VNE48(2)

VNE48(2)

நேரடியாக இப்படி மோதுவான் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பேசுவான் விட்டுவிடுவான் என்று தான் நினைத்தார்.
ஆனால் விஷயம் அவரது கையை மீறிக் கொண்டிருந்தது.
வேறு வழியில்லை…
கணக்கை தாக்கல் செய்தாக வேண்டும் என்ற நிலையில் இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் அந்த நிலையை தாண்டி விட்டது.
ஒப்புக்கொண்டு தானாக வேண்டும்.
ஆனால் இவர்களை நுழையவும் விடக் கூடாதே என்று யோசித்தார்.
இறுதியாக தேர்தலுக்கு பெருந்தலைகள் ஒப்புக்கொண்டது!
ஒருவழியாக இந்த களேபரங்களை முடித்து விட்டு காஞ்சீபுரத்துக்கு வந்து கொண்டிருந்த போதுதான்,
“ஷ்யாம் மச்சான்… எப்படி இப்படி? நிஜமா அசந்து போயிட்டேன்…”
“ஏன் மச்சான்? இதுல என்ன அசந்து போக இருக்கு?” என்று அவன் கேட்க,
“ஒவ்வொருத்தனையும் ஆஃப் பண்ண பாரு… ச்சே எனக்கெல்லாம் வரவே வராது… இப்படித்தான் மஹாவை ஆஃப் பண்றியா?” என்று சிரித்துக் கொண்டே கேட்க, ஷ்யாமுக்கு உண்மையில் சிரிப்பு வந்தது. மகாவையாவது தான் ஆஃப் செய்வதாவது? நடக்கிற காரியமா என்ன?!
“யோவ்… என்னை தலையால தண்ணி குடிக்க வைக்க ஒரு ஆளிருக்குன்னா அது உன்னோட பாசமலர் தான்ய்யா… ஒன்னும் முடியல…” என்று வேடிக்கையாக கூற,
“என்ன மச்சான்… நீயே இப்படி சொல்ற?” என்றவனுக்கு சிரிப்பு மலர்ந்தது.
“பின்ன… இவனுங்களை எல்லாம் ஒரு வார்த்தைல அடக்கிடலாம்… ஆனா அவகிட்ட ஒரு மணி நேரம் தொண்டை தண்ணி வத்த பேசினா கூட அசையவே அசைய மாட்டா… அப்படி ஒரு பிடிவாதம் பிடிச்ச கழுதை… கடைசில ஒவ்வொரு தடவையும் நான் தான் கால்ல விழ வேண்டியிருக்கு கார்த்திக் மச்சான்…” என்று சிரிப்போடு விளையாட்டாகவே கூற,
“அடப்பாவி… கால்ல விழறதை இப்படி பெருமையா சொல்லிக்கற ஒரே ஒருத்தன் நீயா தான்ய்யா இருப்ப…” சிரித்தான். காரை செலுத்திக் கொண்டே திரும்பி அவனை பார்த்தவன்,
“சிரிக்கற… நீ என்ன பண்ண போறன்னு நானும் பார்க்கத்தானே போறேன்…” என்று கேலியாக கூற,
“பாரேன்… நான்லாம் தில்லா நிப்பேன் மச்சான்…” என்றவனை,
“பாக்கறேன்… பாக்கறேன்…” என்று சிரிக்க,
“ரொம்ப இறங்கி போகாத மச்சான்… உன்கிட்ட ரொம்ப செல்லம் எடுக்கறா… பிரச்சனைன்னு ஏதாவது வந்தா சமாளிக்க கஷ்டப்படுவா…” என்று உண்மையை கூற,
“இப்ப இல்லாத பிரச்சனையா? யார்கிட்ட இறங்கி போறேன்? என்னோட மஹா கிட்ட தானே? பொண்டாட்டி கால்ல விழுந்தா தான் வேலையாகும்னா விழுந்துட வேண்டியதுதான் கார்த்திக் மச்சான்…” என்றவனை சற்று பெருமையாக பார்த்தான்.
இவனை காட்டிலும் வேறு யார் மஹாவுக்கு பொருத்தமாக அமைந்து விட முடியும்? அவள் கண்ணில் கண்ணீரை கண்டால் அவர்களை அழித்து விடுவேன் என்று இவன் கூறியது எத்தகைய வார்த்தை?! இத்தனை காதலை ஒருவன் வைக்க முடியுமா? அதோடு இந்த புரிதல்? மலைத்தான்!
மஹா தான் இவனளவு இல்லை என்பது புரிந்தது. அவளிடம் எப்போதுமே ஷ்யாமிடம் தோழமை உண்டு. தோழமையோடு நின்றிருந்தால் பிரச்சனை இருந்திருக்காது. அவளுக்கு உரியவனை காணக் கூடாத விதத்தில் கண்டத்தில் அதிர்ந்து போயிருக்கிறாள்.
அதைதான் அவனும் கூறினான்.
“மஹா இடத்துல நான் இருந்தா கண்டிப்பா இவ்வளவு பொறுமையா இருக்க முடியாது மச்சான். அவளால என்னை விட்டுக் கொடுக்கவும் முடியல… அதையெல்லாம் ஜீரணம் பண்ணவும் முடியல… அவளுக்கு டைம் கொடுக்கணும்… ரொம்ப பாவம்டா… என்னை ஹர்ட் பண்ண கூடாதுன்னு நினைப்பா… ஆனா உள்ள இருக்க அந்த ஜீரணமாகாத கோபம் அவளையும் மீறி வெளிய வருது… அந்த கோபத்தோட வெளிப்பாடு தான் அவ சட்டுன்னு பேசிடற வார்த்தைகள்… ஆனா எல்லாத்தையும் மீறி என் மேல டன் டன்னா லவ் வெச்சுருக்கா… அது போதும் மச்சான்…”
என்றவனை இப்போது உண்மையிலேயே ஆச்சரியமாக மரியாதையாக பார்த்தான்.
லட்டுக் குட்டி கொடுத்து தான் வைத்திருக்கிறாள் என்று தோன்றியது! ஆனால் சொல்லவில்லை. சிரித்துக் கொண்டான். இது போல பிருந்தாவின் தந்தை தன்னை பற்றி நினைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
அவனையும் அறியாமல் வெட்க முறுவல் மலர்ந்தது.
அதே சிரிப்போடு இருவரும் அந்த பட்டு மாளிகையின் உள்ளே நுழைந்தனர்.
தங்களது கும்பல் தான் கடையை இரண்டாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை கண் காட்டினான் ஷ்யாம். நடுவே புதிதாய் பூத்த பூவென மஹா. பாலசோ, கிராப் டாப்பில் அம்சமாய், அசத்தலாய் அமர்ந்து கொண்டு தன் மேல் ஒவ்வொரு சேலையாக வைத்துப் பார்த்துக் கொண்டிருக்க, அவர்களோடு போய் அமர்ந்தார்கள் இருவரும்.
அங்கு அனைவருமே கீழே தான் அமர வேண்டியிருக்கும். மொத்தமாக மெல்லிய வெள்ளை மெத்தை மட்டுமே விரிக்கப் பட்டிருக்கும்.
முருகானந்தமும் ஆத்மநாதனும் கடை உரிமையாளரிடம் பேசிக் கொண்டிருக்க, பெண்கள் அனைவருமாக சேலைகளை பதம் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஷ்யாமையும் கார்த்திக்கையும் கண்ட ஜோதி,
“ஷப்பா… வந்தியா? இன்னும் ஒரு சேலைய கூட செலக்ட் பண்ணலை உன்னோட டார்லிங்… என்னன்னு நீயே கேளு ஷ்யாம்…” என்று சிரிக்க,
மணியை பார்த்தான். பனிரெண்டை கடந்து இருந்தது. காலை ஒன்பது மணிக்கு கடை திறக்கும் போதே வந்து விட்டது அவனுக்கும் தெரியும். ஒரு சேலை எடுக்க இத்தனை ஆர்ப்பாட்டமா? விழிகள் பிதுங்கியது, எதிர்காலத்தை நினைத்து!
“டார்லிங்… நீ ஒரு புடவை எடுக்க வந்தியா? இல்ல இந்த கடையை விலைக்கு வாங்க வந்தியா?” என்று ஷ்யாம் சிரித்தபடி கேட்டான். முந்தைய தினத்தின் அடிதடி வெட்டு குத்து கோபம் தாபம் என்று எதுவுமே இருவரின் நினைவிலும் இல்லை. அந்த நேரத்தை அனுபவிக்கும் மனோபாவம் மட்டும் அவனுக்கு. ஏதாவது பேசினாலும் உடனே மறந்துவிட்டு அவனையே மீண்டும் நாடும் குணம் அவளுக்கு!
மூக்கை சுருக்கி, உதட்டை சுளித்துக் கொண்டு, சேலையையும் அவனையும் மாற்றி மாற்றி பார்த்தாள்.
“நான் என்ன பண்றது… முஹூர்த்த சேலை ரொம்ப யுனிக்கா இருக்கணும் ஷ்யாம்…” என்றபடி உதட்டை பிதுக்க,
“அவ்வளவுதானே? என்ன மாதிரி டிசைன் வேணும்? அதை சொல்லு…” என்று அவளை ஊக்க,
“ம்ம்ம்… மெஜந்தா… ம்ம்ம்… இல்ல… டார்க் பிங்க்… இல்ல… ரெட்… ம்ஹூம்… ஆனா இதெல்லாம் கலந்த மாதிரி ஒரு கலர்… அப்புறம்… அதுல…” என்று ஆரம்பித்து ஒவ்வொரு டிசைனாக கூற, உண்மையிலேயே கேட்டவர்களுக்கு விழி பிதுங்கித்தான் போனது.
அவள் புறம் குனிந்தவன், கிசுகிசுப்பாக, “ஏய்… நீ என்னதான் டிசைன் சொல்லி சேலை வீவ் பண்ணவே கொடுத்தாலும், அதை நான்…” என்று ஆரம்பித்து வெகு அந்தரங்கமாக கூறிவிட்டு அவளது முகத்தை பார்த்து என்னவென்று புருவத்தை உயர்த்தி கேலியாக உதட்டை மடித்து சிரிக்க, அவளது முகம் செங்கொழுந்தானது. சட்டென சிவப்பை பூசிய அவளது முகத்தை பார்த்தவனுக்கு அது கடை என்றும், தமக்கு முன் அத்தனை பேரும் அமர்ந்து இருக்கின்றனர் என்பதை மிகவும் சிரமப்பட்டு நினைவில் கொள்ள வேண்டியிருந்து.
சுற்றிலும் இருப்பவர்களை பார்த்தவள், அவர்கள் அனைவரும் சேலையில் கண் பதித்து இருப்பதை கருத்தில் கொண்டு அவனது முழங்கையில் நறுக்கென்று கிள்ளி வைத்தாள்.
“ஸ்ஸ்ஸ்… வலிக்குதுடி பிசாசே…” என்று அவன் தடவ,
“ஓவரா வாயாடினா இப்படிதான் கிள்ளு வாங்க வேண்டியிருக்கும்…” என்று கண்களை உருட்ட,
“ஏய்… உருட்டாதடி… பயமா இருக்கு…” என்று வேண்டுமென்றே வம்பிழுக்க, அவள் இன்னுமாய் முறைக்க, 
“சூயிங் கம் வேணுமா டார்லிங்?” என்றவன், பாக்கட்டிலிருந்து எடுத்து நீட்ட, சுற்றிலும் பார்த்தபடி அவனை முறைத்தவளின் முகத்தில் சங்கடமான வெட்கம் தழுவி இருந்தது. பேசாமல் எடுத்துக் கொண்டாள்.
“ஹலோ… உங்க ரொமான்ஸை நிறுத்திட்டு சேரி செலக்ட் பண்ணுங்க… என்னை மாதிரி ஒன்னும் தெரியாத அப்பாவி பிள்ளைங்க இருக்குங்கறதை மறந்துட்டு என்னமா சீனை ஓட்றீங்க…” என்று பிருந்தா கலாய்க்க,
“ஹை பிருந்தா… நீயும் இங்க தான் இருக்கியாடா…” என்று ஷ்யாம் சிரிக்க,
“ப்ரதர்… நான் அப்ப இருந்தே இங்கதான் இருக்கேன்… உங்க கண்ணு தான் உங்க டார்லிங் கிட்டவே ஒட்டிகிட்டு இருக்கே…” என்று சிரித்தாள் பிருந்தா.
“அப்படியெல்லாம் இருப்பேனா… நீ தான் என்னோட பாசமலர்… நாம ஒட்ற பாசமலர் படத்தை பார்த்து இவங்க ரெண்டு பேரையும் தெறிக்க விடனும்ன்னு நான் எவ்வளவு பிளான் பண்ணி இருக்கேன்… நீ என்னடா இப்படி சொல்லிட்ட…” என்று சிரித்தான் ஷ்யாம். கார்த்திக் உட்பட அத்தனை பேரின் முகத்திலும் அத்தனை சிரிப்பு.
“அப்படீங்கறீங்க…” என்று கேலியாக அவள் கேட்க,
“ஆமாங்கறேன்…” என்றான் ஷ்யாம்.
“ஷப்பா போதும் அண்ணியாரே… உன் ஆளு வந்துட்டான்… அவனுக்காக தானே நீ சேரிய தொட்டுக் கூட பார்க்க மாட்டேன்னு வெய்ட் பண்ண…” என்றவள், கார்த்திக்கை பார்த்து, “ப்ரோ… அண்ணியாரை கவனிங்க ப்ரோ…” என்று சேர்த்து விட, கார்த்திக்கின் முகத்தில் வெட்க புன்னகை!
“ப்ச்… அது பொண்ணு… கார்த்திக் பார்த்து ஓகே பண்ணனும்ன்னு நினைக்குது… ஆனா இங்க எதுவும் தேற மாட்டேங்குதே…” என்று சிரிக்க,
“டேய் அடங்குடா…” என்று சிறிய குரலில் அவனை அடக்கியவளின் முகத்தில் வெட்கம்.
“சரி தள்ளு… நான் சூஸ் பண்றேன்…” என்றவன், பத்தே நிமிடத்தில் நேர்த்தியாக செலெக்ட் செய்துவிட,
“இவ்வளவு நேரம் எங்களை பாடா படுத்திட்டு இருந்தா… நல்லவேளை நீங்க வந்தீங்க…” என்றார் பைரவி.
அதை கேட்டவன் பெருமையாக காலரை ஏற்றிவிட, மஹா அழகு காட்டினாள்.
“சரி முஹூர்த்த புடவை ஓகே… நிச்சயத்துக்கு…” என்று ஜோதி அடுத்த செஷனை ஆரம்பித்து வைக்க, “ம்மீ…” என்று பரிதாபமாக விழித்தான்.
“என்னடா இப்பவே இப்படி பீல் பண்ற? உங்க அப்பாவெல்லாம் கொஞ்சம் கூட சளைக்க மாட்டார் தெரியுமா?” என்று பெருமையாக கூறிய ஜோதியை,
“ம்ம்ம் ஆமா ஷ்யாம்… இந்த பக்கம் தலைய கூட வைக்க மாட்டேன்… அப்புறம் எங்க சளைக்க?” என்று நாதன் வார, அவருக்கு அழகு காட்டினார் ஜோதி.
இருவரையும் பார்த்து சிரித்தான் ஷ்யாம். கூடவே மற்றவர்களும்.
“இனிமே மாமியாரும் மருமகளும் ஜோடி சேர்ந்துக்கட்டும் நானா… இவங்க ரெண்டு பேருக்கும் தான் மேட்ச் ஆகும்…” என்று அவன் கேலி பேச,
“வேணாம் ஷ்யாம்… மஹா கிட்ட வாங்கி கட்டிக்க போற…” என்று ஜோதி கேலியாக கூற, அவன் சிரித்தான்.
பேசிக்கொண்டே ஒவ்வொரு வைபவத்துக்கும் புடவையை செலெக்ட் செய்து கொண்டே வர,
“அடுத்ததா இன்னொரு புடவையும் செலெக்ட் பண்ணிடு ஷ்யாம்…” என்று மொட்டையாக கூற,
“எந்த ரிச்சுவல்க்கு ம்மீ?” என்று கேட்டவனின் பார்வை சேலைகளில் வெகு தீவிரமாக படிந்து இருந்தது.
அவர் பொதுவில் கூற சங்கடப்பட்டு, பைரவியிடம் காதில் கிசுகிசுக்க, அவர் கூச்சப்பட்டு, மகாவின் காதில் கூற, அவளுக்கு தயக்கமாக இருந்தது.
மூவரின் ரகசிய பேச்சை கவனித்தவன், என்னவென்று புருவத்தை உயர்த்திக் கேட்க, அவன் புறம் குனிந்தவள்,
“சாந்தி முஹூர்த்த புடவையாம்…” என்று மென்று முழுங்கி கூற,
“அதுக்கெல்லாம் புடவை எதுக்குடி… வேஸ்ட்டா?” என்று சட்டென கூறி விட்டவன், அவள் பல்லைக் கடித்துக் கொண்டு முறைப்பதை பார்த்து, “இல்லடி… அதுக்கெல்லாம் புடவை தனியா எடுப்பாங்களான்னு கேக்க வந்தேன்.. எப்படியோ டங்க் ஸ்லிப்பாகிடுச்சு…” என்று சில்மிஷமாய் புன்னகைக்க, அம்மாக்கள் இருவரும் தான் சிரிப்பை மறைத்தபடி வேறு புறம் திரும்ப வேண்டியதாக இருந்தது.
அவள் முகத்தை நெற்றியில் கைவைத்து மறைத்தபடி, “டேய்… மானத்தை வாங்காதடா…” என்றாள்!
“ஓகே ஓகே…” என்றவன், அவள் புறம் சாய்ந்து, அவளுக்கு மட்டும் கேட்குமாறு, கள்ளத்தனமாக, “இந்த சேரி என்னோட வசதிக்கு தான் எடுப்பேன்… ஓகே வா…” என்று கேட்க, அவளது உடல் கூசி சிலிர்த்தது.
“ச்சீ பே…” என்றவளுக்கு வயிற்றுக்குள் எதுவோ உருண்டது. ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் அவளது கண்களில் வந்து போன அந்த தவிப்பை, பயத்தை கண்டுக் கொண்டான்.
யாருமறியாமல் அவளது இடக்கையை தன் வலது கையால் பிடித்தவன், மென்மையாக இறுக்கி, அவள் புறம் குனிந்து,
“ரிலாக்ஸ்… ரிலாக்ஸ்…” என்றான், யாருக்கும் கேட்காத குரலில்.
“ம்ம்ம்…” என்று அவள் கூறும் போதே அவளது செல்பேசி அழைத்தது.
எடுத்து பார்த்தவள்,
“சுஷ்ருதால இருந்து தான்…” என்றவள், போனை ஆன் செய்து காதுக்கு கொடுத்தாள்.
இவளை எதற்காக அழைக்க வேண்டும் என்று யோசித்தவன், அவளை பார்க்க,
“எஸ் டாக்டர்…” என்று ஆரம்பித்தாள்.
“மேம்… அந்த பேஷன்ட்…” என்று அவர் ஆரம்பிக்க,
“எந்த பேஷன்ட் டாக்டர்?” என்று கேட்டாள்.
“விஜய்…” என்றவர், இடைவெளிவிட்டு, “நேத்து மதியத்துல இருந்து எதுவும் சாப்பிடவும் மாட்டேங்கறார்… மெடிசனும் எடுக்கலை…” என்று கூற, அவள் புருவத்தை சுருக்கினாள்.
“ஏன் டாக்டர்?”
“நீங்க வந்தாதான் சாப்பிடுவாராம்…” என்றவருக்கு சற்று பயமாக இருந்தது. ஷ்யாம் அவரிடம் அத்தனை எச்சரிக்கை செய்திருந்தான். அவன் சம்பந்தமாக மஹாவை தொடர்பு கொள்ளக் கூடாது என்று! ஆனால் இப்போது அந்த விஜய்யின் பிடிவாதத்துக்கு முன் தான் எதுவுமே செய்ய முடியவில்லையே!
அதை கேட்ட மகாவுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. என்ன செய்வது என்றே புரியாமல் ஷ்யாமை பார்த்தாள், பரிதாபமாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!