VNE48(3)

ஷ்யாமையும் கார்த்திக்கையும் கண்ட ஜோதி,

“ஷப்பா… வந்தியா? இன்னும் ஒரு சேலைய கூட செலக்ட் பண்ணலை உன்னோட டார்லிங்… என்னன்னு நீயே கேளு ஷ்யாம்…” என்று சிரிக்க,

மணியை பார்த்தான். பனிரெண்டை கடந்து இருந்தது. காலை ஒன்பது மணிக்கு கடை திறக்கும் போதே வந்து விட்டது அவனுக்கும் தெரியும். ஒரு சேலை எடுக்க இத்தனை ஆர்ப்பாட்டமா? விழிகள் பிதுங்கியது, எதிர்காலத்தை நினைத்து!

அவனை பார்த்தாலும், யாருக்கு வந்த விருந்தோ என்று மஹா அமர்ந்திருந்தாள்.

என்னவென பார்வையால் அவளை கேட்க, ஒரு பெருமூச்சோடு கீழே பார்த்தபடி, தலையை பிடித்துக் கொண்டாள். அவளால் திருமண ஏற்பாடுகளில் ஒன்ற முடியவில்லை.

‘நீயே எடுத்துட்டு வந்துறேன் ம்மா…’ என்று பைரவியை கேட்டலும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை.

‘வந்தவங்களுக்கு மரியாதை கொடுக்க தெரியாதா மஹா?’ என்று அவளையும் இழுத்து வந்துவிட்டார்.

ஒவ்வொருவரும் திருமணத்தை பற்றியே பேசிக் கொண்டிருக்க, அவளுக்கு அது அடுப்பின் மேல் அமர்ந்திருப்பது போன்ற உணர்வை உருவாக்கியது.

அவளால் ஷ்யாமை தவிர வேறு யாரையும் நினைக்கவும் முடியாது. ஆனால் இன்றுள்ள சூழ்நிலையில் அவனையே நினைத்துப் பார்க்க முடியாது. நினைக்கவே கூடாது என்று நினைத்தாலும் அவனது அந்த புகைப்படங்களும் வீடியோவும் அவளது கண் முன் வலம் வருவதை தவிர்க்க முடியவில்லை. நித்தமும் வேதனையாக இருந்தது. அவனது நிலை புரிந்து இருந்தது. ஆனால் வேதனையில் உழலும் மனதை என்ன செய்வது என்று புரியவில்லை.

அத்தனையும் தெரிந்து தான் அவனது காதலை ஒப்புக்கொண்டாள். ஆனால் ஒப்புக்கொண்டதனால் அவனது அத்தனையையும் எங்கனம் ஜீரணிப்பது? அவளால் முடியவே இல்லை.

அவள் இப்போது கையறுநிலையிலிருந்தாள்.

அதோடு விஜியின் விஷயம் அவளை உலுக்கியிருந்தது. அவனது நிலைக்கு காரணம் தான் தானோ என்ற எண்ணம் அவளை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. ஷ்யாம் அவனது விஷயத்தில் மேலும் மேலும் தவறு செய்து கொண்டே போவதை அவள் விரும்பவில்லை. ஆனால் அவனை தடுக்கும் வழி அவளுக்கு தெரியவில்லை.

முன்தினம் அவள் ரொம்பவுமே பேசிவிட்டதில், அவளுடன் பேசவே கூடாது என்று தான் நினைத்தான். கார்த்திக்கிடம் அவளை தாங்கி பேசுவது என்பது வேறு. ஆனால் அவளிடம் விட்டுக் கொடுக்க அவனது ஈகோ இடம் தரவில்லை. அருகில் தான் அமர்ந்திருந்தான், ஆனால் ஜோதி, பைரவி, பிருந்தா என இவர்களிடமெல்லாம் பேச்சை வளர்த்துக் கொண்டிருந்தான். ஜோதியே இவனை கிண்டலாக கூறி ஒரு வழியாக்கி இருந்தார்.

ஆனால் எதிலுமே கலந்து கொள்ளாமல் உம்மென்று இருந்தவளை அவ்வப்போது பார்வையிட்டுக் கொண்டு தான் இருந்தான். மஹாவின் இறுக்கமான முகம் எல்லோர் கண்களிலும் பட்டு உறுத்திக் கொண்டு இருந்தது. அதிலும் ஜோதியின் கண்களும், பைரவியின் கண்களும் அவளை தொட்டு மீண்டு விட்டு இருவருமே கலக்கமாக ஷ்யாமை அவ்வப்போது பார்த்தனர். இவற்றையெல்லாம் கவனித்தவன், இனியும் ஈகோவை கட்டிக் கொண்டு அவளிடம் பேசாமல் இருப்பது சரியல்ல என்று நினைத்துக் கொண்டு,

அவளுக்கு அருகில் குனிந்தவன், “மஹா… நமக்கு ஒன்ஸ் இன் லைஃப்டைம்… ப்ளீஸ்… உன்னோட கோபத்தை எல்லாம் விட்டுட்டு பங்க்ஷன்ல மெர்ஜ் ஆகேன்…” தணிந்த குரலில் கூற, சற்று மெளனமாக இருந்தவள்,

“என்னால முடியல…” என்றவள், நெற்றியை பிடித்துக் கொண்டு தலை குனிந்து கொண்டாள். அவளால் ஒட்டவும் முடியவில்லை. வெட்டி விடவும் முடியவில்லை. அவள் ஒப்புக்கொண்டதால் தான் திருமணம் இந்தளவுக்கு வந்ததும். இவள் முடியாது என்று ஆத்மநாதனிடம் மறுத்துவிட்டிருந்தால் ஷ்யாமால் கூட எதுவும் செய்ய முடியாது தான். மகாவால் அதையும் செய்ய முடியவில்லை. இப்போது மனதார இங்கு ஒன்றவும் முடியவில்லை. குழப்பத்தில் தலைசுற்றியது.

“புரியுது… ஆனா நாம ரெண்டு பேரும் கிழவன் கிழவியானதுக்கு அப்புறம், என் பேரன் பேத்திகிட்ட எல்லாம் நான் சொல்லுவேன்… இந்த கிழவி, கல்யாணத்தப்ப உர்ருன்னு இருந்தான்னு… என்ன ஓகே வா?” கொஞ்சமும் சிரிக்காமல் அவளுக்கு மட்டும் கேட்குமாறு ஷ்யாம் கூறியதை கேட்டவளுக்கு அத்தனை கோபத்தையும் மீறி சட்டென சிரிப்பு வரும் போல இருந்தது. ஆனால் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

‘இன்னும் கல்யாணமே ஆகலையாம்… இதுல பேரன் பேத்திக்கு போய்ட்டாங்கய்யா…’

“ஏன் நீ மட்டும் தான் உன் மகனை பத்தி நினைக்கணுமா? நாங்க இன்னும் அட்வான்ஸ்ட்…” என்று அவளது மனதை படித்தவனாக கூற, அவள் பதில் ஏதும் பேசவில்லை.

அவளது மௌனம் அவனுக்கு சரியாக படவில்லை. மேலும் பேச்சை வளர்க்காமல் நிமிர்ந்தவனை முருகானந்தத்தோடு பேசிக்கொண்டிருந்த ஆத்மநாதன் கண்களால் என்னவென கேட்டார்.

‘ஒன்றுமில்லையென’ கண்களால் தெரிவித்தாலும், அவரது முகம் தெளிவாகவில்லை. மஹா முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறாள் என்பது புரிந்தது. ‘வேண்டாமென்றால் திருமணத்தை நிறுத்தி விடலாம்’ என்று அவளுக்கு ஒரு ஆப்ஷனையும் கொடுத்த பின்னும் இப்படி இருப்பது நாதனுக்கு மனதை ஏதோ செய்தது.

“இங்க பார் மஹா… நானா இங்கவே பார்த்துட்டு இருக்கார்… அவருக்கு நல்லாவே தெரியும்… நீ என்ன மூட்ல இருக்கன்னு… எல்லார் மனசையும் ஹர்ட் பண்ணியே ஆகணும்ன்னு நினைக்கிறியா?” அவளிடம் மிகச்சிறிய குரலில் ஷ்யாம் கேட்க, நிமிர்ந்து அவனை பார்த்தவளின் கண்களில் கலக்கம்.

“என்னை புரிஞ்சுக்கவே மாட்டியா ஷ்யாம்? உனக்கு நீ மட்டும் தான் முக்கியம் இல்லையா?” என்று கேட்க,

“எனக்கு என்னை விட நீ தான் முக்கியம் மஹா. ஆனா இந்த நேரத்துல இந்த மேரேஜ் ரொம்ப ரொம்ப அவசியம்… உனக்கு டைம் தர்றதுக்கு எனக்கு டைம் இல்ல… அதை நீயும் புரிஞ்சுக்க…”

“ரொம்ப போர்ஸ் பண்ற… எனக்கு ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா ஸ்ட்ரெஸ்புல்லா இருக்கு…”

“இங்க பார் மஹா… உன்னோட பயம் சங்கடமெல்லாம் என்னன்னு எனக்கு தெரியும்… ஐ மேக் எ ப்ராமிஸ்… கல்யாணம் மட்டும் பண்ணிக்க… அது போதும்… உனக்கா எப்ப நம்ம லைப்பை ஸ்டார்ட் பண்ணலாம்ன்னு தோணுதோ அப்ப பண்ணிக்கலாம்…” என்று வெகுவாக தகைந்து போய் அவளுக்கு மட்டும் கேட்குமாறு கேட்கவும், ஆச்சரியமாக பார்த்தாள்.

சுற்றிலும் அனைவரும் அமர்ந்திருக்க, யாரும் அறியாமல் அவன் கொடுத்துக் கொண்டிருக்கும் சத்தியத்தை உண்மையில் மஹா நினைத்தே பார்க்கவில்லை. ஆனால் அவளது மனம் தயங்கியது உண்மை!

“நிஜமாவா சொல்ற?” கண்களை விரித்து கேட்க, ‘இதுக்கு மட்டும் என்ன ரியாக்ஷன்டா ஏடுகொண்ட்லவாடா…’ என்று நினைத்தவன்,

“எஸ்… நிஜமா தான் சொல்றேன்…”

“இல்ல… நீ அப்புறமா என்னை கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணுவ…” என்றவளை யாருமறியாமல் முறைத்தவன்,

“வோர்ட் இஸ் எ வோர்ட்… அவ்வளவுதான் சொல்வேன்…” என்றவன், “கர்மம்… இந்த ரொமான்ஸ் நாவல்ஸ் படிக்கும் போது இப்படி கல்யாணம் கட்டி தள்ளி இருந்துக்கலாம்ன்னு சீன் வந்தாலே செம காமெடியா இருக்கும் எனக்கு… இப்ப நானே இப்படியொரு சீனை உன்கிட்ட சொல்ல வேண்டியிருக்கு பாரேன்… எல்லாம் என் நேரம்…” என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு கிசுகிசுப்பாக கூற,

“அந்த சீனெல்லாம் ஹீரோவுக்கு தான்டா…” என்று அவனுக்கு மட்டும் கேட்குமாறு கூறிய மஹாவை பார்த்து,

“அப்படீன்னா நாங்க யாராம்?” என்று கிண்டலாக கேட்க,

“நீயெல்லாம் ஹீரோன்னு சொன்னா எல்லாரும் அடிக்க வருவாங்க… ஒரு பழக்கத்தை விட்டு வெச்சு இருக்கியா? அத்தனையும் உண்டு… அத்தனைக்கும் மேல… ட்விட்டர் லீக்ஸ்… அதையும் நானே பார்த்து தொலைச்சு… சத்தியமா சொல்றேன்… எந்த ஹீரோவுக்கு இப்படியொரு ஓபனிங் இருக்காம்? இதுல ஹீரோவாம் ஹீரோ… கடுப்பேத்தாத… ஓடிடு…” என்றவளை கண்ணிமைக்காமல் பார்த்தான். இத்தனையும் உண்டு என்று எரிச்சல் பட்டாலும் தன்னை விட்டுக் கொடுக்க முடியாமல் திண்டாடும் காதலி ஒரு வரமல்லவா!

“அப்புறம் எப்படிடி ஓகே பண்ண?” கிண்டலாக இவன் கேட்க,

“அதான் எனக்கும் இப்பவரைக்கும் புரியல… என்னமோ ஏமாத்திட்ட…” என்று அவள் புலம்புவது போல கூற,

“இதை நம்ம அறுபதாம் கல்யாணத்துக்கு சொல்லேன்…”

“சியூர்… கண்டிப்பா…”

“சொன்னாலும் சொல்லுவடி…” என்றவன், சேலைகளில் மூழ்கினான்.

சற்று நேரம் பொறுத்து, சேலைகளை பார்த்துக் கொண்டிருந்தவளை சுரண்டியவன்,

“மஹா… ரொம்ப லேட் பண்ண மாட்ட தானே?” என்று மொட்டையாக கேட்க,

“ஏன்? எதுக்குடா?” என்று அவள் கேட்க,

“உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்னு சொன்னன்ல… அதுக்கு ஏதாவது டைம் லிமிட் மாதிரி வெச்சுக்கலாமா?” என்று கேட்க, அவனை முறைத்தாள். அவசரப்பட்டு வாக்கு கொடுத்து விட்டோமோ என்ற கடும் மனஉளைச்சலில் இருந்தான் ஷ்யாம். ‘சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி…’ என்று தந்தை கூறும் பழமொழி நினைவுக்கு வந்தது.

“அந்த டைம்லிமிட்டையும் நீங்களே சொல்லுங்களேன் மகாபிரபு… என்று கடுப்பாக கூற,

“ம்ம்ம்… ஒரு ஒன் வீக்?” என்று பிட்டை போட்டவனை பார்த்து இன்னமுமே முறைத்தவள்,

“முடியாது… இது ஆவறதில்ல… எனக்கு சேலையும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்…” என்று கையிலிருந்த சேலையை கீழே போட,

“அதெல்லாம் வேண்டாம்ன்னு தான் நானும் சொல்றேன்டி…” என்று அவன் முணுமுணுக்க, முதலில் புரியாதவள்,

“டேய்…” என்று பல்லைக் கடித்தாள்.

“மஹா… இந்த ரொமான்ஸ் நாவல்ஸ்ல ஒரே ஒரு மேட்டரை வெச்சு மொக்கையா அம்பது அறுபது எபிசொட் இழுப்பாங்க… நம்ம ரைட்டர் மாதிரி… அதையெல்லாம் படிச்சுட்டு கெட்டு போய்டாத… நிஜத்துல உன்னை மாதிரி சப்ப பிகரை பக்கத்துல வெச்சுகிட்டு இருந்தாலும் நிலவை பார்த்து வானம் சொன்னதுன்னு எவனும் பாட மாட்டான்… புரிஞ்சுக்க குல்பி…” மிகவும் தீவிரமான குரலில் கூறியவனை பார்த்து கண்கள் இடுங்க, ரத்தம் கொதிக்க, நரம்புகள் முறுக்கேற முறைத்தவள்,

“சப்ப பிகரு?” என்று கேட்க,

“சப்ப பிகரா? யார்ம்மா அது?” ஒன்றும் தெரியாதவன் போல கேட்க, அவனை முறைத்தவள்,

“டேய் ஒன்னும் தெரியாதவன் மாதிரி சீனை போடாத…”

“உன்னை மாதிரி சூப்பர் பிகர்ன்னு சொன்னதை நீ தப்பா நினைச்சுகிட்ட குல்பி… உங்க ஜட்ஜ்மென்ட் ரெம்ப தப்பு…” என்று வடிவேலுவை போல கூறியவனை இன்னமுமே முறைத்தாள்.

“நிஜமாத்தான்… உன்னைப் போய் சப்ப பிகர்ன்னு சொல்லுவேனா? அதுவும் பாம்பே மனிஷாவயே பீட் பண்ண பிகர் நீ குல்பி…” என்று கண்ணடித்தவனை மண்டையிலேயே எதையாவது எடுத்து அடிக்க வேண்டும் போல ஆத்திரம் கிளம்பினாலும் சுற்றிலும் இருந்தவர்களை கருத்தில் கொண்டு தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டாள்.

“வேண்டாம்… உன்னோட வேலையெல்லாம் இங்க காட்டாத… எல்லாரும் இருக்காங்க…” என்றவள், “நேத்து அவ்வளவு சண்டை போட்டுட்டு போன… இப்ப ஒண்ணுமே நடக்காத மாதிரி பேசுற… உன்னோட டிசைனையே புரிஞ்சுக்க முடியலையே…”

“என்னடி பண்றது? சூடு சொரணை எல்லாம் முதல்ல முரண்டு பண்ணுது… ஆனாலும் என்ன பண்ண? எல்லாத்தையும் விட்டுட வேண்டியதா இருக்கு…” என்றவனின் முகத்தில் விசாரமான புன்னகை.

“ம்ம்ம்… பார்க்க கூடாத அத்தனையும் பார்த்தும் உன்கூட மேரேஜ் வரைக்கும் வந்துருக்கேன்னா எனக்குத்தான் அதெல்லாம் இல்ல ஷ்யாம்…” என்றவளை ஆழ்ந்து பார்த்தவன், நிமிர்ந்து,

“ம்மீ… சாரி சூஸ் பண்ணி முடிச்சவுடனே எனக்கு கால் பண்ணுங்க… நானும் கார்த்திக்கும் வெளிய வெய்ட் பண்ணிட்டு இருக்கோம்…” எனக் கூற, மஹா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது கண்களில் தெரிவதென்ன? கவலையா? கலக்கமா? ஆற்றாமையா? பரிதவிப்பா? ஏதோவொன்று! அந்த பெயர் கூற முடியாத உணர்வை சுமந்து கொண்டு அவள் பார்த்த பார்வையை கண்களால் ஏந்தியவனால் சொன்னதை செய்ய முடியவில்லை.

யாரிடமும் அவனது மனம் படும் பாட்டை கூற முடியாது. அதுபோல, யாரிடமும் அவளது மனதை திறந்து காட்டவும் முடியாது. அது அவளது ஷ்யாமின் மரியாதை சம்பந்தப்பட்டது. பிருந்தாவிடம் கூட, அவளது உயிர் தோழியானாலும் சரி, வருங்கால அண்ணியாக இருந்தாலும் சரி, அவளால் வெளிப்படையாக தன்னுடைய உணர்வுகளை கூற முடியாத நிலையிலிருந்தாள்.

ஷ்யாம் மேல் அவள் கொண்ட காதல் அத்தகையது. காதலா இல்லையா எனும் போதே அவனை விட்டுக் கொடுக்க முடியாதவள், இப்போது காதலென்று அறிந்தும், திருமணம் நிச்சயமான நிலையிலும், அவனது அத்தனை பிரஸ்தாபங்களை பார்த்தும், விட்டுக் கொடுக்கவும் முடியாமல், விட்டும் போக முடியாத நிலையில் திரிசங்கு சொர்கத்தில் தவித்ததை ஷ்யாம் உணர்ந்து கொண்டிருந்தான். ஆனாலும் அவள் காயப்படுத்தும் போது?


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!