VNE60(2)
VNE60(2)
கிண்டி ரயில் நிலையத்தின் அருகில் காரை நிறுத்தினான். கண்களில் சோர்வையும் உறக்கத்தையும் சுமந்து கொண்டிருந்த மக்களை ரயில் துப்பி விட்டு சென்றது. அருகிலேயே ரேஸ் கோர்ஸ்… ஒருபுறம் குதிரையை வைத்து மனிதனாடும் சூதாட்டம்… மறுபுறத்தில் காலம் மனிதர்களை வைத்தாடும் சூதாட்டம், நிற்க நேரமில்லாமல், மின்சார இரயிலில் பயணித்து, அடிபட்டு மிதிபட்டு, அடிப்படை தேவைகளுக்காக பணத்தை தேடி ஓடும் மனிதர்கள்!
அந்த ஓட்டம் என்பது எதை நோக்கி என்பதைத்தான் மனிதர்கள் உணர்வதே இல்லை. வாழ்க்கையை தேடி… நிம்மதியை தேடி… உறக்கத்தை தேடி… புன்னகையை தேடி… உயிர் மூச்சை தேடி ஓடுவதும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது.
“சர்… கிண்டி ஸ்டேஷன் வந்துட்டோம்… எங்க வர்றது?” என்று கார்த்திக் தான் விசாரித்தான். ஷ்யாம் இறுக்கமாகவே அமர்ந்திருந்தான்.
அந்த இடத்தை நோக்கி போன போதும் கூட, கார்த்திக்கின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டான்.
“அவளா இருக்காது கார்த்திக்…” உறுதியாக கூறினாலும், கண்களில் கலக்கம். தவறியும் அப்படி இருந்து விட கூடாது என்று.
“கண்டிப்பா இருக்காது மச்சான்…” என்றவன், அவனை சமாதானப்படுத்தி அழைத்து செல்ல, அந்த இடத்தை நெருங்கும் போதே, அவனது கால்களில் நடுக்கம்.
“இருக்காதுல்ல…” என்று ஹீனமாக கேட்க,
“கண்டிப்பா இருக்காது…” தனக்கு தானே தைரியம் சொல்லிக் கொண்டான் கார்த்திக்.
‘இத்தனை காதலை புரிந்து கொள்ளவில்லையா மஹா?’ மனதுக்குள் கேட்டுக் கொண்டான்.
“ஹலோ ஷ்யாம் சர்…” கைக் கொடுத்தார் அவனுக்காக அங்கே வந்திருந்த கமிஷனர்.
“ஹலோ சர்…” என்று கைக்கொடுத்தவனின் கண்களில் ஜீவனில்லை.
எதுவும் பேசாமல் அந்த பெண்ணின் சிதைந்த உடலைப் பார்த்தான். அடையாளம் காண்பதற்கும் முடியாத அளவு சிதைந்திருந்தது. ஆனால் சுடிதாரோடு இருந்தாள் அந்த பெண்.
“உப்ப்ப்ப்…” ஒரு நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டான் ஷ்யாம். அந்த உடல் தன்னவளுக்கு சொந்தமானது இல்லையென்ற உணர்வில் வந்த பெருமூச்சு. ஆனால் இறந்த ஆன்மாவுக்காக பரிதாபப் பட்டவன், அருகில் நின்று கொண்டிருந்த கார்த்திக்கிடம், சற்று விடுதலை உணர்வோடு,
“இல்ல டா… இது மஹா இல்ல…” என்றான், சிறு கண்ணீரோடு!
பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக்கும் அதைதான் நினைத்துக் கொண்டிருந்தான்.
“அதான் சொன்னன்ல… நம்ம மகாவா இருக்காதுன்னு… நீ தான் ரொம்ப நடுங்கற மச்சான்…” என்றவனுக்கும் சற்றேயான மகிழ்ச்சி. அந்த பெண் மஹா இல்லை என்பதில்!
“அவ விஷயத்துல எனக்கு என்னைக்கு அறிவு வொர்க் பண்ணிருக்கு? இப்ப மட்டும் வொர்க் பண்ண?” என்று கேட்டான் கசப்பான புன்னகையோடு.
அங்கிருந்த சிமென்ட் இருக்கையில் சரிந்து அமர்ந்தான் ஷ்யாம். அந்த பெண் மஹா இல்லையென்றாலும் ‘மஹா எங்கே?’. மீண்டும் மீண்டும் மனம் இதே கேள்வியில் ஆழ, தொடையில் முழங்கைகளை ஊன்றி, கைகளின் மேல் தலையை குவித்து வைத்துக் கொண்டான். வாழ்க்கையில் எல்லாவற்றையும் தொலைத்து விட்ட உணர்வு!
வெளியில் எத்தனை வெற்றி பெற்றாலும், வாழ்க்கையில் தோற்று விட்டால் வாழ்வதில் அர்த்தம் உள்ளதா? மூச்சு விடவே சிரமமாக இருந்தது.
“அது என்னமோ வாஸ்தவம் தான்… அறிவு இருக்கவன், ஒரு பொண்ணுக்காக இருபது கோடியை மொத்தமா தூக்கிக் கொடுப்பானா? இப்படியெல்லாம் நீ இருந்தா, அது இன்னும் தான் தலைல ஏறி மொளகாய் அரைக்கும். கொஞ்சமாவது அதுகிட்ட கெத்து காட்டு மச்சான்னு நான் எத்தனை முறை சொல்லிருப்பேன். அப்படி இருந்து இருந்தா இப்படியெல்லாம் போக தோணுமா? உன்னை தான் சொல்லணும்…” கூடவே அவனோடு அமர்ந்தவன், ஒரு பிரச்சனை முடிந்த அந்த விடுதலை உணர்வில் ஷ்யாமை போட்டுத் தாக்கினான் கார்த்திக்.
“அத்தனையும் அவளோடது… அதை அவ புரிஞ்சுக்கல… அவ்ளோதான்… அதுக்காக நான் மாற முடியாது…” என்றவனை பார்த்து மெலிதாக புன்னகைத்தான்.
“எனக்கு வர்ற கோபத்துக்கு உன் பொண்டாட்டி மட்டும் என் கைல கிடைக்கட்டும். வெளுத்துடறேன் பாரு…” என்று கார்த்திக் பொருமினான்.
பேசிக் கொண்டிருக்கும் போதே அருகில் நிழலாடியது!
நிமிர்ந்து பார்த்தான்!
விஜி!
கையில் இன்னமும் ஸ்டிக் வைத்திருந்தான். முகத்தில் மெல்லிய பதட்டமும் கூட!
“உங்களை இங்க வெரிபிகேஷன்க்காக கூப்பிட்டதா கேள்விப்பட்டேன் பாஸ்…” என்றவன் தயங்கியபடியே நின்றிருக்க,
“உக்காருடா…” என்றவன், அருகிலிருந்த இருக்கையை காட்ட,
“இருக்கட்டும் பாஸ்… அது மேடம் இல்லைல…” என்று கேட்டவனுக்கும் திக் திக் என்றிருந்தது. அவன் ஆசைப்பட்ட பெண் தான். அவளுக்காக அத்தனை செய்யக் கூடாத வேலைகளை எல்லாம் செய்தான் தான். இப்போது அவள் ஷ்யாமின் மனைவி என்றாலும், அவளுக்கு ஒன்றென்னும் போது விஜியால் அவனிடத்தில் இருக்க முடியவில்லை.
“ம்ம்ம்… இல்ல…” என்று கூறியவனை பார்த்த அவனது பார்வையில் சற்று நிம்மதி தெரிந்தது.
அந்த உணர்வு ஷ்யாமை குத்தியது. மஹாவை கஸ்டடி எடுத்தபோது விஜி எந்தளவு துடித்தான் என்பதை உடனிருந்து பார்த்தவன் ஷ்யாம். முடிந்தவரையில் அவளுக்காக போராடினான், அவனை வெளிப்படுத்திக் கொள்ளாமல்!
அதற்க்கெல்லாம் சேர்த்து வைத்து காலம் தன்னை பழி வாங்குகிறதா என்று கேட்டுக் கொண்டான், தனக்குள்ளாக!
“கண்டிப்பா வந்துருவாங்க பாஸ்…” என்று தைரியம் கூறியவனின் முகத்தை ஆழ்ந்து பார்த்தான். அவனது வார்த்தைகளில் பொய்மை தெரியவில்லை.
“ம்ம்ம்…” என்றபடி முகத்தை அழுத்தமாக பிடித்துக் கொண்டான்.
“உங்க மேல ரொம்ப பிரியம் வச்சு இருக்காங்க பாஸ்… அவங்களால எங்கயும் போக முடியாது…” அவ்வளவு உறுதியாக கூறியவனை ஆச்சரியமாக பார்த்தான். அவனது பார்வையிலிருந்த கேள்வியை உணர்ந்தவன்,
“உங்க மேல எவ்வளவு ப்ரியம் வெச்சு இருக்காங்கன்னு எனக்கு தெரியும் பாஸ்…” என்றவன், “கொஞ்சம் கோபம் வரும் தான். ஆனா உங்களை அவங்க விட்டே கொடுத்தது இல்ல… கண்டிப்பா இப்பவும் வந்துடுவாங்க…” என்று உறுதியாக கூற,
“தேங்க்ஸ்டா…” என்றான் முகத்தை அழுத்தமாக துடைத்தபடி!
“ஆக மொத்தம் ரெண்டு பேரும் சமாதானம் ஆயாச்சு…” என்று மெலிதாக புன்னகைத்தான் கார்த்திக்!
“அப்படி இல்ல கார்த்திக். கண்டிப்பா நான் பாஸ்க்கும் எனக்கும் பிசினஸ்ல ஹெட் டூ ஹெட் ட்ரையல் தான். ஆனா மேடம் விஷயத்துல அப்படி இருக்க முடியாது. எனக்கு நினைவே இல்லாதப்ப கூட அவங்களை என்னால….” என்று நிறுத்தியவன், “அதெல்லாம் பாசிங் கிளௌட்ஸ் தான். ஐ நோ. ஆனா அவங்களுக்கு எதாவது கஷ்டம்னா கண்டிப்பா முதல் ஆளா நான் இருப்பேன். யாரும் இல்லைங்கற நினைப்புல யாரும் ஆட கூடாது…” என்று சற்று மிரட்டலாக முடிக்க, நிமிர்ந்து விஜியை பார்த்த ஷ்யாமின் முகத்தில் மெல்லிய புன்னகை!
ஷ்யாமின் செல்பேசி அழைத்தது.
சௌஜன்யா தான் அழைத்தாள். மனம் சோர்வாக இருந்தது. அவளது பெயரை பார்க்கும் போதே வெறுப்பாக கூட இருந்தது. இவளால் தானே மஹா இப்படி செய்தது. அவள் செய்தது முட்டாள்தனமாக இருந்தாலும், இவளது பெயரை பார்த்தாலே வெறுப்பு மேலெழுவதை அவனால் தவிர்க்க முடியவில்லை.
அதே உணர்வோடு அழைப்பை ஏற்று,
“சொல்லுங்கம்மா…” என்று கேட்க,
“சர்… மேடம்…” என்று அவள் இழுக்க,
“ம்ம்ம்….” என்றான். அவனுக்கு அவளிடம் பேச விருப்பமே இல்லை எனும் போது என்ன பதில் சொல்வது? அதிலும் குடும்ப விஷயத்தை எத்தனை பேரிடம் விவாதிப்பது?
“மேடம்… இங்க வடபழனி கோவில் கிட்ட இருக்காங்க சர்…” என்று சௌஜன்யா கூற, அவனது காதுகள் கேட்டது உண்மையா என்று அவனுக்கே புரியவில்லை.
“என்ன சொல்றீங்க சௌஜன்யா?” கேட்டது உண்மையா என்று அவனுக்கு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
“எஸ் சர்… அங்க தான் இருக்கேன்… ஆனா மேடம் கிட்ட போக பயமா இருக்கு. என்னை கண்டா அவங்களுக்கு பிடிக்காது… அதான் தள்ளி நின்னுட்டு இருக்கேன்…” என்று கூற,
“நல்லா தெரியுமா? அது மஹா தானா?” என்று பரபரப்பாக கேட்க, மற்ற இருவரும் இன்னும் பரபரப்பானார்கள்.
“கண்டிப்பா சர்… அது மேடம் தான்…” உறுதியாக கூறினாள் சௌஜன்யா.
“ஓகே… அங்கேயே இருங்க… இன்னும் அரை மணி நேரத்துல வடபழனி முருகன் கோவில்ல இருப்போம்…” என்றவன், இருவரிடமும் சொல்லாமல் கூட வேகமாக ஓடினான், வாகனத்தை நோக்கி.
*****
ஷ்யாம் சொன்ன அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே வந்து சேர்ந்திருந்தான். பின்னாலேயே விஜி, அவனது வாகனத்தில், டிரைவரோடு! கோவில் நடை மூடியிருக்க, அதற்கு அருகில், பர்தா அணிந்து கொண்டு சௌஜன்யா நின்றிருந்தாள். அவளை மறைத்துக் கொள்ள, அவள் எப்போதும் அணிவது அது!
பரபரப்போடும் பயத்தோடும் அவள் வாசலில் காத்திருக்க, ஷ்யாமையும் கார்த்திக்கையும் கண்டத்தில் முகம் பிரகாசமடைந்தது!
“எங்க ம்மா?” என்று அவசரமாக ஷ்யாம் கேட்க, அவள் கோவிலின் பக்கவாட்டு சந்தை கை காட்டினாள்.
வேகமாக நடையை எட்டிப் போட்டவன் கண்டது, கோவில் சுவரில் சாய்ந்து நின்றபடி குளத்தை வெறித்து பார்த்தபடி நின்றிருந்த மஹாவைத்தான்!
கண்களில் நீரின் பளபளப்பு… முகத்தில் வெறுமை… கைகளை கட்டிக் கொண்டு நின்றிருந்தவளை கண்டவுடன் ஓடிப் போய் இறுக்கமாக கட்டிக் கொள்ள தோன்றினாலும் கால்களில் கல்லைக் கட்டிக் கொண்டது போல தோன்றியது.
ஷ்யாமல் கால்களை எடுத்து வைக்க முடியவில்லை. அப்படியே நின்ற இடத்திலேயே நின்று கொண்டான். மூவரும் வந்த சப்தம் கேட்டு திரும்பினாள் மஹா.
திரும்பியவளின் கண்களில் பட்டது ஷ்யாம் ஒருவனே!
வெறுமையான அந்த கண்களை சந்தித்தவளின் கண்களும் வெறுமையை சுமந்தது. ஆழ்ந்து அவனை பார்த்தவளின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது. அழவில்லை… ஆனாலும் கண்ணீர் நிற்கவில்லை!
ஒரு முழு நிமிடம் முழுதாக கரைய, அருகில் நின்றிருந்த சௌஜன்யாவை பார்த்தாள் மஹா.
அதுவரை ஷ்யாமுக்கும் அவளுக்குமிடையே இருந்த மாயவலை அறுந்தது!
இறுக்கமான முகத்தோடு சௌஜன்யாவை நோக்கி வந்தவள், அவளை உறுத்து விழித்து,
“அடுத்தவ புருஷனே தான் உனக்கு வேணுமா? சவால் விட்டல்ல… அசிங்கமா இல்ல?” என்று கோபம் கொந்தளிக்க கேட்டவள், பளாரென அவளை அறைந்தாள்!
திடுக்கிட்டு பார்த்தான் கார்த்திக். உள்ளுக்குள் பெரிதாக அடி வாங்கினான் ஷ்யாம். அது அவனது தன்மானத்தின் மேல் விழுந்த அடி… அவனுக்கு விழ வேண்டிய அடி!