட்க, ஷ்யாமுக்கு மனதுக்குள் ஏதோவொரு வலி.

காதலென்றால் சுயம் தொலைவது தான். இருவரும் ஒரு புள்ளியில் கரைந்து போவதுதான். ஆனால் அது மனமுவந்து, ஆத்மார்த்தமாக அல்லவா இருக்க வேண்டும்?

தன்னுடைய சுயம் தொலைகிறதே என்று யோசிக்கும் போதே காதலின் அடித்தளம் ஆட்டம் கண்டு விடாதா?

“அவனை போய் பார்க்கனும்ன்னா பாரு மஹா… பேசணும்னா பேசு… உனக்கு என்ன தோணுதோ அதை செய்… நான் எதுவும் சொல்ல மாட்டேன்…” என்று தெளிவாக தீர்மானமாக கூற, அவள் ஆச்சரிய பார்வை பார்த்தாள்.

“நிஜமா? இதுல எதுவும் ஹிட்டன் அஜெண்டா இல்லையே?” என்று நம்ப முடியாமல் கேட்க,

“இல்ல… இனிமே உனக்கு பிடிக்காத, கஷ்டத்தை தர்ற எந்த விஷயத்தையும் செய்ய மாட்டேன்… விஜி விஷயத்துல… ஆனா எல்லா இடத்திலுமே அப்படி இருப்பேன்னு தப்பு கணக்கு போட்டுடாத மஹா… என்னோட இயல்பை நான் மாத்திக்க முடியாது… அது என்னோட சுயம்… நீ சொன்ன மாதிரி…” என்று முடித்து விட்டவனை, சிறு புன்னகையோடு பார்த்தாள்.

இருவருக்குமே ஒன்று புரியவில்லை. சுயம் இருந்தும் சுயமற்று போவதின் வலியும், அதன் வேதனையும்!

*****

திரும்பவும் அதே ப்ரைவேட் ஐசியூவுக்குள் ஷ்யாமோடு உள்ளே நுழைந்தாள் மஹா.                                                                                  அவனுக்கு அறுவை சிகிச்சை முடிந்து இருந்தது.

விஜியை சுற்றிலும் மருத்துவ உபகரணங்கள்!

விதம் விதமான வயர்களால் கனெக்ட் செய்யப்பட்டு இருந்தான்.

அருகே டியூட்டி டாக்டரும் இரண்டு நர்ஸ்களும் இடைவிடாமல் அவனது கன்டிஷனை கண்காணித்தபடி இருக்க, அவ்வப்போது மருத்துவர்கள் அவர்களுக்குள்ளாக விவாதித்துக் கொண்டிருந்தனர். ஷ்யாம் வருவதை பார்த்தவுடன் ஒரு மயான அமைதி நிலவியது.

அறைக்குள் மஹா மட்டும் தான் போனாள்.

ஷ்யாம் வெளியே நின்று கொண்டான். அவனுக்கு விஜியை பார்ப்பதில் பிரியம் இல்லை. அவளது பிடிவாதத்திற்காக வந்தான். வெளியே நின்று கொண்டான்.

உள்ளே சென்றவள், அவளுக்கு தேவையான விபரங்களை எல்லாம் ஒன்று விடாமல் அலசினாள். என்ன வேண்டுமென கேட்டு வாங்கிக் படித்துப் பார்த்தாள். அது விஜியின் மனநிலை சரியில்லை என சுஷ்ருதா கொடுத்த ரிப்போர்ட். அதுதான் போலீசுக்கு போயிருந்தது.

“எப்ப கான்ஷியஸ் வந்தது டாக்டர்?” அங்கிருந்த டியூட்டி டாக்டரிடம் கேட்டாள்.

“ஒரு அரை மணி நேரம் முன்னாடி மேடம்…” என்று வெகு மரியாதையாக கூறினான் அந்த மருத்துவன்.

“திரும்ப எப்ப ரீகையின் ஆகும்ன்னு ஏதாவது ஐடியா இருக்கா?”

“வெய்ட் பண்ணிட்டு இருக்கோம் மேம்…” என்றுக் கூறிக்கொண்டிருக்கும் போதே விஜியின் கண்மணிகள் இங்கும் அங்கும் உருண்டது.

“ஐ திங்க், ஹீ இஸ் கெய்னிங் கான்ஷியஸ்…” என்றவளுக்கு பரபரப்பானது.

இன்னும் இரண்டு டாக்டர்கள் அவசரமாக உள்ளே வர, விஜி விழித்தான், மருண்டு பார்த்தபடி!

“ஹலோ மிஸ்டர் விஜய்… ஹவ் டூ யூ பீல் நவ்?” என்றபடி அவனை செக் செய்தார் அவர்.

அவனது முகத்தில் சொல்ல முடியாத குழப்பம். தலை வின்வின் என்று வலித்தது. அந்த வலி முகத்திலும் பிரதிபலிக்க, தலையை பிடித்துக் கொள்ள முயன்றான். முடியவில்லை. கைகளில் வலி உயிர் போனது. நரக வேதனையாக இருக்க,

“வலி தாங்க முடியல…” என்றான் மருத்துவரிடம்.

“செடேட்டிவஸ் கொடுத்து இருக்கோம் விஜய்… ஆப்பரேட் பண்ணிருக்கு… அப்படிதான் இருக்கும்…” என்றார் அவர்.

“விஜய்?” என்று தனக்கு தானே கூறியவன், வலியில் முகம் சுருங்கி, கண்களை மூடிக் கொண்டான்.

“வலி தாங்க முடியல…” திரும்பவும் அதே பாட்டு.

“விஜய்… விஜய்…” உலுக்கினார் அந்த மருத்துவர்.

சோர்வாக மீண்டும் விழித்தவனை பார்த்து, “ஆர் யூ ஓகே?” என்று கேட்க,

“ம்ம்ம்…” என்றவன், “என் பேர் விஜய்யா?” என்று கேட்க, அங்கிருந்த அனைவரும் ஒரு செக்கன்ட் ஜெர்க்கானார்கள். சற்று உஷாரான பார்ட்டிகள்,

“உங்க பேர் என்ன?”

“பேரா?” என்று யோசித்தான்.

“உங்க வீடு எங்க இருக்கு?” என்று கேட்க,

“வீடா?” என்று யோசித்தான், வெகுவாக!

“ஷ்யாம் சர் வெளிய இருக்கார்… வர சொல்லட்டா விஜய்?” என்றபடி அவனது ரியாக்ஷனை கவனித்தார்.

“ஷ்யாமா? அது யார்?” என்று கேட்டான்.

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, ஓரமாக நின்றபடி இதை பார்த்துக் கொண்டிருந்தாள் மஹா.

“சரி விஜய்… இது யார்ன்னு தெரியுதா?” என்று மகாவை காட்டிக் கேட்டார் ஒரு மருத்துவர்.

மகாவை கண்டத்தில் அவனது கண்கள் சட்டென ஒளிர்ந்தது! அவனையும் மீறிய ஒரு சந்தோசம் அவனது கண்களில்!

“ம்ம்ம்…”

அவளது முகத்தில் குழப்ப ரேகைகள்.

“இவங்களை எனக்கு தெரியும். ஆனா எப்படின்னு தெரியல டாக்டர்…” என்று கூற, அவரது முகம் சுருங்கியது.

எப்படி இப்படியானது என்று யோசித்தார். தலையில் பட்ட அடி ஒன்றும் அவ்வளவு ஆபத்தானது இல்லை.

மஹா எதுவும் பேசாமல் ஷ்யாமை பார்த்தாள். அவனுக்குமே மிகப் பெரிய அதிர்ச்சி தான் அது.

இதற்கு காரணம் ஷ்யாமாக இருக்ககூடுமோ? மெலிதாக சந்தேக இலை துளிர் விட்டது.