YNRA- full novel

YNRA- full novel

ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே – 1

உதகமண்டலத்தின் சீதோஷ்ண நிலை அத்தனை இதமாக இருந்தது ராதாவிற்கு. உள்ளங்கை இரண்டையும் சேர்த்து உரசியவள் அந்தச் சூட்டைக் கன்னத்திற்கு இடம் மாற்றினாள்.

ஸ்கூட்டியின் கண்ணாடியில் முகத்தைப் பார்த்த போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சென்னை வெயிலில் வாடி வதங்கி இருந்த அவள் சருமம் ஊட்டியின் கடந்த ஆறு மாத ஜாகையில் பளபளத்தது.

மீரா இப்போது என்னைப் பார்த்தால் மகிழ்ந்து போவாள். தங்கையை நினைத்த போது சின்னதாக ஒரு சிரிப்பு ராதாவின் முகத்தில் குடி கொண்டது.

மீரா நல்ல நிறம். செய்து வைத்த பொம்மை போல அத்தனை அழகாக இருப்பாள். அக்கா தங்கை இருவருக்கும் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் வித்தியாசம். அதனால் எப்போதுமே ராதாவிற்கு தன் தங்கை ஒரு குழந்தைதான்.

‘அக்கா! உன்னோட ஸ்கின் ரொம்ப ஸென்ஸிட்டிவ் க்கா. அதான் வெயில்ல போன உடனே டார்க் ஆகிடுது.’ தங்கை எப்போதும் சொல்லும் வார்த்தை இப்போது சரியென்று தோன்றியது ராதாவிற்கு.

‘நான் கலரா இருந்து என்ன பிரயோஜனம்! உன்னோட அழகுக்கு முன்னாடி நானெல்லாம் நிக்க முடியுமா? என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் என்னைப் பார்க்கிற மாதிரி இங்க வர்றதே உன்னை சைட் அடிக்கத்தான் க்கா.’

‘அடச்சீ! வாயை மூடு. அந்தப் பசங்க எல்லாம் எனக்குத் தம்பிங்கடி!’

‘ஆ… அது உனக்கு. அவனுங்களுக்கு உன்னைப் பார்க்கும் போது டென்டுல்கர் தான் ஞாபகம் வருதாம்.’ தங்கையின் வார்த்தைகள் காதில் ஒலிக்க இப்போதும் புன்னகைத்துக் கொண்டாள் ராதா.

இளமஞ்சள் நிற காட்டன் புடவையை அழகாகப் பின் பண்ணி உடுத்தி இருந்தாள். அதற்கு ஏற்றாற்போல ஆலிவ் க்ரீனில் ஸ்வெட்டர். அத்தனை குளிர் இல்லையென்றாலும் ராதாவால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

சென்னையின் தனியார் பாடசாலை ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்தவளுக்கு ஊட்டி கான்வென்ட் ஒன்றில் பணியாற்ற வாய்ப்பு வரவும் ஏற்றுக் கொண்டாள்.

அம்மா அப்பா இருவருமே எந்தத் தடையும் சொல்லவில்லை. பெண் பிள்ளைகள் என்றாலும், அவர்களுக்கும் உலக அனுபவம் வேண்டும் என்று நினைக்கும் ரகம் ராதாவின் பெற்றோர்கள்.

‘நம் வீட்டில் ஆண்பிள்ளைகள் இல்லை. அப்பாவிற்கும் வயதாகிவிட்டது. எப்போதும் உங்களைக் காவல் காக்க அவரால் முடியாது. உங்களை நீங்களே பாதுகாக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.’ இப்படிச் சொல்லித்தான் தன் பெண்களை வளர்த்திருந்தார் மகேஷ்வரி.

ரங்கராஜனும் அரசாங்க உத்தியோகஸ்தர் தான். பென்ஷனுக்குப் போட்டு விட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார். இரண்டு பெண்களை ஒப்பேற்ற வேண்டும் அல்லவா?

மகேஷ்வரி ‘காட்டன் செலெக்ஷன்’ என்ற பெயரில் சின்னதாக பெண்களுக்கான ஆடைகள் அனைத்தும் கிடைப்பது போல ஒரு பொட்டிக் வைத்து நடத்துகிறார். ஆக மொத்தம் நடுத்தர வர்க்கத்திற்கும் மேலான குடும்பம் ராதாவினுடையது.

ராதாவின் கடந்த இரண்டு வருட சம்பாத்தியமும் பேங்கில் தான் உறங்குகிறது. மகேஷ்வரி அதில் கைவைக்க மாட்டார்.

‘ராதாக்கு இருபத்தி மூனு ரன்னிங். சீக்கிரமாவே நல்லதா ஒரு வரன் பார்க்கணுமுங்க.’ மகேஷ்வரி எப்போதும் ரங்கராஜனிடம் சொல்லும் வார்த்தைகள் இவை.

மகளுக்கு ஒரு ராஜ குமாரனைப் பிடித்து விடும் நோக்கில் ஒரு வருடமாக மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

அவள் சிந்தனை அனைத்தையும் கலைத்தபடி அந்தக் கார் அவள் பக்கத்தில் சர்ரென்று வந்து நின்றது. திரும்பிப் பார்த்தாள். ப்ளாக் ஆடி. கடந்த வருட ரெஜிஸ்ட்ரேஷன் காட்டியது நம்பர் ப்ளேட்.

காரின் கண்ணாடிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்க குதிரை போல நின்றிருந்தது அந்த வாகனம். ராதாவிற்குக் கார் என்றால் சட்டென்று கறுப்பு நிறம் தான் ஞாபகத்திற்கு வரும். ஏனோ அந்த நிறத்தின் மேல் அப்படியொரு மோகம்.

தனக்கு வரப்போகும் துணையும் அதே நிறத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது அவளின் வெளிப்படுத்த முடியாத ஆசை.

அந்த ரயில்வே க்ராஸிங் திறக்க எப்படியும் ஐந்து நிமிடங்களாவது எடுக்கும். சுற்றிவர இருக்கும் பச்சைப் பசேலுக்கு நடுவே புகையைக் கக்கிய படி நகரும் அந்த நீலநிற இயந்திரம் ராதாவின் பேரன்பைப் பெற்றது.

அந்தக் காட்சியைக் காண்பதற்காகவே துல்லியமாக அந்த நேரத்திற்கு அங்கு வந்து சேருவாள் பெண். அந்த ஐந்து நிமிடங்களும் அவளுக்கு அப்படியொரு சந்தோஷத்தைக் கொடுக்கும்.

சுற்றிவர இருக்கும் இயற்கையை ரசித்தபடி தேயிலை வாசம் கலந்த அந்தக் காற்றை ஆழ்ந்து இழுப்பது சுகானுபவம் அவளுக்கு.

‘பேசாமல் ஊட்டியிலேயே ஒரு மாப்பிள்ளையைப் பார்க்கச் சொன்னால் என்ன?’ எண்ணத்தின் போக்கில் வந்த புன்னகையை அடக்கிக் கொண்டவளைக் கலைத்தது ப்ளாக் ஆடி.

அவளின் இடப்புறமாக இருந்த ட்ரைவர் டோரின் கண்ணாடி சட்டென்று இறங்க ‘க்ளிக்’ என்ற லைட்டரின் சத்தம் காதுகளைத் தீண்டியது.

லைட் ப்ளூ ஷேர்ட், கண்களில் கறுப்புக் கூலிங் க்ளாஸ். பக்கத் தோற்றத்தில் ‘பியர்ஸ் ப்ராஸ்னன்’ இன் ஜாடை. ராதாவின் இதயம் ஒரு கணம் லயம் தப்பித் துடித்தது.

புகையை ஆழ்ந்து இழுத்தவன் ஒரு அலட்சியத்தோடு அதை ஊதி வெளியேற்றினான். தொட்டுவிடும் தூரத்தில் இருந்த அவனின் கை வெளியேற்றிய புகையை ஒன்றிரண்டு கணங்களுக்கு மேல் ராதாவால் ஜீரணிக்க முடியவில்லை.

‘க்கும்… க்கும்’ கையை வாயின் மேல் வைத்து லேசாக இருமினாள். என்ன நினைத்தானோ! சட்டென்று,

“சாரி!” என்றான். காரின் கதவைத் திறந்து சிகரெட்டைக் கீழே போட்டவன் ஒற்றைக் காலை வெளியே நீட்டி அதை அணைத்தான்.

ராதாவிற்கு ஏனோ இதமாக இருந்தது. அவன் முகம் பார்த்துப் புன்னகைக்க அதற்கு பதில் அங்கே கிடைக்கவில்லை. ரயில் க்ராஸ் பண்ணும் வரை அமைதியாக அமர்ந்திருந்தவன் அது போய் முடியவும் சட்டென்று காரைக் கிளப்பிக் கொண்டு பறந்து விட்டான்.

ஒரு பெருமூச்சோடு ஸ்கூட்டியைக் கிளப்பினாள் ராதா.

* * *

காலை நேரப் பரபரப்போடு வகுப்பறையில் சுழன்று கொண்டிருந்தாள் ராதா.

“ராதா! உங்களை மதர் கூப்பிடுறாங்க.” சக ஆசிரியையின் குரலில் திரும்பிப் பார்த்தவள் முகத்தில் லேசான சிணுங்கல் தோன்றியது.

“என்னப்பா? இந்த நேரத்துல கூப்பிடுறாங்க?”

“நியூ அட்மிஷன் போல இருக்கு ராதா.”

“வாட்! இப்போ எப்படிப்பா அட்மிஷன் குடுக்க முடியும்?” அதிர்ச்சியாகக் கேட்டவளைப் பார்த்துச் சிரித்து விட்டு நகர்ந்து விட்டார் அந்த ஆசிரியை.

‘ஆண்டவா! இது என்ன ராதாவிற்கு வந்த சோதனை!’ என்று புலம்பிய படி மதரின் ரூமை நோக்கிப் போனாள் ராதா. கதவை லேசாகத் தட்ட அனுமதி கிடைத்தது.

“கம் இன்.” எப்போதும் போல அந்தக் குரலில் இருக்கும் ஆளுமை இப்போதும் அவளைக் கவர்ந்தது.

“குட் மார்னிங் மதர்.”

“குட் மார்னிங் ராதா. மீட் மிஸ்டர் அபி.” கைகாட்டிய திசையில் திரும்பிப் பார்த்தவள் அதிர்ந்து போனாள். நீல நிற ஷேர்ட், ப்ளாக் ஆடி. கன கம்பீரமாக அங்கே அமர்ந்திருந்தது. இனம்புரியாத ஆனந்தத்தோடு,

“குட் மார்னிங் சார்.” என்றாள்.

“குட் மார்னிங்.”

‘யப்பா! என்ன குரல் டா சாமி!’ ஆழ்ந்த அழுத்தமான அந்தக் குரலில் சொக்கிப் போனாள் ராதா. சாரி சொன்னபோது கவனிக்கத் தவறிய குரல் இப்போது மூளையில் ஒட்டிக் கொண்டது.

‘ராதா! ஒரு ஸ்கூல் டீச்சர் மாதிரி கொஞ்சம் பிஹேவ் பண்ணு.’ மனச்சாட்சியின் குரலில் நிஜத்திற்கு வந்தாள் பெண்.

“அபி! ராதா இங்க கொஞ்ச நாளாத்தான் வேலை பார்க்கிறாங்க. இருந்தாலும் அவங்களோட பொறுமையை நான் ரொம்பவே பாராட்டுவேன். ஆத்மிகாக்கு இப்போ ராதா மாதிரி ஒருத்தங்க தான் பொருத்தமா இருக்கும்.”

“ஆத்மிகா உங்க பொறுப்பு மதர். எனக்கு அதைத் தவிர வேற ஒன்னும் சொல்லத் தோணலை.”

இவர்கள் பேச்சில் குழம்பிப் போனாள் ராதா. ‘யாரந்த ஆத்மிகா? எதுக்கு இப்போ அந்தப் பொண்ணுக்கு என்னோட பொறுமை தேவைப்படுது?’

“ராதா!”

“சொல்லுங்க மதர்.”

“சாரோட பொண்ணு பேரு தான் ஆத்மிகா.”

‘வாட்!’ நாக்கு நுனிவரை வந்த கேள்வியை தொண்டைக்குள்ளேயே புதைத்தாள் ராதா. தனது டபுள் ஓ செவெனைத் திரும்பிப் பார்த்தாள்.

சூடம் அணைத்துச் சத்தியம் பண்ணினாலும் ஆறு வயதுக் குழந்தைக்குத் தகப்பன் என்று நிச்சயம் சொல்ல முடியாது.

நிச்சயமாக ஆறு வயதுதான் குழந்தைக்கு இருக்க வேண்டும். ஏனென்றால் அவள் வகுப்பில் இருக்கும் குழந்தைகளுக்கு ஆறு வயதுதானே!

“இன்னைக்கு அட்மிஷனை முடிச்சிரலாம் அபி. நாளைக்கு நீங்க ஆத்மிகாவைக் கூட்டிக்கிட்டு வந்தாப் போதும்.”

“ஓகே மதர். நீங்க எவ்வளவு பெரிய உதவி எனக்குப் பண்ணியிருக்கீங்கன்னு உங்களுக்கே தெரியாது.”

“விடு அபி. ஐ நோ எவ்ரி திங். பிஸினஸ்ல கான்ஸன்ட்ரேட் பண்ணு.”

“தான்க் யூ மதர்.” சொன்னவன் நிற்காமல் கிளம்பி விட்டான். வர்ண ஜாலங்களோடு ஆரம்பித்த அந்த நாள் கறுப்பு வெள்ளை ஆகிப்போனது ராதாவிற்கு.

* * *//////////////////////////////////

இரண்டு சிங்கிள் பெட்களுக்கு நடுவே லாம்ப் ஒளி வீசிக் கொண்டிருக்க ராதாவைப் புருவம் நெளியப் பார்த்திருந்தாள் அர்ச்சனா.

“ஆக… ப்ளாக் ஆடியில வந்திறங்கினதால அவன் உனக்கு ஹீரோ ஆகிட்டானா?”

“அர்ச்சனா! தப்பாப் பேசாத.”

“எப்படி… எப்படி? நான் தப்பாப் பேசுறனா? கையில ஆறு வயசுக் குழந்தையோட நிக்குற அங்கிளை நீங்க சைட் அடிப்பீங்க, அது தப்பில்லை. அதையே நாங்க சொன்னா தப்பா?”

“அர்ச்சனா! ப்ளீஸ்… புரிஞ்சுக்கோ.”

“எதைப் புரிஞ்சுக்கணும் ராதா? ஆன்ட்டிக்குத் தெரிஞ்சா உன்னை ஒன்னும் சொல்ல மாட்டாங்க. என்னைத்தான் வகுந்திருவாங்க.”

சொன்னவள் எழுந்து அமர்ந்து கொண்டாள்.‌ ஹாஸ்டலில் வந்து சேர்ந்த நாளிலிருந்தே இரு பெண்களுக்கும் நல்ல புரிதல் இருந்தது.

நட்பு என்பதையும் தாண்டி இரு குடும்பங்களும் கை கோர்த்துக் கொண்டன. அக்கறை, பாசம், அன்பு என அனைத்தும் அங்கு பரிமாறப்பட்டன.

“இதுக்குத்தான் காலா காலத்துல லவ் பண்ணணும், இல்லைன்னா வீட்டுல காட்டுற மாப்பிள்ளைக்குக் கழுத்தை நீட்டணும்னு சொல்லுறது.” புலம்பித் தீர்த்தாள் அர்ச்சனா.

“இல்லை… நான் தெரியாமத்தான் கேக்குறேன்… அவ்வளவு பெரிய சென்னையில உனக்கு ஆளே கிடைக்கலியா? போயும் போயும் ஆறு வயசுக் குழந்தையோட அப்பாவை சைட் அடிச்சிருக்க? அவர் பொண்டாட்டிக்கு இது தெரிஞ்சா… அம்மாடியோவ்! இங்கப்பாரு ராதா… சில நேரங்கள்ல மனசு இப்படி சலனப்படுறது இயற்கை தான். ஆனா… அந்த நினைப்பை மூட்டை கட்டி குப்பையில போட்டுட்டு ஆன்ட்டி அனுப்புற வரன்ல ஒன்னை செலெக்ட் பண்ணு என்ன?”

சொல்லிவிட்டு அர்ச்சனா போர்வையை மூடிக்கொண்டாள். லாம்ப்பை சட்டென்று அணைத்தவள்,

“குட்நைட் ராதா.” என்றாள்.

“குட்நைட் அர்ச்சனா.” கிணத்துக்குள் இருந்து வந்தது ராதாவின் குரல்.

அர்ச்சனாவின் மனதில் கவலை அப்பிக்கொண்டது. இந்த ஆறு மாதகாலமாக ராதாவை அவளுக்குத் தெரியும். அலைபாயும் சிறு பெண்ணல்ல அவள். பொறுப்பான பெண்.

அவளே இன்று இப்படி ஒரு விஷயத்தைத் தன்வரை கொண்டு வந்திருக்கிறாள் என்றால்… விஷயம் கொஞ்சம் சீரியஸாகத்தான் இருக்க வேண்டும்.

“ஏன் ராதா? அவர் ஃவைப் இன்னைக்கு கூட வரலியா?” போர்வையை விலக்கி மீண்டும் கேட்டாள் அர்ச்சனா.

“இல்லை.”

“உங்க ஸ்கூல்ல படிச்சாலே அவங்க ஸ்டேட்டஸ் என்னன்னு நமக்குச் சொல்லாமலே புரியுது. இதுல…”

“அர்ச்சனா! தப்புன்னு நல்லாவே புரியுது…”

“ஆ! புரியுதில்லை? அப்பப் பேசாம தூங்கு.”

“சரிப்பா.” சட்டென்று சம்மதித்துவிட்டுப் போர்வையை மூடிக் கொண்டாள் ராதா. தனக்கு முதுகு காட்டிப் படுத்திருக்கும் தன் தோழியைப் பாவமாகப் பார்த்தாள் அர்ச்சனா.

அத்தனை தூரம் தன் முடிவுகளை இலகுவில் மாற்றிக் கொள்ளும் ரகமல்ல ராதா. தன் ஆசை தவறென்று அவளுக்கு நிச்சயம் புரியும். ஆனால், அந்தத் தவறைத் திருத்திக் கொள்ளாமல் அதே புள்ளியில் நின்று விட்டால்?

தோழியின் எதிர்காலம் பயமுறுத்த கண்களை இறுக மூடிக்கொண்டாள் அர்ச்சனா.

திரும்பிப் படுத்துக் கொண்ட ராதாவின் விழிகள் கண்ணீரைச் சொரிந்தன. சொல்லத் தெரியாத வேதனை ஒன்று நெஞ்சை இறுக்கிப் பிடிக்க மௌனமாய் அழுதது அவள் மனது.

ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே 2

அவசர அவசரமாக மதரின் ரூமை நோக்கிப் போய்க் கொண்டிருந்தாள் ராதா. மனதில் நேற்றிரவு எடுத்துக் கொண்ட சங்கல்பங்கள் எல்லாம் காணாமல் போயிருந்தன.

வயலட் நிறப் புடவையில் இருந்தாள். சூரியன் கொஞ்சம் கருணை காட்டியதால் இன்று ஸ்வெட்டர் அணியவில்லை.

காதில் பெரிய குடை ஜிமிக்கி அணிந்திருந்தாள். அப்படி அணியும் போது கழுத்தில் எதுவும் போட்டுக்கொள்ள மாட்டாள். அது பார்க்க இன்னும் எடுப்பாக இருக்கும்.

வெற்றுக்கழுத்து, தளரப் பின்னிய ஒற்றைப் பின்னல் கன்னத்தை உரச, பார்க்கக் கொள்ளை அழகாக இருந்தது.

‘யார் யாரெல்லாம் வந்திருப்பார்கள்?’ எண்ணமிட்டபடி மதரின் ரூமை அடைந்தாள் ராதா. ஆனால் அவள் எதிர்பார்த்த கேள்விக்கு பதில் அன்றும் கிடைக்கவில்லை.

ப்ளூ ஷேரட் இன்று க்ரீம் கலராக மாறியிருந்தது. பாக்கெட்டில் அழகாக அந்தக் கூலிங் க்ளாஸ் சொருகப்பட்டிருந்தது. பக்கத்தில் இவை எதுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல நின்றது குழந்தை.

குழந்தையைப் பார்த்த போது அனைத்தையும் மறந்து ஒரு ஆசிரியை ஆகிப் போனாள் ராதா. கண்கள் அவசரமாகக் குழந்தையை அளவிட்டது.

ஆறு வயதுக் குழந்தைக்கான வளர்ச்சியோ அல்லது தந்தையின் செழுமையின் பிரதிபலிப்போ எதையும் அந்தக் குழந்தையிடம் ராதாவால் காண முடியவில்லை.

குழந்தையின் அருகில் சென்றவள் அதன் உயரத்திற்கு மண்டியிட்டு அமர்ந்து,

“குட் மார்னிங் ஆத்மிகா.” என்றாள். புதிதாகக் கிடைத்த அந்த நட்புக் கரத்தை ஏற்றுக் கொள்ள குழந்தை தயாராக இருக்கவில்லை.

வேற்று மனிதர்களைக் கண்டால் தன் சொந்தங்களிடம் ஒட்டிக் கொள்ளும் குழந்தைகளின் இயல்பைக் கூட ஆத்மிகா காட்டாதது ராதாவிற்கு ஆச்சரியமாக இருந்தது.

“மை நேம் இஸ் ராதா.” குழந்தையிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டாள். லேசான சிரிப்பு ஒன்று மட்டும் கண நேரம் வந்து போனது.

மதர் நீட்டிய ஃபைலை வாங்கிக் கொண்டவள் எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டாள். தந்தையிடம் ‘பாய்’ சொல்லச் சொன்ன போது குழந்தை திருதிருவென முழித்தது.

அனைத்தையும் மனதில் குறித்துக் கொண்டவள் வகுப்பறையை நோக்கி நடந்தாள். குழந்தைக்கு முன்னால் தன் நாயகன் இரண்டாம் பட்சம் ஆகிப் போனான்.

அபராஜிதன் ஆத்மிகா ஃபைலில் அந்தப் பெயர் அழகாக டைப் பண்ணப்பட்டிருந்தது.

அபராஜிதன்… அந்தப் பெயரை ஒரு முறை சொல்லிப் பார்த்தவள் தலையை உலுக்கிக் கொண்டாள்.

அபராஜிதனின் சுருக்கம் தான் அந்த அபியா? மனதுக்குள் நினைத்தபடி கடமைகளில் மூழ்கிப் போனாள்.

ராதாவின் அன்றைய பொழுது முழுவதையும் ஆத்மிகா ஆக்கிரமித்துக் கொண்டாள். அழவில்லை, குழப்பங்கள் எதுவும் பண்ணவில்லை. ஆனால், ஏதோ ஒரு பிடிவாதத்தில் எதையும் ஆழ்ந்து செய்ய மறுத்தது குழந்தை.

அத்தனை கலகலப்பாக வகுப்பறை இருந்த போதும் எதிலும் கலந்து கொள்ளாத ஒரு ஒதுக்கம் தெரிந்தது அந்தப் பிஞ்சிடம்.

ஹோம் டைம் நெருங்கவும் பிள்ளைகள் குதூகலித்த படி தங்கள் பெற்றோர்களிடம் ஒவ்வொருவராகச் சென்றார்கள். ஆத்மிகாவிற்கு ட்ரைவரே வந்திருக்க ஏமாற்றத்தோடு மதருக்குக் கால் பண்ணினாள் ராதா.

ட்ரைவரின் பெயரைச் சரிபார்த்துக் கொண்டு பிள்ளையை அவரோடு அனுப்பியவள் நேராக மதரின் ரூமிற்குச் சென்றாள்.

“வாங்க ராதா.”

“பிஸியா இருக்கீங்களா மதர்?”

“பரவாயில்லை வாங்க ராதா. நானே உங்களைப் பார்க்கணும்னு நினைச்சேன்.”

“சொல்லுங்க மதர்.”

“ஆத்மிகாவோட டே இன்னைக்கு எப்படி இருந்துச்சு?”

“ஃபர்ஸ்ட் டே தானே மதர். போகப் போக சரியாகிரும்னு நினைக்கிறேன்.”

“ம்… சரியாகணும் ராதா.” மதர் எதையோ பேசத் தயங்குவது போல தோன்றியது ராதாவிற்கு.

“ராதா! எல்லாப் பிள்ளைங்களோட வீட்டையும் விசிட் பண்ணிட்டீங்க இல்லை?”

“ஆமாம் மதர்.”

“அபிகிட்ட பேசிட்டு எப்போன்னு சொல்லுறேன். ஆத்மிகாவோட வீட்டையும் விசிட் பண்ணிடுங்க.”

அவர்கள் பாடசாலையில் அதை ஒரு விதியாகவே வைத்திருந்தார்கள். புதிதாகச் சேரும் குழந்தைகளின் வீட்டிற்கு ஆசிரியர் ஒரு முறை செல்வது வழக்கம். குழந்தையின் வீட்டுச் சூழல் அந்தக் குழந்தைக்கு எத்தனை தூரம் சாதமாக இருக்கிறது என்று பார்க்கும் நோக்கத்தோடு இருக்கும் அந்த விஜயம்.

“மதர்… எனக்கு ஆத்மிகாவோட அம்மாவைப் பார்த்தா ஹெல்ப்பா இருக்கும்ன்னு தோணுது.”

“ஓ…”

“ஆத்மிகாகிட்ட என்னமோ மிஸ்ஸிங் மதர்.”

“அம்மா தான் மிஸ்ஸிங் ராதா.”

“மதர்!”

“ம்… அம்மா அந்தப் பொண்ணு கூட இல்லைம்மா.”

“என்னாச்சு?” பதட்டமாக வந்தது ராதாவின் குரல்.

“அம்மாக்கும் அப்பாக்கும் ஒத்து வரலை. டிவோர்ஸ் பண்ணிக்கிட்டாங்க. நடுவுல குழந்தை… பாவம்.”

“ஓ…” ராதாவின் மனதுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்தது. தனது எண்ணத்தின் போக்கு மிகவும் அசிங்கமாகத் தோன்றினாலும் மனதுக்குள் ஒரு இதம் பரவுவதை ராதாவால் தடுக்க முடியவில்லை.

“பெண் குழந்தை… அம்மாகிட்ட தானே மதர் வளரணும்.” தயக்கமாக வந்தது ராதாவின் குரல்.

“அதுக்கு அபி அனுமதிக்கலைமா. சுஜாதாம்மா, அதான் அபியோட அம்மா எவ்வளவு சொல்லியும் கேக்கலை. பொண்ணை அவனோடவே வெச்சுக்கிட்டான்.”

“வெச்சுக்கிட்டது தப்பில்லை மதர். அதுக்கேத்த மாதிரி அந்தக் குழந்தையை கவனிக்கணும்.”

“ம்… கவனிக்காம இல்லை ராதா. எல்லா வசதியும் பண்ணிக் குடுத்திருக்கான்.”

“வசதி பண்ணினா மட்டும் போதுமா மதர்?”

“எனக்குப் புரியுது. ஆனா அதை அபிகிட்டச் சொல்லுற தைரியம் எனக்கில்லை. இந்தக் கல்யாணத்தால ரொம்பவே நொறுங்கிப் போயிட்டான்…”

ராதா மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. இன்னொருவர் குடும்ப விஷயத்தில் இவ்வளவு பேச அனுமதித்ததே பெரிய விஷயம். ஒரு சங்கடமான புன்னகையோடு நிறுத்திக் கொண்டாள்.

/////////////////////////////////////

கட்டிலில் அமைதியாக அமர்ந்திருந்தாள் ராதா. கோபமாக அங்கும் இங்கும் நடைபயின்றபடி இருந்தாள் அர்ச்சனா.

“சோ… உங்க ஹீரோக்கு டிவோர்ஸ் ஆச்சுது. அதனால உங்க ரூட்டு க்ளியரா இருக்குன்னு நீங்க படு ஹாப்பியா இருக்கீங்க?”

“அப்படியில்லை அர்ச்சனா.”

“பேசாத நீ! நேத்து அவ்வளவு தூரம் சொல்லி அனுப்புறேன். நீ திரும்பவும் வந்து அவனோட புராணம் பாடுற.”

“………….”

“உம் மனசுல நீ என்ன நினைச்சுக்கிட்டு இருக்கே? பொண்டாட்டி இல்லைன்னா…‌ உடனே நீ லவ் பண்ண ஆரம்பிச்சிடுவியா? உங்க வீட்டுல தெரிஞ்சா என்ன ஆகும்னு நினைச்சுப் பார்த்தியா?”

“அர்ச்சனா! ப்ளீஸ்… நீ சொல்லுறது எல்லாம் எனக்குப் புரியுது. ஆனா என்னோட மனசையும் கொஞ்சம் யோசிச்சுப் பாரு. நீ ஒரேயொரு தடவை அபராஜிதனைப் பாரு. பார்த்துட்டுப் பிடிக்கலைனா வேண்டாம்னு சொல்லு.”

ராதாவின் பேச்சில் அர்ச்சனாவின் காதில் புகை வந்தது. அவளை முறைத்துக் கொண்டு நின்றவள் தொப்பென்று கட்டிலில் அமர்ந்து தலையைப் பிடித்துக் கொண்டாள்.

“ப்ளீஸ் அர்ச்சனா…”

“ஏற்கனவே கல்யாணம் பண்ணி ஒரு பொண்ணோட குடும்பம் நடத்தி ஆறு வயசுல ஒரு குழந்தையும் இருக்கு ராதா. வாழ்க்கையை முழுசா வாழ்ந்த ஒரு மனுஷன் கிட்ட புதுசா நீ என்ன எதிரபார்க்க முடியும்?”

“வாழ்க்கையை முழுசா வாழ்ந்துட்டார்னு உனக்கு எப்படித் தெரியும் அர்ச்சனா? அந்த வாழ்க்கையால நொறுங்கிப் போய்ட்டார்னு தான் மதர் சொன்னாங்களே.”

“சரி… அப்படியே வச்சுக்கிட்டாலும் ஏற்கனவே ரணப்பட்ட மனசு இன்னொரு முறை அதே விஷப்பரீட்சையில இறங்குமா?”

“கொஞ்சம் கஷ்டம்தான்.”

“உனக்கெதுக்கு ராதா இந்தத் தலையெழுத்து? இவ்வளவு போராடித் தான் அந்த மனுஷனோட நீ வாழணுமா? இது போதாதுன்னு இலவச இணைப்பா ஒரு குழந்தை வேற…”

“அப்படியில்லை அர்ச்சனா…” ஏதோ சொல்லப்போன ராதாவை இமைக்காமல் பார்த்தாள் அர்ச்சனா.

“நீ முடிவு பண்ணிட்ட ராதா. நான் இனிப் பேசுறது எல்லாம் விழலுக்கு இறைத்த நீர்தான். ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன். என்னைக்காவது கண்ணைக் கசக்கிக்கிட்டு வந்து நின்னே… அப்புறம் தெரியும் இந்த அர்ச்சனா யாருன்னு.”

ரூம் கதவைப் படாரென அறைந்து மூடியவள் கோபமாக வெளியே போய்விட்டாள். ராதாவின் முகத்தில் லேசான புன்னகை அரும்பியது.

அதேவேளை…

அந்த பங்களாவின் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான் அபராஜிதன். அம்மா சுஜாதா பக்கத்தில் நின்று பரிமாறிக் கொண்டிருந்தார்.

“தம்பி… இன்னைக்கு மதர் கூப்பிட்டாங்கப்பா.”

“என்ன சொன்னாங்கம்மா?”

“ஆத்மிகாவோட டீச்சர் நம்ம வீட்டுக்கு வர்றாங்களாம்.”

“ஆமா… மறந்தே போய்ட்டேன். எப்போ அனுப்பட்டும்னு கேட்டாங்க. நான் தான் நாளைக்கு வரச் சொல்லுங்கன்னு சொன்னேன்.”

“தம்பீ…”

“என்னம்மா?”

“நீ நாளைக்கு வீட்டுல இருப்பியாப்பா?”

“இல்லையேம்மா.”

“அதில்லை… அந்த டீச்சர் ஏதாவது கேட்டா…” தயங்கியபடி நிறுத்தினார் சுஜாதா. அம்மாவின் தயக்கத்தில் புன்னகைத்தான் அபராஜிதன்.

“நம்ம வீட்டு நிலைமை என்னன்னு மதருக்கு நல்லாவே தெரியும். தெரிஞ்சும் ஒரு டீச்சரைக் கை காட்டுறாங்கன்னா அவங்க நிச்சயமா நல்ல மாதிரித்தான் இருப்பாங்க. ஸோ… நீங்க வொர்ரி பண்ணிக்காதீங்க. கேக்குற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க. அது போதும்.”

“ம்… சரிப்பா.”

“ஆத்மிகா சாப்பிட்டாளாம்மா?”

“அப்போவே சாப்பிட்டாப்பா. இப்போ டீவி பார்க்கிறா.”

“ம்.” சொன்னவன் கை கழுவிவிட்டுப் போய் விட்டான். போகும் தன் மகனையே பார்த்திருந்தார் சுஜாதா. முன்னைக்கு இப்போது எவ்வளவோ தேறி இருந்தான்.

‘அத்தனை பிழையும் எம்மேல தான். அவனுக்கேத்த பொண்ணா நான் தான் பார்க்கலை. என் பையனுக்கு பெரிய குடும்பத்திலிருந்து பொண்ணு எடுத்திருக்கேன்னு நாலு பேரு கிட்ட பெருமை பேசுறதுதான் எனக்குப் பெருசாப் போச்சு. எம்புள்ளை மனசுக்கு ஒத்துப் போறவளாத் தேடிப்புடிக்க எனக்குத் தெரியாமப் போச்சு.’

எப்போதும் போல மனது ஆர்ப்பாட்டம் பண்ணியது. இந்த நினைவு அடிக்கடி மனதை அழுத்துவதாலோ என்னவோ இப்போதெல்லாம் லேசாக நெஞ்சு வலிக்கிறது.

எண்ணங்களை உதறிவிட்டு ஆத்மிகாவின் ரூமை நோக்கிப் போனார் சுஜாதா.

 

அன்று சனிக்கிழமை. நேரம் மாலை நான்கு.

 

அந்த பங்களாவின் முன்னால் ஸ்கூட்டியை நிறுத்தினாள் ராதா. பார்க்கும் போதே பழைய பிரிட்டிஷ் காலத்து வீடு என்று தெரிந்தது.

பாலிஷ் பண்ணப்பட்ட செங்கற்கள் அந்த வீட்டை முற்று முழுதாக அலங்கரித்திருந்தன. சுற்றி வர இருந்த தோட்டத்தில் பலவர்ண ரோஜாக்கள் பூத்துக் குலுங்கின.

வீட்டுக்குப் பின்னால் தெரிந்த மலையில் மேகங்கள் தவழ்ந்து கொண்டிருந்தது கண்ணுக்கு விருந்தாக அமைந்தது.

தான் இன்னாரென்று கூர்க்காவிடம் அறிமுகப் படுத்தியவள் அனுமதி பெற்றுக்கொண்டு நேராக உள்ளே சென்றாள். கூர்க்கா வீட்டில் உள்ளவர்களுக்குத் தகவல் சொன்னாரோ என்னவோ ஒரு பெண்மணி வாசல் வரை வந்து வரவேற்றார்.

“வாம்மா! நான்தான் ஆத்மிகாவோட பாட்டி.” அழகாகப் புன்னகைத்தார் சுஜாதா. அசப்பில் ‘மன்னன்’ படத்தில் வரும் தலைவரின் அம்மா போல இருந்தார். ஆனால் கை நன்றாகவே இருந்தது.

“வணக்கம் மேடம்.”

“வணக்கம். உள்ளே வாம்மா.” உள்ளே அழைத்துச் சென்றவர் சோஃபாவைக் கை காட்டினார்.

“பரவாயில்லை மேடம். ஆத்மிகாவைப் பார்க்கலாமா?” இவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே ஒரு ஆணும் பெண்ணும் வீட்டின் மாடியிலிருந்து இறங்கி வந்தார்கள்.

“அம்மா! நாங்க கிளம்புறோம்.” சொல்லிவிட்டு அவர்கள் நகர,

“சரிப்பா.” என்றார் சுஜாதா. ராதாவின் பார்வை அவர்களைத் தொட்டு மீண்டது.

“அது என்னோட இளைய பையனும் மருமகளும்.” சொல்லியபடி புன்னகைத்தார் சுஜாதா.

“ஓ… அப்படியா மேடம்.” அவள் கண்கள் வீட்டை ஒரு முறை வலம் வந்தது. அவள் கண்கள் தேடிய முகம் எங்கேயும் தட்டுப்படவில்லை.

வீடு மிகவும் பழமையாக இருந்தது. பொறுக்கி எடுத்தாற்போல கலைநயம் மிகுந்த பொருட்கள் ஆங்காங்கே வீற்றிருந்தன. பழங்கால பாணியில் இருந்த சுவர்க் கடிகாரம் ராதாவை விடச் சற்று உயரமாக இருந்தது.

“ஆத்மிகாவோட ரூம் மேல இருக்கு. அங்க போகலாமாம்மா?” சுஜாதாவின் கேள்வியில் நிஜத்திற்கு வந்தாள் ராதா.

“போகலாம் மேடம்.” சொல்லிய படியே அவரைத் தொடர்ந்தாள் இளையவள். அறுபதுகளைத் தாண்டிய தோற்றம் தெரிந்தது சுஜாதாவிடம். ஒவ்வொரு வார்த்தைக்கும் புன்னகைப்பார் போலும். இருந்தாலும் வயதை மீறிய முதுமை முகத்தில் தெரிந்தது.

மேலே இருந்த ஹாலில் அவளை உட்காரச் சொன்னவர் ஆத்மிகாவை அழைக்கப் போக அவரைத் தடுத்தாள் ராதா.

“மேடம்! நான் உங்க கூட கொஞ்சம் பேசணும்.”

“ஓ… தாராளமாப் பேசலாம். உட்காரும்மா.” சொன்னவர் தானும் ஒரு சோஃபாவில் அமர்ந்து கொண்டார்.

“மேடம், இது இந்த வாரம் ஃபுல்லா ஆத்மிகாவை ஆப்சேர்வ் பண்ணி எடுத்த நோட்ஸ். இதை நீங்களும் படிச்சிட்டு ஆத்மிகாவோட பேரன்ட்ஸுக்கும் குடுங்க.”

“சரிம்மா.” ராதா கொடுத்த ஃபோல்டரை வாங்கிக் கொண்டவர்,

“ஆத்மிகா எப்படி நடந்துக்கிறா ஸ்கூல்ல?” என்றார். கண்களில் அத்தனை கலக்கம் தெரிந்தது. அந்தக் கேள்விக்கு பதில் போல அழகாகப் புன்னகைத்தாள் ராதா.

“ரொம்ப நல்லாப் பண்ணுறா மேடம். சில குழந்தைங்க புதுச் சூழலுக்குப் பொருந்த ரொம்பவே கஷ்டப்படுவாங்க. பேரன்ட்ஸைப் பிரியுறது அவங்களுக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கும். ஆனா, ஆத்மிகா அந்த ஸ்டேஜை ஈஸியா கடந்துட்டா.”

இதைச் சொன்னால் சுஜாதா மகிழ்ந்து போவார் என்று ராதா நினைக்க அவர் முகம் சோர்ந்து போனது. கொஞ்சம் கவலையைக் காட்டினாற் போல தோன்றியது.

“மேடம்! ஆத்மிகா வீட்டுல எவ்வளவு நேரம் உங்களோட செலவழிக்கிறாளோ அதே அளவு நேரம் எங்கூட இப்போ செலவழிக்கிறா. என்னோட வகுப்புல இருக்கிற இருபத்தைஞ்சு குழந்தைங்களும் என்னோட குழந்தைங்க தான். அவங்க வளர்ச்சிக்கு, முன்னேற்றத்துக்கு எது அவசியமா இருந்தாலும் அதைச் செய்ய நான் தயாரா இருக்கேன்.”

“………………”

“எங்கிட்ட ஆத்மிகாவைப் பத்தி எதை வேணும்னாலும் நீங்க டிஸ்கஸ் பண்ணலாம். எல்லாம் கான்ஃபிடென்ஷியலா இருக்கும். என்னை நீங்க நம்பலாம்.”

சுஜாதாவின் கண்களை நேராகப் பார்த்து ராதா சொன்ன போது அந்தப் பெண்மணி கலங்கிவிட்டார். கண்களிலிருந்து கண்ணீர் மளமளவென்று இறங்கியது.

எதுவும் பேசாமல் அவர் இருந்த சோஃபாவில் வந்து அமர்ந்தாள் ராதா. அவள் கை சுஜாதாவின் கைகளைத் தட்டிக் கொடுத்தது. ஆறுதலான நான்கு வார்த்தைகளுக்கு மிகவும் ஏங்கி இருப்பார் போலும். கலங்கிய வேகத்திலேயே தன்னை சுதாகரித்தும் கொண்டார்.

“சாரிம்மா.”

“பரவாயில்லை மேடம்.”

“சின்னக் குழந்தைங்கன்னா முதல் நாள் பள்ளிக்குப் போனா, பெத்தவங்களைப் பிரிஞ்சா நீ சொன்ன மாதிரித்தானேம்மா நடந்துக்கணும்? அழணும், ஆர்ப்பாட்டம் பண்ணணும். அதுதானேம்மா இயல்பு.”

“அப்படிச் சொல்ல முடியாது மேடம். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு மாதிரி. சில குழந்தைங்க வித்தியாசமா இருப்பாங்க.”

“அதைத்தான் நானும் சொல்லுறேன். இந்த வீட்டோட மூத்த பேரக் குழந்தை. எப்படியெல்லாம் வளரவேண்டியவ. நீ குடுத்த ரிப்போர்ட்டைப் படிச்சுத்தான் என்னோட பேரக்குழந்தை ஏப்படி இருக்கான்னு நான் தெரிஞ்சுக்கணுமா ராதா?”

“மேடம்!”

“என்னால என்ன பண்ண முடியும் சொல்லு? ஒரு பாட்டியா அந்தக் குழந்தையை அரவணைச்சுக்க முடியும். பார்த்துக்க முடியும்.”

“இந்த வயசுக் குழந்தைங்களுக்கு இருக்க வேண்டிய வெயிட் கூட ஆத்மிகாக்கிட்ட இல்லை மேடம்.”

“அவளுக்குச் சாப்பாடு குடுக்கிறது ரொம்பக் கஷ்டம்மா. பிடிவாதமெல்லாம் பிடிக்க மாட்டா. ஆனா… ஒடுங்கிப் போன மாதிரி இருப்பா. யார் கூடவும் அத்தனை சீக்கிரத்துல பேசமாட்டா. ரொம்ப மனசளவுல பாதிக்கப்பட்டிருக்காம்மா.”

“அவங்க அப்பா இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா?” இதை ராதா கேட்டபோது சுஜாதா ஒரு பெருமூச்சு விட்டார்.

“தன்னோட கவலைகளை மறக்க அவன் எடுத்துக்கிட்ட ஆயுதம் அவனோட ஃபாக்டரி. ராப்பகலா அங்கே தான்.”

“அம்மா…”

“அதுக்கு அவகிட்ட குழந்தையைக் குடுத்தாத் தானேம்மா!”

“பொண்ணுங்க எந்த இடத்துல வேணும்னாலும் பொய்த்துப் போகலாம். ஆனா, கெட்ட தாய்ன்னு யாரும் இல்லை மேடம்.”

“ஐயையோ! என் பையனுக்கும் அந்தப் பொண்ணுக்கும் ஒத்துப் போகலைங்கறத்துக்காக நான் ஸ்வரா வைத் தப்பான பொண்ணுன்னு சொல்லமாட்டேம்மா.”

‘ஸ்வரா…’ மனதுக்குள் ஒரு முறை சொல்லிப் பார்த்தாள் ராதா. பெயரே இத்தனை அழகா இருக்கே! இளையவள் முகத்தைப் பார்த்தே அவள் மனதைப் படித்தவர் போல சொன்னார் சுஜாதா.

“ரொம்ப அழகா இருப்பா. பெரிய வீட்டுப் பொண்ணு. ரொம்பச் செல்லமா வளர்த்திருக்காங்க. என் பையனோட எதிர்பார்ப்புகளுக்கு ஈடு குடுக்க அவளால முடியலை.”

“ஓ…”

“இந்தக் காலத்துல எந்தப் பொண்ணும்மா இவன் சொல்லுற மாதிரி இருப்பா? மாடர்னா ட்ரெஸ் பண்ணி ப்யூட்டி பார்லர், பார்ட்டி, ஃபங்ஷன்னு சுத்துற பொண்ணுக்கிட்ட போய் புடவை கட்டு, பூ வைய்யி, வீட்டையும் குழந்தையையும் பார்த்துக்கோன்னு சொன்னா… ஏத்துப்பாளா?”

“…………”

“அதுக்காக எங்களையெல்லாம் எடுத்தெறிஞ்சு ஒரு நாளும் நடக்கமாட்டா. ரொம்ப மரியாதை தெரிஞ்ச பொண்ணு.” உறவு விட்டுப் போனாலும் தன் பேத்தியின் தாயை விட்டுக்கொடுக்கவில்லை சுஜாதா.

“எம் பொண்ணையும் அவகிட்ட குடுத்தா அவளைப்போல தான் வளப்பான்னு சொல்லி ஆத்மிகாவை அவங்க அம்மாக்கிட்ட குடுக்க மறுத்துட்டான்.”

“அவங்க கேட்டு சண்டை போடலையா மேடம்?”

“கேட்டா… சண்டையெல்லாம் போடலை.”

“அவங்க…‌ இப்போ…”

“வேற கல்யாணம் பண்ணிக் குடுத்துட்டாங்களாம்.” அந்தப் பதிலில் கொஞ்சம் திடுக்கிட்டாள் ராதா.

“ராதா… நான்… ஏதோ ஒரு கவலையில…” தடுமாறிய முதியவரைப் பார்த்துப் புன்னகைத்தாள் ராதா.

“ஆத்மிகாவைப் பார்க்கலாமா மேடம்?” அந்தக் கேள்வியில் பல அர்த்தங்கள் இருந்தாற்போல தோன்றியது சுஜாதாவிற்கு. ஒரு புன்சிரிப்போடு ராதாவை ஆத்மிகாவின் ரூமிற்கு அழைத்துச் சென்றார்.

ரூம் கதவைத் திறந்த போது மலைத்துப் போனாள் ராதா. பின்ங் கலர் பெயின்ட்டில் ரூம் பளபளத்தது. பெட், பில்லோ, கர்ட்டன் முதற்கொண்டு அனைத்தும் பின்ங் கலரிலேயே இருந்தது.

கால் புதையும் கார்பெட், அட்டாச்ட் பாத்ரூம், டீவி என அந்த ரூமே ஒரு ஹோட்டல் அறை போல வடிவமைக்கப் பட்டிருந்தது. ஆறு வயதுக் குழந்தை ஒன்றுக்கு என்னவெல்லாம் தேவையோ அவை அனைத்தும் அங்கு நிறைக்கப்பட்டிருந்தது.

“ஹாய் ஆத்மிகா.” ராதாவின் குரலில் டீவி யில் கவனமாக இருந்த பெண் திரும்பிப் பார்த்தது. இந்த ஒரு வார காலப் பழக்கத்தில் லேசான புன்னகை ஒன்று குழந்தையின் முகத்தில் தோன்றியது.

ராதா எதையும் கண்டு கொள்ளவில்லை. தன் உடமைகளைக் கழட்டி ஒரு பக்கமாக வைத்தவள் ஆத்மிகாவோடு போய் அமர்ந்து டீவி பார்க்கத் தொடங்கி விட்டாள்.

குழந்தை முதலில் மலைத்த போதும் தனக்கொரு துணை கிடைத்த மகிழ்ச்சியில் லேசாகப் பேச ஆரம்பித்தது. ஆச்சரியமாகப் பார்த்த சுஜாதா மெதுவாக ரூமை விட்டு வெளியேறினார்.

டீவி யில் ‘பார்பி’ மூவி போய்க்கொண்டிருக்க தனக்கு எதுவும் தெரியாதது போல கேள்விகளைக் கேட்டு குழந்தையிடம் பேச்சை வளர்த்தாள் ராதா.

தனது மிஸ்ஸுக்கு ஒன்றும் தெரியாது என்று புரிந்த மாத்திரத்தில் ஆத்மிகா குஷியாகிப் போனாள். பேச்சுக்கு நடுவே லேசாகச் சிரிப்பும் வந்தது.

தனது கூட்டை விட்டு வெளியே வரக் குழந்தை ஆயத்தமாகத்தான் இருந்திருக்கிறது என்று ராதா உணர்ந்து கொண்டாள். ஆனால் அந்தக் கூட்டை உடைக்கத்தான் யாரும் இருக்கவில்லை.

பள்ளிக்கூடத்தில் பார்த்த ஆசிரியரிடம் வராத நட்பு வீட்டில் பார்த்தபோது வந்தது. இவர் தனக்குப் பாதுகாப்பான ஒரு உறவு தான் என்பதை அந்தச் சின்ன மனம் புரிந்து கொண்டது.

கையில் ட்ரேயோடு உள்ளே நுழைந்தார் சுஜாதா. சூடாக சமோசாவும் காஃபியும் இருந்தது. குழந்தைக்குப் பாலும் கொண்டு வந்திருந்தார். ட்ரேயைப் பார்த்தவுடன் முகத்தைச் சுருக்கினாள் ஆத்மிகா. சுஜாதா அர்த்தத்தோடு ராதாவின் முகத்தைப் பார்த்தார்.

“இவ்வளவு நேரமும் டீவி பார்த்தது ரொம்பப் பசிக்குதில்லை ஆத்மிகா? வாங்க வாங்க. ஹான்ட் வாஷ் பண்ணிட்டு பாட்டி சூடா சமோசா கொண்டு வந்திருக்காங்க சாப்பிடலாம்.”

விடாமல் சின்னவளைக் கையோடு பாத்ரூமிற்குக் கூட்டிக்கொண்டு போய் கைகளைக் கழுவி விட்டாள். பேச்சுக் கொடுத்த படியே குழந்தைக்கும் ஊட்டி விட்டாள். மீதிப்படம் ஸ்நாக்ஸுடன் கழிந்தது.

நேரம் ஆறைத் தாண்டியிருக்க லேசாக இருள்பரவ ஆரம்பித்திருந்தது. கைக்கடிகாரத்தைப் பார்த்த ராதா பாட்டியிடமும் பேத்தியிடமும் விடைபெற்றுக் கொண்டாள்.

“ஓகே ஆத்மிகா. மன்டே ஸ்கூல்ல பார்க்கலாம், பாய்.” அவள் சொல்லி முடிக்கவும் குழந்தை,

“மிஸ்…” என்றது தயக்கமாக. ராதாவிற்குத் தன் காதுகளை நம்பவே முடியவில்லை. தன் தூண்டுதல் இன்றி முதல் முறையாக ஆத்மிகா அவளிடம் பேசும் வார்த்தை இது. சுஜாதாவை வியப்போடு பார்த்தவள்,

“என்னடா?” என்றாள். குரலில் அத்தனை கனிவு இருந்தது.

“நாளைக்கும்… வர்றீங்களா? விளையாடலாம்.” தயக்கமாக வந்தது குரல். ராதா சட்டென்று சுஜாதாவைத் திரும்பிப் பார்த்தாள்.

சுஜாதாவின் முகம் சங்கடத்தைக் காட்டியது. இருந்தாலும் ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன் ராதாவின் முகத்தைப் பார்த்தார். ராதா எதுவும் பேசவில்லை. குற்றமுள்ள நெஞ்சு, லேசாகப் படபடத்தது.

“ஆத்மி குட்டி, மிஸ்ஸுக்கு நிறைய வேலை இருக்கும்டா. ஒவ்வொரு நாளும் நம்ம வீட்டுக்கு அவங்களால வர முடியாது.” தன்மையாகத் தன் பாட்டி சொன்னதைக் கேட்டபோது சின்னவளின் முகம் சுருங்கிப் போனது.

பெரியவர்கள் இருவரும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டார்கள்.

“மேடம்… நான் இங்க வர்றதால உங்களுக்கு ஏதாவது…” ராதா சொல்லி முடிக்குமுன் அவளின் கையைப் பற்றிக் கொண்டார் சுஜாதா.

“என்ன பேச்சு ராதா இது? உனக்கு எத்தனையோ வேலை இருக்கும்னு தான் நான் தயங்கினேன். நீ எப்போ வேண்டுமானாலும் இந்த வீட்டுக்குத் தாராளமா வரலாம்மா.”

“தான்க்யூ மேடம்.” சுஜாதாவைப் பார்த்துப் புன்னகைத்தவள் குழந்தையிடம் திரும்பினாள்.

“ஆத்மிகா, மிஸ் நாளைக்கு ஈவ்னிங் வர்றேன். நீங்க உங்க டாய்ஸ் எல்லாம் எடுத்து வைங்க. விளையாடலாம், ஓகே.” பதில் சொல்லாவிட்டாலும் குழந்தை ஆர்வமாகத் தலையாட்டியது.

நாட்கள் வேகமாக உருண்டோட இதுவே வாடிக்கை ஆகிப் போனது. ஆனால், ராதா யார் முகத்தைப் பார்க்க ஆசைப்பட்டாளோ அந்த முகத்தை மட்டும் பார்க்க முடியவே இல்லை.

இருந்தாலும், அவன் வசிக்கும் அந்த வீடும், அவன் சொந்தபந்தங்களும் அவளுக்கு அத்தனை நிறைவைக் கொடுத்தன.

ஆத்மிகாவின் ரூமில் உட்கார்ந்து விளையாடியவர்கள் இப்போது கார்டன் வரை வந்திருந்தார்கள். மேடம், மிஸ் எல்லாம் காணாமல்ப் போய் அங்கு ஆன்ட்டி குடியேறி இருந்தது.

அவ்வப்போது தன் முதுகைத் துளைக்கும் ஏதோ ஒன்றை உணருவாள் ராதா. சுற்றிவர ஏதோ ஒரு எதிர் பார்ப்போடு கண்களைச் சுழற்றுவாள் பெண். ஆனால், அவள் தேடிய முகம் எங்கும் புலப்படாது.

“என்ன? பார்ட் டைமா ஆயா வேலைக்கு இப்போவே சேர்ந்துட்டே போல?” அர்ச்சனாவின் கேலியில் அவளை முறைத்தாள் ராதா.

“சரி சரி நீ நடத்து. எஸ்டேட் போற வழியில பார்த்தேன் உன்னோட ஹீரோவை.” ராதா எதுவும் பேசவில்லை. கண்கள் மின்னத் தன் தோழியையே பார்த்திருந்தாள்.

“ம்… பரவாயில்லை. பார்க்க சுமாரா இருக்காரு. உனக்குப் பொருத்தம் தான். விசாரிச்ச வரைக்கும் வீட்டுலயும் எல்லாரும் நல்ல மாதிரின்னு தான் சொல்லுறாங்க.” அர்ச்சனா சொல்லி முடித்த போது ராதா ஓடிவந்து அவளை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

“ஏய்! என்னடீ இது? ச்சீ… விடு என்னை. கன்னத்தை எச்சில் பண்ணிக்கிட்டு…” ராதாவைத் தள்ளி விட்டவள் அவள் முத்தம் வைத்த கன்னத்தைத் துடைத்துக் கொண்டாள்.

ஒரு முறைப்போடு ரூமை விட்டு வெளியேறினாள் அர்ச்சனா. ஆனாலும் முகத்தில் மெல்லியதாக ஒரு புன்னகை தெரிந்தது.

அன்று இரவு…

அம்மாவைத் தேடி ஹாலுக்கு வந்தான் அபராஜிதன். டீவி யில் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்தார் சுஜாதா.

“அம்மா!” மகனின் குரலில் கவனம் கலைந்தது அன்னைக்கு.

“என்ன தம்பி?”

“ஆத்மிகா தூங்கிட்டாளா?” எப்போதும் தன் பெண்ணைப் பற்றிய பேச்சு வந்தால் சோகத்தை அப்பிக் கொள்ளும் அன்னையின் முகம் அன்று மலர்ந்து போவதை மனதுக்குள் குறித்துக் கொண்டான் அபராஜிதன்.

“ம்… அப்பவே சமத்தா சாப்பிட்டுட்டு தூங்கிட்டா.”

“இப்பெல்லாம் நீங்க சொல்றதைக் கேட்டு ரொம்ப நல்ல பொண்ணா ஆயிட்டா போல ஆத்மி!”

“இல்லையா பின்னே! என் பேத்தி சக்கரைக்கட்டி தான். என்ன? அப்போல்லாம் அவளை சரியா யாரும் வழி நடத்தலை. இப்போ தான் ராதா வந்துட்டா இல்லை.”

“ம்… டீச்சர் அடிக்கடி வர்றாங்களோ?” மகனின் குரல் பேதத்தை அன்னை கவனிக்கவில்லை.

“ஃப்ரீயா இருந்தா வாம்மான்னு நானும் சொல்லி இருக்கேன். நம்ம சின்னக்குட்டியைப் பார்த்தியா தம்பி? இந்த ஒரு மாசத்துல லேசா சதை போட்டு பார்க்க எவ்வளவு அழகா இருக்கா! என் தங்கத்துக்கு என் கண்ணே பட்டுரும்.”

அம்மாவின் பேச்சு அத்தனை தூரம் ருசிக்கவில்லை அபராஜிதனுக்கு. வயசுப்பெண். அடிக்கடி இங்கே வந்து தன் பெண்ணைக் கவனித்துக் கொள்வது அவனுக்குச் சரியென்று படவில்லை.

“அம்மா…”

“சொல்லு தம்பி.”

“ஆத்மி கிட்ட தெரியுற மாற்றம் ரொம்ப நல்ல விஷயம் தான். இல்லேங்கலை. அதுக்காக டீச்சர் இங்க அடிக்கடி வர்றது அவ்வளவு நல்லாப் படலைம்மா.”

“அதுக்கு?” கொஞ்சம் கடினமாக வந்தது சுஜாதாவின் குரல். சுஜாதாவிற்கு கோபப்படத் தெரியாது. எதுவாக இருந்தாலும் சிரித்த முகமாகவே பேசித் தீர்ப்பார். இப்போது அம்மாவின் குரலில் வந்த கடினம் அபராஜிதனை ஆச்சரியப் படுத்தியது.

“அம்மா!”

“அதுக்கு என்ன பண்ணச் சொல்லுற தம்பி. இத்தனை காசு பணம் இருந்தும் இவ்வளவு நாளா அனாதை மாதிரித் தானே நின்னுச்சு அந்தக் குழந்தை? காலம் போன கடைசியில என்னால ஓட முடியுமா? ஆட முடியுமா?”

“……………”

“இத்தனை வளர்ந்த பிறகும் உனக்கு அம்மா தேவைப் படுதில்லை. அப்போ அந்தப் பிஞ்சுக்கு எவ்வளவு தேவைப்படும்? யோசிச்சுப் பார்த்தியா நீ? யார் சொன்னதையும் கேக்காம உன் இஷ்டப்படி தானே எல்லாம் பண்ணினே?”

“என் கஷ்டம் என்னன்னு உங்களுக்குப் புரியலையாமா?”

“எம் மகனோட கஷ்டம் எனக்குப் புரிஞ்சுது. அதால தான் அமைதியா இருந்தேன். உம் மகளோட கஷ்டம் உனக்குப் புரிஞ்சுதா?”

“அம்மா!”

“யார் பேச்சையும் நான் கேக்குறதா இல்ல தம்பி. இத்தனை நாளும் எம் பேத்தியோட வாழ்க்கை என்ன ஆகுமோ, ஏது ஆகுமோன்னு நான் கிடந்து மருகினது எனக்குத் தான் தெரியும். ஆண்டவனாப் பார்த்து அந்தப் பொண்ணை இங்க அனுப்பி இருக்கான். அதைத் தயவு பண்ணி யாரும் கெடுக்காதீங்க.”

சூடாகச் சொல்லி முடித்தவர் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டார். அபராஜிதன் மலைத்துப் போனான். தன் தோளில் விழுந்த கையில் திடுக்கிட்டவன் திரும்பிப் பார்த்தான். அப்பா வெங்கடேசன் நின்றிருந்தார்.

“அப்பா… அம்மா சொன்னதைக் கேட்டீங்களா? ஏம்பா அம்மா என்னைப் புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க?” மகனின் ஆதங்கத்தில் புன்னகைத்தார் வெங்கடேசன்.

“அவளுக்கும் புரியுதுப்பா. அதையும் தாண்டி ஆத்மிகாவோட எதிர்காலம் அம்மாவை பயமுறுத்துது. நீ எதையும் மனசுல வச்சுக்காம போய்த்தூங்கு. நான் பேசுறேன் அம்மாக்கிட்ட.”

அப்பாவின் வார்த்தைகளில் பெருமூச்சு ஒன்று கிளம்பியது மகனிடமிருந்து. எதுவும் பேசாமல் நகர்ந்து விட்டான். போகும் மகனை வேதனையோடு பார்த்திருந்தார் வெங்கடேசன்.

 

ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே 4

ஃபோனை நோண்டிக் கொண்டிருந்தாள் ராதா. அர்ச்சனா வேறு இன்னும் ரூமிற்கு வரவில்லை. ஏதோ வேலையில் மாட்டிக் கொண்டாளாம். தகவல் அனுப்பியிருந்தாள்.

தனியாக உட்கார்ந்திருக்க போராக இருந்தது. கை தானாக ஆத்மிகாவின் வீட்டு நம்பரை அழைக்க, அழைப்பு ஏற்கப்படும் வரை காத்திருந்தாள்.

“ஹலோ.”

“ஆன்ட்டி நான் ராதா பேசுறேன்.”

“சொல்லு ராதா.”

“எங்கேயும் வெளியே போற ஐடியா இருக்கா ஆன்ட்டி?”

“இல்லைம்மா, வீட்டுல தான் இருக்கேன். நீ வர்றியா?”

“வரட்டுமா?”

“இதென்ன கேள்வி? ஃப்ரீயா இருந்தா வரவேண்டியது தானே.”

“அர்ச்சனாவும் இன்னைக்கு வர லேட்டாகுமாம். தனியா இருக்க என்னமோ மாதிரி இருக்கு. அதான் வீட்டுக்கு வரலாமேன்னு யோசிச்சேன்.”

“இவ்வளவு விளக்கம் எதுக்கு ராதா? கிளம்பி வாம்மா.”

“ஆன்ட்டி! என்ன வாய்ஸ் கொஞ்சம் டல்லா இருக்கு?”

“நேத்து நைட் ல இருந்து கை வலிக்குதும்மா.”

“பாரமா ஏதாவது தூக்கினீங்களா?”

“இல்லையேம்மா. சரி நீ கிளம்பி வாடா. வந்து பேசிக்கலாம்.”

“சரி ஆன்ட்டி.” அழைப்பைத் துண்டித்தவள் அடுத்த பதினைந்தாவது நிமிடம் அபராஜிதன் வீட்டில் இருந்தாள். நேரம் போவதே தெரியாமல் ஆத்மிகாவோடு விளையாடிக் கொண்டிருந்தாள். வீட்டில் யாரும் இல்லாதது வேறு வசதியாகிப் போனது.

ஆனால் சுஜாதா தான் கொஞ்சம் டல்லாகத் தெரிந்தார். வழமை போல அன்று அவளோடு பேசவும் இல்லை. கையில் டீயோடு வந்தவரை ஆழ்ந்து பார்த்தாள் ராதா. முகத்தில் வலியின் சாயல்.

“ஆன்ட்டி! என்னாச்சு? ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?” ராதா கேட்டுக் கொண்டிருக்கும் போதே சுஜாதாவின் முகம் வலியில் கசங்கியது. சட்டென்று அவர் கையிலிருந்த ட்ரேயை வாங்கியவள் அதை மேஜை மேல் வைத்தாள்.

“ஆன்ட்டி! என்ன பண்ணுது? ஆன்ட்டி! ஆன்ட்டி!” கண்கள் சொருக சோஃபாவில் சாய்ந்தவரின் முகத்தில் படபடவென அடித்தாள் ராதா.

“ராதா… நெஞ்சு… நெஞ்சு சுருக்குன்னு… வலிக்குது.”

“ஐயையோ! ஆன்ட்டி!”

“ஆம்பியூலன்ஸுக்கு… கால் பண்ணு…” தட்டுத் தடுமாறிப் பேசினார் சுஜாதா. விளையாட்டில் கவனமாக இருந்த ஆத்மிகா இது எதையும் கவனிக்கவில்லை.

“இதோ! இதோ கூப்பிடுறேன் ஆன்ட்டி.” ஓடிப்போனவள் டெலிஃபோன் டைரக்டரியிலிருந்த அந்தப் பிரபலமான ஹாஸ்பிடலை அழைத்தாள்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஆம்பியூலன்ஸ் வந்து விட சுஜாதாவை அவசர அவசரமாக ஏற்றினார்கள். வேலை செய்பவர்களுக்குத் தகவல் சொன்னவள் ஆத்மிகாவையும் தூக்கிக் கொண்டு தானும் ஆம்பியூலன்ஸில் ஏறிக்கொண்டாள்.

வீட்டில் இருப்பவர்களின் ஃபோன் நம்பர் அவளிடம் இருக்கவில்லை. அதனால் யாருக்கும் தகவல் சொல்லவும் முடியவில்லை.

ஆம்பியூலன்ஸில் டாக்டர் ஒருவரும் வந்திருந்ததால் அவசர அவசரமாக ஈஸிஜி எடுத்தார்கள். மானிட்டரைப் பார்த்த போது ராதாவுக்கே பயமாக இருந்தது. க்ராஃப் கொஞ்சம் தாறுமாறாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தது.

ஏதோ ஒரு மாத்திரையை சுஜாதாவின் நாக்கின் அடியில் வைக்கக் கொடுத்தார்கள். கண்ணீரைத் துடைத்தபடி அனைத்தையும் பார்த்திருந்தாள் ராதா.

ஹாஸ்பிடலை அடைந்த போது நேரடியாகவே சுஜாதாவை ஐஸியூ ற்கு கொண்டு போய் விட்டார்கள். ஆம்பியூலன்ஸில் இருந்த டாக்டர் ஏற்கனவே ஹாஸ்பிடலுக்குத் தகவல் சொல்லி இருந்ததால் எல்லாம் ஆயத்தமாகவே இருந்தது.

“மேடம்! இந்த அமௌன்ட்டை கவுன்ட்டர்ல செட்டில் பண்ணிடுங்க.” ஒரு பெண்ணின் குரல் கேட்கவும் கவனம் கலைந்தாள் ராதா.

அவள் நீட்டிய காகிதத்தைப் பார்த்த போது ராதாவிற்குத் தலை சுற்றியது. இத்தனை பெரிய தொகைக்கு அவள் எங்கே போவாள்?

தன்னோடே ஒட்டிக்கொண்டிருந்த ஆத்மிகாவின் தலையை மெல்ல வருடிக் கொடுத்தாள் பெண். அபராஜிதனின் நம்பரை சேமித்து வைத்துக் கொள்ளாதது எத்தனை பெரிய தவறென்று இப்போது புரிந்தது அவளுக்கு.

ஐஸியூ ஐ விட்டு வெளியே வந்த டாக்டர் நேராக இவளிடம் தான் வந்தார்.

“பேஷன்ட்டோட வந்தது நீங்க தானே மேடம்?”

“ஆமா டாக்டர்.” கைகள் நடுங்கியது ராதாவிற்கு. அவள் முகத்தைப் பார்த்தவர் என்ன நினைத்தாரோ…

“பயப்படாதீங்கம்மா, க்ரிடிக்கல் ஸ்டேஜ் இல்லை. ப்ளாக் இருக்கு. ரிமூவ் பண்ண ஸ்டென்ட் போடப்போறோம். உங்களுக்கு ஓகே தானே?” என்றார்.

“ஓகே டாக்டர்.”

“குட்.” சொல்லிவிட்டு மடமடவென உள்ளே மீண்டும் போய்விட்டார் அந்த டாக்டர்.

ராதாவிற்குப் பயம் அப்பிக் கொண்டது. ‘நாம் பாட்டிற்கு ஓகே சொல்லி விட்டோம். ஆன்ட்டி வீட்டிலிருந்து இன்னும் யாரையும் காணலை. வந்தால் என்ன சொல்வார்களோ…’

கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருந்தது ராதாவிற்கு. குழந்தை வேறு இவளை விட்டு ஒரு அங்குலமும் நகர மறுத்தது. அலைபாய்ந்து கொண்டிருந்த அவள் விழிகளில் தூரத்தே அபராஜிதன் வருவது தெரிந்தது.

“அப்பாடா!” வாய்விட்டுச் சொல்லிக் கொண்டாள்.

கண்களைத் துடைத்தபடி அவள் நகரப்போக கால்களைக் கட்டிக் கொண்டாள் ஆத்மிகா. குழந்தையைத் தூக்கிக் கொண்டவள்,

“ஆத்மிகா! அங்கப் பாருங்க. அப்பா வர்றாங்க. அப்பாக்கிட்டப் போகலாமா?” என்றாள். அப்பா என்றதும் குழந்தை இன்னும் இறுக்கமாக அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டது. அதற்குள் அபராஜிதனே அவர்களிடம் வந்திருந்தான்.

“என்ன ஆச்சு?” பதட்டத்துடன் வந்த அந்த ஆழ்ந்த குரல் இதுவரை நேரம் அவள் அடக்கி வைத்திருந்த துக்கத்தைத் தீண்டிப் பார்த்தது. கண்களில் கரகரவென கண்ணீர் வழிய தேம்பினாள் ராதா.

“நான் வீட்டுக்கு வந்தப்போ ஆன்ட்டி கை வலிக்குதுன்னு சொன்னாங்க. அதுக்கு அப்புறமா… நெஞ்சு வலிக்குதுன்னு…” மேலே சொல்ல முடியாமல் அவள் திணற, ஆன்ட்டி அழுவதைப் பார்த்த குழந்தை தானும் வீறிட்டு அழ ஆரம்பித்தாள்.

அப்போதுதான் ராதாவிற்குத் தான் செய்த மடத்தனம் புரிந்தது. குழந்தைக்கு முன்னால் அழுதால்… பாவம், அது என்னதான் பண்ணும்? கண்களைத் துடைத்துக் கொண்டவள் அனைத்தையும் மறந்து ஆத்மிகாவைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

“அடடா! ஆத்மிக் குட்டி இப்போ எதுக்கு அழுறீங்க? பாட்டிக்கு ஒன்னுமில்லை. அதுதான் இப்போ டாக்டர் அங்கிள் சொன்னாங்க இல்லை. ஒன்னும் ப்ராப்ளம் இல்லைன்னு.”

“நீங்க அழுறீங்க…” அழுகைக்கு நடுவே வந்தது பதில்.

“ஐயையோ! நீங்க பயந்துட்டீங்களா? அது ஒன்னுமில்லைடா. ஆன்ட்டி ரொம்ப நேரமா ஒன்னுமே சாப்பிடல்லையா… ஹங்க்ரி வந்திடுச்சு. அதுதான் அழுதுட்டேன்.”

“ஹங்க்ரி வந்தா நீங்க அழுவீங்களா?”

“ஆமா.” இவர்களைப் பேச்சைக் கலைத்தபடி வந்தார் டாக்டர்.

“ஹேய் அபி!” சற்று உரக்கவே அழைத்தவர் அபராஜிதனை நோக்கிப் புன்னகை முகமாக வந்தார். அபராஜிதனுக்குச் சட்டென்று அவரை இனங்காண முடியவில்லை.

“டேய் மாப்பிளை… ராஜேஷ் டா!” ஒரு சில கணங்களுக்குப் பிறகே இவன் மூளை எதிரில் நிற்பவனைக் கண்டு கொண்டது.

“ராஜேஷ்! இங்க என்னடா பண்ணுற? சட்டுன்னு பார்த்ததும் என்னால கண்டுபிடிக்க முடியலை மாப்பிளை.”

“இங்கயா?மாடு மேய்க்கிறேன் மாப்பிளை. அது சரி! உள்ளே இருக்கிறது யாரு? அம்மாவா?”

“ஆமாண்டா.”

“பயப்படாத. ஒன்னும் ப்ராப்ளம் இல்லை. உன்னோட வைஃப் கரெக்ட் டைமுக்கு கொண்டு வந்து சேர்த்துட்டாங்க.” அவராகப் பேசியவர் அபராஜிதனோடு பேசியபடி அவனையும் அழைத்துக்கொண்டு தள்ளிப் போய்விட்டார்.

அபியின் விழிகள் ஒரு முறை தீர்க்கமாக ராதாவைத் தொட்டு மீண்டது. சங்கடமாகத் தலை குனிந்து கொண்டாள் ராதா.

சற்று நேரத்தில் திரும்பி வந்தவன் நீண்ட நேரமாக இவள் குழந்தையைச் சுமந்திருப்பதைப் பார்த்து குழந்தைக்காகக் கையை நீட்டினான்.

ஆத்மிகா போக மறுத்தாள். ராதாவின் கழுத்தை இன்னும் இறுக்கமாகக் கட்டிக் கொண்டவள் காலிரண்டையும் பெரியவள் இடையோடு பின்னிக்கொண்டாள். அபராஜிதன் பார்வை குழந்தையைத் தவிர்த்து ராதாவையே துளைத்தது.

“இந்த அமௌன்ட்டை… பே பண்ணச் சொன்னாங்க.” கையிலிருந்த பேப்பரை நீட்டினாள் பெண்.

“ம்…” வாங்கிக் கொண்டவன் கௌன்ட்டரை நோக்கிப் போய்விட்டான். அதன் பிறகே நிம்மதியாக மூச்சு விட்டாள் ராதா.

இரண்டு நாட்கள் ஷாஸ்பிடல் வாசத்தின் பின் வீடு திரும்பியிருந்தார் சுஜாதா. கிட்டத்தட்ட எழுபத்தி ஐந்து சதவிகிதம் அடைப்பு இருந்ததாகவும், இதை இத்தனை நாள் எப்படிக் கவனிக்காமல் விட்டீர்கள் என்றும் டாக்டர் ராஜேஷ் கேட்டாராம். வீட்டுக்கு வந்த பின் அதற்காக தனி ஒரு ஆவர்த்தனம் வாசித்தானாம் அபராஜிதன். சுஜாதா ராதாவிடம் சொல்லிப் புலம்பி இருந்தார்.

‘எனக்கு என்னம்மா தெரியும்? லேசா வலி இருந்துது. வாய்வுக் குணமா இருக்கும்னு நினைச்சுக் கஷாயம் வெச்சுக் குடிச்சேன்.’ சுஜாதா அப்பாவியாகச் சொன்ன போது சிரிப்பு வந்தது ராதாவிற்கு.

சுஜாதாவின் இளைய மருமகள் ராகினிக்கு இப்போது பார்த்து தூரத்து உறவில் ஒரு விசேஷம் வர அம்மாவின் வீட்டுக்குக் கிளம்பி விட்டார். அவள் கணவனும் அதைக் கண்டு கொண்டாற்போலத் தெரியவில்லை.

முகத்தில் குழப்பத்தோடு ராதா சுஜாதாவின் முகம் பார்க்கச் சிரித்தார் பெரியவர்.

‘விடு ராதா. எம் புள்ளைக்கே அக்கறை இல்லை. அவ பாவம் என்ன பண்ணுவா?’

‘ஆன்ட்டி! நீங்க கவலைப் படாதீங்க. ஸ்கூல் லீவ் போட முடியாது. நான் மார்னிங்கும் ஈவ்னிங்கும் உங்களை வந்து பார்க்கிறேன்.’ இளையவள் சொன்ன போது கையைப் பிடித்துக் கொண்டார் சுஜாதா.

‘எதுக்கும்மா நீ சிரமப்படுத்திக்கிற? என்னால சமாளிக்க முடியும்.’ அவர் எவ்வளவு சொல்லியும் ராதா கேட்கவில்லை. காலையில் ஸ்கூலுக்குப் போகும் முன்பாக ஆத்மிகா வீட்டிற்குச் செல்வாள். கொஞ்சம் விரைவாகச் செல்வதால் இப்போதெல்லாம் காஃபியும், பேப்பருமாக இருக்கும் அபராஜிதனின் தரிசனம் கிடைத்தது.

காலையில் அவன் முகம் பார்ப்பது அத்தனை ஆனந்தமாக இருந்தது ராதாவிற்கு. ஆத்மிகாவிற்குத் தேவையானவற்றை எல்லாம் ஒழுங்கு படுத்தி விட்டு வேலை செய்பவர்களுக்கு சுஜாதா சொல்லும் ஆணைகளைக் கொண்டு சேர்ப்பாள். மதியம் சமையலும் அப்போதே ஆரம்பித்து விடும்.

சுஜாதாவோடு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு ஸ்கூலுக்குக் கிளம்பி விடுவாள். ஆத்மிகாவை ஸ்கூட்டியில் அழைத்துக் கொண்டு போகமாட்டாள். இத்தனை செய்த போதும் அதற்கு மட்டும் ஏனோ தைரியம் வரவில்லை.

மாலையில் ஒரு ஐந்து மணி போல மீண்டும் வந்தாள் என்றால் கொஞ்ச நேரம் அங்கே செலவழிப்பாள். எல்லா வேலைகளையும் செயவதற்கு ஆட்கள் இருந்ததால் ஒரு மேற்பார்வை மட்டுமே தேவைப்பட்டது.

அதிக நேரம் ஆத்மிகாவோடும், சுஜாதாவோடுமே செலவழித்தாள். தாயன்பிற்கு ஏங்கியிருந்த குழந்தை பசை போடாமலேயே அவளோடு ஒட்டிக் கொண்டது.

அன்று வீடு கிளம்பும் போது ஆச்சரியமாக அபராஜிதன் வீடு திரும்பி இருந்தான். அது வழமை அல்ல. காலையில் கிடைக்கும் தரிசனம் மட்டும் தான் ராதாவிற்கு.

இவள் வெளியே செல்லவும் பின்னோடு வந்தவன்,

“மிஸ் ராதா!” என்றான். அன்னியப்படுத்திய அந்தக் குரலில் திகைத்தவள் திரும்பிப் பார்த்தாள்.

“நாளைக்குக் காலையில எஸ்டேட் ஆஃபிஸுக்கு வாங்க. உங்க கூட கொஞ்சம் பேசணும்.” சொல்லிவிட்டு நிற்காமல் உள்ளே போய்விட்டான். ராதா கொஞ்சம் திகைத்துப் போனாள்.

 

ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே 5

பார்த்துப் பார்த்து அலங்காரம் பண்ணிக் கொண்டாள் ராதா. மகனுக்குப் புடவை கட்டிப் பூ வைப்பது ரொம்பப் பிடிக்கும் என்று சுஜாதா அன்று சொல்லி இருந்ததால் ஏற்பாடுகள் பலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

கோல்ட் நிற ஸாஃப்ட் ஸில்க் சாரி. அடர்ந்த மெரூன் கலரில் ஹெட் பீஸ். கோல்ட்டும், மெரூனும், பச்சையும் கட்டங்கள் போட்ட கண்டாங்கி ஸ்டைல் ப்ளவுஸ். தலையில் மலர்ந்தும் மலராத மல்லிகைப்பூ. லேசாகக் கண்களில் மை தடவி சின்னதாக ஒரு மெரூன் பொட்டு வைத்து இருந்தாள்.

அப்போதுதான் பாத்ரூமிலிருந்து வந்த அர்ச்சனா அப்படியே நின்று விட்டாள். தோழியைச் சுற்றி நடை பயின்றவள்,

“பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ!” என்று பாடினாள்.

“போடி அரட்டை…” அவள் முதுகில் ஒரு அடி வைத்த ராதா கிளம்பி விட்டாள்.

குளிர் காற்றில் கலந்திருந்த தேயிலையின் வாசத்தை அனுபவித்த படி எஸ்டேட்டின் முன்னால் ஸ்கூட்டியை நிறுத்தினாள்.

அன்று சனிக்கிழமை. நிதானமாக ராதாவால் எல்லாவற்றையும் பண்ண முடிந்தது. இருந்தாலும் மனதுக்குள் ஏதோ ஒரு படபடப்பு.

பின்னேரம் ஆத்மிகாவைப் பார்க்கப் போக வேண்டும். சனி, ஞாயிறு பள்ளிக்கூடத்தில் ராதாவைப் பார்க்க முடியாததால் வீட்டிற்குக் கட்டாயம் அழைப்பார் சுஜாதா. இல்லாவிட்டால் ஆத்மிகாவை அவரால் சமாளிக்க முடியாதாம்.

‘உன்னைப் பார்க்கலைன்னா இந்தக் குட்டிப் பொண்ணு என்னைப் படுத்தி எடுக்குது. ஹாலிடேய்ஸுக்கு நீ சென்னை கிளம்பினா நான் என்ன தான் பண்ணப் போறேனோ!’ இது சுஜாதாவின் புலம்பல்.

ஸ்கூட்டியை அந்த ப்ளாக் ஆடிக்குப் பக்கத்தில் நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தாள் ராதா. மானேஜர் போலும், ஓடி வந்து வரவேற்றார். ஒரு ரூமைக் கை காட்டியவர்,

“அந்த ரூம் மேடம்.” என்றார். தலையை ஆட்டிப் புன்னகைத்துக் கொண்டாள்.

‘தன் வருகை அறிவிக்கப்பட்டிருக்கிறதா, இல்லை… தான் வந்ததைப் பார்த்தானா…’ மனதுக்குள் அவசரமாக ஒரு பட்டிமன்றம் நடந்தது.

கதவை லேசாகத் தட்டினாள். அந்த ஆழ்ந்த குரல் அவளை உள்ளே அழைத்தது.‌

“குட்மார்னிங் சார்.”

“குட்மார்னிங்.” அவன் பார்வை அவளை உச்சி முதல் உள்ளங்கால் வரை பிரித்து மேய்ந்தது. பார்ப்பது அபராஜிதன் என்பதால் பொறுமையாக நின்றிருந்தாள் ராதா. இதுவே வேறு யாராவதாக இருந்திருந்தால் கன்னம் பழுத்திருக்கும். பார்வையின் வீரியம் அப்படித்தான் இருந்தது.

“உக்காருங்க.”

“ம்…” லேசான புன்னகையோடு அமர்ந்து கொண்டாள்.

“சொல்லுங்க ராதா?”

“சார்?”

“உங்க மனசுல என்ன இருக்கோ அதைத் தயங்காம நீங்க சொல்லலாம்.”

‘அடப்போடா லூசுப்பயலே! என் மனசுல இருக்கிறதை நான் சொன்னா நீ மிரண்டுருவ!’ மனதுக்குள் நினைத்தவள் கேள்வியாக அவனைப் பார்த்தாள்.

அவள் பக்கமாக எதையோ நகர்த்தி வைத்தான் அபராஜிதன்.

‘செக் புக்.’

“ப்ளான்க் செக். சைன் பண்ணி இருக்கேன். அமௌன்ட்டை நீங்க ஃபில் பண்ணிக்கோங்க.” நிதானமாக வந்தது அவன் குரல்.

ராதா குழம்பிப் போனாள். ‘இவன் என்ன பேசுகிறான்?’ குழப்பத்தோடே அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“எதுக்கு இது?”

“அதை நீங்க தான் சொல்லணும்.”

“புரியலை.”

“சம்பந்தமே இல்லாத நீங்க என் வீட்டுக்கு வர்றீங்க. என்னோட அம்மாவையும், பொண்ணையும் அக்கறையாப் பாத்துக்கிறீங்க. இதெல்லாம் எதுக்காக? இதுக்காகத்தானே…” அவன் கண்கள் ஒரு நொடி அந்தச் செக் புக்கைத் தொட்டு மீண்டது.

சூடான நீரை முகத்தில் வாரி இறைத்தாற்போல இருந்தது ராதாவிற்கு. துடித்துப் போனாள். அவள் முகத்தையே பார்த்தபடி இருந்தான் அபராஜிதன்.

‘சம்பந்தமே இல்லையா? உனக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையா?’ ஊமையாய் மனது கிடந்து அழுதது.

“இதுல சங்கடப்பட ஒன்னுமே இல்லை ராதா. ஆத்மிகாவுக்கு ஒரு ‘நனி’ ஏற்பாடு பண்ணி இருந்தா நான் இதைப் பண்ணித்தானே இருக்கணும்?”

ராதா என்று அவன் சகஜமாக அழைத்தது அவள் வெட்கம் கெட்ட மனதுக்கு அத்தனை இதமாக இருந்தது. பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டவள் மௌனமாகவே எழுந்தாள்.

“என்னாச்சு ராதா? ஏன் எந்திருச்சுட்டீங்க?” நகரப் போனவளை நிறுத்தியது அந்தக் குரல். கணக்கில் கொள்ளாமல் இரண்டெட்டு எடுத்து வைத்தவளை எழுந்து வந்து வழி மறித்தான் அபராஜிதன்.

“ஓகே! ஓகே! அப்போ உங்க டார்கெட் மணி இல்லை. மணி இல்லைன்னா… அப்போ இதுவா?” அவள் கரம் பற்றித் தன்னை நோக்கி இழுத்தவன் அந்தச் சின்ன இடையை மென்மையாக அணைத்துக் கொண்டான்.

அந்தத் திடீர் அணைப்பை உணர்ந்து கொள்ள ராதாவிற்குச் சில நொடிகள் தேவைப்பட்டது. ஒரு திடுக்கிடலோடு அண்ணாந்து பார்த்தாள் பெண்.

அவன் கண்களில் அத்தனை மயக்கம் தெரிந்தது. இடையை அணைத்திருந்த அவன் கைகள் புதுக்கவிதை ஒன்றை ராதாவிற்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தன.

இன்னும் கொஞ்ச நேரம் அந்த மோன நிலை நீடித்திருந்தால் ராதாவும் மயங்கித் தான் போயிருப்பாள். ஆனால் அபராஜிதனின் வார்த்தைகள் திராவகமாக அவளைப் பதம் பார்த்தது.

“இதுவும் சகஜம் தான் ராதா. பார்க்க நல்லா, பசையோட இருக்கிற பசங்க கிட்ட பொண்ணுங்க இதை எதிர்பார்க்கிறது தப்பில்லை தான்.” அவன் கை அவள் இடையைச் சற்றே அழுத்திப் பிடித்தது.

ஆவேசமாகத் தன்னோடு நெருங்கி நின்றிருந்தவனைத் தள்ளி விட்டவள் கதவை நோக்கிப் போனாள். அவள் கதவை நெருங்கும் போது அபராஜிதனின் கை அவனது வலது கன்னத்தைத் தடவிக் கொடுத்தது.

‘ராதா அபராஜிதனை அறைந்திருந்தாள்.’

கதவின் அருகில் போனவள் மீண்டும் திரும்பி வந்தாள். எதுவும் பேசவில்லை. ஆனால், பல்லைக் கடித்தபடி சுட்டு விரலை உயர்த்திப் ‘பத்திரம்’ காட்டினாள். கண்கள் கலங்க மறுத்து அவனைக் கோபமாக உறுத்து விழித்தன.

எப்படி ஹாஸ்டல் வந்து சேர்ந்தாள் என்று அவளுக்கே தெரியாது. மடை திறந்த வெள்ளம் போல கண்ணீர் பெருக கட்டிலில் விழுந்து குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

******

அர்ச்சனா அவள் எதிரே அமர்ந்து யோசனையில் ஆழ்ந்திருந்தாள். ராதாவின் ஃபோன் திரும்பத் திரும்ப இரண்டு முறை அடித்து ஓய்ந்தது. அர்ச்சனா எதுவும் பேசாமல் எல்லாவற்றையும் மௌனமாகப் பார்த்திருந்தாள்.

மனதின் காயம் சிறிது ஆறும் வரை அழுதவள் முகத்தைத் துடைத்துக் கொண்டு எழும்பி உட்கார்ந்தாள்.

“அழுது முடிச்சாச்சா ராதா?” தோழியின் கேள்விக்குப் பதிலேதும் சொல்லவில்லை ராதா.

“இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி அழுது கரையுற?”

“இன்னும் என்ன ஆகணும் அர்ச்சனா? அவருக்கு இப்படியொரு முகம் இருக்கும்ன்னு நான் நினைச்சே பார்க்கலை.” சொல்லும் போதே குரல் கம்மியது.

“இப்படியொரு முகம்னா… எப்படி? பார்க்க நல்லாத்தானே இருக்கார்?” அர்ச்சனாவின் கேலி ருசிக்கவில்லை ராதாவிற்கு. அவளை முறைத்துப் பார்த்தாள்.

“சரி… சரி… கோபப்படாத. அந்த சுஜாதாம்மா ரெண்டு தடவை கூப்பிட்டுட்டாங்க. நீ முதல்ல அவங்களுக்கு கால் பண்ணிப் பேசு. மத்ததை அப்புறமாப் பார்த்துக்கலாம்.”

“வேணாம் அர்ச்சனா. நான் இனி அங்க போறதா இல்லை. அப்புறம் எதுக்கு வீணாப் பேசிக்கிட்டு.”

“ராதா! அவசரப்பட்டு நீ எந்த முடிவுக்கும் வராத. நான் விசாரிச்ச வரைக்கும் அபி அப்படிப்பட்ட ஆள்ன்னு கேள்விப்படலை. டிஸிப்பிளின், டிக்கோரம் னு வாழுற மனுஷன்னு தான் எல்லாரும் சொல்லுறாங்க.”

“மண்ணாங்கட்டி…‌ அதெல்லாம் இருக்கிற ஆள்தான் இப்படிப் பேசுவாங்களா?” பொங்கி வெடித்தாள் ராதா.

“நான் அப்படிச் சொல்லலை ராதா. அபி ஏதோ ப்ளே பண்ணி இருக்கார்னு தான் எனக்குத் தோணுது. உனக்கு அவர் மேல நம்பிக்கை வைக்க ஒரு நொடி போதுமா இருந்துது. ஆனா அவருக்கு அப்படியில்லை. வாழ்க்கையில ஏற்கனவே ஒரு முறை சறுக்கி இருக்காரு. எல்லாத்திலயும் ஒரு நிதானம் இருக்கத்தான் செய்யும்.”

“அதுக்காக இப்படியா?” மீண்டும் கண்களில் கண்ணீர் நிறைந்தது.

“எப்படி? காசுக்காக நீ வர்றியோன்னு அவருக்குத் தெரிஞ்சுக்க வேண்டிய கட்டாயம் வந்திருக்கு, கேட்டிருக்காரு. ரெண்டாவது பண்ணினது கொஞ்சம் ஓவர் தான். இருந்தாலும் நான் தப்புன்னு சொல்லமாட்டேன். இந்தக் காலத்துல சில பொண்ணுங்க பண்ணுற வேலைகளைப் பார்க்கும் போது அபியைத் தப்பா நினைக்கத் தோணலை.”

“………………..”

“எல்லாத்துக்கும் மேல நீ அவரைக் கை நீட்டி அடிச்சிருக்க. அவர் நினைச்சிருந்தா உன்னை மாறி அடிச்சிருக்கலாம் இல்லை? பண்ணலியே! ”

ராதா மௌனமாகி விட்டாள். அர்ச்சனா பேசுவதைக் கேட்கும் போது ‘அப்படியும் இருக்குமோ’ என்று நினைக்கத் தோன்றியது.

“கொஞ்சம் பொறுமையா இரு ராதா. எல்லாத்துக்கும் அவசரப்படாத. முதல்ல எழும்பி ட்ரெஸ் சேன்ஞ் பண்ணிட்டு வா. சாப்பிட்டு வரலாம். இன்னும் லேட் ஆனா டைனிங் ஹாலை துடைச்சு வெச்சிட்டு போயிடுவாங்க.”

உடுத்தியிருந்த புடவையைப் பார்த்த போது மிகவும் வேதனையாக இருந்தது ராதாவிற்கு. எத்தனை ஆசையாகப் பார்த்துப் பார்த்து அலங்கரித்தாள். எல்லாம்…

அவள் கண்களில் மீண்டும் கண்ணீர் துளிர்க்கவும் அர்ச்சனாவிற்கு கோபம் வந்தது.

“ராதா!” என்றாள் அதட்டலாக.

சட்டென்று கண்களைத் துடைத்துக் கொண்டவள் எழுந்து உடையை மாற்றிக் கொண்டாள். அர்ச்சனாவிற்காகப் பெயருக்கு உணவைக் கொறித்தாள்.

எவ்வளவு முயன்றும் அன்றைய நிகழ்வை ஓரங்கட்ட முடியவில்லை. பள்ளிக்கூட வேலைகள் ஒன்றிரண்டை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து பார்த்தாள். அதிலும் மனம் லயிக்கவில்லை.

“ராதா! அந்த ஆன்ட்டியோட ஒரு தரம் பேசிடு.”

“வேணாம், விடு அர்ச்சனா.”

“வயசானவங்க. பாவம் அவங்க என்ன பண்ணினாங்க? யாரோ செஞ்ச தப்புக்கு நீ ஏன் யாரையோ தண்டிக்க நினைக்கிற?”

“ம்ப்ச்… விடு அர்ச்சனா.” இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே மீண்டும் ஃபோன் அலறியது. ஆனால் இப்போது புது நம்பர்.

‘யாராக இருக்கும்?’ சிந்தித்த படியே ஃபோனைக் காதுக்குக் கொடுத்தாள் ராதா.

“ஹலோ.”

“ஆன்ட்டி…” அழுகையோடு வந்தது அந்த மழலைக் குரல்.

“ஆ… ஆத்மி… ஆத்மிக் குட்டி?” திகைத்துப் போனாள் ராதா.

“ம்… நீங்க ஏன்… இன்னைக்கு என்னைப் பார்க்க வரலை?”

“அது… அது இன்னைக்கு எனக்கு ஃபீவரா இருந்துச்சு டா. அதான் என்னால வரமுடியலை.”

“ஓ… ஆனா நான் உங்களைப் பார்க்க வந்திருக்கேன்.” குழந்தையின் குரலில் இப்போது குதூகலம் வந்து ஒட்டிக் கொண்டது.

“என்ன சொல்றீங்க? நீங்க இப்போ எங்க இருக்கீங்க?”

“உங்க ஹாஸ்டல் முன்னாடி தான் நிக்கிறோம் ஆன்ட்டி.” ஆத்மிகா சொல்லி முடிக்கவும் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தாள் ராதா. ‘நிற்கிறோம்’ என்றால் இன்னும் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள்?

“ஏய் ராதா! எங்க போறே?” அர்ச்சனா அழைத்தது அவள் காதிலேயே விழவில்லை. ஓட்டமும் நடையுமாக வெளியே  வந்தாள்.

ஹாஸ்டலுக்கு முன்பாக அந்த ப்ளாக் ஆடி நின்றிருந்தது.

 

ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே 6

ஆத்மிகாவைக் கண்ட மாத்திரத்தில் அனைத்தையும் மறந்து சிட்டாகப் பறந்தாள் ராதா. குழந்தையும் இவளிடம் தாவிக் கொண்டது.

இவள் கழுத்தை இறுக்கி அணைத்துக் கன்னத்தை எச்சில் பண்ணியது. ஒரு புன்னகையோடே அதைத் திருப்பிக் கொடுத்தாள் ராதா.

“ஆன்ட்டி! உங்களுக்கு ஹங்க்ரியா?” உதட்டைக் குவித்து அழகாக மழலை பேசினாள் இளையவள்.

“இல்லையே செல்லம். ஏன் கேக்குறீங்க?”

“இல்லை… நீங்க அழுதிருக்கீங்க. அதான் கேட்டேன். நீங்க தானே அன்னிக்கு சொன்னீங்க. உங்களுக்கு ஹங்க்ரி வந்தா அழுவீங்கன்னு.”

குழந்தையின் பேச்சில் பிடிபட்டாற் போல உணர்ந்தாள் ராதா. அழுதழுது அவள் முகம் கொஞ்சம் வீங்கினாற் போலத்தான் இருந்தது. ஆனால், அதைக் குழந்தை கண்டு கொள்வாள் என அவள் எதிர் பார்க்கவில்லை.

முகத்தைக் கூடக் கழுவாமல் ஓடி வந்திருந்தாள். அப்போதுதான் சுற்றுப்புறம் ஞாபகத்தில் வரத் திரும்பிப் பார்த்தாள். அந்த ப்ளாக் ஆடியில் சாய்ந்த படி இவளையே பார்த்திருந்தான் அபராஜிதன்.‌

அந்தப் பார்வை அவள் உயிரின் ஆழம் வரை சென்றது. ஆன்ட்டியின் பார்வை அப்பாவைக் கண்டு கொண்டதை பார்த்தவுடன் ஆத்மிகா உற்சாகமானாள்.

“ஆன்ட்டி…‌ அப்பா தான் இன்னைக்கு… ராதா ஆன்ட்டியைப் பார்க்கப் போகலாமான்னு கேட்டாங்க.” ராதாவின் காதில் ரகசியம் பேசியது குழந்தை.

குழந்தைக்காக முகத்தைத் திருப்பியிருந்த ராதா விலுக்கென்று அபராஜிதனைத் திரும்பிப் பார்த்தாள். அவன் உணர்வுகளை அப்பட்டமாகக் காட்டும் அந்தக் கண்களை இப்போது சன் கிளாஸிற்குள் மறைத்திருந்தான்.

“பேபி… கிளம்பலாமா?” அந்த மாயக் குரல் அவளை அசைத்துப் பார்த்தது. அப்பாவின் கேள்வியில் ராதாவைப் பார்த்தாள் ஆத்மிகா.

“ஆன்ட்டி… நீங்களும் வர்றீங்களா? நாம கொஞ்ச நேரம் விளையாடலாம்.” ஆசையாகக் கேட்டாள் ஆத்மிகா. இருந்தாலும், அந்தக் காரில் ஏற ராதா விரும்பவில்லை.

“ஆத்மி குட்டி… நம்ம ரெண்டு பேரும் ஆன்ட்டியோட ஸ்கூட்டியில போவோமா?”

“இல்லையில்லை, அது சேஃப் இல்லை. பேபி… உங்க ஆன்ட்டியை பத்திரமா கொண்டு போய் சேர்த்திருவேன். பயப்படாம ஏறச் சொல்லுங்க.” அவள் பேச்சை முடிக்கு முன் அபராஜிதனிடமிருந்து பதில் வந்தது.

“ப்ளீஸ் ஆன்ட்டி.” கெஞ்சலாக ஒலித்த அந்த மழலைக் குரலை மறுக்கும் திடம் ராதாவிற்கு இல்லை. எதுவும் பேசாமல் குழந்தையோடு பின் சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

கார் ஆத்மிகாவின் வீட்டை அடைந்த போது சுஜாதா வாசலுக்கே வந்து வரவேற்றார். இன்று அவர் முகம் சற்றே பளபளத்தாற் போல தோன்றியது ராதாவிற்கு.

“வாம்மா ராதா.” ஆசையாக வரவேற்றவர் அவளை அழைத்துச் சென்று சோஃபாவில் அமர வைத்தார். உள்ளே திரும்பிக் குரல் கொடுத்தவர் வேலை செய்பவர்களுக்குக் காஃபி கொண்டு வருமாறு பணித்தார்.

“ஆன்ட்டி, அதெல்லாம் வேணாம். நான் ஆத்மியோட கொஞ்ச நேரம் ரூம்ல விளையாடுறேனே.”

“ஓ… அப்படியா? அப்போ நீங்க ரெண்டு பேரும் ரூமுக்குப் போங்க. நான் காஃபியை அங்கேயே கொண்டு வர்றேன்.” இதைச் சொல்லும் போதும் அவர் முகத்தில் வாய்கொள்ளாப் புன்னகையே இருந்தது.

“ம்… சரி ஆன்ட்டி.” குழம்பிய படியே சொன்னவள் விட்டால் போதும் என்பது போல மாடி ஏறினாள். குழந்தையும் இவளோடு கை கோர்த்துக் கொண்டது.

மாடியிலிருந்த சோஃபாவில் காலாட்டியபடி விச்ராந்தியாக அமர்ந்திருந்த அபராஜிதன் இவளையே பார்த்திருந்தான். அவள் இருதயத்தில் நங்கூரம் பாய்ச்ச முனைந்த அந்தப் பார்வையை ஒதுக்கித் தள்ளியவள் குழந்தையின் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

கலரிங்கில் மும்முரமாக இருந்த இருவரையும் கலைத்தபடி வந்து சேர்ந்தார் சுஜாதா. கையில் பெரிய ட்ரே இருந்தது. வந்ததும் வராததுமாக ராதாவின் வாயில் ஸ்வீட்டைத் திணித்தவர் திகைத்த அவள் முகம் பார்த்து வாய் விட்டுச் சிரித்தார். குழந்தையும் பாட்டியைப் பின்பற்றியது.

“ராதா! எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? நீ சொல்லலைன்னா என்ன? எனக்கு அபி எல்லா விஷயத்தையும் சொல்லிட்டான்.” சுஜாதாவின் பூரிப்பில் திணறிப் போனாள் ராதா.

“ஆன்ட்டி… நீங்க… நீங்க என்ன சொல்றீங்க?”

“அடடடடா! நாலு சுவருக்குள்ள இருக்கிற இந்த மங்குணி ஆன்ட்டிக்கு அப்படி என்ன தெரியப் போகுதுன்னு நீயும் மறைச்சிட்ட இல்லை ராதா?”

“ஆன்ட்டி…”

“ஆனா அபி எல்லாத்தையும் சொல்லிட்டான்.” அதையே திரும்பத் திரும்பச் சொன்னாரே தவிர, அபி அப்படி எதைச் சொன்னான் என்று மட்டும் சொல்லவில்லை அவர்.

“நீ இந்த வீட்டுக்கு முதல் முதலா வந்தப்போ நான் என்ன நினைச்சேன் தெரியுமா? இந்தப் பொண்ணு மாதிரி ஒரு பொண்ணை ஏன் ஆண்டவன் இந்த வீட்டுக்கு மருமகளாக் குடுக்கலைன்னு வருத்தப்பட்டேன். ஆனா, இப்போ அந்தப் பொண்ணே இந்த வீட்டுக்கு மருமகளா வரப்போறாளே. அப்போ என் பிரார்த்தனை கடவுள் காதுல விழுந்திருக்குன்னு தானே அர்த்தம்?”

துள்ளிக் குதிக்காத குறையாக பேசிக் கொண்டிருந்தார் சுஜாதா. ராதாவின் புலன்கள் சட்டென்று இயக்கத்தை நிறுத்தின.

‘என்ன பேசுகிறார் இந்த அம்மா? அபராஜிதன் அப்படி என்ன சொன்னான் இவர்களிடம்?’ மண்டைக்குள் வண்டின் ரீங்காரம் கேட்டது ராதாவிற்கு.

“ஆன்ட்டி… அப்படி…” அவளை முழுதாகப் பேசவிடாமல் பாதியில் நிறுத்தினார் சுஜாதா.

“இனி ஆன்ட்டி இல்லை. அத்தை… அத்தைன்னு கூப்பிடு ராதா.” ஆசையாக சுஜாதா சொல்ல சுவாசிக்க மறந்தாள் ராதா. பொங்கும் பிரவாகமாக ஆர்ப்பரித்தவரைப் பேசவிட்டவள் அந்த நேரத்தில் தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள்.

“உங்க பையன் என்ன சொன்னாங்க?” இப்போது நிதானமாக வந்தது ராதாவின் குரல்.

“இந்த ராதாவை அவனுக்குப் பிடிச்சிருக்காம். இந்தக் குடும்பத்துக்கு ராதாவை விட நல்ல மருமகள் கிடைக்க மாட்டாளாம். அவன் எதிர்பார்க்கிற எல்லா விஷயமும் இந்த ராதாக்கிட்ட இருக்குதாம்.” பட்டியல் போல வரிசைப்படுத்திக் கேலியாகச் சொன்னவர் வாய்விட்டுச் சிரித்தார்.

அந்த ஆனந்தமான சிரிப்பைக் குலைக்க மனமில்லாமல் அமைதியாக இருந்தாள் ராதா. இன்று காலையில் நடந்தது என்ன? இப்போது நடப்பது என்ன?

“ராதா!” இப்போது கலவரமாக அழைத்தார் சுஜாதா. நிமிர்ந்து பார்த்தாள் இளையவள்.

“உங்க வீட்டுல இதுக்குச் சம்மதிப்பாங்களா?” கூர்மையாக வந்தது கேள்வி.

“அம்மா!” அந்தக் குரலில் இரு பெண்களும் திரும்பிப் பார்த்தார்கள். ஆத்மிகாவின் ரூமிற்குள் அபராஜிதன் வந்து கொண்டிருந்தான்.

இதுநாள் வரை அந்த ரூமில் அபராஜிதனை ராதா பார்த்ததில்லை. ஒரு தந்தையாக ஆத்மிகாவின் எந்த இயக்கத்திலும் அவன் பங்களிப்பு இருந்ததில்லை.

“அப்பா உங்களைக் கூப்பிடுறாங்க.” சொன்னவன் ஆத்மிகாவிற்கு எதிரே தரையில் அமர்ந்து கொண்டான். குழந்தை கூட விசித்திரமாகத் தன் தந்தையின் முகம் பார்த்தது.

“காஃபியைக் குடிம்மா. இதோ வந்தர்றேன்.” சொல்லிவிட்டு நகர்ந்தார் சுஜாதா. ராதா வண்ணம் தீட்டிப் பாதியில் இருந்த படத்தைத் தொடர்ந்தான் அபி.

“ஐயோ! அது ஆன்ட்டியோட பேப்பர்.” பரிதவித்த குழந்தையைப் பார்த்துப் புன்னகைத்தான் அபி.

“பரவாயில்லை பேபி… ஆன்ட்டி ஆரம்பிச்சு வச்சதை அப்பா முடிக்கலாம்.” இரு பொருள்பட வந்தது பதில். ஆத்மிகா திகைப்பாக ராதாவைப் பார்த்தாள்.

“ஆன்ட்டி! உங்க கலரிங்கை அப்பா கன்ட்டினியூ பண்ணுறாங்களாம். உங்களுக்கு ஓகே வா?” சின்னவளின் கேள்விக்கு இடம் வலமாகத் தலை அசைத்தாள் ராதா. அந்த மறுப்பில் பல அர்த்தங்கள் இருந்தன.

“ம்ஹூம்… டோன்ட் டச் பா.” தன் பிரியத்திற்குரிய ஆன்ட்டியின் பேப்பரைப் பத்திரம் பண்ணியது குழந்தை.

“பேபி… பாட்டிக்கிட்ட போய் அப்பாக்குக் காஃபி வேணும்னு சொல்லுறீங்களா?”

“ஓ…” அப்பா தன்னோடு அத்தனை தூரம் பேசியதில் குதித்துக் கொண்டு ஓடினாள் ஆத்மிகா.

“ஆத்மி கவனம்.” பெறாமலே தாயானாள் ராதா. கால்கள் இரண்டையும் நீட்டி சுவரில் வாகாகச் சாய்ந்து கொண்டான் அபராஜிதன். அவன் கண்கள் ராதாவை ஆராய்ச்சியாகப் பார்த்தது.

“என்னாச்சு?”

“பிடிக்கலை.” சட்டென்று வந்தது பதில்.

“அதுதான் ஏன்?”

“பிடிக்கலை.” இப்போது இன்னும் கொஞ்சம் உறுதியாக வந்தது பதில்.

“அப்போ காலையில அத்தனை சிரத்தை எடுத்து பார்த்துப் பார்த்து உடுத்திக்கிட்டு வந்தது எல்லாம் பொய்யா?” அவன் கேள்வியில் முகம் சிவந்து போனது ராதாவிற்கு. ஆனாலும் பதில் கொடுக்கத் தயங்கவில்லை.

“பொய் எங்கிட்ட இருக்கலை. என் எதிரில நின்னுச்சு.” அந்த விளக்கத்தில் புன்னகைத்தான் அபராஜிதன்

.

“ராதா! அந்தப் புள்ளியைக் கடந்து அடுத்த கட்டத்துக்கு நான் வந்துட்டேன். இனி நான் திரும்பிப் பார்க்க மாட்டேன்.” நறுக்குத் தெறித்தாற்ப் போல வார்த்தைகள் வந்து வீழ்ந்தன.

என்னோடு நீயும் கை கோர்த்து விடு என்ற மறைமுகமான ஆணை அவன் தொனியில் தெரிந்தது.

உனக்கு நான் சளைத்தவர் அல்ல என்று இருவர் பார்வையும் ஒன்றை ஒன்று தாங்கி நின்றது.

ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே 7

ராதாவும் அர்ச்சனாவும் அப்போதுதான் டின்னரை முடித்து விட்டு ரூமிற்கு வந்திருந்தார்கள். சாப்பிட டைனிங் ஹால் போகும் போது ஃபோனை இருவருமே எடுத்துக்கொண்டு போகமாட்டார்கள்.

உண்ணும் போதாவது எந்தத் தொல்லையும் இல்லாமல் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதில் இருவருக்குமே ஒத்த கருத்து உண்டு.

ராதா, அபராஜிதனைப் பார்த்து ஒரு வாரத்திற்கும் மேல் ஆகியிருந்தது. எப்போதும் போல இவள் ஆத்மிகா வீட்டிற்குப் போய் வந்து கொண்டிருந்தாள்.

ரூமிற்கு வரவும் ஃபோன் சிணுங்கவும் சரியாக இருந்தது. அழைப்பை ஏற்ற ராதா ஸ்பீக்கரை ஆன் பண்ணினாள். ஏனென்றால், அழைத்துக் கொண்டிருந்தது அவள் அம்மா மகேஷ்வரி.

ராதாவின் வீட்டிலிருந்து யார் அழைத்தாலும் அர்ச்சனாவும் இணைந்து கொள்வாள். அதனால் இதுதான் வசதி.

“சொல்லுங்கம்மா.”

“நான் சொல்லுறது இருக்கட்டும். நீ முதல்ல உன் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கிட்டு வீடு வந்து சேரு.” காட்டமாக வந்தது மகேஷ்வரியின் குரல்.

திகைத்துப் போன ராதா அர்ச்சனாவைத் திரும்பிப் பார்த்தாள். இவளுக்குக் குறையாத அதிர்வு அவள் முகத்திலும் தெரிந்தது.

“என்னாச்சும்மா? ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க?”

“வேற எப்படிப் பேச? யாருன்னே தெரியலை. நாலு பெரிய மனுஷங்க வந்தாங்க. உன்னைப் பொண்ணு கேட்டாங்க. சரி… பெரிய இடமா இருக்கே, நம்ம பொண்ணு அங்க நல்லா வாழுவான்னு விசாரிச்சா… உன்னை ரெண்டாம் தாரமா இல்லை கேக்குறாங்க! எனக்கு வந்த ஆத்திரத்துக்கு…” மகேஷ்வரி அங்கே பல்லைக் கடிப்பது இங்கே கேட்டது.

ராதா விக்கித்துப் போனாள். யார் பெண் கேட்டது? சுஜாதா ஆன்ட்டியாக இருந்திருந்தால் நிச்சயம் தன்னிடம் சொல்லி இருப்பாரே! கலக்கத்தோடே அர்ச்சனாவை ஏறிட்டாள்.

“ஆன்ட்டி! வந்தவங்க யாரு? எந்த ஊருக்காரங்களாம்?” நிதானமாகக் கேட்டாள் அர்ச்சனா.

“எல்லாம் அந்த ஊட்டிக்காரங்க தான் அர்ச்சனா. அந்தப் பையனோட பொண்ணு ராதா ஸ்கூல்ல தான் படிக்குதாம். கருமம்… அதுக்கு மேல எங்கிட்டக் கேக்காதே.” நறுக்கென்று முடித்தார் மகேஷ்வரி. அழைப்பையும் துண்டித்து விட்டார்.

“என்ன ராதா இது?” அர்ச்சனாவின் கேள்வியில் ராதாவின் கண்களில் குழப்பம் குடிகொண்டது.

“அதுதான் எனக்கும் புரியலை அர்ச்சனா. என்ன திடீர்னு இப்படிப் பண்ணி இருக்காங்க? எங்கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லலை.”

“ம்… நம்ம ஹீரோ சார் செம ஸ்பீடு போல. தீயா வேலை பார்த்திருக்காரு.”

அர்ச்சனாவின் கேலியைப் புறந்தள்ளிவிட்டு தன் தங்கைக்கு ஃபோனைப் போட்டாள் ராதா.

“அக்கா! சொல்லுக்கா.”

“மீரா! அங்க என்ன நடக்குது? அம்மா என்னென்னவோ சொல்லுறாங்க.”

“அக்கா… அது வந்து…”

“சொல்லு மீரா.”

“ரெண்டு நாளைக்கு முன்னாடி தரகர் ஒரு ஃபாமிலியைக் கூட்டிக்கிட்டு வந்திருந்தார். ரொம்பப் பெரிய இடம் போல. அந்தம்மாவைப் பார்த்தாலே தெரிஞ்சுது, ரொம்ப சாதுன்னு.” ராதாவும் அர்ச்சனாவும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டார்கள்.

“பையன் வரல்லை. ஆனா, ஃபோட்டோ குடுத்தாங்க. செம ஸ்மார்ட் க்கா. உனக்கு இவரை விட சூப்பரா யாராவது கிடைப்பாங்களான்னா… நான் இல்லைன்னு தான் சொல்லுவேன்.”

“மேலே சொல்லு.”

“எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சிருந்துது. அம்மாவும் அப்பாக்கிட்ட நாலு இடத்துல விசாரிக்கச் சொன்னாங்க. சென்னையில சொந்தமா ரெண்டு வீடு இருக்காம். ஊட்டியில டீ எஸ்டேட் இருக்காம். எல்லாம் ஓகே தான். ஆனா… அதுக்கப்புறம் தான் தெரிஞ்சுது…”

“ம்… அப்புறம்?”

“அம்மா அந்தத் தரகரைக் கூப்பிட்டு கன்னா பின்னான்னு திட்டிட்டாங்க. இதை ஏன் முதல்லேயே சொல்லலை… எங்களைப் பார்த்தா எப்பிடித் தெரியுது உங்களுக்குன்னு.”

“ம்…”

“அவரும் பாவம் தான். இந்த ஒரு விஷயம் மட்டும் இல்லைன்னா இதைப் போல ஒரு வரன் உங்க பொண்ணுக்குக் கிடைக்கப் புண்ணியம் பண்ணி இருக்கணும்மா. ரொம்ப நல்ல மனுஷங்கன்னு எவ்வளவோ சொன்னார். ஆனா அம்மா ஆடித் தீத்துட்டாங்க.”

“அப்பா என்ன சொன்னாங்க?”

“ஹேய்! என்னக்கா? நீ பேசுறதைப் பார்த்தா இந்தக் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிருவ போல இருக்கு?” மீரா அதிசயப்பட ராதாவின் கையிலிருந்த ஃபோனைப் பிடுங்கிக் கொண்டு அர்ச்சனா ரூமை விட்டு வெளியே போய் விட்டாள்.

ராதாவிற்குப் புரிந்து போனது. மீராவிடம் அத்தனையையும் ஒப்புவிக்கத்தான் அர்ச்சனா வெளியே போகிறாள் என்று.

அடுத்த நாள் விடிந்ததும் விடியாததுமாக சுஜாதாவிற்கு ஃபோனைப் போட்டாள் ராதா. உடனேயே லைனுக்கு வந்தார்.

“ஆன்ட்டி, நான் ராதா பேசுறேன்.”

“ராதா! சொல்லும்மா. என்ன இத்தனை ஏர்லியா கூப்பிட்டிருக்கே?”

“ஆன்ட்டி… சென்னைக்குப் போயிருந்தீங்களா?”

“ஆமாம்மா. அபி உங்கிட்ட சொல்லலையா?”

“இல்லை.”

“இல்லையா? நான் கேட்டப்போ, அதை நான் பார்த்துக்கிறேன். நீங்க கிளம்புங்கன்னு சொன்னானேம்மா!”

“ஓ… ஆனா எங்கிட்ட எதுவும் சொல்லலை ஆன்ட்டி.”

“அப்படியா என்ன? அதை விடும்மா. வீட்டுல என்ன சொல்லுறாங்க? சம்மதிப்பாங்களா?” ஏக்கத்தைக் குரலில் தேக்கி ஆர்வமாகக் கேட்டார் சுஜாதா. அந்தக் குரலுக்கு என்ன பதில் சொல்வதென்று ராதாவிற்குப் புரியவில்லை.

“நான் இங்க இருக்கிறதால ஒன்னும் தெரியலை ஆன்ட்டி. என்னோட தங்கை தான் இந்த விஷயத்தை நேத்து நைட் பேசினப்போ சொன்னா.” ஏதோ சொல்லிச் சமாளித்தாள் ராதா. அவள் தயக்கம் சுஜாதாவிற்கும் புரிந்தது.

“ஓ… நான் அந்த ஆண்டவன் பாரம்னு விட்டுட்டேன் ராதா. உங்க அம்மா அப்பாவையும் தப்புச் சொல்ல முடியாதில்லையா? எனக்கொரு பொண்ணிருந்தா நானும் இப்படித்தானே யோசிப்பேன்.” அபராஜிதன் தனது மகன் என்பதையும் தாண்டி மனச்சாட்சி அங்கு பேசியது.

“சரிம்மா, உனக்கு ஸ்கூலுக்கு லேட் ஆகும். நீ கிளம்பும்மா.” பேச்சை முடித்துக் கொண்டார் சுஜாதா. ராதாவிற்குத் தான் என்னவோ போல் இருந்தது.

அன்று ஈவ்னிங்கே எஸ்டேட்டிற்கு ஸ்கூட்டியை விட்டாள் ராதா. மனதுக்குள் ஆயிரம் கேள்விகள் அணிவகுத்து நின்றன. இருந்தாலும் பொறுமையை முயன்று கடைப்பிடித்தாள்.

இவள் திடீர் வருகையை அங்கு யாரும் எதிர்பார்க்கவில்லை. மானேஜர் இவளைப் பார்த்த மாத்திரத்தில் ஏதோ சொல்ல முயல அதைப் புறக்கணித்தவள் ஒரு புன்சிரிப்போடு அவரைக் கடந்து சென்றாள்.

கதவைத் தட்டி அனுமதி கூடக் கேட்கவில்லை. வந்த வேகத்திற்குக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.

அபராஜிதன் ஒரு ஃபைலில் மூழ்கி இருந்தான் போலும். கதவு திறக்கும் சத்தம் கேட்கவும் எரிச்சலோடு நிமிர்ந்து பார்த்தான்.

அவன் முகத்தில் தெரிந்த பாவம் ராதாவைக் கண்டதும் சீராகிப் போனது. ஒரு புன்முறுவலோடு எதிரே இருந்த நாற்காலியைக் காட்டினான் அபி.

“என்ன? திடீர்னு சொல்லாமக் கொள்ளாம வந்து நிக்குறீங்க?” அந்தக் குரலில் கேலியையும் தாண்டி ஒரு பரவசம் தெரிந்தது.

“நீங்களும் எல்லாம் சொல்லாமக் கொள்ளாமத் தானே பண்ணுறீங்க.”

“அப்படி நான் என்ன பண்ணினேன்?”

“எதுக்கு ஆன்ட்டியை இப்போ சென்னைக்கு அனுப்பினீங்க?”

“இது என்ன கேள்வி ராதா? வயசு இருபத்தி நாலு ஆகுது. உங்கம்மா வேற தீவிரமா மாப்பிள்ளை தேடுறாங்க. நான் முந்திக்க வேணாமா?”

“…………”

“என்னை நிராகரிக்க ஏற்கனவே நிறையக் காரணங்கள் இருக்கு. இந்த லட்ஷணத்துல நான் தாமதிக்க வேற செய்யணுமா?”

“அதுக்காக? எங்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம…”

“சொல்லியிருந்தா என்ன ஆகியிருக்கும்? உனக்கும் வீணான டென்ஷன் தானே. அதான் சொல்லலை. வீட்டுல என்ன சொல்லுறாங்க?” அவளை முடிக்க விடாமல் குறுக்கறுத்தவன் இலகுவாகக் கேட்டான்.

காலையில் அம்மா கேட்ட அதே கேள்வியை இப்போது மகன் கேட்கிறான். ஆனால் அம்மாவிடம் பேசத் தயங்கிய விசயங்களை மகனிடம் பேசுவது இலகுவாக இருந்தது.

“சம்மதம் கிடைக்கும்னு தோணலை.”

“எதிர் பார்த்தது தான்.” அவன் நிதானமாகச் சொல்ல சட்டென்று நிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்தாள் ராதா.

“இதுல ஆச்சரியப்பட என்ன இருக்கு ராதா? ஆத்மிகாவுக்கு இப்படி ஒரு வரன் வந்தா நான் ஏத்துப்பேனா? அது மாதிரித்தானே உங்க வீட்டுலயும்.” அவன் பேச்சிலிருந்த நியாயம் ராதாவிற்கு மெல்லிய வலியைக் கொடுத்தது.

இவனிடம் அப்படி என்ன குறை இருக்கிறது? மனம் பொருந்தாத ஒரு வாழ்க்கை அமைந்து போனது அவன் குற்றமா? எத்தனை கனவுகளோடு அந்த வாழ்க்கையை ஆரம்பித்திருப்பான்! அது பொய்த்துப் போன போது எத்தனை வலிகளைத் தாங்கி இருப்பான்! அவனுக்காக அவள் மனமே அவளிடம் மல்லுக்கு நின்றது.

“என்ன யோசனை?” அவன் குரலில் நிஜத்துக்கு வந்தவள் ஒன்றும் பேசவில்லை.

“வீட்டுல என்ன சொன்னாங்க? திட்டினாங்களா?”

“இது சரிவராது. விட்டுடுங்க. எதுக்கு நீங்க தேவையில்லாம என் வீட்டு மனுஷங்க முன்னாடி தலை குனியணும்?” ஒரு ஆதங்கத்தோடு பேச ஆரம்பித்தவள் முடிக்கும் போது லேசாகக் கண்கள் கலங்கியது.

அவள் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தவன் முகம், அந்தக் கண்களில் கண்ணீரைக் கண்ட போது மிருதுவாகிப் போனது. எழுந்து அவள் பக்கமாக வந்தவன் அவளையும் கைப்பிடித்து எழுப்பினான். கன்னத்தில் கோடாக இறங்கிய கண்ணீரை அவன் துடைத்து விட்ட போது ஒரு கேவலோடு அவன் மார்பிலேயே சாய்ந்து அழுதாள் ராதா.

“முட்டாள் பெண்ணே! எதுக்கு இப்போ இந்த அழுகை?”

“இது… இது சரி வராது. விட்டுடுங்க.”

“சரி. நான் விட்டுட்டா… உங்கம்மா விட்டுடுவாங்களா? இனிமேல் தான் தீவிரமா மாப்பிள்ளை தேட ஆரம்பிப்பாங்க. அது உனக்கு ஓகே வா?”

“இல்லையில்லை… நான் அம்மாக்கிட்ட பேசுறேன்.” அவசரமாக வந்தது பதில்.

“என்ன பேசுவ ராதா?”

“இப்போதைக்கு இந்தப் பேச்சை எடுக்க வேணாம்னு சொல்றேன்.”

“கேப்பாங்களா?”

“நான் உறுதியா சொல்லிடுவேன்.”

“சரி, எத்தனை நாளைக்கு? ஒரு ஆறு மாசம் போனதுக்கு அப்புறமா திரும்ப ஆரம்பிப்பாங்க. அப்போ என்ன பண்ணுவ?”

“அதுக்காக… நீங்க… இறங்கிப் போக வேணாம்.” அந்த வார்த்தைகளில் அவன் முகம் மலர்ந்து போனது.

“நம்ம மேல பிரியமா இருக்கிறவங்களுக்காக தாழ்ந்து போறதுல ஒன்னும் தப்பில்லை ராதா. இருபத்தியேழு வயசுல ஒரு கல்யாணம். அம்மா எல்லாத்தையும் பார்த்துப் பார்த்துத் தான் பண்ணினாங்க. ஆனா எங்கேயோ சறுக்கிடுச்சு.” எங்கோ வெறித்துப் பார்த்தபடி பேசினான் அபராஜிதன்.

“இப்போ எதுக்கு அதெல்லாம்?” அவன் ரணத்தைக் கீறிப்பார்க்க அவள் பிரியப்படவில்லை.

“பரவாயில்லை, இந்த ஒரு முறை மட்டும் கேட்டிடு. இன்னொரு முறை இதை நானே பேசுவேனான்னு கூட எனக்குத் தெரியாது.” கொஞ்சம் நிதானப் படுத்திக் கொண்டவன் மீண்டும் தொடர்ந்தான்.

“புரிஞ்சு போச்சு. அது சரிப்பட்டு வராதுன்னு. போலியா எதுக்கு ஒரு வாழ்க்கைன்னு ஈசியா அதைத் தூக்கிப் போட முடிஞ்சுது. யாரையும் குத்தம் சொல்ல விரும்பலை. அதேமாதிரி… யாரும் என்னையும் குத்தம் சொல்லலை. சுமூகமா முடிஞ்சு போச்சு. முறிஞ்சு போச்சு. எம் மேலயும் தப்புகள் இருந்திருக்கலாம். ஆனா… எங்கிட்ட மட்டும் தப்பு இருக்கலை.”

“நான்… கிளம்பணும். ஆத்மிகா காத்துக்கிட்டு இருப்பா.” சட்டென்று பேச்சை மாற்றினாள் ராதா. அவள் நோக்கம் புரிந்தவன் புன்னகைத்தான்.

“ஆத்மிகாவை உன்னை ‘அம்மா’ ன்னு கூப்பிடச் சொல்லு ராதா. அந்த ஆன்ட்டி வேணாம்.”

“இல்லையில்லை… அப்படியெல்லாம்…”

“நீ சொல்லிக் குடுக்கலைன்னா என்ன? நான் சொல்லிக் குடுக்கிறேன்.” அவளை முடிக்க விடாமல் மீண்டும் அவனே பேசினான்.

“சொன்னாப் புரிஞ்சுக்கோங்க. இது நடக்காது.”

“நான் நடத்திக் காட்டுறேன். என் பெயரோட அர்த்தம் தெரியுமா உனக்கு?”

“தெரியும்.”

“என்ன?”

“கிருஷ்ணரோட நூற்றி எட்டுப் பெயர்கள்ல ஒன்னு.”

“அர்த்தம் சொல்லு.”

“வெல்லப்பட முடியாதவன்.”

“புரியுதில்லை. அப்புறம் என்ன?”

“எம்மேல இருக்கிற அன்பில அம்மா அப்பா உங்களை ஏதாவது சொல்லிட்டா என்னால தாங்க முடியாது.”

“அதே அன்பு எனக்கும் இருந்தா அவங்க சொல்லுற வார்த்தைகளை உனக்காக நானும் தாங்கத் தானே வேணும் ராதா?” பிடிவாதமாக நின்றவனின் வார்த்தைகளில் சொக்கிப் போனாள் பெண்.

“இன்னைக்குப் புடவை கட்டலையா?” இதுவரை அந்தக் கண்களில் தெரிந்த உறுதி போய் இப்போது குறும்பு குடியேறி இருந்தது. சட்டென்று விலகியவள் நகர்ந்து விட்டாள்.

“நான் கிளம்புறேன்.” சொல்லாமல் வந்தவள் சொல்லிக் கொண்டு புறப்பட்டாள்.

“பொண்ணு மேல காட்டுற கருணைய அவங்க அப்பா மேலயும் கொஞ்சம் காட்டலாம். தப்பில்லை.” அவள் முதுகில் வந்து மோதிய வார்த்தைகளில் முகம் சிவந்து போனது ராதாவிற்கு. திரும்பிப் பார்க்காமல் ஓடி விட்டாள்.

 

ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே 8

திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அன்று அபராஜிதனை அவன் எஸ்டேட்டில் பார்த்துவிட்டு வந்த பிறகு எல்லாம் துரிதமாக நடந்தேறியது.

ராதாவின் வீட்டிலிருந்து எதிர்பாரா விதமாக சம்மதம் கிடைத்திருந்தது. சுஜாதா ஆனந்தத்தில் மிதந்து போனார். ராதாவை அவர்கள் வீட்டிற்கு அழைத்துக் கொண்டாடித் தீர்த்து விட்டார்.

ராதா குழம்பிப் போனாள். தன் வீட்டில் இதற்கு எப்படி சம்மதம் சொன்னார்கள்? மீராவிற்கு அழைத்துக் கேட்க, அபராஜிதன் நேரடியாக வீட்டுக்கே வந்து அம்மா அப்பாவிடம் பேசியதாகத் தகவல் சொன்னாள்.

‘அக்கா! சான்ஸே இல்லை. அத்தான் சூப்பர் தெரியுமா?’

‘என்ன ஆச்சு மீரா? எனக்கு பயமா இருக்கு.’

‘சூப்பர் மேனைப் பக்கத்துல வச்சுக்கிட்டு எதுக்கு பயப்பிடுறே?’

‘என்ன நடந்ததுன்னு சொல்லு மீரா.’

‘ஒன்னுமில்லை.‌ உன்னோட ஆள் வந்தாரு. அப்பாவையும் அம்மாவையும் உட்கார வெச்சு கொஞ்ச நேரம் பேசினாரு.’

‘என்ன பேசினார்?’ அவசரமாகக் கேட்டாள் ராதா.

‘இந்தக் கல்யாணத்துக்கு நம்ம அம்மா அப்பா ஏன் மறுப்புச் சொல்றாங்கன்னு அவரே புட்டுப் புட்டு வெச்சாரு. அவரோட பழைய லைஃபைப் பத்தி கொஞ்ச நேரம் பேசினாரு. இதுக்கும் ராதாக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு புளி போட்டு தேக்காத குறையா விளக்கினாரு. உன்னோட அவர் வாழப்போற வாழ்க்கையப் பத்திப் பேசினாரு. ப்ராப்ளம் சால்வ்ட்.’ அவள் பாணியில் சொல்லி முடித்தாள் மீரா.

‘அம்மா அப்பா என்ன பேசிக்கிறாங்க? உண்மையைச் சொல்லு மீரா.’ இப்போது ராதாவின் குரலில் பதட்டம் இருந்தது.

‘ரெண்டாந் தாரம் எங்கிறதைத் தவிர வேறேந்த நெருடலும் இல்லைங்கிற அளவுக்கு வந்திட்டாங்க.’

‘உண்மையாத்தான் சொல்லுறியா?’

‘சத்தியமாத்தான் சொல்லுறேன்க்கா. ஐயோ! அத்தான் எவ்வளவு ஸ்மார்ட்க்கா. ஒரு ஃபோட்டோ குடேன். என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட காட்டுறேன்.’

‘எங்கிட்ட இல்லை மீரா.’

‘ஐய்! இதானே வேணாங்கிறது.’

‘சத்தியமா இல்லை மீரா.’

‘நீயெல்லாம்… உன்னைக் கொண்டு போய் மியூசியத்தில தான் வெக்கணும்.’ கொலை வெறியோடுதான் பேச்சை முடித்திருந்தாள் மீரா.

ராதாவின் மனம் அத்தனை சீக்கிரத்தில் சமாதானம் ஆகவில்லை. அபராஜிதனையும் அழைத்துப் பேசினாள். மீராவாவது நடந்ததைச் சொன்னாள். இவன்,

‘அம்மா அப்பா சம்மதிச்சிட்டாங்க ராதா. டோன்ட் வொர்ரி. பீ ஹாப்பி.’ என்று முடித்துவிட்டான்.

திருமணத்தில் எந்தக் குறையும் வராதவாறு சுஜாதா ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்தார். ‘இரண்டாம் திருமணத்திற்கு இத்தனை அமர்க்களம் எதற்கு?’ என்று பார்ப்பவர்கள் மனதில் எண்ணத் தோன்றும் அளவிற்கு அத்தனையும் சிறப்பாக இருந்தது.

அர்ச்சனா கூட மிரண்டு போனாள். ‘என்ன ராதா? இப்படி க்ரான்ட்டா பண்ணுறாங்க?’ அவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

அபராஜிதன் ஏற்கனவே சுஜாதாவிடம் சொல்லி இருந்தான்.

‘அம்மா! ரெண்டாவது கல்யாணம் தானேன்னு ராதா வீட்டுல ஒரு குறை கண்டிப்பா இருக்கும்.’

‘ஆமாப்பா.’

‘அந்தக் குறையை அவங்க எந்த இடத்திலேயும் உணரக் கூடாதும்மா. அதுதான் அவங்களுக்கு நாம செய்யப்போற மரியாதை.’

‘கண்டிப்பா பண்ணிடலாம்பா.’ சுஜாதாவும் உறுதியாகச் சொல்லி இருந்தார்.

மணப்பெண்ணிற்கு என்று மாப்பிள்ளை வீட்டார் செய்த சீரில் மகேஷ்வரியே கொஞ்சம் திணறித்தான் போனார். மருமகள் என்று நினைக்காமல் ராதாவை உள்ளங்கையில் வைத்துத் தாங்கிய சுஜாதாவை அவருக்கு நிறையவே பிடித்திருந்தது.

எங்கேயும் எந்தக் குறையும் தெரியவில்லை. சொல்லப்போனால் அபியின் முதல் திருமணத்தை விட இந்தத் திருமணம்தான் மிகவும் கோலாகலமாக இருந்தது.

கனவில் மிதப்பதைப் போல உணர்ந்தாள் ராதா. போராட வேண்டி இருக்கும் என்று நினைத்தது போக இன்று அபராஜிதனின் மனைவியே ஆகிப் போயிருந்தாள்.

மதர், ஸ்கூல் ஸ்டாஃப் என அத்தனை பேரும் வந்திருந்தார்கள். ஆத்மிகாமிவைக் கையிலேயே பிடிக்க முடியவில்லை. அப்பா சொல்லிக் கொடுத்த ‘அம்மா’ என்ற வார்த்தை அவள் வாய்க்குள் அத்தனை எளிதில் நுழையவில்லை. அந்தக் குழந்தைக்குத் தெரிந்ததெல்லாம் தன் பிரியத்திற்குரிய ராதா ஆன்ட்டி இனிமேல் தன் வீட்டிலேயே இருப்பார் என்பது தான்.

ராதாவைப் பார்க்கும் போதெல்லாம் அதை அவளிடமே கேட்டு ஊர்ஜிதப் படுத்திக் கொண்டாள்.

‘ஆன்ட்டி! நீங்க இனிமே எங்க வீட்டுல தான் இருப்பீங்களா?’ ஜவுளி எடுக்க வந்திருந்த போது ராதாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு கேட்டாள் ஆத்மிகா.

‘பேபி! எங்க வீடுன்னு சொல்லக் கூடாது. நம்ம வீடுன்னு சொல்லணும்.’ இது அபராஜிதன்.

அப்பா சொல்வதை எல்லாம் குழந்தை கேட்டுக் கொண்டாலும், சாதாரணமாக அப்பா மகளுக்கு இடையில் இருக்கும் ஒரு சுமூகமான உறவு அங்கு இன்னும் உருவாகவில்லை. அபி அதை இன்று வரை உருவாக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

‘சரிப்பா. நீங்க சொல்லுங்க ஆன்ட்டி. நம்ம வீட்டுல தான் இனி நீங்க இருப்பீங்களா?’ கொஞ்சலாக வந்தது குழந்தையின் குரல்.

‘ம்…’

‘ஜாலி… ஜாலி…’ கை கொட்டி ஆர்ப்பரித்த ஆத்மிகாவின் சத்தத்தில் கடையில் இருந்த அத்தனை பேரும் அன்று இவர்களைத் தான் திரும்பிப் பார்த்தார்கள்.

திருமணம் முடிந்த கையோடு எல்லோரும் அபராஜிதன் வீட்டுக்கு வந்திருந்தார்கள். பெண் வீட்டாரின் சொந்த பத்தங்களுக்காகத் தனியாக ஒரு பங்களாவை ஏற்பாடு பண்ணி இருந்தார் சுஜாதா.

அர்ச்சனாவும், மீராவும் வீட்டை ஒரு முறை வலம் வந்தார்கள். மகேஷ்வரி திருமணத்திற்கு சம்மதம் சொல்லி இருந்தாலும் கொஞ்சம் இறுகினாற் போலத்தான் தெரிந்தார்.

“என்னாச்சு?” மனைவியின் முகத்தில் கவலை தெரியவும் சட்டென்று கேட்டான் அபராஜிதன்.

“இல்லை… அம்மாதான்…” ராதா இழுக்கவும் மகேஷ்வரியைத் திரும்பிப் பார்த்தான் அபி. ஒட்டவும் முடியாமல் வெட்டவும் முடியாமல் அமர்ந்திருந்தார்.

“ராதா! கல்யாணம் முடிஞ்ச கையோட தன் கடைமை முடிஞ்சு போச்சுன்னு எந்த அம்மாவும் நினைக்க மாட்டாங்க. தன் பொண்ணோட வாழ்க்கை இனி அவ புருஷனோட சந்தோஷமா இருக்கணுங்கிற வேண்டுதல், கவலை அவங்க மனசுல இருக்கும். புது இடம், புது மனுஷங்க… இதையெல்லாம் நம்ம பொண்ணு சமாளிச்சிடுவாளாங்கிற பயம் இருக்கும். அவங்க இப்போ அந்த டென்ஷன்ல இருக்காங்க. நீ கவலைப்படாதே. நான் பார்த்துக்கிறேன்.”

“ம்…” இதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை ராதாவிற்கு. நடக்குமா என்று நினைத்திருந்த திருமணத்தையே நடத்திக் காட்டியவன் இல்லையா! இதையும் அவனே பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டாள்.

இரவு விருந்தும் மிகவும் தடபுடலாக ஏற்பாடாகி இருந்தது. உணவை முடித்துக் கொண்டு எல்லோரும் கிளம்பிப் போக நேரம் இரவு பத்தைத் தாண்டி இருந்தது. பெண் வீட்டாரும் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த பங்களாவிற்குக் கிளம்பி விட்டார்கள்.

ராதா ஆத்மிகாவின் ரூமில் உட்கார்ந்து கொண்டு குழந்தையோடு கதை பேசிக் கொண்டிருந்தாள். அதீத மகிழ்ச்சியில் குழந்தை உறக்கத்தைத் தொலைத்திருந்தது.

“ஆன்ட்டி… ஸ்டோரி புக் ரீட் பண்ணுங்க.” தனது ‘ஸின்டரெல்லா’ புக்கை ராதாவிடம் கொடுத்து விட்டு கட்டிலில் சாய்ந்து கொண்டாள் ஆத்மிகா.

ஒரு புன்னகையோடே படிக்கத் தொடங்கினாள் ராதா. இரண்டு பக்கங்கள் கூடப் படித்திருக்க மாட்டாள். சுஜாதா கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார்.

“ராதா! நீ இங்க இன்னும் என்ன பண்ணுறே?”

“ஆன்ட்டி எனக்கு ஸ்டோரி ரீட் பண்ணுறாங்க.”

“இன்னைக்குன்னு பார்த்து உனக்கு ஸ்டோரி வேணுமா ஆத்மி! ஆன்ட்டிக்குத் தூக்கம் வருது பாரு. அவங்க தூங்க வேணாமா?”

“ஆன்ட்டி… உங்களுக்குத் தூக்கம் வந்தா எங்கூடவே தூங்குங்க என்ன?”

“சரிடா குட்டி.” ராதாவின் பதிலில் திகைத்துப் போனார் சுஜாதா.

“என்னம்மா ராதா? குழந்தை தான் ஏதோ சொல்லுதுன்னா நீயும் அவ கூட சேர்ந்து பேசுறே.”

“நான் பார்த்துக்கிறேன் ஆன்ட்டி. நீங்க போய்த் தூங்குங்க.”

“அதுக்கில்லைம்மா…”

“ஆன்ட்டி… அதான் நான் சொல்லுறேனில்லை. நீங்க போய்த் தூங்குங்க.” அதற்கு மேல் சுஜாதா எதுவும் பேசவில்லை. என்ன பேசுவதென்றும் தெரியவில்லை. ஒரு பெரு மூச்சோடு நகர்ந்து விட்டார்.

கதையின் சுவாரஸ்யத்தில் குழந்தை ராதாவின் மார்பில் தலைவைத்த படி உறங்கி இருந்தது. ‘உம்’ கொட்டும் சத்தம் நின்று போயிருக்கவும் குனிந்து பார்த்தாள் ராதா. ஆத்மிகா தூங்கிப் போயிருந்தாள்.

நேரம் பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. வீடே கல்யாணக் களைப்பில் உறங்கிப் போயிருந்தது.

புன்னகைத்த படி புத்தகத்தை மூடி வைத்தவள் குழந்தையின் தலையைத் தடவிக் கொடுத்தாள். அடுத்து என்ன பண்ணுவதென்று புரியவில்லை.

சின்னவளைத் தனியாக விட்டுப் போக ஒரு மனது தயங்கியது என்றால், இன்னொரு மனது தானாக அபராஜிதனைத் தேடிச் செல்வதா என்று தயங்கியது.

‘அதுதான் எல்லாவற்றையும் யார் உதவியும் இல்லாமல் நடத்தத் தெரிகிறதே! இப்போதும் நடத்திக் கொள்ளட்டும்.’ மனது சண்டித்தனம் பண்ண அப்படியே சாய்ந்திருந்தாள். உதட்டில் இருந்த புன்னகை வாடாமல் இருந்தது.

அவள் சிந்தனையைக் கலைத்த படி திறந்தது ரூம் கதவு. திரும்பிப் பார்த்தாள் ராதா. அபி தான் நின்றிருந்தான். கதவிற்குப் பக்கத்தில் நின்ற படியே ஒரு கணம் அவளையும் குழந்தையையும் நோட்டம் விட்டவன் உள்ளே வந்தான்.

ராதாவிற்கு என்ன செய்வதென்று புரியவில்லை. குழந்தை தன் மீது தூங்கியதால் எழுந்து கொள்ளவும் முடியவில்லை.

நேராக அவள் பக்கத்தில் வந்தவன் அவள் மேலிருந்த குழந்தையை மெதுவாகப் பிரித்தான். அந்த நெருக்கத்தில், ஸ்பரிசத்தில் சிலிர்த்துப் போனாள் ராதா.

குழந்தையை அந்தப் புறமாக கட்டிலில் தூங்க வைத்தவன் ராதாவைக் கைப்பற்றி எழுப்பினான்.

“இன்னும் எத்தனை நேரத்துக்கு இங்கேயே உட்கார்ந்திருக்கிறதா உத்தேசம் ராதா?” அந்தச் சரசக் குரலில் விக்கித்துப் போனாள் ராதா.

லைட்டை ஆஃப் பண்ணி விட்டு நைட் லாம்ப்பை ஆன் பண்ணியவன் மனைவியை அழைத்துக் கொண்டு அவர்கள் ரூமிற்கு வந்தான். பிடித்த அவள் கையை இன்னும் விடவில்லை.

முதன் முறையாக அந்த ரூமிற்குள் காலை எடுத்து வைக்கும் போது ஏனோ லேசாக நடுங்கியது ராதாவிற்கு. ஒரு முறை கண்களைச் சுழல விட்டாள்.

தலை ராத்திரிக்கான எந்த ஆர்ப்பாட்டமும் அங்கே இருக்கவில்லை. சாதாரணமாக இருந்தது ரூம். சேர்ந்தாற் போல ஒரு பாத்ரூம் தெரிந்தது.

“பிடிச்சிருக்கா?” அவள் ரூமை நோட்டம் விடுவதைப் பார்த்தவன் சட்டென்று கேட்டான்.

“ம்…”

“ராதா… நீ ரொம்பப் பேச மாட்டியோ?” இயல்பாக அவன் கேட்கக் கோபம் வந்தது அவளுக்கு.

“கேக்குற கேள்விக்கெல்லாம் ரெண்டு வரியிலேயே பதில் சொல்லுறவங்க இதைக் கேக்கக் கூடாது.”

“ஏய்! நான் சாதாரணமாத் தான் கேட்டேன்.” அவன் சிரித்தான்.

“ஆனா நான் சீரியஸாத்தான் சொன்னேன்.” அவள் முறுக்கிக் கொண்டாள்.

“அப்படியா என்ன? அவ்வளவு ஷார்ட்டாவா பேசுறேன்?”

“ரொம்பவே.”

“சரி சரி. இனித் திருத்திக்கிறேன். ஒரு வேளை பேச்சைத் தொலைச்சிட்டேனோ என்னவோ?” அவன் வார்த்தைகளில் சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள் ராதா.

“இத்தனை அழகா, பக்கத்துல ஒரு பொண்ணு, நமக்கே நமக்குன்னு நிக்கும் போது பேச்சு வருமா ராதா?”

அந்தக் கண்களுக்குள் ஆழ்ந்து பார்த்தாள் ராதா. அவன் கெட்டிக் காரத்தனமாகச் சுதாகரித்துக் கொண்டது போல் தான் முதலில் தெரிந்தது ராதாவிற்கு.

இல்லையில்லை! அந்தக் கண்களில் கவலை தெரியவில்லை. மாறாகக் காதல் தான் வழிந்தது.

அவன் கடந்தகாலம் இப்போது நிழலாடுவதை ராதா விரும்பவில்லை. அவன் கண்களுக்குள் தெரிந்த காதலை இமைக்காமல் பார்த்தாள்.

“அடேயப்பா! இந்தக் கண்கள் அப்படியே என்னை விழுங்கிவிடும் போல இருக்கே.” அந்தக் குற்றச்சாட்டில் இமைகளைத் தாழ்த்திக் கொண்டாள்.

“என்ன? திடீர்னு மௌனமாகிட்ட?” அவள் நெற்றியில் தன் நெற்றியை முட்டியவன் லேசாகச் சிரித்தான்.

“ஒரு வேளை பேச்சு இப்போ தேவையில்லைன்னு நினைச்சியோ?”

“ஐயையோ! நான் அப்படி நினைக்கலை.” சட்டென்று பதில் வந்தது.

“எப்படி நினைக்கலை?”

“நீங்க சொன்ன மாதிரி நினைக்கலை?” தந்தியடித்தாள் ராதா.

“நான் என்ன சொன்னேன்?”

“இப்போ பேச்சு தேவையில்லைன்னு…”

“பார்த்தியா… இப்போ நீயே சொல்லிட்டே, பேச்சு தேவையில்லைன்னு.”

“இல்லையில்லை.”

“ஏய் பேச்சை மாத்தாத.” அவன் கிடுக்கிப்பிடியில் திணறிப் போனாள் ராதா. அந்தத் திணறலை வெகுவாக ரசித்தான் அபி.

படித்த பெண். டீச்சர் வேறு. ஆனால் தான் பேசும் வார்த்தைகளைத் தாங்க முடியாமல் அவள் திணறுவதும் நாணுவதும் அவனுக்கு அத்தனை பிடித்தமாக இருந்தது. கண்கள மிரள அவனைக் கடைக் கண்ணால் அவள் பார்க்கும் போது என்னென்னவோ தோன்றியது. அவனுக்கு வித்தியாசமான ஒரு உலகை ராதா அடிக்கடி அறிமுகப் படுத்தினாள்.

“ராதா!” அந்தக் குரலில் அத்தனை கிறக்கம். மெதுவாக அந்தப் பட்டு இதழ்களை அவன் நெருங்கும் போது…

கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. திடுக்கிட்டு விலகினாள் ராதா. அபியும் குழம்பிப் போனான்.

‘யார் இந்த நேரத்தில்? அதுவும் அவர்கள் ரூம் கதவை இங்கிதமில்லாமல் தட்டுவது?’ தன்னை சுதாரித்துக் கொண்டவன் கதவைத் திறந்தான்.

“அப்பா! ஆன்ட்டியைக் காணலை.” கண்களில் நீர் திரள நின்றிருந்தாள் ஆத்மிகா. அபராஜிதன் ஒரு புன்னகையோடு ராதாவைத் திரும்பிப் பார்த்தான். அந்தப் பார்வையும் சிரிப்பும் ஏதோ பண்ண உதட்டைக் கடித்தாள் ராதா.

“பேபிக்கு இப்போ ஆன்ட்டி வேணுமா?”

“ம்…”

“அப்போ உள்ள வாங்க.” அப்பாவின் அழைப்பில் ஆச்சரியமாகப் பார்த்தது குழந்தை. அப்பாவின் ரூம் அதுவென்று தெரிந்திருந்தாலும் அங்கெல்லாம் அவள் இதுவரை வந்ததில்லை.

குழந்தையின் தயக்கத்தைப் புரிந்து கொண்டவன் சட்டென்று விலக, அப்போதுதான் அப்பாவிற்குப் பின்னால் நின்ற ஆன்ட்டியைக் கண்டது குழந்தை.

“ஆன்ட்டீ…” ஒரே ஓட்டமாகச் சென்று ராதாவைக் கட்டிக் கொண்டாள் ஆத்மிகா.

“சின்னக்குட்டி தூங்கலையா என்ன?” சின்னவளைத் தூக்கிக் கொண்டாள் ராதா. தன் கழுத்தைக் கட்டிக் கொண்டு தோளில் சாய்ந்திருந்த குழந்தையின் கன்னத்தில் மென்மையாக முத்தம் வைத்தாள்.

“ஊஹூம்.”

“ஏன்டா?”

“ஆன்ட்டி இல்லை அங்க.”

“அப்போ ஆன்ட்டியோட இங்க தூங்குறீங்களா?”

“ம்…” சின்னவள் சம்மதிக்கவும் கணவனை நிமிர்ந்து பார்த்தாள் ராதா. அதுவரை கையை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு அவர்களையே பார்த்திருந்தவன் கட்டிலைக் காட்டினான். ஒரு புன்னகையோடே அங்கு குழந்தையோடு போனாள் ராதா.

சற்று நேரத்திற்கெல்லாம் குழந்தை உறங்கிப் போனாள். அபி எங்கே என்று திரும்பிப் பார்க்க, அந்த ரூமோடு ஒட்டி இருந்த பால்கனியில் வானம் பார்த்து அமர்ந்திருந்தான்.

ஏனோ அவன் அமர்ந்திருந்த தோற்றம் ராதாவின் மனதைப் பிசைந்தது. சற்று முன் அநாதரவாக நின்ற ஆத்மிகாவைப் பார்ப்பது போல் இருந்தது. அமைதியாக அவன் பக்கத்தில் போய் அமர்ந்தாள்.

“தூங்கிட்டாளா என்ன?”

“ம்…”

“என்னாச்சு இன்னைக்கு?‌ இப்படி பாதி ராத்திரியில எந்திரிக்க மாட்டாளே?”

“குட்டிப் பொண்ணு இன்னைக்கு ரொம்ப ஹாப்பியா இருந்தாளா, அதான் தூக்கம் வரமாட்டேங்குது போல.”

“எனக்கும் தூக்கம் வரமாட்டேங்குதே ராதா. அப்போ நானும் ஹாப்பியா இருக்கேனா என்ன?”

“அதை நீங்க தான் சொல்லணும்?”

“என்ன சொல்லணும்?”

“ஹாப்பியா இருக்கீங்களா? இல்லையான்னு.” அவள் சொல்லி முடிக்க ஒரு மெல்லிய புன்னகையோடு அவளை இழுத்துத் தன் மார்பில் சாய்த்துக் கொண்டான்.

“இன்னைக்கு மட்டுமில்லை. இந்தப் பொண்ணு எப்போ இந்த வீட்டுக்குள்ள காலடி எடுத்து வச்சுதோ! அப்ப இருந்தே நான் ஹாப்பியாத்தான் இருக்கேன்.” அவன் பேச்சில் ஆச்சரியமாக அவனை விழி விரித்துப் பார்த்தாள் ராதா.

“நான் நிஜத்தைத் தான் சொல்லுறேன் ராதா.”

“நான் உங்களை இங்க பார்த்ததே இல்லையே?” அவள் சொல்லவும் ஒரு தினுசாகச் சிரித்தான் அபி.

“ஆரம்பத்துல பெருசா ஒன்னும் தோணலை. ஆனாப் போகப் போக புரிஞ்சு போச்சு. இந்தப் பொண்ணு கிட்ட நாம கெஞ்சிக்கிட்டு நிக்கப் போற நாள் இன்னும் அதிக தூரத்துல இல்லைன்னு.”

“நான் உங்களை… முதல் நாளே பார்த்தேன்.”

“எங்க? ஸ்கூல்ல பார்த்ததைச் சொல்லுறியா?”

“அன்னைக்குத்தான். ஆனா ஸ்கூல்ல பார்க்கிறதுக்கு முன்னாடி.”

“எங்கடா?”

“ரயில்வே க்ராஸிங்ல.”

“ஓ! நான் பார்க்கலையே?”

“என்னோட ஸ்கூட்டிக்குப் பக்கத்துல தான் கார் நின்னுது. நீங்க கூட அப்போ சிகரெட் பிடிச்சீங்க.”

“அப்படியா?”

“அந்த வாசத்துல எனக்கு இருமல் வரவும் சாரி சொல்லி சட்டுன்னு தூக்கிப் போட்டீங்க.”

“இங்கப்பார்றா. அப்புறம்…”

“அப்போவே தோணிச்சு…”

“என்ன தோணிச்சு?”

“நீங்க செம ஸ்மார்ட்னு.”

“ஹா…ஹா… லவ் அட் ஃபர்ஸ்ட் ஸைட்டா?” அவன் வாய்விட்டுச் சிரிக்கவும் முகத்தைப் புதைத்துக் கொண்டாள் ராதா.

“அப்புறம் என்ன ஆச்சு?”

“மதர் கூப்பிட்டு அறிமுகப்படுத்தினாங்க. ஆத்மிகாவைப் பார்த்தப்போ…” அதற்கு மேல் அவள் பேசவில்லை. வார்த்தைகள் சிக்கிக் கொண்டன. அவளை மென்மையாக வளைத்திருந்த அவன் கரங்களும் சட்டென்று இறுகிப்போயின.

“ராதா!”

“ஆரம்பத்துல அதிர்ச்சியாத்தான் இருந்திச்சு. ஆனா சமாளிச்சுட்டேன். அப்புறம் வீட்டுக்கு வந்தப்போ தான் எல்லாம் தெரிய வந்தது.”

“அப்போ என்ன தோணிச்சு?”

“முயற்சி திருவினையாக்கும்.” மெல்லச் சிரித்தாள் பெண்.

“இவ்வளவு குறைகளைத் தாண்டி வர்ற அளவுக்கு அப்படி எங்கிட்ட என்ன இருக்கு ராதா?”

“தெரியாது.” சட்டென்று சொன்னாள்.

“பிடிச்சிருந்தது. அவ்வளவுதான்.”

“பிடிச்சிருந்ததுன்னா… எவ்வளவு பிடிச்சிருந்தது?”

“எனக்கு அதைச் சொல்லத் தெரியாது.”

“ஆனா உன்னை எவ்வளவு பிடிக்கும்னு எனக்குச் சொல்லத் தெரியும். சொல்லட்டுமா?” சொல்லத் தொடங்கியவனின் செய்கைகளில் அதிர்ந்து போனாள் ராதா.

“ஐயோ! என்ன இது? இங்க வச்சு…”

“வேற என்னை என்ன பண்ணச் சொல்லுற? அதான் உம் பொண்ணுக்கு ரூமைத் தாரை வார்த்துட்டயே.” அவள் சிணுங்கல்கள் எதையும் அவன் காதில் போட்டுக் கொள்ளவில்லை. கருமமே கண்ணாகினான்.

 

ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே 9

அந்த ப்ளாக் ஆடி சென்னையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. அபராஜிதன் ட்ரைவ் பண்ணிய படியே ராதாவைத் திரும்பிப் பார்த்தான்.

முகத்தில் அத்தனை மலர்ச்சி இல்லை. மறு வீட்டு விருந்திற்குப் போகும் உற்சாகம் அவளிடத்தில் சற்றும் காணப்படவில்லை. அதன் காரணம் அபிக்குத் தெரியும்.

சென்னை போகும் போது ஆத்மிகாவையும் தங்களோடு அழைத்துக் கொண்டு போக அவள் வைத்த விண்ணப்பம் அவனால் மறுக்கப்பட்டிருந்தது. அதனால் தான் அம்மணி முகத்தைத் தொங்கப் போட்டபடி உட்கார்ந்திருக்கிறார்.

காரை ஒரு ஓரமாக நிறுத்தியவன் அவள் புறமாகத் திரும்பி அமர்ந்தான்.

“இப்போ எதுக்கு நீங்க இப்படி உம்முன்னு உட்காந்திருக்கீங்க டார்லிங்?” அவன் சமரசப் பேச்சில் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் ராதா.

“அட! இப்போ எதுக்கு முகத்தைத் திருப்பிக்கிறீங்க? நீங்க என்னோட இப்போ பேசலைனா கார் இந்த இடத்தை விட்டு நகராது.”

போக்குவரத்திற்குத் தடையில்லாமல் காரை நிறுத்தி இருந்ததால் சிகரெட் பாக்கெட்டை எடுத்துக் கொண்டு இறங்கினான் அபி.

மனம் லேசாக இருக்கும் போது அந்த ஆறாம் விரல் அவனுக்குத் தேவைப்படும். அப்போது மட்டும் யாரும் பக்கத்தில் இல்லாதவாறு பார்த்துக் கொள்வான்.

திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. அடுத்த நாளே மறுவீட்டு விருந்துக்குப் போக வேண்டும் என்று சுஜாதா சொன்ன போதும் திடீரென்று எஸ்டேட்டில் ஒரு மெஷின் பழுது பட்டதால் அவனால் அசைய முடியவில்லை.

வெளிநாட்டிலிருந்து வரவழைக்க வேண்டிய உபகரணம். அதிக விலை என்பதால் அவனே நேரடியாக இருந்து வேலையை முடித்திருந்தான். நேற்றிரவு தான் கொஞ்சம் ஃப்ரீ ஆகியிருந்தான் அபி.

ராதாவின் பெற்றோருக்கு ஏற்கெனவே தகவல் சொல்லி இருந்தான். அவர்களும் புரிந்து கொள்ளவே எந்தப் பிரச்சினையும் இல்லாமல் போனது. ஆனால் அவர்கள் பெற்றது தான் புரிந்து கொள்ள மறுத்தது.

சுஜாதாவிற்கும் அபி சொல்வதுதான் சரியென்று பட்டது. திருமணம் முடிந்த நாளிலிருந்து ஆத்மிகா ராதாவோடு முன்னை விட அதிகமாக ஒட்டிக் கொண்டது அவருக்கும் அவ்வளவு பிடிக்கவில்லை.

அவர் மகனைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. அவரின் எண்ணம் முழுவதும் ராதா தான் அமர்ந்திருந்தாள். சின்னப் பெண். அவளின்  சந்தோஷமான வாழ்வு தான் அவருக்கு முதன்மையாகப் பட்டது. மற்றதெல்லாம் பிற்பாடுதான்.

முன்பெல்லாம் தன் ரூமிலேயே அடைந்து கிடக்கும் ஆத்மிகாவிற்கு இப்போது அப்படி ஒரு இடம் இருப்பதே மறந்து போனது. இரவில் கூட ஆன்ட்டியோடு தூங்கவே அடம் பிடிப்பாள்.

அபியும் கொஞ்சம் அதற்கு இசைந்து கொடுத்தான். அந்தச் சின்னப் பெண்ணின் ஸ்பரிசம் அவனுக்கு மிகவும் பிடித்தமாக இருந்தது. தன் மகளின் ஆறு வருட வாழ்க்கையில் தன் பங்கு எதுவும் இல்லை என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக அவன் உணர்ந்து கொள்ள ஆரம்பித்திருந்தான்.

தான் இத்தனை காலமும் எத்தனை பெரிய சுகத்தை இழந்திருக்கிறோம் என்று அவனுக்கு மெல்ல மெல்லப் புரிந்தது. தூக்கக் கலக்கத்தில் தன் மேல் பொத்தென்று விழும் அந்தக் குட்டிக் காலில் முத்தம் வைக்க அவனுக்கு அவ்வளவு பிடித்திருந்தது.

தன் தாயைக் கொஞ்சமும் அவனுக்கு ஆத்மிகா ஞாபகப் படுத்தவில்லை. மாறாக ராதா தான் அவள் தாயென்ற பிரமையே அவன் மனதில் தோன்றிவிட்டது.

அப்பா ஆன்ட்டி இருவரையும் இரு புறம் வைத்துக் கொண்டு தூக்கம் வரும் வரை கதை பேசுவாள் ஆத்மிகா. எது எப்படி இருந்த போதும் அவன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அபிக்குத் தெரிந்திருந்தது.

இப்போதெல்லாம் வீட்டிற்கு விரைவாக வரும் மகனைப் பார்த்து சுஜாதாவுமே லேசாக ஆச்சரியப்பட்டார். எஸ்டேட்டில் வேலை ஓடாமல் நேரத்தை நெட்டித் தள்ளி விட்டு அவன் ஓடி வருவது அவருக்கெங்கே தெரியும்?

புதிதாக அவன் வாழ்வில் கிடைத்த அந்த இரு பெண்களின் அறிமுகமும் அவனை வீட்டுக்கு சீக்கிரமாக இழுத்து வந்தது.

காரை விட்டிறங்கிய அபி டோரை சாத்திவிட்டு அதன் மேல் சாய்ந்து நின்றபடியே சிகரெட்டைப் பற்ற வைத்தான். வாழ்க்கையில் ஏதோ ஓர் பிடிமானம் வந்தாற்போல தோன்றியது. எதெதையோ மறக்க வேலைக்குள் தன் தலையைப் புகுத்திக் கொண்ட காலம் காணாமற் போயிருந்தது.

அந்த நொடியை அனுபவித்தவன் புகையை ஆழ்ந்து இழுத்தான். நாடி நரம்பெங்கும் ஏதோ ஒரு சுகம் பரவியது.

தனக்கு முதுகு காட்டி நிற்கும் கணவனைப் பார்த்தாள் ராதா. இந்த ஒரு வார வாழ்க்கையில் அபியின் நடவடிக்கைகள் அனைத்தும் அவளுக்கு ஓரளவு அத்துப்படி ஆகியிருந்தது. காரை விட்டு இறங்காமல் அவள் அமர்ந்திருப்பதற்கும் அது தான் காரணம்.

அவன் தனிமை தேடும் இந்த ஐந்து நிமிடங்களில் அவனை யாரும் தொந்தரவு பண்ணக்கூடாது. உடலுக்குக் கேடு என்று தெரிந்திருந்த போதும் ராதா கொஞ்சம் விட்டுக் கொடுத்தாள். வந்த உடனேயே சட்ட திட்டங்கள் போட அவளுக்குமே பிடிக்கவில்லை.

அத்தோடு அபராஜிதன் தன் தவறுகளில் கூட கொஞ்சம் நியாயமானவனாக இருந்தான். தனக்கென்று சில கட்டுப்பாடுகளை வைத்திருந்தான்.

ராதா கண்மூடி சீட்டில் தலைசாய்த்துக் கொண்டாள். ஆத்மிகா இல்லாதது வருத்தமாக இருந்தாலும் கணவனோடான அந்தப் பயணத்தை அவளுமே ரசித்தாள்.

நடக்கவே நடக்காது என்று தான் நினைத்திருந்த வாழ்க்கை. இன்று அவளைச் சொர்க்கத்தின் வாசலில் நிறுத்தி இருந்தது.

வெளி உலகுக்கெல்லாம் கொஞ்சம் கடினமாகத் தெரியும் தன் கணவன் தன்னிடம் உருகி வழிவது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

எஸ்டேட்டில் அவனது கடின முகத்தை, உழைப்பை ராதா இந்த ஒரு வாரத்தில் பார்த்திருக்கிறாள். ஆனால் தன்னை நெருங்கும் போது அவன் காட்டும் காதலும் கனிவும் அவனுக்கே உரித்தான அந்த வாசனையும்…

அவள் பக்கக் காரின் கதவு சட்டெனத் திறக்கவும் சிந்தனை கலைந்தாள் ராதா. அவளுக்காக அவன் கைநீட்ட அந்தக் கையைப் பற்றிய படி காரை விட்டிறங்கினாள்.

“என்ன மேடம்? இன்னும் கோபம் போகலையா?”

“கோபமெல்லாம் இல்லை… சின்ன வருத்தம் தான்.” இப்போதும் பட்டும் படாமலும் தான் வந்தது அவள் குரல்.

“ராது! சொன்னாப் புரிஞ்சுக்கணும். ஆத்மிகா உனக்கும் எனக்கும் ரொம்பவே முக்கியம் தான் இல்லேங்கலை. அதையே நாம உன் வீட்டுலயும் எதிர்பார்க்க முடியாதில்லையா? அத்தைக்கும் மாமாக்கும் நம்ம கல்யாணத்துல ஏற்கனவே ஒரு சின்ன வருத்தம் இருக்கு. இதுல முதல் முதலா அங்க போகும் போது ஆத்மியையும் கூட்டிக்கிட்டு போனா நல்லா இருக்காதுடா. இது வரைக்கும் நான் எப்படீன்னு எனக்குத் தெரியாது. ஆனா இனிமே நான் எது பண்ணினாலும் அதுல நம்ம மூணு பேரோட நன்மையும் இருக்கும். அதை நீ புரிஞ்சிக்கணும்.”

“ம்… சரிங்க.” அமைதியாக அவனை ஏற்றுக் கொண்டாள் ராதா. அவனின் ‘ராது’ என்ற அழைப்பு அவளை என்னவோ பண்ணியது. தலையைக் குனிந்து கொண்டாள்.

தான் என்ன சொன்னாலும் அமைதியாக அதை ஏற்றுக் கொள்ளும் அவளின் அந்த இயல்பு அவனை அவள் மேல் மேலும் மேலும் பித்தங் கொள்ள வைத்தது.

“அது என்ன? எப்பப் பார்த்தாலும் ஆத்மி… ஆத்மி… ஏன்? அவங்கப்பாவைப் பார்த்தாப் பாவமா இல்லையா?” அந்தக் குரலில் இருந்த கிறக்கத்தில் திடுக்கிட்டுப் போனாள் ராதா.

“நடு ரோட்டுல நிற்கிறோம்…” விலகப் போனவளைத் தடுத்தவன்,

“அப்போ கார் ஓகே வா?” என்றான்.

“லன்ச்சுக்கு வந்து சேர்ந்திருவோம்னு வீட்டுல சொல்லி இருக்கோம். கிளம்பலாமே…” அவள் கெஞ்சலில் லேசாகப் புன்னகைத்தவன் காரைக் கிளப்பினான். சுகமாக அமைந்தது அந்தப் பயணம்.

*************

ராதாவின் வீட்டைக் கார் நெருங்கிய போது வாசலுக்கே வந்து வரவேற்றார் ரங்கராஜன். மீராவைத்தான் கையில் பிடிக்க முடியவில்லை.

தன் அக்காவின் ஹான்ட்ஸம்மான கணவனை அவளுக்கு அவ்வளவு பிடித்திருந்தது. வீட்டில் பெண்பிள்ளைகள் இல்லாமல் வளர்ந்த அபிக்கும் அந்தச் சின்னப் பெண்ணின் ஆர்ப்பரிப்பு இதமாகத்தான் இருந்தது.

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத மகேஷ்வரி,

“மீரா! போதும் நிறுத்து. அத்தான் இவ்வளவு தூரம் ட்ரைவ் பண்ணி வந்திருக்காங்க. டயர்டா இருக்கும். அவங்களைக் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க விடு.” என்று ஒரு அதட்டல் போட்டார்.

“ராதா! மாப்பிள்ளையை ரூமுக்குக் கூட்டிட்டுப் போ. குளிக்கிறதுன்னா குளிக்கட்டும். சென்னை வெயில் அவங்களுக்குக் கஷ்டமா இருக்கும்.” அம்மா சொல்லவும் அபராஜிதனைப் பார்த்தாள் ராதா.

“என்ன அத்தை இப்படி வெயில் அடிக்குது? இந்த நேரத்துக்கு வெளியே போறதை நினைச்சும் பார்க்க முடியாது போல இருக்கே?”

“ஆமா மாப்பிள்ளை. கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு.” இயல்பாக இருந்தது அவர்களின் உரையாடல். ராதா லேசாக ஆச்சரியப்பட்டாள்.

தன் அம்மா இந்தத் திருமணத்திற்கு சம்மதித்திருந்தாலும் முழு மனதாக சம்மதிக்கவில்லை என்று ராதாவிற்குத் தெரியும். ஒரு சின்ன ஒதுக்கத்தை எதிர்பார்த்து வந்தவளுக்கு அம்மாவின் நடவடிக்கைகள் மகிழ்ச்சியாக இருந்தது.

ஆனால் ராதாவிற்குப் புரியாத விஷயம் என்னவென்றால் மகளின் முகத்தில் மகேஷ்வரி தேடிய சந்தோஷமும் திருப்தியும் அங்கு தேவைக்கதிமாக இருந்தது தான்.

மகளைப் பார்த்த மாத்திரத்திலேயே அவருக்குப் புரிந்தது. அவள் எத்தனை சந்தோஷமாக இருக்கிறாள் என்று. தானாகவே மாப்பிள்ளை மேல் மரியாதை வந்து ஒட்டிக் கொண்டது. இயல்பாகப் பேச முடிந்தது.

ராதா கணவனை ரூமிற்குள் அழைத்துச் சென்றாள். கொஞ்ச நாட்கள் ஊட்டியில் இருந்ததற்கே தனக்கு இத்தனை கஷ்டமாக இருக்கிறதே! அபியின் நிலைமை எப்படி இருக்கும்? நினைத்தபடியே ஏஸி யை ஆன் பண்ணினாள்.

அவள் பின்னாலேயே வந்தவன் அவளை அப்படியே அணைத்துக் கொண்டான். அந்தக் கழுத்து வளைவில் முகத்தைப் புதைத்துக் கொண்டவன்,

“டூ டேய்ஸுக்கு நோ டென்ஷன், நோ எஸ்டேட், நத்திங். ஒன்லி ராது… ராது… ராது…” என்றான் கிறக்கமாக.

“பொண்ணை ப்ளான் பண்ணித்தான் விட்டுட்டு வந்த மாதிரித் தெரியுது.”

“ஹா… ஹா…” அவள் சொன்ன விதத்தில் வாய்விட்டுச் சிரித்தான் அபராஜிதன்.

“எனக்கு ஒன்னு தேவைன்னா அதை எங்கே எப்படி நடத்திக்கணும்னு எனக்குத் தெரியும் டார்லிங். அந்த சாமர்த்தியம் எங்கிட்ட நிறையவே இருக்கு. அதைப் போகப் போக நீங்களே புரிஞ்சுப்பீங்க.” பேசிய படியே அவன் சரசத்தில் இறங்கினான்.

“குளிச்சிட்டு வாங்க. எல்லாரும் வெளியே காத்திட்டிருப்பாங்க.”

“ம்ப்ச்… குளிக்கலாம்டீ.” சலித்துக் கொண்டவன் பிடியே இறுதியில் வென்றது.

‘மாமியார் வீடு மகா சௌக்கியம்’ என்பது போல அன்றைய நாளை முழுதாக அனுபவித்தான் அபி. மனதுக்கு நிறைவாக இருந்தது.

சென்னையில் அவர்களுக்கிருந்த வீடுளில் ஒரு சில திருத்தங்கள் செய்ய இருந்ததால் இந்தப் பயணத்திலேயே அதையும் முடித்து விட நினைத்திருந்தான் அபி. அதற்காக இன்னொரு முறை அவனால் பயணம் செய்ய இயலாது. அங்கே போக ப்ளான் பண்ணியவன்,

“ராதா, நீயும் வர்றியா? வீட்டையும் பார்த்த மாதிரி இருக்கும்.” என்றான்.

“மீரா ஷாப்பிங் போகலாமான்னு கேட்டா…” அவள் இழுக்கவும்,

“சரிடா. நீ மீரா கூடப் போ. இன்னொரு நாள் வீட்டைப் பார்க்கலாம். நானும் கூடிய சீக்கிரமே வந்து உங்க கூட ஜாயின் பண்ணிக்கிறேன்.”

“ம்…” மலர்ந்த முகத்துடன் அவள் சொல்ல கார்டை நீட்டினான் அபி.

“என்ன இது?”

“ஷாப்பிங் போகப் போறேன்னு சொன்ன இல்லை. அத்தை, மாமா, மீரா எல்லாருக்கும் வாங்குடா.”

“எங்கிட்ட பணம் இருக்குங்க.”

“இல்லைன்னு யாரு சொன்னா? இதையும் வெச்சுக்கோ.” அவள் கையில் திணித்தவன் அவள் கன்னத்தில் இதமாக இதழ் பதித்து விட்டுப் போய்விட்டான்.

இத்தனை நாளும் அவளுக்கென மட்டுமே இருந்த அந்த ரூமில் இன்றைய ஒரு பொழுதிற்குள் அவன் வாசமே நிறைந்திருந்தது போல உணர்ந்தாள் ராதா.

ராதாவும் மீராவும் அந்த மாலை ஒரு வழி பண்ணி விட்டார்கள். அவர்கள் அடிக்கடி வந்து போகும் இடமென்பதால் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தார்கள்.

ஐஸ்கிரீம், கான்டி ஃப்ளாஸ் என குழந்தை போலவே மாறிவிட்டாள் மீரா. கடந்த எட்டு மாத காலமாக ஊட்டி வாசம் என்பதால் ராதாவும் தங்கையின் குறும்புகளை நிறையவே மிஸ் பண்ணி இருந்தாள். இருவரும் எந்தத் தங்கு தடையும் இல்லாமல் என்ஜாய் பண்ணினார்கள்.

“எக்ஸ்கியூஸ் மீ!” அந்தக் குரலில் இரண்டு பெண்களுமே திரும்பிப் பார்த்தார்கள்.

“மிஸஸ் ராதா?”

“யெஸ்.” ராதாவின் முகத்தில் குழப்பம் இருந்தது. தங்கையைத் திரும்பிப் பார்த்தாள். அவளுமே ‘உனக்குத் தெரிந்தவர்கள் இல்லையா?’ என்ற ரீதியில் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“நான் உங்க கிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும்.” அந்தப் பெண் சொல்ல ராதா சட்டென்று மீராவின் கையைப் பிடித்தாள்.

“நீங்க யாருன்னு இன்னும் சொல்லலையே?” இது ராதா.

“நான் ஸ்வரா!” அந்தப் பெயரில் ஆடிப் போனாள் ராதா.

“அக்கா! நான் அந்த ஷாப்ல நிக்கிறேன். நீ பேசி முடிச்சிட்டு வந்திரு.” எதிரே இருந்த கடையைக் காட்டிய மீரா சட்டென்று நகர்ந்து விட்டாள். போகும் போது ராதாவின் கையை ஒரு தரம் அழுத்திக் கொடுக்கத் தவறவில்லை.

பக்கத்தில் இருந்த கடையில் தான் மீரா நின்று கொண்டிருந்தாள். அக்காவின் மருண்ட முகம் அவளுக்கு அத்தனை நல்லதாகப் படவில்லை. கடையை வலம் வந்தாலும் ஒரு கண்ணை ராதாவின் மேலேயே வைத்திருந்தாள்.

வந்திருந்த பெண்ணைப் பார்த்த போதே மீராவுக்குப் புரிந்தது. பெண் பெரிய இடம் என்று. ஆனால் யாரென்று தான் பிடிபடவில்லை. தனக்குத் தெரியாமல் அதுவும் சென்னையில் அக்காவிற்கு யாரைத் தெரியும்? இல்லையே! நீங்கள் யாரென்று தானே அக்காவும் கேட்டாள். யோசனையை நிறுத்தி விட்டு அவர்களையே பார்த்தாள் மீரா.

அந்தப் பெண் தான் பேசிக் கொண்டிருந்தாள். அவள் பேசப் பேச ராதாவின் முகம் இருண்டு கொண்டிருந்தது. என்ன நடக்கிறது அங்கே? மண்டை வெடித்தது மீராவிற்கு.

ஐந்து நிமிடங்களுக்கு மேல் அந்தப் பெண் பேசியிருக்க மாட்டாள். பேச்சை முடித்துக் கொண்டு அவள் அப்பால் போக கடையை விட்டு வெளியே வந்தாள் மீரா.

“யாருக்கா அவங்க?”

“அது… அத்தானுக்குத் தெரிஞ்சவங்க.” சற்றே தடுமாறி விட்டுப் பதில் சொன்னாள் பெரியவள்.

“சரி… அதுக்கு ஏன் நீ இப்படி பேயறைஞ்ச மாதிரி நிக்குற?”

“மீரா! நாம வீட்டுக்குப் போகலாம்.” பதட்டமாக வந்தது ராதாவின் குரல்.

“அக்கா! என்னக்கா? எவ்வளவு நாள் கழிச்சு இன்னைக்கு வெளியே வந்திருக்கோம். அத்தான் வேற வந்து ஜாயின் பண்ணிக்கிறேன், மூவிக்குப் போகலாம்னு சொன்னாங்க. நீ என்னடான்னா…”

“மீரா ப்ளீஸ்… புரிஞ்சுக்கோ. நாளைக்கு வேணும்னா நாம எல்லாரும் திரும்ப வரலாம். இப்போ என்னால முடியாது. வா போகலாம்.”

இவர்களின் வாக்குவாதம் இங்கே போய்க்கொண்டிருக்க அப்போதுதான் வந்து சேர்ந்தான் அபராஜிதன். முடிந்தவரை போன வேலையை சீக்கிரம் முடித்துக்கொண்டு வந்திருந்தான்.

“என்ன நடக்குது இங்க? ஷாப்பிங் பண்ண வந்திட்டு அக்காவும் தங்கையும் சண்டை போட்டுக்கிட்டு நிக்கிறீங்க?” அந்தக் குரலில் நிஜத்துக்கு வந்தார்கள் இருவரும்.

அபியைப் பார்த்த மாத்திரத்தில் ராதாவின் கண்கள் சட்டென்று குளமாக அதை மறைக்க நினைத்தவள்,

“நான் கார் பார்க்கிங்க்கு போறேன்.” என்று விட்டு விடுவிடுவென நடந்து விட்டாள். திகைத்துப் போனான் அபி. அன்று முழுவதும் அவனோடு இசைவாக நடந்த பெண் இவளில்லையே!

“அக்கா!” அவளோடு கூடப் போகப் போன மீராவைக் கைப்பிடித்து நிறுத்தினான் அபராஜிதன்.

“மீரா! என்னாச்சு? ஏன் ராதா ஒரு மாதிரியா இருக்கா?”

“அத்தான், இவ்வளவு நேரமும் நல்லாத்தான் இருந்தா. உங்க சொந்தக்காரப் பொண்ணொன்னு வந்து அக்காவோட பேசிச்சு. அதோட இவ அப்செட் ஆகிட்டா.”

“என் சொந்தக் காரப் பொண்ணா? அதுவும் சென்னைலயா?”

“ஆமா அத்தான். பெயர் கூட ஏதோ ஸ்வரான்னு சொன்னாங்க.” அத்தானிடம் ஒப்பித்து விட்டு அவள் ராதாவை நோக்கி ஓட அபியின் வலது கண் லேசாகச் சுருங்கியது.

முகம் பாறை போல இறுக போகும் ராதைவையே பார்த்த படி நின்றிருந்தான் அபராஜிதன்.

ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே 10

அந்த ப்ளாக் ஆடி வீட்டிற்கு முன்னால் நிற்கவும் காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த மீரா இறங்கினாள். ராதாவும் இறங்கப் போக அவளைக் கைப்பிடித்துத் தடுத்தான் அபராஜிதன்.

“மீரா!”

“சொல்லுங்க அத்தான்.”

“நானும் ராதாவும் பீச் வரைக்கும் போய்ட்டு வர்றோம்னு அத்தைக்கிட்ட சொல்லிடு.”

“சரி அத்தான். என்ஜாய்!” கட்டை விரலை உயர்த்திக் காட்டிய பெண்ணுக்குப் புன்னகையைப் பதிலாகத் தந்துவிட்டு காரைக் கிளப்பினான் அபி.

ராதா எதுவும் பேசவில்லை. அமைதியாகவே இருந்தாள். கண்களில் மறுபடியும் கண்ணீர் கோர்க்கப் பார்த்தது. முயன்று அடக்கிக் கொண்டாள்.

அபியும் எதுவும் பேசவில்லை. அமைதியாகவே காரை ஓட்டிக் கொண்டிருந்தான். இருள் நன்றாகவே பரவ ஆரம்பித்திருந்தது.

ஆள் அரவமற்ற அந்தக் கடற்கரைச் சாலையில் காரை நிறுத்தியவன் அமைதியாக ராதாவைத் திரும்பிப் பார்த்தான். அவன் பார்வை புரிந்து அவளும் திரும்பிப் பார்க்க, அடைக்கி வைத்திருந்த அவள் கண்ணீர் அணையுடைத்தது.

“ஹேய்! ராது…” அவளை இழுத்துத் தன்னோடு இறுக்கமாக அணைத்தவன் கொஞ்ச நேரம் அவளை அழ விட்டான்.

“என்ன நடந்தது?” அதைக் கேட்கும் போது அவன் குரலில் அத்தனை இறுக்கம் இருந்தது.

“திடீர்னு அவங்க வந்தாங்க.” ஸ்வராவின் பெயரைக் கூட அவள் சொல்ல விரும்பவில்லை.

“ம்…”

“எனக்கு யார்னு தெரியலை. பேரைச் சொல்லவும் தான் ஞாபகம் வந்திச்சு.”

“ம்…”

“அவங்களுக்கு… அவ…” மேலே பேசமுடியாமல் கேவலொன்று கிளம்பியது ராதாவிடமிருந்து.

“ராது… என்னைத் தாண்டி எதுவும் நடக்காது. நீ தைரியமாச் சொல்லு.”

“அவங்களுக்கு ஆத்மிகா வேணுமாம்.”

“வாட்! ஹா… ஹா…” ராதாவின் வார்த்தைகளைக் கேட்டவன் ஆச்சரியத்தையும் மறந்து வாய் விட்டுச் சிரித்தான்.

“திடீர்னு என்ன அந்த அம்மாக்கு அவங்க பொண்ணு மேல அக்கறை வந்திருக்காம்?” கேலியாகக் கேட்டான் அபி.

“இது நாள் வரைக்கும் நீங்க தனியா இருந்தீங்களாம். இப்போ… இப்போ…” திக்கியபடி நிறுத்தினாள் ராதா.

“மேலே சொல்லு ராதா.” கர்ச்சனையாக வந்தது அவன் குரல்.

“இப்போ நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களாம். நான் எப்படி ஆத்மிக் குட்டியைப் பார்த்துக்குவேன்னு அவங்களுக்குத் தெரியாதாம். அதனால…”

“இதை எதுக்கு எங்கிட்ட வந்து சொல்லுற? ஆத்மிகாவோட அப்பாக்கிட்ட போய்ச் சொல்லுன்னு நீ சொல்ல வேண்டியது தானே ராதா.” அவளை முடிக்க விடாமல் குறுக்கிட்டான் அபி.

“எனக்கு என்ன சொல்லுறதுன்னே அப்போ தெரியலைங்க. அவங்க ஆத்மிகாவைப் பத்திப் பேசினப்போ நான் அப்படியே…” இப்போதும் ராதாவுக்கு கண்கள் பனித்தது.

“ராதா! அந்த அம்மாவோட எண்ணம் இன்னும் உனக்குப் புரியலையா?” கணவனின் கேள்வியில் மலங்க விழித்தாள் ராதா.

“பெத்தவங்க, அவங்க பொண்ணைக் கேட்கும் போது நான் என்னங்க சொல்ல முடியும்?”

“அப்போ நான் யாரு ராதா? எனக்கு ஆத்மிகா சொந்தம் இல்லையா?”

“இப்போ அவங்க பிரச்சினை நீங்க இல்லை, நான் தான்.” மனைவியின் பதிலில் சிரித்தான் அபி.

“எப்பவுமே அவங்க பிரச்சினை நான் தான். உனக்கு அதெல்லாம் புரியாதுடா. புரியவும் வேணாம். உன்னோட அழகான உலகத்துக்குள்ள இதெல்லாம் வர வேணாம்டா.” இதமாக அவன் சொல்ல இப்போது ராதா குழம்பிப் போனாள்.

“வீட்டுக்குப் போகலாமா?” மேலே அவளைச் சிந்திக்க அபி விடவில்லை.

“ம்…”

“ராது… ரெண்டே ரெண்டு நாள், நமக்காக. அதை ஸ்பாயில் பண்ண நான் விரும்பலைடா. புரிஞ்சுக்கோ. என்னைத் தாண்டி எதுவும் நடக்காது. பேபியை உங்கிட்ட இருந்து யாரும் பறிச்சுக்கிட்டுப் போக நான் விடமாட்டேன். சரியா?”

“ம்…” தலையைக் குனிந்து கொண்டு அவள் பதில் சொன்ன அப்பாவித்தனத்தில் அபிக்குச் சிரிப்பு வந்தது.

“ராது… நம்மைச் சுற்றி இருக்கிற இந்த இயற்கை எத்தனை அழகா இருக்கு பார்த்தியா?” அவன் சொல்லிய பிறகு தான் நிமிர்ந்து சுற்றுப்புறத்தை ஆராய்ந்தாள் ராதா.

ஆள் அரவமற்ற சாலை. ஒன்றிரண்டாக சில தென்னை மரங்கள். காற்று சிலுசிலுவென வீசிக் கொண்டிருக்க வானில் தேய்ந்த நிலா.

பார்வையை அவன் புறமாக அவள் திருப்ப அவன் முகத்தில் காதல் கொட்டிக் கிடந்தது. இதுவரை பேசிய கசப்பான நிகழ்வைத் தூக்கித் தூரப் போட்டவன் அவள் இதழ்களோடு ஐக்கியம் ஆகிப் போனான்.

*  *  *  *

ஊட்டியை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது அந்த ப்ளாக் ஆடி. யார் என்ன ஆட்டம் போட்டாலும், உலகமே தலை கீழாக மாறினாலும், எனக்கு நானும் என்னைச் சூழ்ந்தவர்களும் மட்டுமே பிரதானம் என்பது போல நடந்து கொண்டான் அபி.

மாமியார் வீட்டில் கிடைத்த இரண்டு நாட்களையும் கொண்டாடித் தீர்த்தான். ஊட்டியில் தன் வீட்டில் இந்தத் தனிமை கிடைப்பது கொஞ்சம் கஷ்டம் என்பதால் அவன் இரவுகள் கொஞ்சம் நீண்டு தான் போனது.

ராதாவை அழைத்துக் கொண்டு போய் அவர்களின் சென்னை வீட்டைக் காண்பித்தான். திருத்தங்கள் செய்வதற்காக அவள் சொன்ன ஆலோசனைகளையும் என்ஜினீயருக்குத் தெரியப்படுத்தினான்.

மீரா குறைப்பட்டுக் கொள்ளவும் திரும்பவும் அவளைக் குடும்பத்தோடு ஷாப்பிங் அழைத்துப் போனான். மறந்தும் அவன் ராதாவை எங்கேயும் தனியே விடவில்லை.

‘ட்ரைவர் போடலாமா?’ இது ராதா. ஊட்டிக்கு அவன் திரும்பவும் ட்ரைவ் பண்ணுவது அவளுக்கு அவ்வளவு சரியாகப் படவில்லை.

‘எதுக்கு?’ மனைவியின் முகத்தையே பார்த்திருந்தவன் ஒரு உதட்டோரப் புன்னகையோடு கேட்டான்.

‘இல்லை… நீங்க…’ அதற்கு மேல் ராதாவால் பேச முடியவில்லை. இத்தனை வெளிப்படையாக அவளுக்குப் பேசவும் வரவில்லை.

மனைவியின் தடுமாற்றத்தை அபி நன்றாகவே ரசித்தாற் போலத் தான் தோன்றியது.

‘சொல்லும்மா, எதுக்கு ட்ரைவர்?’ வேண்டுமென்றே மீண்டும் கேட்டான்.

‘இல்லை… நீங்க டயர்டா… இருக்கீங்க…’

‘அட! என் பொண்டாட்டியோட அக்கறையைப் பார்றா! ட்ரைவர் தடியனை முன்னால வச்சுக்கிட்டு என்னைக் கையைக் கட்டிக்கிட்டு சும்மா வரச்சொல்லுறியா?’

‘இல்லை… கொஞ்ச நேரம் தூங்கலாம்.’

‘அடப் போடீ… ரூமைப் பொண்ணுக்கு நீங்க தானம் பண்ணினப்போவே பால்கனியை வகை தொகையா பயன்படுத்திக்கிட்ட ஆளு நாங்க. காரை விட்டு வைப்போமா என்ன?’ அவன் கேட்கவும் ராதா தான் நிமிர்ந்தும் பார்க்காமல் ஓடி விட்டாள். அவனின் அட்டகாசச் சிரிப்பொன்று அவளைத் துரத்தி வந்தது.

மகேஷ்வரிக்கும் ரங்கராஜனுக்கும் மனம் நிறைந்து போனது. மகள் முகத்தில் சதா வாடாமல் இருந்த புன்னகை அவர்களுக்கு மிகவும் திருப்தியைக் கொடுத்திருந்தது.

கிளம்பும் போது மீரா தான் கலங்கி விட்டாள். அடிக்கடி அக்காவை சென்னை அழைத்து வருகிறேன் என்று அபி சூடம் அணைத்துச் சத்தியம் பண்ணாத குறையாக அவளுக்கு வாக்கு அளித்திருந்தான்.

ப்ளாக் ஆடி அளவுக்கு அதிகமாகவே ஆங்காங்கு ஓய்வென்ற பெயரில் கூத்தடித்து விட்டு ஊட்டி வந்து சேர்ந்திருந்தது. காரை அபி பார்க் பண்ண வீட்டுக்குள் அப்போதுதான் நுழைந்தாள் ராதா.

“ஆன்ட்டீ…” கூச்சலிட்ட படி ஓடி வந்து ராதாவைக் கட்டிக் கொண்டாள் சின்னவள். குழந்தை ஓடி வந்த வேகத்துக்கு ராதாவும் அவளை ஆசையோடு தூக்க கொஞ்சம் தடுமாறிப் போனாள்.

நல்லவேளையாகப் பின்னோடு வந்த அபி ராதாவின் தோளை அணைத்து அவளை நிதானப் படுத்தி இருந்தான். ஆத்மிகா ராதாவின் முகத்தை முத்தங்களால் எச்சில் பண்ண,

“அப்போ அப்பாவுக்கு?” என்றான் அபி. கேட்காமலேயே ஆன்ட்டிக்குக் கிடைத்தது, கேட்ட பிறகே அப்பாவிற்குக் கிடைத்தது.

ராதா குழந்தையைத் தூக்கி இருக்க, அவளைத் தோளோடு அணைத்தவாறு அபி நின்றிருந்தான். இவர்கள் சத்தம் கேட்டு வெளியே வந்த சுஜாதாவிற்குக் கண்கள் கலங்கி விட்டது.

மனம் நிறைந்து போனது அந்தத் தாய்க்கு. அவர் மகன் ஏங்கியது இப்படி ஒரு வாழ்விற்க்காகத் தானே! ஸ்வராவிடம் அவன் எதிர்பார்த்ததும் இப்படியொரு குடும்பச் சூழலைத் தானே.

“வாம்மா ராதா. அம்மா, அப்பா, மீரா எல்லாரும் சௌக்கியமா?” பழைய கசடுகளைத் தூக்கித் தூரப் போட்டவர் நிகழ்காலத்தோடு இணைந்து கொண்டார்.

“ம்… நல்லா இருக்காங்க அத்தை.” ஆன்ட்டியிலிருந்து அத்தைக்கு அவள் இலகுவாக மாறி இருந்தாள். ஆனால் ஆத்மிகாதான் இன்னும் அந்த ஆன்ட்டியையே பிடித்துக் கொண்டு நின்றாள். ராதாவும் வற்புறுத்தவில்லை. விட்டு விட்டாள்.

வீடு இவர்கள் வருகையின் பின் கலகலப்பாகிப் போனது. அபராஜிதனின் தம்பியும் மனைவியும் அவ்வளவாக வீட்டில் தங்க மாட்டார்கள். அதனால் அவர்கள் இருந்தாலும் ஒன்றுதான். இல்லாவிட்டாலும் ஒன்றுதான்.

ஆத்மிகாவைத் தான் அன்று கையில் பிடிக்க முடியவில்லை. ஆன்ட்டி ஆன்ட்டியென்று ராதாவை ஒரு வழி பண்ணி விட்டாள். ஆயிரம் கதைகள் இருந்தது அவளுக்கு ஆன்ட்டியிடம் சொல்ல.

பெண்கள் இருவரும் தங்கள் ரூமில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அம்மாவின் ரூமிற்கு வந்தான் அபி.

சுஜாதா கொஞ்சம் கட்டிலில் சாய்ந்த படி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அபியைக் காணவும் எழுந்து உட்கார்ந்தார். அத்தனை சீக்கிரத்தில் அப்படி வருபவனல்ல அவன்.

“வா அபி.”

“தூங்குறீங்களாம்மா?”

“இல்லைப்பா சும்மாதான். நீ சொல்லு.”

“சென்னைல ஷாப்பிங் போயிருந்த போது ஆத்மியோட அம்மா ராதாவைப் பார்த்துப் பேசியிருக்கா.”

“என்னப்பா சொல்ற?” அபி சாதாரணமாகத் தகவல் தான் சொன்னான். ஆனால் சுஜாதா ஆடிப் போய் விட்டார்.

“எதுக்கும்மா அதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க? உங்களுக்கும் இது தெரிஞ்சிருக்கணும் எங்கிறதுக்காகத் தான் நான் இதைச் சொன்னேன். வருத்தப்படுத்த இல்லை.”

“அபி! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் ஆண்டவனுக்கு நன்றி சொன்னேன். எம் புள்ளை முகத்திலயும் அந்தப் பிஞ்சோட முகத்திலயும் இப்போதான் சந்தோஷத்தைப் பார்க்கிறேன்னு நினைச்சேன். அதுக்குள்ள அந்தப் பொண்ணுக்கு மூக்கு வேர்த்திடுச்சா?”

“ம்… விட்டுத் தள்ளுங்கம்மா. நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்.”

“நீ ஏன்பா ராதாவைத் தனியே விட்ட? நீ கூட இருந்திருந்தா அந்தப் பொண்ணுக்கு அவ்வளவு தைரியம் வந்திருக்காது.”

“இந்தளவுக்கு இறங்குவான்னு நான் எதிர்பார்க்கலை ம்மா. ராதா எப்போ தனியா மாட்டுவான்னு பார்த்திருந்து காய் நகர்த்தி இருக்கா. அப்போ நம்ம மேல இன்னும் ஒரு கண்ணு வெச்சுக்கிட்டுத் தான் இருக்கா.”

“அவளாத்தானே டைவர்ஸ் கேட்டா. அதுக்கப்புறம் இன்னொரு கல்யாணமும் பண்ணிக்கிட்டா. இன்னும் என்னப்பா வேணுமாம் அவளுக்கு?”

“ஆத்மிகா வேணுமாம்.”

“என்ன? ஆத்மிகாவா? எதுக்கு?”

“யாருக்குத் தெரியும். நீ என்னோட குழந்தையை நல்லாப் பார்த்துக்க மாட்டேன்னு ராதாக்கிட்ட சொன்னாளாம்.”

“ஆண்டவா! இது அந்த ஆண்டவனுக்கே பொறுக்காதே. ராதா வந்ததுக்கு அப்புறம் தானே ஆத்மிகா அத்தனை சந்தோஷமா இருக்கா.”

“அந்தம்மாவோட பிரச்சினை இப்போ அது இல்லைம்மா. அதை நான் டீல் பண்ணிக்கிறேன். நீங்க கவலைப்படாதீங்க. உங்களுக்கு நடக்கிறது என்னன்னு தெரியணும் இல்லையா, அதனால தான் சொன்னேன்.”

“அபி! அந்தப் பொண்ணு இதோட விடும்னு எனக்குத் தோணலைப்பா.”

“விடமாட்டா.‌ அதே நேரம் நானும் இதைச் சும்மா விடமாட்டேன். நல்லா இருந்தா மட்டும் தான் அபியும் நல்லவன். மோதிப் பார்க்கத்தான் போறாங்கன்னா நானும் ரெடிம்மா.”

“பார்த்துப்பா. சின்னக் குழந்தை. பெரியவங்க போடுற சண்டையில அதோட மனசு பாதிக்கப்பட்டுறக் கூடாது. ராதா என்ன சொன்னா?”

“ஓ ன்னு அழுகை. சமாதானம் பண்ணுறதுக்குள்ள எனக்குப் போதும் போதும்னு ஆகிடுச்சு.” அபியின் முகத்தில் இப்போது லேசான புன்னகை அரும்பியது.

தன் மகனின் முகத்தில் தோன்றிய அந்த நிறைவான புன்னகையில் அந்த அன்னையின் மனம் கனிந்து போனது. அந்த முகத்தை வாஞ்சையோடு தடவிக் கொடுத்தவர்,

“ராதா வீட்டுல எல்லாரும் உன்னோட நல்லா நடந்துக்கிட்டாங்களா அபி?” என்றார்.

“ம்… அவங்க எல்லாருமே ரொம்ப நல்லவங்க ம்மா.”

“பின்னே! ராதாவைப் பார்த்தாலே தெரியலையா? அவளைச் சார்ந்தவங்க எப்படி இருப்பாங்கன்னு. ராதா மனசுல எந்தக் குறையும் வந்திரக்கூடாது அபி. நம்மளை நம்பித்தான் அவங்க பொண்ணு குடுத்திருக்காங்க. ஆர்ப்பாட்டமா கல்யாணம் பண்ணுறது பெரிய விஷயமில்லை. அந்தப் பொண்ணை சந்தோஷமா வெச்சுக்கிறதுல தான் எல்லாமே இருக்கு.” அம்மாவின் கவலையில் அபி புன்னகைத்தான்.

“சரிம்மா, நீங்க ரெஸ்ட் எடுங்க.” சொல்லிவிட்டு தங்கள் ரூமை நோக்கிப் போனான் அபி. ஆத்மிகாவின் ஆர்ப்பாட்டம் இங்கேயே கேட்டது அவனுக்கு.

*  *  *  *

இரவு நன்றாக ஏறியிருந்தது. இரண்டு நாட்கள் பிரிவின் ஏக்கத்தைக் கொஞ்சம் தணித்துக் கொண்டு, ஆத்மிகா அப்போதுதான் கண்ணயர்ந்திருந்தாள்.

அபி பால்கனியில் உட்கார்ந்து கொண்டு ஏதோ பேப்பர்களைப் புரட்டிக் கொண்டிருந்தான். சின்னவளுக்கு அணைவாகத் தலையணை ஒன்றை வைத்து விட்டு ராதாவும் வெளியே வந்தாள்.

ராதாவின் வரவைக் கூட அபி உணரவில்லை. நல்லவேளையாக அதை ராதா கவனிக்கவில்லை. மனம் மிகவும் சந்தோஷத்தில் மிதந்ததால் சுற்றுப்புறத்தை ரசித்துக் கொண்டிருந்தாள்.

அமைதியான இரவு. அருகே காதல்க் கணவன். மனது பொங்கி வழிய அவன் அருகில் அமர்ந்து தோளில் தலை சாய்த்துக் கொண்டாள்.

அப்போதுதான் சட்டென்று நிஜத்துக்கு வந்த அபி கையிலிருந்த காகிதங்களை அப்பால் வைத்தான். இதுவரை இப்படியொரு இணக்கத்தை ராதா காண்பித்ததில்லை. மனதிலிருந்த சஞ்சலத்தைத் தள்ளி வைத்தவன் தன் தோள் சாய்ந்திருந்த மனைவியின் தலையில் முத்தம் வைத்தான்.

“பேபி தூங்கிட்டாளா ராதா?”

“ம்…”

“அத்தைக்கு ஃபோன் பண்ணினயா?”

“ம்…” வார்த்தைகள் அதிகம் வரவில்லை.

“என்ன சொன்னாங்க?”

“ரொம்ப சந்தோஷமா இருக்காங்களாம். அவங்க மாப்பிள்ளை அவங்க பொண்ணை ரொம்ப நல்லாவே பார்த்துக்கிறாராம்.” குரல் குழைந்திருந்தது.

“அப்படியா சொன்னாங்க?”

“ம்… போதாக்குறைக்கு மீரா. பத்து நிமிஷம் பேசினா. அதுல எட்டு நிமிஷம் அத்தான் புகழ்தான் பாடினா.” லேசாகச் சலித்துக் கொண்ட குரலில் அளவிலடங்காக் காதலைத் தான் உணர்ந்தான் அபி.

“மீரா புகழ்ந்தா சரி. அவங்க அக்கா என்ன சொல்லுறாங்க? மீராவோட அத்தான் பத்தி அவங்க அபிப்பிராயம் என்னவாம் ராதா?” கணவனின் கேள்வியில் இன்னும் முகத்தை அவன் கழுத்து வளைவில் புதைத்துக் கொண்டாள் ராதா.

காதலித்திருந்தாலும் இப்படியெல்லாம் அவள் அபியிடம் மனந்திறந்து பேசியதில்லை. ‘சிட்டியில வளர்ந்த பொண்ணாம்மா நீ?’ இப்படித்தான் அடிக்கடி அவளைக் கலாய்ப்பான் அபி.

“என்ன? சத்தத்தையே காணோம்?” அபி மீண்டும் சீண்டவும் மெதுவாக வாய்திறந்தாள் பெண்.

“மீராவோட அத்தான் ரொம்ம்ம்ப நல்லவங்க.” அந்த ‘ரொம்ப’ இல் அதிகமாக அழுத்தம் கொடுத்தாள்.

“ம்…”

“பார்க்கத்தான் கரடுமுரடு. ஆனா மீரா அக்கா மேல ரொம்பப் பாசம் அவங்களுக்கு.”

“இங்கப்பார்ரா! பாசம் மட்டும் தானாமா?”

“தெரியலையே. அதை மீராவோட அத்தான் தான் சொல்லணும்.”

“மீராவோட அக்காக்கிட்டச் சொல்லு ராதா. அவங்க அத்தானுக்கு மீரா அக்கா மேல பாசம் மட்டும் இல்லை. காதல், அன்பு, பரிவு, அக்கறை எக்ஸட்ரா எக்ஸட்ரா எல்லாமே இருக்குன்னு சொல்லு ராதா.” சொல்லி முடித்தவன் மனைவியை இழுத்து அணைத்துக் கொண்டான்.

அபியின் பக்கத்தில் இருந்த கட்டுத் தபாலில் ஒன்று மட்டும் அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தது. அதைச் சற்றுத் தள்ளி வைத்தவன் மனைவியைக் கவனிக்கத் தொடங்கினான்.

இவ்வளவு நேரமும் மனதில் இருந்த பாரத்தை இப்போது அவனால் ஒதுக்க முடிந்தது. மனைவியின் மனது இன்று சந்தோஷத்தில் மூழ்கி இருப்பதைப் புரிந்து கொண்டவன் பிரச்சினைகளைத் தற்காலிகமாக ஆறப்போட்டான்.

தானாக நெருங்கிய பெண்மையில் அதன் மென்மையில் திளைத்தவன் அதன் பிறகு வேறாகிப் போனான்.

 

சைவ முத்தம் கொடுத்தா

ஒத்துப்போக மாட்டேன்…

சாகசத்தைக் காட்டு

செத்துப்போக மாட்டேன்…

கொஞ்ச நேரம் என்னைக் கொல்லய்யா…

ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே 11

எஸ்டேட்டில் இருந்தான் அபி. ரிவோல்விங் சேரில் இங்கும் அங்கும் லேசாக அசைந்த படி இருக்க அவன் முன்னால் அந்தப் பழுப்பு நிறக் கவர் ஜம்மென்று வீற்றிருந்தது.

கோர்ட்டில் இருந்து வந்த சம்மன் அது. ஸ்வராவின் குடும்ப வக்கீல் அவள் சார்பாக கோர்ட்டின் உதவியை நாடியிருக்க இவனுக்குச் சம்மன் அனுப்பப் பட்டிருந்தது.

நேற்றிரவு தபால்களை ஆராயும் போது இதைக் காணவும் அபிக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. பக்கத்தில் வந்தமர்ந்த மனைவியையும் கவனிக்காமல் அந்தக் கவரையே பார்த்திருந்தான்.

ராதாவிடம் அதைக் காண்பிக்க நினைத்துத் தான் வாயைத் திறக்கப் போனான். ஆனால் அதற்குள் தன் தோள் சாய்ந்த மனைவியின் மனநிலையில் அனைத்தையும் மறைத்து விட்டான். அவனும் மறந்து விட்டான்.

அம்மாவிடமும் இதைப் பகிர்ந்து கொள்ள அவனால் முடியவில்லை. ஸ்வராவின் பெயரைச் சொன்னாலே சுஜாதா கலங்கி விடுகிறார்.

கொஞ்ச நேரம் நிதானமாக இருந்த பிறகு ஸ்வராவின் அப்பாவைத் தொடர்பு கொண்டான் அபி. இவன் எண்ணைப் பார்க்கவும் சட்டென்று லைனுக்கு வந்தார் மனிதர்.

“அங்கிள்! நான் அபி பேசுறேன்.”

“சொல்லுங்க அபி.” எந்தச் சங்கடங்களும் இல்லாமலேயே பேச்சுத் தொடர்ந்தது.

“கோர்ட் சம்மன் ஒன்னு வந்திருக்கு எனக்கு.”

“ஓ…” அந்த இழுவையே சொன்னது, இவருக்குத் தெரிந்துதான் எல்லாம் நடந்திருக்கிறது என்று.

“இதுக்கு என்ன அர்த்தம் அங்கிள்?”

“அபி! ஸ்வரா பண்ணுறது சரியா தப்பான்னு எனக்குத் தெரியாது. ஆனா, அவ சொல்லுறது நியாயம் தானே?”

“இதுல என்ன நியாயத்தை அங்கிள் நீங்க கண்டுட்டீங்க? இவ்வளவு நாளும் எம்பொண்ணை நான் பார்த்துக்கலியா? அதே மாதிரி இனிமேலும் பார்த்துக்கப் போறேன்.”

“அது சரிதான் அபி. இருந்தாலும் இதுவரை நீங்க தனியா இருந்தீங்க. என்னோட பேத்தியைப் பார்த்துக்கிட்டீங்க. ஆனா இப்போ நிலைமை அப்படி இல்லையே? உங்களுக்குன்னு ஒரு பொண்ணு வந்திருக்கா. நாளைக்கு உங்களுக்குக் குழந்தைகள் பொறக்கும். அப்போவும் இதே மாதிரி நீங்க ஆத்மியைப் பார்த்துக்குவீங்கன்னு என்ன நிச்சயம்?”

“எனக்காக மட்டும் நடந்த கல்யாணம் இல்லை அங்கிள் இது. அது தான் என்னோட நோக்கம்னா இத்தனை நாள் நான் காத்துக்கிட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது பேபிக்காவும் நடந்த திருமணம்.‌ அதை நீங்க புரிஞ்சுக்கணும்.”

“எனக்குப் புரியுது அபி. அதை நீங்க ப்ரூஃப் பண்ணுங்க.”

“எதையும் யாருக்கும் ப்ரூஃப் பண்ண வேண்டிய அவசியம் எனக்கில்லை அங்கிள்.”

“அப்படிச் சொல்லாதீங்க அபி. ஆத்மி மேல உங்களுக்கிருக்கிற உரிமை எம் பொண்ணுக்கும் இருக்கு இல்லையா?”

“அந்த உரிமை இத்தனை நாள் எங்க போச்சு அங்கிள்? புதுசா பாசமெல்லாம் பொங்குது.”

“அது அப்படி இல்லை அபி. நீங்க பிரிஞ்சதுக்கப்புறம் எம் பொண்ணுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணுறதுல நான் ரொம்பவே உறுதியா இருந்தேன். அதனால ஆத்மிகாவை நீங்க கேட்டப்போ எனக்கு அது தப்புன்னு தோணலை. ஆனா இப்போ நிலைமை அப்படியில்லையே. அதனால உங்க தரப்பு நியாயத்தை நீங்க ப்ரூஃப் பண்ணத்தான் வேணும். ஒரு எல்லைக்கு மேலே என்னாலயும் எல்லாரையும் கன்ட்ரோல் பண்ண முடியாது அபி. அதை நீங்களும் புரிஞ்சுக்கணும்.”

அதற்கு மேல் அபி பேசவில்லை. மகளின் வாழ்க்கையில் சின்னச் சின்னப் பிரச்சனைகள் வந்த போது, ‘இது எல்லோர் வாழ்க்கையிலும் வருவது தான். விட்டுக் கொடுத்து வாழப் பழகு. உன் கணவனையும் உன் வழிக்குக் கொண்டு வா.’ என்று சொல்லிக் கொடுக்காமல்,

‘பிடிக்கலைன்னா விடு ஸ்வரா. எதுக்கு உன்னையே நீ சிரமப் படுத்திக்கணும். ஒத்து வரலைன்னா விட்டுட்டு அடுத்தது என்னன்னு பாரு.’ இப்படிச் சொன்ன அப்பனிடம் என்ன பேசுவது?

கொஞ்ச நேரம் அமைதியாக உட்கார்ந்தருந்தான் அபி. சூழ்நிலையைக் கையாள்வது சற்று சிரமமாக இருந்தது. ஸ்வராவை எதிர்ப்பதில் அவனுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால் ராதாவை எப்படிச் சமாளிப்பது?

ஆத்மிகா மேல் உயிரையே வைத்திருக்கும் அந்தப் பெண்ணிடம் இதை எப்படிச் சொல்வது? ஸ்வரா வாய் வார்த்தையாக அன்று இதைப் பற்றிப் பேசியதற்கே அத்தனை வேதனைப்பட்டாள். இப்போது கோட் கேஸ் என்றால் தாங்கிக் கொள்வாளா?

மனதின் குழப்பங்களை ஒதுக்கி வைத்துவிட்டு நிகழ் காலத்துக்கு வந்தவன் ராதாவின் நம்பருக்கு அழைத்தான்.

“ஹலோ.”

“ராதா.”

“சொல்லுங்க.”

“கொஞ்சம் எஸ்டேட் வரைக்கும் வர்றியா?”

“என்னாச்சுங்க? ஏன் வாய்ஸ் ஒரு மாதிரியா இருக்கு? ஏதாவது ப்ராப்ளமா?”

“ப்ராப்ளம் எல்லாம் இல்லை டா. நீ கிளம்பி வா நான் சொல்லுறேன்.”

“சரிங்க. ஒரு பத்து நிமிஷத்துல வந்தர்றேன்.”

“ஸ்கூட்டி வேணாம். ட்ரைவரோட வா.”

“ம்… சரி.”

ஃபோனை வைத்து விட்டு தலையைக் கைகளால் தாங்கிக் கொண்டான் அபி. ஸ்வராவின் பிரச்சினை என்னவென்று அபிக்குப் புரியவில்லை.

ராதாவைப் பார்த்தாலே பார்ப்பவர்களுக்குப் புரிந்து போகும். அவள் எத்தனை அன்பான அக்கறையான பெண் என்று. குறை சொல்ல அவளிடம் எதுவும் இல்லை.

அப்படியிருந்தும் இப்படி ஒரு பிரச்சினையை ஸ்வரா கொண்டு வருகிறாள் என்றால், இதில் வேறேதோ காரணம் இருக்க வேண்டும்.

இத்தனை நாளும் தன் பெண்ணை நன்றாகப் பார்த்துக் கொள்கிறார்களா, இல்லையா என்று எட்டியும் பார்க்காதவள் இன்று புதிதாக என்ன நாடகம் போடுகிறாள்?

கதவு திறக்கும் ஓசை கேட்கவும் நிமிர்ந்து பார்த்தான் அபி. அவன் ஒட்டு மொத்த சந்தோஷமும் எதிரே பாட்டில் க்ரீன் காட்டன் புடவையில் நடந்து வந்து கொண்டிருந்தது.

அனைத்தையும் மறந்து மனைவியைப் பார்த்துப் புன்னகைத்தான். எத்தனை குழப்பங்கள் இருந்தாலும் அவை அனைத்தையும் அவள் அருகாமை துடைத்தெறிவதை ஒரு ஆச்சரியத்தோடு ஏற்றுக் கொண்டான் அபி.

“என்னங்க ஆச்சு?” வந்ததும் வராததுமாகக் கணவனைக் கேள்வியோடே எதிர்கொண்டாள் ராதா.

“உட்காரு டா.”

“பரவாயில்லை சொல்லுங்க.” மறுத்தவளைத் தான் உட்கார்ந்திருந்த இருக்கையில் அமர வைத்தவன் அவளருகே மேஜையில் சாய்ந்து நின்றான்.

“என்னங்க ஆச்சு?” மீண்டும் அதே கேள்வி சற்றுப் பதட்டத்தோடு வந்தது. அபி தான் சாய்ந்திருந்த மேஜையில் இருந்த அந்தப் பழுப்பு நிறக் கவரை அவளிடம் நீட்டினான்.

நெற்றி லேசாகச் சுருங்க ஒரு கேள்வியான பார்வையோடு கவரை வாங்கியவள் அதை மெதுவாகப் பிரித்தாள். மனதுக்குள் உருவமில்லாத ஏதோ ஒன்று அவளை வதைத்தது.

சற்று நேரம் அந்தக் காகிதத்தில் விழி பதித்திருந்தவள் அண்ணாந்து அபியைப் பார்த்த போது அந்தக் கண்கள் இரண்டும் குளமாகி இருந்தது.

“ராதூ…” மனைவியை அப்படியே அள்ளி எடுத்தவன் அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். ராதா வெடித்து அழவில்லை. ஆனால் அந்தக் கண்கள் மட்டும் கார்கால மேகம் ஆகிப்போனது.

“ராது… அழக்கூடாது. இப்போ எதுவும் தப்பா நடந்திடல்லை. எனக்குத் தைரியம் சொல்ல வேண்டிய நீயே இப்படி அழுதா நான் என்ன பண்ணுவேன் சொல்லு?” அந்த வார்த்தைகளில் அவனின் வலியைப் புரிந்து கொண்டவள் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

“சொல்லுங்க, என்ன பண்ணப் போறீங்க?” இப்படி ஒரு சுதாரிப்பை ராதாவிடம் அபி எதிர்பார்க்கவில்லை. கணவனுக்கு ஒரு கஷ்டம் என்றால் இந்தப் பெண்கள் எதையும் தாங்கிக் கொள்வார்களோ?

“சிம்பிள் டா. வர்றதை ஃபேஸ் பண்ணுவோம். யாராலயும் என் குழந்தையோட மனசு கஷ்டப் பட்டிரக் கூடாது. அவளுக்கு யாரோட இருக்கிறது சௌகர்யமாப் படுதோ அங்க இருக்கட்டும். என்ன? ஒரு சின்ன வருத்தம் தான். இத்தனை நாளும் என் குழந்தையைக் கண்டுக்காம பிஸினஸ் பிஸினஸ்னு அலைஞ்சேன். அப்போல்லாம் இப்படிப் போர்க்கொடி தூக்கி இருந்தா மனசு ஆறிப்போயிருக்கும். ஆனா இப்போ… குடும்பம், பொண்டாட்டி, பொண்ணு ன்னு அக்கறையா வாழ ஆரம்பிக்கும் போது இப்படிப் பண்ணுறாங்க. அதுதான் ஜீரணிக்க முடியலை.”

கணவனின் கவலைக் குரல் ராதாவைக் கலங்க வைக்க அவன் முகத்தை மென்மையாக வருடிக் கொடுத்தாள்.

“வருத்தப் படாதீங்க. எதுவும் தப்பா நடக்காது. ஆத்மிக்குட்டி நம்மை விட்டு எங்கேயும் போக மாட்டா.” அந்தக் குரலின் உறுதியில் அபாஜிதனுக்கும் கொஞ்சம் பலம் வந்தது.

மனைவியை எப்படி சமாதானப் படுத்த என்று அபி கலங்கியது போக, இப்போது மனைவி அபியைச் சமாதானப் படுத்திக் கொண்டு இருந்தாள்.

* * * * * * * * * *

ஃபாமிலி கோர்ட்.

குழந்தை சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் சாதாரணமான ஒரு அறையிலேயே அனைவரும் கூடி இருந்தார்கள். நீதிபதியாக ஒரு பெண்ணே நியமிக்கப் பட்டிருந்தார். வயது ஐம்பதையும் தாண்டி இருந்தது.

இருபக்க வழக்கறிஞர்கள், அபி தரப்பில் அபி, ராதா, ஆத்மிகா. ஸ்வரா தரப்பில் ஸ்வரா, ஸ்வராவின் அம்மா இவ்வளவு பேர்தான் அங்கு கூடி இருந்தார்கள்.

வழக்கு என்றவொரு எண்ணப்போக்கு குழந்தையின் மனதை வெகுவாகப் பாதிக்கும் என்பதால் மிகவும் யதார்த்தமாக வழக்கை விசாரித்தார் நீதிபதி.

“உங்க பேரு என்ன?” குழந்தையை அருகே அழைத்துக் கொண்டவர் புன்னகை முகமாகச் சின்னவளிடம் கேட்டார். முதலில் தனக்கு அறிமுகமில்லாத அந்தப் பெண்ணிடம் போக மறுத்த குழந்தை ராதாவின் தூண்டுதலில் அவரிடம் பேச ஆரம்பித்தது.

“ஆத்மிகா.”

“ஓ… வெரி நைஸ் நேம்.”

“தான்க் யூ ஆன்ட்டி.”

“ஆத்மிகா ஸ்கூல் போறீங்களா?”

“ம்…” தலையை மேலும் கீழுமாக ஆட்டியது குழந்தை.

“ஸ்கூல்ல நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்களா உங்களுக்கு?”

“இருக்காங்க ஆன்ட்டி.”

“யாரை உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்?”

“ராஜி யை.”

“ஓ… வீட்டுல யாரைப் பிடிக்கும் ஆத்மிகாக்கு?”

“ஆன்ட்டியை.”

“ஆன்ட்டியா? அது யாரு?” இந்தக் கேள்வியில் ஸ்வராவின் முகத்தில் லேசான ஏளனப் புன்னகை ஒன்று தோன்றியது. ராதா சங்கடமாகத் தலையைக் குனிந்து கொண்டாள்.

“அது தான் ஆன்ட்டி.” அபிக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த ராதாவைக் கை காட்டியது குழந்தை.

“அது ஆன்ட்டி இல்லையே? அவங்க உங்க மம்மி தானே?” லேசாக அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தார் நீதிபதி.

“அது மம்மி இல்லை ஆன்ட்டி. மம்மி அங்க இருக்காங்க.” இப்போது குழந்தை வேறு புறமாகக் கை காட்டியது. அந்தப் பிஞ்சுக் கையைத் தொடர்ந்த ராதாவின் பார்வை நிலைகுத்தி நின்றது.

குழந்தை கைகாட்டியது வேறு யாரையுமல்ல. ஸ்வராவைத் தான். அபியே கொஞ்ச நேரம் ஆடிப் போய் விட்டான். அப்படியென்றால் ராதாவின் நிலையைக் கேட்கவும் வேண்டுமா? பிரமை பிடித்துப் போய் அமர்ந்திருந்தாள்.

 

ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே 12

ஆத்மிகாவின் பதிலில் ராதா பொது இடம் என்றும் பாராமல் அபியின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். அபிக்கும் ஆச்சரியம் தாங்க முடியவில்லை என்றாலும் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. அமைதியாகவே இருந்தான்.

“ஓ… அப்போ அவங்க தான் உங்க மம்மியா?” நீதிபதியின் கேள்வி தொடர்ந்தது.

“ஆமா.” இது ஆத்மிகா.

“அப்போ ஏன் மம்மிக்கிட்ட இருக்காம ஆத்மிகா ஆன்ட்டிக்கிட்ட இருக்கீங்க?” வாழைப்பழத்தில் லேசாக ஊசியை ஏற்றினார் ஜட்ஜ் அம்மா. இருந்தாலும் இதற்குப் பதில் சொல்லக் குழந்தைக்குத் தெரியவில்லை. மலங்க மலங்க விழித்தது.

“ஏன்? உங்களுக்கு மம்மியைப் பிடிக்காதா?”

“பிடிக்கும்.”

“அப்போ மம்மியோட போய் இருக்கீங்களா?” இதை அந்த அம்மா கேட்ட போது ஆத்மிகா சட்டென்று ராதாவைத் திரும்பிப் பார்த்தாள். தலையைக் குனிந்து கொண்டாள் பெரியவள்.

குழந்தைக்கு இந்தக் கேள்விகள் எதற்கும் பதில் சொல்லத் தெரியவில்லை. அமைதியாகவே இருந்தது. ஆனாலும் நீதி தன் கடமையைச் செவ்வனே செய்தது.

“மம்மியை உங்களுக்கு நிறைய பிடிக்குமா?”

“ம்…”

“ஏன் பிடிக்கும்?”

“மம்மி கூட ஒரு க்யூட் பேபி வரும்.”

“ஓ… அதால உங்களுக்கு மம்மியைப் பிடிக்குமா?”

“யெஸ்.” குழந்தையின் முகத்தில் இப்போது ஒரு மலர்ச்சி தெரிந்தது.

ஸ்வரா தன் ஒரு வயதுக் குழந்தையை ஆத்மிகாவைப் பார்க்க வரும் போது அழைத்து வந்திருந்தாள். அதுவரை தன்னை நெருங்கவே விரும்பாத மகள், குழந்தையைப் பார்த்த மாத்திரத்தில் இறங்கி வரவும் அதையே துருப்புச் சீட்டாகப் பற்றிக் கொண்டாள்.

“சரி, உங்க ஆன்ட்டி பெயரை எனக்குச் சொல்லலையே நீங்க?”

“ராதா ஆன்ட்டி.” குழந்தையின் முகத்தில் வெட்கப் புன்முறுவல் ஒன்று இப்போது தோன்றியது.

“அப்படியா! ராதா ஆன்ட்டியை உங்களுக்கு ரொம்பப் பிடிக்குமா?”

“ஆமா.”

“ஏன் பிடிக்கும்?”

“என்னை ‘ஹக்’ பண்ணுவாங்க. எனக்கு ‘கிஸ்’ குடுப்பாங்க.” குழந்தை பட்டியல் போட்டது.

“ஸோ ஸ்வீட். வேற என்ன பண்ணுவாங்க?”

“நைட்ல ஸ்டோரி ரீட் பண்ணுவாங்க, கேம்ஸ் விளையாடுவாங்க.”

“அதுசரி, ராதா ஆன்ட்டி எதுக்கு உங்க வீட்டுல இருக்காங்க? அவங்க உங்க ஸ்கூல் மிஸ் தானே?”

“ஆமா ஆன்ட்டி. எனக்கும் முதல்ல ராதா ஆன்ட்டியை ஸ்கூல்ல க்ளாஸ் மிஸ்ஸாப் பார்த்தப்போ பிடிக்கலை. ஆனா ஆன்ட்டி ஸோ ஸ்வீட். எங்கிட்ட நிறையப் பேசுவாங்க. ஈவ்னிங் வீட்டுக்கு வந்து எங்கூட விளையாடுவாங்க.”

“அப்போ அப்பா வீட்டுல இருப்பாங்களா?” கேள்வி மிகவும் லாவகமாக வந்தது.

“ம்ஹூம், அப்பா எஸ்டேட் போயிடுவாங்க.”

“அது யாரு சொன்னா உங்களுக்கு?”

“பாட்டி.”

“நீங்க அப்பாவைத் தேடினீங்களா?”

“ஆமா. பாட்டியை கிரிக்கெட் விளையாடக் கூப்பிட்டேன். எனக்கு அதெல்லாம் விளையாடத் தெரியாது. அப்பாவோடு விளையாடு ன்னு சொன்னாங்க.”

“அப்புறம்?”

“அப்பா எங்கேன்னு கேட்டேன்.”

“அப்போ தான் அப்பா எஸ்டேட்ல இருக்காங்கன்னு சொன்னாங்களா?”

“ஆமா.”

“அதுக்கப்புறம் ராதா ஆன்ட்டி கூட விளையாடினீங்களா?”

“ம்… டெய்லி விளையாடுவோம். ஆனா ஒரு நாள் ஆன்ட்டி வரலை.”

“ஐயையோ! ஏன்? என்னாச்சு ஆன்ட்டிக்கு?”

“தெரிலை… பாட்டி ஃபோன் பண்ணினாங்க. ஆன்ட்டி ஆன்ஸர் பண்ணலை.” குழந்தையின் முகத்தில் சோகம் அப்பிக் கொள்ள ஜட்ஜ் ராதாவைத் திரும்பிப் பார்த்தார். தலையைக் குனிவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் அவளால்? அபிதான் லேசாகப் புன்னகைத்தவன் ராதாவைத் தோளோடு அணைத்துக் கொண்டான். பழைய கசப்புகளை விழுங்குவது போலிருந்தது அந்தச் செய்கை.

“அப்புறம் என்ன ஆச்சு?”

“நான் ரொம்ப நேரம் அழுதேன்.”

“ம்…”

“பாட்டி அப்பாக்கு ஃபோன் பண்ணினாங்க.”

“அப்பா வந்தாங்களா?”

“ம்… அப்பா வந்து, அழக்கூடாது நான் பேபியை ஆன்டிக்கிட்ட கூட்டிட்டு போறேன்னு சொன்னாங்க.”

“ஆன்ட்டியைப் பார்க்கப் போனீங்களா?”

“ஆமா. ஆன்ட்டியோட ஹாஸ்டலுக்குப் போனோம். போகும் போது அப்பா எங்கிட்ட கேட்டாங்க.”

“என்ன கேட்டாங்க?”

“எனக்கு ஆன்ட்டியை ரொம்பப் புடிக்குமான்னு கேட்டாங்க.”

“நீங்க அதுக்கு என்ன சொன்னீங்க?”

“ரொம்பப் புடிக்கும்னு சொன்னேன். அப்போ நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வந்திடலாமா ன்னு கேட்டாங்க.”

“ஹை… சூப்பர் இல்லை?”

“ஆமா ஆன்ட்டி. நானும் சூப்பர் னு தான் சொன்னேன். அப்புறம் ராதா ஆன்ட்டி வீட்டுக்கு வந்துட்டாங்க.” மலர்ந்து வாய் மொழிந்தது குழந்தை.

“அதான் ராதா ஆன்ட்டி உங்க கூடவே இருக்காங்க இல்லை? நீங்க ஏன் இன்னும் ஆன்ட்டியை ‘அம்மா’ ன்னு கூப்பிடலை?”

“அப்பாவும் பாட்டியும் சொன்னாங்க. ஆனா ராதா ஆன்ட்டி தான், பரவாயில்லை ஆத்மி குட்டிக்கு எப்படிப் புடிக்குதோ அப்படியே கூப்பிடட்டும் னு சொன்னாங்க.”

“அப்ப சரி. ஆத்மியோட ஸ்கூல்ல உங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் அவங்க மம்மியோட தானே இருக்காங்க? நீங்க மட்டும் ஏன் ஆன்ட்டியோட இருக்கீங்க?”

“…………”

“உங்களுக்கு மம்மியோட போய் இருக்கணுமா?”

“…………”

“மம்மியோட போய் கொஞ்ச நாள் இருக்கீங்களா?”

“…………”

“ஆத்மிக் குட்டிக்கு என்ன தோணுது? இந்த ஆன்ட்டிக்கிட்ட நீங்க தாராளமா சொல்லலாம். மம்மிகூட போய் இருக்கப் போறீங்களா? இல்லை ராதா ஆன்ட்டிக்கிட்ட இருக்கப் போறீங்களா?”

“ராதா ஆன்ட்டி.” குழந்தையின் உதடு பிதுங்கியது.

“மம்மியும் பாவம் இல்லையா? அவங்க கூட கொஞ்ச நாள் போய் இருக்கீங்களா?”

“…………” மௌனமே பதிலாக வந்தது. இருந்தாலும் மறுக்கவில்லை.

“மம்மி கூட கொஞ்ச நாள் போயிருக்கீங்களா?” மென்மையாக இப்போது அழுத்தம் கொடுக்க, பிதுங்கிய உதடு இப்போது வெடித்து அழுதது.

அதுவரை எந்தக் குறுக்கீடும் இல்லாமல் அங்கிருந்த அனைவரும் இந்தச் சம்பாஷனையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.‌

குழந்தை அழ ஆரம்பிக்கவும் பொறுக்க முடியாமல் ராதா ஓடிப் போய்ச் சின்னவளைத் தூக்கிக் கொண்டாள். ஜட்ஜ் எதுவும் பேசவில்லை. நடக்கும் நாடகத்தை அமைதியாகப் பார்த்திருந்தார்.

ஸ்வராவின் முகத்தில் இப்போது ஒரு அலட்சியப் புன்னகை தான் தோன்றியது. குழந்தையைச் சமாதானப் படுத்தும் ராதாவை ஏளனமாகப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

ராதா குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டு சமாதானம் பண்ண, அன்றைக்குப் போல இன்றைக்கும் அவளால் குழந்தையின் கனத்தைச் சமாளிக்க முடியவில்லை.

சட்டென்று அபி எழுந்து போய் ராதாவிடமிருந்து ஆத்மிகாவை வாங்கப் போக, அதை மறுத்து ஆன்ட்டியைக் இறுகக் கட்டிக் கொண்டது குழந்தை. ஆனால் அழுகை மட்டும் நிற்கவில்லை.

மதிய வேளை நெருங்கியதால் உணவுக்காக ஒரு சின்ன இடைவேளை கொடுத்து விட்டு ஜட்ஜ் வெளியேறி விட்டார். குழந்தையை ராதா வைத்திருக்க அவளைத் தோளோடு அணைத்தபடி நின்றிருந்த அபியை வெறித்துப் பார்த்தது ஸ்வராவின் கண்கள். தான் தவறிய புள்ளி எதுவென்று தெள்ளத்தெளிவாகப் புரிந்தது ஸ்வராவிற்கு.

விவாகரத்து ஆன கையோடு மனோஜை நிச்சயித்து விட்டார் தந்தை. ஸ்வராவிற்கும் எந்த ஆட்சேபனையும் இருக்கவில்லை. மனோஜ் குடும்பத்தினரின் பழக்கவழக்கங்கள் தங்களோடு ஒத்துப் போனதால் எல்லாம் இலகுவாக நடந்து முடிந்தது.

புதிய வாழ்க்கை தான் எதிர்பார்த்த அனைத்து வசந்தங்களையும் அள்ளித் தந்ததால் பழைய வாழ்க்கையையோ அதனால் வந்த சொந்தத்தையோ ஸ்வரா நினைக்கவில்லை. அதனால் ஆத்மிகா மீது பாசம் இல்லையென்று சொல்லிவிட முடியாது. அந்தப் பணக்கார வர்க்கத்திற்கு அதைக் காட்டத் தெரியவில்லை. அதற்காகப் பண்ணும் தியாகங்களின் சுகம் புரியவில்லை.

‘குழந்தை நன்றாக இருக்கிறது.’ இந்தத் தகவல் மட்டும் அந்தத் தாய்க்குப் போதுமானதாக இருந்தது. அதைத் தாண்டி யோசிக்க அவளுக்கு நேரம் இருக்கவில்லை.

காலம் இப்படியே உருண்டோடியது. ஆனால், அபியின் மறுமணம் அத்தனை கோலாகலமாக நடைபெற்ற செய்தி அவள் காதுகளை எட்டிய போது ஸ்வராவிற்கு ஏதோ பண்ணியது.

அவளைப் பொறுத்த வரை அபராஜிதன் என்ற மனிதன் பணம் படைத்த முட்டாள். வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியாத ஜென்மம். தன்னைத் தவிர இனி யாரையும் அவன் திரும்பியும் பார்க்கப் போவதில்லை என்ற இறுமாப்புடன் இருந்த மனதிற்கு அபியின் மறுமணம் பெருத்த அடியாக விழுந்தது.

அதுவும் சிம்பிளாக முடிந்திருந்தால் இத்தனை தூரம் ஸ்வரா இறங்கியிருக்க மாட்டாள். ஊரே திரும்பிப் பார்க்கும் வண்ணம் நடைபெற்ற அந்தத் திருமணத்தை ஸ்வரா அடியோடு வெறுத்தாள். அம்மா எத்தனை தூரம் அறிவுரை சொன்ன போதும் அவள் கண்களில் ஒன்று அவர்கள் மேல் பதிந்து போனது.

காலம் வரும் வரை காத்திருந்தாள் ஸ்வரா. அபியுடனான அந்தக் கொஞ்ச கால வாழ்க்கையில் அவன் கண்கள் இத்தனை காதலாக அவளைப் பார்த்தில்லை.

அதே கண்கள் இப்போது அந்தச் சாமானியப் பெண்ணின் மேல் காதலைக் கொட்டியபோது ஸ்வராவின் அழகு, அந்தஸ்து, பணம் என அனைத்தும் பயங்கரமாகத் தோற்றுப் போனது. அந்தத் தோல்வியை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒருவேளை மனோஜிடம் இந்தக் காதலைக் கண்டிருந்தால் இத்தனை தூரம் இறங்கியிருக்க மாட்டளோ.

இவள் நீட்டிய கரத்தை அபியின் தம்பி மனைவி கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். அபியின் ஆதாரம் அந்த ராதா. ராதாவின் ஆதாரம் ஆத்மிகா. இலகுவாகக் காய் நகர்த்தினாள் பெண்.

புதுமணத் தம்பதிகள் விருந்து, விழாக்கள் என்று கொஞ்சம் பிஸியாக இருந்ததால், ஆத்மிகாவை ஸ்கூலுக்கு அழைத்துச் சென்று, மீண்டும் அழைத்து வரும் பொறுப்பு கொஞ்ச நாட்களுக்கு அபியின் தம்பி மனைவிக்கு சுஜாதாவால் வழங்கப் பட்டிருந்தது.

இது ஒன்றே ஸ்வராவிற்குப் போதுமானதாக இருந்தது. ஈஸியாக ஆத்மியை நெருங்கி விட்டாள். முதலில் தயங்கிய குழந்தையும் இயற்கையின் நியதிக்குப் பணிந்தாற் போல தன் வேரை உணர்ந்து கொண்டது. லேசாக நெருங்கியது.

வாய்ப்பைத் தவற விடாமல் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விட்டாள் ஸ்வரா.

லன்ச் இடைவேளை முடிந்திருக்க மீண்டும் அனைவரும் அந்த அறையில் கூடி இருந்தார்கள். நீதிபதி பேச ஆரம்பித்தார்.

“மிஸ்டர் அபராஜிதன் தரப்பில் ஆஜரான வக்கீல் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?”

“நோ யுவர் ஆனர்.”

“மிஸஸ் ஸ்வரா தரப்பில் ஆஜரான வக்கீல் ஏதாவது சொல்ல விரும்புறீங்களா?”

“யெஸ் யுவர் ஆனர்.”

“யூ மே ப்ரொஸீட்.”

“இது வரை காலமும் மிஸ்டர் அபி எனது கட்சிக் காரருக்கும் உரிமையுள்ள குழந்தையை அவர் வசமே வைத்திருந்தார். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. அவர் இன்னொரு திருமணம் பண்ணிக் கொண்டதால் குழந்தை இனிமேல் அதன் அம்மாவிடம் இருப்பதுதான் சிறந்தது என்று குழந்தையின் தாயான எனது கட்சிக்காரர் நினைக்கிறார். அதை கனம் கோட்டார் அவர்களிடம் நான் பதிவு பண்ண விரும்புகிறேன். தட்ஸ் ஆல் யுவர் ஆனர்.”

அந்த இடம் மீண்டும் அமைதியாகிப் போனது. தீர்ப்பிற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்ததால் எல்லோரும் ஒரு விதப் பதட்டத்தோடே அமர்ந்திருந்தார்கள். ராதா அபியைத் திரும்பிப் பார்த்தாள். கண்களை ஒரு தரம் அழுந்த மூடி அவளை வளைத்திருந்த தோளை லேசாக அழுத்திக் கொடுத்தான்.

“வழக்கு ஆறு வயதுக் குழந்தை சம்மந்தப்பட்டது என்பதாலும் அந்தக் குழந்தையே இங்கு பிரதானம் என்பதாலும் வழக்கை மிகவும் சாதாரண முறையில் நடத்தத் திட்டமிட்டிருந்தேன். இதில் விசித்திரம் என்னவென்றால் பாடப் புத்தகத்தில் என்றோ நான் படித்த கதை நிஜத்தில் இன்று இங்கு அரங்கேறி இருக்கிறது.” சற்றே இடைவெளி கொடுத்த ஜட்ஜ் ஒரு புன்னகையோடு மீண்டும் ஆரம்பித்தார்.

“இரண்டு தாய்மார்கள். ஒரு குழந்தை. வினோதம் தான். பெற்றவளா? இல்லை வளர்த்தவளா? அதிலும்… இங்கு வளர்த்தவள் என்று சொல்லுவதும் அத்தனை தூரம் பொருந்தாது. ஒரு சில மாதங்களே குழந்தைக்கு அறிமுகமாகி, இப்போது அப்பாவிற்கு மனைவியாக ஆகியிருக்கும் பெண்.”

“எது எப்படியாகி இருந்தாலும் குழந்தையே இங்கு பிரதானம் என்பதால் அதன் வளர்ச்சி, மனநிலை, சந்தோஷம் இவற்றைப் பிரதானமாகக் கொண்டு குழந்தை யாருடன் இருக்கப் பிரியப்படுகிறதோ அவர்களிடமே இருக்க இந்தக் கோர்ட் உத்தரவிடுகிறது.”

“குழந்தையின் விருப்பம் ராதா என்பதால் இனியும் குழந்தை மிஸ்டர் அபராஜிதன் வசமே இருக்க இந்த நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது.”

“இருந்தாலும், அன்பையும் பாசத்தையும் வெளிக் காட்டத் தெரியாத காரணத்தினாலேயே ஒரு தாயின் அன்பைப் புறக்கணிக்க இந்த நீதிமன்றம் விரும்பவில்லை. மிஸஸ் ஸ்வரா அவர்கள் விருப்பப்படும் போது, குழந்தையும் சம்மதிக்கும் பட்சத்தில் அவர்களின் நல்லுறவைப் பேணுவதற்கு உதவிக் கரம் நீட்ட வேண்டும் என்று மிஸ்டர் அன்ட் மிஸஸ் அபராஜிதனை இந்த நீதிமன்றம் வேண்டிக் கொள்கிறது.”

அத்தோடு அந்த வழக்கை முடித்துக் கொண்டு ஜட்ஜ் எழுந்து செல்ல ராதா அபியின் தோள்களில் சாய்ந்து கொண்டாள். ஸ்வரா ராதாவை முறைத்தபடி வெளியே போக அதைப் பார்த்த ராதா அபியைத் திரும்பிப் பார்த்தாள். அபியின் கண்கள் ஆங்காரத்தோடு ஸ்வராவைத் தொடர்ந்து கொண்டிருந்தன.

“நான்… நான் அவங்க கிட்ட பேசட்டுமா?” பயந்த படியே கேட்டாள் ராதா.

“எவங்க கிட்ட?” அபியின் குரலில் வெப்பம் கூடியிருந்தது.

“இல்லை… அவங்களும் பாவம் இல்லையா? ஆத்மியை எப்போ வேணும்னாலும் வந்து…” மனைவி முடிக்கும் முன்னரே அபியின் விழிகள் அவளைக் கோபமாகப் பார்த்தன.

“காருக்குப் போகலாமா?” காட்டமாகக் கேட்டவன் ஆத்மிகாவையும் தூக்கிக் கொண்டு அங்கிருந்து போய் விட்டான். அவன் நடையில் கூட அவன் கோபம் தெறித்தது.

* * * * * * * * *

வீட்டுக்கு வந்ததும் வராததுமாக சுஜாதாவிடம் ஒரு ஆட்டம் போட்டான் அபி. வழிநெடுகிலும் ராதாவுடனும் எதுவும் பேசவில்லை. அவள் பேசிய போதும் அதற்கும் பதில் சொல்லவில்லை.

“இந்த வீட்டுல என்ன தான் நடக்குதுன்னு உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா?”

“அபி! என்னப்பா ஆச்சு?”

“உங்களை நம்பித்தானே எம் பொண்ணை இங்க விட்டுட்டுப் போனேன். அதுவும் ரெண்டே ரெண்டு நாள். அதைக் கூட உங்களால ஒழுங்காப் பண்ண முடியாதா?” மகனின் பேச்சில் ஆடிப் போனார் சுஜாதா.

அந்த ப்ளாக் ஆடி சர்ரென்று சீறிக்கொண்டு வெளியேற ஓய்ந்து போய் அமர்ந்து விட்டார் சுஜாதா.

“என்னம்மா ஆச்சு? ஏன் அபி இப்படியெல்லாம் பேசுறான்?” மாமியாரின் ஆதங்கத்தில் கோர்ட்டில் நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தாள் ராதா.

“அட ஆண்டவா! எதுக்கும்மா இந்தச் சின்னவன் பொண்டாட்டி இப்படியொரு காரியத்தைப் பண்ணி இருக்கா? நான் அதுங்களுக்கு என்ன குறை வெச்சேன்?‌ நினைச்சா வர்றாங்க நினைச்சாப் போறாங்க. நான் ஏதாவது சொல்லி இருப்பனா?” சுஜாதா புலம்பவும் அவரைச் சமாதானம் செய்தாள் ராதா.

“விடுங்கத்தை. ஏதோ ஒரு கோபத்துல பண்ணிட்டாங்க. இதைப் போய்ப் பேசினா பிரச்சினை தான் வரும்.‌ யாரு என்ன பண்ணினாலும் ஆத்மி நம்ம கூட தானே இருக்கா. நமக்கு அது போதும். நீங்க இதையெல்லாம் போட்டு யோசிச்சு உடம்பைக் கெடுத்துக்காதீங்க.”

மனதில் இருந்த பாரம் தீர்ந்து போக அன்றாட வேலைகளில் ஐக்கியமாகிப் போனாள் ராதா. ஆனால் வெளியே போன அபிதான் இன்னும் வீடு வந்து சேரவில்லை. நேரம் பத்தையும் தாண்டி இருந்தது.

“என்னம்மா, இன்னும் அபி வரலை?”

“ஏதாவது வேலை வந்திருக்கும் அத்தை.” சுஜாதாவை சமாதானம் பண்ணியவள் ஆத்மிகாவையும் தூங்கச் செய்தாள்.

பதினொன்று தாண்டிய பிறகே வீட்டுக்கு வந்தான் அபி. முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

“சாப்பிடலாமா?” எந்தப் பதிலும் சொல்லாமல் மனைவி பரிமாற உண்டவன் ரூமிற்குள் போய் விட்டான். ராதாவை தன்னோடு சேர்ந்து உண்ணச் சொல்லவும் இல்லை.

ஒரு புன்னகையோடு உண்டு முடித்தவள் எல்லாவற்றையும் சுத்தம் செய்து விட்டு மாடிக்கு வந்தாள். வீடே அமைதியைப் போர்த்திக் கொண்டு ஆழ்ந்த துயிலில் இருந்தது.

ரூம் லைட் ஆஃப் பண்ணி இருக்க பால்கனியில் அவனின் சிகரெட்டுத் தீக்கங்கு கண்சிமிட்டியது. ஒரு இரண்டு நிமிடங்கள் அவனுக்குத் தனிமை வழங்கியவள் தானும் பால்கனிக்குச் சென்று அவன் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.

“எம் மேல கோபமா?” ராதாவின் குரலில் அந்தப் புறமாகத் தலையைத் திருப்பிக் கொண்டான் அபி. அவன் நாடியைப் பற்றி அந்த முகத்தைத் தன் புறமாகத் திருப்பினாள் ராதா.

“கோபம் வந்தா திட்டணும், இல்லை ரெண்டு அடி வெக்கணும். அதை விட்டுட்டு இப்படிப் பேசாம இருந்தா என்ன அர்த்தம்?” அந்தக் குரலில் காதல் வழிந்தது.

“இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இந்த நாளை நாம கொண்டாட வேணாமா?” அவன் மார்பில் முகம் பதித்து அவள் ஆசையாகக் கேட்க அபி கொஞ்சம் கரைந்து தான் போனான்.

எதுவும் பேசவில்லை. ஆனால் அவன் கைகள் அவளை அணைத்துக் கொண்டன.

“பேசமாட்டீங்களா?”

“நீங்கதான் பெரிய மனுஷி மாதிரி என்னென்னமோ பேசினீங்களே. அதுக்கப்புறம் நான் பேச என்ன இருக்கு?”

“அப்படி இல்லைங்க. ஒரு தாயோட பாசத்தை நாம என்னைக்கும் உதாசீனம் பண்ணக்கூடாது.”

“ம்ப்ச்… அது பாசமே இல்லை ராதா.”

“இருந்திட்டுப் போகட்டும்.‌ காலப்போக்குல அதை ஆத்மி புரிஞ்சுக்குவா. அதை நாம தடுக்க வேணாம்.”

“என்னமோ பண்ணு.”

“பிரியம் இல்லாமலேயா அவங்க கூப்பிட்டதும் போயிருக்கா?”

“நீ வேற! க்யூட்டா ஒரு பேபி இருந்ததுன்னு சொன்னாளா இல்லையா? முதல்ல அதுக்கு நீ வழியைப் பண்ணு. அதுக்கப்புறம் உன்னோட இன்னும் ஒட்டிக்குவா.”

“நான் சீரியஸாப் பேசுறேன். நீங்க கேலி பண்ணாதீங்க.”

“ஏய்! நானும் சீரியஸாத்தான் பேசுறேன்டி. நான் பேசினது உனக்கு கேலி மாதிரித் தெரியுதா?”

“இல்லை… நான் அந்த அர்த்தத்துல சொல்லலை.”

“அப்போ எந்த அர்த்தத்துல சொன்னீங்க?”

“ஐயோ!…” அவள் மேலே ஏதோ பேசப்போக அதைப் பாதியிலேயே நிறுத்தியவன்,

“ராதூ… என்னைப் பேர் சொல்லிக் கூப்பிடு.” என்றான். அந்தக் குரலும் பார்வையும் ராதாவிற்கு ஏதேதோ கதைகள் சொன்னது.

“ம்ஹூம்…”

“ஏன்?”

“அந்தப் பெயரை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.”

“அப்போ கூப்பிடு.”

“அது கூப்பிடுற பெயரில்லைங்க. ரசிக்கிற பெயர்.”

“அப்படியா?”

“கிருஷ்ணனோட பெயர் அது. இந்த ராதாக்கு வாய்த்த கிருஷ்ணன் நீங்க. ராதாகிருஷ்ணன் நீங்க.” இதைச் சொல்லும் போது இந்த ஒட்டு மொத்த அண்ட சராசரத்தின் காதலும் அவள் கண்களில் தஞ்சம் புகுந்திருந்தது. அபி வாயடைத்துப் போனான்.

“அந்தப் பெயரை என்னைக் கூப்பிடச் சொல்லாதீங்க அத்தான்.” அவளின் அத்தான் என்ற அழைப்பில் அபிக்கு போதையேறிப் போனது.

“நமக்கு பால்கனி தாண்டி ராசி.” என்றவன் அதன்பிறகு முழுதாக ராதாவை ஆட்கொண்ட கிருஷ்ணனாகிப் போனான். பால்கனிக்குப் பக்கத்தில் நின்றிருந்த அந்த ஒற்றை மரம் அவர்களுக்கு சாமரம் வீசியது. இரவும் நிலவும் நகர்ந்து போக அங்கே உறவு உறங்காமல் விழித்திருந்தது.

 

வசீகரா வனமாலி – என்

வேதனை தீராய் நீ

 

 

 

 

 

 

 

error: Content is protected !!