நல்ல உறக்கத்திலுருந்தவனை அவனது உறக்கத்தை எப்பாடு பட்டாவது கலைப்பேன் என்று சாகும் தருவாயில் இருந்த தனது தாய்க்கு சத்தியம் செய்துக் கொடுத்ததைப் போல் யாதவின் கைப்பேசி விடாமல் அடித்துக்கொண்டிருந்தது…
அந்த ஒலியில் மிகவும் கஷ்டப்பட்டு இமைகளைப் பிரித்தவனது பார்வை தான் இருக்கும் இடத்தைக் கிரகித்துக்கொள்ள முயன்று தோற்றது…இது என்ன இடம்… இந்த இடம் ஏன் இப்படி இருக்கிறது…என்று யோசித்தவனது நினைவடுக்களில் ஏதோ தெளிவில்லாத பிசுபிசுவென்ற காட்சிகள்…
தலையில் ஏதோ பாறாங்கல்லை வைத்ததுப் போல் அது வேறு விண்வினென்று தெரித்துக்கொண்டிருந்தது…
அலைப்பேசி இன்னும் ஓய்ந்தப் பாட்டை காணோம்…அதை எடுத்து பேசுவோம் என்று நினைத்தவன் தனக்கு அருகிலிருந்த மேசையிலிருந்த கைபேசியை எடுக்கமுயற்சி செய்தான் முடியவில்லை…
வலக்கையால் தனது தலையில் அடித்தவன் “ச்சை இந்த கருமத்துக்கு தான் நான் குடிக்குறதே இல்லை…”இந்த வார்த்தைகளை கூறியபின்பு தான்…தன்னிடம் நேற்று தலைசாய்த்து “சரக்கு அடிக்கலாமா….”என்று கேட்டவளின் ஞாபகம் யாதவிற்கு வந்தது…
“ஆமா அந்த பஜாரியை எங்க….”என்று வாய்விட்டு யாதவ் கேட்டப்போது “ம்ம்ம்…”என்ற முனங்கலுடன் அவனது நெஞ்சில் பூனையாய் தனது தலையை உரசியவாறு யாதவை இன்னும் கொஞ்சம் நெருங்கி அணைத்துக்கொண்டாள் ஷா…
“வாட் தி ****”என்று அதிர்ச்சியில் கத்தியவாறு அவளை தன்மீதிருந்து தள்ளி விட்டு வேகமா எழுந்து நின்றான் யாதவ்…
என்ன செய்து வைத்திருக்கிறான்…மானம் போச்சு…கற்பு போச்சு…எல்லாம் போச்சு…ஏழுமலையப்பா…என் பொண்டாட்டிக்கு மட்டும் பத்திரமா பாதுகாத்து கொடுக்கவேண்டிய என் கற்பை எவ்ளோ ஒரு ஷாக்கு கொடுத்துட்டு இப்படி தடிமாடு மாதிரி நிக்குறேனே… இந்த நிமிஷமே என் உயிர் போகக்கூடாதா…ஐயோ இவ யாருனு வேற தெரியலையே…நேத்து என்ன நடந்துச்சுனு வேற தெரிலையே…ஐயோ ஐயோ என்றவன் குறுக்க மறுக்க நடந்துக்கொண்டிருந்தான்….
ஒரு பக்கம் அலைப்பேசி வேறு இவனுக்கு போட்டியாக உயிரைக் கொடுத்து கத்திக்கொண்டிருந்தது…
யாதவ் தள்ளிவிட்டதில் படுக்கையிலிருந்து உருண்டு கீழேவிழுந்திருந்தாள் ஷா…அதில் அடித்துபிடித்து எழுந்து அமர்ந்தவள் படுக்கையின் மீது தலைசாய்த்து குறுக்க மறுக்க நடந்துகொண்டு பைத்தியக்காரனை போல் பிதற்றும் அவனையும்…அவனுக்கு டப் காம்பெடிஷன் கொடுப்பதுபோல் பேய்போன்று கத்திக்கொண்டிருக்கும் அவனது அலைபேசியும் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் ஷா…
இன்னும் அவள் எழுந்ததை பார்க்காத யாதவ் ஒரு வேளை இவ எதுவும் காசு பறிக்குற கும்பலை சேர்ந்தவளா இருப்பாளோ..தெரியாம என் மேலே விழுகுற மாதிரி விழுந்து என்னை அடிச்சு எல்லாம் திட்டம் போட்டு கூட்டிட்டு வந்து எல்லாத்தையும் படம் எடுத்து என்னை மிரட்டுவாளோ…என்று அவன் பாட்டுக்கு தனது சிந்தனை போனப் போக்கில் பிதற்றிக்கொண்டு இருந்தான்…
விட்டா இந்த வெள்ளைப்பன்னி இன்னைக்கு முழுக்க புலம்புவான் போலயே…என்று நொந்த ஷா…தனக்கு அருகிலிருந்த தலையணையை எடுத்து அவன் மீது விட்டுஎறிந்தாள்…அது சரியாய் அவனை போய் தாக்கியதில் திரும்பி பார்த்தான் யாதவ்…
யாதவின் பார்வை தன் மீது பட்டவுடன் வலதுக்கையை மேல்தூக்கி ஆட்டி”ஹாய்…நான் இங்கே இருக்கேன்…”என்று கூறிய ஷா கஷ்டப்பட்டு படுக்கையை பிடித்து எழுந்துநின்றாள்…எழுந்து நின்றவுடன் தலை பயங்கரமாக சுத்த ஆரம்பிக்க தலையை குலுக்கி சுற்றி பார்த்தாள்…அது ஒரு ஹோட்டல் அறை என்று உணர்ந்தவள் இண்டர்காமை எடுத்து ஹாங்கோவர் போவதற்காக இரண்டு எலுமிச்சை சோடா ஆர்டர் செய்துவிட்டு படுக்கையில் சென்று அமர்ந்தவாறு அந்த அறையை சுற்றி கண்களை சுழல விட்டாள்…அனைத்து பொருள்களும் உடைக்க பட்டு இருந்தன…திரைசீலை எல்லாம் கிழிந்து தொங்கிக்கொண்டிருந்தது..அதைவிட மோசம் அங்கிருந்த பெரிய சைஸ் தொலைக்காட்சி சல்லிசல்லியாக நொறுங்கி கிடந்தது…போதா குறைக்கு சுவர் முழுவதும் வைன் சரக்கு சைடிஷ் என்று பாரபட்சம் இல்லாமல் சிதறிக் கிடந்தது…ஒரு ஹை ஹீல்ஸ் செருப்பு ஒன்று மீன் தொட்டியில் கிடந்தது…
யாதவ் ஏதோ அவளை பார்த்து கூற வாய் எடுத்தவனை தனது இதழில் ஆள்க்காட்டி விரலை வைத்து அமைதியாக இரு என்பதை போல் சைகை செய்தவள் தலையை பிடித்தவாறு அமர்ந்திருந்தாள்…
அவளுக்கும் நேற்று என்ன நடந்ததென்று தெரியவில்லை…யோசிக்கவேண்டி இருந்தது… அதற்காகவெல்லாம் இந்த கூமுட்டை போல கியாகியா என்று கத்தாமல் யோசிக்கவேண்டும்…அதற்கு முதல் இந்த தலைச்சுற்றலை நிற்பாட்ட வேண்டும்…என்று நினைத்தவாறு அமர்ந்திருந்தாள்…
இரு நிமிடங்களுக்கு பிறகு வாயிற் ஒலிப்பு மணி அடிக்கவும் எழுந்துச் சென்று கதவை திறந்து அவள் ஆர்டர் செய்திருந்த எலுமிச்சை சோடாவை கொண்டுவந்தவரிடம் இருந்து வாங்கியவள் சிரித்தவாறு அவரை அனுப்பிவிட்டு…உள்ளேவந்து யாதவ் கையில் ஒன்றை கொடுத்துவிட்டு தான் ஒன்றை எடுத்து மடமடவென்று பருகரம்பித்தாள்…ஷா குடித்துவிட்டு கோப்பையைக் கீழேவைக்கும் வரை அவளையே கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் யாதவ்…
அவன் மனதில் தோன்றிய ஒரே ஒரு வரி “என்ன பொண்ணு டா இவ…”
கோப்பையை கீழேவைத்துவிட்டு யாதவை நிமிர்ந்துபார்த்தவள் “இன்னும் குடிக்கலையா நீ,…குடிச்சுட்டு மொத அந்த சனியனை எடுத்து என்னனு கேளு…”என்று அவள் எழுந்துவந்ததில் இருந்து சிறிதுநேரத்துக்கு கம்மென்று இருந்துவிட்டு இப்பொழுது கத்தரம்பித்த கைபேசியை கை காட்டியவாறு கூறினாள் ஷா…
ஷாவை பார்த்து தலையாட்டிவன்…அதற்கு பின்பு தான் “நாம ஏன் எல்கேஜி பையன் மாதிரி நேத்துல இருந்து இவ சொல்லறதை கேட்டுட்டு இருக்கோம்…எங்க அப்பன் வளர்ந்து கெட்ட ரகுவரன் சொல்றதையே கேட்கமாட்டோமே…”என்று அவளையே பார்த்தவாறு தனக்குள் பேசிக்கொண்டிருந்தான் யாதவ்…
அவன் முகத்திற்கு முன்பு சுடக்குப் போட்டவள் “இங்கே என்ன அவதார் டூ படமா ஓடுது…வேகமா குடிச்சுட்டு போனை அட்டென்ட் பண்ணு மேன்…”என்றவள் நேற்று நடந்ததை அனைத்தையும் அவளது மூளை நினைவு மீட்புச் செய்ய முயன்றுக்கொண்டிருந்தது…
அவளது அதிகாரத்தில் சமநிலைக்கு வந்தவன் அப்பொழுது தான் தன் கற்புக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டது மீண்டும் ஞாபகத்துக்கு வர அவளிடம் எகிற ஆரம்பித்தான்…
“யாரு டி நீ…உன்னால முப்பத்து ரெண்டு வருசமா பாலிதீன் பை போட்டு மூடி பாதுகாத்து வைச்சுருந்த கற்பு போச்சு டி….கற்பை இழந்தது தான் இழந்தேன்…நல்ல பொண்ணுகிட்ட இழந்துருக்க கூடாது…போயும் போயும் உன்னை மாதிரி ஒருத்திகிட்ட இப்படி அநியாயமா இழந்துட்டு நிக்குறேனே டி….”
என்று ஆணான தானே இவ்வளவு பதட்டப்படும் போது இவள் இப்படி அமைதியாக நிக்கிறாள் என்றால் இவளுக்கு இதெல்லாம் சாதாரண காரியம் போல என்று புலம்பினான்…
ஷாவோ “சீரியஸ்ல்லி…”என்று தலையை ஆட்டி கேட்டவள் அவனை மேலிருந்து கீழ் வரை நிதானமாக ஏறிட்டாள்…
அதில் அவள் பார்வை புரிந்தவனாக யாதவ் “ச்சி…ச்சி…டபுள் மீனிங்க்ல யோசிக்காத டி…”என்று பதறினான்…
“முண்டம்…நமக்குள்ள அப்படி ஏதாவது கசமுசா நடந்து இருந்தா எப்படி டா நீயும் நானும் டிரஸ் ஓட இருக்க முடியும்…”என்று கூறியவள் குனிந்து தன்னை பார்த்தவள் அதிர்ந்தாள்…அவள் நேற்று போட்டிருந்தது ஒரு டாப் ஜீன்ஸ் அனால் இன்று அவள் அணிந்திருப்பது மஞ்சள் நிற sheath உடை எனப்படும் முழங்கால் வரை மட்டுமே இழுத்து பிடித்திருக்கும் உடை…இவ்வளவு நிறம் இருந்த அவளது நிதானம் எகிறி குதித்து பின்வாசல் வழியாக ஓடிப்போக
“****up ….பாஸ்டர்ட்…***ass “என்று வாய்க்கு வந்த வார்த்தைகளில் எல்லாம் திட்ட ஆரம்பித்து இருந்தாள்…முதல் வார்த்தையில் இவள் யாரை திட்டுகிறாள் என்று சுற்றும் முற்றும் பார்த்தவன் அந்த அறையில் யாரும் இல்லாததால் தன்னை தான் திட்டுகிறாள் என்று உணர்ந்தவன்…அவனும் கோபமாகி கூற கூடாத வார்த்தைகளை ஷாவை நோக்கி திட்டினான்…
மாற்றி மாற்றி இருவரும் திட்டிக்கொண்டிருக்க…பாவம் அந்த கைபேசி கிட்டத்தட்ட ஒருமணி நேரமாக தொண்டை தண்ணீர் வற்ற கத்திக்கொண்டிருக்கிறது…அதற்கு மட்டும் கைகால் இருந்திருந்தால் இந்நேரத்துக்கு எழுந்துவந்து இருவருக்கும் காதை சேர்த்து ஒரு கொடுப்பு கொடுத்து “தரித்திரங்களா…எவ்வளவு நேரம் இங்கே ஒருத்தன் கத்திட்டு கிடக்கேன்….எவனாச்சும் எடுக்கிறிங்களா…நீங்க எடுக்கலைனு அங்குட்டு இருக்க மூதேவிக்கு தான் அறிவு இருக்கா…செத்த நேரம் கழிச்சு போடுவோம்னு…”என்று திட்டி விட்டு காறித்துப்பிருக்கும்…
அந்த உயிர் இல்லா ஜீவனின் துர்தர்ஷ்டமோ…இல்லை இந்த இரு கிறுக்களின் அதிர்ஷ்டமோ அப்படி ஒரு அலைபேசியை யாரும் இன்னும் கண்டுபிடிக்கவில்லை…
இறுதியில் கத்திகத்தி அது தன் இன்னுயிரை திறந்து இருந்தது…
சரி வாங்க…நாம அவங்க சண்டைக்கு போவோம்…அட ச்சி இன்னும் ரெண்டும் சண்டைபோட்டுட்டு தான் இருக்குங்க…சரி ஓரமா உட்கார்ந்து அதையாச்சும் பார்ப்போம்…ம்ம்ம்ம்
“இங்கே பாரு டி…போயும் போயும் உன்னை போய் நான் என்ன பண்ணப்போறேன் டி…என் உயரம் என்னனு தெரியுமா டி… “
“அதான் நல்லா மூணு வேளைக்கு நாலு வேளையா தின்னு பனைமரம் மாதிரி இருக்கியே…என்ன ஒரு ஆறு புள்ளி ரெண்டு இருப்பியா…”என்று ஷா நக்கலாக கேட்கவும்…
“”க்க்ர்ர்ர்..”என்று பல்லைக்கடித்த யாதவ் “ஓங்கி ஒரு குத்துவிட்டேன்..டபலிச்ச டின் மாதிரி மூஞ்சி மாறிடும்…சொல்லிட்டேன்…”
“ஆமாம் இவர் எங்க மூச்சில குத்துறவரைக்கும் நாங்க கடுபுள் பிளவரை (kadupul flower)போட்டோ எடுத்துட்டு இருப்பேன்னு நினைச்சியா…. நாங்க எல்லாம் பல்லுலையே பாய்சன் வைச்சு இருக்கவங்க…கடிச்சேன்னு வை நேரா பரலோகம் தான்…”
“ஆஆஆ..பயந்துட்டேன்…பயந்துட்டேன்…சரி தான் போடி டக் வாத்து…”
“போடா…விளக்கெண்ணெய் குடிச்ச கொரங்கு…”என்று இவர்கள் சண்டையில் மறந்தது இவர்கள் இருவரின் முன்னாள் காதலர்களுக்கு இன்று திருமணம்…இருவருமே கண்டிப்பாக அங்கு இருக்கவேண்டும்…இல்லாவிடில் இவர்கள் குடும்பத்திற்கு மட்டுமின்றி இந்த சமுதாயத்துக்கே பதில் சொல்லவேண்டும்…
“முதல் வேலையா ஹாஸ்பிடல் போய் செக் பண்ணி பார்ப்பேன்…நான் மட்டும் வெர்ஜின் இல்லைனு வந்துச்சு…உன்மேல கற்பழிப்பு கேஸ் தான் டி…”என்று சொன்னான் பாருங்கள் ஷாவிற்கு கோவம் புசுபுசுவென்று வந்துவிட்டது…
“இந்த உலகத்துலயே கடைசி ஆம்பளை நீ தான் அப்படினா கூட உன் பக்கத்துல வர மாட்டேன் டா…என் கனவை அழிச்சவன் டா நீ…பாவமே பரிதாபமா இருக்கியேனு கூப்டுட்டு வந்ததுக்கு என்ன என்னமோ பண்ணிட்ட…நேத்து என்ன நடந்ததுன்னு ஞாபகம் இல்லை…அது மட்டும் ஞாபகம் வரட்டும் உனக்கு இருக்கு டா…”என்று எட்டி அவன் சட்டையை பிடித்து அவள் கத்தவும் …யாதவிற்கு இவள் கூறிய வார்த்தைகளில் கோவம் வர “ஏய்”என்று அவளை உதற முயற்சிக்க அவள் இவனையும் சேர்த்து இழுக்க இருவரும் படுக்கையில் குறுக்காக விழுந்தனர்…
ஷாவின் மீது யாதவ் முழுதாக விழுந்துகிடக்க எழுந்திருக்க அவள் செய்த முயற்சியில் வன்மையான அவனது இதழில் இவளது மென்மையான இதழ் அழுத்தமாக உரசி விலகியது…
அதில் யாதவனின் உடல் சிலிர்த்து அடங்கியது…ஷாவிற்கும் எதுவோ செய்தது…அமைதியாக அவளை விட்டு விலகி அமர்ந்தான் யாதவ்…அவளும் தன்னை நிதானித்து கொண்டு அவனின் அருகில் அமர்ந்தாள்
ஐந்து நிமிட இடைவேளைக்கு பிறகு இழுத்து மூச்சை விட்ட ஷா “நாம எப்படி இங்கே வந்தோம்…நேத்து என்ன தான் ஆச்சு…ஒன்னும் ஞாபகத்துக்கு வரமாட்டுது…”என்று கூறியவுடன் யாதவும் ஆம் என்பது போல் தலையசைத்தவன்
“நீ நேத்து என்னை சரக்கு அடிக்கலாமான்னு கூப்பிட்ட…நானும் சரினு வந்தேன்…மண்டபத்துக்கு பின் வாசல் வழியா எகிறி குதிச்சு வந்தோம்…”என்று யாதவ் நிற்பாட்ட…
ஷா “டிரைவர் வேணாம்னு சொல்லிட்டு நீ தான் வண்டி எடுத்த…நான் உன் பக்கத்துல உக்காந்து இருந்தேன்…நேரா ஒரு துணி கடைக்கு போய் நான் தான் உனக்கு hooded டீஷிர்ட் வாங்குனேன்…அதை உன்கிட்ட கொடுத்தேன்…”என்று அவள் கூறினாள்…
“அங்கே தான் உன் டிரஸ் வாங்கிருப்போமோ…”என்று யாதவ் கேட்க…
“இல்லை டா..கிடையாது…எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு நான் உனக்கு மட்டும் தான் வாங்கிட்டு வந்தேன்…”
இந்த ஜோடிக்கு தெரியவில்லை இவர்கள் செய்த அலும்பு பல மில்லியன் ஷேர் செய்யப்பட்டு இந்த அறைக்கு வெளியே உள்ள உலகில்
இவர்கள் மானம் கண்டம் தாண்டி கண்டம் பறந்துக்கொண்டிருக்கிறது என்று…