YNM – 2

2

பெண் பார்க்கும் படலம்

அந்த தோப்பின் அடர்ந்த இருளில் வெள்ளையாக ஒரு உருவம் ஓடி வருவது மட்டுமே தெரிந்தது. போதாக் குறைக்கு எதிரே பருத்த உடலோடு ஒரு பூனை தெறித்து ஓட, பரிக்கு அச்சம் அதிகரித்தது.  சிகரெட் அவன் விரலிலிருந்து அதுவாகவே நழுவியது.

“பேய் வர்றது சில ஜீவராசிகளுக்கு எல்லாம் தெரியும்பாங்களே… ஒரு வேளை இந்த பூனைக்கு தெரிஞ்சிருக்குமோ?!” என்றவன் யோசிக்கும் போதே அந்த பெண் உருவம் அதிவேகமாய் நெருங்கிவிட,

அந்த உருவம் தன்னைத்தான் அடிக்க வருகிறது என்று எண்ணி,

“ஆஆஆஆஆ” என்று பரி அச்சத்தில் கத்த ஆரம்பித்தான்.

“ஆஆஆஆஆ” என்று அந்த பெண் உருவமும் பரியின் கதறலில் பயந்து கத்த, இருவரின் சத்தமும் அந்த இடத்தையே அதிர செய்தது.

அதே நேரம் அந்த பெண் உருவம் பரி கத்தியதில் பயந்து ஓடிவந்த வேகத்தில் தட்டுத்தடுமாறி பரியின் மீதே விழுந்து வைத்துவிட்டது.

அவன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியில் அவன் அவள் தன் மீது விழுந்த வேகத்தில் தரையில் சரிய அந்த பெண் உருவமோ விடாமல், “ஆஆஆஆ” என்று கத்தி அவன் காதை கிழித்துவிட்டது.

பரிக்கு அதிர்ச்சியும் அச்சமும் மறைந்து அந்த பெண்ணின் கத்தலில் அவள் மோகினி இல்லை என்று புரிந்தது.

அவள் கத்தலில் எரிச்சலானவன், “அய்யோ! காது வலிக்குது” என்று சொல்லியபடி அவளை புரட்டி கீழே தள்ளி அவள் வாயை மூட எத்தனிக்க அவன் கரம் எடாகூடாமாக அவள் மீது பட்டுவிட்டது.

“அம்ம்ம்ம்ம்மா” என்று அவள் மீண்டும் கத்தி வைக்க,

“அய்யோ சாரி சாரி சாரி தெரியாம கை பட்டிருச்சு… இவ என்ன இப்படி கூப்பாடு போடுறா… இதுல இவ வாய் வேற எங்க இருக்குன்னு தெரியலயே” என்று அவன் படபடத்த அதே நேரம் சுதாரித்து எழுந்தமர்ந்து கொண்டு தன் பாக்கெட்டில் இருந்த கைப்பேசி டார்ச்சை ஆன் செய்தான்.

அந்த வெளிச்சத்தில் லேசாக கண் கூசி முகம் சிணுங்கிய அதே நேரம் வாயடைத்து அவன் முகத்தை பார்த்து கொண்டிருந்தாள் அந்த இளம் காரிகை!

வெள்ளை சுடிதாரில் சிவந்த மேனியோடு உருட்டை உருட்டையாக இருந்த விழிகளிரண்டும் பயத்தை அப்பட்டமாக காட்டி கொடுத்தன.

அவளின் கொழு கொழு கன்னங்களும் இரட்டை ஜடையும் அவள் இளம் கன்னித்தன்மையை அழகுற மிளரச் செய்தது.

அதுவும் அவளின் செம்மாதுளை இதழ்கள் அவன் குடித்த மது போதையெல்லாம் ஒன்றுமே இல்லை என்றளவுக்கு கிறுகிறுக்க செய்ய,

அழுகு தேவதையாக அவன் முன்னே
கிடந்தவளை பேயென்று எண்ணி கொண்டோமா

என்ன ஒரு அறிவீனம் என்று தன்னைத்தானே கடிந்து கொண்டான் பரி!

அதோடு அவள் மீதிருந்து பார்வையை எடுப்பேனா என்றிருந்த பரியை தள்ளிவிட்டு நிமிர்ந்த அமர்ந்தவள், “மாமா நீங்களா?” என்று கேட்டாள் வியப்போடு!

அவள் மீது மயக்கத்திலிருந்த அவன் முளை பட்டென சுதாரிப்பு நிலைக்கு வந்தது.

“மாமாவா?!” என்றவன் அவளை ஏறஇறங்க பார்க்க,

“ஆமா… மாமாதான்… எங்க அக்காவை கட்டப்போற நீங்க எனக்கு மாமாதானே?!” என்று சொல்லி கொண்டே அவள் எழுந்து கொள்ள அவனும் எழுந்து நின்றான்.

இருவரும் தங்கள் மேல் ஓட்டியிருந்த மணலை தட்ட பரி யோசனையோடு, ‘சௌந்தர்யாவுக்கு அண்ணனுங்கதானே… தங்கச்சி இல்லையே’ என்று யோசித்துவிட்டு,

“நீ எப்படி சௌந்தர்யாவுக்கு தங்கச்சி?” என்று கேட்க,

“அவங்க என் சொந்த பெரியப்பா மக ன்னா… நான் அவங்களுக்கு தங்கச்சிதானே மாமா” என்றவள் கொடுத்த விளக்கத்தில் அவனுக்கு தெளிவாக புரிந்து போனது.

“அப்போ நீ சுசி மாமா பொண்ணா?” என்று கேட்க,

“ஹ்ம்ம்… நான் அவரோட ஓரே மக… அக்கா உங்ககிட்ட சொல்லலயா?” என்று அவள் கேட்கும் போது சுசீந்திரனின் பயங்கரமான உருவத்தை கண்முன்னே நிறுத்தி பார்த்தது.

‘அவருக்கு இப்படி ஒரு மகளா? ஒரு வேளை மாமி அழகா இருப்பாங்களோ’ என்று பரி மனதில் எண்ணி கொண்டான்.

“என்ன மாமா யோசிக்கிறீங்க?” என்றவள் அவன் முகம் பார்க்க,

“உன் பேர் என்ன?” என்று கேட்டான்.

“அக்கா உங்ககிட்ட என்னை பத்தி எதுவுமே சொல்லலயா மாமா?” என்றவன் ஏமாற்றமாக கேட்க,

“ப்ச் நான் உன் பேரை கேட்டேன்?” என்றவன் மீண்டும் அழுத்தி கேட்டான்.

அவள் உடனே, “என் பேர் மகிழினி!” என்றாள் முகமெல்லாம் புன்னகையாக!

“என்னது… மோகினியா?” என்றவன் வேண்டுமென்றே கிண்டலாக கேட்டு வைக்க,

“மோகினி இல்ல மாமா… மகிழினி” என்று அவள் உரக்க சொல்ல, அவனுக்கு சிரிப்பு வந்தது.

“அந்த பேரை விட உனக்கு மோகினிதான் பொருத்தமா இருக்கு” என்று சொல்லி சிரித்து கொண்டே முன்னே நடக்க,

“நான் ஒண்ணும் மோகினி இல்ல” என்றவள் நொடித்து கொண்டு
அவன் முன்னே வந்து நிற்க,

“வெள்ளை டிரஸ் போட்டிட்டு வந்து இப்படி இராத்திரல உலாத்தினா மோகினின்னுதான் சொல்வாங்க” என்றான்.

“அப்போ நீங்க என்னை பார்த்து மோகினின்னு பயந்துட்டீங்களா?!” என்று அவள் கேலி பார்வையோடு கேட்க, அவனுக்கு எரிச்சல் மிகுந்தது.

“பயப்படாம என்ன செய்வாங்களாம்… கட்டையை தூக்கிட்டு கத்துக்கிட்டே அடிக்க வந்தா… பேயா பொண்ணான்னு இந்த இருட்டில ஒரு மண்ணும் தெரியல”

“அய்யோ மாமா! நான் ஒரு காட்டு பூனையை துரத்திட்டு வந்தேன்… உங்களால அதை எஸ்கேப்பாயிடுச்சு” என்றவள் படுதீவிரமாக சொல்ல பரிக்கு சிரிப்பு தாளவில்லை.

“பூனையை துரத்திட்டு வந்தியா… அதனாலதான் அது அப்படி தெறிச்சு ஓடுச்சா” என்று அந்த பூனை ஓடியதை எண்ணி சிரித்து கொண்டே,

“எதுக்கு… போயும் போயும் அந்த பாவப்பட்ட ஜீவனை போய் கட்டையை தூக்கிட்டு துரத்தின?” என்று கேட்டான்.

“அது பாவப்பட்ட ஜீவனா? போங்க மாமா… நான் வளர்க்கிற முயல்குட்டியை அது சாப்பிட பார்க்குது தெரியுமா?” என்று குழந்தைத்தனமாக சொன்னவளை பரி சுவாரசியமாக பார்த்து,

“பெரிய வீராங்கனைதான்… ஆனா சத்தியமா உண்மையான பேய் பிசாசு வந்திருந்தா கூட எனக்கு இவ்வளவு பீதியை கிளப்பியிருக்காது” என்று அவன் சொல்லி கொண்டிருக்கும் போதே,

“அய்யோ! காட்டு பூனையை தேடி வந்தா இதென்ன காட்டெருமை கூட்டம் வருது” என்று அவளாக ஏதோ சொல்லி கொண்டாள்.

“காட்டெருமையா?” என்று புரியாமல் திரும்பி பார்த்தவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

எதிரே ஐந்தாறு பேர் கொண்ட கும்பல் வெள்ளை வேட்டிகளில் தொப்பையும் தொந்தியுமாக பயங்கரமான தோற்றத்தோடு வந்து கொண்டிருக்க, மகிழினி அவர்களை பார்த்து அஞ்சி பரியின் கையை பிடித்து இழுத்து வந்து ஒரு மரத்தின் மறைவில் நிறுத்தினாள்.

அந்த கும்பலோ, “அண்ணே வேற ஏதோ கத்திற சத்தம் கேட்டுதுன்னு சொன்னாரே…  அது என்னடா சத்தம் இருக்கும்… உண்மையிலேயே மோகினி பிசாசா இருக்குமோ?!” என்று அவர்களும் பயந்து கொண்டு டார்ச் வைத்து தீவிரமாக அந்த இடத்தை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தனர்.

“எதுக்கு இவங்களை பார்த்து நீ பயப்படுற” என்று பரி கேட்க,

“ஷ்ஷ்ஷ்… மெல்ல பேசுங்க… இவங்கெல்லாம் எங்க அப்பா பெரியப்பாவோட ஆளுங்க…

நான் இந்தப்பக்கம் வந்திருக்கேன்னு தெரிஞ்சா இவனுங்க போய் அப்பாகிட்ட வத்தி வைச்சிருவாங்க… அப்புறம் அவர் என்னை தோளை உரிச்சு தொங்கவுட்டிருவாரு” என்று பீதியோடு அவள் குரலை தாழ்த்தி சொன்னாள்.

அவன் அடக்கிய புன்னகையோடு,”அதுக்கு எதுக்கு என்னை இழுத்துட்டு வந்த” என்று கேட்க,

“நான் இங்க இருக்கேன்னு அவங்ககிட்ட நீங்க சொல்லிட்டா” என்றாள்.

அவளின் பதிலை கேட்டு பரி சத்தமாக சிரிக்க அவள், “ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்” என்று எட்டி தன் கரத்தால் அவன் வாயை பொத்திவிட்டாள்.

பரிக்கு அத்தனை நேரம் இருந்த சந்தோஷமெல்லாம் காணாமல் போய் சங்கடமாகி போனது.

பரி சத்தியமாக கண்ணியவான் எல்லாம் கிடையாது. பெண்ணின் ஸ்பரிசமெல்லாம் அவனுக்கு புதிதுமல்ல. வேலைக்கு போக ஆரம்பித்த பின் அந்த சுகத்தையும் கொஞ்சம் கண்டவன்தான். மொத்தத்தில் ருசிகண்ட பூனை அவன்.

அதேநேரம் அவனாக எந்த பெண்ணையும் தேடி போக மாட்டான்.
அவன் ரத்ததிலேயே ஊறியிருக்கும் ஆணென்ற திமிரும் கர்வமும் எந்த பெண்ணின் பின்னோடும் போக அவனை அனுமதித்தில்லை. அவனை பொறுத்தவரை அது கௌரவ குறைவு!

அதேநேரம் அவனிடம் மயங்கி நாடி வரும் பெண்களை வேண்டாமென்று மறுக்குமளவுக்கு ஆக சிறந்த நல்லவனும் இல்லை. அப்படியாக அவனை தேடி வந்த ஒன்றிரண்டு பெண்களால் கட்டில் சுகத்தையும் பார்த்தவன்தான்.

அவனின் ஒழுக்கமான நண்பர்கள் சிலர், “இதெல்லாம் தப்புடா” என்று அவனை எச்சரிக்க,

“சேன்ஸ் கிடைச்சா நீங்க யூஸ் பண்ணிக்க மாட்டீங்களா? போங்கடா” என்று அவர்களையே எதிர் கேள்வி கேட்டு அடக்கிவிடுவான். அதுதான் பரி.

வாய்ப்பு கிடைத்தால் பயன்படுத்தி கொள்ளும் சராசரியிலும் சராசரியான ஆண்மகன் அவன்!

அப்படியான பரிக்கு மகிழினியின் அருகாமையும் தீண்டலும் எப்படி இருக்கும்? அதுவும் அவள் அவன் வாயை மூடி கொண்டே எட்டி அவர்கள் போய்விட்டதை கவனிக்க எண்ணும் போது அவள் தேகம் அவனை உரசவும்,
அவன் உணர்வுகள் வெகுவாக தூண்டப்பட்டது. தான் இருக்கும் சூழ்நிலையை சிரமப்பட்டு நினைவில் நிறுத்தி கொண்டவன்,

அவளின் இந்த செய்கையில் தன் ஆண்மையை கட்டுக்குள் வைக்க ரொம்பவும் அவதியுற்றான்.

அந்த கடுப்பில் அவன் உதட்டை மூடியிருந்த அவள் கரத்தை கடித்து வைத்துவிட்டான்.

“ஆஆஆ மாமா… ஏன் கடிச்சீங்க?” என்று அவள் வலியால் கரத்தை உதறி கொண்டே விலகி வர,

“முதல்ல வீட்டுக்கு போ… அவங்கதான் போயிட்டாங்க இல்ல” என்றான் மிரட்டலாக.

“அப்போ நீங்க”

“நான் வருவேன்… நீ போ” என்றவன் அவளை அனுப்ப,

திருதிருவென்று நின்று கொண்டே விழித்தாள்.

“என்ன நிற்கிற போ?” பரி அதிகாரமாக உரைக்க,

“தனியா போக பயமா இருக்கு… நீங்களும் வாங்களேன்” என்றாள் அவள்!

“பூனையை துரத்திட்டு வர மட்டும் பயமா இல்லையா”

“அது ஏதோ ஒரு ஆவேசத்துல” என்று வேகமாக ஆரம்பித்து அவள் குரலில் சுருதி இறங்க அவனுக்கு சிரிப்புவந்துவிட்டது.

அவளிடம் முறைப்பாக பேச அவனே நினைத்தாலும் முடியவில்லை.

“சரியான காமெடி பீஸு… சரி நீ முன்னாடி நட… நான் பின்னாடி வர்றேன்” என்று சொல்ல அவள் ஜோராக தலையசைத்துவிட்டு முன்னே நடக்க அவன் பின்னோடு நடந்துவந்தான்.

அவன் நடந்து கொண்டே ஒரு சிகரெட்டை எடுத்து லைட்டரில் பற்ற வைக்க,

முன்னே சென்றவள் அவனை திரும்பி பார்த்து அதிர்ச்சியாகி, “இந்த பழக்கமெல்லாம் இருக்கா உங்களுக்கு” என்று முகத்தை சுளித்தாள்.

“ஏன் இருந்தா என்ன?” என்று அலட்சியமாக கேட்டு கொண்டே புகைக்க ஆரம்பித்தான்.

“வேண்டாம் மாமா” என்று சொல்லி அவள் பட்டென அவன் வாயிலிருந்த சிகரெட்டை பக்கத்திலிருந்த மரத்தில் தேய்த்து அணைத்துவிட்டு கீழே போட்டுவிட்டாள்.

அவளின் துடுக்கான செயலில் அவன் முகம் கோபத்தில் சிவக்க, “ஏய் அறிவிருக்கா!” என்று கடுகடுக்க,

அவளோ சற்றும் அசறாமல்,

“அறிவு இருக்கிறதாலதான் இப்படி பண்ணேன்” என்று பதிலுக்கு பதில் சொல்லிய அதேநேரம்,

“சரக்கு கூட கொஞ்சமா அடிக்கலாம்… தப்பில்லை…  ஆனா சிகரெட் மட்டும் வேண்டாம் மாமா… அது உடம்புக்கு ரொம்ப கெடுதல்” என்றாள்.

“உன் சைஸுக்கு நீ எனக்கு அட்வைஸ் பன்றியா?” என்றவன் முறைக்க,

“அட்வைஸ் இல்ல… அக்கறை” என்றாள்.

“உனக்கென்ன என் மேல அக்கறை?”

“நீங்க ஆரோக்கியமா இருந்தாதானே எங்க அக்கா சந்தோஷமா இருப்பா… அந்த அக்கறைதான்” என்று தெள்ளதெளிவாக உரைத்தவளின் விழிகளில் அத்தனை நேரம் இருந்த துடுக்குத்தனமும் குழந்தைத்தனமும் தொலைந்து போய் முதிர்ச்சி தெரிந்தது.

அவன் கோபம் மறைந்து மனம் இளகியது.

இத்தனை நாளாக பலரும் அறிவுரை சொல்ல கேட்காத பரிக்கு அவள் அப்படி சொன்னதும் கேட்க வேண்டும் போலிருந்தது.

அவளின் வெள்ளந்தியான புன்னகையும் வெகுளித்தனமான முகமும் அதோடு அவள் வார்த்தைக்கு வார்த்தை மாமா என்று விளிக்கும் விதமும் அவனுக்கு ரசனையாக இருந்தது.

நிதானமாக அவளை ஆழ்ந்து பார்த்தவன், “சரி வா போகலாம்” என்று உடன் நடந்து கொண்டே,

“ஆமா… நீ இப்போ என்ன பண்ணிட்டிருக்க?” என்று அவளை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் மிகுதியில் கேட்க,

“நான் ப்ளஸ் டூ முடிச்சுட்டு இப்போ காலேஜ் ஜாயின் பண்ண போறேனே!” என்று சந்தோஷ பொங்க உரைத்தாள்.

“ஓ! அப்போ உனக்கு வயசு ஒரு எய்ட்டீன்தான் இருக்குமா?” என்று கேட்டவனின் முகத்தில் கொஞ்சம் ஏமாற்றமும் கலந்திருந்தது.

“உம்ஹும்… ஒரு வயசு கூட” என்று அவள் சொல்ல அவன் முகம் குழப்பமாக மாறியது.

“அதெப்படி?” என்றவன் கேட்கும் போதே அவள் எதிரே பார்த்து,

“அந்த காட்டெருமை கூட்டம் போய் இப்போ ஏதோ கழுதை கூட்டம் வருது” என்றாள்.

“என்னது?” என்று நிமிர்ந்து பார்த்த பரி   சீற்றமாகி,

“உனக்கிருந்தாலும் இவ்வளவு வாய் ஆகாது… அவங்கள எல்லாம் பார்த்தா கழுதை கூட்டம் மாறியா தெரியுது” என்றான்.

“அப்போ இல்லையா? குரங்கு கூட்டமா?” என்று அவள் படுதீவிரமாகவே கேட்க அவளை முறைக்க எண்ணி தோற்று போய் சிரித்துவிட்டான்.

அப்போது பரியை பார்த்த அவன் நண்பர்கள் பாய்ந்துவந்து,

“எங்கடா போன… உன்னைய எங்கெல்லாம் தேடறது… யாரு என்னன்னு தெரியாத ஊர்ல விட்டுட்டு போயிட்டியோன்னு பயந்துட்டோம்… அதுலயும் இங்க இருக்க ஒருத்தன் மூஞ்சை பார்த்தா கூட சரியா படல” என்று பயந்த தொனியில் அவன் நண்பர்கள் உரைக்க,

“அய்யோ மாமா! இவங்கெல்லாம் உங்க பிரெண்ட்ஸா?” என்று அதிர்ச்சியாக கேட்டாள்.

“இல்ல கழுதை கூட்டமும் குரங்கு கூட்டமும்” என்றவன் கடுப்பாய் பதிலளிக்க,

“டேய்” என்று அவன் நண்பர்கள் கோபமாக பரியை முறைத்தனர்.

அப்போது மகிழினி, “சாரி மாமா! தெரியாம சொல்லிட்டேன்… அப்பா தேடுவாங்க… நான் போறேன்” என்று சொல்லியவள், தலைதெறிக்க அங்கிருந்து ஓடியே விட்டாள்.

பரி அவள் போன திசையே பார்த்து கொண்டிருந்தான். அவன் நண்பர்களோ, “கட்டிக்க போற பொண்ணு பக்கத்தில இருக்கும் போது நாங்கெல்லாம் குரங்காவும் கழுதையாவும்தான்டா தெரிவோம்… ஹ்ம்ம் நீ நடத்து மச்சி” என்றனர்.

அவர்களை அலட்சியமாய் பார்த்த பரி,

“அதுவாவாவது தெரியிறீங்களேன்னு சந்தோஷ படுங்க” என்க,

“அடப்பாவி!” என்ற அவன் நண்பர்கள் மொத்தமாக சேர்ந்த அவரை மொத்தி வைத்தனர்.

“டே விடுங்கடா” என்று கத்தியும் விடாதவர்கள்,

“பரி” என்ற அவன் அம்மாவின் அழைப்பு கேட்டு போனால் போகட்டும் என்று அவனை விட்டுவிட்டார்கள்.

இதற்கிடையில் அவன் நண்பர்கள் மகிழினியைதான் மணமகளாக நினைத்து கொண்டிருக்கிறாள் என்று தெரிந்தும் பரி அதை திருத்தவோ மறுக்கவோ இல்லை.

தாமரை மகனை தேடி கொண்டு வந்து, “உன்னை எங்கெல்லாம் தேடுறது பரி… போய் உடனே டிரஸ் மாத்திட்டு வா… சொந்த காரங்க எல்லாம் வந்திருக்காங்க” என்று பட்டுவேட்டியும் குங்கும சிவப்பில் ஒரு சட்டையையும்  கொடுக்க,

“இதையெல்லாம் என்னால கட்டிக்க முடியாது” என்று தடலாடியாக மறுத்தான் பரி.

“பரி கண்ணா.. ” தாமரை கெஞ்ச

“முடியாதும்மா” என்றான்.

“என் செல்லம்ல”

“முடியாதுன்னா முடியாது”

“சரி போ… உங்க அப்பா உள்ளேதான் இருக்காரு” என்று தாமரை சொன்ன அடுத்த நொடி அந்த வேட்டி சட்டை பரியின் கரத்திற்கு இடம்மாறியிருந்தது.

கலிவரதனிடமும் மட்டும் பரிக்கு கொஞ்சம் பயம்தான். அடி உதையெல்லாம் வாங்கியதில்லை எனினும் எப்போதும் கஞ்சிபோட்ட சட்டை போல விறைப்பாக சுற்றி கொண்டிருக்கும் அப்பாவை பார்த்து அவனுக்கு சிறுவயதில் தோன்றிய அச்சம்தான் இன்னும் மிச்சம் மீதியாக இருந்தது.

ஆதலால் பரி அதிகம் அப்பாவிடம் பேச கூட மாட்டான்.

பரி தம் உடைகளை மாற்ற சென்றிருந்த நேரம் சுசீந்திரன் வீட்டில் ஒரு பெரிய உளவினர் பட்டாளமே அமர்ந்திருந்தது.

சுசீந்திரன் மனைவி வஸந்தியின் முகமோ கடுகடுத்து கொண்டிருந்தது.

“அவங்க வீட்டு பொண்ணுக்குதானே கல்யாணம்… நான் ஏன் இதெல்லாம் செய்யணும்?” என்றவள் முனகி கொண்டேதான் வேலைகளை செய்தாள். இதே வார்த்தையை கணவனிடம் நேரடியாக சொன்னால் அரைதான் விழும். ஆதலால் அவள் தனக்குள்ளெயே புலம்பி கொண்டிருக்க அவர் கடுப்பு புரியாமல், “நான் இந்த புடவையை கட்டிக்கட்டுமா?” என்று கேட்ட மகளை எரிச்சலாக பார்த்தார்.

“எல்லா போட்டிருக்க டிரஸே நல்லாதான் இருக்கு… போடி… என்னவோ இவளுக்கே கல்யாணம் மாறி ஆடிக்கிட்டு இருக்கா?”

“போம்மா… நான் போட்டிருக்க டிரஸ் அழுக்காயிடுச்சு” என்றவள் சொல்லி கொண்டிருக்கும் போதே சுசீந்திரன் உள்ளே வந்துவிட்டிருந்தான்.

“என்ன என்னாச்சு?” என்று கேட்க,

“ஹ்ம்ம்… புடவையை கட்டிக்கணுமா உங்க பொண்ணுக்கு… யாருக்கோ விசேஷம்… இவளுக்கு எதுக்கு இந்த சிங்காரிப்பு எல்லாம்” என்று வஸந்தி தன் மனதிலுள்ள எண்ணத்தை மறைமுகமாக சொல்ல சுசீந்திரன் மனைவியை பார்த்து முறைத்து,

“யாருக்கோவா… என் அண்ணன் பொண்ணுக்கு விசேஷம்… நான்தான் எல்லாத்தையும் எடுத்து செய்வேன்” என்றவர் மகளை பார்த்து, “நீ போய் புடவை கட்டிக்கோ” என்றார்.

மகிழினிக்கு அந்த ஒரு வார்த்தையே போதும் என்று ஓடிவிட வஸந்தி கணவனை பார்த்து, “நீங்க செய்ற மாறியே உங்க அண்ணனும் அண்ணியும் செய்வாங்களா உங்க பொண்ணுக்கு?” என்று கேட்டு நொடித்து கொண்டார்.

“வஸந்தி!” என்றவர் குரலையுயர்த்த,

“நான் எதுவும் பேசல சாமி” என்று அவர் கணவனின் கோபத்தை தூண்டிவிட்டு அடி வாங்க அவர் விரும்பவில்லை. ஆனால் உள்ளூர அவர் மனம் ஓயாமல் விமலனையும் அவர் மனைவியையும் நிந்தித்து கொண்டுதான் இருந்தது.

விமலன் போல அல்லாது சுசீந்திரனுக்கு ஒரே மகள்தான். ஆனால் அவர் அமுதன் இளா மற்றும் சௌந்தர்யாவையும் தன் சொந்த பிள்ளைகள் போல்தான் பார்த்தார். அவர்களுக்கு தேவையானதை சுசீந்திரன் பார்த்து பார்த்து செய்ய தன் கணவனின் சாம்பாத்தியமெல்லாம் அண்ணன் குடும்பத்திற்காகவே கரைகிறதே என்று வஸந்திக்கு வருத்தம். அதுதான் தன் மூத்தாரின் மனைவி மீது கடுப்பாகவும் வருத்தமாகவும் மாறியிருந்தது.

சுசீந்திரன் வீட்டில் சொந்த பந்தங்கள் நிறைந்து அந்த இடமே கூச்சலாக இருக்க, விமலனும் அவர் மனைவி மஞ்சுளா ஒரு புறமும் கலிவரதனும் தாமரையும் மறுபுறம் அமர்ந்திருந்தனர்.

வேட்டி சட்டையில் மிடுக்கோடு நுழைந்த பரியை பார்த்து எல்லோரும் வியப்பாகினர்.

சினிமா படநாயகன் போல இருக்கிறான் என்று எல்லோருமே அவனின் தோற்றத்தை கண்டு அளவளாவி கொண்டிருக்க விமலனுக்கு ஒரே பெருமை. கலிவரதனுக்கு எப்போதும் போல மகனை வளர்த்த விதத்தில் அடங்கா கர்வம்.

பரியோடு அவன் நண்பர்கள் நுழைய அவர்கள் அமர தனியாக இருக்கை அமைக்கப்பட்டது.

பரி அமர்ந்த பிறகு திருமண பேச்சு வார்த்தைகள் தொடங்க அதில் எல்லாம் அவன் கவனம் துளி கூட செல்லவில்லை. ஏதோ பெயருக்கென்று அமர்ந்திருந்தான்.

அந்த ஏற்பாடு மணமகனையும் மணமகளையும் நேரில் பார்த்து கொள்ள ஏற்படுத்திய ஒரு பெயரளவிலான பெண் பார்க்கும் சடங்கு! அவ்வளவே!

அவர்கள் பேச்சுவார்த்தை முடியும் போது சௌந்தர்யா தழைய தழைய ஒர் தங்க நிற பட்டுசரிகை புடவையை உடுத்தி கொண்டு தலை நிறைய மல்லிகை பூ சூடி கொண்டு அழுகு தேவதையென வெட்கத்தோடு தலைகுனிந்து வந்து நிற்க,

“டே அந்த தோப்பில பார்த்த பொண்ணு பக்கத்தில நிற்குது… அப்போ அது கல்யாண பொண்ணு இல்லையா… அந்த கோல்ட் கலர் சேரி கட்டியிருக்கிறவங்கதான் பொண்ணா?” என்று சமீர் அதிர்ச்சியாக கேட்க அப்போதுதான் தலையை நிமிர்த்தி பார்த்தான் பரி!

அவன் சௌந்தர்யாவை பார்த்த அதேநேரம் அருகில் சிவப்பு நிற சேலையில் ஒற்றை சர மல்லி தோள் மீது தவழ தங்கநிறத்தல் மின்னி கொண்டிருந்த காந்தாள் மலராள் போல் நின்ற மகிழினியை பார்த்தான்.

இரட்டை ஜடை ஒற்றை பின்னலாக மாறியிருந்தது. சற்று முன்பு குழந்தைத்தனமாக பார்த்த அதே பெண்ணிடம் இத்தனை முதிர்ச்சியான அழகா என்று வியக்க தோன்றியது.

சின்ன பெண் என்று கொஞ்சமே கொஞ்சம் இருந்த குற்றவுணர்வு கூட இப்போது சுத்தமாக தொலைந்து போனது.

சௌந்தர்யாவை பார்ப்பது போல
அவன் மகிழினியைதான் பார்த்து கொண்டிருந்தான். மகிழினியை மட்டும்தான் பார்த்து கொண்டிருந்தான்.

காந்தமாய் அவன் பார்வை அவளிடமே ஓட்டி கொண்டு நிற்க, “டே யாருடா பொண்ணு? நீ யாரடா பார்க்கிற” என்று சமீர் பல்லை கடிக்க,

“எனக்கு யாரை பிடிச்சிருக்கோ அவளைதான் பார்க்கிறேன்” என்றான்.

சமீர் குழப்பமாகி, “பிடிச்சுதானேடா கல்யாணத்துக்கு ஓத்துக்கிட்டு இவ்வளவு தூரம் வந்திருக்க” என்று  வேதாளம் போல அவனை விடாமல் அவன் கேள்வி கணைகளை தொடுக்க,

“கொஞ்ச நேரம் மனுஷனை நிம்மதியா சைட் அடிக்க விடுறியா” என்று பரி திரும்பி நண்பனை பார்த்து முறைத்தான்.

“சைட் அடிக்கிறியா? யாரை டா?” அவன் மெல்லிய குரலில் கேட்க,

“மோகினியை… சுடிதாரை விட ஸேரி சும்மா அவளுக்கு நச்சுன்னு இருக்கு”

“அய்யோ புரியாமலே பேசுறானே… யாருடா அந்த மோகினி?”

“அவ பேர் மோகினி இல்ல மச்சி… மகிழினி? ரெட் கலர் சேரி”

“அது பொண்ணோட தங்கச்சின்னு எல்லோரும் சொல்லிக்கிறாங்க”

“ஹ்ம்ம்ம்”

“அடேய்! இதெல்லாம் ரொம்ப தப்புடா… அப்புறம் உன் மாமன்காரனுங்ககிட்ட நீ தர்ம அடி வாங்குவ… பார்த்துக்கோ… ரெண்டு பேரும் பைல்வான் மாறி படுபயங்கரமா இருக்காணுங்க” என்ற சமீரின் வாய்முகூர்த்தம் அப்படியே விரைவில் நம் நாயகனுக்கு பளிக்கத்தான் போகிறது.

ஆனால் பரி அதை பற்றியெல்லாம்  கவலையில்லாமல் தன் நண்பனை அலட்சியமாக பார்த்து, “அதெல்லாம் வாங்கும் போது பார்த்துக்கலாம்” என்று சொல்லிவிட்டு மீண்டும் மகிழினியை சைட்டடிக்க தொடங்கினான்.

யாருக்குமே பரி மகிழினியை பார்ப்பதை யூகிக்க கூட முடியவில்லை. ஆனால் சுசீந்திரன் மட்டும் தெள்ளத்தெளிவாக கவனித்துவிட்டார்.

‘இவ என்ன நம் பொண்ணையே பார்த்துட்டு இருக்கான்’ என்று சந்தேகம் உதித்தது அவருக்கு!

error: Content is protected !!